உரைகள்

புத்தக வெளியீட்டு விழாக்களில்

காதலே காலத்தின் சிறந்த முதலீடு எனும் போது உலகெங்கிலும் இவ்வுணர்வில் ஒத்து ஒலிப்பதே காதல் கொண்ட பெண்குரலோ எனத் தோன்றுகிறது

தொடக்கம், சுருக்கம், நிறைவு !

பட்டாம்பூச்சிகளின் இரவு - ஆதிரா முல்லை கவிதை நூல் வெளியீட்டு விழா - 21.11.2014

தமிழச்சி தங்கப்பாண்டியன்

பட்டாம்பூச்சிகளின் இரவு - ஆதிரா முல்லை கவிதை நூல் வெளியீட்டு விழா - 21.11.2014 முல்லைக்குத் தேர் தந்த பட்டாம்பூச்சிகள் - தமிழச்சி தங்கபாண்டியன் "கவிதை ஆயிரம் வாசல்களைத் திறந்துவிடும் திறவு கோலாகட்டும் ஒரு இலை வீழ்கிறது. ஏதோ ஒன்று பறந்து போகிறது. கண் பார்த்ததெல்லாம் படைப்பதாகட்டும் .... கவிஞரே! ரோஜாவை ஏன் பாடுகிறீர்? உம் கவிதையில் ரோஜா மலரட்டும்" என்ற சிலி நாட்டுக் கவிஞன் வின்சென்டோ ஹியூடோப்ராவின் ரோஜாக்கள் எப்போதாவதுதான் ஒரு கவிதைத் தொகுப்பில் முகரக் கிடைக்கின்றன. ஓரிரண்டு அவ்வாறு தட்டுப்பட்டாலும் மனம் நிறைவுற்று விடுவதன் காரணம் ஒருவேளை கவிதையைப் பொருத்தவரை நான் ஒரு ரசிகை, தேர்ந்த விமர்சிகர் அல்ல என்பதாலோ? ஆதிரா முல்லையின் பட்டாம்பூச்சிகளின் இரவிலே எனக்குச் சில ரோஜாக்கள் கிடைத்தன என்பது மகிழ்ச்சியே. காதல், தாய்மை, பெண் இருப்பின் வலி, இயலாமை, சமூகம் மீதான பிரமிப்பு, நட்பு, உறவுகள் - என விரிகின்ற ஆதிரையின் கவிஉலகம் மரபார்ந்த சொற்சுவையினால் கட்டப்பட்டது என்றாலும் மரபை அவ்வப்போது திமிர்த்து மீறுகின்ற தன்மையும் கொண்டது. "விரல்களில் கசிந்த இரத்தத்தைப் பார்த்த போது புரிந்தது கவிதை எழுதுவதைவிட சமையல் செய்வது எளிதென்று" என்றெழுதும் ஆதிராவே அம்மரபார்ந்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தி "மங்கை என்ற காரணத்தால் கல்பாவை உயிர் தந்து கடவுளானான்! மனைவி என்ற காரணத்தால் உயிர்ப்பாவை மைதிலியைக் கனலாட்டிக் கல்லானான்" என்றொரு கேள்வித் தீயைக் கொளுத்தி இராமனைக் கல்லாக்குகிறார். இராமன் பிறன்மனை நோக்காத பேராண்மையாளன் மட்டுமல்ல, சந்தேகப்பிராணியும் கூட. சீதை இராவணனிடமிருந்து வந்தவுடன் சந்தேகித்துத் துளைக்கின்ற சராசரி ஆண்மன, ஆணாதிக்கச் சிந்தனையும் அவனிடத்தே உண்டு. அதைப் பின்வருமாறு கம்பராமாயணத்தில் படம் பிடித்துக் காட்டுவார் கம்பர் - இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையைப் பார்த்து, "அரக்கர்களின் அரண்மனையில் மாமிசம் உண்டு, கள் குடித்து இருந்தாயே, அதில் எனக்கும் ஏதேனும் மிச்சம் மீதி கொண்டு வந்தாயோ?" என்கிறான். மனைவியோடு சண்டை போடும் கணவன் தன் பக்கமிருக்கும் பலவீனம் மறைக்க அவளது பிறந்தகத்தை வம்பிழுப்பது வழக்கம். இராமனும் சொல்கிறான் – "நல்ல குலத்திலா பிறந்தாய், வெறும் நிலத்தில் தானே பிறந்தாய், இப்படித்தானிருக்கும் புத்தி". முத்தாய்ப்பாய் இது – "இந்தக் கடலையே தீர்த்து, படை திரட்டி இங்கு வந்து, இந்த அரக்கர்களை வேரோடு அழித்தேனே - எதற்காக என்று நினைத்தாய்? உன்னை மீட்கவா? இல்லையில்லை - இராமனின் மனைவியை ஒருவன் கொண்டு சென்றுவிட்டானே எனும் பழியைப் போக்க" என்கிறான். கேட்டுத் துடித்த சீதை சவுக்கடியாய் ஒன்றைச் சொல்கிறாள் - "எந்தவம் எந்நலம் என் கற்பு நான் இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் பித்து எனல் ஆய், அவம் பிழைத்தாம் அன்றே உத்தம! நீ மனத்து உணர்த்திலாமையால்! இந்த நூற்றாண்டிற்கான அதிநவீனப் பெண்ணியச் சிந்தனை இது! "தவம், கற்பு என்பதெல்லாம் பித்து என - பைத்தியக்காரச் செயலாய் ஆகிவிட்டதே உத்தம! நீ உணராததால்" என்ற சீதையின் குமுறல் - மனம் சார்ந்த புரிதலே ஆண், பெண் இணைவாழ்வில் அதிமுக்கியம் என்கிற நவீன மனத்தினை முன்வைக்கிறது. அதனையே இத்தொகுப்பின் மொத்தமான பெண்குரலாய் முன்னெடுக்கிறார் ஆதிரா. நமது சமூகத்தோடும், அதனுடைய சூழல்களோடும் உடனடியாகத் தொடர்பு கொண்ட கவிதைகளே மிக முக்கியமானவை. அவ்வகையில் ஆதிராவின் கொற்றவை நமது தொன்மத்தை மிக அழகாக இன்றைய நடப்புலகில் மீட்டுறுவாக்கம் செய்த கவிதை. கொற்றவை அகோரப் பற்களும் நீண்ட நாக்கும் சூலமும் கத்தியும் ஈட்டியும் உடுக்கையும் இல்லாத அழகான காளி அவனுக்கு அலுவலகத்தில் மேலாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவள்! ஆதிரையின் கவிதைப் போக்கில் எனக்கு மிகப் பிடித்த கூறாக அவரது சங்கஇலக்கியப் பதிவுகளைச் சமகால நடப்போடு இணைத்துக் கவிதை புனைவதைச் சுட்டுவேன். அவரது பெருந்திணை, கவிதை அதற்கு மிகப் பொருத்தமானதொரு சான்று. பெருந்திணை... அற்றைத் திங்கள்... அன்போடு புணர்ந்த காதல் திணையில் காதல் தலைவனே தலைவியின் காதலன் ஆவான் தோழியின் துணையுடன்! இற்றைத் திங்கள்... வம்போடு புணரும் இணையத் திணையில் கணவனே மனைவியின் காதலன் ஆகிறான் கணினித் தோழியால்! எழுத்துக்கள் உரசும் இணையப் பாதையில் கருகிப் போனது அன்பின் ஐந்திணை கலாச்சாரம் கெடுத்து காற்றில் படர்ந்தன பெருந்திணைக் கொடிகள் மரபை மீறி கண்கள் பேசும் காதல் மொழியில் வாய்மொழிதான் வாழ்வு இழக்கிறது! கணினி வீசும் காதல் வலையில் காதலே வாழ்வு இழக்கிறது! காட்சி வேட்கை ஐயம் தெளிதல் காதல் விதிகள் எதுவும் இன்றி கணினி வளர்க்கும் காம அக்கினியில் சாம்பல் ஆகிறது தமிழன் உருக்கிய பண்பாட்டு நெய்! இந்தப் "பண்பாட்டு நெய்" சர்ச்சைக்குரிய சொற்றொடர். எது பண்பாடு - மாறுதலற்றதா, அதன் அளவுகோல் என்ன - இவைபோன்ற நுட்பமான கருத்தியல் சர்ச்சைகளைப் பின்னர் பார்க்கலாம். "தமிழ்ப் பண்பாடு என்பது தற்கால நிலைமைகளுக்கு ஏற்பத் தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டே போக வேண்டுமென்பதையும்," அதன் தவிர்க்க இயலாத கட்டாயத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. தமிழ் பண்பாடு என்பது கலாச்சாரக் காவலர்கள் தங்களைக் காபந்து செய்துகொள்ளப் பயன்படுத்திக்கொள்ளும் பதாகையாகிவிடக்கூடாது. ஆதிராவின் கவிதைகளில் காதலுணர்வும் மிக லாவகமாக, மென்மையாக, ஆனால் கட்டமைக்கப்பட்ட 'பெண்மை' விதியுடன் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது. ஆணை முழுவதும் சார்ந்திருக்கின்ற காதலே அது. "பாதம் அசையும் போதெல்லாம் உன்னை உச்சரித்த மெட்டி என்னை நச்சரிக்கின்றது தேய்ந்து ஊமையாகுமுன்பு மீண்டும் ஒருமுறை உன் பற்களின் ஸ்பரிசம் கிட்டாதா?" (மெட்டியின் புலம்பல்) "உன் மூச்சுச் சூட்டில் பொறிந்து வெளியேறியது அதுவரை நான் அடைகாத்து வைத்திருந்த நாணம்! இன்று உன் வாசிப்பிற்குள் கட்டுமானங்களை உடைத்த மரபுக்கவிதையாக நான்! (நாணம்) "உன் மீசையின் அடர்த்தியில் ஒளித்து வைத்திருந்தேன் என் காதலை உன் ஒவ்வொரு முறுக்கலிலும் அது மெய்சிலிர்க்கிறது என்னுள்" (மீசைக்குப் பின்னே) எனும் ஆதிராவின் மேற்சொன்ன கவிதைகள் அமெரிக்கப் பெண்கவிஞர் ஹெலன் ஷெப்பீல்டின் The Love Poem Book எனும் சிறு கவிதை தொகுதியினை நினைவுபடுத்துகின்றது. தனது காதலுக்குப் பலமுகங்கள் எனும் கவிதையில் ஹெலன், காதல் ஒரு விழா அல்ல நாட்குறிப்பு அல்ல ... காதலே காலத்தின் சிறந்த முதலீடு எனும் போது உலகெங்கிலும் இவ்வுணர்வில் ஒத்து ஒலிப்பதே காதல் கொண்ட பெண்குரலோ எனத் தோன்றுகிறது. "பாட்டாளிக்கு வேண்டுவது தோட்டம் நிறைய மலர்கள் அல்ல. குளிருக்கு வேண்டிய எரிபொருள்" என்று கலை, இலக்கியம் குறித்து மாவோ கூறியது ஒரு கவிஞனுக்கும் பொருந்துமென்பதை ஆதிராவின் புறம்சார்ந்த பல கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. சிவகாசியின் குட்டி தேவதைக்களுக்காகப் பரிந்து பேசுகின்ற இவரது குரல், மேதகு தேசியத் தலைவர், எம்மினத்தின் பெருமிதமான அடையாளம், மானமிகு போராளி பிரபாகரனது மகன் பாலச்சந்திரனது மரணம் குறித்துப் பொங்கி எழுந்து அறம் பாடுகிறது. அக்கவிதையைப் படித்தபின் உணர்ந்த அனுபவம் ஒரு சந்நதத்தை ஒத்திருந்தது. மரபார்ந்த வடிவத்தில் பாடப்பட்ட ஒரு அறம், "புரட்சிகர அரசியல் உள்ளடக்கம், அதி உயர்ந்த கலையியல் வடிவம்" இவற்றின் தேர்ந்த கலவையாக அக் கவிதை வெளிப்பட்டுள்ளது. ஆதிரைக்கு மிகப் பிடித்த பாரதியார் பற்றிய வ.ராவின் குறிப்பொன்றும் இங்கு நினைவிற்கு வந்தது. ஒரு சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொணடே இருந்த பாரதி, திடீரெனத் தன் மார்புக்கூட்டை நிமிர்த்தி நின்றபடி, "தங்கம் உருக்கித் தணல் குறைத்து தேனாக்கி எங்கும் பரம்பியதோர் இங்கிதம்" என்று பாடி மூர்ச்சையாகி விடுகிறார். "இசைப்பாடல் என்பது பாரதியின் சன்னதம்" என்று வ.ரா இந்நிகழ்வைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிடுகிறார். ஆதிரையின் ஓய்ந்தது உயிரின் ஓசையும் அப்படி ஒரு சந்நத இசைப் பாடல் தான். அதன் உணர்வெழுச்சி அப்பழுக்கற்ற சத்தியத்தின் தகிப்பைத் தருகின்றது. இங்கு தமிழ்க்கவிதை உலகின் தற்காலப்போக்கு ஒன்றைச் சுட்ட விரும்புகிறேன். ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கவிதைகளிலெல்லாம் சமூகப் பிரச்சனைகளை எடுத்துப் பேசுகிறார்கள். அவை கவிதையின் இலக்கியத் தகுதிக்கு எவ்விதத்திலும் ஊறு செய்வதில்லை எனவும் நம்புகிறார்கள். ஒரு கவிதை சமூகச் செய்தியைப் பேச நேர்ந்தால் அது அதனுடைய கலை அந்தஸ்திற்கு எவ்வித ஆபத்தையும் விளைவிக்கவில்லை எனும் தெளிவு அவர்களுக்குள்ளது. ஆனால் தற்காலத் தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாகக் கவிதைகளில், சமூகப் பிரச்சனையைக் கையாண்டால் அவை வெறும் "பிரச்சாரக் கவிதையெனக்" குறுக்கப்பட்டு "அறிவு ஜீவி விமர்சகர்கள்" எனப்படுபவர்களால் நிராகரிக்கப்படுகிறது. எத்தகைய முரண் இது! "மனுசங்கடா நாங்க மனுசங்கடா" என்று அய்யா இன்குலாப் திண்ணியம் குறித்து எழுதிய கவிதைக்கு நிகரான அறம் இங்கு வேறு யாருக்குண்டு? இக்கருத்தை வலியுறுத்தி கலைவிமர்சகர் இந்திரன், "W.H.Auden சொல்வது போல் Public Poetry, Private Poetry என இரண்டு வகைமை உண்டு, அகம், புறம் என்கிற மரபில் வந்தவர்கள் நாம். பிறகு ஏன் அகத்தில் மட்டும் நிற்க வேண்டும்? புறத்திற்கும் செல்வது அவசியமல்லவா?" என்று அழுத்தமாகக் கேட்டுப், புறத்திற்குச் சென்றால் இலக்கியத் தகுதியை இழந்து விடுவார்கள் என்போரின் கூற்றைப் புறந்தள்ளுங்கள் என்கிறார். அவ்வகையில், ஆதிரா மிக வலுவாகப் புறம் சார்ந்த விஷயங்களை முன்வைத்தும், அகம் சார்ந்த காதலுணர்வினையும் (சமயங்களில் சமூகத்தின் அதரப் பழமையானவற்றைக் கேள்விக்குப்படுத்தியும்) முன்வைக்கின்றார். "கட்டிலறை முத்துக்களுள் ஒரு முத்து வரமென்றும் மறுமுத்து புறமென்றும் எறிவதுதான் பேதமென்றும் வஞ்சக்கோடு" (கோடு) எனப் பெண் சிசுவிற்காக வாதாடுகையிலும், "அன்றாடம் பேருந்துப் பாடையிலும் அலுவலக மயானத்திலும் ஆண்வாடை மூச்சடைக்க சிக்கி முக்கி உரசல்களில் பற்றி எரியாதிருக்க தண்டு வாழையா நான்?" (வெடிக்கும் முன்னே) எனக் காமத்தைக் கட்டுப்பெட்டி என்றாலும் கடந்தாக வேண்டுமே என்று ஆதங்கப் படுகையிலும் அகமும், புறமும் மெல்லிய புள்ளியில் இணைகின்றன. தந்தை மகற்காற்றும் நன்றி எனும் கவிதையும் "அரிச்சுவடியில் அழகாய்ச் சிரிக்கும் அம்மா நேரில் அடிக்க வருகிறாள் அம்மா என்றதால்" எனப் பகடி செய்கின்ற மம்மி கவிதையும், "அம்மாவையும் நிலவின் வெளிச்ச வெளியில் ருசிக்க ருசிக்க அவள் உருட்டிக் கொடுத்த சோற்றையும் வளையல் சலசலக்க அவளது அழகுக் கை இழுத்து அரைத்த அம்மியையும் நினைவூட்டுகிறது என் கையில் மெஹந்தியாக மாறிப்போன மருதாணி! எனும் nostalgic தொனி அம்மாவும்... அம்மியும் கவிதையும் நாம் இன்று தொலைத்து விட்ட பல விஷயங்களைக் கண்முன் நிறுத்துகின்றன. ஆதிரை உலகவிசை முடுக்கு எனப் புதிய ஆத்திசூடி படைத்திருக்கிறார். சுற்றிலும் நர அசுரங்கள் வாமனங்களாக வளர்ந்து கொண்டிருக்க நரகாசூரனை அழித்து விட்டதாக ஏன் தீபாவளி கொண்டாட வேண்டுமெனக் கேள்விகேட்கிறார். "மதமிழந்த வேதம் யாவிலும் மனிதம் வாழலாம்" என வழிகாட்டுகிறார். ஏங்கி நிற்கையில் ஏமாற்றிச் சென்ற மழையை "ஆண் மழையே, நீயும் என் காதலன் போலத்தானே" எனச் சாடுகிறார். "பருவம் கடந்தும் காத்துக் கிடக்கம் ஜெலட்டின் குண்டு... எச்சரிக்கிறேன்" என முதிர்கன்னிக்காகத் துணிந்து குரல் தருகிறார். இவை அனைத்தும் எனக்கு மிக அணுக்கமாக, நெருக்கமாக இருப்பவை. ஆயின், ஒரு சிறு நெருடலுண்டு, இவரது பெருந்திணைக் கவிதையில். அதில் இவர் மேல் எனக்குச் சற்று ஊடலுமுண்டு. முழுவதுமாகக் கணினிக் காதலைச் சாடுதலும், "கணினி வளர்க்கும் காம அக்கினியல் சாம்பல் ஆகிறது தமிழன் உருக்கிய பண்பாட்டு நெய்! என்பதுவும் "வரலாற்றின் பழங்காலத்திற்குத் திரும்பிச் செல்லுதல், அதனை மட்டுமே உயர்வெனக் கொள்ளும் ஆபத்தை ஊக்குவிப்பதாக ஆகி விடுமோ" எனும் கிலேசத்தையும் தருகின்றது. கலாச்சாரக் காவலர்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற அதனைக் குத்தகைக்கு எடுத்திருக்கின்ற காலகட்டமிது. பண்பாட்டின் அத்தனை கவசங்களும் பெண்ணை மட்டுமே குறிவைத்து அவளது 'கற்பைக் காக்கின்ற' கடமையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிற நேரமிது. பண்பாடு என்பது உணவு, உடை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலை, இலக்கிய வெளிப்பாடு, சடங்குகள் - இவை என்றால் ஆதியிலே தமிழ்ப் பண்பாட்டின் உச்சமென நாம் கருதும் சங்ககால வாழ் முறைப்படியேவா இன்றளவும் நமது உணவும், உடையும், மரபும் உள்ளன? அவற்றின் இளகிய தன்மை வழி எத்தனையோ வசதிக்கேற்ற மாற்றங்கள் வரவில்லையா? இக்கேள்விகளனைத்திற்கும் பதில் கருப்பு வெள்ளையில் இல்லாதவரையிலும் நாம் 'பண்பாட்டு நெய்'யை வரையறுக்கவோ அல்லது உருக்கவோ முடியாதல்லவா? ஆனால் ஒரு படிமமாகத் "தமிழன் உருக்கிய பண்பாட்டு நெய்" யை நான் ரசிக்கவே செய்தேன் - கருத்தியல் ரீதியாக அல்ல. ஆதிரை தனது கவிதைக்கான கட்டுமானப் பொருட்கள், கருக்கள் பலவற்றை மரபுக் கிடங்கிற்குள்ளிருந்து எடுத்தாலும் அதனைத் தன் கற்பனை வீச்சினால் சாணை பிடித்து விடுகிறார் என்பது தான் அவரது சிறப்புத்தன்மை. உதாரணமாக அவரது மோனாலிசாவின் மீசை, மீசை நரைக்கும் முன்னே எனும் கவிதைகளைச் சுட்டலாம். இரண்டு கவிதைகளிலும் புதுக் கற்பனையின் வெளிப்பாட்டிற்கு மீசையே உதவியிருக்கிறது. முன்னதில், புருவமற்ற மோனாலிசாவிற்கு பாரதியின் மீசையை அதில் ஒட்டவைக்கிறார். "பாரதியார் மீசைக்குக் கால்கள் முளைத்தன ஓர் இரவில் இரவினிடையில் அவை மெல்ல நடந்து உறங்கிக் கொண்டிருந்த மோனாலிசாவின் விழிகளுக்கு மேல் பள்ளி கொண்டன புருவமற்ற ஏக்கத்தில் புன்னகையைத் தொலைத்த அந்தப் பேரழகியின் உதடுகளில் ஒட்டிக் கொண்டது பேராண்மையும்" என்று யாருக்குமே தோன்றாத ஒரு கற்பனையைப் புகுத்துகிறார் (நம்மில் பலருக்கு மோனாலிசா ஓவியத்தில் புருவமற்று இருப்பதே தெரியாது). பின்னதில், பாரதி குறித்துப்பாடி "மீசை நரைக்குமுன் மூச்சின் ஓசையை நிறுத்தி விட்டான் மீசையிலும் வெள்ளையனுக்கு ஆசை வரக் கூடாதென்று!" எழுதிச் செல்கையில், மீசையில் கூட வெள்ளை முடி வந்து, வெள்ளையரின் நிறமென்கின்ற சாயல் தன் மீது படியக் கூடாதென இளமையில் உயிர் நீத்ததாகத் 'தற்குறிப்பேற்றணி'யைக் கையாள்கிறார். குமரியில் நிமிர்ந்து நின்றான் என வள்ளுவப் பெருந்தகை குறித்தும், அடிக்கரும்பாய் இனித்தவரே என வள்ளியம்மாள் கல்வி நிறுவனங்களைச் சேவை மையங்களாகத் தோற்றுவித்த தமிழ்ப் புலவர், பெருமகனார் அய்யா அ.மு.ப குறித்தும் எழுதியுள்ளார். முழுவதும் மரபுக் கவிதைப் பாணியில் எழுதப்பட்ட அடிக்கரும்பாய் இனித்தவரே எனும் கவிதையில் "கீழ்க் கணக்கு நீதிநூலின் மறுபதிப்பே" என்ற அற்புதமான உவமையை மிக ரசித்தேன் - அதன் உண்மைத் தன்மைக்காக! அக்கல்லூரியில் Tutor ஆக ஆங்கிலத் துறையில் பல வருடங்கள் முன்பு நான் பணிபுரிந்த போது, நன்கொடை வாங்காமல் பெண்களுக்கென்றே நடத்தப்பட்ட கல்லூரி அது என்பதை மிக நன்கறிவேன். தனது அந்த உறுதிமிக்க கொள்கையினால் கல்வி வெறும் வியாபாரமல்ல என்று உலகிற்கு இன்றுவரை உணர்த்துகின்ற அய்யா அ.மு.ப விற்கு மிகப் பொருத்தமான அஞ்சலிக் கவிதை அது. பாராட்டுக்கள் ஆதிரா அய்யாவை இளைய தலைமுறைக்குக் கவனப் படுத்தியமைக்கு. ஆனாலும், மேற்சொன்னவற்றை விடக் கூடுதலாகத் திராவிட விருட்சம் எனும் பெரியார் குறித்த கவிதை, இரண்டு விஷயங்களுக்காகத் தனியாகக் கவனம் குவித்துப் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. முதலாவதாகத் தந்தை பெரியாரால் இந்த நிலைக்கு வந்திருக்கின்ற நான் கூட அவர் குறித்து கவியரங்கக் கவிதைகள், நினைவு நாள் கவிதைகள் போன்றவற்றைச் செய்திருக்கிறேனே தவிர, இயல்பாக, ஒரு வாஞ்சையோடு அவர் பற்றி இப்படி ஒரு கவிதை இதுவரை எழுதியதில்லை. பெரும்பாலான பெண் படைப்பாளிகள் தங்களைத் திராவிட இயங்கங்களோடு தொடர்பு படுத்திக் கொண்டாலோ, அல்லது அதன் உரம் பெற்றே பயணிப்பவர்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டாலோ, தங்களை நவீனக் கவிதை உலகம் புறக்கணித்து விடக் கூடும் எனக் கருதுகின்ற சூழலில், மிக இயல்பாக, தன்னிச்சையாகத் தந்தை பெரியார் குறித்து, எளிமையான, உணவுப் பூர்வமானதொரு ஒட்டுதலோடு படைக்கபட்டிருக்கின்ற கவிதை இது! இரண்டாவதாக, அக்கவிதையின் நடையும், தொனியும். குழந்தைமையின் குதூகலமும், தமிழுணர்வின் செருக்கும், உரிமையோடு ஒரு பாட்டனித்தில் அவர்தம் மூக்குக் கண்ணாடியை ஒளித்து விளையாடும் உற்சாகமும், ஊடாகவே அவர்தம் உரிமைக்கான பங்களிப்பைப் போற்றும் பெருமிதமும், கலந்து சுவைத்துக் கட்டிய மரபுக் கதம்பமாக மணக்கிறது இக் கவிதை. கூடுதல் சுவையாக ஒரு கவிஞருக்கே உரிய கற்பனைத் திறத்தோடு "விளையாட நினைத்தாலும் முடியாமல் மலர்மேனி வெங்காயம் ஆனதையோ" என 'வெங்காயத்தை' மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார். W.H.Auden சொன்னது போலக் "கவிதை ஒரு நிகழ்வா?" அல்லது Archibald சொன்னது போல "அர்த்தம் எதுவும் அற்றதே கவிதையா?" என்பதில் எனக்குத் தெளிவில்லை. ஆனால் "கவிஞனின் முதற்கடமை படைப்பது. இரண்டாவது கடமை படைப்பது. மூன்றாவது கடமை படைப்பது" என்று சொன்ன ஹியுடோவ்ரானவின் கூற்று மிகப் பிடிக்கும். அவ்வகையில் தனக்கே உரிய பாணியில், தனது உணர்வுகளைப் பட்டாம்பூச்சிகளின் இரவாகப் படைத்துத் தந்திருக்கின்ற ஆதிராவின் பயணம் தொடர்ந்து படைப்பதிலேயே தொடரட்டும் என வாழ்த்துகிறேன். அவரது புத்தகத்தின் தலைப்பிற்கான பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதை பகல்கள் மட்டுமல்ல இரவுகளும் பெண்களுக்கில்லை (தூக்கத்தை மட்டுமே சுட்டுவதல்ல இரவென்பது - பெண்களுக்கு தற்போது மறுக்கப்படுகின்ற இரவென்னும் வெளியைச் சுட்டுவதே அச் சொல்) என்பதை வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல மூடிய விழிகளிலும், பொறுப்பு, அது தரும் நினைவுச் சுமை, அதன் அலுப்பு இவைகளால் இரவுகள் எமக்கில்லை எனச் சொல்கிறது. கந்தர்வனின் "நாளும், கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை" எனும் கவிதையினை நினைவு படுத்துகிறது ஆதிரையின் இப்பட்டாம்பூச்சி! டார்ஜிலிங்கில் பிறந்து வளர்ந்த கவிஞர் விஷ்ணுகுமாரியின் புகழ்பெற்ற கவிதை நோயுற்ற காதலியின் கடிதம். அதில் அவர், "காதல் இறப்பதில்லை அதை நீ கொல்லவே முடியும்" என்பார். கவிதையும் அதுபோலவே இறப்பதில்லை. ஆனால் அதனைக் கொல்லவும் முடியாது. அத்தன்மையே அதன் தேவதைக் கொடையும், பிசாசுப் பிடியும். அக்கொடையையும், பிடியையும் இறுகப்பற்றி மென்மேலும் காதலியுங்கள், ஆதிரா - கவிதையை! ஆனால் அதற்கான கருத்தியல் தேர்வில் தெளிவாக இருங்கள். கட்டமைக்கப்பட்ட பெண்மை விதி விலங்குகளில் கவனமாகக் கால் பதியுங்கள். "சூரியனின் கீழ் அனைத்தும் நமக்காக நமக்காக மாத்திரமே!" பறந்து வந்து இனியும் பல பட்டாம் பூச்சிகள் இந்த முல்லைக்குத் தேர் தரட்டும்! கவிதையில் கருத்தியல் தெளிவும், கூர்மையும் கைகூடித் துலங்கட்டும்! உதவிய நூல்கள்: 1. தமிழ்நாடன் - உலகக் கவிதைகள். 2. உரையாடல், கவிதை, அனுபவம் - இந்திரன், வ.ஜ.ச.ஜெயபாலன்

தொடர

அகரமுதல்வனின் "அறம் வெல்லும் அஞ்சற்க"

தமிழச்சி தங்கப்பாண்டியன்

அகரமுதல்வனின் "அறம் வெல்லும் அஞ்சற்க" புத்தக வெளியீட்டு விழா பேச்சு போருக்குப் பின் அறியப்பட்ட ஜெர்மானியக் கவிஞர்களில் சிறந்தவரான பால் ஸெலான் ஒரு இலக்கியப் பரிசு ஏற்புரையில், "இழப்புகளுக்கு மத்தியில் அடையச் சாத்தியமுள்ளதாய் இருப்பதும், அண்மையிலிருப்பதும் இழக்கப்படாமலிருப்பதும் மொழி ஒன்றுதான்" என்றார். நம்பிக்கை, துயரமான பெருமூச்சு, உயிர்தழுவும் காதல், துடிதுடிக்கத் தொப்புள் கொடி அறுபட்ட வலி, கையறுநிலை, பதிலற்ற கேள்விகள், உயிர்ப்பின் சிறுவிதை - இப்படி அனைத்தையும் உள்ளடக்கியதாய் - 'பேரழிவு இலக்கியத்தின்' (Holocaust Literature) அங்கமானதொரு கவிதை வெளிப்பாடாய் தம்பி அகரமுதல்வனது 'அறம் வெல்லும் அஞ்சற்க' வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் - என்கின்ற அருமையான வார்தைகள் வெறும் சொற்களாக மட்டுமே ஆகிவிடும் - அவற்றை இங்கு நான் பயன்படுத்தினால் – ஏனென்றால் - முகத்தில் அறைந்து, மனசாட்சியை உலுக்குகின்ற அகரமுதல்வனது : தொப்புள்கொடிகள் இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் படுகொலைகள் குறித்து கலைப்படுவோம் கோணஸ்வரி கிருசாந்தினி இசைப்பிரியா குருதி படிந்து கிடக்கும் வாய்ச் சொற்களில் படுகொலைக்கான தடயங்கள் அமர்ந்திருக்கிறது ஈழம் குறித்து கலந்துரையாடல் செய்வோம் பாலச்சந்திரனுக்கு எழுதும் கவிதைகளில் மூளை கலங்கும் அளவிற்கு எதுகை மோனை கைதட்டல் கண்ணீர் சிந்தல் விபரீத மவுனத்தில் வீச்சற்ற நடையில் தேசம் குருதி ஆக பிணங்களாய் மிதக்கும் ஆற்றிலிருந்து காயப்பட்ட கால்களையும் கவிதைகளையும் கொண்டுவர அவமானம் நிறைந்த முங்களோடு தமிழ்நாடு எங்களை வரவேற்கிறது. எனும் கவிதையைக் குற்றவுணர்வின்றிக் கடக்க முடிவது சுலபமல்ல. இத்தொகுப்பை, முழுவதும் ஒரு ஏதிலியின் துயரமும், மனஉணர்வும், மீண்டெடுதலும், சுய இரக்கமற்ற போர்க் குணமும், 'பதாகைப் புரட்சியளர் களைப்' பலி கேட்கின்ற கள வீரர்களின் பக்கம் நிற்கின்ற நேர்மையும் வியாபித்திருக்க, "நாங்கள் நிர்வாணமாக இருக்கிறோம் நாங்கள் மரணத்தோடு இருக்கிறோம் நாங்கள் தாகத்தோடு இருக்கிறோம்" எனும் நம் ஈழத்துச் சகோதரனின் குரலை, ஒரு கவித்துவ ரசானுபவத்துடனோ, விமர்சன அளவுகோல்களுடனோ, எதிர்கொண்டு அதன் கவிதையியல் கூறுகள் குறித்து விதந்தோ, இகழ்ந்தோ அணுக முடியாது. இவை எந்தக் கைகளினால் எழுதப் பட்டிருக்கின்றன என்பது எனக்கு மிக முக்கியம் – "ஊஞ்சலாடிய முற்றங்களில் முட்கம்பிகள் முளைக்க அகதியெனும் பெயரோடு தொப்புள் கொடி மண்ணில் போலிஸ் பதிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிற எனது விரலேறிப் பாய்கிறது அவமானத்தில் பூனை" எனும் வதைமுகாம்களின் பூமியிலிருந்து, பெரும் போரவலத்திற்குப் பின்பு வந்த ஒரு கவிஞனின் விரல்களால் இது எழுதப்பட்டது எனும்போது - அறிவைத் தூக்கி எறிந்துவிட்டு, உணர்ச்சியைக் கட்டியணைத்து மட்டுமே இக்கவிதைகளை நான் உள்வாங்குவேன். அவ்வகையில் நான் ஒரு உணர்ச்சி வசப்படுகின்ற பாமரத்தி தான்! உலகிலேயே தான் பேசுகின்ற தாய்மொழிக்காக அழிக்கப்பட்ட ஓரினம், நமது ஈழத் தமிழினம் தான். மிகக் கூர்மையாக இத் துயரை, " கேரளத்திலிருந்து வந்தவன் மலையாளி ஆந்திராவிலிருந்து வந்தவன் தெலுங்கன் இப்படியாக வேறு மொழி பேசுகின்ற அனைவரும் மொழியின் பெயரால் அழைக்கப்பட நாங்கள் அகதிகளென தூற்றப்படுகிறோம்" என அகரமுதல்வன் சொல்வது உயிர் வலிதருகின்ற கவிதை அல்லவா? இங்கு இலக்கியச் சூழலில் பொதுவாக ஒரு கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. கவிதை என்பது ஒரு பொதுக்கருத்தைப் பேசினால், அதன் கலைத் தன்மையை இழந்து, அது பிரச்சாரமாகிவிடுகின்றது என்பதே அது. ஈழ அவலம் குறித்த உணர்வாளர்கள், படைப்பாளிகள் பலரும் சந்திக்க நேர்கின்ற கருத்து மேற்சொன்னது. பின்காலனிய நாடுகளுக்கு இருக்கின்ற பெரிய சுமையை ஊடறுத்து, Franz Fannan கூறியது போல, தனது சொந்த பண்பாட்டை மீள் கண்டுபிடிப்பிற்கு உள்ளாக வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இருந்தது. தமிழ்க்கவிதைக்கும் அதுமிகப் பெரிய கடப்பாடு. ஆனால் பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலக் கவிதைகளுக்கு இச்சுமை இல்லாத சுதந்திரத்தினால் பாலியல் சிக்கல்கள், தனிமனித உணர்வுகள், புராணிக மீட்டுறுவாக்கங்கள், இயற்கை, ஆன்மீகம், தொழில் நுட்ப முறைக்கேற்ப பரிசோதனை முயற்சிகள் எனப் பல தளங்களில் அவை பயணிக்கின்றன. "மழைகள் பற்றி வண்ணத்துப் பூச்சி பற்றி பூஞ்சோலைகள் பற்றி குற்றவுணர்வற்றுத் திரியும் ஜாலச் சொற்கூடுகள் மனச்சுமையற்று கவிதைகளாகக்பபடுகிறது" என்கின்ற ஒரு ஈழக் கவிஞனுக்கு இச்சுதந்திரம் சாத்தியமில்லை. படுகொலைக் களத்தில் பூர்வகுடிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்டு மரித்த அவலத்தின் குருதியற்று அவனது ஒரு சொல்லும் பிறப்பதில்லை. இங்கிருக்கும் சில விமர்சக அறிவு ஜீவிகள் அவற்றை உணர்வெழுச்சிக் கவிதைகள் - Verse Donnes என்று முத்திரையிடலாம். ஆனால் கவிதை ஒருபோதும் தனது பிரதேசத் தன்மையைக் காவு கொடுத்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை. அதுபோலவே, கவிதையினுடைய இலக்கியத் தகுதிக்குச் சமூகப் பிரச்சனைய எடுத்துப் பேசுவதும் ஊறு விளைவிக்கிறது என்றொரு போலி வாதமும் இங்குண்டு. அவர்கள் ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்கக் கவிதைகளை எல்லாம் கொண்டாடுவார்கள் - அவை முன்வைக்கின்ற சமூகப் பிரச்சனைக்காக. ஆனால் ஈழம் என்று வருகையில் - அவை வெறும் புலம்பல் அல்லது போர் பற்றிய பதிவுகளே என்று ஒதுக்கிவிடும் போக்கும் இங்குண்டுதானே. வேடிக்கையைப் பாருங்கள் - அகம், புறம் என்கிற மரபிலே வந்தவர்கள் நாம். பின்னர் அகத்திலே மட்டுமே நின்றுவிட்டு, புறத்திற்குப் போகாமல், அப்படி முழுவதுமாகத் தன் இனம் குறித்துச் சினமும், துயரும், அவநம்பிக்கையும், அறமும், உறுதி எடுத்தலுமென ஒரு ஈழக் கவிஞன் எழுதினால், அது பிரச்சாரத் தொனி - எனவே இலக்கியத் தகுதியற்றது என்று பேசுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான் - தன்னுடைய ஊரை, இனத்தை, மொழியை, குலக்குழுவை முதன்மைப் படுத்தி, மொழிபெயர்க்கவியலாத அளவிற்குப் பிரதேசத் தன்மையோடு கூடிய ஒரு Tamil Sensibility இல் எழுதப்படுவது எவற்றிற்கும் குறைந்ததன்று. "உன் கையை ஒரு தலையணையாகப் பயன்படுத்து வானம் தன் மேகங்களைப் பயண்படுத்துகிறது பூமி தன் மண்ணாங்கட்டிகளை. வீழும் மரம் தன் இலைகளை. அது ஒன்றுதான் வழி. தொலைவின்றிப் பாடலைக் கேட்பதற்கு - காதில் நுழையாத அந்தப் பாடல் காரணம் அது காதிலேயே இருக்கிறது. என்றுமே திருப்பிச் சொல்லப்படதா ஒரே பாடல். ஒவ்வொருக்கும் தேவைப்படுகிறது மொழிபெயர்க்கவியலா ஒரு பாடல்" -அகரமுதல்வனின் இந்த அத்தனை கவிதைகளும் அப்படி மொழி பெயர்க்கவியலா பாடல்கள்தான், துயரமும், எழுச்சியும்தான். இன்னும் சொல்லப்போனால், அவை பிரதேசத்தன்மையையும் தாண்டி, ஆஷ்விட்சின் வதை முகாைமையும், 1915இலும், 1922இலும் நடந்த ஆர்மீனியப் படுகொலைகளையும், பாலஸ்தீனத்தையும் நம்முன் நிறுத்துகின்றன. கடவுளைக் கேள்வி கேட்கின்ற கவிதைகளும், போர் என்பது காதலையும் கொல்லும், சானு என்றொரு புலியின் குழந்தை என நான் கடக்கவியலாத பல கவிதைகள் இதில் உண்டு என்றாலும், மிக முக்கியமான கவிதையாக நான் குறிப்பிட விரும்புவது தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுருவே எனும் கவிதையைத்தான். தமிழ்க் கவிதைப் பரப்பிலே குறிப்பிட்டுக் கொண்டாடப் படவேண்டிய மிகச்சிறந்த அரசியல் கவிதை இது. 'உயிர்த்தெழுதல்' எனும் நம்பிக்கையை முன்வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வோருக்கான, மிக நியாயமான தோலுரித்தலை இக்கவிதையின் மூலம் திடமாகத், தைரியமாகச் சொல்லியிருக்கிறார் தம்பி. நாம் மதித்துப் போற்றுகின்ற கொண்டாடுகின்ற தியாகங்களைச், அவற்றிற்குச் சொந்தமானவர்களை உரிய இடத்தில் கெளரவப் படுத்துவதோடு, நடப்பு நிதர்சனத்தைத், தம்மினத்தாருக்குச் சுட்டிக் காட்டி, உயிர்த்தெழ முடியாதபடிக்கு உடல் துறைத்துக் கிழிபட்டு சிலுவையொன்றில் அறையப்பட்டான் மெக்கான இயேசு. வன்முறைக்குட்பட்ட மானிடக் கையின் பழிவாங்கலை அல்லது புதிய வீரியத்தை கிளர்ச்சியைப் புரட்சியை இல்லாதொழிக்கும் புதிய வியாதி உயிர்தெழல். இனியும் வெறும் கைகளோடு பயணிப்போம். இதுவரைக்கும் இருந்ததையும் இழந்து. என்று சொல்கின்ற தம்பிக்கு ஒரு அன்பான புறங்கை முத்தம். லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் எழுதிய, கருப்பு இயேசுநாதர் எனும் பின்வரும் அரசியல் கவிதைக்கு நிகரானது அகரமுதல்வனது மேற்சொன்ன கவிதை. "இயேசுவானவர் ஒரு கருப்பராகத் திரும்பி வருவாரானால் அது நல்லதல்ல. அவர் சென்று பிராத்தனை செய்யமுடியாத தேவாலங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. எவ்வளவு புனிதப்படுத்தப்பட்டாலும் நீக்ரோக்களுக்கு அங்கே வாயில்கள் மறுக்கப்படும். அங்கே இனம்தான் பெரிதே தவிர சமயம் அல்ல. ஆனால் - இதை மட்டும் உறுதியாகச் சொல்லாம். இயேசுவே நீர் நிச்சயமாக மீண்டும் சிலுவையில் அறையப்படுவீர்" நமக்கான இயேசு திரும்பி வருவாரென்றால் நமது எதிரிகள் அழிக்கப்பட்டு நாம் சுதந்திரத்தின் சுடரை ஏற்றுவோமென்பதே நமது நம்பிக்கை என்றாலும், நிசர்சனத்தைச் சுட்டுகின்ற அகரமுதல்வனது இக்கவிதை இச்சூழலில் அதிமுக்கியமானது. பிற ஈழத்துக் கவிஞழ்களிடமிருந்து மாறுபடுகின்ற ஒரு அசலான மொழி, மிக முக்கியமாகக், கண்ணீர் தவிர்த்து, பெரும் வெடிகுண்டு வேண்டும் என்கின்ற உறுதி, தனது கவிதை மொழியின் உள்ளடக்கம் வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்க முடியாத இலக்கியத்தைப் பேச வேண்டுமென்கிற தெளிவு, "அனைத்துக் கடவுளரும் திருவோட்டோடு நிற்க ஆயிரம் கடவுளரை - விக்கலெடுத்த அதே நாய் வாந்தி எடுத்தது" எனும் துணிச்சானதொரு, காத்திர நடை - இவை தம்பி அரகமுதல்வனைத் தனித்துக் காண்பிக்கின்றன. உருசியாவிலுள்ள காகசிய மலைத்தொடர்களில் ஓர் உச்சியில் அமைந்துள்ள மலைநாடுதான் தாகெசுதான். இம்மலைநாட்டின் பாவலன் இரசூல் கீ மசுதோவு, தனது 12ம் வயதில் கவிதை எழுதியவர். (அகரமுதல்வனது வயது 22) அவரது பாடல்களைப் பற்றி அவரது தந்தை "உனது பாடல்களில் ஒரே ஒரு சுருட்டைப் பற்றவைக்கும் அளவிற்குத்தான் நெருப்பு இருக்கிறது" என்றாராம். பின்னாளில், தாகசுதானில் நிலநடுக்கம் கண்ட நாட்களில் கூட இரசூலின் பாடல்களைக் கேட்பதற்காகக் கூட்டம் திரண்டதாம். அத்தகைய சக்தி இக்கவிதைகளுக்கும் உண்டு - சோர்வுற்று, சுயநல தமிழக அரசியல் மாயைகளில் சிக்கி அழல்வுற்ற, நம்பிக்கையற்றுக், கையறு நிலையில் இருக்கின்ற ஈழத்துச், சகோதர சகோதரர்களுக்கு, பெருந்துயர் முள்ளிவாய்க்காகலுக்குப் பிறகான பிடிமானத்தை, உத்வேகத்தை இவை தரும். வேடிக்கை பார்த்த என் போன்ற தமிழச்சிகளுக்கு குற்றவுணர்ச்சியையும், தீராத அவமானத்தையும், (கூடவே கொஞ்சம் சொரணையும்) தருகின்ற இவற்றிற்கும், எழுதிய தம்பிக்கும் – ஒரு வார்த்தை - இசைப்பிரியாவை, பாலச்சந்திரனைப் பார்த்தபிறகு, "எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்கையில்லை" * * * * *

தொடர

அபரிமிதத்தைக் குறைத்துப் பற்றாக்குறையை நிரப்பும் அமிர்தம் சூர்யாவின் கவிதைகள்.

தமிழச்சி தங்கப்பாண்டியன்

அபரிமிதத்தைக் குறைத்துப் பற்றாக்குறையை நிரப்பும் அமிர்தம் சூர்யாவின் கவிதைகள். - தமிழச்சிதங்கப்பாண்டியன் "இந்த உலகத்தில் மிக மெலியது மிக வலியதை வெல்ல முடியும் வலுவின்மையிலும் நெகிழ்விலும் நீருக்கு ஒப்பாக எதையும் சொல்ல முடியாது; என்றாலும், வலியதையும், கடினத்தையும் தாக்குவதில் நீருக்கு நிகராக எதுவும் இல்லை. ஏனென்றால், நீருக்கு மாற்று எதுவுமில்லை" - கவிதையும் மிக மெலியது - ஆனால் வலியதையும், கடினத்தையும் துளைக்கும் நீருக்கு ஒப்பான பேராற்றல் மிக்கது. மனித மனதின் அபரிமிதத்தைக் குறைத்துப் பற்றாக்குறையை நிரப்புகின்ற கவிதைகளின் பணியை இந்த "வெற்றிடத்தை நீலத்தால் நிரம்பும் வானம்" செய்கிறது. வெற்றிடம் எனும் சொல் எப்போதும் ஞானம், தரிசனம், கவித்துவம் - ஆகியவற்றோடு தொடர்புடையது. இங்கே அதனை நிரப்புகின்ற வானம் கவிதை என்றால், அதன் வண்ணங்கள் - அனுபவங்களா அதன் உணர்வுகளா? நல்ல கணக்கனுக்கு மணிச்சட்டம் எதுவும் தேவைப்படுவதில்லை - நன்றாக மூடத் தெரிந்தவனுக்குச் சட்டம், தாழ்ப்பாள் எதுவும் தேவைப்படுவதில்லை என்பார்கள். நல்லதோ அல்லதோ ஒரு கவிதைக்கு விமர்சனம் தேவையில்லை - அது தனியொருவனுக்குத் தருகின்ற கிளர்வு அல்லது உணர்வு நிலையே போதுமானது. கவிதை ஒரு தன்வயமான உன்னதச் செயல்பாடு என்ற அளவில், விமர்சனங்கள் இரண்டாம்பட்சம் என்பதால், அவற்றை அணுகுதல், உணர்தல், முடிந்தால் அதனைப் 'பகிர்தல்' எனும் அளவில் சூர்யாவின் தொகுப்பினைப் பற்றிய சில பகிரல்கள்களை முன்வைக்கிறேன். இவை பகுத்தல்களோ, தரம் அறிவித்தலோ அல்ல - அவன் குடத்து நீர் என் குவளையில் - முடிந்தால் நீங்களும் அதன் குளுமையில் தாகம் தீர்க்கலாம் - இல்லையெனில் அது என்மட்டோடு! கனவின் பதற்றத்தை ஆசுவாசப்படுத்தி மெய்மை அர்த்தங்களைக் கண்டெடுக்க, வாழ்வைத் துழாவுகின்ற - சூர்யாவின் கவிஉலகம் - வாழ்வு, காமம், ஞானம், மரணம் - முதலிய ஆதார, இயல்புணர்வுகளால் ஆனது. அவை 'தன்னுர்ச்சிக் கவிதைகள்' எனும் வகைமையில் வருவதாக நான் உணர்கிறேன். "கவிதை மீது கவனத்தைக் குவிக்கும் இலக்கியக் கோட்பாடு, வேறு விஷயங்களோடு சேர்த்து, கவிதைகளை மதிப்பிடும் பல்வேறுபட்ட முறைகளின் பரஸ்பர முக்கியத்துவத்தையும் விவாதிக்கிறது. வார்த்தைகளாலான கட்டமைப்பு என்ற வகையில், வெளிப்படுத்தப்படும் கவிதையைப் பொறுத்தவரை, அர்த்தத்துக்கும் ஒலி மற்றும் சந்தம் போன்ற சொற்பொருள் சாராத (non-semantic) மொழியின் அம்சங்களுக்கு மிடையேயுள்ள உறவு கவிதைக்கு ஒரு பிரதான பிரச்சினையாக உள்ளது. அர்த்தம் சாராத மொழியின் அம்சங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அவை பிரக்ஞைபூர்வமாகவும் பிரக்ஞையற்ற விதத்திலும் என்ன விளைவுகளைக் கொண்டுள்ளன? அர்த்தம் சார்ந்த மற்றும் அர்த்தம் சாராத அம்சங்கள் தங்களுக்குள் எவ்வகையான பரஸ்பர பாதிப்பை எதிர்பார்க்கமுடியும்?. ஆசிரியன் கவிதையைப் பேசுவதில்லை; கவிதையை எழுத, அதை அவனோ அவளோ வேறு ஒரு குரலோ பேசுவதாக ஆசிரியன் கற்பனை செய்துகொள்கிறான். அந்தக் குரல். ஆசிரியனால் கட்டமைக்கப்பட்ட கதை சொல்லியினுடையதாகவோ பேசுபவனுடையதாகவோ இருக்கும். இவ்வாறாக, ஒருபுறம் வரலாற்று ரீதியான ஒரு தனிமனிதராக கவிஞன் இருக்கிறான். மறுபுறம் இந்தக் குறிப்பிட்ட கூற்றின் குரல் இருக்கிறது. அவனுக்கும் அதற்கும் இடையே இடையீட்டாளராக வேறொரு உருவம் உள்ளது. இது ஒரு தனிக் கவிஞனின் கவிதைவீச்சின் ஆய்விலிருந்து மேலெழுந்து வரும் கவிதைக் குரலின் படிமமாகும். இந்த வெவ்வேறு உருவங்களின் முக்கியத்துவம் கவிஞனுக்குக் கவிஞன் மாறுபடுகிறது. மேலும் அது ஒரு விமர்சன ஆய்வுக்கும் மற்றொன்றிற்கும் மாறுபடுகிறது. ஆனால் தன்னுணர்ச்சிக் கவிதையைப் பற்றி யோசிக்கும்போது, கவிதையில் பேசும் அந்தக் குரலுக்கும் கவிதையைச் செய்த கவிஞனுக்குமிடையே உள்ள வேறுபாட்டிலிருந்து தொடங்குவது மிக முக்கியம். இதன் மூலம் அந்தக் குரலின் உருவத்தை உண்டு பண்ணலாம். ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ஒரு புகழ் பெற்ற கூற்றின்படி தன்னுணர்ச்சிக் கவிதை என்பது தற்செயலாகக் காதில் விழும் ஒரு பேச்சு. நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு பேச்சு நம் காதில் விழும்போது நாம் குறிப்பிடத்தக்க விதத்தில் செய்வது என்ன வென்றால் பேசும் நபர் ஒருவரையும் ஒரு சூழமைவையும் கற்பனை செய்துகொள்கிறோம் அல்லது மறுகட்டமைப்பு செய்து கொள்கிறோம். ஒரு குரலின் தொனியை அடையாளம் கண்டுகொள்வதன்மூலம் நாம் பேசும் நபரின் தோற்ற அமைவு, சூழல்கள், அக்கறைகள் மற்றும் அவருடைய மனப்பான்மைகள் ஆகியவற்றை உய்த்துணர்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் இதுதான் தன்னுணர்ச்சிக் கவிதைக்குரிய முதன்மையான அணுகுமுறையாக இருந்தது. இலக்கியப் படைப்புகள் என்பவை 'நிஜ உலக'க் கூற்றுகளின் புனைவுரீதியான போலச் செய்தல்கள்தான். அப்படிப் பார்க்கும் போது, தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்பவை தனிநபரின் அந்தரங்கக் கூற்றுடைய, புனைவுரீதியான போலச் செய்தல்களேயாகும். இப்படிப் பேசுபவருடைய மனோபாவத்தின் நுட்பமான சிக்கல்கள் மீது, அதாவது, பேசுபவராக நாம் மறுகட்டமைப்பு செய்துகொள்பவருடைய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளின் நாடகமயமாக்கக் கவிதையின் மீது கவனத்தைக் குவிப்பதே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கவிதை ரசனைக்கான முதன்மை முறையாக இருந்து வருகிறது" - என்கிறார் ஜானதன் கல்லர் (இலக்கியக் கோட்பாடு ஒரு அறிமுகம்). இது தன்னுணர்ச்சிக் கவிதைக்கான ஓர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகும். இதுபோலத்தான், அமிர்தம் சூர்யா எனும் கவிஞன் ஒரு அனுபவத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தனை செய்கிறான் - அருகிருப்பவரிடம் அல்லது வெற்றிடத்தில் அதனைப் பேச முனைகிறான் - வலுவான உணர்ச்சிகள் மிக இறுக்கமான கவி மொழியில் வெளிவருகின்றன. அவனது கவிதைகள் கதையாடல் கவிதைகள் அல்ல. ஏனெனில், கதையாடல் கவிதைகள் ஒரு சம்பவத்தை விவரிக்கின்றன - குல தெய்வங்களின் ஆல்பம் எனும் கவிதையில் - வரிசையாகச் சம்பவங்கள் - பெண், தாய்மையின் அமுதமேந்தி ஆச்சி, ஆயா, அப்பத்தாவாகத் தோற்றுவாய் தருகின்ற நிகழ்வுகள் சுட்டப்படுகின்றன. ஆனால் சூர்யாவின் கவிதைகளை நான் ஏன் 'தன்னுணர்ச்சிக் கவிதைகள்' என்கிறேன் என்றால், அவை ஒரு சம்பவத்தை மட்டுமே விவரிக்கவில்லை - ஒரு சம்பவமாக இருக்க முற்படுகின்றன என்பதால். தன்னுணர்ச்சிக் கவிதையின் இலக்கணம் அதுதான். புதிர்த்தன்மையும், மிகையான பிதற்றல் என எளிதில் நிராகரிக்கப்படக் கூடிய அபாயமும் இருக்கின்ற இரண்டு கவிதைகள் - ஆட்டங்களினூடே ஒரு ஆதி இருளின் பிரவேசம் மற்றும் கன்னித்தீவை ஏன் கண்டு பிடிக்கவில்லை?. முன்னதில் - முன்னிலையணிகள் எக்கச்சக்கம். அடர்வனமாய், பாலையாய் ஏணியாய், பாம்பாய்...... Shelly இன் - ஓர் அலையென, ஓர் இலையென, ஒரு முகிலென என்னைத் தூக்கேன் என்பதுபோல - ஒரு நிகழ்வு வார்த்தை உபயங்களின் மீது அமைக்கப்படுவதால் - பிதற்றல் எனும் அபாயமும், முந்தைய வரிகளின் கனகச்சிதமான புதிர்த்தன்மையால் கவித்துவமும ஒருங்கே பெற்ற கவிதை அது. கன்னித் தீவை ஏன் கண்டுபிடிக்கவில்லை எனும் கவிதையோ, தன்னுணர்ச்சிக் கவிதையின் இலக்கணத்தை அச்சொட்டாக அடியொற்றி வார்த்தை வார்ப்பிலிருந்து அர்த்தமோ அல்லது கதையோ வெளிப்பட்டு வருவதைக் காட்டுகிறது. கன்னித்தீவு, சிந்துபாத் ஆகிய வார்த்தைகளிலிருந்து 'எல்லாப் பெண்களுக்குள்ளிருக்கும் லைலாக்களும், ஹைகூா வடிவிலிருந்து லைலா நிஜஉருவிற்குத் திரும்புவதை விரும்பாத ஆண்களும் புலப்படுகிறாாகள் சிந்துபாத் (மனிதன்) கன்னித்தீவைக் கண்டுபிடிக்க, கன்னித்தீவிலிருந்தே புறப்படுகின்ற முரணைக், கவிதையின் அர்த்தமாக்க இச்சம்பவம் உதவுகின்றது. தொகுப்பு முழுக்க ருத்ரனும், சிவனும், பாம்பும், வராகமும், சாம்பலும், சாத்தானும், படிமங்களாக உலா வருகின்றனர். ஒரு கவிதையில் உன்னைக் கொண்டு உன்னை வரைவது எனக்கொன்றும் சிரமமில்லை - இது நீதான் என்று உனக்குப் புரியவைப்பதைத் தவிர! என்று எழுதுகிற கவிஞரே, உம்மைக் கொண்டு உம்மை வரைவதில் எங்களுக்கும் சிரமமேதுமில்லை - இது நீ தான் என்று இக்கவிதைகள் எமக்குப் புரியவைத்துவிடுகின்றனவே. சூர்யாவின் 10 வது கிரகத்தின் புதிய வழித்தடம் அப்படியொரு கவிதைதான் - அதிலே சில வரிகள் - ஒரு பாசி படர்ந்த குளம், குளம்தானா? கண்டேன் - யாரும் உபயோகிக்காததை குளமென்று அழைத்தல் சரியாவென்று குளித்து அதைக் குளமாக்கினேன் - கரையேறுகயைில் அழுக்கு நீங்கி தனிமை அப்பிக் கிடந்தது - என் சரீரத்தின் மீது! மரணத்தின் சுப வாசனை பெரும்பாலான கவிதைகளில் வியாபித்திருக்கின்றன - தாத்தாவின் சவக்குழி, பித்ருக்களின் பூமராங், அவரவர்க்கான கல்லறை, தெவசம், சாவாமையின் வரைபடம், சாவுக் கூத்து, பாடை யாத்திரை, மலர் வளையங்கள், சங்கு, பறை ஒசை உருளும் சோழிகள், ஜனித்த தாயம் ஒன்று, சவம், பிணம் தின்னும் புழுக்கள் என மரணத்தின் நிழல் துரத்தும் வாழ்வை அவை சலிக்காது பேசுகின்றன. மரணம் இயல்பான, அழகானதொரு முத்தாய்ப்பு என்பதை தெருவின் தேய்மானங்களுக்கு ஒத்தடம் கொடுத்தபடி உதிரிப் பூக்கள் எனும் வரியும், நிகழ்நது கொண்டே இருக்கும் மரணத்தின் நேர்காணல்... ஒவ்வொரு சாவும் சாவாமையின் விதைகளை உள் மறைத்திருக்கும் முற்றிய கனியாயிருக்கிறது எனும் வரிகளும் சொல்கின்றன. வண்ணத்துப்பூச்சி, சல்லிவேர், ஆதிப்பட்சிகள் அடர்வனம், தருக்கள், காட்டுப்பூக்கள் இவைகளைத் தொடர்ந்து தன் கவிதைகளில் பயணிக்க வைக்கிறார் கவிஞர். மலர் என்பது இலையின் இன்னொரு இலக்கிய முகம்தானே எனும் அழகிய கேள்வியை முன்வைக்கும் அதே கவிஞன்தான் காலம் கூடவே வருகிறது - ஒரு தேர்ந்த மோப்ப நாயைப் போல என சலித்தும் கொள்கின்றான். இறப்பிற்கு எதிரான வாழ்வின் நெடியை தேடிப்பிடித்து ஒவ்வொருவரையும் மரிக்காமல் பின்தொடர்கிறது ஒப்பாரியின் கடைசிவரி என்று நிலையாமையைத் தன் பெருமையென உடைய வாழ்வையும் முகர்ந்து கொள்கிறான். சூர்யாவின் ஒப்பனை அறை எனும் கவிதை, பூனை, அதன் குட்டி, ஆண், பெண் - இவைகளினூடே 'வலி' என்கின்ற மாயக்கயிற்றால் ஆடும் பிம்பத்தினைச் சித்தரிக்கின்ற அற்புதமான கவிதை. ஆண்மையை அறிந்து கொண்டாலும் பெண்மையைக் கடைப்பிடிக்கின்ற மனிதன் உலகத்தைத் தன்னிடம் ஈர்த்துக் கொள்கின்ற கால்வாயாக மாறுகிறான் எனும் வரிகள் எனக்கு இங்கு நினைவிற்கு வருகின்றது. சூர்யாவிற்கு கவிதையில் வாழ்வு தன்னைத்தானே புணரும் புண்புழுவாய் இருக்கிறது; அங்குசமின்றித் தவிக்கும் காமமோ காலத்தை பிரம்மச்சர்யத்திற்குள் எப்படித் தள்ளுவதென யோசிக்கும் இயலாமையாய்த் தகிக்கின்றது; நிர்வாணமோ - சங்கு மெல்லுடலி சுமந்த சமாதியாய் எட்டாத கனவாக ஈர்க்கின்றது; ஞானமும், தரிசனமும் - கல்தச்சன், தேவதச்சன் உருவில் அபயமளித்தாலும் நிரந்தரமான நிழல் தராத தேடுதலாகின்றன; மரணமோ - வாழ்வின் தேய்மானங்களுக்கு ஒத்தடம் கொடுக்கின்ற உதிரிப் பூவாய் நிறைகின்றது; நடைமுறை நியதியில் தொலைந்து போகின்ற அபாயமிருக்கின்ற கவித்துவம் மட்டுமே இக் கவிஞனுக்குக் தக்க துணையாயிருக்கிறது - திடுக்கிட்டுக் குரைக்கிறது கருநாயாய் நடுச்சாமத்தில் வாழ்வு என அவன் சொல்கையில், அங்கே 'கவிதை' தான் வாழ்வின் மறு உருவாய் நிற்கின்றது. இரவு போஜனத்திற்குக் கண்ணி வைத்துக் காத்திருக்கும் கிழப் பரத்தையும், ஒரு நொடிப் பொழுதில் தரையில் விழுந்த குட்டியின் நிழல் எலியாய் உறுமாறும் வலி நிறைந்த ஒப்பனை அறையும், "மானுட மன இருளறையில் (இப்பிரயோகம் சற்றே வார்த்தை ஜாலம் - கவிஞரே) பீதி தேங்கிக் கிடக்கின்ற பாலியல் குளமும், "காணாமல்போன தன் கைரேகைகளின் பட்டியலை, உண்மையை அணிந்த புனைவின் நிர்வாணமாய்" முன்னிறுத்தும் ரேகை உலாவும், நம்மைத் தூக்கம் தொலைக்கச் செய்கின்ற தொந்திரவுக் கவிதைகள். வாசகனைத் தொந்திரவு செய்வதுதானே கவிதையின் வெற்றி! ஆட்டச் சுழல் எனும் கவிதை வழமையான கவிதையெனும் சட்டகம் தவிர்த்த, மேல், கீழாய் என்பதைக் கலைத்துப் போட்ட, உரைநடைக் கவிதையின் புதிய முயற்சி! சில புதிதான உவமைத் தெறிப்புக்களும் உள்ளன - ஒரு சோறு பதமாய் - தன்னைப் பிளந்து தன்விருத்தி செய்யும் நெளியும் அலையும் அகஅலை அமீபாக்கள். பூவா தலையா எனச் கண்டியிழுத்துத் தூக்கி எறிகையில் நிற்காத சுழற்சியில் தெறிக்குமோ மன நாணயத்தின் அரூப சிதறலாய் மூன்றாம் பக்கம் என்பனவற்றைக் கூறலாம். பெண் - தாயாய், தோழியாய், மனைவியாய்க், காதலியாய், பல்வேறு உணர்வு நிலைகளில் இவரது கவிதைகளில் வெளிப்பட்டாலும் - 'மாயமாதல்' எனும் கவிதையில் வருகின்ற அந்தப் பெண் சித்திரம் தான் முகத்தில் அறைகின்ற யதார்த்தம். அந்த அம்மாபொம்மை அப்படியே கிடக்கிறது - அப்பாவின் பரணில். அம்மாவின் பொம்மையாய் அம்மாவே பொம்மையாய் அம்மாபொம்மையாய்.... அப்பா இதை அறியும்போது பரனும் பொம்மையும் காணாமல் போயிருந்தது - அப்பாவும் தான். சூர்யாவின் புதிர் நடை, இறுக்கமான சுண்டியிழுக்கின்ற மாய வாசல்கள் இவைகளற்றுச் சில நீர்த்துப் போன மொழிநடைக் கவிதைகளும் இருக்கின்றன - மிகச் சிலவே! அவற்றின் உள்ளடக்கம் அற்புதம் - ஆயின், உருவம் - Cliche எனப் படுகின்ற ஆரம்பகாலப் புதுக்கவிதைகளை நினைவூட்டுகிறது. சோற்றில் முட்டை வைக்கும் போதெல்லாம் அம்மா முகத்தில் தெரியும் குஞ்சு பொரிக்க முடியாக் கோழியின் சோகம். தோழிக்கும் காதலிக்குமான இடைவெளியில் அடைகாக்கிறது அந்த டைனஸார் - தன் காம முட்டைகளை பழைய சோறென இருக்கும் என் வாழ்விற்கு இன்னமும் அவள்தான் நினைவில் ஊறிய இழப்பின் மாவடு இவை போன்றவை பிற கவிதைகளிலிருந்து விலகி நிற்கின்றன - தொகுப்பின் தீவிரத்தன்மையினை இக்கவிதைகள் குறைப்பதாய்த் தோன்றுகிறது. கவிஞர் இவைகளைத் தவிர்த்திருக்கலாம். வரையப்பட்ட வாழ்வியல் கோலத்தை எல்லா மனிதர்களும் என்னைப் போலவே தின்கின்றனர் - யுகயுகமாய் எனக் கவிஞரது கோலம் தின்னிகளில் வரும் கறுப்பு எறும்பு சொல்கிறது - இக்கவிதைகளை வாசித்து முடித்தவுடன் காப்காவின் மூட்டைப் பூச்சியாய் அதிகாலை உருமாறிய Grogory ஐப் போல நானும் கறுப்பு எறும்பாக உறுமாறி இருந்தேன். இத்தாலியில் டோடி என்ற இடத்தில் பிறந்தவரான பாட்ரீஸியா காவல்லியின் கவிதைப் போக்கினைக் குறித்து, "தீவிர வேட்கை, ஏமாற்றம், அதீதப் பற்றின் ஆக்கிரமிப்பு, மறுதலிப்பு, அச்சுறுத்தல், எதிர்த்து நிற்றல் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய ஒரு மாய வலையில் கட்டுண்ட நிலையில் எழுதுவதாய் அவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன. நடை அழுத்தமும், கடினத்தன்மையும் கூடியதாய் ஒருவிதப் பதட்டமும் அலைக்கழிப்புமாய் இயங்குவது. ஒரு காவல்லி கவிதையின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அந்தரங்கமானதாய் இருந்தபோதிலும் வெறுமே தனிநபர் உலகினைச் சார்ந்ததாக மட்டுமாய் ஒரு போதும் இருப்பதில்லை. அவை வெளிநீண்டு இன்னும் பெரிய, நிலைத்ததன்மையும் நுண்மையும கொண்ட மெய்ம்மைகளைச் சென்றடைவதாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் இழப்பைப் பற்றி அவர் எழுதும் போது மனித வாழ்வின் நிலையாமை குறித்தும் எழுதுகிறார். காதலைப் பற்றி எழுதும்போது வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்" என்கிறார் லதா ராமகிருஷ்ணன் (சமகால உலகக் கவிதை - தொகுப்பாளர் பிரம்மராஜன்). அமிர்தம் சூர்யாவின் கவிதைகளும் அப்படியானவையே. பெரும்பான்மை தன்னுணாச்சிக் கவிதைகளான அவை நுண்மையும், நிலைத்த தன்மையும் கொண்ட மெய்மைகளைத் தன் அனுபவம் சாந்தும், சிந்தனையின் நேர்த்தி கொண்டும், புதிரான மொழிநடையில் தேடிச் செல்கின்றன. நுட்பமான கவிரசனை கொண்ட எந்தவொரு வாசகனிடத்தும் அப்புதிரவிழ்க்கின்ற சாவி இருக்கக்கூடும்! என் சாவி எனக்கு - அவரவர் கைமணலே கடலளவும்!   உதவிய நூல்கள் : 1) ஜானதன் கல்லர் : இலக்கியக் கோட்பாடு மிகச் சுருக்கமான அறிமுகம் - தமிழில் ஆர். சிவகுமார் 2) சமகால உலகக் கவிதை - தொகுப்பாளர் பிரம்மராஜன் 3) தாவோ தே ஜிங் லாவோட்சு - தமிழில் சி. மணி.

தொடர

ஒவ்வொரு மனமும் ஒரு தனி உலகம் (cada cabeza es un mundo) (மா.அரங்கநாதன் அய்யாவின் காளியூட்டு புதினத்தை முன்வைத்து ஒரு பகிரல்)

தமிழச்சி தங்கப்பாண்டியன்

ஒவ்வொரு மனமும் ஒரு தனி உலகம் (cada cabeza es un mundo) (மா.அரங்கநாதன் அய்யாவின் காளியூட்டு புதினத்தை முன்வைத்து ஒரு பகிரல்) - தமிழச்சி தங்கபாண்டியன் கலையின் பிறப்புபற்றி மிகச் சிறந்த எழுத்தாளரும், பேராசிரியருமான நபக்கோவ் ஒரு நாட்டார் கதை மூலம் சொல்லியதை சற்றே தழுவி நம்மூர்க் கதைமூலம் முன்வைத்துத் துவங்குகிறேன்: "'புலி வருது, புலி வருது' என்று அலறும் ஆடு மேய்க்கும் சிறுவனை உண்மையிலேயே புலி வந்து அடித்துக் கொன்று சாப்பிட்ட நாளில் இலக்கியம் பிறக்கவில்லை. ஒரு நீதிதான் கற்பிக்கப்பட்டது. மாறாக, புலியே வந்திராதபோது, 'புலி வருது, புலி வருது' என்று சிறுவன் தன் கற்பனையில் புலியை உருவாக்கி அலறிய நாள்தான் இலக்கியம் பிறந்த நாள். அவன் அடிக்கடி பொய் சொல்லி ஏமாற்றியதால் அவனைப் புலி அடித்துச் சாப்பிட்டதென்பது தற்செயலானது. ஆனால், கலையின் மந்திரமென்பது, அவன் தன் கற்பனையில் திட்டமிட்டு உருவாக்கிய புலியின் நிழலில் தங்கியிருக்கிறது. அது, புலி பற்றிய அவனுடைய கனவிலிருக்கிறது. அவன் ஒரு மந்திரவாதி; ஒரு கண்டுபிடிப்பாளன். எனவே, அவன் ஒரு கலைஞன். அவனிடமிருந்தே கலை பிறக்கிறது". (சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன் : 35) இத்தகைய கலைஞர்கள், படைப்பாளிகளை மாதந்தோறும் அறிமுகம் செய்வதன் மூலம் இலக்கியத்தைக் கொண்டாடுகின்ற அற்புதமானதொரு மனோபாவத்தை, வாசகர்களிடம் முக்கியமான படைப்புக்களை அறிமுகம் செய்கின்ற வரவேற்கத்தக்க செயல்பாட்டை மாதந்தோறும் நடத்துகின்ற தமிழ்ப் புத்தக நண்பர்கள் அமைப்பிற்கு என் வணக்கமும் நன்றியும். கிரேக்கத் தொன்மமான தியத்தில் பிளோட்டோ, "ஒரு ஆசிரியன் மாணவனைத் தேர்ந்தெடுக்கமுடியும். ஆனால் எந்த ஒரு நூலும் வாசகனைத் தேர்ந்தெடுப்பதில்லை" என்கிறார். உண்மைதான் - நாமே தேடிச்சென்று அடையவேண்டிய 'அனுபூதி' அல்லவா அது? அவ்வகையில் அய்யா அரங்கநாதனின் காளியூட்டு எனும் புதினத்தைத் தேடிச் சென்று துய்க்கின்ற அனுபவம் வாய்த்தது எனக்கு மகிழ்வும், மனநிறைவும். ஞானம் சார்ந்த அவைதீகம், அழகியல், தமிழ் தொன்மப் பிடிப்பு, மதம் சாரா தென்நாட்டுத் தத்துவ விசாரம், பூரணம் - எனக் கனிந்து நிற்கும் அரங்கநாதன் எனும் இலக்கிய ஆளுமை இரண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியுடன் நவீனத்துவத்தையும் இணைத்தவர். அனைத்துத் தத்துவ மரபுகளிலும், (கீழைத்தேய, மேலைத்தேய நாடுகள், அரபுத் தேசம், ஐரோப்பிய கண்டம்) தமிழன் திளைத்து எழுந்தாலும், சமூக மாற்றமும், அதற்குக் காரணமான தனிமனிதனும் தனக்கென ஒரு தத்துவத்தைத் தேர்வது காலத்தின் கட்டாயமாகின்றது. அவ்வகையில் அரங்கநாதன் அய்யா, தனக்கெனத் தான் கண்டடைந்த 'இன்மை' என்கின்ற தத்துவத்தை, 'இருக்கலாம் - இல்லாமலிருக்கலாம்' எனும் சூட்சுமத்தை அடிநாதமாகக் கொண்டது அவரது காளியூட்டு. இயற்கையோடு இயைந்து நிற்கின்ற ஆதித் தமிழ் மரபின் வழியே பயணித்து, நாட்டார் தெய்வ மரபான 'பேய்ச்சியை' வழிபடுகின்ற காளியூட்டுத் திருவிழாவினை மையாக வைத்து, இப் புதினத்தில், வலிந்து அல்லாமல், அனுபவத்தின் உண்மையோடும், பொதுத்துவத்தின் கடமையோடும் தனக்கான தத்துவத்தைப், படைப்புத் திறனின் நுணுக்கங்களுடன் முன்னெடுக்கிறார் அவர். "வேதம், வர்ணாஸ்ரம் அமைப்பு, உபநிஷத் இந்த மூன்றை மூர்க்கமாக எதிர்த்த மூன்று தத்துவங்கள் 1) உலகாயுதம், 2) சமணம், 3) புத்தம். ராமாயணத்தில் ஜாபாலி எனும் அமைச்சர் இந்தத் தத்துவத்தைச் சொல்கிறாராம் – "யாருக்கு நிச்சயமாகத் தெரியும்/ யாரால் உறுதியாகச் சொல்ல முடியும்? எப்போது இது பிறந்தது? எபபோது இந்த படைப்பு நிகழ்ந்தது? இந்த உலகம் படைக்கப்பட்ட பின்பு கடவுளர்கள் பிறந்தனர்: அப்படியெனில் யார் அறிவார் இது எப்போது எழுந்தது என்று? எப்போது படைப்பு எழுந்தது என்று எவருக்கும் தெரியாது அவன் இதை உற்பத்தி செய்தானா இல்லையா என்றும் தெரியாது சொர்க்த்திலிருந்து இதைக் கண்ட அவனுக்கு மட்டுமே இது தெரியலாம். ஒருவேளை அவனுக்கும் இது தெரியாதிருக்கலாம்". சமணத்தை மிக விரிவாக எடுத்து வைக்கும் சிலம்பும், 'அருகனை' முன்னிருத்தும் அதன் செய்திகளும், கவுந்திஅடிகள் எனும் கதாப்பாத்திரமும் சமயக் கூறுகளைவிடத், தத்துவத்தை முன்னிறுத்துபவையே! காவியப்படைப்பில் தத்துவ விசாரணையை ஒரு அங்கமாக வைத்திருத்தல் தமிழின் இலக்கியப் பாராம்பர்யம் அல்லவா?" (தமிழரின் தத்துவமரபு - அருணன்) அதனை முழுவீச்சில் அதி லாவகமாக, உருத்தாத, இயல்பான சம்பவக் கண்ணிகளுடனும், துருத்தி நிற்காத எளிமையான உரையாடல் கோர்வைகளுடனும், Numero Uno ஆகவும், Binaries ஆகவும் முத்துக்கருப்பன் எனும் கதாபாத்திரத்தை, சிவ.முத்துக்கருப்பன், சுடலை. முத்துக்கருப்பனும் எனும் Binaries ஆகவும் சித்தரித்து, மரபின் அச்சில் புதுமையின் சக்கரத்தினைச் சுழலச் செய்கிறார் அரங்கநாதன் அய்யா. பொதுவாகப் ஒரு புதினத்திற்குள் நுழைபவர்கள், பின்பாக அதனை அனுபவித்து உணர்ந்தபின், விமர்சனம் (அ) திறனாய்வு என்கிற அடுத்த தளத்திற்குச் செல்கையில் அதன் தொடக்கம், பின் கதைச்சுருக்கம், இறுதியாக நிறைவுப் பகுதி என நேர்கோட்டு முறையில் செல்வார்கள். நான் இதிலிருந்து சற்றே விலகி, புதினத்தின் நிறைவுப் பகுதியிலிருந்து (ஒரு வசதிக்காக Epilogue எனலாம்) துவங்கலாமென நினைக்கிறேன். "எனது பெயர் முத்துக்கருப்பன். தகப்பனார் சிவதாணு - பிறந்தது சென்னை. எட்டு வயதில் இந்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டேன். தகப்பனார் பட்டாளத்தில் இருந்து காலமாகிவிட்டார். கோவிந்தன் நாயர் என்பவர் வீட்டில் - வீடு அல்ல ஓர் அறை - கொலைகாரன் பேட்டை என்ற சென்னைப் பகுதியில் - நான் இருந்தேன். காளியூட்டு நேரம் என்னை அவர் மேலூர் பக்கம் அழைத்து வந்தார். எதற்காக அழைத்து வந்தார் என்று எனக்குத் தெரியாது. அம்மன் திருவிழாவிற்கு இருக்கும் என்றிருந்தேன். அப்பா ஒரு தங்க நகையை அவரிடம் கொடுத்து ஊர் பேச்சியம்மனுக்குப் போட்டுவிடவேண்டும் என்று சொன்னது சிறிது எனக்கு விளங்கியிருந்தது. ஆனால் என்னை அழைத்து வந்த கோவிந்தன் ஊருக்குள் செல்லாமல் வேறு இரண்டு பேரிடம் என்னை ஒப்படைத்துவிட்டு நகையை மட்டும் எடுத்துக்கொண்டு செல்ல முயற்சிக்கையில் நான் அதைப் பிடுங்கி ஆற்றில் வீசிவிட்டு ஓடப்பார்த்தேன். அவர் விடவில்லை. அந்த இரண்டு பேரிடம் என்னைவிட்டு விட்டு போய்விட்டார். தேடிப்பார்த்தும் நகை கிடைக்கவில்லை. காட்டுப்புதூர் மலைப்பக்கம் இராப்பாடி குடும்பத்தாரிடையே சிறிது காலம் இருந்து பின்னர் மருத்துவாழ் மலை சித்தர் சாமியிடம் நான் சேர்க்கப்பட்டேன். மலையிலே என்னால் நிறைய படிக்க முடிந்தது - இராப்பாடியாகவே நான் படித்தேன். இப்போது இங்கே நடந்த கூத்தால் ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனது இடத்தில் வேறொரு பையனைக் கொண்டு வந்து நிறுத்தப்பார்க்கும் போது நான் எல்லாவற்றையும் சொல்ல வேண்டி வந்துவிட்டது. அதுவும் நல்லதுதான். இன்றைக்கு இப்படி தயார் செய்த ஒரு பையனை அழைத்து வந்து ஆற்றைத் தாண்டி வருகையில் தெரிந்துவிட்டது. என் சித்தப்பா பையன் முத்துக்கறுப்பனுக்கு வந்த ஆத்திரத்தைக் கண்ட கோவிந்தன் நாயர் பயந்துபோய் பின்வாங்கிய போது, தலைகுப்புற ஆற்றில் விழுந்துவிட்டார். கல்லில் தலைபட்டு அடி - போய்விட்டார் - ஆனால் யாரும் யாரையும் தாக்கவில்லை. சிவ.முத்துக்கறுப்பன் சொல்லாத, ஒரு வேளை சொல்லத் தெரியாத விஷயங்களும் உண்டு. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 73,74) சிவ.முத்துக்கறுப்பன், அவன் தகப்பனார், ஆகியோர் பிறப்பதற்கு முன்பே, குற்றாலிங்கம், பெத்தாச்சி ஆகியோர் பிறப்பதன் முன்பே, சமஸ்தான மன்னர்களின் முடி சூட்டலுக்குப் பயந்து ஓடிய குடும்பம் காட்டுப்புத்தூர் பிரதேசத்திலிருந்தது. கந்தன் என்பவனின் முன்னோர் கதை அது. அவன் பிள்ளைகள் முத்தையா, மீனாட்சி ஆகியோருக்குக் கருங்குளம் தஞ்சம் கொடுத்தது. பப்புக்குட்டியின் உபயம் அது. அந்தக் குழந்தையின் பெயர் கூட அவர் கொடுத்தவைதாம். அந்த ஊரிலேயே பப்புக்குட்டியின் உறவுக்காரர் என்ற பெயரோடு வளர்ந்து, திருமணம் நடந்து முத்தையா அங்கேயே தங்கிவிட மீனாட்சி மேலூர் வந்தாள். அன்றைய தினம் பேச்சியம்மாள் தான் கண்ட ஆற்றங்கரை காட்சியையும் அங்கே சம்பந்தப்பட்ட ஒருவனால் தான் நிர்மூலமாக்கப்பட்ட விஷயத்தையும் மீனாட்சி அத்தையிடம் மட்டுமே சொல்லிவிட்டு தன்னைப் பொசுக்கிக் கொண்டாள். காளியூட்டன்று பேச்சியம்மாள் நண்பகலில் ஆற்றங்கரையிலிருந்து திரும்பிச் செல்வதைக் கண்ட பப்புக்குட்டி மேற்கொண்டு மீனாட்சி அறிந்த விஷயத்தையும் தெரிந்துகொண்டு யாருமறியாது சிவ.முத்துக்கறுப்பனை மீட்டு கருங்குளத்திற்கு அனுப்ப வகை செய்தார். (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 75) பப்புக்குட்டி, குற்றாலிங்கம், மீனாட்சி, முத்தையா ஆகியோர் அறியாத விஷயங்களும் உண்டு. மீனாட்சியும் பேச்சியம்மாளும் அறியாத விஷயங்களும் உண்டு. பேச்சியம்மாள் கத்திரிவயலில் இருந்தவாறு எல்லாரையும் - எல்லாவற்றையும் பார்த்துவிட்டாள் என்று கண்டுபிடித்து, அதற்கான வழிமுறைகளை நாயரிடம் சொன்னவர் பெத்தாச்சியா பிள்ளைதான். பெத்தாச்சியா பிள்ளையும் அறிந்திராத சங்கதி உண்டு. ஊரிலே அத்தனை அன்புடன் எல்லாரிடமும் நடந்துகொள்ளும் அவர் - சாந்தமானவர் என்றும் பெயரெடுத்த அவர் ஏன் அப்படி என்று ஆழ்ந்து பார்த்தால் கூட இப்படி ஒரு குரூரம் ஏற்பட காரணம் தெரியவில்லை. யாருக்கும் விளங்காத ஒன்று. பெத்தாச்சிக்கும் தெரிந்திருக்காது - மனித குல பலகீனம். எல்லாவற்றிற்கும் மேலாக அரச மரத்துத் துறையிலிருந்து முத்துக்கறுப்பன் தன்னை போற்றியின் வீட்டில் பார்த்துவிட்டானோ என்ற உறுத்தலும் இருக்கலாம் - சொல்ல முடியாது. சுடலை முத்துக்கறுப்பனுக்குத் தெரியாத விஷயம் முக்கியமானது. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 76) இராப்பாடியாக அவனிடம் அட்டிகை பற்றி சொன்னதும் ஆற்றங்கரையில் சந்தித்ததும் பப்புக்குட்டியா பிள்ளையின் அறிவுரையின் பேரிலும் எல்லாவற்றிற்கும் மேலாக மருந்துவாழ் மலை பெரிய சித்தர் சாமிக்கும் தெரிந்தே நடந்த விஷயம். தெரிந்தோ தெரியாமலோ நடந்த நிகழ்ச்சிகள் வாழ்நாளில் மறக்கமுடியாத காட்சிகளாக மாறின. ஊருக்குத் தெரியாத விஷயம் - மார்ஸ்டன் என்பவனிடம் செல்லம், கணபதி ஆகியோரைப் பற்றிச் சொன்னது சங்கரய்யர். உங்களுக்கும் எனக்கும் மற்ற எல்லார்க்கும் தெரியாத விஷயங்கள் பல. அவை யாவும் பதிலை உள்ளடக்கிக் கொண்ட விஷயங்கள். அவை பிரித்துப்பார்க்க முடியாதவை. நல்லவை என்றோ கெட்டவை என்றோ அறியப்பட முடியாதவை. இதுவே வாழ்க்கை என்று சுட்டிக்காட்ட ஒரு போதும் போதுமானவையாக இருக்காது. தெரிந்து கொள்ள முடியாது என்றிருந்தாலும் தேடுதல் இருக்கும். என்றும் இருக்கும் அது. பேய்ச்சி என்ற அந்த மேலூரில் அறியப்பட்ட தெய்வமும் சாந்தம் - குரூரம் - உண்மை - பொய் என்றெல்லாம் அறியவொண்ண மாட்டாத ஒன்றுதான்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 77) புதினத்தின் சாராம்சம் இதுதான் - "எதையும் செய்யவேண்டாம். இதுதான் என்று அதை அறிந்து கொள்வது மட்டுமே உண்மையான வைதிக எதிர்ப்பு ஆகும்" என்று அரங்கநாதன் அய்யா தனது பின்னுரையில் சுட்டுவதும் இதுதான். அன்போடு இறைவனைப் புகழ்ந்தும் சமூக அநீதிகளையும் வழக்கமான மத வழிபாட்டு நெறிமுறைகளையும் விமர்சித்தும் எழுதிய, சித்தர் மரபை ஒத்த மிகப் பெரிய இந்தியக் கவிஞர் கபீர். "உனக்காக நான் வாழ்கிறேன், ஓ அல்லாஹ் இராமா உன்னுடைய அடிமைக்கு இரக்கம், காட்டு, என் தெய்வமே மசூதிகளில் மட்டும் இறைவன் குடியிருந்தால், இடையில் யாருடைய நிலம் உள்ளது?" என்ற கபீரின் குரலின் இன்னொரு நீட்சியே, "அன்பிலார் நெஞ்சில் தமிழைப் பாடி அல்லல் நீக்க மாட்டாயா" எனும் பாரதிதாசனின் வரியில் தன் வாழ்வை ஒப்புக்கொடுத்த அரங்கநாதன் அய்யாவின் தொனியும். "புனிதர்களே, இந்த உலகம் பைத்தியக்காரத்தானமானது என்று நான் கருதுகிறேன்" என்றும் மற்றொரு கவிதையில் சொல்கிறார் கபீர். இன்றளவும், இந்தக் குரல் ஒரு பின்நவீனத்துவக் கவிஞரோடு ஒத்துப்போகின்ற குரல். கபீரின் அன்புடை சரணாகதி நெஞ்சமும், அதேபோழ்து, மதமெனும் சங்கிலியைக் கட்டறுக்கும், சாதியத் துருவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பரிந்து கோபமுறும் நவீனத்துவமும் பின்னிப் பிணையுமொரு வெளிப்பாடு புதினத்தின் பின்வரும் பகுதிகள். "மேலூரின் வடக்குப் புறமிருந்தது பேச்சியம்மன் கோவில். இந்தக் கோவிலுக்கு காட்டுப்புதூர் கருங்குளம் குடும்பங்கள் சொந்தம் கொண்டாடின. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் காளியூட்டிற்கு இரண்டு ஊர் மக்களும் இருக்கிற நெல்லை விற்றாவது நன்கொடை தந்தனர். பேச்சி அம்மன் மிகுந்த சக்தியுள்ள கடவுள் என்று பேசப்பட்டது. "சக்தி இல்லாத கடவுள் எது" என்று கேட்டுவிடுவார் குற்றாலிங்கம் பிள்ளை." குற்றாலிங்கத்தின் இக்கேள்வி மேலோட்டமாக வைதீகமாகப் பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அப்பட்டமான அவைதீகக் குரல். இது ஒரு பின்நவீனத்துவக் கேள்வியும் கூட; அதனை அடுத்து வரும் பத்தியைப் பாருங்கள் – "அது பேய்ச்சி - நாமெல்லாம் பேயாகவும் கடவுளை அந்தக் காலத்திலிருந்தே கும்பிட்டு வாரோம். எல்லா நாட்டிலும் அப்படித்தான். நம்ம கனகசபை இதுபத்தி எல்லாம் எழுதியிருக்கான் - தெரியுமில்லா - இது வந்து 'வாக்தேவி'யாக்கும் அப்படின்னு சங்கரய்யரு சொல்வாரு - அது தப்பு - அண்ணாச்சி - தங்கச்சி அப்படின்னு நாம சொல்றது போலத்தான் பேய் பேய்ச்சி ஆனது." "அந்தக் கூட்டத்தில் மேலூர் சார்ந்த சேரிவாழ் மக்களும் இருப்பார்கள். இந்த 'பேய்' வணக்கமே அந்தச் சேரி வாழ்மக்களிடமிருந்துதான் வந்தது என்பதைக் கூட அறியா மாந்தர்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 35) சமகால அவலத்தை," ஐயோ, இதுகள் இப்படியுமா இருக்குமென, மிக அழுத்தமாகப் பதிகின்ற பிராந்தியத் தமிழ்க் குரலிது. (இது என்பது அன்பின்பாற் சொல்லப்படுகின்ற கிராமத்து வழக்கேயன்றி இழிசொல் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க) இதனைத் தமிழவன் மிக நுட்பமாக உணர்ந்து பின் வருமாறு பதிவு செய்கிறார். "மா.அரங்கநாதனின் உள ஆளுமை அவரது பிறப்புப் பின்னணிதான். அவருடைய தமிழ் அவருடைய கிராமம் கொடுத்ததுதான். 1952 வாக்கில் நேசமணி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் போராட்டம் ஆழமான பாதிப்பை மா.அரங்கநாதனுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் அவருடைய சமூகத்தினர் தமிழ்ப் போராட்டத்தில் நேசமணிக்கு உற்ற தோழர்களாய் இருந்தனர். மா.அரங்கநாதனைப்பற்றி முழுசாய் அறிய குமரி மாவட்ட வரலாறு தெரிய வேண்டும். மா.அரங்கநாதன் "மலையாளத்தமிழ் எழுத்தாளர்களுக்கு" எதிரான ஆளுமை. அதனாலேயே மா.அரங்கநாதனை அந்த மலையாளத்தமிழ் எழுத்தாளர்கள் பலர் எங்கும் குறிப்பிடுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நேசமணி 1 கோடி சனங்களை பட்டம் தாணுப் பிள்ளையின் பிடியிலிருந்து காப்பாற்றி அவர்கள் மலையாளிகளாகாமல் தமிழர்களாக்கினார். (அக்கால காங்கிரஸ் தலைமை நெய்யாற்றின்கரைத் தமிழர்களை மலையாளிகளாக்கியதை மறக்கக்கூடாது). மா.அரங்கநாதன் தமிழ் இலக்கியத்தை "மலையாளத் தமிழ் எழுத்தளர்களிடமிருந்து" காப்பாற்றினார். நேசமணி சென்னையின் ஆட்சிக்குக் குமரி மாவட்டத்தைக் கொண்டுவந்ததைப்போல் மா.அரங்கநாதன் தமிழ்க் கற்பனையை சென்னையின் தொடர்பால் புதிய தமிழ்ப் படைப்பாய் உருவாக்கினார். இவை எல்லாம் தமிழ் அரசியலைச் சுற்றி நடப்பவையாகும்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 5,6) அரங்கநாதன் அய்யாவின் தத்துவம் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கு மிக முக்கியமான சாளரங்களைத் திறந்துவிடும் தன்மை வாய்ந்தது. "நல்லது - எல்லா பிரதேசங்களிலும் மேலூர், கீழுர் என்றும் தெற்கூர், வடக்கூர் என்றும் இருக்கலாம். ஆனாலும் இந்த மேலூர் மனித குல வரலாற்றின் ஒரு பகுதியை விண்டுவைக்கும் மாண்பைப் பெற்றுக்கொண்டுவிட்டது என்று சொல்ல வேண்டும். எல்லாக் கால கட்டத்திலும் மலையும், கடலும், வயலும் சார்ந்த இடங்கள் நம்மிடையே சிலவற்றைத் தோற்றுவித்து - தோல்விகண்டாலும் - படைப்பு ஒன்றை நம்மிடையே ஏற்படுத்திப் புதிய பொருளைத் தரும் ஒரு வாழ்வை, உலகிற்கு அளித்ததென்றால், இந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒன்றின் மூலம் வன்முறை எத்தனை தூரம் மனித இனத்தை பாதாளத்திற்கு அனுப்பி வேடிக்கை பார்த்தது என்று தெரிந்து கொள்ள முடியும். கனவுகளும் விடுதலை உணர்வும் எத்தனை மகோன்னதமான விஷயங்கள் என்று புரிந்துகொள்ள முடியும். அற்புதமோ சிவனருளோ என்று மலைத்து நிற்கும் விஷயங்கள் எங்கும் எப்போதும் நடந்து தான் வந்திருக்கின்றன. என்றாலும் இங்கு நடந்தவை மகோன்னதமானவை என்பதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. கடவுள் என்பது ப்றறி முழுதான அறிந்து மெளனமடைந்தோரும், அது பற்றி மூடத்தனம் மிகுந்தோரும் இந்த மண்ணைவிட்டால் வேறெங்கு கணிசமாக இருந்திருக்கிறார்கள். அருள் என்ற சொல் இங்கே புதிய தொரு பொருளைப் பெற்றுக் கொண்டது என்று சொல்லமுடியும்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 67) என்று அவர் சொல்கையில், "பிராந்தியங்களால் கட்டப்பட்ட இந்தியாதான் சாத்தியம். ஏக இந்தியா அல்ல. இந்தப் புது இந்திய அரசியலைத் - தமிழ்ப் பிராந்தியம் முன்வைத்த 'அன்பு', ஆவுடை, இன்மை, சங்க இலக்கியம், திருமூலர், பாரதிதாசன், அரங்கநாதன் - எல்லாம் எல்லோரும் முழுங்க வேண்டும்" எனும் தமிழவன் கனவு கைகூடும் எனப்படுகிறது. "தமிழ்த் தன்மையே தமிழிலக்கியத்தின் பிரதானமான குணம். தமிழிலக்கியத்தை தமிழின் விளிம்புகளான மலையாளக் கட்டுக்கோப்பை வைத்து எழுதும் குமரி மாவட்டத்திலேயே தமிழின் அசலான எழுத்தாளரும் உதித்திருப்பது முரண்நகைதான்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 8) எனத் தமிழவன் சுட்டுவது எவ்வளவு உண்மை! "இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுச் சமூகக் கோட்பாட்டாளரான எமிலி துர்க்ஹைம் (Emile Durkhiem), அவருடைய உடன்பிறந்தாரின் மகனான மார்சல் மாஸ் (Marcel Mauss) இருவரும் மனிதர்கள் வகைப்படுத்திப் பார்க்கும் திறனானது நம்முடைய சமூகத் தன்மையின் (social nature) நீட்சியாகும் என்றனர். சமூகம் என்பது வகைப்படுத்தும் சிந்தனைக்கான ஒரு மாதிரியாக (model) இல்லை; சமூகத்தில் உள்ள சமூகப்பிரிவுகளின் வகைகளே வகைப்படுத்தும் முறைக்கான அடித்தளம் என்றனர். சமூக வகையினங்களே தர்க்கரீதியான முதல் வகையினமாகும். மனிதர்களுக்குள் ஏற்பட்ட வகைப்பாடுகளே முதல் வகைப்பாடாக அமைந்தது. இதன்பின் மற்ற வகையினங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. அரை நூற்றாண்டுக்குப் பின் அமைப்பியல் மானிடவியலைத் தோற்றுவித்த கிளாட் லெவிஸ்ட்ராஸ் (Claude Levi-Strauss) மனிதர்களிடம் காணப்படும் வகைப்படுத்தும் மரபென்பது உலகளாவியது என்றார். இது உலகளாவிய நிலையில் காணப்படுவதற்குக் காரணம் மனித மனம் தன்னேற்பாடாகக் கொண்டுள்ள எதிரிணைச் (binary opposition) சிந்தனை வழி ஏற்படும் 'ஆழ்நிலை அமைப்புகள்' (Deep strctures) ஆகும். இவை புறநிலையில் வெளிப்படும்போது காண்பவையே நம்முடைய வகைப்பாடுகள் ஆகும் என்பார். மனிதர்களின் அறிவுசார்ந்த செயல்பாடுகள் எல்லாவற்றையும் காணும்போது ஒழுங்குபடுத்துதல் (ordering) எனக்கூடிய ஒரு பொதுத்தன்மை காண்ப்படுகிறது. இப்பிரபஞ்சத்தில் மனித மனம் ஒரு பகுதியாக உள்ளது என்றும் இப்பிரபஞ்சங்கூட குழப்பத்தன்மை ஏதுமில்லாமல் ஓர் ஒழுங்கு நிலையில் பேணுவதும் இத்தகு ஒழுங்கு அமைவதற்குக் காரணமாகிறது." (சமூக-பண்பாட்டு மானிடவியல் - ஜான் மோனகன், பீட்டர் ஐஸ்ட்) இப் புதினத்தில் வருகின்ற முத்துக்கருப்பன் தொடர்ந்து அரங்கநாதன் அய்யாவின் சிறுகதைகள், படைப்புக்கள் அனைத்திலும் இருப்பவன்தான். நம் தமிழ்ச் சமூகத் தன்மையின், குறிப்பாகக் குமரி நாட்டுப், பஃறுளி ஆற்றுச் சமூகத்தின் நீட்சிதான் அரங்கநாதன் அய்யா தன்னை முத்துக்கருப்பனாக வகைப்படுத்திப் பார்க்கும் திறன். இந்த மரபென்பது உலகளாவியது எனும் லெவிஸ்ட்ராஸின் கூற்றை அரங்கநாதன் அய்யா தனது ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்காரரும் எனும் சிறுகதையில் - வெவ்வேறு கலாசச்சாரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய இருவரையும், இணைந்து பயணிக்கச் செய்து ஒரு கோட்டில் இணைக்கிறார்: "அவர்கள் இருவருமே நட்சத்திரங்களைப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள். மலை, ஆறு, குளம்... இப்படி, இதைப் பார்ப்பதினால் பலவிதமான உண்மைகள் அவனுக்குத் தெரிகிறது என்று நான் கருதுகிறேன்" (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம்) லெவிஸ்டாஸ் சொன்ன ஒழுங்குபடுத்துதுதல் எனும் பொதுத்தன்மைதான் அந்த இரண்டு பேரையும் ஒரு Universal Man ஆக ஆக்குகிறது. இதைப் போலவே காளியூட்டிலும் ஒரு மலையும், ஆறு பார்க்கும் காட்சி முன்வைக்கப்படுகின்றது. "ஒரு குழந்தை போல ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. மலையிலிருந்து தோன்றிவிடுகின்ற ஆற்றிற்கு ஓர் அழகு. இந்த ஆறும் அப்படித்தான். வடக்கேயுள்ள மலையில் தோன்றி தெற்கே கடலில் சேர்கிறது. கிழக்கே மருந்து வாழ்மலை. அந்த மலையிலிருந்து கொண்டும் இந்த ஆற்றின் கதியைப் பார்க்க முடியும். சிவ.முத்துக்கறுப்பனுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதென்றால் சுடலை முத்துக்கருப்பனுக்கு ஆற்றங்கரையிலிருந்து கொண்டு மலைகளைப் பார்க்கும் வாய்ப்பு" எஸ்.சண்முகம் தனது நேர்காணலில் கேட்கிறார், "எல்லா கதைகளிலும் முத்துக்கருப்பன் வருகிறார் அல்லவா? சில கதைகளில் முத்துக்கருப்பன் இரண்டாக வந்திருக்காரா? இருக்கும், சில கதைகளில் இருக்கும். மகத்தான ஜலதாரைல பேரே சொல்லவில்லை. கருப்பன் சாவடின்னு அந்த ஊர் அழைக்கப்படலாம் என்பதால், அந்த ஊருக்குக் காரணமானவன் முத்துக்கருப்பன்னு ஆகிவிட்டது. இந்த மாதிரி சில கதைகளில் வந்திருக்கிறது. முத்துக்கருப்பன் பிரதியில் இரட்டையா எழுதியிருக்கீங்களா? இரட்டைகளாகவும் இருக்கிறது. அப்ப இரட்டைகளை யூஸ் பண்ணுகிற யுக்தி எப்படி? ஒரு குறிப்பிட்ட கதையில மட்டும் முத்து என்று ஒருவனும், கருப்பன் என்று ஒருவனும் வருவதாக சொல்லியிருக்கிறேன். மற்றபடி, தமிழ்நாட்டிலே முத்துக்கருப்பன் என்ற பெயர் பொதுவாக இருக்கிறதால அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன். ஏன் இந்த முத்துக்கருப்பன் பெயரையே..? அதுதான் சொன்னேனே.. பொதுவாக தமிழ் சொசைடியில் எங்கே எடுத்துக் கொண்டாலும், கன்னியாகுமரியோ, திருநெல்வேலியோ, ராமநாதபுரமோ, மதுரையோ, திருச்சியோ, விழுப்புரம் வரையுமே எங்கே எடுத்துக் கொண்டாலும், முத்துக்கருப்பன் பிள்ளை, முத்துக்கருப்பன் செட்டியார், முத்துக்கருப்பன் நாடார் - என்று இந்தப் பெயரில் எல்லோருமே வந்திருக்கிறார்கள். ஸோ, அதில் ஒரு ஒன்நெஸ் கிடைக்குமோ என்ற நம்பிக்கை எனக்கு இருந்திருக்கலாம்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 43) "சில விஷயங்களை நானாகச் சொல்ல முடியவில்லை அப்ப முத்துக்கருப்பன் எனக்கு ஹெல்ப் பண்ணுகிறான்" என அரங்கநாதன் அய்யாவே ஒத்துக் கொண்டுள்ளார். அதுவே அவரை ஒரு Universal Man ஆக வெளிப்படுத்தப் பயன்படுகிறது. இப்புதினம் ஒரு வாசகியாக எனக்கு ஒரு நிறைவையும், படைப்பனுபவத்தின் விகாசமான பகிரலையும் சற்று அதீதமாகவே தந்தது. ஏனென்று யோசித்தால் - அதற்குரிய பதிலையும் அய்யாவே தருகிறார். "புதுமைப்பித்தன் கதைகளில் வரக் கூடிய ஒன்றுபட்ட தன்மை... ஓ... இது நம்ம ஊராச்சே, இது நம்ம இடமாச்சே... இந்த சாப்பாட்டை நாம் சாப்பிட்டிருக்கிறோமே... இதுபோன்ற ஒன்றுபட்ட தன்மையை மெளனியின் கதைகளில் பார்க்க முடியவில்லை." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம்: 30) என்கிறார். எனக்கும் பேச்சி, முத்துக் கறுப்பன், இது எல்லாமே நம்ம ஊர், நம்ம இடம், என்கிற ஒன்றுபட்ட தன்மையைத் தருகிறது. ஆனால் அது மட்டும்தானா, அந்தத் தமிழ்த் தன்மை, தமிழ் sensibility மட்டும் தானா இதன் பலம்? இந்தப் புதினத்தின் கட்டுமான அடித்தளம் அதுதான். ஆனால் அது தொடுகின்ற உயரம் அசாரணமான உலகப் பொதுத்துவம் உடையதல்லவா? அதன் விஸ்தீரணம் வைதீகத்தை அடிவேரறுத்து, the journey is more important than the destination என்பதை 'முன்னால் அந்த மலை இல்லை' என்கிற இன்மைத்துவத்தை, Phallic Symbol க்கு எதிராகத் தென்னாட்டின் ஆதி ஆவுடையை நிறுத்துகின்ற தத்துவத்தை தனது கதாபாத்திரங்கள், அவர்தம் உரையாடல்கள் (குறிப்பாகப் பப்புக்குட்டி, மீனாட்சி) மூலம் "கண்டறியாதன கண்டேன்" எனத் தருவதல்லவா? அரங்கநாதன் அய்யாவின் இலக்கிய கோட்பாடு என்னவென்றால் "உள்ளுணர்வு சார்ந்த ஒரு கலாச்சார அறிவை அல்லது புரிந்து கொள்ளலை" ஒரு படைப்பனுபவமாக தமிழ் அழகியலோடும், நவீனத்துவத்துடனும் முன் வைத்தல். இதுதான் வனப்பேச்சியை, முத்தாலம்மனை, கன்னிமார்களை, சீலைக்காரியை "எஞ்சோட்டுக்காரிகளாக" எண்ணும் என்னை அவரிடம் ஈர்க்கிறது. ஆனால் ஈர்ப்பது மட்டுமே ஒரு படைப்பின் பணியல்ல - கட்டி இழுத்து, கழுத்தைத் திருப்பவிடாமல் அதனுள் அமிழ்த்தி இறுக்கி, அதன் சுகமோ, துக்கமோ - ஒரு உண்மை அனுபவத்தை மாந்தத் தருவது. அது இப்பிரதியில் எனக்கு எங்கு கிடைக்கிறது? "The pleasure of text" என்பதைத் தாண்டி "the desire for the text" என்பது இப்புதினத்தில் எனக்கு எங்கு நிகழ்கிறது? "தொல்லுலகில் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாகத்தான் பெண் தெய்வ வழிபாடு மாறி கடவுள் ஆண்மகனாக தெரிய வந்தார் என்று சொன்னார்கள். இந்த சமஸ்தான மண்ணில் அதை ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தண்ணீரால் மட்டுமே ஆட்கொள்ளப்பட்ட இடந்தவிர மாற்ற எல்லா பிரதேசங்களும் அன்னை வழிபாட்டில் ஒன்றையொன்று மிஞ்சின. தானாகத் தோன்றியதாகையால், அந்த இயற்கை வழிபாட்டிற்கு எந்த எதிர்ப்புமில்லை. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 47) - இது தமிழ்த் தொன்மம் சார் வாழ்வின் ஒருகீற்று என்றால் – "தாடகை மலைப்பக்கம் கணியக்காரர் உலவினர். காட்டுப்புதூர் பக்கம் மாடுகள் மேய்ந்தன. மேலூர் பக்கம் உழுதனர். எல்லாரையும் பாலித்த அருள் அந்த அம்மை. கணியக்காரர் மந்திரத்தில் வல்லுநர். அவர்களில் சிலர் சித்துகளில் இறங்கி நகரங்களுக்குச் சென்று அங்கே அவர்கள் பெயர் பத்திரிகைகளில் வரும் அளவிற்குப் பிரசித்தி பெற்றனர். தன்னை ஆட்கொள்ளாத மந்திரம் வேறு யாரைச் சேரும்?" - இது அதன் வலிமையின் உரத்தோடு அதனை உயரத்தாண்டும் ஞானம். மேற்சொன்ன பத்தியில் உள்ள அந்தக் கடைசி வரி தான் என்னை அமிழ்த்தி, அடித்துப் போடுகின்ற அனுபவம். "தன்னை ஆட்கொள்ளாத மந்திரம் வேறு யாரைச் சேரும்?" இந்த ஒரு புள்ளியில் பெரியாரும், திருமூலரும் ஒரு சேரச் சந்திக்கிறார்கள். தன்னை ஆட்கொள்ளாத உதவாக்கரை மந்திரம் - வெங்காயம் எனலாம் பெரியார். "தெய்வம் அவதாரம் எடுத்து வருவதில்லை. தானாகவே தோன்றும்" - எனலாம் திருமூலர். "வண்டே, நாங்களெல்லாம் உண்மையைத் தேடி வீணாய்ப் போனோம். நீயல்லவா அதைக் கண்டு விட்டாய் நேரடியாக" - எனத் தானாகவே வருகிற ஞானம் - எனலாம் காளிதாசன். இந்த "வாழ்க்கை சார்ந்த இன்மை" தான் ஞானம் என உலகளாவிய உண்மையைச் சொல்வதுதான் - மதம் சார்ந்த இன்மை அல்ல - ஒரு பொதுத்தன்மையை அரங்கநாதன் அய்யாவின் அனைத்துப் படைப்புகளுக்கும் தருகின்றன - குறிப்பாக, அவரது இந்தப் புதினத்திற்கும். இந்த அவைதீக ஞானத்தினாலேயே அவர் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகவும் கொண்டாடப்பட வேண்டியவர். இதைத் தானே தனது முன்னுரையில் சா.கந்தசாமியும், "வாழ்க்கையைப் போலவே எளிதாகவும் - புரிவது மாதிரியே புரிபடாமலும் இருப்பது. அறிந்ததையெல்லாம் அர்த்தமிழக்க வைப்பது. புதிதாகப் பொருள் கொள்ள வைப்பது... அகத்தை அறிகிற போது புறம் தான் வசப்படுகிறது", என்கிறார். 'ஆன்மாவைப்' பற்றி ஆதித் தமிழன் சிந்தித்தவனல்ல நடைமுறை வாழ்வியல் தத்துவவே ஆதித் தமிழரின் மரபு. "இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரை" என்று உணர்ந்து வாழ்ந்தவன் அவன். இப்புதினத்தில் "தலையெண்ணி பாகம்" என்றொரு வழக்கம் பற்றிய குறிப்புண்டு. "பெத்தாச்சியா பிள்ளையின் தமக்கையொருத்தி "தலையெண்ணி பாகம்" வேண்டுமென்று தன் பெற்றோர் மீதே வழக்கொன்று தொடர்ந்து குடும்பச் சொத்தில் அதிக பாகத்தைப் பெற்றிருந்தாள். "அந்தப் பிரதேசத்தில் வழக்கிலிருந்த ஒரு முறை விசித்திரமாகவும் அதே சமயம் ஏதோ ஒருவகை நியாயத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிந்தது. ஒருவரது பிள்ளைகள் கல்யாணமாகிக் குழந்தை குட்டி என்று ஆகிவிட்டபின்னர் குடும்பச் சொத்தைப் பங்கிட வேண்டும் என்ற நிலை வருகையில், அந்தப் பாகம் ஒவ்வொருவருக்கும் இருக்கிற குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். மூத்தவனுக்கு ஒரு குழந்தையிருந்து அவன் தம்பிக்கோ தங்கைக்கோ நாலு குழந்தையிருந்தால், அதிக குழந்தை உள்ளவர்கள் அதிக பாகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதை தலையெண்ணிப் பாகம் என்றார்கள். (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 50) மிக முக்கிய மரபு வழக்கொன்றைக் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார் இப் புதினத்தின் போக்கில் அரங்கநாதன் அய்யா. இந்த இயல்பான வாழ்வியல் அறம் தொலைகின்ற, தடம் புரள்கின்ற கணங்களைச், சம்பவங்கள் வாயிலாகக் கோர்த்து சொல்கையில் நமது தமிழ்ச் சமூக மரபின். வழக்கங்கங்களுக்கும், தனி மனிதச் செயல்களுக்குமடையே உள்ள உறவையும் உட்புகுத்தி, இப்புதினத்தை readable as well as a questioning work of art ஆகச் செய்கிறார். இதன் மூலம் தமிழ்ப் பிரதேச அமைப்பும், உணர்வும், செழுமையும் என்றால் இதன் வலிமையான இலக்கு உலகம் தழுவிய ஞானமும், கனிதலும், பூரணத்தை உணர்கின்ற இன்மையும். இயற்கை, மனிதன், சிந்தனை ஆகியவற்றின் பொதுத்தன்மைகளைத் தர்க்க ரீதியான உரையாடல்கள் மூலம் ஆய்வதல்ல இவரது தத்துவங்கள். கதாபாத்திரங்கள் பேசுவதைவிடச் சம்பவங்களில் பங்கேற்பவர்களாகவோ, சாட்சிகளாகவோ, வேடிக்கை பார்ப்பவர்களோ புனையப்பட்டு அதன் வாயிலாகவே கேள்விகளும், தேடலும், ஞானமும் கைவரப் பெறுகின்றன. இப் புதினத்தில் ஒரு மாடு இறந்துவிட, அதனை அப்புறப்படுத்த மறுக்கும் குழுவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அச்சம்பவத்தையொட்டி ஒரு தெளிதலும், புரிதலும், கனிதலும் - பயணம் என்பது அதற்கான தயாரித்தலே எனும் ஞானமும் சொல்லப்படுகிறது. "குளிக்க வந்தவர் ஒருகணம் சமைந்து நின்றார். "இதுக்காகத்தான் ஒன்னை வைச்சிருக்கோம்" என்ற வாக்கு எத்தனையோ விஷயங்களைத் தனக்கு அறிவுறுத்தியதாக பிறகு கூறினார். அது உண்மைதான். நிலமுள்ள விவசாயிகள் செய்த அபத்தமான - அசுரத்தனமான - ஆனால் அவசியம் என்று கருதப்பட்ட அநியாயம். நிலமற்றவன் நமது உறவினனாக இருந்தால் கூட வேறு வேலை செய்யட்டும். பரம்பரை பரம்பரையாக அவர்கள் அந்தந்த வேலையைச் செய்து கொண்டிருக்கட்டும் என்ற மனநிலை நிலமற்றவர்களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்று கேட்டுக்கொண்டார். இந்த செத்தமாடு இழுக்கும் குழுவனும், இராப்பாடியும் பனையேறி பிழைப்போரும் நிலமுள்ளவராக இருந்துவிட்டால் - அப்படி இருந்தவர்கள் தாமே என்றும் கேட்டார் - ஏதோ திடீரென மாறிவிட்ட ஒரு பேராசிரியர் போல கேட்டார். நாடு விடுதலையடைந்த பின்னரே பயணம் உண்மையில் ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார் போலும். இந்தப் பயணத்திற்குச் சாலைகள் கிடையாது. மண் போட்டு சாலைகளை உண்டு பண்ணுவதுதான் பயணம்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 46) இதில் பெரிதான தர்க்க மனோபாவம் இல்லை. ஒரு திடுக்கிடல், திகைத்தல், தேடுதல், உணர்தல், ஞானம் என்கிற எளிய உத்தி தான் இருக்கிறது. போலவே "எல்லாம் எனது ஊர் - எல்லாரும் என் சொந்தக்காரர் என்று தானாக எல்லாரிடமும் வரும் கடவுள் குணத்தை கொண்டிருக்க வேண்டிய ஒரு கூட்டம் - எப்படி ஆயிற்று - ஏன் ஆயிற்று - கேள்விகளை மட்டும் கேட்டிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். பதில் வேண்டாம். அதற்குக் கூட வக்கற்று விட்ட பாட்டன்மார் செய்தவை எப்படி எப்படி ஆட்கொண்டு விட்டது - அந்நிய ஆட்சி - என்றெல்லாம் சொல்லத்தெரிகிறதல்லவா - இதைப்பற்றி கொஞ்ச நஞ்ச எண்ணமாவது ஏற்பட்டதுண்டா?" (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 57) என்பதிலும் ஒரு ஆற்றாமை, ஆதங்கம், அதே சமயம், "யாதும் ஊரே" என்ற கணியனாரின் பரந்த மானுடப் பார்வையைக் கடவுள் குணமெனச் சுட்டும் தரிசனமும் இருக்கிறது. புதினம் நடக்கின்ற கதைக்களம் சுதந்திரத்திற்கு முன்-பின் என்கின்ற விரிவான பின்புலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. தேச விடுதலைக்குப் பின் ஊர் திரும்புகின்ற குற்றாலிங்கம் இப்போது பிற விஷயங்களில் கவனம் செலுத்தகிறார். அவற்றில் மலை வாழ் மக்கள் குறித்த அவரது கரிசனம் மேலூர் வாசிகளைப் பின்வருமாறு ஆச்சர்யப்படுத்துகிறது. "நேதாஜியைப் பற்றிப் பேசக் கூடியவர் என்பதுதான் பொதுவாக குற்றாலிங்கம் பிள்ளையைப் பற்றி மேலூர் அறிந்த விஷயம். விடுதலைப் போராட்டம் பற்றிப் பல்வேறு சங்கதிகளைச் சொன்னவர்தாம் அவர். இப்படி இவர் அடிப்படையிலேயே வேறு விஷயம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது போல ஊர்க்காரர் பார்த்துக் கொண்டனர். மலைவாழ் மக்கள்தாம் மாடுகள் மேய்த்தனர் - கடலில் மீன் பிடித்தனர் - உழவைக் கண்டு பிடித்தனர் - சரிதான் - யார் இல்லை என்றார்கள் - ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் மாறி இருந்தாலும் அடிப்படை இதுதான் - மனித குல வளர்ச்சி சமாச்சாரம் அல்லவா இது - உண்மை - அதைப் பற்றி இப்போது என்ன வந்தது? இத்தனை காலமும் வராத ஒன்று. அதுதான் புரியாத ஒன்றாக இருந்தது. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 40) குற்றாலிங்கம் காளியூட்டு பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பூசனை காலங்காலமாக நடந்து வந்ததென்றால், அதன் காரணம் இந்த ஊர் மக்கள் விவசாயத்தைப் பற்றியும் குடும்பங்கள் பற்றியும், வரவிருக்கிற மாதங்களின் காலநிலை பற்றியும் பேச ஒரு வாய்ப்பைத் தருவதற்காகத்தான் என்றார். அந்த வாய்ப்பு சரியானபடி நிறைவேற்றப்பட்டால், அது மேலான ஒரு நிலைக்கு நம்மை எடுத்துச்சொல்லும் - அது தவிர மற்றவை நம்மை பாதாளத்திற்கு அனுப்புகிற வெறும் சடங்குகள் தாம் என்றார். கற்ற கல்வி மூலமாக வந்தடைந்தவை என்று அவரது கூற்றை சொல்ல முடியாது. சொல்ல முடியாத விஷயங்கள் பல இப்படித்தான் வெளிவரும் என்று சொல்லிக் கொள்ளலாம்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 41) நம் இனக்குழுவின் தொன்மம், இயற்கைத் திணை வாழ்சார் பின்புலம், விவசாயம் செய்கின்ற சமூகத்திலும் பொருளியிலில் ஏற்றத்தாழ்வு, பெளதீக உலகோடு இயைந்திருத்தல் - அதே சமயம் 'இன்மை'க்கான தேடல்- இவற்றின் கலவையாகக் குற்றாலிங்கத்தின் கூற்றைக் காணலாம். மிகத் தீவிரமாக வெறும் சடங்குகளென மாறிவிடும் அபாயமிருப்பதைச் சுட்டுகின்ற அதி நவீன அவைதீக மனமும், கூடவே பகுத்தறிவினால் முற்றுமுணர முடியாத அனுபவ ஞானமும், இப் புதினத்தினைக், கூட்டு மரபின் உன்னதத்தையும், தனி மனித மனதின் தென்னாட்டு சிந்தாந்தமுணர்ந்து கனிதலையும் மிகச் சரியானதொரு கலைப்படைப்பாக மாற்றுகின்றது. "காரணம் எதுவும் இல்லாம - பிடிபடாம - ஆனா தானா தோணி ஒரு அமைதியைக் கொடுக்கிறதைத்தான் கடவுள்னு சொல்லிக்கிட்டு வாரோம் - எப்பவும் அப்படித்தான் இருக்கப்போறோம்" "கோமரத்தாடிக்காரங்களிலிருந்து இராப்பாடி வரை இந்த சாமி ஒரே மாதிரி பேசுவாரு" "இராப்பாடியே இந்தச் சாமியாகவும் இருக்கலாம்". (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 49) புதினத்தில், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பேசுவது போலல்லாமல், மேற்சுட்டியது போல பல தெறிப்புக்கள் இருக்கின்றன. இதனை நாவலாசிரியரின் குரலாகவே நான் உணர்கிறேன். "இராப்பாடியே இந்தச் சாமியாகவும் இருக்கலாம்" என்கிற அந்த துலக்கமற்ற, ஆனால் உறுதியான பரப்பு தான் - அந்த hypenated space தான் - அதில் இயங்குவதுதான் அரங்கநாதன் அய்யாவின் பலமும், உத்தியும். "இந்தத் துணைக் கண்டத்தில் தோன்றிய எந்தத் தத்துவத்தையும் தமிழர்கள் அறியாமலில்லை. அவற்றை ஆராயாமல் இல்லலை. மணிமேகலையும். நீலகேசியும் அதற்கான இலக்கியபூர்வமான சரித்திரப் பதிவுகளாக உள்ளன. சமயங்கள் எனப் பேசப்பட்டடாலும் அவரவர் கடவுள் குறத்த பெருமைகளையும். சடங்கு சமபிரதாயங்களையும் அவை வாதித்துக் கொண்டிருக்கவில்லை. நவீன உலகின் தத்துவத் துறை இப்போதும் எந்தெந்தக் கூறுகளைத் தர்க்கித்துக் கொண்டிருக்கிறதோ அவற்றையே அன்றைக்கு விவாதித்திருக்கிறார்கள்" - எனத் தமிழர்கள் குறித்துப் பெருமிதப்படுகிறார், அருணன். (தமிழரின் தத்துவமரபு - அருணன்) அவ்வகையிலேயே, ஆவுடை என்கிற தென்னாட்டுத் தத்துவத்தையும் முன்வைத்து, ஒரு நவீன படைப்பாளிக்குரிய கூர்மையான, விசாலமான, சமகாலச் சிக்கல்களுக்கும் பயணிக்கிறார் அரங்கநாதன் அய்யா. "ஒன்று நிச்சயம். மனிதர்கள் எப்போது மதங்களின் பிடியிலிருந்து விலகி தத்துவத்தைச் சார்ந்து நிற்கிறார்களோ - நம்பிக்கையின் பிடியிலிருந்து தப்பி பகுத்தறிவின் வசம் வந்து சேருகிறார்களோ - அப்போதே நாகரீகம் தொடர் வளர்ச்சியைக் காண்கிறது. ஐரோப்பிய கண்டத்திலும் மதங்கள் இருந்தன. ஆனால், தத்துவஞானிகள் அவற்றை மட்டும் சார்ந்து நிற்கவில்லை. தத்துவத்தை ஒரு தனித்த அறிவுப் பிரிவாக வளர்த்ததார்கள். அதனால்தான் அங்கே தத்துவம் வளர்ந்தது. அதைத் தொடாந்து விஞ்ஞானம் வளர்ந்தது. தொழிற்புரட்சி நடந்தது. ஒரு புதிய சமூகம் பிறந்தது. இந்த மண்ணில் அது நடக்காமல் நிலப்பிரபுத்துவ சமூகமாகவே முடங்கிப் போனதற்கான முக்கியமான காரணம் தத்துவம் தனித்து வளர்கப்படாமல் மதங்களுக்குள் - குறிப்பாக சைவ, வைணவ மதங்களுக்குள் - கரைந்து போனது" - என்று அருணன் மேலை நாடுகளின் போக்கிலிருந்து இந்தியத் தத்துவ மரபைப் பிரித்துக்காட்டுகிறார். ஆனால் அரங்கநாதன் அய்யா இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார். தத்துவம் - குறிப்பாக ஆதித் தமிழர் வாழ்வில் சங்க காலத்திற்கு முன்பாகவே, தொல்காப்பியருக்கு முன்பாகவே, இந்த மண்ணுக்கென்று ஒரு சித்தாந்தம் இருந்திருக்கின்றது. தானாகவே வருகின்ற ஞானம் தானது என்கிறார் அரங்கநாதன் அய்யா. அவரது இந்தப் போக்கு எனக்கு தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் கூற்றை நினைவூட்டியது. டாக்டர். இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா ஆகியோரது மாணவரான அவர், பின்னாட்களில் இவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கின்ற மார்க்சியப் விமர்சனப் பார்வையுடையவராகத் தன்னைச் செதுக்கிக் கொண்டவர். மிகக் குறிப்பாக சட்டோபாத்யாயா "கடவுள் என்ற கருத்து தோன்றுவதற்கு முன்னிருந்த நாத்திகவாதம் என்று ஒன்று இருந்தது - அது தாமிர இரும்புக் கருவிகள் தோன்றுவதற்கு முன்னிருந்த விவசாயப் பொருளாதாரத்தின் விளைபொருள் ஆகும். இதற்கு லோகாயதா என்று பெயர். இதன் பொருள் உலகத்தை அது உள்ளவாறே புரிந்து கொள்வது என்பதாகும். இது மாய வித்தைகளையும் மந்திரங்களையும் தன்னகத்தே கொண்டு இருந்தது. இதனை ஜார்ஜ் தாம்ஸன், ஜோசப் நீடாம் போன்றவர்களின் நூல்களைக் கொண்டு ஆசிரியர் விளக்கிக் காட்டுகிறார். இந்தப் பகுதிகள் ஒரு கருத்தியல் சிந்தனை என்பது எப்படி ஒரு பொருளாதார நடவடிக்கையில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை வாசகர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கு கின்றது" - என அவரது பங்களிப்பு குறித்து பதியப்பட்டுள்ளது. (தமிழரின் தத்துவமரபு - அருணன்) இந்த 'லோகாயதா' தான் அரங்கநாதன் அய்யாவின் இன்மைக்கு அருகில் வருகின்ற தத்துவ மரபு என நான் கருதுகின்றேன். 'வாழ்க்கை சார்ந்த இன்மை' என்பது 'லோகாயதா' தான். அதனையே முத்துக்கருப்பன் மூலமாகச் சொல்கிறார். இதற்கு அய்யா தருகின்ற விளக்கம் அபாரமானது. "அவனுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை வைத்துத்தானே சொல்ல முடியும். ஒரு கிரியேட்டிவ் லிட்டரேச்சரோட கிரியேட்டிவ் இலக்கியப் பண்பே இதுதானே. உங்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைக் கொண்டு இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை சொல்கிறோம். அதை அவன் சொல்கிறான். தேரோட்டம், தேர் போகிறது, விழா எடுப்பதெல்லாம் அந்த ஊர் வழக்கம். ஒரே கலகலப்பாக இருந்தது, இப்போது அந்தக் கலகலப்பு இல்லை. அசைவின்மையை எப்படிச் சொல்ல முடியும்? அசைவின் மூலம்தான் சொல்ல முடியும். ஒண்ணுமே இல்லாத ஒன்றை அணில் ஓடுவதன் மூலமாக இன்னொன்றைச் சொல்வதுதான். இந்தக் கவிதைப் பண்பு மனசை ரொம்பக் கவர்ந்தது. பூங்குன்றனார், அணிலாடு முன்றிலார் இன்னும் ஒன்றிரண்டு பேர் எல்லாருமே ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் பேர்கூடத் தெரியாது. இது இன்மையைப் பற்றியுள்ள சமாச்சாரம்தான். இது எனக்கே தெரியாமல் உள்மனதில் இருந்திருக்கலாம். இது ஒரு வெளிப்பாடு." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 24) வெறும் தத்துவ விசாரம் மட்டுமா காளியூட்டு? ஒரு திருவிழாவினை குவிமையப்படுத்திச் சம்பவங்களின் கோர்வையை அதில் கரை தட்டி நிற்கச் செய்வதன் தாத்பர்யம் என்ன? அரங்கநாதன் அய்யாவே அதற்கான விடையையும் தருகின்றார்: "காளியூட்டு என்பது ஒரு கிராமத்துத் திருவிழா. அந்த விழாவைப் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் திருவிழாவைப் பற்றியே ஒரு நாவல் எழுதணும் என நீங்கள் எண்ணியது ஏன்?" எனச் சண்முகம் தனது நேர்காணலில் கேட்க, அதற்கு, "முதல் காரணம், கிராமங்களிலுள்ள ஆட்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒரு கோயில். அந்த கோயிலில் நடைபெற்று வருகிற திருவிழா. இது நாஞ்சில் நாடு முழுவதும் நடக்கக்கூடிய திருவிழா. திருநெல்வேலியிலும் நடக்கும் காளியூட்டுன்னு பேரு. காளிக்கு நாம உணவு கொடுக்கிறோம். மழை பெய்யாத காலத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை விழா நடத்துவாங்க. மூணு நாள் நடத்துவாங்க. திருவாதிரை நட்சத்திரத்துல ஆரம்பிச்சு பூசம் நட்சத்திரம்வரை நடைபெறும். 'ஆதிரை சிவனுக்கு பூசம் சேயோனுக்கு' பழமொழி சின்னப் பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும். காளியூட்டு சமயத்தில் ஒரே சாதி மக்கள்தான் இங்கே கூடுவாங்க. ரொம்ப தயவுபண்ணி ஆதிதிராவிடர் மக்களை வெளியே உக்காரும்படியா சொல்லுவாங்க. பிராமணர்கள் வரமாட்டார்கள். பகல், ராத்திரின்னு மூணு நாட்கள் இந்த விழா நடக்கும். வைதீகச் சாயல் துளியும் இருக்காது. இந்த விழா முடிந்தவுடனேயே, அநேகமாக மழை பெய்யும். ஒரு தடவை மழை பெய்யுறத நான் பார்த்திருக்கிறேன். அதுக்கு காரணம் என்ன்னா அப்ப கத்திரி வெயில் முடியும். அதுக்கப்புறம் மழை பெய்யதானே செய்யும். அதை நியாயப்படுத்தலை. மழை பெய்யத்தான் செய்யும். மழை பெய்யுற காலத்தல விழாவை ஆரம்பிக்கிறாங்க. அந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் இருக்கிற சாதிவெறியும், வைதீக மனப்பான்மையும் பிராமணர்களைவிட அதிகம். அதைத்தான் சொல்ல வந்தேன்," எனப் பதிலளிக்கிறார். வைதீகம் என்பது மனப்பான்மை, அது பிராமணர்களிடம் மட்டுமே இருப்பதல்ல என்கின்ற அதி நவீன மனதின் படைப்புச் செறிவே காளியூட்டு. இதுவே புதியதொரு கோணத்தை இப்புதினத்திற்குத் தருகிறது. இப்புதினம் பக்க அளவில் சிறியதுதான். 79 பக்கங்கள் தான். ஆனால் அளவல்ல ஒரு புதினத்தின் வீர்யத்தைக், காத்திரத்தைத் தீர்மானிப்பது. கால அளவில் நீண்டதொரு கதைக் களம், மேலூரின் மாந்தர்கள், அவரது வாழ்வில் நேர்ந்த சம்பவங்கள் இவற்றின் வாயிலாக இப் புதினத்தைச் செதுக்க அரங்கநாதன் அய்யா காலம் சார்ந்த கதைசொல்லல் எனும் உத்தியைப் பயன்படுத்துகின்றார். "கதை சொல்லி சம்பவங்களை அவை நிகழ்ந்த காலத்திலிருந்தோ அல்லது கொஞ்ச காலம் கழித்தோ அல்லது நீண்ட காலத்துக்குப் பிறகோ குவிமையப்படுத்தலாம். சம்பவம் நிகழ்ந்த அந்த நேரத்தில் குவிமையப்படுத்துபவருக்கு என்ன தெரிந்ததோ அல்லது அவர் என்ன நினைத்தாரோ அல்லது காலத்தால் தள்ளி நின்று பார்ப்பதால் கிடைக்கும் அந்தப் பின்னறிவு அனுகூலத்தோடு அவர் (கதை சொல்லி) விஷயங்களைப் பிறகு எப்படிப் பார்த்தாரோ அவற்றின் மீது குவி மையம் பிரயோகிக்கப்படலாம். கதை சொல்வதற்காகக் காலம் சார்ந்த குவிமையப்படுத்தல் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு கதையாடலின் விளைவுகளில் மிகப்பெரிய வேறுபாட்டை உண்டாக்குகிறது. எடுத்துக்காட்டாகத் துப்பறியும் கதைகளில் குவிமையப்படுத்துபவருக்குப் புலன் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன தெரிந்ததோ அது மட்டுமே விவரிக்கப்படும். விசாரணையின் முடிவைப் பற்றிய தகவல் உச்சகட்டத்திற்காகப் பாதுகாத்து வைக்கப்படுகிறது" என்கிறார் ஜானதன். (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 144,145) இப்போது நான் உரையின் துவக்கத்தில் ஆரம்பித்த நிறைவுப் பகுதிக்கு வரலாம். விசாரணையின் முடிவைப் பற்றிய தகவல்கள் இங்கும் உச்சகட்டத்திற்காகப் பாதுகாத்து வைக்கப்படுகிறது - ஆனால் அது ஒரு உத்தி என அறியாமலேயே வாசகர்களாகிய நமக்கு ஒவ்வொரு கட்டத்திலும் என்ன வேண்டுமோ அது மட்டுமே தரப்பட்டது. காளியூட்டுத் திருவிழாவிலோதான் உச்சகட்டமான திருப்பங்களுக்கான முழுத் திருப்தியுமடைகிறோம் நாம். அடுத்ததாக, பார்வைக் கோணம் - யார் பார்க்கிறார்கள்? "கதையாடல் குறித்த விவாதங்கள் 'கதை சொல்லப்படும் பார்வைக் கோணம் (point of view)' பற்றி அடிக்கடிப் பேசுகின்றன. ஆனால் பார்வைக் கோணம் என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்துவது, யார் பேசுகிறார்கள்? மற்றும் யாருடைய பார்வை முன்வைக்கப்படுகிறது? என்ற இரு வெவ்வேறான கேள்விகளைக் குழப்பிக் கொள்கிறது. ஹென்றி ஜேம்ஸின் நாவலான 'மேஸீ தெரிந்துகொண்டது (What Maisie knew)' என்பதன் கதைசொல்லி ஒரு குழந்தை அல்ல; ஆனால் மேஸீ என்ற ஒரு குழந்தையின் பிரக்ஞையின் ஊடாகவே நாவல் தன்னுடைய கதையை வெளிப்படுத்துகிறது. மேஸீ கதை சொல்லி அல்ல; 'அவள்' என்று படர்க்கையிலேயே அவள் வர்ணிக்கப்படுகிறாள். ஆனால் நாவல் பல விஷயங்களை அவளுடைய பார்வையிலேயே வழங்குகிறது. எடுத்துக் காட்டாக, அவளைச் சுற்றியுள்ள வயது வந்தோர்களுக்கிடையேயான உறவுகளின் பாலியல் பரிமாணம் அவளுக்கு முழுக்கப் புரிவதில்லை. கதையாடல் குறித்த கோட்பாட்டாளர்களான மீக்கே பல் (Mieke Bal) மற்றும் ழெரர் ழெனெத் (Gerard Genette) போன்றோரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கலைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமானால் இந்த நாவலின் கதை அவள் வழியாகக் குவிமையப்படுத்தப்படுகிறது. இங்கு அவருடைய பிரக்ஞை அல்லது நிலையின் ஊடாகச் சம்பவங்கள் குவிமையப்படுத்தப்படுகின்றன. 'யார் பேசுகிறார்கள்?' என்ற கேள்வி 'யார் பார்க்கிறார்கள்?' என்ற கேள்வியிலிருந்து வேறுபட்டது. யார் பார்வைக் கோணத்திலிலிருந்து சம்பவங்கள் குவிமையப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன? குவிமையப்படுத்தப்படுபவர் கதை சொல்லியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பல மாறுபடும் நிலைகள் இங்கே உள்ளன" என்று தொடர்கிறார் ஜானதன் கல்லர். (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 144) இங்கு, முத்துக்கருப்பனது பார்வைக் கோணத்திலிருந்து புதினம் விவரிக்கப்படுகிறது. இடையிடையே பல கதாபாத்திரங்கள் பேசலாம் - பேசுகிறார்கள். ஆனால் "யார் பார்க்கிறார்கள்?" என்ற கேள்வி தான் இங்கு மிக முக்கியம். அவ்வகையில், முத்துக்கருப்பனே முன்னிலை பெறுகின்றான். அவனது பிரக்ஞையினூடாகவே புதினம் தன்னுடைய கதையை வெளிப்படுத்துகிறது. "அப்போது பொங்கல் கழிந்து இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருக்கும். அவன் பக்கத்தூருக்கு ஆற்றைக் கடந்து கோய்க் கொண்டிருந்தான்" என்று சுடலை முத்துக்கறுப்பனிடமிருந்து துவங்குகிற புதினம், "அவன் தன்னையே பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்" என்று சிவ முத்துக்கறுப்பனோடு முடிகிறது. 79 பக்கங்களில் "தமிழின் உயிர்த்துவம்" அனைத்தையும் பொதிந்து இப் புதினத்தைப் படைத்திருக்கிறார். இது சுருக்கமல்ல - செறிவு. இதனைச் "சுருக்கமாக எழுதி இருக்கிறீர்களே உங்கள் படைப்புக்களை" என எஸ்.சண்முகம் கேட்க, அதற்கான பதிலாக, "நான் சாண்டில்யனோ, வை.மு.கோதைநாயகியோ இல்லை. இன்னும் பத்து பக்கம் வேணுமா? பிரஸ்ல உக்கார்ந்துகிட்டு கொடுங்க பேப்பரன்னு சொல்லி, இன்னொரு பத்து பக்கம் எழுதித் தருவதற்கு நம்மால முடியாது." என்கிறார் அரங்கநாதன் அய்யா. மேலும், "அந்த சுருக்கத்துக்குக் காரணம் இதுதானா? இல்ல, உங்க சிந்தனை முறையிலேயே அந்தச் சுருக்கம் இருக்கிறதா?" எனச் சண்முகம் கேட்க, "ஹெமிங்வே நூறு பக்கத்துல நாவல் எழுதிக் கொடுத்துட்டு பதிப்பாளர்கள் 'ஒரு பேரா சேர்க்கணும்'னு சொன்னபோது, 'ஒரு வரிகூட சேர்க்க முடியாது'ன்னு சொன்ன மாதிரி நம்மால முடியாது. புத்தகத்தை நாம் படிக்கிறோம். புத்தகமும் நம்மைப் படிக்கிறது என்று ஆங்கில அறிஞர் ஒருவர் சொன்னார். அதுமாதிரி ஞானக்கூத்தன் கவிதையைப் படித்தாலோ அல்லது வேறொருவர் கவிதைகளைப் படித்தாலோ அது என்ன பண்ணியது என்பதை நான் சொல்றேன். அதை விமர்சனமாகவும் எடுத்துக்கலாம்" எனப் பதிலளிக்கிறார். (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்மகம் : 59) இந்தப் புத்தகமும் என்னைப் படித்தது - இன்னும் சொல்லப் போனால், என்னைத் தேடி வந்து படித்தது. அது தானாகத் தேடி வருகின்றதொரு வரம் - தனியாகத் திளைத்து எழுகின்றதொரு தியானம். தனது நேர்காணலில் அய்யா ஒரு நிகழ்வினை நினைவு கூர்கின்றார். "முதல் முதலில் ப்ரான்ஸ் காஃப்காவினுடைய நூல் ஆங்கிலத்தில் வந்தபோது அதை புதுமைப்பித்தன் படித்துவிட்டு கநாசுவிடம் கொடுத்தாராம். கநாசு அதைப் படித்துவிட்டு, சிதம்பரத்துக்குப் போய் அதை மெளனியிடம் கொடுத்தாராம். நீங்கள் படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்ததாக அவரே எழுதி இருக்கிறார். மெளனி அதைப் படித்துவிட்டு," நீ எல்லாம் இதை ஏன் படிக்கிறாய்? காஃப்காவானவன் எனக்காக வேண்டியல்லவா எழுதி இருக்கிறான்" என்றாராம். நானும் சொல்வேன் - நீங்களெல்லாம் ஏன் இதனைப் படிக்கிறீர்கள்? அரங்கநாதன் அய்யாவானவர் எனக்காக வேண்டியல்லவா எழுதி இருக்கிறார் என்று. ஏனெனில் - நான் ஒரு பிச்சி - வனப் பேய்ச்சியின் பிச்சி. ஆக, பேய்ச்சி தான் என்னைப் படித்தாள் - நான் வெறுமனே அருவாக் கருப்பன்களுக்கான காட்டையல்லவா பார்த்துக் கொண்டிருந்தேன். அட - அருவாக் கருப்பன் கூட முத்துக் கருப்பன் தானே! உதவிய நூல்கள் : • இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் • இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர், தமிழில் ஆர்.சிவகுமார் • தமிழரின் தத்துவமரபு – அருணன் • சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன் • சமூக-பண்பாட்டு மானிடவியல் - ஜான் மோனகன், பீட்டர் ஐஸ்ட்

தொடர

திரு - விவாக - சதிர் : அரவிந்த் அப்பாதுரை புத்தக வெளியீட்டு விழா

தமிழச்சி தங்கப்பாண்டியன்

திரு - விவாக - சதிர் : அரவிந்த் அப்பாதுரை புத்தக வெளியீட்டு விழா மனித ஆன்மாக்களுக்கான திறவுகோல்களைக் கொண்டிருப்பவை இலக்கியம் என்றால், அவற்றின் வகைமைகளில் ‘புதினம்’ எனப்படுகின்ற நாவல் மிக முக்கியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சின் மத்திய தரைக்கடல் பகுதியில், உப்பளப்பணி செய்து வந்தனர் ஏழை நாடோடி இத்தாலியத் தொழிலாளர்கள் பலர். ஆகஸ்ட் 16, 1893 அன்று அந்த உப்பளங்களில் இத்தாலியர்கள் மூன்று பிரெஞ்சுத் தொழிலாளர்களைக் கொன்றுவிட்டதாகப் புரளி கிளம்பியது. பெரும்பாலான இத்தாலியக் குடியேறிகள் தாக்கப்பட்டனர். அப்பகுதியின் பெயர் அய்குவே-மாட்டெஸ். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த டூர் தெ கான்ஸ்டன்ஸில் (Tour de constana) இத்தாலியருக்குப் புகலிடம் வழங்கப்பட்டது. 1890இல் வெளிவந்த மோரிஸ் பாரே (Maurice Barres) எழுதிய லா ஜார்தான் தெ பெரனிஸ் (Le Jardin de Berenice) என்னும் நாவல் தற்செயலாக அய்குவெஸ் - மார்டெஸைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. அது டூர் தெ கான்ஸ்டன்ஸை ஒரு புதிய வகைத் தேசியத்தின் குறியீடாகப் பயன்படுத்தியது. பிரான்சின் குடிமக்களாக உள்ள தனிநபர்களின் (ஆண்களின்) பகுத்தறிவு சார்ந்த நலன்களின் வெளிப்பாடே தேசம் என்னும் தாராளவாத, ஜனநாயகக் கருத்துகளை நிராகரித்த பெர், மனிதர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக உணர்விலிருந்து எழுவதே தேசம் எனக் கருதினார். இத்தகைய கருத்தை வடிவமைத்தவை மனிதர்களின் கூட்டு நனவலி மனம் (Human Collective Unconscious) என்று அன்று பொதுவாகப் பேசப்பட்டு வந்த உளவியல் கருத்துகளும் இலக்கியக் குறியீட்டியல் இயக்கமும் கருதின. மேலும் மனிதர்களின் நடத்தை முறைகளுக்கு அடிப்படையாக மறைந்து நிற்கும் தொன்மங்களைக் கலையினால் நெருங்கிக் காணவியலும் எனக் கருதின. தேசம் என்பது வரலாறு, மரபு, தேசத்தின் மண்ணுடன் பிரெஞ்சு உழவர் வர்க்கம் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் தொடர்பு ஆகியவற்றினால் உருவாக்கப்படுவதாகும் என்று பாரே கருதினார். லெ ஜார்தான் தெ பெரனிஸின் கதாநாயகனால் டூர் தெ கான்ஸ்டஸின் உச்சியிலிருந்து பரந்து விரிந்த பிரெஞ்சு நாட்டுப்புறத்தைப் பார்க்க முடிகின்றது. அவன் பிரெஞ்சு நாட்டின் கடந்துபோன மத்திய காலத்துடன் உறவாடுகிறான். ஒரு தனிநபர் என்னு வகையில் தான் ‘இந்த பரந்த நாட்டில் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே’ என்பதை உணர்கின்றான். பாரேயின் நாயகன் மண்ணின் மைந்தனாக பிரெஞ்சுத் தேசத்துடன் ஒன்றிவிடுகிறான். புலம் பெயர்ந்து இங்கு குடியேறியவனால் அப்படி ஒருபோதும் இந்த தேசத்துடன் ஒன்றிவிட முடியாது. அரவிந்த் அப்பாத்துரையின் நாயகன் மதன், நாயகி சகுந்தலா ஆகியோரும் அப்படித்தான். பிரான்ஸிற்கும், பாண்டிச்சேரிக்குமான பொது மனிதர்கள் அவர்கள். இரண்டிற்கும் ஊடோட்டமான வாழ்வு அவர்களது. "கல்வி என்றால், பள்ளிக்கூடங்களில் புகட்டப்படும் பாடத்தைப் பற்றி நான் இங்கு எதையும் சொல்ல வரவில்லை. வாழ்க்கையை அணுகும் முறை. ஆம், வாழ்வை அணுகும் முறையை கற்பிப்பதுதான் ‘கல்வி’ என்ற சொல்லுக்கு தகுந்த விளக்கம். சகுந்தலாவின் கதையை எடுத்துக் கொள்வோம்" எனத் தனது புதினத்தைத் தொடங்குகிறார் அரவிந்த் அப்பாத்துரை. "இத்தனை பரம ஏழைகள். இத்தனை கோடீஸ்வரர்கள். ஒரே வீட்டில் ஒருவனுக்கு ஜயாயிரம் சம்பளம் அதே வீட்டில் மற்றவனுக்கு ஒரு லட்சம் சம்பளம். அதிகரித்துக் கொண்டே போகும் ஏற்றத்தாழ்வுகள். இந்த காலத்தில் வாழும் நம்மை நாட்டுமிராண்டிகள் என்று அழைக்கலாமா- காட்டில் வாழ்பவன் காட்டுமிரண்டி இவ்வாறான சமூக அநீதிகளை அடையாளம் காணாமலேயே வாழ்பவன் நாட்டுமிராண்டியா?. காட்டுமிராண்டி, நாட்டுமிராண்டி காட்டுமிராண்டி... நாட்டுமிராண்டி" இப்படிப்பட்ட சிந்தனைகளுடன் தனது கதை மாந்தர்களை அறிமுகம் செய்கிறார் அரவிந்த். (கதைச் சுருக்கம் இங்கு) இரும்புப்படை அணி என்ற யூதர்களுக்கு எதிரான பாசிச படைக்குத் தலைமை தாங்கிய - ருமேனியா, ருமேனியர்களுக்கே சொந்தம் என்று அறைகூவல் விடுத்த கோர்னேலியூ காட்ரொனின் (Cornelian Codreann) தொண்டர்களில் ஒருவர் பின்வருமாறு சொன்னார் ஒருமுறை - "வெகுசனத்திற்கு எதிரான மனிதனோ (பழமைவாத சர்வாதிகாரி) அல்லது ஒரு மனிதனுக்கு எதிரான வெகுசனமோ (நம்காலத்திய சீரழந்த ஜனநாயகம்) இல்லாமல், வெகுசனங்கள் கண்டெடுத்த மனிதன் என்று படைப்பாக்கத்தன்மை வரலாற்றில் கட்டாயம் இருக்க வேண்டும்" அப்பாத்துரையின் நாயகர்கள் - மதன், சரவணன் - நாயகி சகுந்தலா மூவருமே வெகுசனங்கள் கண்டெடுத்த மனிதர்கள்தான். "எல்லாம் ஒன்றுதான், காதலன், இஷ்டன், பித்தன் என்று வார்த்தைகள்தான் மாறுகின்றன, உணர்வுகள் ஒன்றுதான்" - எனும் நாயகி சகுந்தலாவும் வெகுசனங்கள் கண்டெடுத்த மனுஷிதான். "உன் பேரு சரவணன்றது போல, என் பேரு பறவை"- எனும் உணவு விடுதிக் கிளியும், வேடன் கண்டெடுத்த வெகுசனப் பிறவிதான். கதையில் ஓரிடத்தில் -"மங்களுர் எல்லையிலிருந்து, கார் ஓடிய வழியெல்லாம், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் மைல் கற்களிலெல்லாம் யாரோ "ஜானகி" "ஜானகி" என்று எழுதிவைத்திருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒருகல் - இரண்டுகல் - மூன்று நான்கு ஐந்து - பத்து - இருவது... போகும் வழியில் நின்ற தூரம் மைல் கற்களின் மீதெல்லாம் யாரோ இப்படி எழுதியிருக்கின்றனர். யாராக இருக்கும்? நிச்சயமாக ஏதோ ஒரு காதல் பைத்தியத்தின் கைங்கரியமாகத்தான் அது இருக்க வேண்டும். கர்நாடகாவின் கவர்னர் வீதி வலம் வரும்போது இதை கவனித்தார். என் வார்த்தை கட்டளையாகட்டும். ஜானகி என்று பெயர் அழிக்கப்படட்டும் என்றார். பொது-இன்ஸ்பெக்டர் என்று அழைக்கப்படும் காவல் படையின் தலைவனுக்கு ஆணையிட்டார். அவனோ வேறு வாதங்களை முன் வைத்தான் – ஜயோ பாவம். அவனுடைய துயரம் எவ்வளவு கொடுமையானதாக இருக்கும். ஆண்டவனே, அவன் காப்பாற்ற பட வேண்டும். அவன் காதல் வாழ வேண்டும். அவன் ஆன்மா சாந்தமடைய வேண்டும். சந்தோஷம் அவனுள் பிரவேசித்து அவனுடைய வாழ்க்கையை அது அர்த்தமுள்ளதாகவும், அற்புதமானதாகவும் மாற்ற வேண்டும்"" என்றான். அவனும் வெகுசனம் கண்டெடுத்த மனிதன்தான். எழுதுபவனைப் பிரதியாளன் (ஸ்கிரிப்டர்) என்று அழைக்கிறார் பின்நவீனத்துவ முன்னோடி பார்த். இவர் மாபெரும் இலக்கியவாதி - அவரது படைப்புகள்யாவும் விழுமியங்களின் கருவூலம் போன்ற கருத்துகள் இப்போது தகர்ந்துவிட்டன என்கிறார் பார்த். எழுத்தாளன் இப்போது மேடையில் நடுநாயகமாக இல்லை. அவனை எப்படி அழைப்பது? எழுத்தாளன்? அறிவுஜீவி? பிரதியாளன்? இலக்கிய மேதைமை என்பது இப்போது மறைந்து வருகிறது. அப்பாத்துரையையும் எப்படி அழைக்க - நாவலாசிரியர்? பிரதியாளர்? எழுத்தாளர்? பார்த் தனது சுயசரிதையை ஒரு நூலாக எழுதினார். அதன் தலைப்பு பார்த்தைப் பற்றி பார்த். அது ஒரு வித்தியாசமான முயற்சி. அவரை அவரே விலகி நின்று பார்த்து எழுதும் நூதனத் தன்மை அதில் இருந்தது. வாழ்க்கையை எழுதும்போது, அது ஒரு புனைவாக மாற்றம் கொள்கிறது என்பதை அதில் நிறுவி இருந்தார். அப்பாத்துரையின் ‘திரு விவாக சதிரும்’ ஒரு உண்மை வாழ்க்கையை புனைவாக மாற்றுருவாக்கிப் பகிர்ந்து கொள்கிறது. இடையிடையே தன் சரிதத்தையும் அப்பாத்துரை பகிரத் தருகிறார் - விலகி நின்றும், ஒட்டியும் - சமூகத்தின் முகத்தோடு முகம் உரசியும், கிழித்துப் பார்த்து, பகுத்தறிய முயன்று தோற்றும், அவற்றை ஆண், பெண், அவர்தம் பண்பாட்டுத், தேசியக் கற்பிதங்களுடன் புகட்டப்பற்றவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறார். சமயங்களில் ‘no comments’ என மௌனிக்கிறார். ‘எனக்குச் சுயசரிதை இல்லை; அதை நான் எழுத ஆரம்பித்த போது, என்னையே நான் பார்த்துக்கொள்ள முடியவில்லை’ என்று எழுதும் பார்த், எல்லாமே எழுத்தின் மூலம் நிகழ்கின்றன என்றும் சொல்கிறார். ‘நான் என்பது எனக்கு நிகழும் கதையே’ என்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார் பார்த். அகநிலை என்பது மொழியின் விளைவே ஆகும் என்பதும் அவரது கூற்றே. அவரது சுயசரிதை நூலானது துண்டாடப்பட்ட விவரணைகளால் தொகுக்கப்பட்டது. பார்த் என்பவர் விமர்சகர் மட்டுமல்ல; அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட என்பதை இந்தச் சுயசரிதை நூல் உலகத்துக்குக் காட்டியது. ‘ஆந்திரே ழீத்தின் நாட்குறிப்புகளில், எழுத்தாளனுக்கு எழுத்தின் மீது இருக்க வேண்டிய பிணைப்பையும், அதன் துண்டாடப்பட்ட சுயபிரதிபலிப்பையும் காண முடியும். அதை எனது எழுத்துக்களில் உயிர்ப்பித்திருக்கிறேன்’ என்கிறார் பார்த் - திரு விவாக சதிர் சுயசரிதை அல்ல. பிறரது சரிதையின் ஊடாக தனது சுயத்தையும் வெளிப்படுத்தும் ஒரு புதினம். இதில் அரவிந்தின் துண்டாடப்பட்ட சுயபிரதிபலிப்புகளை உணரலாம். கீழ்க்காணும் ஒரு சம்பவம் - இப்புதினத்தில் வருகிறது. "கடலில், மீனவர்களின் வலையில் இரண்டு கடல் கன்னிகள் சிக்கயிதாகவும்,அவர்களை சுமந்து கொண்டு ஒரு மீன்-பிடி படகு கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்தி அறிவித்தது. தொலைக்காட்சிகளும் இந்த வதந்தியை, செய்தி நேரத்தில், "இப்படியாக ஒரு வதந்தி பரவுகிறது" என்ற கருத்தோட அறிவித்தன. ஊரில் ஒரே பரபரப்பு, ஆர்வம், ஆச்சம்... கடல்-கன்னிகள் என்பது கட்டுகதை என்றால், ஆகாயமும், பூமியும் கூட கட்டுகதைகள் தான், என்று ஒரு நாவலாசிரியன் சொன்னான். மனித இரத்தமா, இல்லை மீன் இரத்தமா என்பதை முதலில் அறிய வேண்டும், என்றான் மிருகவியல்காரன். ஆம், அது - அதி முக்கியம். தலை வந்துவிட்ட அந்த ஜீவன்களுக்குள் மனித இரத்தம் ஓடினால் அவர்களுக்கு மனிதர்களுக்காக இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் அவர்களுக்கும் செல்லுபடியாகும். அவர்களை சாடுவதோ, அடிப்பதோ, உதைப்பதோ, கொல்லுவதோ, சட்டபடி குற்றமாகிவிடும். ஆனால் அவர்கள் உடலில் மீன் இரத்தம் ஓடினால், அவர்களை ஏலத்தில் விற்று அவர்களை வாங்குபவன் பொரித்தோ இல்லை குழம்பு வைத்தோ தானும் உண்டு தன் உற்றார் - உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் கொடுத்து சுவைக்க செய்து மகிழலாம், என்றார் பாண்டிச்சேரியின் தலையாய - நீதிபதி". தொடர்ந்து மக்கள் கடல்கன்னிகளிடம் உரையாடுகிறார்கள். கடல் கன்னிகளின் கூற்றைப் பாருங்கள் : "பொதுவாக சொல்ல போனால் எங்கள் கலாச்சாரம், தனிமனித சுதந்திரத்தை பேணி - போற்றும் இயல்புடையது. அங்கு குடிக்கலாம் - புகைக்கலாம் - சுசிக்கலாம் - சாமி கும்பிடலாம். யாரும் உன்னை தொந்தரவு செய்யமாட்டார்கள். இந்த பாழாய்போன இந்திய நகரங்களைப் போல இல்லை. நோ-நோ-நோ, இல்லவே இல்லை". இது நாவலாசிரியரினின் அக உலகம் பற்றிய பதிவுதான். புறஉலகம் இப்படியாக இருக்க வேண்டுமென்கிற அவரது அக உலகம் - அந்த ஏக்கத்தின் ஊடே அதன் சாத்தியமின்மை, நிறுவனங்களின் சுமைகள் எனப் பிரதிபலிப்புகளில், விவரணனைகளில் வெளிப்படுவது ஆசிரியன்தான் - அரவிந்த் அப்பாத்துரையேதான். பிரெஞ்சு எழுத்தாளரான ஜார்ஜ் பதாய்லை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், தத்துவஞானி, மறை பொருள்வாதி, அதில் அவர் யார்? இதற்கான பதிலைச் சொல்வது கடினம். பதாய்ல் பல பிரதிகளை எழுதினார். அல்லது தொடர்ந்து ஒரே பிரதியை எழுதிக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அரவிந்தும் தொடர்ந்து ஒரே பிரதியை வெவ்வேறு கேள்விகளோடு - குறிப்பாக தனது புதினங்களில் எழுதுகிறாரோ எனத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு - விடுதலைப் புலிகள் பற்றிய அவரது பதிவு. "நீங்கள் என்ன சாதி அக்கா? என்று கயல் வினவினாள். எனக்கு தெரியாது, என்றாள் சகுந்தலா. நீங்கள் தமிழ்தானே! ஆமாம் சாதி தெரியாமல் எப்படி வாழ்கின்றீர்கள். ஒரு முறை என் அம்மாவிடம் கேட்டேன். அவளுக்கு சரியாக தெரியாது என்று சொல்லிவிட்டாள். நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, பல வருடங்களாக வெளிநாடுகளுக்கும் - இந்தியாவுக்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நாங்கள் அவ்வளவாக ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை. எங்கள் போராட்டம் தோற்றதே இந்த சாதி பிரச்சனையால் தானக்கா. அப்படியா? விடுதலைப் புலி இயக்கத்தில் உள்ள பெருவாரியான தளபதிகளும், கேப்டன்களும் கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள். தமிழ் போராளிகள் எந்த அளவுக்கு கண்ணியமாக போராடினாலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவங்களுக்கு சேர வேண்டிய சன்மானம் கிடைத்ததே இல்லை. அதைப் போலவே பிராமணர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எந்த இடமும் இல்லை. அதனால்தான், அந்த இயக்கம் அகோர முடிவுக்கு வந்தது. நானே எதிர்பார்த்ததுதான். இருப்பினும் என் தமிழ் மனம் இன்னும் விம்மி-விம்மி அழுது கொண்டே இருக்கிறது. இனி இப்படியான போராட்டம் நடந்தால் எல்லா சாதியினருக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் போராட்டம் வெற்றி பெறும். நீ சொல்வது சரியே, என்றாள் சகுந்தலா". திரு. பூர்விக. சதிர் - எனும் அவரது நாவலிலும் புலிகள் மீதான விமர்சனம் இருந்தது. இது தொடர்பான எனது மாறுபட்ட கருத்தினை அந்த உரையிலும் நான் பதிவு செய்தேன். இந்த விமர்சனத்தை முன்வைக்கின்ற உரிமை அவருக்கு உள்ள அதே அளவு அதனை மறுக்கின்ற Space எனக்குள்ளது என நான் நம்புகின்றேன். அறிவுஜீவிகளால் பெரும்பான்மையாக முன்வைக்கப்படுகின்ற இவ்விவாதத்திற்குரிய தளம் இதுவல்ல என்றாலும் ஒரு பிரதியையே வெவ்வேறு விதமாக அரவிந்த எழுதிப் பார்க்கிறாரோ எனும் உணர்வை இக்கருத்து எனக்குள் உருவாக்கியது என்பதற்காக இதனை இங்கு சுட்டுகிறேன். ஸாலர்ஸ் எழுதிய எண்கள் என்கிற நாவல் வித்தியசாமானது. அதை நாவலற்ற நாவல் என்றோ, எதிர் நாவல் ஆன்ட்டி-நாவல் என்றோ, பிந்தைய நாவல் (போஸ்ட்-நாவல்) என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்பார்கள். திரு-விவாக-சதிரையும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். "எண்கள் நாவலில் இன்னொரு அம்சம் அது எழுதப்பட்ட தன்மை. பொதுவாக, புனைவுகள் எல்லாமே இறந்த கால விவரணையில்தான் எழுதப்படும். ‘அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது’. என்கிற ரீதியில் இருக்கும். எண்கள் நாவல் அவ்வாறு எழுதப்படவில்லை. அந்த நாவல் முழுக்க நிகழ்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது அந்த நாவலில் ஒரு சிறப்பு அம்சம். இதனால் அந்தப் பிரதி புனைவுக்கு ஒரு நிகழ்காலத் தன்மையை அளிக்கிறது. இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். ஒரு எழுத்துப் பிரதிக்குக் காலம் சார்ந்த புதிய பரிமாணத்தை இது தருகிறது. அர்த்தம் என்பது நிகழ்காலத்தன்மையுடன் இருக்கிறது" எனப் படித்திருக்கிறேன். திரு-விவாக-சதிருக்கும் ஒரு நிகழ்காலத்தன்மை இருக்கிறது. அது மிகச் சமீபத்தில் இருவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாவலாசிரியரே அதற்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறார். தன் முதல் காதலனைக் கணவனது மறைவிற்குப் பின், 43 ஆவது வயதில் சகுந்தலா, தனது வயது வந்த இரு குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்கிறாள். நிறைவான மண வாழ்க்கையின் பின்பு, தனது முதல் காதலைப் பூர்த்தித்துக் கொள்ளும் வாய்ப்பு எத்தனை பேரதிர்ஷ்டம்? இதன் நிகழ்காலத்தன்மை, உண்மையில், அண்மையில் பாரீசில் நடந்த இச்சம்பவம், அதன் அழகு, வாழ்வின் மீதான பிடிப்பு - இதுவே இந்தப் புதினத்தின் பலம். மிக நேர்மையாக, மிகைகளற்று இதனைக் கதைக்களமாக்கியிருக்கின்ற அரவிந்திற்கு எனது பாராட்டுக்களும், மனமார்ந்த வாழ்த்துக்களும். பிரெஞ்சு மொழியில் Signponge என்கிற சொல்லும் sign eponge என்கிற சொல்லும் ஒரே உச்சரிப்பில் ஒலித்த போதும் இரண்டு விதமான பொருள் கொண்டவை. Signponge என்றால் பாஞ்ச் என்பவரின் கையொப்பம் என்று பொருள்படும். Sign eponge என்றால் கரும்பலகையில் எழுதியதை அழிக்கும் ஸ்பாஞ்ச் என்பது பொருள். இதில் ஒரே பெயர்ச்சொல் ஏக காலத்தில் சரியானதாகவும் (பிராப்பர்) அல்லாததாகவும் (இம்பிராப்பர்) தோற்றம் தருகிறது. இதே தன்மையுடன்தான் தத்துவமும் இலக்கியமும் இயங்குகின்றன என்பார்கள். அரவிந்த் எழுதுகிறார் - "கஸ்தூரி என்ற பேராசிரியர் சகுந்தலாவுக்கு பாடம் கற்பித்தார். எல்லோரும் அவரை இடது-சாரி அரசியல் கொள்கைகளை கைப்பற்றுபவர் என்று சொல்வர். அவருடைய முதுநிலை ஆராய்ச்சியின் தலைப்பே, இல்லத்தில் பெண்களின் - சுதந்திர போராட்டம், என்பதாக இருந்தது. இந்தியாவை பொறுத்தவரையில், ஆண்கள் - பெண்கள். குழந்தைகள் - சிறுவர்கள் - சிறுமிகள் - முதியவர்கள் என் யாரை எடுத்தாலும், அனைவருமே ஒருவிதமான சிறைச்சாலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகும். அதில் ஆண்களின் சிறைச்சாலையில், புகைபிடிக்க அனுமதி உண்டு அவர்கள் அடைக்கப்பட்ட அறையின் விஸ்தீரணம் பதினைந்து அடி-ஸ்கொயர் என்றால், பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் வரியின் விஸ்தீரணம் இரண்டு-அடி-ஸ்கொயராகக் கூட இருக்குமா என்பது சந்தேகம்தான். அதில் கால் நீட்டி படுக்ககூட முடியாது. நிம்மதியாக உட்கார்ந்து பெருமூச்சு விட முடியாது நின்று கொண்டேதான் இருக்க வேண்டும். இடுப்பில் பிள்ளையை சுமந்து கொண்டு நிற்க வேண்டும். கனவிலும் பயத்தை சுமந்து கொண்டே நிற்க வேண்டும். வாய்திறந்து, இதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன், என்று சொல்வது கூட சில சமயங்களில் மிகக் கடினம். பெண்நிலை வாதம், தலித்தியம், சமத்துவ-தத்துவங்கள் என்பவையெல்லாம் தமிழ் சமுதாயத்தில் என்ன தாக்கங்கள் ஏற்படுத்தியுள்ளன? என்ற கேள்விக்கு பதில் தேட என்று கஸ்தூரி அம்மையார், சகுந்தலா என்ற மாணவ-திருவாட்டிக்கு கட்டளை இட்டார்". இலக்கியம் புதினத்தின் வடிவில் ஒரு பெண், சகுந்தலா எனும் விதவை, தனது பிள்ளைகளின் புரிதலோடு, ஒப்புதலோடு முதல் காதலனைப் பூரண மகிழ்வுடன் மறுமணம் செய்வதை அழகாகப் பகிர்கின்றது. ஆனால் தத்துவமோ நடப்புநிலை பெரும்பான்மையான பெண்களுக்கு அவ்வாறில்லை என்பதை முன்னிறுத்தி விசாரணைக்கு எத்தித் தள்ளுகிறது. ஒரே சமயத்தில் சரியானதாகவும், சரியற்றதாகவும் தோன்றுகின்ற அல்லது தோன்ற வைக்கப்படுகின்ற வாதங்கள், சமூகக் கட்டமைப்புக்கள் குறித்துத் தத்துவம் ஆராய்கின்றதென்றால், இலக்கியம் அவற்றை ஆதுரத்துடன் அணுகுகின்றது - புரிந்து கொள்ளமுயல்கிறது. திரு-விவாக-சதிரில் சகுந்தலாவின் வாழ்க்கை மூலம் அரவிந்த் அதனைத் தான் செய்திருக்கிறார். சாக்ரடீஸ் தனது உரையாடல் ஒன்றில் பேச்சுதான் உண்மையானது. எழுத்து பொய்யானது. எழுத்து என்பது கெட்ட ஞாபகம் (ஈவில் மெமரி) பேச்சு என்பது சட்டபூர்வமான வாரிசு. எழுத்து சட்டபூர்வமான தகப்பன் இல்லாமல் பிறந்த மகன் (பாஸ்டர்ட்) என்கிறார் சாக்ரட்டீஸ். நான் பேசும்போது உயிர்ப்புடன் பேசுபவனாக இருக்கிறேன். என் பேச்சுக்கு நான் தகப்பனாக இருக்கிறேன். ஆனால் நான் எழுதும் பிரதியோ நான இல்லாமல் கூட இருக்கிறது. அது தனது தந்தையுடன் எவ்விதத் தொடர்புமின்று ஒரு சட்ட விரோத வாரிசைப் போல் தனியே இருக்கிறது. பேச்சு உயிருள்ளது. எழுத்தோ இறந்தது. அதனால்தான் எழுத்து இறந்தவர்களின் கல்லறைகளின் கல்வெட்டுகளில் உறைந்த நிலையல் காணப்படுகிறது என்றெல்லாம் சாக்ரட்டீஸ் எழுத்தை இழித்துப் பேசுகிறார். அந்த உரையாடலில் சாக்ரட்டீஸ் உண்மை (ட்ரூத்) என்பது பற்றியும் பேசுகிறார். சாக்ரட்டீஸ் ‘ட்ரூத்’ என்று சொல்வதை ‘தியூத்’ என்ற கிரேக்க வார்த்தையாகவும் எடுத்துக்கொள்ளலாம். ‘தியூத்’ என்பது எகிப்தியக் கடவுளான ‘தோத்’ என்பதன் கிரேக்க மொழிப் பிரயோகம். எகிப்தியக் கடவுளான ‘தோத்’ தான் எழுத்து, கணிதம், மருந்து போன்ற விஷயங்களுக்கு அதிபதி. அவர் எகிப்திய மன்னரான பாரோவாவைச் சந்தித்து தன்னிடம் எழுத்து, கணிதம் போன்ற கலைகள் இருப்பதாகவும், அதை எகிப்திய மக்களுக்கு வழங்க விரும்புவதாகவும் கூறுகிறார். ‘அது ஒர் அமுதம் போன்றது. அந்த அமுதம் எகிப்தியர்களின் ஞாபகசக்திக்கும் விவேகத்திற்கும் மருந்தாகப் பயன்படும்’ என்கிறார். அதற்கு மன்னன், ‘கடவுளே, உங்கள் எழுத்துக்கலை மக்களிடம் வழங்கப்படுமானால், அதன் விளைவாக அவர்கள் நினைவாற்றலை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. எழுத்து இல்லாததால்தான் அவர்கள் எதையும் மறந்துவிடாமல் இருப்பதற்காக ஞாபகசக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்து வந்துவிட்டால் அவர்கள் ஞபாகசக்தியை இழந்துவிடுவார்கள். அப்போது அவர்களுக்கு உண்மை கிடைக்காது. அதன் பொய்த் தோற்றம் மட்டுமே கிடைக்கும்’ என்று சொல்கிறான். ஆனால், எழுத்தின் வலிமையை அறிந்தவர்கள் நாம். பேச்சை உணர்வோம் - எழுத்தை அறிவோம். இரண்டையும் நாம் துய்ப்போம். அரவிந்தின் எழுத்துநடை - குறிப்பாக எள்ளல் அங்கதம் எனும் style என்னை மிகவும் கவர்ந்தது. "இனி காதலித்தால் ஒரு குடிகாரப் பெண்ணையே காதலிப்பேன். அப்போது இந்த பிரச்சனை வராது, என்று விம்மி-விம்மி அழுது கொண்டே கேப்ரியேல் தன் அறைக்குள்ளே நுழைந்து கதவை தாழிட்டு கொண்டான்". "அன்பால் செய்யும் பணிவிடைகளை, தம் உரிமைகளாக நினைத்துக் கொண்டு நம்மை வேலைக்காரிகளாக்கிவிடும் மனப்பான்மை பரவலாகவே காணப்படுகிறது. உதாரணத்துக்கு என் தந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை வீட்டில் ஒரு வேலையும் செய்ததில்லை. எல்லாம் அம்மாதான்"- சகுந்தலாவின் கூற்று. "எதுக்கும் இப்போதிலிருந்தே ஜாக்கிரதையாக இரு. அந்த தலைமுறை ஆளாக இல்லாததுபோல தெரியும். ஆனால் பரம்பரை பரம்பரையாக ஆண்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம் அது. பெண் ஜாதிகளை ஓட - ஆட வேலை செய்யவிட்ட சொகுசான வாழ்க்கையை அனுபவிப்பது" - சகுந்தலாவின் மாமியார் தனது மகனைப் பற்றியே இவ்வாறு எச்சரிக்கிறாள். "அது கல்யாணம் செய்யும் அதிசயம் தாயே" - சகுந்தலாவின் கணவன். "இந்த அதிசயத்தோடு நின்றுவிட்டால் நன்றாக இருக்கும். இப்படியான கன்றாவியான வேறு அதிசயங்கள் தேவை இருக்காது என்று நினைக்கிறேன்"-சகுந்தலா. "இப்படி சில வருடங்கள் உருண்டோட, மதனும் சகுந்தலாவும், பழக்க-தோசத்தாலும், பாசத்தாலும், காதலாலும், இணைபிரியாத தம்பதிகளாகவிட்டிருந்தனர்"- இந்தப் பழக்க தோசம் சொற்பிரயோகம் அற்புதம் – by habit they became husband & wife!. வன்முறை... துரோகத்தைவிட பெரிய வன்முறை செயல் உலகத்தில் உண்டோ. மிலன் குண்டேராவின் ‘த அன்பியரபில் லைட்நஸ் ஆஃப் பீயிங்’ என்னும் நாவலின் தொடக்கப் பகுதி மிகப் பிரபலமானதாகும். அதில், வரும் வரிகள் இவை - என்றும் மாறாத் திரும்ப நிகழ்தல் என்ற சிந்தனை, நாம் பொருட்களை நோக்குவதிலிருந்து அவை வேறுவிதமாகத் தோற்றமளிக்கலாம் என்ற பார்வையை உள்ளடக்கியிருக்கிறது. அவற்றின் மாறும் இயல்புக்கு ஏற்றாற்போல் தமது துயர்தணிக்கும் சூழல்கள் நாம் ஒரு முடிவுக்கு வருவதைத் தடுக்கின்றன. ஏனென்றால் உடனே தோன்றி மறையக் கூடியதை அல்லது மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டிருப்பதை எப்படி நாம் குற்றம்கூறக்கூடும்? எல்லாமே அழிகின்ற மாலைக்காலத்தில் எல்லாமே பழங்கனவுகளால் ஒளியூட்டப்படகின்றன. கில்லட்டின் படுகொலைகள்கூட (குண்டேரா 1984:4). மையமான கருத்தை வெளிப்படத்துகின்ற தொடர் இங்கு முதல்வாக்கியம்தான். சகுந்தலாவின் தோழி ஒருத்தி சொல்கிறாள் - """"மகப்பேறு கிடைப்பது பெண் செய்த பாக்கியம்... இப்படியான கதையாடல்கள், ஆண் தன் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இயற்றியவை. பிரசவ வேதனையை நீ அனுபவித்தால் தவிர வேறு எப்படியும் அதை தெரிந்து கொள்ள முடியாது. உன் வயிற்றில் வளர்ந்த குழந்தை உதிரத்தில் பிறந்தவுடன் அதனை பார்க்கும் போது, என் வயிற்றிலா இந்த புழு இவ்வளவு நாள் இருந்தது. அதனை எனக்கு அடையாளம் தெரியவே இல்லையே. இது என் பிள்ளை தானா? என்ற சந்தேகம் எழும். எல்லா பெண்களுக்கும் எழுமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு எழுந்தது. அது என் குழந்தையே இல்லை என்ற எண்ணம் கூட தோன்றியது. பிறந்த மறுநாளில் இருந்தே தூக்கம் கலைந்து விட்டது. ஏதோ போர்க்களத்தில் இறக்கிவிட்டது போல, அழுகை, உறக்கமின்மை... இந்த அனுபவத்தை... இந்த அகோர அனுபவத்தை நான் யார் சொல்லியும் கேட்டதே இல்லையே"". மாற்றத்திற்கு உள்ளாகிவிட்ட ஒரு மிக முக்கியமான - தாய்மை குறித்த சிந்தனை இது. மாற்றத்திற்குக் கணந்தோறும் உள்ளாகிக் கொண்டிருக்கின்ற ஒன்றை நாம் குற்றம் கூற இயலுமா என இந்தப் பத்தியைப் படித்தவுடன் நான் என்னையே கேட்டுக் கொண்டேன். "நீர்-பஞ்சம் நிறைந்த நாட்டில் மொட்டை மாடியில் நீச்சல் குளம் கட்டுவதென்பது ஒரு விசித்திரமான செயல்பாடு. இது ஆச்சர்யப் பட வைக்க வேண்டிய விஷயம். பொது-நலன் என்றால் என்ன என்ற வினாவை எழுப்ப வேண்டிய விஷயம். ஆனால் பாரத திருநாட்டில் இப்படியான கேள்விகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை" என்கிறான் சரவணன். இந்தக் கேள்வி எழுப்புகின்ற குற்றவுணர்ச்சி கூட பாரதப் பிரஜையான எனக்கு இந்த வாக்கியத்தைப் படித்து முடிக்கும் வரைதான். ஆனால், அதனை ஒரு வாசகனுக்குச் சற்று கிள்ள முடியும் - தனது கேள்விகளால் என தொடர்ந்து முயற்சிக்கிறார் அரவிந்த். யேட்ஸ் தனது ‘சுயத்திற்கும் ஆன்மாவிற்கும் ஓர் உரையாடல்’ என்ற கவிதையில் எழுதுவார்- யாவற்றையும் மீண்டும் வாழ்தலில் நான் திருப்தியடைகிறேன், இன்னும் ஒருமுறை... செயலிலோ சிந்தனையிலோ ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நான் அதன் மூலத்திற்குச் சென்று காண்பதில் திருப்தி அடைகிறேன். உள்ளதை அளவிடுங்கள்; எனது தலைவிதியை மறந்துவிடுங்கள். கழிவிரக்கத்தை நான் தூக்கி வெளியே எறியும் போது மார்புக்குள் ஒரு மிகப் பெரிய இனிமை பாய்கிறது. நாம் யாவரும் சிரிக்கவேண்டும், பாடவேண்டும், நமக்கு எல்லாமே அளிக்கப்பட்டுள்ளன நாம் பார்க்கும் யாவுமே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன. அரவிந்தும் ஒரு வகையில் யேட்ஸ் போலத்தான் தென்படுகின்றார். தனது கேள்விகளை, சந்தேகங்களை, விருப்பங்களை, பயங்களை, சுயத்தை, சகமனிதர்களுக்கான பரிவினை, அவநம்பிக்கைகளைத் தொடர்ந்து இலக்கியத்தினூடாக அவர் நம்மோடு பகிர்ந்த வண்ணம் இருக்கிறார். வருடந்தோறும் இங்கு வந்து நம்மிடையே தனது இயங்கு தளத்தை, இருப்பைப் பகிர்ந்து கொள்கின்ற அவரது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இந்தப் புதினத்தை நீங்கள் கண்டிப்பாகப் படியுங்கள் சகுந்தலாவும், மதனும், சரவணனும் நம்மின் வெவ்வேறு பிரதி பிம்பங்களே. தன் மனக்கண்ணாடியின் ரசவாதம் ஊற்றி அரவிந்த் அப்பாத்துரை அவர்களைக் காட்டுகின்ற அனுபவத்திற்குள் மூழ்குங்கள். ஒரு புதினமெனும் ‘genre’ற்குள் இந்த நாவல் வகைபடுமா என்கின்ற கேள்விகள் விடுத்து, வாழ்வனுபவத்தின் ஒரு உண்மைக் கூறை தனக்கே உரிய முறையில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார் - மிக சுவாரஸ்யமாக. அதனைப் படித்து ரசிக்க முடிகின்ற ஒர வாசகியாக அவருக்கு என் வாழ்த்துக்கள். நாம் சிரிப்போம், பாடுவோம், நாம் பார்க்கும் யாவுமே ஆசிர்வதிக்கப்படவில்லை என்றாலும், நமக்கு எல்லாமே அளிக்கப்பட்டுள்ளன! * * * * *

தொடர

சொற்களைப் பிரியாதவனின் சொல்லில் விழுந்தகணம் (அய்யப்பமாதவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது - 17.07.2011

தமிழச்சி தங்கப்பாண்டியன்

சொற்களைப் பிரியாதவனின் சொல்லில் விழுந்தகணம் (அய்யப்பமாதவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது - 17.07.2011) “Life ought to be like that” என்பவன் ஒழுக்கவாதி. “Life looks like that” என்பனே கலைஞன். அய்யப்பமாதவன் ஒரு கலைஞன். "பார்த்த இடமெங்கும் கண்குளிரும் பொன் மணல் என் பாதம் பதித்து நடக்கும் இடத்தில் மட்டும் நிழல் தேடி என்னோடு அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம்”. ப்ரமிளின் இக்கவிதையோடு அய்யப்பமாதவனின் கவிதை குறித்த பகிரலைத் துவங்குகிறேன். அவரது கவிதை வெளியில் நமது பாதத்தை மட்டும் பதித்து நடந்தால் அவரது கவிதைத் தளம் புலப்படாது. உடலின் அனைத்துப் புலன்களையும், விழிப்போடும், உயிர்ப்போடும் மீட்டி அவற்றின் மீது புரண்டால் மட்டுமே மாதவனின் கவி உலகைக் கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உணர முடியும். ஏனென்றால் புத்திசாலித்தனத்தைவிட புலன்களின் மேன்மையைக் கொண்டாடும் கவிஞர் அவர். சிற்றூரிலிருந்து பெருநகரம் வந்து சேர்ந்த நாடோடி மனமும், யாழ் நகர் குறித்துக் கலையுறுகின்ற பூர்வீகக் குடியின் நிலப்பற்றும் கலந்ததொரு நவீனக் கவிஞர். கூடவே கலகக்காரரும் கூட. Beethoven சொன்னதுபோல "நீங்கள் விதிகளை உருவாக்குகிறீர்கள், நான் எப்போதுமே அதை மீற வந்தவன்” எனும் கலகக் கவிஞர். அய்யப்பமாதவனின் கவிஉலகம் மிக நுட்பமான உருவகத்தன்மை உடையது. வெறும் ஸ்தூலக் கைகளாலும், உத்தி, இசைக்கோர்வை, படிமம் போன்ற வழமையான அளவு கோல்களினாலும் அதனை அளக்க, அல்லது புரிந்து கொள்ள முயல்வதும், பகிர்வதும் இயலாதது. அவரது இக்கவிதையைப் பாருங்கள் - "எதுவும் சொல்வதற்கில்லை காதல் போதமா அபோதமா உயிரேயறியாத சஞ்சலம்” அவரது கவிதையும், போதமா அபோதமா உயிரே அறியாத சஞ்சலம். சொல்லில் விழுந்த கணம் - எனும் தலைப்பிற்கு வருகின்றேன். மனிதச் சொல்தான் எவ்வளவு வலிமையானதும். அதே சமயத்தில் பலவீனமானதும் கூட! "மனிதச் சொல், அசை - பரவும் ஒளியும் பொற்கொல்லனின் கலைத்திறமும் இணைந்து குருதியின் எண்ணங்களைச் சேர்க்கும் பாரம்பரியக் கலம்” என்பார்கள். குருதிக்குக் குருதித் தன்மையும், வாழ்க்கைக்கு வாழ்க்கைத் தன்மையும் தரும் சொற்களால், தன் கவிதைக் கணங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றார் கவிஞர். ‘சொல்’ தன் பலவீனத்தைக் கடந்து ஒரு பாத்திரமாகக், சாட்சியாகப், படிமமாக இவர் கவிதைகளில் மீட்சி பெற்றிருக்கிறது. ‘பாயும் காலம்’ எனும் அவரது இக்கவிதையில் காலத்தின் முன் கரைந்து போகும் புள்ளியான மனிதன் இயம்பும் இச்சொற்களைக் கேளுங்கள் : "உடைக்கத் திராணியில்லாப் பாறைகளிடம் ஓங்கிய ஆயுதத்துடன் நிற்கிறேன். விஸ்வரூபமான பூமி உருண்டையிடையே ஒரு சிறு பூச்சி அளவில் புலப்படாது போகிறேன்” அதோடு, பெரும்பாலான இவரது கவிதைகள் சொல்லின் துணையின்றித் தம்மைத் தாமே visual ஆக வெளிப்படுத்திக் கொள்கின்ற காட்சிக் கவிதைகள் தான். மிகக் குறிப்பாக : நிலவு குறித்த கவிதைகள், காடு, காமம், சிக்குண்டிருந்தவற்றைக் கிழிப்பது குறித்துப் பேசுபவை. ‘மஞ்சள் நிற ஓவியன்’ எனும் இக்கவிதையை வாசிக்கிறேன் - ‘காட்சிக்கவிதை’ இது. "தெளிக்கப்பட்ட மஞ்சள் கனவினில் மஞ்சளாகயிருந்தான் வின்சென்ட் வான்கா. காதறுத்த நோவின்றி உயிர்த்த துரிகைகைகளாய் வாழ்ந்து திரிந்த வானத்தின் கீழ் ஓடிக்கொள்டிருந்தான் மஞ்சள் துளிகளாய் ஒழுகிய வண்ணம் அந்திமத்தின் மஞ்சள் கலவைக்குள் மஞ்சளாய் மறைந் கொண்டிருந்தான்”. ‘விழுந்த கணம்’ என்பது மிக அற்புதமானதொரு பிரயோகம், காதலில் விழுந்தேன் என்று சொல்வது மாதிரி! Nobody rises up in love, everybody falls in love - கவிதைக்கான பிறப்பு ஒரு சொல்லில் விழுந்த அந்த மாயக் கணத்தில் மாதவனுக்கு நிகழ்கிறது. "மாய்ந்து போகிற சமயம் கூட விரும்பிய கடைசிச் சொல்லைக் கூட உச்சரிக்க நேரமில்லை " என யாழ் நகரின் துயரைப் பதிவது அந்தக் கணத்தில்தான். "சொற்களைப் பிரியாதவன் எனவும், ஊரின் நினைவுகளில் அவன் சொற்கள் மட்டும் அவளுடன் தங்கவிட்டன என்றும், இறப்பிலாவது தன்னைத் தன் தாய் மொழியின் முதல் சொல்லைப் பேசத்துவங்கிய தன் நிலத்தில் புதையுங்கள்” என்றும் கவிஞன் அறிவித்தாலும், சொல்லில் விழுந்த கணங்களைச் சொற்களைத் தாண்டி மற்றெல்லாப் புலன்களாலும் உய்க்கத் தருவதுதான் மாதவனது தனிச்சிறப்பு. France நாட்டின் சிறந்த அறிஞர் Ernest ரெனான் (Ernest Renon) தேசத்தைக் "கூட்டு ஆன்மா” எனக் குறிப்பிட்டார். அய்யப்பமாதவனின் இத்தொகுப்பைக் கூட கவிஞர்களின் கூட்டு ஆன்மாவாக நான் பார்க்கிறேன். குறிப்பாக மலையாளக் கவிஞர் அய்யப்பமாதவனுக்கும், சுகந்தி சுப்ரமணியத்திற்கும் அவர் எழுதி இருக்கின்ற அஞ்சலிக் கவிதைகளும், மெடூசா கவிதையும் இதனை உறுதிப் படுத்துகின்றன. உதாரணத்திற்கு : "கிழித்தனர் சிக்குண்டிருப்பதை” என்றொரு கவிதை. படங்களில், ஓவியங்களில், இன்றும் பிற சட்டகங்களில் அடைபட்டு இருப்பவற்றைக் கிழித்தவுடன் கிடைக்கின்ற விடுதலை குறித்தது: "வர்ணமடித்தவனின் பச்சையழகு கிழித்ததும் பறந்தது பச்சையழகு” என்கிறார். "வட்டிக்காரணின் மிக மோசமான சொற்களில் உடைந்திருந்த வீட்டினுள் அவளின் விவரிக்க முடியாத கண்ணீர் வாக்கியங்கள்” என்பதும், "கட்டுங்கடங்காமல் விரல்கள் தாவி விரல்களைக் கவ்வ நாணம் புற்றீசல்களாய் பறந்தது” என்பதும் மிக அழகு. நிலவு குறித்த இவர் பார்வையைப் பாருங்கள், "வானத்தின் ஆகப்பெரும் சுவரில் தொங்கும் வட்ட ஓவியத்தை யாரும் இன்றும் கடத்திவிடவில்லை. சுவடுகள் பதித்து அழுக்காக்கிவிட்டனர்”- என்கிறார். திரைப்படத்துறையில் ஒரு இயக்குநர் ஆகின்ற கனவில் இருக்கிறார் மாதவன். "கலையால் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த கவிதைத் தன்மையோடும், அதே சமயத்தில் மிக யதார்த்தமாகவும் விளங்குகின்ற ஒரு கனவுதான்! திரைப்படம் ஓர் இணையற்ற வெளிப்பாட்டு முறையைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடும். தாராள மனப்பான்மையும், உயர்ந்த மனமும் கொண்ட மனிதர்கள் மட்டுமே தங்களது வாழ்வின் முழுமையான, புதிரான கணங்களில் திரைப்படச் சூழலுக்குள் நுழைகிறார்கள்” - என்றார் Alexandre Arnoux (அலெக்சாண்ரே அர்னூ). அதிமென்மையான, மிக நுட்பமான, சமூக அக்கறையும், புலன்களின் வழி உலகை உய்க்கின்ற தீவிரமும் சம அளவில் இருக்கின்ற இந்தக் கவிஞர் இதே அளவில் திரைப்படத் துறையிலும் வெளிவரவேண்டுமே எனும் ஆதங்கமும், அக்கறையும் இத் தொகுப்பைப் படித்து முடித்த பின்பு ஒரு பெருமூச்சாய் வெளியேறியது. மனித மனத்தின் நுண்ணிய உணர்வுகளைத் துல்லியமான கவிதைச் சித்திரங்களாய்த் தீட்டுகின்ற இவர் திரைப்படத்துறைக்கான சமரசங்களை எவ்வாறு எதிர் கொள்வாரோ என்ற கவலையும் உடன் வந்தது. "பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், சிறிது நேர ஞாபக இழப்பால் அடையப் பெற்றது” என து.சு.சீலி ஒரு முறை அறிவித்தார். எதனை அடைவதற்கும் கவிஞன் தனது ஞாபகங்களை இழக்கச் சம்மதிக்க மாட்டான் என்பதால், திரைப்பட சாம்ராஜ்யம் வெற்றிகரமாக இவரின் கைவருவது குறித்துக் காத்திருப்போம். அழகியல், அகவியல், நுண்ணுர்வு, சமூகம் குறித்த கூர் கணிப்பு, கனவு, காதல் இவை அனைத்தும் கொண்டு பிசையப்பட்டவை இவரது கவிதைகள். அதன் ஒரு ‘பிடிக்கனவாய்’ இத் தொகுப்பை வாசித்து முடித்தபோது, கேட்டுக் கொண்டேன்- இவரது கவிதைக்கான சாவி எங்கிருக்கிறது என. நம் அனைத்துப் புலன்களிலுமிருக்கின்றது என்பதே விடை. ஒரு சிறு குறையுண்டு - "காதல் நுரை எங்கும் பொங்க அவன் மீது ஒரு அலையென ஓடிப்பார்த்தான்” - எனும் வரிகள் அய்யப்பமாதவனுக்கான கவிமனம். இடையில், "அம்மணத்திற்கு உடுப்பாகவிருந்தான், ஆகாரமில்லாத முலைகளில் பலகாரமாகவிருந்தான்” - என இது ஏன்? இலக்கியத்தின் அதிகாரம் குறித்த கட்டுரை ஒன்றில் ஆர்.ஏ.ஸ்காட் ஜேம்ஸ் சொல்வார் - "இலக்கியமாக இருக்கின்ற எதுவும் ஒரு அதிகாரத்தை உட்செலுத்த முனையும்; இலக்கியம் அல்லாதது வெறும் அறிவை மட்டுமே உட்செலுத்தும்” (All that’s literature seeks to communicate power; all that is not literature, to communicate knowledge. The function of first is to ‘move’; the function of second is to teach). கவிதையின் நோக்கமும் அதுதான். ஒரு அனுபவத்தை வெளிப்படுத்துவதன் மூலம், அது நம்மை அடியோடு புரட்டிப்போடுகிறது. என்னப் பொறுத்தவரை ஒரு கவிதை எப்பொழுதும் தர்க்கத்தினால் உலுக்கப்படுவதே இல்லை. அதன் விதிகளில் பகுத்தறிவிற்கும், அறிவிற்கும் ஆன இடம் மிக மிகக் குறைவே. கற்பனையும், புனைவும், உள்ளுணர்வும், அனுபவத்தின் தீச்சுடரும், கலை நேர்த்தியும் - இவை மட்டுமே கவிதையின் புகலிடங்கள். அய்யப்பமாதவனின் கவிதைத் தடமும் அதுவே. Tolstoy இன் Anna Karenina Novel குறித்து Mathew Arnold சொல்வார் - "உண்மை என்னவெனில் - Anna Karenina வெறும் கலைப்படைப்பு மட்டும் அல்ல - அது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதன் ஆசிரியர் அதனைக் கண்டுபிடிக்கவோ, கோர்க்கவோ இல்லை - மாறாக - அதனை அவர் பார்த்திருக்கிறார் - தன் மனக் கண்களில்”. அய்யப்பமாதவனும் கவிதைகளைத் தன் அக, புற வாழ்க்கையைப் பார்த்துப், பதிவாக்கி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அவரது படைப்பிலே மூழ்கித் துய்த்த எனக்கு, அவரது தனித்ததொரு குரலை உங்கள் முன் பகிர்ந்தளிக்க முடிந்தது பெரு மகிழ்ச்சி. நன்றி. * * * * *

தொடர

'காளி' நமக்குச் சொன்ன கதை : சே.பிருந்தாவின் கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து ஒரு பகிரல் 09.01.2015

தமிழச்சி தங்கப்பாண்டியன்

'காளி' நமக்குச் சொன்ன கதை : (சே.பிருந்தாவின் 'மழை பற்றிய பகிர்தல்கள்', 'வீடு முழுக்க வானம்', 'மகளுக்குச் சொன்ன கதை' - கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து ஒரு பகிரல்) - தமிழச்சி தங்கபாண்டியன் "எனைச் சூழ்த்தங்கியுள்ள யாவும், என்றும் என் கவிதையில் தங்கியிருக்கும் தொலை தூரக் கடலோசை கானகப் புள்ளினங்கள் கத்தும் சத்தம் மண்டிக்கிடக்குமொரு மாயப் புதராக தன்னளவில் விழங்கொணாமல் தான் பற்றி எரிகின்ற காதல்... நம்புகின்றேன் நான் நான் பிறந்தது தீர்ப்புகளை விதிப்பதற்கன்று நேசித்தலுக்கென்றே" எனும் பாப்லோ நெரூடாவின் கவிதைபோன்றே "யாரோ விழுந்து கிடக்கையில்" ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்விகளற்று, இப்படி, அப்படி, அதனால்தான் எனும் தீர்ப்புக்களற்று, "யாரோ விழுந்து கிடக்கையில் தூக்கி விடுகின்ற யாரோவாக நானுமிருக்க விரும்புகின்றேன்", என்பவைதான் பிருந்தாவின் கவிதைகள். ஒரு கவிதைத் தொகுப்பை வெறும் பிரதியாக மட்டும் ஒருபோதும் என்னால் வாசிக்க இயலாது. அப்படியெனில் சிறுகதை, புதினம், பிற இலக்கிய வடிவங்களை? முடியும் - மற்றெல்லா இலக்கிய வகைமைகளையும் பிரதியாக, ஆசிரியரின் மரணம் எனும் பிரகடனத்துடன், என்னால் வாசித்து விமர்சிக்க முடியும். டெரிதாவின் சிதைவாக்கத்தையும் ஒரு கவிதையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கவியலும் என்பதை எனது தர்க்க மனம் ஒப்புக்கொள்கிறது. அதனை நியாயப் படுத்த, கிறிஸ்தேஃபர் பட்லரைச் சொல்வேன்: "மொழியின் எல்லாக் கட்டத்திலும் தெளிவான வெளிப்படைத் தன்மை கொண்ட ஒவ்வொரு சொல்லும் உருவகத்தன்மை உடையதாகவும் உள்ளது (ஜியோர்ஜ் எலியோட்டின் மிக மிக எதார்த்தவியல் மொழி உட்பட). தத்துவத்தையும் வரலாற்றையும் இலக்கியம் போலவும் இலக்கியத்தைத் தத்துவம், வரலாறு போலவும் வாசிக்க முடியும் (நடப்பினைச் சொல்லும் அல்லது உண்மையைச் சொல்லும் சொல்லாடல்கள் என்ற சிறப்புரிமை இவற்றிற்கு கிடையாது). நடப்புண்மை (லிடரல்) என்பதை இனி நாம் நம்பத் தேவையில்லை. (அதாவது மெய்நிலை என்பதைப் பொருள் மயக்கம் இன்றிக் குறிப்பிடுவதாகச் சொல்லும் ஒரு வகை மொழியை). ஏனென்றால் நடப்புண்மை என்று உரிமை கொண்டாடும் அனைத்தையும் மிக நெருங்கி ஆய்ந்து பார்த்தால் அவை உருவகத்தன்மை உடையவை என்பதை நிரூபிக்க முடியும்," (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 35) எனும் போது கவிதைக்கு மட்டுமென்ன சிறப்புரிமை என்பது நியாயமே. இவ்வகையில் எந்த ஒரு பிரதியையும் அடிப்படைத் தகர்ப்பு செய்து, கட்டுமானக் கலைப்பினை நிகழ்த்திவிட முடியும்தான். ஆனால் கவிதையில் இதனை எனது ஆழ்நிலை, நனவிலி மனம் ஏற்பதில்லை. தர்க்கங்களின் முகத்தில் வெதுவெதுப்பான மனித எச்சிலை உமிழ்வதன் மூலம், கவிதை இதனை தாண்டிச் செல்கிறது. ஒரு எளிய உண்மையான தரிசனத்தின் மூலம் அது தர்க்கத்தை நிர்க்கதியாக்குகிறது என நான் நம்புகின்றேன். கவிதைக்கான எந்த 'அழகியல்' & இன்னபிற சிறப்புரிமையையும், ஒரு படைப்பை, ஒரு பிரதியாக அறியும் பின்நவீனத்துவப் பார்வை வழங்குவதில்லை. அது நியாயமானதும் கூட என்றாலும், கவிதைக்கு அந்தச் சிறப்புரிமையை பகுத்தறியாது வழங்குகின்ற பயித்தியக்காரியாக இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. "கடந்தகாலம் என்பதற்கும் கதைகூறல் என்பதற்கும் இடையே ஒரு துல்லியமான தொடர்பு சாத்தியமில்லை. ஒரே நிகழ்ச்சியைப் பலவிதமான முறைகளில் நாம் விவரிக்க முடியும். சான்றுகளை நாம் எப்போதும் ஒரு இடைநிலை ஊடகம் மூலமே பெறுகிறோம், முழுத் துலக்கமானது என்று எதுவும் இல்லை. வெற்றிடங்கள், இடைவெளிகள், திரிபுகள் போன்றவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது," என்பார்கள். (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 35) கவிதை இதில் கச்சிதமாகத் தன்னைப் பொறுத்திக் கொண்டு, மற்ற வகைமைகளைவிட வெற்றிடங்களையும், இடைவெளிகளையும் வசப்படுத்துவதால் முழுக்க உள்நோக்கியதொரு அகவழிப் பயணத்தையும், அதனைச் சுண்டி இயக்குகின்ற ஒரு அனுபவக் கிளர்ச்சியினையும் தருகின்றது. பகுத்தறிவிற்கு ஒவ்வாத வேட்கை, பயித்திய மனோநிலை, உணர்வெழுச்சியின் தீர்க்கம், 'மெய்நிலை' அற்ற ஒன்றோ எனும் சந்தேகமற்று மெய்நிலையே எனும் கடப்பாட்டோடு கைப்பற்றியிருத்தல் - இவையே கவிதைக்கான எனது ஒரு சார்பு நிலைக்கான வாதங்கள். "பின்நவீனத்துவம் மற்றும் அதன் பிரச்சாரகர்கள் கூற விரும்புவது போல மொழி மெய்நிலை என்பதைக் கட்டமைக்கிறதே தவிர எடுத்துரைப்பதில்லை என்ற பார்வையை எல்லோரும் ஒன்றும் ஏற்றுக்கொள்வதில்லை," (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 168) என்பதுவும் எனக்குக் கைகொடுக்கின்றது. சே.பிருந்தாவின் மூன்று தொகுப்புகளை - (மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை) மொத்தமாகப் படித்ததில் அவரது கவிதைப் பயணம் குறித்து ஒரு அனுமானத்திற்கு மட்டுமே வர முடிந்தது. முதல் தொகுப்பிலிருந்து முற்றிலுமான பெரும் பாய்ச்சல் போலன்றி, நிதானமாக, அவசரமின்றி பயணித்தாலும், பாடுபொருள் பல்தன்மை கொண்டனவாகவும், செயல்நிலையும் மாறியிருப்பதாகவும் படுகின்றது. இது ஒரு அனுமானம் மட்டுமே. முற்றான முடிவோ அறிவிப்போ அல்ல. "நாவலின் ஒரு பாத்திரத்திற்கு என்ன பொருந்துமோ அது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்: அவர்கள் பேசவைத்த மொழியாலேயே அவர்களும்கூடப் பேசப்படுகிறார்கள். (எடுத்துக் காட்டாக, இலக்கியப் பயிற்சிப் பள்ளி) எழுத்தாளரைவிட நல்ல நிலையில் இல்லாத வாசகருக்கும்கூட இது பொருந்தும். வாசகரும்கூட மொழியின் இடைவெளிகளூடாகக் கலைத்துப் போடப்படுகிறார், குறிப்பீடுகளின் முடிவற்ற தொடர்கண்ணியில் சிக்கிக் கடைசியில் தொலைந்துபோகிறார். இந்தப் பார்வையின் படி ஒரு 'மனித இருப்பு' என்பது, ஒரு ஒருங்கிணைப்பு அல்ல. ஒரு தன்னுரிமை கொண்டதல்ல, அது தொடர்ந்த கட்டுமானத்தில் உள்ள தொடர்ந்து முரண்படக்கூடிய, எப்பொழுதும் மாற்றத்திற்குள்ளாகக்கூடிய ஒரு செயல்நிலை." (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 75,76) எனும் மேற்சொன்ன கூற்றை மெய்ப்பிப்பதாகவே உள்ளது பிருந்தாவின் "இருப்பும்". அவரது முதல் தொகுப்பான மழை பற்றிய பகிர்தல்களில் "அக்கா படிப்பது போல அம்மா சமைப்பது போல காற்றிற்கு நெற்பூக்கள் மடங்குவது போலும்" தனக்குத் தெரிந்ததைச் செய்ததாகச் சொல்கின்ற பிருந்தா கூடுதலாக மகளுக்குச் சொன்ன கதையில் "அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு, அது 'குயில் குஞ்சு' என்று தெரிந்தது தெரிந்த பிறகு "இனிமேல் நாம் சேர்ந்து வாழமுடியாது போய்விடு" என்றது. ஒரு விடியலில் குயில் குஞ்சு 'கூ' என்று கூவியது - அன்று தானொரு குயில் என்று கண்டு கொண்டது" என்று தனக்கான அடையாளத்தை தெளிவாகச் சொல்கிறார். "அம்மா சமைப்பது போல" என்பது பிற்போக்கு உவமை எனப் பெண்ணியவாதிகளால் முத்திரையிடப்படும் அபாயமிருக்கிறதே எனும்போதே, ஜான்ஸிராணியைப் பற்றிய சரித்திரம் - "ஒரு நாட்டுக்கே ராணி. குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லையா?" என்று கேட்டு "அப்பாடா - தப்பித்துவிட்டார்" என வீடு முழுக்க வானம் எனும் இரண்டாவது தொகுப்பில் பெருமூச்சு விட வைக்கிறார். முதல் தொகுப்பிற்கும் இரண்டாவதற்கும் பத்தாண்டுகள் இடைவெளி.. இரண்டாவதற்கும் இன்றைய மகளுக்குச் சொன்ன கதைக்கும் ஐந்தாண்டுகள். "வளர்ந்திருக்கிறேனா?" எனக் கேட்கிறார். அதைச் சொல்லுமளவிற்கு நான் வளரவில்லை - என்றாலும் வெகுதூரம் பயணப்பட்டு விட்டார் இந்த பதினைந்து ஆண்டுகளில். குறிப்பாக நான் வியந்து சிலாகிப்பது, பிருந்தாவின் நிதானம் தான். தமிழ்க் கவிதைப் பரப்பில் இதுவரை இவரது ஒட்டுமொத்தக் கவிதைகள் குறித்துப் பேசப்படாமல், பதியப்படாமல் போனது எனக்கு மிக வருத்தமே. சமயங்களில் சிற்சில தனிக்கவிதைகளைப் படிக்க நேர்கையில் அவற்றின் பூச்சற்ற, மென்மையாய் ஆனால் உறுதியாய் ஒன்றைச் சொல்கின்ற தொனியில் கவரப்பட்டு அவரிடம் நான் பகிர்ந்திருந்தாலும், ஒரு முழு வாசிப்பனுபவம் இப்போதுதான் வாய்த்துள்ளது. இங்கு ப.சிங்காரம் குறித்த சி.மோகனின் பின்வரும் பதிவு நினைவிற்கு வருகின்றது: "எவ்விதப் பிரகடனமோ, பிரயாசையோ இன்றி ப.சிங்காரம் வெளியுலகு அறியாமல் தன் தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த படைப்பாளி. அவருடைய படைப்புகளின் வெளிச்சித்தில்தான் இன்று அவர் புலப்பட்டுக்கொண்டிருக்கிறார். காலம், சற்று நிதானமாகவேனும், தன் பொக்கிஷங்களைச் சேகரம் செய்துகொள்ளத் தவறுவதில்லை. ஆரவாரப் பொக்குகள் வெகு சீக்கிரமாகவே தூசுகளாக மறைந்துவிடுகின்றன. காலத்தின் பார்வை, சற்றுத் தாமதமாகவே என்றாலும், தீட்சண்யமாகப் பதிந்து, ப.சிங்காரத்தின் இரு நாவல்களும் துலக்கம் பெற்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. நவீன தமிழ் இலக்கியத்தின் மகத்தான நாவல் படைப்பாளியாக ப.சிங்காரம் நிலைபெற்றிருக்கிறார்." (சி.மோகன் கட்டுரைகள் : 85) பிருந்தாவின் மூன்று தொகுப்புக்களுமே உரக்கப் பேசாதவை. முந்தைய இரண்டு தொகுப்புக்களும் அதிகம் கவனம் பெறாதவை. ஆனால் பிடிவாதமான தன்னிலை இருப்பொன்றை அழுத்தமாக முன்வைப்பவை. "தொலைவுகளைத் தன் வசம் செய்வேன் காற்றைப் பிடித்து உச்சியின் மேல்முனைக்குச் செல்வேன் அத்தனை உயரத்தையும் அங்கிருந்து பறப்பேன் - என்றெல்லாம் என்னை வியக்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மிக வழக்கமாகவே நான் நிலம் பதிய நடந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் ஆச்சர்யப் படாமல் ஒரு பறப்பு - நீலத்தைக் கிழிக்க வல்லதல்ல அது நீலத்தைக் கடக்கிறது அவ்வளவே" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த நிதானம்தான், புரிதல்தான், அழுத்தமான உறுதிதான் பிருந்தாவை கவனிக்க வைக்கிறது. "தண்டவாள நடுவே தேங்கின மழை நீரை அதிராமல் குடித்துப் போகும் ஆட்டுக் குட்டியின் அழகோடு" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த அதிராமைதான் இவரது பலமே. சந்திப்பிற்குத் தட்பவெப்பம் முக்கியமெனக் கருதும் பிருந்தாவை எனக்கு அவ்வளவு பிடிக்கிறது. Let me be a diehard romantic in this as you sound Brindha – நேற்றைக்கு இதே நேரம் நாம் சந்தித்துக் கொண்டோம் உன் அலுவலக ஓய்வறையில் வெப்பப் பெருமூச்சுகளில் தஹித்துக் கிடந்தது அறை. சுழலாத மின்விசிறியுடன் சட்டெனக் கவிழ்ந்த அமானுஷ்யத்தில் மூச்சுமுட்ட மூழ்கிப் போனேன் மனிதர்கள் வித்யாசமாய்ப் போனார்கள் நீயும் கூட தாங்கவே முடியாமல் வந்தனம் சொல்லிப் பிரிந்தேன் அடுத்த சந்திப்பேனும் இளங்காலைக் குளிரில் பூக்களின் மலர்வோடு அமைய வேண்டும் நமது கனவுகளைப் பகிரும் விதமாய். (மழை பற்றிய பகிர்தல்கள்) ஏனெனில் எனக்கு ஒரு கவிதைத் தொகுப்பை அதிகாலை அல்லது அந்திமாலையில் மட்டுமே வாசிக்கப் பிடிக்கும். பிற இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுகையில் பங்களிப்பதை விட, ஒரு கவிதை தருகின்ற அனுபவத்தினைப் புறச் சூழல் பெருமளவு தகவமைக்கிறது என நான் நம்புகிறேன். இசைவான தனிமை, உடலினை இம்சிக்காத மிதமான தட்பவெப்பம், நிசப்தம் - இவை என்னை ஒரு கவிதைக்குள் ருசிக்கத் தள்ளிவிடும் தாய்முலை. "உறுத்தாமல் உன் தனிமைகளை பங்கிட விரும்புகிறேன் உன்னோடு உன் சுவாசம் போல (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த உறுத்தாமைதான், "இலக்கியம் பற்றியும் பெண்ணியம் குறித்தும் உரத்துச் சிந்தித்த உன் பேச்சு ரஸிக்கவில்லை அதைவிட இலைகள் அசைவது மிகப் பிடித்திருக்கிறது" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த யதார்த்தம்தான், "ஜன்னல் கம்பியில் ஜில்லென்று கன்னம் பதிய மழை பார்க்கையில் கண்ணில் இடறின என்பற்றிய லஜ்ஜையற்று பறந்தபடி புணர்கிற பட்டாம் பூச்சிகள். மறுபடி என்று வாய்க்குமோ இதுபோல மழையும் இயல்பான சரசமும் (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த நுட்பமான ரசித்தல் தான் பிருந்தாவின் முதல் தொகுப்பை (மழை பற்றிய பகிர்தல்கள்) என்னைக் கவனிக்கச் செய்தது. அவரது வீடு முழுக்க வானம் புத்தகத்தில் அவர் குறித்த தன் விவரப் பதிவில் 1976 மழை (நவம்பர்) மாதம் இரண்டாம் நாள் பிறந்தவர் எனும் ஒற்றை வரிக் குறிப்பே கவித்துவமாக இருந்தது. அதற்கு பிருந்தாவிற்கொரு மழை முத்தம். தன்னுரையில், "எது கவிதையென்று இப்பவரை தெரியாது" வில் அந்த இப்பவரை சட்டென்று அவரோடு என்னை ஒட்ட வைத்தது. இந்தப் பேச்சு வழக்குச் சொல் அவரது கவிதைகளிலும் ஊடுறுவி வருவதுண்டு. அந்த "இப்பவரையைப்" பிடித்துக்கொண்டு "வானத்திலிருந்து நீண்டு கிடந்த ஒற்றையடிப்பதை" வீடு முழுக்க வியாபித்ததை துளித்துளியாகப் பருகினேன். ஒரு அற்புத அனுபவக் கணத்தை அடைய பிருந்தாவிற்கு மழை, வண்ணத்துப்பூச்சி, குழந்தை, காற்று, மரம், பறவை, ஒற்றை மேகம், நட்சத்திரங்கள், ஆமை ஒடு, சாலை, காதல், பிரிவு, சந்திப்பு - இப்படி எல்லாமுமிருக்கின்றன. மேற்சொன்னவற்றையெல்லாம் அவர் அன்பின் உள்ளங்கைப் பொதிவில் ஏந்தி, ஒரு ஆழ் முத்தத்தின் வெதுவெதுப்புடன், தனிமையின் தொப்பூள் கொடி சுற்றி நமக்குத் தருகிறார். "புரிந்து கொள்ளேன்" எனும் தவிப்பும், "பற்றிக் கொள்ளேன்" எனும் தகிப்பும், "பகிர்ந்து கொள்ளேன்" எனும் கெஞ்சலும் இருந்தாலும், "இருள் கவியும் மாலையில் கூடடைந்து விடும் பறவையின் சுதந்திரம். நான் காற்றாக விரும்புகிறேன்" (வீடு முழுக்க வானம்) எனும் தன்னிலை உறுதிதான், அந்த 'அகமி' தான் பிருந்தாவின் உள்ளொளி, தன் தேர்வு. "காதலைச் சொல்லத்தான் வந்தேன் மரம் சிலிர்த்து இலைகளசைவதில் லயித்து விட்டேன். இரண்டும் சாத்யமில்லை - காதலைச் சொல் கவிதையை மற (வீடு முழுக்க வானம்) என்பதில் கவிதையைக் காதலிக்கின்ற பிருந்தா என்றுமே காதலைச் சொல்லமாட்டார் எனப் பிடிபடுகின்றது. இத்தொகுப்பில் முத்தம், காதல், பிரிவு, திகட்டத் திகட்ட அன்பு, வாழ்வு, மரணம், தாய்மை எல்லாமும் இருக்கிறது. சிலவற்றில் அற்புதமான கவிதையாக, சிலவற்றில் வெறும் உணர்வாக மட்டுமே! படித்தவுடன், ரஷ்யக் கவிஞர் மரீனா ஸ்வெட்டயேவாவின், "என்னால் என்ன செய்யமுடியும் இவ்வளவு அபரிமிதங்களுடன் ஒரு அளவிடப்பட்ட உலகத்தில்" எனும் கேள்வி நினைவிற்கு வந்தது. பிருந்தாவிற்கு நாம் அசட்டையாகக் கடக்கின்ற ஒரு நிகழ்வு, ஒரு நிமிடம், ஒரு உதாசீனம், ஒரு புன்னகை ஏன், முகப்புத்தகமே கூட கவிதைக்கான அனுபவத்தைக் கொடுத்து விடுகின்றது. "கூழாங்கற்கள் வசப்படுத்த முடியாதவை. இறுதிவரை அவை நம்மைப் பார்க்கும் சாந்தமான மற்றும் தெள்ளிய கண்ணுடன்" என்பது போல பிருந்தாவின் கவிதைகள் சாந்தமான, தெள்ளிய கண்ணுடையவை - அவற்றின் விவரிப்பான உரைநடை சமயங்களில் அயர்ச்சி தந்தாலும், ஒரு மினுக்கம், ஒரு ஊவாமுள் வலி அதனுள் ஒரு வரியிலிருந்து எட்டிப் பார்க்கிறதல்லவா - அதுபோதும் எனது ஈர்ப்பிற்கும், லயிப்பிற்கும். மகளுக்குச் சொன்ன கதை கவிதைகளுக்கு வருவோம். பெரும்பான்மை உரைநடைக் கவிதைகள் தான். ஆனால் அவற்றில் சிலவற்றில் 'அட' என்று அள்ளி வைத்துக் கொள்ளத் தோன்றும் கவி வரிகள் உண்டு எனக்கு. "பசலையில் இளைத்த உடம்பு பற்றிதான் இலக்கியங்கள் பேசுகின்றன டிப்ரஷனில் ஊதி வெடிக்கத் தயாரான உடல்களை அவை சந்தித்ததில்லையோ". மேற்சுட்டியதில் உள்ளடக்கம் ஒரு கவிதைக்கான பொறிதான் - ஆனால் வெறும் உரைநடைத்தனமான கேள்வி வடிவம் அதன் தகிப்பைக் குறைத்து விடுகிறதல்லவா? இதை விட, "வெறும் சிலைகளால் ஆனதல்ல இவ்வுலகம் அது மலைகள் நிரம்பியது" (மகளுக்குச் சொன்ன கதை) எனும் அனுபவ வீச்சு கவிதையாயிருக்கின்றது எனக்கு. "ஒரு தேரை நிறுத்துவது போலக் கவிதையை எங்கே நிறுத்தவேண்டுமென ஒரு தேர்ந்த கவிஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என கலாப்ரியா சொன்னதாக நினைவு. "ஒரு அலைபேசி எண்ணைத் தொலைப்பது ஒரு மனிதரைத் தொலைத்தாகிறது என்னைத் தொலைக்கிறாய்" (மகளுக்குச் சொன்ன கதை) மேற்சுட்டியதில், 'என்னைத் தொலைக்கிறாய்' என்பது ஆறாவது விரல். கவிதையின் ஐவிரல் "ஒரு மனிதரைத் தொலைத்தாயிற்று" என்பதோடு முடிந்துவிடுகிறது என்பது நாமறிந்ததுதான் - ஆனால், அந்த நிறுத்துதலை நிர்ணயிக்க நாம் யார் - எது அதன் எடைகல் என்பதில் இன்றுவரை தெளிவிருக்கிறதா என்ன? பூமியெல்லாம் மகளுக்கு என்றொரு கவிதை. .... நிலவை - தேயும் தினங்கள் எனக்கென்றும் வளரும் தினங்கள் அவளுக்கென்றும் ஒப்பந்தித்தாள் இருந்தாலும் கூட நிலா இல்லாத தினம் யாருக்கென்று முடியா வழக்கொன்று நடந்து கொண்டிருக்கிறது. என்னைக் கேட்டால் இறுதி வரியை "நிலா இல்லாத தினம் யாருக்காம்?" என்று முடித்திருப்பேன். அந்த "யாருக்காவில்" அம்மாவும் மகளாயிருப்பாள். ஆனால், பிருந்தாவும் நானும் வேறு வேறு அம்மாக்கள், வெவ்வேறு அனுபவப் பேறு பெறுபவர்கள். நான் எனது மகளோடு அந்த 'யாருக்காமில்' ஐக்கியமாகி நின்று விட்டிருக்கலாம். பிருந்தாவோ இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் வழக்காடிக் கொண்டிருக்கலாம். இதில் இந்த அம்மா, எப்படி அந்த அம்மாவைக் 'கவிதை' என்றால் அதை நீங்கள் அங்கே அப்படி, அந்த வரியோடு நிறுத்தியிருக்க வேண்டுமெனச் சொல்ல முடியும்? பின்வரும் இக்கவிதை எனக்கு மிகப் பிடித்த ஒன்று பறவைகள் ஒருபோதும் நடப்பது குறித்து யோசிப்பது இல்லை மரங்கள் மலைகள் இடம் பெயர்வதில்லை நதிகளுக்கு யார்மீதும் புகார்களில்லை நிலவு சூரியன் கிரமம் தவறுவதில்லை கடிகாரம் சலிப்பதில்லை ஊஞ்சலாடும்போது உத்தேசமாக பறவை - நீரில் மீன்- மழையில் மரம்- காட்டில் சிறு பூவென இந்த வாழ்க்கையின் வண்ணத்துப் பூச்சி நான் ! (மகளுக்குச் சொன்ன கதை) தத்தமது இயல்பில் தாமிருப்பது - அது குறித்தான புகார்களற்று வாழ்வைக் கொண்டாடும் தனிமனித மனம் தனதனுபவத்தைப் பொதுமைப்படுத்துமொரு அற்புதம் மேற்சொன்ன கவிதை. "காட்டில் சிறு பூ" என்று கவிதை முடிந்திருந்தாலே போதுமானதுதான். "இந்த வாழ்க்கையின் வண்ணத்துப் பூச்சி நான்!" இன்னுமொரு ஆறாவது விரல் தான் - ஆனால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே. அது மிகையுணர்வு, இவ்வகை அறிவித்தல்கள் கவிதையல்ல என்றெல்லாம் சொல்லலாம்தான். ஆனால், பயனற்றது என்பதற்காக ஆறாவது விரலை அறுவைச் சிகிச்சை செய்ய விமர்சகனுக்குச் சிறப்புரிமை உண்டா என்ன? இவ்வகை விளித்தல்களை, ஏற்றுக்கொள்ளலைத், தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்று வரையறுத்த Literary Criticism, Shelly இன் மேலைக்காற்றிற்கு (ODE To West Wind) எனும் கவிதையைச் சிறந்ததென்று கொண்டாடுகிறதே? எனக்கு, "நான் போராளி, புரட்சிக்காரி, அந்த வாதி, இந்த இசத்துக்காரி" என்றெல்லாம் முழக்கமிடாமல், ஒரு சொட்டு மிகையுணர்வுடன், பரவச வண்ணம் பூசிக் கொள்கின்ற இந்த வண்ணத்துப் பூச்சிக்காரியை, பகுத்தறிவின் திரைகளற்றுக் கட்டிப் பிடித்து, "அப்படியா, ததாஸ்து" என்று சொல்லத் தோன்றுகிறது. வாசக மனம் vs விமர்சகப் பார்வை எனும் சதுரங்க ஆட்டத்தில் கவிதையைப் பொறுத்தவரை முன்னதே எனக்குப் பிரேமம், உத்தமம், உசிதம். கொஞ்சம் வளவளப்பான விமர்சகராகவே இருந்தாலும் பாதகமில்லை - தேர்ந்த வாசகராக, ரசிகனாக இருப்பது போதுமெனக்கு. ஒரு தனிமனித அனுபவத்தின் உண்மை, உலகளாவிய ஒன்றாகப் பொதுமைப்படுத்தப்படும் ரசவாதத்தில் நடை, வடிவம், உத்தி முதலியவற்றைச் சிலாகிக்கும் கறார் விமர்சகனகாக மட்டுமே கவிதையில் நானிருக்க முடியாது. ஒரு வாசகனாக, ரசிகனாக, ஒரு நேர்மையான, வாழ்வின் ஒரு உயிர்க்கீற்றை உணரக் கொடுக்கும் சில வரிகளின் உபாசகனாக, அவற்றைச் சிருஷ்டித்த கரங்களுக்கு முத்தமிடுபவளாக இருப்பதில் மகிழ்வெனக்கு. அவ்வகையில் பிருந்தாவின் மகளுக்குச் சொன்ன கவிதை தொகுப்பு எனக்குப் பல அனுபவ இழைகளின் நயத்தைக் கொடுத்த ஒன்று. உதாரணத்திற்கு அவளின் கேள்விகள் நூதனமானவை எனத் தொடங்கும் கவிதை. - ரயிலை யார் கழுவுவார்கள் - பாசிபடர் குளத்தை எப்படிச் சுத்தம் செய்வது - ரோட்டோர சிறுமி ஏன் புத்தகம் விற்கிறாள் ..... - சோறு சாப்பிட்டால் வயிறுதானே வளரணும் கையும் காலும் எப்படி வளருகிறது... இந்தக் கவிதை அவளின் முடிவுறாக் கேள்விகளோடே இப்படி முடிகிறது - அவளின் அப்பா ஏன் வீட்டுக்கே வருவதில்லை? சாமிக்குப் பிரியமானவர்களை தன்னுடன் அழைத்துக் கொள்வார் என்றால் நாமெல்லாம் சாமிக்குப் பிடிக்காதவர்களா? (மகளுக்குச் சொன்ன கதை) பிருந்தாவின் மேற்சொன்ன கவிதையைப் படித்தபோது நானடைந்த அனுபவக் கிளர்ச்சியைப் பின்வரும் ஷான்டோராவின் கவிதையொன்றில் வெகுகாலத்திற்கு முன்பே நான் உணர்ந்ததுண்டு. உலகெங்கும் உள்ள மகள்கள் அனைவருக்குமான கேள்விகள் தான் - இதில் அம்மாவின் பதிலொன்றைச் சொல்லும் கவிதையொன்று. நதி: அம்மா, நதி ஏன் சிரிக்கிறது? காரணம் சூரியன் நதியைக் கிச்சுகிச்சு மூட்டுவதால், அம்மா, நதி ஏன் பாடுகிறது? காரணம் ஸ்கைலார்க் பறவை நதியின் குரலைப் புகழ்ந்தது. அம்மா, நதி ஏன் ஜில்லென்றிருக்கிறது? அது ஒரு காலத்தில் தான் பனியால் காதலிக்கப்பட்டதை நினைத்துக் கொள்கிறது. அம்மா, நதிக்கு என்ன வயது? என்றென்றும் இளமையுடைய வசந்தகாலத்தின் அதே வயதுதான் அதற்கும். அம்மா, நதி ஏன் என்றுமே ஓய்வெடுப்பதில்லை? நல்லது, கடல் தாய் நதி வீட்டுக்கு வரக் காத்துக் கொண்டிருப்பதுதான் காரணம். (ஷண்டாரோ தனிக்காவா(1931- ) (சமககால உலகக் கவிதை - பிரம்மராஜன் : 468 , 469) மேற்சொன்ன கவிதைக்குச் சற்றும் குறைந்ததன்று பிருந்தாவின் கவிதையும். சற்று உறுத்தலாக, "இந்தக் கவிதை அவளின் முடிவுறாக் கேள்விகளோடே இப்படி முடிகிறது -" எனும் வரி தேவையற்று இடறுகின்றது. அதனாலென்ன 'பரவாயில்லை' எனக் கடக்கவுமுடிகிறதென்பதால் எனக்கு, இது ஒரு சிறந்த கவிதைதான். சமயங்களில் வடிவமும், உணர்வுநிலையும் ஜாடிக்கு மூடியெனப் பொருந்தாதுதான் - ஆனால் அப்படிப் பொருந்தியிருக்கிறதென்பதற்குச் சான்றாகப் பல கவிதைகளை பிருந்தாவின் இத் தொகுப்பில் என்னால் இனங்கான முடிந்தது. உதாரணத்திற்கு, முத்தம் என்பது வெறும் முத்தமாகமட்டுமில்லை என உணர்த்தும் பல கவிதைகள். ஒரு படிமத்தை , ஒரு சொட்டென எடுத்து, நீவி விட்டு, மெல்ல விகசித்துப் பறக்க விடுகின்ற செறிவும் இவருக்குக் கூடி வந்துள்ளமைக்கு பின் வரும் கவிதையைச் சுட்டலாம். நீந்திக் கடப்பதோ பறந்து செல்வதென்பதோ இயலாத இந்த இரவை காகிதம் போல எடுத்து மடக்கி கப்பல் செய்து நீரில் மிதக்க விட்டு பாதி கிழித்து பறவையாக்கி வானில் பறக்கவிட்டு அதிலும் மிச்சத்தில் ஒரு கவிதை யெழுதி என்ன செய்தும் தீராமல் இந்த இருள் ......... இந்த தனிமை ........ இந்த மரணம் ....... (மகளுக்குச் சொன்ன கதை) அவை கவிதைக்கான உத்தி எனத் தெரியாமலேயே (பிருந்தாவிற்கும் நகாசு வேலைக்கும் வெகு தூரம் - அவரது 'நட்பூக்களை'க் கூட 'குரங்காட்டி வித்தையாக' அல்ல, ஒரு குழந்தமைக் கிண்டல் தொனி என்று தான் நானுணர்ந்தேன் - போலவே அவரது "உபரி முத்தத்தில் / வெளிப்படுகிறது / உன் உபரி அன்பு / " எனும் வரிகளும். இந்த வரிகளை குழந்தமையற்ற பிருந்தா ஒருபோதும் வெவ்வேறு அர்த்த நிழல்களின் பிரக்ஞையற்று எழுத இயலாது) உருவகங்களும், உவமைகளும் இலகுவாக ஊடுபாவுகின்ற வரிகளுமுண்டு சில கவிதைகளில். இத்தனை தூரத்தில் அன்பு மனது என 'கைகாட்டி'கொண்டு சொல்ல முடிந்தால் ... துக்கத்தையெல்லாம் கடுங்காப்பி ஆக்கி கொட்டிக் கவிழ்த்து மகிழ்வை யெல்லாம் தேநீராகக் குடிக்க இயலுமெனில் .... (மகளுக்குச் சொன்ன கதை) எனும் உருவகக் கவிதையும், காமத்தைப் பெருந்திணைக் காதல் குப்பிகளாக்கும் உவமைக் கவிதையும், பெருங்காற்று மழையில் ஒரு தீபமேற்றுவது - மகள்களுக்கு அம்மாவாயிருப்பது, கடவுளைப் போல அறியப்படாதது நம் தொலைவு எனும் உவமைகளும், தேர்ந்த கவிதைச் செறிவிற்கான அடையாளமெனப் பட்டாலும், எனக்கு, அழைத்ததும் அழைக்க மறந்ததும் எப்போதும் உன் ஞாபகத்திலில்லை அத்தனை எளிதில்லை - ஒரு அலைபேசி அழைப்பைப் பற்றிக் கொண்டு அன்பின் வழி நடத்தல் அன்பின் மறுதலிப்பை அன்போடு ஏற்றல் பசித்த கொடிய மிருகத்தை புன்னகைக்க வற்புறுத்துதல் (மகளுக்குச் சொன்ன கதை) "நதி மீதொரு சருகு என்னவானதென மரமும் நினைக்கவில்லை நதியும் நிற்கவில்லை" "பாம்பு குடியிருந்தாலும் சந்தனம் குளிர் தருவே - கபீர் வாக்கு நீ பாம்பா சந்தனமரமா சொல்லென் அன்பின் குரலே" (மகளுக்குச் சொன்ன கதை) எனும் நேரடியான மொழிபேசுகின்ற வெகுளிமனக் கவிதைகளும் பிடிக்கின்றன. "உண்ணச் செரிக்காத தனிமையை தின்னத் தெடங்கினேன்" ..... "ஒரு கண்ணிலிருந்து மறுகண்ணின் தூரம் வாழ்விற்கும் மரணத்திற்கும்" "அது யார் மனதையும் அசைத்து விடுகிற அழுகை - அசையாது கிடக்கிற மரணம்" "உதிரும் அத்தனை பூக்களையுமா மரம் நினைவு கொள்ளும்?" "பழகிய மிருகங்களிடம் பதற்றமுறுவதில்லை மனது. பழகிய என் தனிமையும் புதிதாக இருக்கிறதுன் பிரிவில்" எனும் வாழ்வின் மெய்மையை ஒரு கணம் திடுக்குற்று உணரச் செய்கின்ற சாதுர்ய மொழிக் கவிதைகளும் - என்னைக் கவர்கின்றன. என்றாலும், "தானாக மனங் குளிர்ந்து என்று வரமருளுமோ என் சாமி" எனும் கள்ளமற்ற வெள்ளந்திக் குரல் - அதன் தேடல், ஒப்புக்கொடுத்தல், அன்பை அன்பென்ற சொல்லால் மட்டுமே சுட்டிக் கொட்டித் தீருமதன் தாபம், பலர் நடுவே உணருமதன் தனிமை, பெரிதான தத்துவ விசாரமற்ற சமன்பட்ட தொனி, கேள்விகளின் குழந்தைமையைக் குலைக்காத அதன் வியப்பு, மரணத்தின் நித்தியத்தை அநித்ய வாழ்வின் கொண்டாட்டதினால் ஊடறுத்துச் செல்லும் அதன் இலகு - இக்குரல் மட்டுமே மிக முக்கியமாகப் படுகின்றது. தன்னளவில் இக்குரலின் கட்டளைக்கு மிக நேர்மையாக, உண்மை அனுபவத்தின் ஒரு கீற்றுத் தரிசனத்தை இக்கவிதைகள் சிலவற்றில் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் பிருந்தா. ஓரிரு குறைகளுண்டு - நம்பகத்தன்மை பிறழ்ந்தபோது எனச் சற்றும் 'பிருந்தாத்தனமில்லாத' மொழிக் கவிதை அவசியமற்றது. ஒரு தேய்ந்த மொழிநடையிலான அக்கவிதை இவரது வெளிப்பாட்டிற்கு மிக அந்நியமானது. தன்னைப் பிறரது தோளுக்கு மேல்நிறுத்தி, 'இது இப்படி ஆகிவிடலாமென' ஒரு போதும் பிருந்தாவின் கவிதைகள் இதுவரை உபதேசித்ததில்லை. இக்கவிதையின் அத்தொனி கடவாய்ப் பல் அகப்பட்ட கல் போன்றதொரு ஒவ்வாமை. தோளில் கைகூடப் போடத் தயங்குகின்ற, ஆனால் எப்போதும் போடுவதற்குத் தயாராக இருக்கின்ற அந்த பிருந்தாவை மேற்சொன்ன கவிதையில் நான் காணவில்லை. உரையாடல் தொனியோடு நீண்டு செல்கின்ற கவிதைகளை விட, இரண்டு அல்லது நான்கு வரிக் கவிதைகளில்தான் பிருந்தாவின் ஆன்மா கூர்ந்து ஒளிர்கின்றது. இருளில் கூடுதலாகத் துலங்கி ஊடறுக்கும் விலங்கின் கண்களையொத்த தீர்க்கம் அவ்வகைக் கவிதைகளில் வடிவத்தோடு பொருந்திய உணர்வின் வார்ப்பாக மெருகேறி உள்ளதாக நான் உணர்கிறேன். அவ்வாறே உள்வாங்கவும் செய்கிறேன். ஆனால், பிருந்தா, எவ்வகைமையில், எத்தொனியோடு பயணிப்பதென்பதை ஒரு 'தன்னிலை'யாக நீங்கள் முடிவெடுங்கள். 'கவிஞன்' என அடையாளப் படுத்தப்படுவதை விட, ஒரு 'தன்னிலை'யாக உங்களுக்குப் பிடித்த, சரியெனப் படுகின்ற உரையாடலை முன்னெடுங்கள். "'அடையாளம்' என்பது ஒருமித்த தன்மை; அது ஒன்றுதான் அதற்குப் பொருள்; மாறாக, தன்னிலைகள் தங்களுக்குள்ளேயே கூட வித்யாசப்பட்டு இருக்க முடியும்". பேச்சுவராத ஒருவனைக் கவிதைக்குத் தாசனாக்கிய காளிக்கு "தானாக மனங்குளிர்ந்து என்று வரமருளுமோ என் சாமி" என வெள்ளந்தியாகக் கேட்கும் உங்களைப் பிடிக்கும். நிச்சயமாக அவளுக்குப் பிடித்த கள்ளமற்ற பிள்ளை நீங்கள். விமர்சனங்களின் வழிகாட்டுதலின் படி 'வீணைவாசிக்க' முயற்சிப்பதைவிட 'கொட்டாங்கச்சி' தானெனக்கு எனும் தன்னிலை ஓர்மம் முக்கியம். விமர்சனம் கவிதைக்கு வழிகாட்டியா அல்லது கவிதை விமர்சனத்திற்குக் கைகாட்டியா எனக் காலந்தோறும் தொடர்கின்ற கேள்விக்கு ஒரு பொம்மை சொன்ன பதில் எனக்கு நீதி போதனை: கேதரின் பெல்ஸியின் 'பின் அமைப்பியல்' (மிகச் சுருக்கமான அறிமுகம்) (தமிழில் : அழகரசன்) எனும் புத்தகத்தின் தொடக்கத்தில் ஒரு குறிப்பு வருகின்றது. ஆங்கில எழுத்தாளர் லூயி கரோலின் புதினமான 'Through the looking glass' -இல் ஹம்பி டம்டி என்ற பொம்மைக்கும், சிறுமி ஆலிஸூக்கும், "பொருள் பற்றி நடக்கும் விவாதத்தில் யார் சொல்வது சரி" எனக் கேட்கின்ற பெல்ஸி, இருவருக்குமான அந்த உரையாடலின் ஒரு பகுதியினையும் மேற்கோள் காட்டுகிறார்: "நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது, அதற்கு நான் எப்படிப் பொருள் கொள்ள விரும்புகிறேனோ அதைத்தான் குறிக்கிறது. அதற்குக் கொஞ்சமும் கூடவோ குறையவோ அல்ல' என்றது ஹம்டி டம்டி எரிச்சலுடன். 'அப்படிச் சொற்களைப் பல பொருள் குறிக்கச் செய்யமுடியுமா என்பதுதான் கேள்வி' - ஆலிஸ் சொன்னாள். 'யார் யாருக்கு எஜமானாக இருப்பது என்பதுதான் இப்போது பிரச்சினை' என்று ஹம்டி டம்டி சொன்னது." இந்த எஜமானப் பிரச்சனையைக் கிடப்பில் போட்டுவிட்டுத், தன் போக்கில் பலூனூதிச் செல்லும் குழந்தமையின் கண்களோடு கவிதையில் பயணியுங்கள். ஊமையாயிருந்த கவிமனதின் உரையாடலைப் புரிந்து கொண்ட காட்டுப் பெண் காளி உங்கள் பலூன்களுக்கும் காற்றடைத்துத் தருவாள். மகளுக்குச் சொன்ன கதை தவிர்த்தும் இன்னும் பேச எவ்வளவோ இருக்கலாம் - உங்களுக்கும் எனக்கும். அவற்றைப் பகிர்ந்து கொள்ள, அதற்கான மழை, திரண்டு உருக்கொள்ள இனியும் சில ஆண்டுகளாகலாம். அதுவரை 'உரையாடாமல்', சும்மா பேசிக் கொண்டிருங்கள். ஏனெனில், "பேசுவது என்பது - எல்லாவற்றிற்கும் மேலாக - மற்றவர்களிடம் பேசுவது தான்". கவிதைக்கு அது போதும். உதவிய நூல்கள் : • பின்நவீனத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - கிறிஸ்தோஃபர் பட்லர், தமிழில் – பிரேம் • சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன் • சமகால உலகக் கவிதைகள் – பிரம்மராஜன் • பின் அமைப்பியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - கேதரின் பெல்ஸி, தமிழில் - அழகரசன்)

தொடர

இளங்கோ கிருஷ்ணன் புத்தக வெளியீட்டு விழா

தமிழச்சி தங்கப்பாண்டியன்

இளங்கோ கிருஷ்ணன் புத்தக வெளியீட்டு விழா "மனிதனுக்கு மொழி இருக்கிறது. அந்த மொழி அவனைத் தனிமைப்படுத்துகிறது. எனவே தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகிறது. தற்கொலை செய்து கொள்ள விரும்பும் ஒரே விலங்கும் அவனே" - என்கிறார் லக்கான். பொதுமனிதனைத் தனிமைப்படுத்துதலுக்குத் தள்ளுகிறது மொழி என்றால் ஒரு கவிஞனுக்கு அதற்குள்ளே இன்னுமொரு சுயமொழி கிளைத்து அவனை மேலும் தனிமைப்படுத்தி விடுகிறது. அவனது தனித்துவமான புஷ்பக விமானமும், சிலுவையும் அம்மொழிதான். "மொழி என்பது உலகளாவிய மனித குலத்தின் வலி" என்றதுவும் லக்கானே. அவ்வலியை தனக்கே தனக்கான தன்வய, தன்மையப் பிரதேசமாகச் சுயமாக அறிவித்துக் கொண்டு, அதன் வழிப் பயணப்படுவன் கவிஞன் மட்டுமே. வலியையும், இன்பத்தையும் தனக்கானதொரு புனைவு மொழியில் ஒரு கவிஞன் வெளிப்படுத்துகையில் ஃபிராய்டும், லக்கானும் கலந்த கலவைதான் அவன். ஏனென்றால் ஈடிபஸ் சிக்கலுக்கு அடிப்படை புனைவு என்று ஃபிராய்ட் சொல்கையில், லக்கானோ அதற்கு மொழிதான் அடிப்படை என்கிறார். ஏனிந்த உளவியல் அறிஞர்களது அறிமுகம் ஒரு கவிஞன் குறித்துப் பேசுகையில் எனும் கேள்வி எழலாம். ஏனென்றால் - கவிதைகளுக்குள் பயணப்படுமுன் அக்கவிஞனின் உளப்பாங்கு மிக முக்கியம் எனக்கு. மனித மனம் பிரவேசிக்கின்ற புதிய பகுதிகள், பழைய சுவடுகளின் நினைவினை முற்றிலுமாகத் தொடர்பறுத்துவிடுவதில்லை. இவற்றைப் பிணைக்கின்ற மாய முடிச்சை முன்வைத்து அதன் சூட்சுமத்தில் இயங்குகின்றன இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள். செத்த குழந்தையாய் கையில் கனக்கிறது மொழி, மரத்துப்போன படிமங்கள், கோஷப் பொய்கள். கைப்பிடி தளர்ந்துபோன வாள்களாய் வார்த்தைகள். சுடச்சுட பரிமாறப்பட்டிருக்கிறது வாழ்க்கை என்னுடைய உள்ளங்கையில். கவிதை எழுதுவதற்கான நேரமில்லை இது. என்னைச் சுற்றிலும் 80 சதவீத மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். தற்குறிகளால் நிரம்பி இருக்கிற மூன்றாம் உலகில் கவிதை எழுத முனைவது பற்றி என்ன சொல்ல? மொராக்கோ நாட்டு எழுத்தாளர் டஹர் பென் ஜெல்லோன் (Tahar Ben Jelloun) சொல்கிறார்: "படிக்காதவர்கள் நிறைந்திருக்கிற ஒரு கண்டத்தில்தான் எழுத்தாளர்களுக்கான மிகப் பெரிய தேவை இருக்கிறது. இங்கே எழுதுவது என்பது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஆகும்." எழுத்தாளர்களின் தேவையை வலியுறுத்தும் அங்கீகரிக்கும் மிக முக்கிய நிகழ்வே இது! 18ம் நூற்றாண்டின் ஐரோப்பிய விமர்சகர்கள், Shakespeare 'Rules' என்கின்ற நாடக விதிகளைப் புறக்கணித்தார் என்றார்கள். கிரேக்க நாடக ஆசிரியர்கள் உருவாக்கிய விதிகளை மறுதளித்த எவரையும் மறுமலர்ச்சி காலகட்ட விமர்சகர்களும், 18ம் நூற்றாண்டின் விமர்சகர்களும் குறைபாடுள்ள படைப்பாளியாகவே பார்த்தனர். ஆனால், before the spirit of Art, இவை அனைத்தையும் மீறி, இன்று Shakespeare நிலைத்து நிற்கிறார். அவ்வாறே Before the spirit of Art, இதுவரை அதிகம் அறியப்படாத, இலக்கிய உலகில் பரவலாகக் கவனம் பெறாத, ஆனால் மிக முக்கியமான கவிஞர் இளங்கோ கிருஷ்ணனைக் குறித்த சமயத்தில் கெளரவப் படுத்தவேண்டுமென்பதற்காக இவ்விருது Chennai Literary Association அமைப்பினால் இவ்வருடம் வழங்கப்படுகிறது. ஒரேயொரு தொலைபேசி செய்யவே வந்தேன் என்றொரு புகழ்பெற்ற கார்சியா மார்க்வெஸின் சிறுகதை உண்டு. அதுபோலவே ஒரே ஒரு மதுப்போத்தல் அதற்கே நான் வந்தேன் என்றொரு கவிதையை இளங்கோ படைத்திருக்கிறார். சந்தர்ப்ப வசத்தால் கணவனுக்கு போன் பண்ண வந்த மரியாவை மனநோய் மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல விடாமல் மனநோயாளியாக சேர்த்து விடுவதுதான் மார்க்வெஸ் கதையின் மையக்கரு. அவளுடைய கணவன் சாட்டர்னோ அவளைத் தேடிப்பார்த்து விட்டுப் பழைய கணவனுடன் போய்விட்டதாக சந்தேகப்படுகிறான். பல சிரமங்களுக்கிடையில் அவனுக்கு போன் செய்கிறாள் மரியா. இதற்காக அவளுடைய வார்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணுடன் அவள் உறவு கொள்ள வேண்டிய கசப்பான நிலைவந்தது. தேடி வந்த கணவனும் அவளை ஒரு மன நோயாளியாகவே பார்கிறான். டாக்டரும் அந்தப் பணிப்பெண்ணும் அப்படி ஒரு காட்சியையே உருவாக்குகிறார்கள். கணவன் தன்னைக் கண்டு மிரளுவதைக் கண்ட மரியா தன்னை மனநோயாளியாகவே ஏற்றுக் கொண்டு அந்த மருத்துவமனையிலேயே இருந்துவிடுகிறாள். அவளுக்கு பூனையும் சிகரெட் பெட்டிகளும் கணவன் அனுப்பி வைக்கிறான். அவற்றை மருத்துவமனையில் மற்றவர்கள் தட்டிப்பறித்துக் கொள்கிறார்கள். பிறகு ஒரு தீ விபத்தில் மரியா இறந்து விடுகிறாள் என்று கதை முடிகிறது. இந்த கதையில் வாழ்க்கை மனிதர்களைக் கொண்டு போகும் அவலத்தின் உச்ச நிலையை சம்பவங்கள் மூலமும் உரையாடல் மூலமும் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார் மார்க்வெஸ். அதைப் போலவே வாழ்க்கை மனிதனைக் கொண்டு சென்ற அவலத்தின் உச்ச நிலையை ஒரு இசைப் பாடலின் சந்தநயத்தோடு வெளிப்படுத்துகிறது இளங்கோவின் பின் வரும் கவிதை: அதற்கே ஒரே ஒரு மதுப்போத்தல் அதற்கே நான் வந்தேன் நகரெங்கும் படுகளம் ஊரே பிணக் காடு ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் நிலமெங்கும் கொடுநாகம் நீளும் வழி பாதாளம் ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் குன்றெங்கும் எரிமலை குறும்புதரில் கொள்ளிவாய்கள் ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் கடலெங்கும் பேய் அலைகள் கரையெல்லாம் முதலை ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் வனமெல்லாம் புலிக்கூட்டம் மரந்தோறும் வேதாளம் ஆனாலும் வந்தேன் அதற்கே நான் வந்தேன் வானெங்கும் விஷக்காற்று திசையெல்லாம் மின்னல் ஆனாலும் வந்தேன் ஒரே ஒரு மதுப்போத்தல் அதற்கே நான் வந்தேன். இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் தமிழ் Sensibility எனப்படுகின்ற உணர்திறன் கொண்டவை. உள்ளீடற்ற, போலியான, ஒரு கானல் மண்ணில் வேர் கொள்ள முயல்கின்ற பெரும்பாலான நவீனத் தமிழ்க் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, பட்சியன் சரிதம், சூதுரை காதை, மனமுரை காதை, அலருரை காதம், அந்தம் என்று செவ்வியல் மரபின் அச்சில் புதுமைத்துவம் பூண்டு சுழலுபவை. தமிழ் அடையாளத்துடன் தம்மை முன்னிறுத்துபவை. கவிதைகளை விட இவரது நுண்கதைகள் எனும் சிறுகதைகளில இக்கூறு மிகத் துல்லியமாகத் துலங்குகிறது. அவை தமிழுக்கு மிகப் புதியதொரு முயற்சி. கீதாரி, ஒற்றைக்குரல், பத்மவனம், அகத்தியம் போன்ற அக்கதைகள் மொத்தமே ஒவ்வொன்றும் ஒரு பாரா அளவுதான். பெர்ணாண்டோ சொராண்டினோ எனும் லத்தின் அமெரிக்க எழுத்தாளரின் கதைகளைப் படித்தபோது உணர்ந்த இவ்வடிவத்தில் நுண்கதைகளைத் தான் முயற்சிப்பதாகக் கூறுகின்றார். அவற்றின் நாடோடித்தனமான அழகியல், ஒரு nomadic aesthetics என்னை மிகக் கவர்ந்தது. அவருடைய இந்த அழகியலில் ஒரு Hybrid aesthetics உண்டு. புதிய வெளிப்பாட்டு முறையில், இந் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு அதன் சமகாலச் சிக்கல்களை வெளிக்கொணரும் உத்தியும், உள்ளடக்கமும் நிறைந்தவை அவை என்றாலும், அவற்றின் அடிநாதம் தமிழ் அடையாளமே. இங்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் குறித்துக் கலைவிமர்சகர் இந்திரன் சொன்னதைச் சுட்டலாம். "அவர் ஒரு சர்வதேச மனிதன்தான். ஆனால் அவரது எல்லாக் கதைகளின் கதை சொல்லியும் ஒரு தமிழ்த்தனமான புரிதல் உள்ளவன்தான்". இளங்கோ கிருஷ்ணனும் தன் நுண்கதைகளில் அவ்வாறே வெளிப்பட்டிருக்கிறார். அகத்தியம் "கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பினீஷிய கடலோடி ஒருவன் ஏடன் வளைகுடாவிலிருந்து கடல் மார்கமாக புறப்பட்டு யவனக் குதிரைகளுடன் புகார் நகரம் வந்து விற்றுச் செல்வதை தன் வழக்கமாக கொண்டிருந்தான். நாற்பதேழு முதல் ஐம்பது நாட்கள் வரை நீளும் அக்கடற் பயணத்தில் குதிரைச் சாணம் நாறும் தன் படுக்கையில் இருந்தபடி அரவம் பிங்கலம் பேசுவதைப் போன்ற குரலில் மென்மையாக பாடுவதும், சோம்பிப் படுத்துறங்குவதுமாய் இருப்பான். ஒரு முறை எட்டாவது நாள் பயணத்தில் வானில் விண்மீன்கள் நகர்ந்து கொண்டிருந்த நள்ளிரவில் காது கூசும் நிசப்தம் உணர்ந்து கலத்தின் முனைக்கு வந்து பார்த்தான். பெளர்ணமி சிறுத்தது போன்ற விண்மீன் ஒன்று வானில் தோன்றி பிராகித்துக் கொண்டிருக்க பாலாடை மூடியது போன்ற கடல் நீர் துளியும் அசைவின்றி கட்டிக் கிடந்தது. தன் மொழி பேசும் கறி மிளகு போன்ற நிறமுடைய அடிமை ஒருவனிடம் அதைப்பற்றிக் கேட்க அவன் அவ்விண்மின் அகத்தியம் என்று உரைத்தான். அகத்தியம் தோன்றுவது அரசனுக்கு ஆகாது என்றும் அகத்தியம் தோன்றினால் கடல் அலைகள் கட்டப்படும் என்றும் தென்னாட்டார் நம்புவதாகவும். இது ஏதோ துர்நிமித்தம் என்றும் கலங்கியவாறு சொல்பவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே படுக்கைக்குச் சென்றான். அன்றிலிருந்து தினமும் வானில் அகத்தியம் தோன்றுவதும் அது மறையும் வரை அலைகள் அறையப்பட்டிருப்பதும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. கரை சேர்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு விடியலில் தொலைவில் நாவாய்கள் கூட்டம் கூட்டமாய் போவதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தவன். அவைகள் தீடீரென மறைவதைக் கண்டான். சூரியனை மறைத்துக் கொண்டு கடல் எழுந்து ஆங்காரமாய் ஓடிவர திகைத்து நின்றான். கண்காணா உயரத்திற்கு வானில் தூக்கி எறியப்பட்ட கடல் நீர் பெருமழை போல் கலம் வீழ அவன் கலம் பலகை பலகையாய் பெயர்ந்து மூழ்கியதில் போதம் இழந்தான். மூன்றாம் நாள் நினைவு திரும்பிய போது எங்கோ ஓர் வைத்திய சாலையில் இருந்தான். அருகிலிருந்த இளம் வைத்தியன் தன் அரும்பு தாடிக்குள் புன்னகைத்தபடியே, "நீ இங்க வந்து ஒரு நாள் ஆச்சு" என பினீஷிய மொழியில் பேசினான். தன் தாய் மொழியை இந்தக் கருப்பன் பேசுகிறானே என்கிற ஆச்சர்யம் ஏதுமின்றி அவன் இவனைப் பார்த்தான் "உன் தண்டுவடத்தில் ஆழமான வெட்டுக் காயம் இருக்கு. நீ கொஞ்ச நாள் நடக்க முடியாது,” என்றவன் கண்களில் ஆர்வம் மின்ன, "அகத்தியம் தோணுச்சாமே கண்டோ" என்றான். இவன் "ஆம்" என தலையசைத்தான். சரிதான்.. அதாக்கும் அங்க மதுரை பத்திக்கிட்டு எரியுது அறியுமோ?" என்றான். இதில் வழமையான சிறுகதை இலக்கணமான தொடக்கம், சம்பவக் கோர்வை, முடிவு இவை எதுமில்லை. நமது தொன்மமொன்றினை மையப் புள்ளியாக வைத்து, கூடவே நம் மக்களது தூமகேது தோன்றினால் துர்சகுனம் எனும் ஆதிநம்பிக்கையின் மீது ஒரு பயணத்தை, விபத்தைக் கட்டியெழுப்பி, ஒரு துனிஷீயன் வாயிலாக உலகெங்கும் (Butterfly Effect என்பது போல) வெவ்வேறாய் நிகழ்பவை 'அறமென்னும்' கண்ணியில் இணைக்கப்பட்டிருக்கின்றன எனும் உண்மையைக் கோடிகாட்டி, மலையாள மொழி பேசுபவனது 'கண்டோ'விலும், 'அறியுமோ'விலும் மதுரையில் நடந்த அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை உணர்த்துகிறார். ஒரு சர்வதேச மனிதன் தான் இப்படைப்பாளி. ஆனால் அவனது "உள் கட்டுமானத்தை நிர்ணயிப்பது - அவனது உத்தரவைக் கேட்காமலேயே, ஒரு தமிழ்த்தனமான புரிதல் தான் - தமிழ் Sensibility தான்." ஆனால் அது ஒரு குறுகிய பிரதேச எல்லைக்கான பெருமிதமான ஒன்று தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் சர்வதேசிய பிரயாணியாகவும் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டு, தனது படைப்பினது வெளிப்பாட்டில் பொதுமைப் படுத்தப் படும் போது அழகான கலையாகிறது. இளங்கோவின் கவிதையொன்றின் தலைப்பு - ஒரு பைத்தியத்தின் உறக்க நேர உளறல் வாழ்வு தத்துவங்களின் மொழியில் வியாக்கியானப் படுத்தப் படுகிறது. கிருத்துவங்களின் மொழியில் நிகழ்கிறது. "கிருத்துவம் புடுச்ச பய" என்பது வட்டார வழக்குச் சொல். பயித்தியம், கிறுக்கு என்பது அதன் பொருள். இந்தக் கிருத்துவம் கவிதைக்கு மிக அவசியம். அந்த madness கவிஞனுக்குக் கூடுதல் பலம். ஏனெனில் பலரும், பலவிதமாக உபயோகிக்கின்ற (நீதிமன்ற வழக்காடுதல், பேருந்தில் பயணித்தல், பேரம் பேசுதல், இப்படிப் பல) ஒரு மொழியையே அவனும் உபயோகிக்க வேண்டியதிருக்கின்றது. எல்லோருடைய கைரேகையும் இருக்கின்ற அந்த மொழியைத் தனக்கானதொரு கவி மொழியாகத் தனது 'கிருத்துவத்தால்' வார்த்தெடுக்கின்றார் இளங்கோ கிருஷ்ணன். அதனால் தான் அவரால், "இன்றின் வேங்கை மரத்தில் சீற்றம் அறவே இல்லை நான் தவறவிட்ட இரவு ஒன்று காகமாய் வந்து அமர்ந்திருக்கிறது அதன் உச்சியில்" என்று அற்புதமாக ஒரு படிமத்தைச் சொல்ல முடிகிறது. "நான் என்பது எனக்கு நிகழும் கதையே" என்று ரோலாண்ட் பார்த் சொல்வது உண்மைதானே, இளங்கோ? வாழ்த்துக்கள்!

தொடர

பத்மஜா புத்தக வெளியீட்டு விழா

தமிழச்சி தங்கப்பாண்டியன்

பத்மஜா புத்தக வெளியீட்டு விழா "மதத்தின் இடத்தைக் கவிதை எடுத்துக் கொண்டுவிடும்" என்று Mathew Arnold பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதானித்தார். இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞரான Wallace Stevens குறிப்பிட்டார் - "After one has abandoned belief in God, Poetry is the essence which takes its place as life's redemption". "ஒரே சமயத்தில் பூத்துதிர்ந்த வாகை" எனத் தன் கவிதைகளைத் தந்திருக்கும் பத்மஜாவிற்கு "மலைப்பாதையில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது". கடவுளின் இடத்தை மட்டுமல்ல - கவிதை எல்லாவிதமான பொய்த்துப் போன நம்பிக்கைகளின் இடத்தையும் இட்டு நிரம்பும் எனும் என் நம்பிக்கை ஒவ்வொரு புதிய கவிதைத் தொகுப்பினை வாசிக்கையிலும் மீண்டும் உறுதிப்படுகிறது. "ஒரு சிறுமி தன் தாய்க்குப் பரிசளிக்கின்ற சேலையாய்" இக்கவிதைகளை நமக்கு அவர் பரிசளித்திருக்கிறார். நான் அதிக மகிழ்வும் பெருமையும் கொள்கின்ற விஷயம் ஒன்று - பெரும்பாலான பெண்கள் தமது முதல் கவிதைத்தொகுப்பினை வெளியிடுகையில், அதற்கானதொரு முன்னுரையையோ, அல்லது அதன் வெளியீட்டு விழா உரையையோ, நான் பங்களித்திருக்கிறேன் என்பதே அது. தி.பரமேஸ்வரி, சக்திஜோதி, தாராகணேசன், ச.விஜயலட்சுமி, ஈழவாணி, கீதாஞ்சலி எனும் எனது தோழிகளின் நீண்ட பட்டியலோடு, பத்மஜாவும் சேர்ந்ததினை, நான் இம்மாலை மகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். ஏனெனில், ஒவ்வொரு முறை ஒரு பெண் தனது அகவொளியைக் கலையின் மூலமாக வெளிப்படுத்தும்போது, சுதந்திரத்தின் ஒளியால் அவளது அழகும், ஆன்மாவும் மேலும் மெருகேறுகின்றது. அது கவிதையா, ஓவியமா, இசையா, இலக்கியமா - அல்லது அவைஏதுமில்லையா - என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவள் தனக்கான ஒரு வெளியைத் தீர்மானித்துத் தன் மொழியில், சுயாதீனமாக வெளிப்படுத்த வரும்போது, அவளைத் தூக்கி, கட்டி அணைக்கவும், தோள் கொடுக்கவும், கைகுலுக்கவும், நாம் தயாராகக் காத்திருக்க வேண்டும். காலம் காலமாக அடக்கப்பட்ட அவளது நாவு எச்சிலை உமிழ்ந்தால் கூட அது எனக்கு அமுதம்தான். அவ்வகையில் பத்மஜா எனக்கு மிக முக்கியமானவர். ஒரு வாசகியாக, நல்ல ரசிகையாக எனக்கு அறிமுகமாகிச் சக படைப்பாளியாக என்னோடு இணைந்து கொண்டிருக்கின்ற அவர் இணையத்தில் எழுதியவற்றை இங்கே அச்சு வடிவில் கொணர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள். அவரை அறிமுகப்படுத்திய எனதருமைத் தோழன், அன்பு அமிர்தம் சூர்யாவிற்கு நன்றி. என் நேசத்திற்கும், மிகுந்த மரியாதைக்குமுரிய கலாப்பிரியா, திரு. ராஜசுந்தரராஜன் (இவரது கவிதைகளின் தீரா ரசிகை நான்) ஆகியோரது முன்னுரையுடன் நேர்த்தியாக வடிவமைத்து கொணர்ந்திருக்கின்ற வேடியப்பனுக்குப் பாராட்டுக்கள். எனது ப்ரிய கலாப்பரியாவின் "பழகிப் போகும்... பஸ்ஸீக்கு ப் பாதையும் பாதைக்குப் பஸ்ஸீம்" எனும் மறக்காத கவிதையைப் போலவே – எனது மரியாதைக்குரிய திரு.ராஜசுந்தரராஜனின் பின்வருகின்ற, எனக்கு மிகப் பிடித்த அப்படி ஒரு நிலமை வரும் என்றால் அக்கணமே வாழோம் என்றிருந்தோம். வந்தது அப்படியும் வாழ்கிறோம் நம்மோடு நாம் காண இத்தென்னைகள் தம்மேனி வடுக்கள் தாங்கி. இக்கவிதையைப் போலவே... பத்மஜாவிடம் சில உண்டு - "ஒவ்வொரு புடவையும் நெய்யப்படும் போதே தான் யாருக்கெனத் தீர்மானித்துக்கொள்கிறது சில சேலைகள் கலை(ளை)யும் போதே மிக அழகாய்த் தெரிகின்றன" என பத்மஜா சொல்கையில், objection your honour எனப் பெண்ணியவாதிகள் குரல் கொடுப்பார்கள் என்றாலும், எனக்குப் பிடித்திருக்கிறது. கவிதை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் வயது ஒரு தடையல்ல. 'லாவண்யா' என்றொரு கவிஞர் தனது 55ம் வயதில் முதன் முதலாக, தன் "இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்" என்றொரு தொகுப்பை வெளியிட்டவர். அதற்குப் பின் 12 வருடங்கள் கழித்துத் தனது 67 வயதில் இரண்டாவது கவிதைத் தொகுப்பினை வெளியிடுகிறார். அவரது மொத்த இலக்கியப் பங்களிப்பு இவ்வளவுதான். ஆனாலும் அவர் நமக்கு முக்கியமானவர் - அறிந்து கொள்ளப்படவேண்டியவர். பத்மஜாவும் அப்படித்தான். லாவண்யாவின் படைப்பு வெளியைப் பற்றி என் அன்பிற்குரிய அய்யா திரு.வெங்கட்சாமிநாதன் பதிந்திருக்கின்ற கருத்தே பத்மஜாவிற்கும் பொருந்தும். "தன் கவித்துவ ஆற்றலால் தமிழ் இலக்கியத்திற்கு தன் பங்களிப்பு என்று ஆவேசமுற்றுப் படைத்தவை அல்ல லாவண்யாவின் கவிதைகள். அத்தகைய ஆவேசம் ஏதும் இவரது ஆளுமையில் இல்லை. தான் தன் காலத்தில் தன்னைச் சுற்றிய உலகில் காணும் நிகழ்வுகள் தன்னைப் பாதித்த, தான் அவற்றை உணர்ந்த பாங்கில் அது தன் சம காலத்தியவர் உணர்ந்ததிலிருந்து வேறு பட்டிருப்பதைப் பதிவு செய்யும் உந்துதலில் பிறந்தவை இக்கவிதைகள். தன் உணர்வுகளும் தன்னை அவை பாதித்ததும் மற்றவர்களிடமிருந்து வேறு பட்டிருப்பதே பதிவாகியுள்ளன. ரொம்பவும் பணிவும் அடக்கமும் கொண்டவர். புதுக்கவிதை வடிவம் தந்த துணிவில் ஏதோ தனக்குப் பட்டதை எழுத வந்தவர். இவர் பயமுறுத்துபவர் இல்லை" - என்று லாவண்யா குறித்துப் பதிகிறார் வே.சா. பத்மஜாவின் கவிதைகளும் அப்படித்தான் - காதலை, நேசத்தை, ஒரு பெண்ணின் அனைத்து பருவத்திற்கான மனோ உணர்வை, காதலும், காமமும் ஒன்றாகும் லயத்தை மட்டுமல்ல, அவளது "பாழாய்ப்போன மனசை"யும் நம்முடன் பகிர்கின்றன. கூடவே, தன்னைக் கொன்றாலும் தனது கனவினைக் கொல்ல முடியாது எனும் தீர்க்கமானதொரு பெண் குரலையும் முன்வைக்கின்றன. "கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல?" எனும் சந்தேக அவலத்துடன் இன்றும் பெண் நோக்கப்படுவதையும், "சுமந்து, நடந்து, காத்து, நின்று இற்றுவிட்ட கால்களுடன் அவள் சிலுவை சுமப்பதையும்" சுட்டுகின்றன. இருள், நிலா, மலை, கப்பல், ஒற்றை மீன், நட்சத்திரம், கால்கள், மரத்தாத்தன், முத்தம், நாய்க்குடைகள் - இவை உலவும் அவரது கவிதைகளை மொத்தமாய்ச் சுவைத்து முடித்தபோது ஆத்மாநாமின் இக்கவிதை வரிகளை நினைத்தேன் – "அற்புத மரங்களின் அணைப்பில் நான் ஒரு காற்றாடி. வேப்ப மரக்கிளைகளின் இடையே நான் ஒரு சூரிய ரேகை. பப்பாளிச் செடிகளின் நடுவே நான் ஒரு இனிமை சடைசடையாய்த் தொங்கும் கொடிகளில் நான் ஒரு நட்சத்திரம்" எனக்கு மட்டுமல்ல - பத்மஜாவிற்கும் கவிமனசு அப்படித்தான். நாமெல்லாம் - கவிதை என்ற ஒன்றையே ஒளியில் நெய்து கொண்டும், இருளில் போர்த்திக் கொண்டும் கனவுகளில் விழிக்கிறோம் - நனவில் தூங்குகிறோம் - மிக முக்கியமாக 'நனவிலியில்' வாழ்கிறோம். ஆத்மாநாம் எனக்கு மிகப் பிடித்த கவிஞர். பத்மஜாவின் முத்தம் குறித்த அருமையான பதிவுகள் இத்தொகுப்பில், அவரது நான்கு கவிதைகளில் உள்ளது. அவை ஆத்மநாமை எனக்கு நினைவூட்டின. "பாடகன்" பாடுகின்றான். அவனது இசையை மனம் ரசிக்கவில்லை இசை புக மறுத்து, உன் கழுத்து மருவை நாவால் வருடி யாராவது முத்தமிட்டு இருப்பார்களா? என்ற கேள்வியே மேலோங்கி நின்றது. "நீ எனக்குத் தர நினைக்கும் சின்ன முத்தம் ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும்" இன்னொன்று "கடைசி முத்தம்", மூன்றாவதாக "; வளரும் முத்தம்" எனும் தலைப்பில் ஒரு மிக அருமையான கவிதை. வளரும் முத்தம் தராமல் போன முத்தமொன்று நம்மிடையே வளர்ந்துகொண்டே போகிறது எந்த ஒரு கட்டுக்கும் அடங்காமல் உடன் என்னிடம் சேர துடிக்கிறது அதில் நேற்று முளைத்த சிறகுகள் என் வயிற்றினுள் படபடத்துக் கொள்கின்றன என் ஒரு சிறுமுத்தம் போதும் அதை மரணிக்க இல்லை ஒரு சொல் மாத்திரம்! இருந்தும் பேருரு எடுக்கும் அதனை புன்னகையோடே வளரவிடுகிறேன் வியாபித்து என்னையது கொல்லும் நாளுக்காக! ஒரு புன்னகைக்கு எப்படி மறுபுன்னகை பதிலோ அப்படித்தான் ஒரு முத்தத்திற்கும்”. மேற்சொன்ன கவிதையைப் படித்தவுடன் என் நேசிப்பிற்குரிய ஆத்மாநாமின் அந்த அதி அற்புதமான 'முத்தம்' கவிதை நினைவிற்கு வந்தது. 'கவிதைகளை யாரும் நம்மிடமிருந்து பிதுக்கி எடுத்துவிட முடியாது" (இந்திரன்) என்பதை விளக்கும் அற்புதமான ஆத்மாநாமின் இக்கவிதை இந்த 21ம் நூற்றாண்டிற்கான அவநம்பிக்கைக்கு மாற்றாக 'முத்தத்தை' - அன்பை முன்வைக்கிறது. முத்தம் முத்தம் கொடுங்கள் பரபரத்து நீங்கள் முன்னேறிக்கொண்டிருக்கையில் உங்கள் நண்பி வந்தால் எந்தத் தயக்கமும் இன்றி இறுகக் கட்டித் தழுவி இதமாக தொடர்ந்து நீண்டதாக முத்தம் கொடுங்கள் உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவரவர் நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும் விடுதலையின் சின்னம் முத்தம் முத்தம் கொடுத்ததும் மறந்துவிட்டு சங்கமமாகிவிடுவீர்கள் பஸ் நிலையத்தில் ரயிலடியில் நூலகத்தில் நெரிசற்பூங்காக்களில் விற்பனை அங்காடிகளில் வீடு சிறுத்து நகர் பெருத்த சந்தடி மிகுந்த தெருக்களில் முத்தம் ஒன்றுதான் ஒரே வழி கைவிடாதீர்கள் முத்தத்தை உங்கள் அன்பைக் தெரிவிக்க ஸாகஸத்தைத் தெரிவிக்க இருக்கும் சில நொடிகளில் உங்கள் இருப்பை நிரூபிக்க முத்தத்தை விட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது ஆரம்பித்துவிடுங்கள் முத்த அலுவலை இன்றே இப்பொழுதே இக்கணமே உம் சீக்கிரம் உங்கள் அடுத்த காதலி காத்திருக்கிறாள் முன்னேறுங்கள் கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் வருடங்கள் கழித்து இருபத்தியோறாம் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் ஆபாச உடலசைவுகளை ஒழித்து சுத்தமாக முத்தம் முத்தத்தோடு முத்தம் என்று முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள். கிரேக்க புராணம் - காதலன் நிழல்சுவற்றில் தெரிய, அதை வரையக் காதலி முற்பட்டதிலிருந்து ஓவியம் தொடங்குவதாக நம்புகின்றது. எனக்கென்னவோ பத்மஜா அன்பின் பிம்பங்கள் தன் முன் தோன்ற, அதை வரைய முற்படுகையில், கவிதையினைக் கண்டெடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. மிக எளிமையான நேர் மொழியில் அவரது "எரி நிழல்" கவிதை அதைச் செய்கிறது. எரி நிழல் உன் தண்முகம் கண்டேனில்லை உன் புன்சிரி கண்டேனில்லை உன் குறுவிழி கண்டேனில்லை உன் திமிர்நடை கண்டேனில்லை உன் உயிர்ப்பார்வை கண்டேனில்லை உன்பருந்தோள் கண்டேனில்லை உன் நெடுமார்பு கண்டேனில்லை உன் கடி மெய்யும் கண்டேனில்லை கண்டதெல்லாம் அது யாதெனின் உன் மனம் என் அகம் பற்றியதும் பற்றியெரியும் என் நிழலைத்தான். "தொலைதூர மலையொன்று உயிரோடு உறுமாறும் உன் கண் முன்னால்" என்றொரு அருமையான வரியை எழுதிய கவிஞர் இந்திரன் மிகச் சிறந்த கலை விமர்சகர். அவர் ஒரு முறை சொன்னார் – "வெறும் காட்சிப் படிமங்களை உருவாக்கி காட்டுவது ஒவியர்களின் வேலை - கவிஞர்களின் வேலை அல்ல" என்று. உடனே அதற்கு மிகச் சரியானதொரு உதாரணமாக எனக்கு நினைவிற்கு வந்தது பிரமிளின், "நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது அவற்றிற்கிடைேயுய்ளள இருள்" எனும் வரிதான். "இருளின் நிறம்" என்கிற கவிதையில் அடர் இருளில் தன் மீதுபட்ட நகக்கீறல் ஒளியாகக் கிளருகின்ற ஒரு படிமத்தை முன்வைக்கிறார் பத்மஜா. இருளின் நிறம் இருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம் நாம் அன்று ஜன்னலின் சிறுதுளையில் நுழைந்த நிலாக்கீற்றைக் கூட அடைத்து சுற்றிச் சுற்றி பார்த்தாய் நீ நம் நான்கு கண்கள் மட்டும் பளிங்காய் ஒளிர்ந்தன மூக்குத்தி! என்றாய் சிறு ஒளியாம் அதனை கழற்றி ஒளித்துவைத்தேன் இருட்டின் நிறம் அருகிவிட்டது கண்ணுக்குத் தெரியா கருநீலத்தில் மூழ்கிக் கிடக்கும் அவ்வமயம் அறியாது உன் நகம் என் மீது பட்டதில் கிளர்ந்த பேர் சுடரில் இருள் சட்டென போயே போய்விட்டது எப்போதாவது இருளின் நிறம் கண்டுபிடிப்போமா நாம்? "இருட்டின் நிறம் அருகிவிட்டது" என்னை நிறுத்தி வைத்த, வியக்க வைத்த சொற்பிரயோகம் இது. அபியின் சாகாவரம் பெற்ற "தன் அடர்த்திக்குத் தானே திகைக்கும் இருள்" எனும் வரி இங்கு நினைவிலாடியது. "நம்மைச் சுற்றிலும் காலாவதியாகிப் போன உவமைகள் ஏராளம். மிக உன்னதமான உவமைகள் நம்முடன் பழகியதின் காரணமாக அவற்றின் புதுமைப் பண்பை இழந்திருக்கின்றன. (உம்) 'நாற்காலியின் கால்' (இந்திரன்)" Password - கடவுச்சொல் நம்மோடு அன்றாடம் பழகிவருகின்ற சொல். ஆனால் அதனைப் புதுமையாகக் காதலன் பெயரைக் கடவுச் சொல்லாக வைக்கின்ற உவமையினைக் கையாள்கிறார் பத்மஜா தன் 'கரை ஒதுங்கிய கப்பல்' எனும் கவிதையில்- கரை ஒதுங்கிய ஒரு கப்பல் கப்பல் ஒன்று கரை ஒதுங்கியதாய் ஊரெல்லாம் ஒரே புரளி! அதனுள் செல்ல, கடவுச் சொல் அதன் பெறுநருக்கு மட்டும் தெரியுமாம்... ஊரையே கூட்டி முயல்கிறது அரசு! என் முறை வருமுன்னே எப்படியாவது அதை மாற்றிவிடு இல்லையெனில் எனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான உன் பெயரை உலகின் முன் எப்படி உரக்கச் சொல்வேன் நான்? ப்ளீஸ் டா! "இரண்டு சோம்பிய முதலைகளாய் வெளி வெறித்துக கிடந்தோம் வந்து வீழ்ந்தது ஒரு துளி மழை. வாலசைக்க மறுக்கும் பல்லியாய் உளவாங்கி உறிஞ்சினோம்" என்பவையும் அன்றாடம் நம்மோடு பழகிய, ஆனால் புதுமை இழக்காத உவமைகள் - பாராட்டுகள் பத்மஜா! தனக்குத் தெரிந்த, தான் அனுபவித்த உலகத்தையே பாசாங்கின்றித் தருகிறார் பத்மஜா - ஜிமிக்கியோடும், தாவணியோடும், அக்கா அண்ணியான கதை, பிண்டங்காக்கை பாட்டி, 'ஐ லவ் யூ' கிறுக்கலை வெள்ளையடித்து அழிக்காதே என இருட்டறையிலிருந்து இறைஞ்சும் ஒரு நடுங்கும் குரல், 'திருடா, ப்ளீஸ்டா' எனும் பிச்சிச் சிணுங்கல்கள், செவி சாய்க்கும் செல்லப் பிள்ளையார், "ஓட்டை குழாயின் நீர்சொட்டும் ஒலியில் நாள்தவறாது உனது பெயர் . எப்படித் தூங்குவேன் நான்" என அங்கலாய்க்கும் மனம், "உன் பழைய பனியனின், மனம் கிளர்த்திய வேட்கைகள்" எனத் தவிக்கும் பெண்ணின் மிக இயல்பான பாலூக்கம், முதலியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றவை தாம் இக்கவிதைகள். இடையிடையே துர்க்கனவாய் "நாயைப் பெண்டாளும் வால் வெட்டப்பட்ட குரங்கும்" உண்டு. அம்மா இன்னும் சில மாதங்கள்தான் என தீர்ப்பு வந்த நேரம்.. ஆயிரம் முறை நீ ஓதிய கடவுள் கூட தீர்ப்பை மாற்ற விழையவில்லை மருத்துவமனை வராண்டாவில் வீழ்ந்து உருண்டு புரண்டு ஆழவேண்டிய மனநிலையில் மதிய காட்சிக்குப் போனோம் எல்லாம் சரிதான் என்ற பாவனையில். ஆயிற்று ஒவ்வொருவராகக் காண வருகின்றனர் கடைசியல் உன்னுடன் பேசுவதற்கு உன் எதிரில் கண்ணீர்விட அஞ்சி கல்லாய்ப் போனோம் அனைவரும் நீ மயக்கத்தில் கண் அசந்த நேரமெல்லாம் முகம் வெறித்து மார்பு அசைகிறதா என்று விழித்திருந்தோம் நீயும் நானும் தனித்திருந்த சமயம் எனக்கு சாகும் வயசா? ஏன் இப்படி? என்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் நான் கூறியிருக்க இயலும்? வீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம் அழியாமல் இருப்பதைக்கண்டு அதை முத்தமிட்டு உன்னைக் கூவி அழைப்பதைக் தவிர? அம்மா... "கவிதாவஸ்தை" "யாருக்கும் புரியாக் கவிதை' என்ற கவிதைகளில் கவிதை எனும் ஊடகம் தன் சுயத்திற்கு அதன் தேடலுக்கு முன்பாக எவ்வுரு கொள்கிறது? எனச் சற்று உள்முகமாகப் பார்க்கவும் முயன்றிருக்கிறார். கவிதை எப்போதும் வாசகனின் சொத்துதான் - அவனது அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகின்ற அரியாசனமல்லவா அது - அதனால்தான் என் ப்ரிய ஆத்மநாம் வாசகனுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறான் இப்படி – "சாக்கடை நீரில் வளர்ந்த ஒரு எலுமிச்சை செடிபோல் நான் அளிக்கும் கனிகள் பெரிதாகவும் புளிப்புடனும் தானிருக்கும். கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து அருந்தினால் நல்ல பானகம் அல்லவா?" "கவிதையில் 'நான்' எனும் சுயம் குறித்த தயக்கங்களும் சந்தேகங்களும் நவீன காலத்தில் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கவிஞன் இந்த வாழ்க்கையிலும் சரி, கவிதையிலும் சரி, இதை எந்த அளவிற்கு உக்கிரமாக உணர்கிறானோ அந்த அளவிற்கு அந்தச் சுயத்திலிருந்து தப்பித்து "வேறு நபர்களில்" தன்னை நிறைத்துக் கொள்கிறான்” என்பார் பிரம்மராஜன். பிறரின் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கும் படைப்பாளி மனநிலைதான் அத. இதைத்தான் John Keats எனும் பெருங்கவிஞன் "Negative Capability" என்பார். இது இன்னும் நெருக்கமாகப் பத்மஜாவிற்குக் கைகூடி வருகையில், அவர் மென்மேலும் தனது கவிதைப் பாதையில் தீர்க்கமாகத், துலக்கமாகப் புலப்படுவார் என நான் நம்புகிறேன். பத்மஜாவை - அவரது கவிதைகளை எனக்குப் பிடித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் - அவரிடம் பிரகடனங்களோ, கோஷங்களோ, அரூப முழக்கங்களோ, போராளி முஸ்தீபுகளோ இல்லை என்பதுதான். இப்பொழுதெல்லாம் மிக விரைவில் இலக்கிய உலகில் பிரபலமாக வேண்டும் எனில் - குறுக்கு வழி - ஒரு கவிதைத் தொகுப்பு போடுவதுதான். அதில் மேற்சொன்ன இன்னபிற கூறுகள் இருப்பின் - அடுத்த சில மாதங்களில் spot light அவர்கள் மீதுதான். இந்தக் கூட்டத்தில், கவனிக்கப்படாத எளிமையும், முன்துறுத்திக் கொண்டு நிற்காமல், உரக்கக் கோஷமிடாத, இசங்கள், அரசியலை முன்னிறுத்தி எழுதப்படாத, செம்மையான கவிமனம் கொண்டவர்கள் பத்மஜாவைப் போல ஏராளமானோர் இங்கு உள்ளனர். மிகச் சமீபத்தில் நான் வாசித்த எனக்கு மிகப் பிடித்திருந்த சாம்ராஜின் வரியொன்று, "என்றுதானே சொன்னார்கள்" எனும் தொகுப்பிலிருந்து – நவீன தமிழ்க்கவிதைகளில் ஆசன ஆய்ணடியப்பன்கள்' ஏராளம் காலை முறுக்கித் தோள் மேல் போட்டு - அப்படியே தலை குப்புற நின்று - ..... நமக்கு அவையெல்லலாம் சாத்தியமில்லை .... நமக்கு அவை தேவையுமில்லை பத்மஜா உங்கள் வழியிலேயே ஏராளமான முத்தங்களும், அரளிப் பூக்களும், கப்பல்களும் உங்களை வழிநடத்தும் - நாங்களும் கூட வருகின்றோம்! ஊடகங்களே... தயவுசெய்து பத்மஜா போன்றவர்களைக் கவனியுங்கள். அறிமுகப்படுத்துங்கள், பேசப்படுபவர்களாக முன்னிறுத்துங்கள். நான் பல மேடைகளில், கூட்டங்களில் சொன்னது தான் இது – தமிழச்சி தொடங்கி .... மிகச் சிலரின் மீதே குவிக்கப்படுகின்ற கவனத்தைச், சத்தமின்றி, நம்பிக்கையின் ஒளியோடு, எளிமையின் வழியோடு, தம் அனுபவ உண்மை சார்ந்து எழுதுகின்ற ரிஷி, செ. பிருந்தா, கல்பனா, கு.உமாதேவி, அழகு நிலா, தென்றல், கனகதூரிகா, இப்படியான கவனிக்கத்தக்க பிற பெண் கவிஞர்கள் மீது உங்களது வெளிச்சத்தினைப் பாய்ச்சுங்கள். சாம்ராஜின் எனக்கு பிடித்த இன்னொரு வரி.... இப்போது தங்க நாற்கரச் சாலை கயத்தாற்றுக்குள் நுழைவதில்லை பாலத்தின் கீழ் எங்கோ இருக்கிறான் பாஞ்சாலங்குறிச்சிக்காரன்.... வாசகர்களே, ஊடகங்களே - உங்கள் தங்க நாற்கரச் சாலைகளை எங்கெங்கோ இருக்கின்ற பத்மஜாவைப் போன்ற பிற ஆளுமைகளை நோக்கிச் செலுத்துங்கள் - கவனியுங்கள் - கைதூக்கவிடுங்கள் - பாராட்டுங்கள். அனுபவத்தைக் கால, வெளி, ஊடகங்களூடே வெளிப்படுத்துவதே கவிதை. தேவியர் எவருக்குமே வழங்கப்பட்டதில்லை விசுவரூப வாய்ப்பு என்று ஆதங்கப்படும் அன்பாதவனைப் போல, புரிந்து கொண்டு, புதிதாக எழுத வருகின்ற பெண்களை வரவேற்றுக் கொண்டாடுங்கள்! ஒருகைப்பிடி சிந்தனை, ஒரு கைப்பிடி உணர்வு + ஒரு சிட்டிகை அனுபவத்தின் உண்மை - சேர்ந்தது கவிதை. அது உங்களுக்குக் கூடி வந்திருக்கிறது பத்மஜா. தொடருங்கள் - நிறைய எழுதுங்கள்! அதன் மூலம் எங்களோடு உங்களது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவதேவன் சொல்வது போல் - உங்கள் தனிமையின் கிண்ணம் நிரம்பி வழியட்டும் கவிதைகளால்!.

தொடர

விரிசலுக்கு பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

விரிசலுக்கு பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் "மனிதனுக்கு மொழி இருக்கிறது. அந்த மொழி அவனைத் தனிமைப்படுத்துகிறது. எனவே தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகிறது. தற்கொலை செய்து கொள்ள விரும்பும் ஒரே விலங்கும் அவனே" - என்கிறார் லக்கான். பொதுமனிதனைத் தனிமைப்படுத்துதலுக்குத் தள்ளுகிறது மொழி என்றால் ஒரு கவிஞனுக்கு அதற்குள்ளே இன்னுமொரு சுயமொழி கிளைத்து அவனை மேலும் தனிமைப்படுத்தி விடுகிறது. அவனது தனித்துவமான புஷ்பக விமானமும், சிலுவையும் அம்மொழிதான். "மொழி என்பது உலகளாவிய மனித குலத்தின் வலி" என்றதுவும் லக்கானே. அவ்வலியை தனக்கே தனக்கான தன்வய, தன்மையப் பிரதேசமாகச் சுயமாக அறிவித்துக் கொண்டு, அதன் வழிப் பயணப்படுவன் கவிஞன் மட்டுமே. வலியையும், இன்பத்தையும் தனக்கானதொரு புனைவு மொழியில் ஒரு கவிஞன் வெளிப்படுத்துகையில் ஃபிராய்டும், லக்கானும் கலந்த கலவைதான் அவன். ஏனென்றால் ஈடிபஸ் சிக்கலுக்கு அடிப்படை புனைவு என்று ஃபிராய்ட் சொல்கையில், லக்கானோ அதற்கு மொழிதான் அடிப்படை என்கிறார். ஏனிந்த உளவியல் அறிஞர்களது அறிமுகம் ஒரு கவிதைப் புத்தகம் குறித்துப் பேசுகையில் எனும் கேள்வி எழலாம். ஏனென்றால் - கவிதைகளுக்குள் பயணப்படுமுன் அக்கவிஞனின் உளப்பாங்கு மிக முக்கியம் எனக்கு. மனித மனம் பிரவேசிக்கின்ற புதிய பகுதிகள், பழைய சுவடுகளின் நினைவினை முற்றிலுமாகத் தொடர்பறுத்துவிடுவதில்லை. இவற்றைப் பிணைக்கின்ற மாய முடிச்சை முன்வைத்து அதன் சூட்சுமத்தில் இயங்குகின்றன அரவிந்தனின் கவிதைகள். அவற்றூனூடான எனது பயணத்திற்கு அவரது உளப்பாங்கை, உளவியலைக் கொஞ்சம் அறிந்து, புரிதலும் அவசியமல்லவா? தனது கவிதைகள், கோட்பாடு அல்லது புனைவு சார்ந்ததா எனத் தெரியாது என்று சொல்கின்ற அரவிந்தன் எந்த எளிமைக்காகவே கவனித்துப், படிக்கப்பட வேண்டியவருமாவார். கவிதையில் மட்டும் அர்த்தம் மொழியால் தீர்மானிக்கப்படுவதில்லை அல்லவா? அதைத் துய்க்க இரண்டு 'அகனிலைகள்' - கவிஞன், வாசகன் - வேண்டுமல்லவா? அதிலும், மனிதனின் அகனிலையானது மொழி - அர்த்தம் ஆகிய இரண்டு விஷயமாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் - அவனது கலை வெளிப்பாடு - குறிப்பாகக் 'கவிதை வெளிப்பாடு' என்பேன் நான். பத்மநாபபுரம் அரவிந்தன் எனத் தனது ஊரைப் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கின்ற அரவிந்தன், சென்னையில், கடலில், கப்பலில் எங்கு இருந்தாலும் தனிமையில், தனது வேரைத், தான் தொலைத்த ஊரைத் தான் சுமந்து கொண்டிருக்கிறார். அவரது யாழ் இழந்த பாணன் அதன் வெளிப்பாடே, அதன் குறியீடே. "கதை, கவிதை, கட்டுரை - ஒரு பொருளின் வடிவத்தை எப்படித் தீர்மானிப்பீர்கள்" என்ற கேள்விக்குக் கல்யாண்ஜி "இந்தக் கதைக்கு இது வடிவம். இந்தக் கவிதைக்கு இன்னும் கொஞ்சம் பாலைச் சுண்டக் காய்ச்ச வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பதில்லை. ஆச்சி மசாலா இல்லையே, அம்மாச்சி அரைக்கிற மசாலா. மிஷின் பக்குவம் வேறு. கைப்பக்குவம் வேறு இல்லையா? கண் அளக்காததையா கை அளக்கும்?" என்று சொல்லியிருப்பார். ஆமாம் கண் அளப்பதுதான் முக்கியம் கவிதைக்கும் - அகக்கண் அளப்பது. அவ்வகையில் அரவிந்தன் கவிதைகளில் Craftness செய்நேர்த்தி இல்லை - கண் அளந்ததை எழுத்தில் பகிருகின்ற ஒரு இளைப்பாறல் - வட்டமா, சதுரமா, சரியா, தப்பா இவை பற்றிய அலட்டலோ கவலையோ இல்லாமல் பாண்டி விளையாடுகின்ற ஆர்வமும், அவ்விளையாட்டு தருகின்ற திருப்தியும் போதுமென்கிறார் போலக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவரது கூடுதேடி, வர்ணங்களால் மட்டுமல்ல ஓவியங்கள், அது ஒரு மழை நாள், இழப்பு - இவை பெரிதான அனுபவக் கிளர்வைத் தராத மேம்போக்குக் கவிதைகளாகப் பட்டாலும், அவரது அகக் கண்ணின் அவதானிப்பும், அதன் பதிவும் "புரிந்து கொள்ளேன் என் இந்தச் சிறு பதைபதைப்பை, தேடலை, பரிதவிப்பை" என்று உண்மையின் சுட்டுவிரல் தொட்டு நம் முகவாயிலில் கெஞ்சுகையில், "கவிதை மூடுண்ட அறைகளை மட்டுமே பாடக் கூடாது. சாளரங்களைத் திறந்து வெளியே வர வேண்டும். விசாலமான இந்த வாழ்க்கையைப் பாட வேண்டும். மனித வாழ்க்கைக்கு நெருக்கமானதாகத்தான் கவிதை இருக்க வேண்டும்" என்ற நெரூடாவை நினைத்துக் கொண்டேன். அரவிந்தனின் (அகக்) கண் அளந்ததை அப்படியே உள்வாங்கிப் பயணிக்கிறேன். "லோரன்ஸ் என்பவர் ஒரு விசித்திரமான பரிசோதனை செய்தார். அது லக்கானைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு வாத்து தனது முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் சமயம் பார்த்து, தாய் வாத்தை அப்புறப்படுத்திவிட்டு, அதன் இடத்தில் தன் பூட்ஸ்களை வைத்தார் லோரன்ஸ். முட்டையை விட்டு வெளியே வந்த குஞ்சுகளின் கண்களில் முதலில் பட்டது பூட்ஸ்கள்தான். அந்த வாத்துக் குஞ்சுகள் பூட்ஸையே சுற்றிச் சுற்றி வந்தன. லோரன்ஸ் அந்த பூட்ஸ்களை அணிந்து கொண்டு எங்கே போனாலும் அவை பின்தொடர்ந்தன. அந்த பூட்ஸ்களைத் தங்கள் தாயாக அவை நினைத்துவிட்டன. மேலும், முதன்முதலாக அவற்றின் கண்களில் பட்டவை அந்த பூட்ஸ்கள்தான். எனவே, அவை குஞ்சுகளின் மனத்தில் பிம்பமாகப் பதிந்துவிட்டன. அந்த பிம்பத்தை அவை பின்தொடர ஆரம்பித்துவிட்டன. இதை 'அடிமைப்படுதல்' (கேப்டிவேஷன்) என்கிறார் லக்கான்." (லக்கான் - எம்.ஜி.சுரேஷ் : 11) மாற்றங்கள் கொன்ற என் மனக்கதைகள் எனும் கவிதையைப் படித்தபோது. பத்மநாபபுரமே அரவிந்தன் எனும் வாத்துக் குஞ்சிற்குத் தாய்மடி எனப் பிடிபட்டது. லோரன்ஸின் பூட்ஸை அவை தாய்மடியெனத் தொடர்ந்தது போல அவ்வூரைத் தொடர்கிறார் அரவிந்தன். அவ்வூரில் தனது வீட்டின் காரைச் சுவர், புளிய மரம், மாமரம், செண்பகப்பட்சி, கதை கேட்டுத் தூங்கிய கட்டில், முயல்கள் வளர்த்த பெருங்கூடு இவையெல்லாம் பழங் கதையாய் ஆனபின்பும், பத்மநாபபுரத்தை கடற்காற்றின் உப்பு மணமென உள்ளிழுத்தும், தன் உயிர்ச் சூட்டைத் தக்கவைத்துப் பாலூட்டும் உணர்வுத் திசைமானியாயும் சுமந்திருக்கிறார் அவர். இவரது பெரும்பான்மையான கவிதைகளிடையே ஊடுபாவும் சரடு - உலகமயமாக்க, தாரளமயமாக்க, தனியார்மயமாக்கலின் தாக்கமே. 21ம் நூற்றாண்டின் இந்த கோர பசிக்கு முதல் பலி நமது மரபு சார் வேளாண்மை, வளம் சார் நீர்நிலைகள், பசுமை சார் சுற்றுச் சூழல் என்பதே. மிக உணர்வுப் பூர்வமாக இதனைச் சிதைத் தொழித்தல் எனும் கவிதையில் பதிந்துள்ளார். இதைப் படித்தவுடன். "இன்றைய உலகச் சுற்றுச்சூழல் சிதைவிற்குக் காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் செயல்களே" என்று சொன்ன ஜான் வோக்லர் (John Woglar) எனும் முதலாளித்துவ அறிஞரின் அபத்தமான, மிகச் கண்டிக்கத்தக்க கூற்று நினைவிற்கு வந்தது. இந்தியா இப்போது வளர்ந்துவருகின்ற நாடுகளின் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணைந்து விட்டதாகவும், வல்லரசு குறித்துக் கனவு காண வேண்டுமெனவும் தலைவர்கள், அறிஞர்கள், மேதைகள் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உலகத்தைக் குப்பைத் தொட்டி ஆக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதும், சுமத்தப் படுவதும் இன்னமும் நமது சிறுபான்மையினர் மீது தான். எதற்காக ஒரு கவிதைப் புத்தகம் குறித்த பகிர்வினிடையே மேற்சொன்ன கூற்று என்று நீங்கள் கேட்கலாம் - வெறும் அகத்தின் வழி ஊடுறுவிய உள்வழிப் பயணமாகக் கவிதை இருப்பின் அது அர்த்தமற்ற சவம். புறத்தின் தாக்கத்தை, தான் வாழும் காலத்தின் சமூக நிகழ்வுகளை, அவலங்களை, பிரச்சாரத்தின் தொனியோடு அப்பட்டமாக இல்லாது, பொதுமையானதொரு அனுபவமாக அதனைக் கடத்துகின்ற ஓர்மையும் ஒரு கவிஞனுக்கிருக்க வேண்டும். பிச்சைக்காரர்கள் வயோதிகக் கூனால் வளைந்த நடையுடன் பஞ்சடைத்த கண்களும் நடுங்கும் உடலுமாய்... கந்தல் உடையுடன் கையேந்தி நின்ற அந்தப் பிச்சைக்காரனுக்கு தேனீர் வாங்கித் தந்து கையில் பத்து ரூபாய் கொடுத்தபோது... நெஞ்சம் முழுக்க ஏதோ நிறைந்தது... மின் விசிறியின் கீழே சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி மூன்றுமுக இணைப்பிற்காய் ரூபாய் ஐயாயிரம் லஞ்சமாய் வாங்கிய அந்த மின்வாரியப் பிச்சைக்காரனுக்கு... நானிட்ட பிச்சையும் முழுக் குப்பி விஸ்கியும் எத்தனை நினைத்தும் கனக்கிறது மனதுள் அழியாமலேயே... (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 125,126) திறம்படப் பேசியவன் ஏற்ற இறக்கங்களுடன் திண்மையான குரலில் அவன் பேசிக் கொண்டிருந்தான் சில இடங்களில் ரகசியம் சொல்வதுபோல் மென்னிறகு கட்டி வழிந்தோடியது வார்த்தைகள்... சில சொற்கள் வாள் வீச்சின் வேகத்தில் வந்திறங்கியது கண்டங்கள் கடந்து வரும் வேற்று தேசப் பறவைகளின் சிறகொலி போல் ஆழ்ந்த உந்தலுடன் வந்தன சில வார்த்தைகளின் இடையே அவன் மெல்லிய நூலிழையை ஊசியில் கோர்த்து தைப்பது போல் தைத்திறக்கினான்... கூட்டம் சுயம் மறந்து லயித்துக் கிடந்தது சில நேரம் சொற்கள் பாறைகள் உடைபடும் ஓசையுடன் தெறித்து விழுந்தன அவனுள் உறைந்த எண்ணத்தின் வெளிப்பாடு மனதுள் இருந்து குரல்வளை நுழைந்து நாக்குச் சுழற்சியில் மழைபோல் பொழிந்தது கூட்டம் நனைந்தபடி நினைத்தது 'பேச்சு நன்றாக இருக்கிறது... செயலிலும் வருமா தடையற்ற இந்நிலை? போட்டுத்தான் பார்ப்போமே' என்று அழுத்தி வைத்தனர் அவனுக்கான சின்னத்தில் தங்களின் விரல்கள்... (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 31,32) அகதிக் காலம் நீண்டதோர் கடற் பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருக்க அக்காகம்... சென்னை - ஆஸ்திரேலியா விசாவின்றி வந்தடைந்து கரைகண்ட களிப்பினில் வேகமாய் எம்பி சுய குரலில் கத்திவிட்டு கரை நோக்கிப் பறந்தது, மறுநாள்... உடலெங்கும் கொத்துக் காயங்களுடன் கப்பல் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி அமர்ந்திருக்கக் கண்டேன் நான் தலை சாய்ந்து எனை நோக்கிக் கத்தியது இப்படியோ? 'அயல் நாட்டில் அடிவாங்க வேண்டாமென்றும் வெளிநாட்டு மோகமது கூடாதென்றும்...' (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 43,44) போன்றவை இத்தொனியுடைய கவிதைகள்தாம். 19 டி.எம்.சாரோனில் தான் பெரிதும் மதித்து வியக்கின்ற பிஷப் கிடியன் தேவநேசனுக்கும் அவரது காரோட்டிக்கும் நடந்த உரையாடல் ஒன்றைப் பின்வருமாறு பதிவு செய்திருப்பார் பவா. "ஒரு மழை இரவில் மலைப்பயணத்தில் காலின் முன்சீட்டில் தூங்கிய கிடியன் தேவநேசன் ஓட்டுநரின் தீடீர் பிரேக்கால் தலைமோதி அடிபட்டு விழிக்கின்றார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏதுமில்லை ஏனெனக் கேட்டதற்குத் தலை திருப்பாமலே நிதானமாகப் பதில் சொல்கிறார் வயதான ஓட்டுநர்: "ரோட்டை ஒரு கீரிப்புள்ள க்ராஸ் பண்ணுச்சுங்க' 'கீரிதான, அடிச்சுட வேண்டியதுதான?' அப்புறம் மரணம் எனக்கு மரத்துப் போயிடும் அய்யா" பவா எனும் கதை சொல்லிக்குள்ளிருக்கும் இறவாக் கவிஞனை நான் தரிசித்த இடம் அது. பொதிகைச் சித்தரது பதிவொன்றில் இந்த நிகழ்ச்சிக் குறிப்பாகச் சுட்டிக்காட்டிவிட்டு, இதுகுறித்து அவர், "இத்தகைய மரணம் பற்றிய அந்தப் பெயர் தெரியாத ஓட்டுநரின் பதிவு கிடியன் தேவநேசனின் மரணம் பற்றிய முக்கிய உரைகளைக் காட்டிலும் உன்னதமானது தானே" எனவும் சிலாகித்துக் சொல்லியிருப்பார். இந்தக் கவிமனம், "கவிதை, தான் கவிதையாவதற்கு வார்த்தைகளைக் காட்டிலும், அர்த்தங்களைக் காட்டிலும் வாழ்க்கையையே நம்பியிருக்கிறது" எனும் ஈரோடு தமிழன்பனின் கூற்றை மெய்ப்பிக்கின்றது. இக்கவிமனம் அரவிந்தனுக்கும் வாய்த்திருக்கிறது – அவரது மறதி கவிதையைப் பாருங்கள் - உயரத் தென்னை மரங்களிடை நின்ற குட்டை மரத்தின் இளநீரில் மட்டும் பால்மணம் கொண்ட புதுச்சுவை இருந்தது காலங்கள் கடந்தபோது அனைவரும் மறந்தனர் இரண்டே வயதில் இறந்துபோன குழந்தையின் உடல் புதைத்த இடத்தில் நட்ட தென்னங்கன்று அதுவே என்பதை (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 71) நாம் தொலைத்துவிட்ட கரகாட்டம், கூத்து, புலிவேசம், ஒயிலாட்டம் - இவையோடு அறவே அருகிவிட்ட நாட்டார் மரபுச் சடங்குகள், அதன் எதிரொலியாய்ப் பிழைப்பின்றப் போன எளிய மனிதர்களின் துயரம் குறித்துப் பேசுகின்ற கோமறத்தாடியின் மறுநாட் கவலை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று. இதன் தலைப்பு கோமறத்தாடி என்றே இருந்திருக்கலாம். ஒரு கவிதைக்கான தலைப்பு சற்று கோடிட்டுக் காட்டுதல் அல்லது குறியீட்டுத் தன்மையுடன் இருந்தாலே போதும். அதன் அர்த்தத்தினை விளக்குகின்ற உரைநடைத் தன்மை அவசியமில்லை. மேற்சொன்ன கவிதை கோமறத்தாடியின் உருவில் குறி சொல்லும் மாடனனின் மன உணர்வைத் "தண்ணீர் தெளித்து புதுத்துணி உடுத்தி கறிச் சோறு தின்னும் பொழுதில் நினைப்பார் என்றைக்கும் திருவிழா இருந்தால் என்ன சுகம்!" என்று சொல்லி ...நாளைமுதல் கோவில் சாப்பாடு ஒரு வேலை... இன்று காலில் விழுந்தெழும் பக்தர்கள் நாளை மீண்டும் சொல்வார்கள், 'சும்மா கோவில்ல கெடந்து எளவெடுக்காமே... ஏதாவது சோலி மயிருக்குப் போவும் ஓய்! என்று முடியும். இதனைப் படித்தவுடன் எனது தொலைதல் எனும் பின்வரும் கவிதை முன்வந்தது- கழைக் கூத்தாடிகள் ஜிகினா உடையில் கோவில் திருவிழாக்களுக்கு வந்துவிட்டார்கள். சர்க்கஸ் கோமாளிகள் திருமண வீட்டில் வரவேற்றுக் கை குலுக்குகிறார்கள். கிடாய் வெட்டி ரத்தப் படையலிடும் பூசாரிகள் தெருமுனைக் கோயிலில் இரண்டு நேரம் விளக்குப் போடுகிறார்கள். அடவு வைத்து கூத்து கட்டுபவர்கள் திரைப்படங்களில் தலைகாட்டும் வயதான அப்பாக்களாகிவிட்டார்கள். சேலைகளுக்கு அடியில் மொண்ணைக் கை மரப்பாச்சியைப் பத்திரப்படுத்திவிட்டு 'டம்பப்' பையோடு நானும். "கவிதையானது பாட்டிலில் அனுப்பட்ட செய்தி - எப்பொழுதோ எங்கேயோ அந்தச் செய்திக்குக் கடலிலிருந்து நிலத்தை நோக்கிய பாதை கிடைக்கலாம் - ஒருவேளை" என்றார் பால் ஸெலான். பாட்டிலில் அல்ல ஒரு புத்தக வடிவில், கடலிலிருந்து நிலத்திற்கு, உள்ளதை உள்ளவாறு, அவை கவிதையா என்ற கவலையின்றிக் கடத்தியிருக்கிறார் அரவிந்தன். அவரது கடற்புயல் நாட்கள் மிக மிக வழமையான கவிதைதான் - வெண்ணலைக் குதிரைகள், மின்னல் மரங்கள், சமுத்திர சாமுராய்கள், பெருங்குடி குடித்தவனின் நிலைபோல் அலைந்துலையும் கப்பல்' என்று தேய்ந்துபோன உவமைகளைக் கொண்டதுதான் - ஆனால் கவிதையின் முடிவில் சாதாரண மனிதனது (உள்மனம் vs நடப்பு நிலைக்கான மனம்) பயத்தை, பீதியை, அதனை மீறி நிற்பேன் என்கிற ஊசலாட்டமான சமாதானத்தைப் படம் பிடிக்கிறது. அப்பா என்கிற உறவை ஆளுமையை முற்றிலும் வேறு கோணத்தில், எவ்விதப் புனிதப்படுத்துதலும், romanticism உம் அற்றுத் தப்புக்கணக்கு கவிதையில் "நான் கூட்ட நீங்கள் கழிக்க நீங்கள் கூட்ட நான் கழிக்க வகுத்தலும், பெருக்கலும் கணமும், விகிதமும் மொத்தமாய்ப் புரியவில்லை எனக்கென்றும் கணக்கு" என்று எழுதியுள்ளார். பாசாங்கற்ற பார்வையுடன், ஒரு உறவைப் பதியவைப்பதும், அந்த objective disection ஐக் கவிதையாக்குவதும்... சரிதான் - இது ஒரு வகைப் பாணிதானே. மிகப்பிடித்த - வார்த்தை விளையாட்டுப் போலத் தோற்றமளிக்கின்ற ஒரு கவிதை தலைமுறைகள் மருதநாயகம் பிள்ளை சிவன் பிள்ளையைப் பெற்றார் சிவன் பிள்ளை மருதநாயகம் பிள்ளையைப் பெற்றார் மருதநாயகம் பிள்ளை ஷிவக்குமாரைப் பெற்றார் ஷிவக்குமார் யாஷிக் ராகேஷைப் பெற்றார் யாஷிக் ராகேஷ் இம்மானுவேல் மேத்யூவைப் பெற்றார் இம்மானுவேல் மேத்யூ முஜீப் ரஹ்மானைப் பெற்றார் முஜீப் யாரைப் பெறுவானோ? மருதநாயகம்பிள்ளையும் சிவன்பிள்ளையும் எங்கே போனாரோ? (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 116) கவிதை சிக்கல் நிறைந்து இருக்க வேண்டியதில்லை - பகடியோடு நாம் தொலைக்கின்ற வேர்த்தடங்களை மேற்சொன்ன கவிதையை விட வேறெப்படிச் சொல்ல? தூக்கமால் போன துக்கி என்றொரு கவிதை - தன் தாத்தாவின் பிணத்தைச் சுமக்க முடியாத பேரனின் துயரப் பதிவு அது. ஆனால் துக்கி என்ற சொல் புதிது எனக்கு. அது போலவே எதிர் அழகியல் கவிதையான யதார்த்தம் எனும் கவிதை எனக்கு மிகப் பிடித்த ஒன்று. நட்சத்திரங்கள் பிடித்து நெற்றிப் பொட்டு வைப்பேனென்று சொல்ல மாட்டேன் பக்கத்துக் கடையில் ஒட்டுப் பொட்டு வாங்கித் தருவேன் வானவில் கசக்கி உன் கூந்தலில் சூடேன் ஒரு முழம் மல்லி தினமும் தருவேன் நிலவு வதனம் உனக்கென வர்ணிக்க மாட்டேன்... தினமும் கண்ணாடி நீயே பார்க்கிறாய் மேகத்தைப் போர்வையாக்கி அதனுள் கூடுவோமெனப் புழுகுரைக்க மாட்டேன் கோரைப் பாயில் நானேயுன்னை குளிராமல் போர்த்துகிறேன்... இவையெல்லாம் சம்மதமெனில் தொடர் உன் காதலை என்னுடன்... (விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன் : 65) 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' என்ற திரைப்பட பாடலை என்னையறியாமல் இதனைப் படித்தவுடன் முணுமுணுத்துக் கொண்டேன். கூடவே கலாப்பரியாவின் பின்வரும் கவிதையும் நினைவிற்கு வந்தது. தோல்வி யாராவது இவளை உடனே மீட்டுதலில் உடையும் வீணைத் தந்தியென - மிக மென்மையாய்க் கொலை செய்யுங்கள். இன்னொரு பிறவியில் நீங்கள் தேவதாஸ் ஆகும் போது உங்கள் கடைசிக் காலத்தில் வண்டியோட்டி - நன்றிக் கடன் செலுத்துகிறேன். உயிரிக்காதலை மிக எதிர்மறையானதொரு உணர்வுடன் juxtoppose செய்து, அழகியலின் சாயலோடு அதனை எதிர்க்கின்ற இக்கவிதை காதலைப் பற்றி எவ்வளவு கனமாக, ஆழமாகச் சொல்கிறது! இதனைச் சற்று மாற்றி யதார்த்தமாக காதலெனும் உணர்வினைச் சொல்வது அரவிந்தனின் கவிதை! மரணம், மழை, போதை, உறவின் நிழலாட்டம், ஒரு பூனையின் இருப்பும், மறைவும், நட்பு, மனைவி, காகம், சிகரெட் புகை, - எல்லாமும் இருக்கின்ற இத் தொகுப்பில் தன்னிலை குறித்த கவிதைகளைத், (தன் விளக்கமாயிருக்கின்றவற்றைத்) தவிர்த்திருக்கலாமே எனத் தோன்றியது. 'இலக்கியத்தின் இடுக்கு வழி நுழைந்து புதுத் தெரு புகுந்தவன்' என்கிற விமர்சனத்திற்கு "மூடிவை மாமாங்கம் கழியட்டும் அர்த்தம் காட்டாது அழியாமல் நிற்குமென் இறவாக் கவிதை என் கவிதையைப் புரிய வேறென்ன வேண்டும்?" என்கின்ற தெளிவுத் திமிர் இருக்கின்ற கவிஞன் நீங்கள் அரவிந்தன் - உங்களுக்கு உங்கள் கவிதைகளைப் புரிந்துகொள்ள ஒரு 'என் குழு' கூட வேண்டாமே – "ஊர்ந்து தான் செல்கிறேன் நிஜமானவையைத் தேடி இப்போது... ஆனாலும் நானாக நான் ஊர்வதில் யாராகவோ நான் பறந்ததை விட சுகம்... சுகம்..." என்பவருக்கு யாருமே வேண்டாம் - மனதின் உணர்வினைப் பகிர்ந்து கொண்ட காகிதமும், பேனாவும் போதுமல்லவா? வால்ட் விட்மனின் (Walt Whitman) கவிதைகளை முதலில் அசிங்கமான வரிகளென டால்ஸ்டாய் இகழ்ந்து நிராகரித்தார். பின்னர், "விண்ணில் ஊர்வலம் போகும் நட்சத்திரங்களை விடச் சின்னப் புல்லிதழ்கள் எவ்வகையில் தாழ்ந்தவை?" என்று கேட்ட விட்மன், அமெரிக்க டால்ஸ்டாய் எனப் புகழப்பட்டது வரலாறு. என்னைப் பொருத்தவரையில், ஒரு கவிதையை அணுகும் போது அது எந்தப் பின்னணியில், எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது எனக்கு மிக முக்கியம். கவிதையின் எதிரியான பின்நவீனத்துவ விமர்சகர் (Roland Paarth) ரொலாண் பார்த்திற்கு ஜப்பானிய ஹைக்கூ கவிதை மட்டும் எப்படிப் பிடித்தது? ஜப்பானின் கலாச்சாரப் பின்னணியில் வைத்து மட்டுமே அதனைப் பார்க்காது, ஜப்பானையே ஒரு பிரதியாக்கிப் பார்த் பார்த்ததால் தான் அவருக்கு ஹைக்கூ பிடித்துப் போகின்றது என்கிறார் எம்.ஜி.சுரேஷ். "அர்த்தம் என்ற அரிப்புடன் திரியும் மேற்கத்திய பார்வையாளனுக்கு ஜப்பான் தரும் அர்த்தங்களிலிருந்தான விடுதலையைக் கண்டுகொள்வதே பார்த்தை ஈர்க்கிறது. ஜப்பானில் வெறுமையான மொழியும், வெறுமையான குறிகளும் இயல்பான தன்மையுடன் நிலவுகின்றன. ஜப்பானியர்களின் ஹைக்கூ கவிதை ஆழமற்ற சமப்பரப்பில் இயங்குகிறது. மறைமுகமான அல்லது வரையறுக்கப்பட்ட குறிப்பீடுகள் அதில் இல்லை. மையமற்ற தன்மை மட்டுமே அதில் இருக்கிறது. ஜப்பானையே ஒரு பிரதியாக்கி வாசித்துப் பார்க்கிறார் பார்த். ஜப்பான் என்கிற அந்தப் பிரதி மேற்கத்திய மனத்தின் தெளிவான, நிலையான ஒற்றை அர்த்தத்துக்கு எதிராக இயங்கும் வெளியாகும். ஜப்பானியத் தலைநகரமான டோக்கியோவில் ஜப்பானியப் பேரரசரின் இல்லம் இருக்கிறது. அந்த இல்லம் நகர்த்தின் ஓரத்தில், மையம் தகர்க்கபட்டதாக இருக்கிறது. அதேபோல் டோக்கியோ நகரத் தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை. பார்வையாளர்கள் தெருக்களில் குறிக்கப்பட்டுள்ள சித்திர வடிவங்களை வைத்தே அந்தந்தத் தெருக்களை அடையாளம் காணமுடியும். ஜப்பானைப் பொறுத்தவரை, குறிச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. பிற கற்களால் தாங்கி நிறுத்தப் பட்டிருக்கும் மையக்கல் (கீ ஸ்டோன்) எதுவும் இல்லை." (பார்த் - எம்.ஜி.சுரேஷ் : 51) ஆக பின்னணியைப் புறந்தள்ள முடியாது என்கின்ற தெளிவோடு, தன் தொழிற்பாற்பட்டு கடல் வாழ்வைப் பெரும்பகுதி உய்க்கின்ற அதே போழ்தில் தனது வலிய வீட்டையும், பத்மநாபபுரத்தையும், பெருவுடையாரையும் மனதில் சுமக்கின்ற அரவிந்தனின் கவிவெளிப்பாடு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதுதானே நியாயம். அவரவளவில், அகக்கண் கண்டதை, தத்துவத் தேடலோ, ஞானத்தின் முகிழ்த்தலோ இதோ எனும் தம்பட்டம் அற்றுத் துரோகம், நட்பு, காதல், பிரிவு, பால்யத்தின் மீட்டுருவாக்கம், இவற்றைச் சமகாலப் பார்வையாளனாக மட்டுமே பதிவு செய்திருக்கிறார். நீண்ட நாள் கடல் பயணத்தில் எதிர்பாராமல் பயணம் நீளும் சூழலில் சிகரெட்டுகள் தீர்ந்து போகலாம், - அரவிந்தன். ஆனால், ஒரு போதும் உங்கள் கவிதைகள் தீராது. கப்பல் கரையடைந்த பின்பு அவை எங்களைச் சேரும் - காற்றில் உயரும் சிகரெட்டின் புகை போல அல்ல. வெகுநாட்கழித்து வீடு திரும்புகின்ற மகனுக்கு ஆசையும், பரிவுமாய்ப் பரிமாறச் சமைக்கின்ற எம் பாட்டிமார்களின் புகை போக்கியிலிருந்து எழும்புகின்ற நாற்றப் புகைபோல்! காத்திருக்கிறோம் அடுத்த தொகுப்பு இன்னும் காத்திரமாகக் கைவர - வாழ்த்துக்கள்! உதவிய நூல்கள்: லக்கான் - எம்.ஜி.சுரேஷ் பார்த் - எம்.ஜி.சுரேஷ்

தொடர

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் – பாரதிமணி

தமிழச்சி தங்கப்பாண்டியன்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் – பாரதிமணி காந்திபாய் தேசாய் : நான் விரும்பி அடிக்கடி Frankfurt போவதற்கு அங்கு நான் தங்கும் Presidential Suite மட்டும் காரணமல்ல. (இங்கு நான் திரையுலகில் எதிர்கொள்ளும் ஒரு டார்ச்சரைப் பற்றியும் சொல்லவேண்டும். 'அடுத்தவாரம் அவுட்டோர் இருக்கு. ஹீரோவுக்குப் பெரிய ஸூட்டா போட்டுடுங்க' என்பார் இயக்குநர். அவர் சொல்வது உடையையல்ல. ஹீரோ தங்குவதற்கான Suite. அதே போல 'எடிட்டிங் ஸூட்டு' என்கிற வார்த்தை அடிக்கடி காதில் விழும். எனக்கு 'முட்டாப்பசங்களா, அது ஸூட்டு இல்லைடா, ஸ்வ்யீட் - Suite. வாயில் நுழையலேன்னா ஸ்வீட்னாவது சொல்லு. அது நிச்சயமா ஸூட்டு இல்லைடா' என்று அலறவேண்டும் போலிருக்கும். தமிழ்நாட்டில், குறிப்பாகத் திரையுலகில் தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது). (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 194) (தில்லியில் என் சர்தார்ஜி நண்பன் வீட்டில் ஒரு நாள் சாப்பிடப் போயிருந்தபோது, அவன் தந்தை 'சங்கோஜப்படாமல் சாப்பிடு' என்பதை இப்படிச்சொன்னார்: "Beta. This is your house. Eat shamelessly!") (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 195) அவர் வாழ்நாளில் 25 பிறந்தநாட்களை மட்டுமே அவரால் கொண்டாட முடிந்தது. காரணம் அவர் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர். 99 ரன்களில் அவுட்டாகும் டெண்டூல்கர் மாதிரி சதம் அடிக்க முடியாமல் ஒரு சோகமான மனிதராக தனது 99-ம் வயதில் காலமானார். (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 204) சிங் இஸ் கிங் : இவர்களிடம் இல்லாதது பாகிஸ்தான் பாஸ்மதியின் நெல் விதைகள். போட்டி காரணமாக அவைகளை நேர்வழியில் பெறமுடியாது. அரசாங்கத்தை நம்பிப்பயனில்லை. இந்திய எல்லையை ஒட்டியிருக்கும் எல்லா பஞ்சாபி விவசாயிகளும் ஒன்றுசேர்ந்து இரகசியமாக நீண்டகாலத் திட்டமொன்று தீட்டி எதிர்க்குரலே இல்லாமல் அதற்கு வேண்டிய பணத்தையும் திரட்டி முழுமுனைப்போடு ஐந்து வருடங்கள் பாடுபட்டார்கள். நாட்டில் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கொண்டுவந்த 'பசுமைப் புரட்சி' நடந்துகொண்டிருந்த காலம். ஓரிரு ஆரம்பத் தோல்விகளுக்குப்பிறகு, குறிப்பிட்ட ஒரு இரவில் இவர்கள் ஆவலோடு காத்திருந்த பாகிஸ்தானி பாஸ்மதி நெல்விதைகள் நாற்பது லாரிகளில் இந்திய எல்லைக்குள் வந்திறங்கின. Pakistani Rangers-க்கும் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் அவர்கள் 'கண்களை மூடிக்கொள்ள' கோடிக் கணக்கில் செலவழித்தார்கள். மூன்றுவருடங்களுக்கு இந்த விதைகளை விற்காமல், இந்திய எல்லையோரத்தில் மறுபயிரிட்டு வீரியமுள்ள விதைகளாகப் பல்கிப் பெருக்கினார்கள். As they say, the rest is history! இப்போது இந்தியா உலகத்திலேயே முதன்மையான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நாடு. (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 210,211) 'சிங் இஸ் கிங்' என்று முழக்கமிட்ட அபினவ் பிந்த்ராவின் தந்தை ஏ.எஸ்.பிந்த்ரா ஒரு நேர்காணலின்போது, எல்லோரையிம்போல, முதல்வருக்கும், மந்திரிகளுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கவில்லை. தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்த தன் மகன் வெற்றிக்குத் தானே காரணம் என்று ஆவணம் தொனிக்கக் கூறினார். 'அவன் மெடல் வாங்கினப்புறம் இந்தக் கூட்டம் போடறீங்களே, நேத்தெல்லாம் எங்கடா போயிருந்தீங்க?' என்பதைச் சொல்லாமல் சொன்னார். எனக்கு எட்டாவதில் படித்த சாமுவேல் ஜான்ஸனின் "All this accolade... had it been earlier, had been kind" என்ற வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது. இந்த ஆவணம்தான் 'அஸ்லி பஞ்சாபியத்' என்று பொருள்படும். அதிகார வர்க்கத்தின் காலில் விழும் கலாச்சாரம் அவர்களுக்குத் தெரியாது. அதே சமயத்தில் குசேலனாக இருக்கும் நண்பனைப் பார்க்கப்போகும்போது, அவனது ஏழைத்தந்தை காலில், 'பெஹ்ரி பென்னா ஜீ' என்று விழுந்து வணங்கவும் தவறமாட்டார்கள். ஆரம்ப காலத்தில், ஏன் இப்போதும்கூட அவர்களுக்கு மதராஸி என்றால் சற்று இளப்பம்தான். தில்லி போனபோது நான் முதலில் கற்றுக்கொண்டது பஞ்சாபி வசவுகளை எப்படிக் குரல் ஏற்ற இறக்கத்துடன் உச்சரிப்பது என்பதே. ஒரு சர்தார் பேச ஆரம்பித்தால், ஒரு வார்த்தைக்குள் இரு வசவுகளாவது நிச்சயம் இருக்கும். Most of them are unprintable! குல்தீப் சிங் எனக்கு அடிக்கடி கொடுத்த சர்ட்டிபிகேட் இது: 'ஸாலே! பத்துப் பஞ்சாபியைக் கொன்னுட்டு நீ ஒரு மதராசி பிறந்திருக்கே. பஞ்சாபி தா பாப் ஹோ, ஸ்ஸாலா!' (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 214,215) எனக்கு இதில் முன்னோடியாக இருந்தவர் "We have so many donkeys as PMs" என்று சொன்ன எழுத்தாளர் குஷ்வந்த் சிங். என் வீட்டுக்கு வந்தால் அவருக்குப் பிடித்த ஷிவாஸ் ரீகலை பேகம் அக்தர் இசையுடன் பருகுவார். மூன்றுக்குமேல் என்றுமே கிடையாது. என் முன்னாலேயே ஒருநாள் என் மனைவியைப் பார்த்து, "Jamuna, You are very beautiful. One day, I am going to elope with you!" என்று சொன்ன 94 வயதாகும் Lovable கிழட்டு ராட்சசன்! Sex, Scotch and Scholarship என்ற அவர் எழுதிய புத்தகத்தில் வரும் ஒரு வரி: I started drinking at the age of 25, I have never been drunk even once in the sixty years of drinking. (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 216) ரோஜாவின் ராஜா : ஓரமாக நின்று, சாந்தமான அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, 'இந்த உத்தமர் சில வருடங்களுக்கு முன்னால், புகழின் உச்சியிலேயே இறந்திருக்கலாமே - 1962 சீனப்போரின் அவலங்களையும், கிருஷ்ணமேனன், சீனப்பிரதமர் சூ-என்-லாய் போன்றோரின் பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர்த்திருக்கலாமே' என்று நினைக்கத் தோன்றியது. பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் எடுத்த ஒரு படத்தில் வாயில் சிகரெட்டுடன் உதட்டைப் பிதுக்கியபடி சோகமாகத் தோற்றமளிப்பார் நேருஜி. தமிழ்நாட்டின் வரைபடத்தை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? அதில் நீண்ட மூக்குடன் சிகரெட் குடிக்கும் நேரு எனக்குத் தெரிவார். சிகரெட்டாகத் தெரிவதுதான் இப்போது சில அரசியல்வாதிகளுக்கு இனிப்பாகவும், சிலருக்கு புளிப்பாகவும் இருக்கும் ராமர் பாலம்! டி.வி.யில் தினமும் வானிலை அறிக்கை படிக்கும்போது, பின்னால் இருக்கும் தமிழ்நாட்டைக் கூர்ந்து கவனித்தால், அதில் உங்களுக்கும் நேருஜி தெரியக்கூடும்! (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 227) லெனின் : "லெனின் சார், உங்களுடைய Sense of Values - ஐ நான் மதிக்கிறேன். ஆராதிக்கிறேன். ஆனாலும் ஒரு வயதுக்குமேல் நமக்கு ஓரளவு Sense of Proportion - ம் தேவையாக இருக்கிறது. அறுபது வயதான பின் நம் குழந்தைகள் ஆசைப்படுகிறார்களேன்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு விருப்பமில்லாவிட்டாலும், திருக்கடையூர் கோவிலில் உட்கார்த்தி வைக்கப்பட்டு, குடம் குடமாகத் தண்ணீர் அபிஷேகம் செய்து கொள்வதில்லையா? அதிலும் ஒரு சந்தோஷமிருக்கிறது. அரசியலில் உங்கள் வயதே ஆன சுதந்திர இந்தியா எத்தனை சமரசங்களுக்கு உட்பட்டிருக்கிறது? நமக்கெல்லாம் விழாவெடுக்க யாரும் க்யூவில் காத்துக்கொண்டிருப்பதில்லை. இந்த விழா நீங்கள் சொல்லி ஏற்பாடு செய்ததல்ல. மற்றவர்கள் மகிழ்வுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுங்களேன்!" என்று கேட்டுக் கொண்டேன். (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 284) போன மாதம் நடந்த திரு.கக்கன் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது வாழ்க்கையில் சில சம்பவங்களைக் கொண்ட ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டது. அதில் நான் கக்கனாக நடித்தேன். ஏனென்றால் திரு.கக்கனைப்போல் வாழமுடியாது, இந்தியாவிலேயே இரண்டாவது முறையாக ஒரு தமிழனுக்கு சிறந்த இயக்குநருக்கான தங்கத் தாமரை விருது 2003-ல் என் நண்பர் லெனினுக்குக் கிடைத்தது, ஊருக்கு நூறுபேர் படத்துக்காக. அந்தச் செய்தி அன்று நம் தமிழ்ச் சானல்களுக்கு முக்கியமாகப்படவேயில்லை. 'மானாட மயிலாடுவதில்' தான் அவர்களுக்கு அக்கறை. மலையாள ஏஷியாநெட் மூலம்தான் நான் செய்தியறிந்தேன் (படத்தில் நானும் தலையைக் காட்டியிருக்கிறேன்!). அதற்கான ரொக்கப்பரிசு ரூ.25000 - த்தை, படவிழாவுக்காக நாங்கள் கோவை போயிருந்தபோது, தொண்டாமுத்தூர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டார். சரி, போனால் போகட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்த விஷயம், அவர் தனக்கு ஜனாதிபதி கழுத்தில் போட்ட தங்கப் பதக்கத்தையும் கழட்டி அந்த மாணவன் கழுத்தில் போட்டதுதான்! அந்தப் பதக்கம் இப்போது சேட் காயலான் கடைக்குப் போகாமல், அந்தப் பையன் வீட்டில்தான் இருக்குமென்று நம்புவோம். (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 288,289) அன்னை தெரசா : எனக்கு அன்னை தெரசாவிடம் ஒரு தீராத மனக்குறையுண்டு. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தவருக்கு தன் மரண நேரத்தை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. ஆம், அன்னை இறந்த நாளில் தான் இளவரசி டயானாவும் பாரீசில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். எல்லா ஊடகங்களும் காமிராவைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னால் போய்விட்டன. எல்லா மலர் வளையங்களும் டயானாவுக்கே வைக்கப்பட்டன. அன்னையின் மரணம் "Mother Theresa also died" என்ற அளவில் இரண்டாம் பட்சமாகப் போய்விட்டது. இந்த விளம்பர யுகத்தில், இறக்கும்போதும் சரியான அநரம் பார்க்க வேண்டியிருக்கிறது! (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 297) சுஜாதா : சுஜாதாவின் எழுத்துலகத்தை 'நைலான் கயிறுக்கு முன்/நைலான் கயிறுக்குப்பின்' என்று பிரித்தால், நைலான் கயிறுக்குப்பின் அவரைக்கட்டவே முடியவில்லை! (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 338) இ.பா : இ.பா. அரசின் கலைமாமணி விருதை வேண்டாமென்று மறுத்தவர். தனது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி தயங்காமல் சொல்பவர். அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் முகுந்த் சிரமப்பட்டு வாங்கிக்கொடுத்த 'பச்சை அட்டையை (American Green Card) அங்கு வசிக்க தனக்குப் பிடிக்கவில்லையென்று அங்கேயே வீசி எறிந்துவிட்டு, ஆற்காட்டாரின் மின்வெட்டுகளை சந்திக்க நிரந்தரமாக சென்னை வந்தவர். (புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி : 339)

தொடர

'காளி' நமக்குச் சொன்ன கதை - சே.பிருந்தா

தமிழச்சி தங்கப்பாண்டியன்

'காளி' நமக்குச் சொன்ன கதை : (சே.பிருந்தாவின் 'மழை பற்றிய பகிர்தல்கள்', 'வீடு முழுக்க வானம்', 'மகளுக்குச் சொன்ன கதை' - கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து ஒரு பகிரல்) - தமிழச்சி தங்கபாண்டியன் "எனைச் சூழ்த்தங்கியுள்ள யாவும், என்றும் என் கவிதையில் தங்கியிருக்கும் தொலை தூரக் கடலோசை கானகப் புள்ளினங்கள் கத்தும் சத்தம் மண்டிக்கிடக்குமொரு மாயப் புதராக தன்னளவில் விழங்கொணாமல் தான் பற்றி எரிகின்ற காதல்... நம்புகின்றேன் நான் நான் பிறந்தது தீர்ப்புகளை விதிப்பதற்கன்று நேசித்தலுக்கென்றே" எனும் பாப்லோ நெரூடாவின் கவிதைபோன்றே "யாரோ விழுந்து கிடக்கையில்" ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்விகளற்று, இப்படி, அப்படி, அதனால்தான் எனும் தீர்ப்புக்களற்று, "யாரோ விழுந்து கிடக்கையில் தூக்கி விடுகின்ற யாரோவாக நானுமிருக்க விரும்புகின்றேன்", என்பவைதான் பிருந்தாவின் கவிதைகள். ஒரு கவிதைத் தொகுப்பை வெறும் பிரதியாக மட்டும் ஒருபோதும் என்னால் வாசிக்க இயலாது. அப்படியெனில் சிறுகதை, புதினம், பிற இலக்கிய வடிவங்களை? முடியும் - மற்றெல்லா இலக்கிய வகைமைகளையும் பிரதியாக, ஆசிரியரின் மரணம் எனும் பிரகடனத்துடன், என்னால் வாசித்து விமர்சிக்க முடியும். டெரிதாவின் சிதைவாக்கத்தையும் ஒரு கவிதையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கவியலும் என்பதை எனது தர்க்க மனம் ஒப்புக்கொள்கிறது. அதனை நியாயப் படுத்த, கிறிஸ்தேஃபர் பட்லரைச் சொல்வேன்: "மொழியின் எல்லாக் கட்டத்திலும் தெளிவான வெளிப்படைத் தன்மை கொண்ட ஒவ்வொரு சொல்லும் உருவகத்தன்மை உடையதாகவும் உள்ளது (ஜியோர்ஜ் எலியோட்டின் மிக மிக எதார்த்தவியல் மொழி உட்பட). தத்துவத்தையும் வரலாற்றையும் இலக்கியம் போலவும் இலக்கியத்தைத் தத்துவம், வரலாறு போலவும் வாசிக்க முடியும் (நடப்பினைச் சொல்லும் அல்லது உண்மையைச் சொல்லும் சொல்லாடல்கள் என்ற சிறப்புரிமை இவற்றிற்கு கிடையாது). நடப்புண்மை (லிடரல்) என்பதை இனி நாம் நம்பத் தேவையில்லை. (அதாவது மெய்நிலை என்பதைப் பொருள் மயக்கம் இன்றிக் குறிப்பிடுவதாகச் சொல்லும் ஒரு வகை மொழியை). ஏனென்றால் நடப்புண்மை என்று உரிமை கொண்டாடும் அனைத்தையும் மிக நெருங்கி ஆய்ந்து பார்த்தால் அவை உருவகத்தன்மை உடையவை என்பதை நிரூபிக்க முடியும்," (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 35) எனும் போது கவிதைக்கு மட்டுமென்ன சிறப்புரிமை என்பது நியாயமே. இவ்வகையில் எந்த ஒரு பிரதியையும் அடிப்படைத் தகர்ப்பு செய்து, கட்டுமானக் கலைப்பினை நிகழ்த்திவிட முடியும்தான். ஆனால் கவிதையில் இதனை எனது ஆழ்நிலை, நனவிலி மனம் ஏற்பதில்லை. தர்க்கங்களின் முகத்தில் வெதுவெதுப்பான மனித எச்சிலை உமிழ்வதன் மூலம், கவிதை இதனை தாண்டிச் செல்கிறது. ஒரு எளிய உண்மையான தரிசனத்தின் மூலம் அது தர்க்கத்தை நிர்க்கதியாக்குகிறது என நான் நம்புகின்றேன். கவிதைக்கான எந்த 'அழகியல்' & இன்னபிற சிறப்புரிமையையும், ஒரு படைப்பை, ஒரு பிரதியாக அறியும் பின்நவீனத்துவப் பார்வை வழங்குவதில்லை. அது நியாயமானதும் கூட என்றாலும், கவிதைக்கு அந்தச் சிறப்புரிமையை பகுத்தறியாது வழங்குகின்ற பயித்தியக்காரியாக இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. "கடந்தகாலம் என்பதற்கும் கதைகூறல் என்பதற்கும் இடையே ஒரு துல்லியமான தொடர்பு சாத்தியமில்லை. ஒரே நிகழ்ச்சியைப் பலவிதமான முறைகளில் நாம் விவரிக்க முடியும். சான்றுகளை நாம் எப்போதும் ஒரு இடைநிலை ஊடகம் மூலமே பெறுகிறோம், முழுத் துலக்கமானது என்று எதுவும் இல்லை. வெற்றிடங்கள், இடைவெளிகள், திரிபுகள் போன்றவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது," என்பார்கள். (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 35) கவிதை இதில் கச்சிதமாகத் தன்னைப் பொறுத்திக் கொண்டு, மற்ற வகைமைகளைவிட வெற்றிடங்களையும், இடைவெளிகளையும் வசப்படுத்துவதால் முழுக்க உள்நோக்கியதொரு அகவழிப் பயணத்தையும், அதனைச் சுண்டி இயக்குகின்ற ஒரு அனுபவக் கிளர்ச்சியினையும் தருகின்றது. பகுத்தறிவிற்கு ஒவ்வாத வேட்கை, பயித்திய மனோநிலை, உணர்வெழுச்சியின் தீர்க்கம், 'மெய்நிலை' அற்ற ஒன்றோ எனும் சந்தேகமற்று மெய்நிலையே எனும் கடப்பாட்டோடு கைப்பற்றியிருத்தல் - இவையே கவிதைக்கான எனது ஒரு சார்பு நிலைக்கான வாதங்கள். "பின்நவீனத்துவம் மற்றும் அதன் பிரச்சாரகர்கள் கூற விரும்புவது போல மொழி மெய்நிலை என்பதைக் கட்டமைக்கிறதே தவிர எடுத்துரைப்பதில்லை என்ற பார்வையை எல்லோரும் ஒன்றும் ஏற்றுக்கொள்வதில்லை," (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 168) என்பதுவும் எனக்குக் கைகொடுக்கின்றது. சே.பிருந்தாவின் மூன்று தொகுப்புகளை - (மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை) மொத்தமாகப் படித்ததில் அவரது கவிதைப் பயணம் குறித்து ஒரு அனுமானத்திற்கு மட்டுமே வர முடிந்தது. முதல் தொகுப்பிலிருந்து முற்றிலுமான பெரும் பாய்ச்சல் போலன்றி, நிதானமாக, அவசரமின்றி பயணித்தாலும், பாடுபொருள் பல்தன்மை கொண்டனவாகவும், செயல்நிலையும் மாறியிருப்பதாகவும் படுகின்றது. இது ஒரு அனுமானம் மட்டுமே. முற்றான முடிவோ அறிவிப்போ அல்ல. "நாவலின் ஒரு பாத்திரத்திற்கு என்ன பொருந்துமோ அது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்: அவர்கள் பேசவைத்த மொழியாலேயே அவர்களும்கூடப் பேசப்படுகிறார்கள். (எடுத்துக் காட்டாக, இலக்கியப் பயிற்சிப் பள்ளி) எழுத்தாளரைவிட நல்ல நிலையில் இல்லாத வாசகருக்கும்கூட இது பொருந்தும். வாசகரும்கூட மொழியின் இடைவெளிகளூடாகக் கலைத்துப் போடப்படுகிறார், குறிப்பீடுகளின் முடிவற்ற தொடர்கண்ணியில் சிக்கிக் கடைசியில் தொலைந்துபோகிறார். இந்தப் பார்வையின் படி ஒரு 'மனித இருப்பு' என்பது, ஒரு ஒருங்கிணைப்பு அல்ல. ஒரு தன்னுரிமை கொண்டதல்ல, அது தொடர்ந்த கட்டுமானத்தில் உள்ள தொடர்ந்து முரண்படக்கூடிய, எப்பொழுதும் மாற்றத்திற்குள்ளாகக்கூடிய ஒரு செயல்நிலை." (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 75,76) எனும் மேற்சொன்ன கூற்றை மெய்ப்பிப்பதாகவே உள்ளது பிருந்தாவின் "இருப்பும்". அவரது முதல் தொகுப்பான மழை பற்றிய பகிர்தல்களில் "அக்கா படிப்பது போல அம்மா சமைப்பது போல காற்றிற்கு நெற்பூக்கள் மடங்குவது போலும்" தனக்குத் தெரிந்ததைச் செய்ததாகச் சொல்கின்ற பிருந்தா கூடுதலாக மகளுக்குச் சொன்ன கதையில் "அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு, அது 'குயில் குஞ்சு' என்று தெரிந்தது தெரிந்த பிறகு "இனிமேல் நாம் சேர்ந்து வாழமுடியாது போய்விடு" என்றது. ஒரு விடியலில் குயில் குஞ்சு 'கூ' என்று கூவியது - அன்று தானொரு குயில் என்று கண்டு கொண்டது" என்று தனக்கான அடையாளத்தை தெளிவாகச் சொல்கிறார். "அம்மா சமைப்பது போல" என்பது பிற்போக்கு உவமை எனப் பெண்ணியவாதிகளால் முத்திரையிடப்படும் அபாயமிருக்கிறதே எனும்போதே, ஜான்ஸிராணியைப் பற்றிய சரித்திரம் - "ஒரு நாட்டுக்கே ராணி. குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லையா?" என்று கேட்டு "அப்பாடா - தப்பித்துவிட்டார்" என வீடு முழுக்க வானம் எனும் இரண்டாவது தொகுப்பில் பெருமூச்சு விட வைக்கிறார். முதல் தொகுப்பிற்கும் இரண்டாவதற்கும் பத்தாண்டுகள் இடைவெளி.. இரண்டாவதற்கும் இன்றைய மகளுக்குச் சொன்ன கதைக்கும் ஐந்தாண்டுகள். "வளர்ந்திருக்கிறேனா?" எனக் கேட்கிறார். அதைச் சொல்லுமளவிற்கு நான் வளரவில்லை - என்றாலும் வெகுதூரம் பயணப்பட்டு விட்டார் இந்த பதினைந்து ஆண்டுகளில். குறிப்பாக நான் வியந்து சிலாகிப்பது, பிருந்தாவின் நிதானம் தான். தமிழ்க் கவிதைப் பரப்பில் இதுவரை இவரது ஒட்டுமொத்தக் கவிதைகள் குறித்துப் பேசப்படாமல், பதியப்படாமல் போனது எனக்கு மிக வருத்தமே. சமயங்களில் சிற்சில தனிக்கவிதைகளைப் படிக்க நேர்கையில் அவற்றின் பூச்சற்ற, மென்மையாய் ஆனால் உறுதியாய் ஒன்றைச் சொல்கின்ற தொனியில் கவரப்பட்டு அவரிடம் நான் பகிர்ந்திருந்தாலும், ஒரு முழு வாசிப்பனுபவம் இப்போதுதான் வாய்த்துள்ளது. இங்கு ப.சிங்காரம் குறித்த சி.மோகனின் பின்வரும் பதிவு நினைவிற்கு வருகின்றது: "எவ்விதப் பிரகடனமோ, பிரயாசையோ இன்றி ப.சிங்காரம் வெளியுலகு அறியாமல் தன் தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த படைப்பாளி. அவருடைய படைப்புகளின் வெளிச்சித்தில்தான் இன்று அவர் புலப்பட்டுக்கொண்டிருக்கிறார். காலம், சற்று நிதானமாகவேனும், தன் பொக்கிஷங்களைச் சேகரம் செய்துகொள்ளத் தவறுவதில்லை. ஆரவாரப் பொக்குகள் வெகு சீக்கிரமாகவே தூசுகளாக மறைந்துவிடுகின்றன. காலத்தின் பார்வை, சற்றுத் தாமதமாகவே என்றாலும், தீட்சண்யமாகப் பதிந்து, ப.சிங்காரத்தின் இரு நாவல்களும் துலக்கம் பெற்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. நவீன தமிழ் இலக்கியத்தின் மகத்தான நாவல் படைப்பாளியாக ப.சிங்காரம் நிலைபெற்றிருக்கிறார்." (சி.மோகன் கட்டுரைகள் : 85) பிருந்தாவின் மூன்று தொகுப்புக்களுமே உரக்கப் பேசாதவை. முந்தைய இரண்டு தொகுப்புக்களும் அதிகம் கவனம் பெறாதவை. ஆனால் பிடிவாதமான தன்னிலை இருப்பொன்றை அழுத்தமாக முன்வைப்பவை. "தொலைவுகளைத் தன் வசம் செய்வேன் காற்றைப் பிடித்து உச்சியின் மேல்முனைக்குச் செல்வேன் அத்தனை உயரத்தையும் அங்கிருந்து பறப்பேன் - என்றெல்லாம் என்னை வியக்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மிக வழக்கமாகவே நான் நிலம் பதிய நடந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் ஆச்சர்யப் படாமல் ஒரு பறப்பு - நீலத்தைக் கிழிக்க வல்லதல்ல அது நீலத்தைக் கடக்கிறது அவ்வளவே" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த நிதானம்தான், புரிதல்தான், அழுத்தமான உறுதிதான் பிருந்தாவை கவனிக்க வைக்கிறது. "தண்டவாள நடுவே தேங்கின மழை நீரை அதிராமல் குடித்துப் போகும் ஆட்டுக் குட்டியின் அழகோடு" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த அதிராமைதான் இவரது பலமே. சந்திப்பிற்குத் தட்பவெப்பம் முக்கியமெனக் கருதும் பிருந்தாவை எனக்கு அவ்வளவு பிடிக்கிறது. Let me be a diehard romantic in this as you sound Brindha – நேற்றைக்கு இதே நேரம் நாம் சந்தித்துக் கொண்டோம் உன் அலுவலக ஓய்வறையில் வெப்பப் பெருமூச்சுகளில் தஹித்துக் கிடந்தது அறை. சுழலாத மின்விசிறியுடன் சட்டெனக் கவிழ்ந்த அமானுஷ்யத்தில் மூச்சுமுட்ட மூழ்கிப் போனேன் மனிதர்கள் வித்யாசமாய்ப் போனார்கள் நீயும் கூட தாங்கவே முடியாமல் வந்தனம் சொல்லிப் பிரிந்தேன் அடுத்த சந்திப்பேனும் இளங்காலைக் குளிரில் பூக்களின் மலர்வோடு அமைய வேண்டும் நமது கனவுகளைப் பகிரும் விதமாய். (மழை பற்றிய பகிர்தல்கள்) ஏனெனில் எனக்கு ஒரு கவிதைத் தொகுப்பை அதிகாலை அல்லது அந்திமாலையில் மட்டுமே வாசிக்கப் பிடிக்கும். பிற இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுகையில் பங்களிப்பதை விட, ஒரு கவிதை தருகின்ற அனுபவத்தினைப் புறச் சூழல் பெருமளவு தகவமைக்கிறது என நான் நம்புகிறேன். இசைவான தனிமை, உடலினை இம்சிக்காத மிதமான தட்பவெப்பம், நிசப்தம் - இவை என்னை ஒரு கவிதைக்குள் ருசிக்கத் தள்ளிவிடும் தாய்முலை. "உறுத்தாமல் உன் தனிமைகளை பங்கிட விரும்புகிறேன் உன்னோடு உன் சுவாசம் போல (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த உறுத்தாமைதான், "இலக்கியம் பற்றியும் பெண்ணியம் குறித்தும் உரத்துச் சிந்தித்த உன் பேச்சு ரஸிக்கவில்லை அதைவிட இலைகள் அசைவது மிகப் பிடித்திருக்கிறது" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த யதார்த்தம்தான், "ஜன்னல் கம்பியில் ஜில்லென்று கன்னம் பதிய மழை பார்க்கையில் கண்ணில் இடறின என்பற்றிய லஜ்ஜையற்று பறந்தபடி புணர்கிற பட்டாம் பூச்சிகள். மறுபடி என்று வாய்க்குமோ இதுபோல மழையும் இயல்பான சரசமும் (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த நுட்பமான ரசித்தல் தான் பிருந்தாவின் முதல் தொகுப்பை (மழை பற்றிய பகிர்தல்கள்) என்னைக் கவனிக்கச் செய்தது. அவரது வீடு முழுக்க வானம் புத்தகத்தில் அவர் குறித்த தன் விவரப் பதிவில் 1976 மழை (நவம்பர்) மாதம் இரண்டாம் நாள் பிறந்தவர் எனும் ஒற்றை வரிக் குறிப்பே கவித்துவமாக இருந்தது. அதற்கு பிருந்தாவிற்கொரு மழை முத்தம். தன்னுரையில், "எது கவிதையென்று இப்பவரை தெரியாது" வில் அந்த இப்பவரை சட்டென்று அவரோடு என்னை ஒட்ட வைத்தது. இந்தப் பேச்சு வழக்குச் சொல் அவரது கவிதைகளிலும் ஊடுறுவி வருவதுண்டு. அந்த "இப்பவரையைப்" பிடித்துக்கொண்டு "வானத்திலிருந்து நீண்டு கிடந்த ஒற்றையடிப்பதை" வீடு முழுக்க வியாபித்ததை துளித்துளியாகப் பருகினேன். ஒரு அற்புத அனுபவக் கணத்தை அடைய பிருந்தாவிற்கு மழை, வண்ணத்துப்பூச்சி, குழந்தை, காற்று, மரம், பறவை, ஒற்றை மேகம், நட்சத்திரங்கள், ஆமை ஒடு, சாலை, காதல், பிரிவு, சந்திப்பு - இப்படி எல்லாமுமிருக்கின்றன. மேற்சொன்னவற்றையெல்லாம் அவர் அன்பின் உள்ளங்கைப் பொதிவில் ஏந்தி, ஒரு ஆழ் முத்தத்தின் வெதுவெதுப்புடன், தனிமையின் தொப்பூள் கொடி சுற்றி நமக்குத் தருகிறார். "புரிந்து கொள்ளேன்" எனும் தவிப்பும், "பற்றிக் கொள்ளேன்" எனும் தகிப்பும், "பகிர்ந்து கொள்ளேன்" எனும் கெஞ்சலும் இருந்தாலும், "இருள் கவியும் மாலையில் கூடடைந்து விடும் பறவையின் சுதந்திரம். நான் காற்றாக விரும்புகிறேன்" (வீடு முழுக்க வானம்) எனும் தன்னிலை உறுதிதான், அந்த 'அகமி' தான் பிருந்தாவின் உள்ளொளி, தன் தேர்வு. "காதலைச் சொல்லத்தான் வந்தேன் மரம் சிலிர்த்து இலைகளசைவதில் லயித்து விட்டேன். இரண்டும் சாத்யமில்லை - காதலைச் சொல் கவிதையை மற (வீடு முழுக்க வானம்) என்பதில் கவிதையைக் காதலிக்கின்ற பிருந்தா என்றுமே காதலைச் சொல்லமாட்டார் எனப் பிடிபடுகின்றது. இத்தொகுப்பில் முத்தம், காதல், பிரிவு, திகட்டத் திகட்ட அன்பு, வாழ்வு, மரணம், தாய்மை எல்லாமும் இருக்கிறது. சிலவற்றில் அற்புதமான கவிதையாக, சிலவற்றில் வெறும் உணர்வாக மட்டுமே! படித்தவுடன், ரஷ்யக் கவிஞர் மரீனா ஸ்வெட்டயேவாவின், "என்னால் என்ன செய்யமுடியும் இவ்வளவு அபரிமிதங்களுடன் ஒரு அளவிடப்பட்ட உலகத்தில்" எனும் கேள்வி நினைவிற்கு வந்தது. பிருந்தாவிற்கு நாம் அசட்டையாகக் கடக்கின்ற ஒரு நிகழ்வு, ஒரு நிமிடம், ஒரு உதாசீனம், ஒரு புன்னகை ஏன், முகப்புத்தகமே கூட கவிதைக்கான அனுபவத்தைக் கொடுத்து விடுகின்றது. "கூழாங்கற்கள் வசப்படுத்த முடியாதவை. இறுதிவரை அவை நம்மைப் பார்க்கும் சாந்தமான மற்றும் தெள்ளிய கண்ணுடன்" என்பது போல பிருந்தாவின் கவிதைகள் சாந்தமான, தெள்ளிய கண்ணுடையவை - அவற்றின் விவரிப்பான உரைநடை சமயங்களில் அயர்ச்சி தந்தாலும், ஒரு மினுக்கம், ஒரு ஊவாமுள் வலி அதனுள் ஒரு வரியிலிருந்து எட்டிப் பார்க்கிறதல்லவா - அதுபோதும் எனது ஈர்ப்பிற்கும், லயிப்பிற்கும். மகளுக்குச் சொன்ன கதை கவிதைகளுக்கு வருவோம். பெரும்பான்மை உரைநடைக் கவிதைகள் தான். ஆனால் அவற்றில் சிலவற்றில் 'அட' என்று அள்ளி வைத்துக் கொள்ளத் தோன்றும் கவி வரிகள் உண்டு எனக்கு. "பசலையில் இளைத்த உடம்பு பற்றிதான் இலக்கியங்கள் பேசுகின்றன டிப்ரஷனில் ஊதி வெடிக்கத் தயாரான உடல்களை அவை சந்தித்ததில்லையோ". மேற்சுட்டியதில் உள்ளடக்கம் ஒரு கவிதைக்கான பொறிதான் - ஆனால் வெறும் உரைநடைத்தனமான கேள்வி வடிவம் அதன் தகிப்பைக் குறைத்து விடுகிறதல்லவா? இதை விட, "வெறும் சிலைகளால் ஆனதல்ல இவ்வுலகம் அது மலைகள் நிரம்பியது" (மகளுக்குச் சொன்ன கதை) எனும் அனுபவ வீச்சு கவிதையாயிருக்கின்றது எனக்கு. "ஒரு தேரை நிறுத்துவது போலக் கவிதையை எங்கே நிறுத்தவேண்டுமென ஒரு தேர்ந்த கவிஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என கலாப்ரியா சொன்னதாக நினைவு. "ஒரு அலைபேசி எண்ணைத் தொலைப்பது ஒரு மனிதரைத் தொலைத்தாகிறது என்னைத் தொலைக்கிறாய்" (மகளுக்குச் சொன்ன கதை) மேற்சுட்டியதில், 'என்னைத் தொலைக்கிறாய்' என்பது ஆறாவது விரல். கவிதையின் ஐவிரல் "ஒரு மனிதரைத் தொலைத்தாயிற்று" என்பதோடு முடிந்துவிடுகிறது என்பது நாமறிந்ததுதான் - ஆனால், அந்த நிறுத்துதலை நிர்ணயிக்க நாம் யார் - எது அதன் எடைகல் என்பதில் இன்றுவரை தெளிவிருக்கிறதா என்ன? பூமியெல்லாம் மகளுக்கு என்றொரு கவிதை. .... நிலவை - தேயும் தினங்கள் எனக்கென்றும் வளரும் தினங்கள் அவளுக்கென்றும் ஒப்பந்தித்தாள் இருந்தாலும் கூட நிலா இல்லாத தினம் யாருக்கென்று முடியா வழக்கொன்று நடந்து கொண்டிருக்கிறது. என்னைக் கேட்டால் இறுதி வரியை "நிலா இல்லாத தினம் யாருக்காம்?" என்று முடித்திருப்பேன். அந்த "யாருக்காவில்" அம்மாவும் மகளாயிருப்பாள். ஆனால், பிருந்தாவும் நானும் வேறு வேறு அம்மாக்கள், வெவ்வேறு அனுபவப் பேறு பெறுபவர்கள். நான் எனது மகளோடு அந்த 'யாருக்காமில்' ஐக்கியமாகி நின்று விட்டிருக்கலாம். பிருந்தாவோ இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் வழக்காடிக் கொண்டிருக்கலாம். இதில் இந்த அம்மா, எப்படி அந்த அம்மாவைக் 'கவிதை' என்றால் அதை நீங்கள் அங்கே அப்படி, அந்த வரியோடு நிறுத்தியிருக்க வேண்டுமெனச் சொல்ல முடியும்? பின்வரும் இக்கவிதை எனக்கு மிகப் பிடித்த ஒன்று பறவைகள் ஒருபோதும் நடப்பது குறித்து யோசிப்பது இல்லை மரங்கள் மலைகள் இடம் பெயர்வதில்லை நதிகளுக்கு யார்மீதும் புகார்களில்லை நிலவு சூரியன் கிரமம் தவறுவதில்லை கடிகாரம் சலிப்பதில்லை ஊஞ்சலாடும்போது உத்தேசமாக பறவை - நீரில் மீன்- மழையில் மரம்- காட்டில் சிறு பூவென இந்த வாழ்க்கையின் வண்ணத்துப் பூச்சி நான் ! (மகளுக்குச் சொன்ன கதை) தத்தமது இயல்பில் தாமிருப்பது - அது குறித்தான புகார்களற்று வாழ்வைக் கொண்டாடும் தனிமனித மனம் தனதனுபவத்தைப் பொதுமைப்படுத்துமொரு அற்புதம் மேற்சொன்ன கவிதை. "காட்டில் சிறு பூ" என்று கவிதை முடிந்திருந்தாலே போதுமானதுதான். "இந்த வாழ்க்கையின் வண்ணத்துப் பூச்சி நான்!" இன்னுமொரு ஆறாவது விரல் தான் - ஆனால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே. அது மிகையுணர்வு, இவ்வகை அறிவித்தல்கள் கவிதையல்ல என்றெல்லாம் சொல்லலாம்தான். ஆனால், பயனற்றது என்பதற்காக ஆறாவது விரலை அறுவைச் சிகிச்சை செய்ய விமர்சகனுக்குச் சிறப்புரிமை உண்டா என்ன? இவ்வகை விளித்தல்களை, ஏற்றுக்கொள்ளலைத், தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்று வரையறுத்த Literary Criticism, Shelly இன் மேலைக்காற்றிற்கு (ODE To West Wind) எனும் கவிதையைச் சிறந்ததென்று கொண்டாடுகிறதே? எனக்கு, "நான் போராளி, புரட்சிக்காரி, அந்த வாதி, இந்த இசத்துக்காரி" என்றெல்லாம் முழக்கமிடாமல், ஒரு சொட்டு மிகையுணர்வுடன், பரவச வண்ணம் பூசிக் கொள்கின்ற இந்த வண்ணத்துப் பூச்சிக்காரியை, பகுத்தறிவின் திரைகளற்றுக் கட்டிப் பிடித்து, "அப்படியா, ததாஸ்து" என்று சொல்லத் தோன்றுகிறது. வாசக மனம் vs விமர்சகப் பார்வை எனும் சதுரங்க ஆட்டத்தில் கவிதையைப் பொறுத்தவரை முன்னதே எனக்குப் பிரேமம், உத்தமம், உசிதம். கொஞ்சம் வளவளப்பான விமர்சகராகவே இருந்தாலும் பாதகமில்லை - தேர்ந்த வாசகராக, ரசிகனாக இருப்பது போதுமெனக்கு. ஒரு தனிமனித அனுபவத்தின் உண்மை, உலகளாவிய ஒன்றாகப் பொதுமைப்படுத்தப்படும் ரசவாதத்தில் நடை, வடிவம், உத்தி முதலியவற்றைச் சிலாகிக்கும் கறார் விமர்சகனகாக மட்டுமே கவிதையில் நானிருக்க முடியாது. ஒரு வாசகனாக, ரசிகனாக, ஒரு நேர்மையான, வாழ்வின் ஒரு உயிர்க்கீற்றை உணரக் கொடுக்கும் சில வரிகளின் உபாசகனாக, அவற்றைச் சிருஷ்டித்த கரங்களுக்கு முத்தமிடுபவளாக இருப்பதில் மகிழ்வெனக்கு. அவ்வகையில் பிருந்தாவின் மகளுக்குச் சொன்ன கவிதை தொகுப்பு எனக்குப் பல அனுபவ இழைகளின் நயத்தைக் கொடுத்த ஒன்று. உதாரணத்திற்கு அவளின் கேள்விகள் நூதனமானவை எனத் தொடங்கும் கவிதை. - ரயிலை யார் கழுவுவார்கள் - பாசிபடர் குளத்தை எப்படிச் சுத்தம் செய்வது - ரோட்டோர சிறுமி ஏன் புத்தகம் விற்கிறாள் ..... - சோறு சாப்பிட்டால் வயிறுதானே வளரணும் கையும் காலும் எப்படி வளருகிறது... இந்தக் கவிதை அவளின் முடிவுறாக் கேள்விகளோடே இப்படி முடிகிறது - அவளின் அப்பா ஏன் வீட்டுக்கே வருவதில்லை? சாமிக்குப் பிரியமானவர்களை தன்னுடன் அழைத்துக் கொள்வார் என்றால் நாமெல்லாம் சாமிக்குப் பிடிக்காதவர்களா? (மகளுக்குச் சொன்ன கதை) பிருந்தாவின் மேற்சொன்ன கவிதையைப் படித்தபோது நானடைந்த அனுபவக் கிளர்ச்சியைப் பின்வரும் ஷான்டோராவின் கவிதையொன்றில் வெகுகாலத்திற்கு முன்பே நான் உணர்ந்ததுண்டு. உலகெங்கும் உள்ள மகள்கள் அனைவருக்குமான கேள்விகள் தான் - இதில் அம்மாவின் பதிலொன்றைச் சொல்லும் கவிதையொன்று. நதி: அம்மா, நதி ஏன் சிரிக்கிறது? காரணம் சூரியன் நதியைக் கிச்சுகிச்சு மூட்டுவதால், அம்மா, நதி ஏன் பாடுகிறது? காரணம் ஸ்கைலார்க் பறவை நதியின் குரலைப் புகழ்ந்தது. அம்மா, நதி ஏன் ஜில்லென்றிருக்கிறது? அது ஒரு காலத்தில் தான் பனியால் காதலிக்கப்பட்டதை நினைத்துக் கொள்கிறது. அம்மா, நதிக்கு என்ன வயது? என்றென்றும் இளமையுடைய வசந்தகாலத்தின் அதே வயதுதான் அதற்கும். அம்மா, நதி ஏன் என்றுமே ஓய்வெடுப்பதில்லை? நல்லது, கடல் தாய் நதி வீட்டுக்கு வரக் காத்துக் கொண்டிருப்பதுதான் காரணம். (ஷண்டாரோ தனிக்காவா(1931- ) (சமககால உலகக் கவிதை - பிரம்மராஜன் : 468 , 469) மேற்சொன்ன கவிதைக்குச் சற்றும் குறைந்ததன்று பிருந்தாவின் கவிதையும். சற்று உறுத்தலாக, "இந்தக் கவிதை அவளின் முடிவுறாக் கேள்விகளோடே இப்படி முடிகிறது -" எனும் வரி தேவையற்று இடறுகின்றது. அதனாலென்ன 'பரவாயில்லை' எனக் கடக்கவுமுடிகிறதென்பதால் எனக்கு, இது ஒரு சிறந்த கவிதைதான். சமயங்களில் வடிவமும், உணர்வுநிலையும் ஜாடிக்கு மூடியெனப் பொருந்தாதுதான் - ஆனால் அப்படிப் பொருந்தியிருக்கிறதென்பதற்குச் சான்றாகப் பல கவிதைகளை பிருந்தாவின் இத் தொகுப்பில் என்னால் இனங்கான முடிந்தது. உதாரணத்திற்கு, முத்தம் என்பது வெறும் முத்தமாகமட்டுமில்லை என உணர்த்தும் பல கவிதைகள். ஒரு படிமத்தை , ஒரு சொட்டென எடுத்து, நீவி விட்டு, மெல்ல விகசித்துப் பறக்க விடுகின்ற செறிவும் இவருக்குக் கூடி வந்துள்ளமைக்கு பின் வரும் கவிதையைச் சுட்டலாம். நீந்திக் கடப்பதோ பறந்து செல்வதென்பதோ இயலாத இந்த இரவை காகிதம் போல எடுத்து மடக்கி கப்பல் செய்து நீரில் மிதக்க விட்டு பாதி கிழித்து பறவையாக்கி வானில் பறக்கவிட்டு அதிலும் மிச்சத்தில் ஒரு கவிதை யெழுதி என்ன செய்தும் தீராமல் இந்த இருள் ......... இந்த தனிமை ........ இந்த மரணம் ....... (மகளுக்குச் சொன்ன கதை) அவை கவிதைக்கான உத்தி எனத் தெரியாமலேயே (பிருந்தாவிற்கும் நகாசு வேலைக்கும் வெகு தூரம் - அவரது 'நட்பூக்களை'க் கூட 'குரங்காட்டி வித்தையாக' அல்ல, ஒரு குழந்தமைக் கிண்டல் தொனி என்று தான் நானுணர்ந்தேன் - போலவே அவரது "உபரி முத்தத்தில் / வெளிப்படுகிறது / உன் உபரி அன்பு / " எனும் வரிகளும். இந்த வரிகளை குழந்தமையற்ற பிருந்தா ஒருபோதும் வெவ்வேறு அர்த்த நிழல்களின் பிரக்ஞையற்று எழுத இயலாது) உருவகங்களும், உவமைகளும் இலகுவாக ஊடுபாவுகின்ற வரிகளுமுண்டு சில கவிதைகளில். இத்தனை தூரத்தில் அன்பு மனது என 'கைகாட்டி'கொண்டு சொல்ல முடிந்தால் ... துக்கத்தையெல்லாம் கடுங்காப்பி ஆக்கி கொட்டிக் கவிழ்த்து மகிழ்வை யெல்லாம் தேநீராகக் குடிக்க இயலுமெனில் .... (மகளுக்குச் சொன்ன கதை) எனும் உருவகக் கவிதையும், காமத்தைப் பெருந்திணைக் காதல் குப்பிகளாக்கும் உவமைக் கவிதையும், பெருங்காற்று மழையில் ஒரு தீபமேற்றுவது - மகள்களுக்கு அம்மாவாயிருப்பது, கடவுளைப் போல அறியப்படாதது நம் தொலைவு எனும் உவமைகளும், தேர்ந்த கவிதைச் செறிவிற்கான அடையாளமெனப் பட்டாலும், எனக்கு, அழைத்ததும் அழைக்க மறந்ததும் எப்போதும் உன் ஞாபகத்திலில்லை அத்தனை எளிதில்லை - ஒரு அலைபேசி அழைப்பைப் பற்றிக் கொண்டு அன்பின் வழி நடத்தல் அன்பின் மறுதலிப்பை அன்போடு ஏற்றல் பசித்த கொடிய மிருகத்தை புன்னகைக்க வற்புறுத்துதல் (மகளுக்குச் சொன்ன கதை) "நதி மீதொரு சருகு என்னவானதென மரமும் நினைக்கவில்லை நதியும் நிற்கவில்லை" "பாம்பு குடியிருந்தாலும் சந்தனம் குளிர் தருவே - கபீர் வாக்கு நீ பாம்பா சந்தனமரமா சொல்லென் அன்பின் குரலே" (மகளுக்குச் சொன்ன கதை) எனும் நேரடியான மொழிபேசுகின்ற வெகுளிமனக் கவிதைகளும் பிடிக்கின்றன. "உண்ணச் செரிக்காத தனிமையை தின்னத் தெடங்கினேன்" ..... "ஒரு கண்ணிலிருந்து மறுகண்ணின் தூரம் வாழ்விற்கும் மரணத்திற்கும்" "அது யார் மனதையும் அசைத்து விடுகிற அழுகை - அசையாது கிடக்கிற மரணம்" "உதிரும் அத்தனை பூக்களையுமா மரம் நினைவு கொள்ளும்?" "பழகிய மிருகங்களிடம் பதற்றமுறுவதில்லை மனது. பழகிய என் தனிமையும் புதிதாக இருக்கிறதுன் பிரிவில்" எனும் வாழ்வின் மெய்மையை ஒரு கணம் திடுக்குற்று உணரச் செய்கின்ற சாதுர்ய மொழிக் கவிதைகளும் - என்னைக் கவர்கின்றன. என்றாலும், "தானாக மனங் குளிர்ந்து என்று வரமருளுமோ என் சாமி" எனும் கள்ளமற்ற வெள்ளந்திக் குரல் - அதன் தேடல், ஒப்புக்கொடுத்தல், அன்பை அன்பென்ற சொல்லால் மட்டுமே சுட்டிக் கொட்டித் தீருமதன் தாபம், பலர் நடுவே உணருமதன் தனிமை, பெரிதான தத்துவ விசாரமற்ற சமன்பட்ட தொனி, கேள்விகளின் குழந்தைமையைக் குலைக்காத அதன் வியப்பு, மரணத்தின் நித்தியத்தை அநித்ய வாழ்வின் கொண்டாட்டதினால் ஊடறுத்துச் செல்லும் அதன் இலகு - இக்குரல் மட்டுமே மிக முக்கியமாகப் படுகின்றது. தன்னளவில் இக்குரலின் கட்டளைக்கு மிக நேர்மையாக, உண்மை அனுபவத்தின் ஒரு கீற்றுத் தரிசனத்தை இக்கவிதைகள் சிலவற்றில் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் பிருந்தா. ஓரிரு குறைகளுண்டு - நம்பகத்தன்மை பிறழ்ந்தபோது எனச் சற்றும் 'பிருந்தாத்தனமில்லாத' மொழிக் கவிதை அவசியமற்றது. ஒரு தேய்ந்த மொழிநடையிலான அக்கவிதை இவரது வெளிப்பாட்டிற்கு மிக அந்நியமானது. தன்னைப் பிறரது தோளுக்கு மேல்நிறுத்தி, 'இது இப்படி ஆகிவிடலாமென' ஒரு போதும் பிருந்தாவின் கவிதைகள் இதுவரை உபதேசித்ததில்லை. இக்கவிதையின் அத்தொனி கடவாய்ப் பல் அகப்பட்ட கல் போன்றதொரு ஒவ்வாமை. தோளில் கைகூடப் போடத் தயங்குகின்ற, ஆனால் எப்போதும் போடுவதற்குத் தயாராக இருக்கின்ற அந்த பிருந்தாவை மேற்சொன்ன கவிதையில் நான் காணவில்லை. உரையாடல் தொனியோடு நீண்டு செல்கின்ற கவிதைகளை விட, இரண்டு அல்லது நான்கு வரிக் கவிதைகளில்தான் பிருந்தாவின் ஆன்மா கூர்ந்து ஒளிர்கின்றது. இருளில் கூடுதலாகத் துலங்கி ஊடறுக்கும் விலங்கின் கண்களையொத்த தீர்க்கம் அவ்வகைக் கவிதைகளில் வடிவத்தோடு பொருந்திய உணர்வின் வார்ப்பாக மெருகேறி உள்ளதாக நான் உணர்கிறேன். அவ்வாறே உள்வாங்கவும் செய்கிறேன். ஆனால், பிருந்தா, எவ்வகைமையில், எத்தொனியோடு பயணிப்பதென்பதை ஒரு 'தன்னிலை'யாக நீங்கள் முடிவெடுங்கள். 'கவிஞன்' என அடையாளப் படுத்தப்படுவதை விட, ஒரு 'தன்னிலை'யாக உங்களுக்குப் பிடித்த, சரியெனப் படுகின்ற உரையாடலை முன்னெடுங்கள். "'அடையாளம்' என்பது ஒருமித்த தன்மை; அது ஒன்றுதான் அதற்குப் பொருள்; மாறாக, தன்னிலைகள் தங்களுக்குள்ளேயே கூட வித்யாசப்பட்டு இருக்க முடியும்". பேச்சுவராத ஒருவனைக் கவிதைக்குத் தாசனாக்கிய காளிக்கு "தானாக மனங்குளிர்ந்து என்று வரமருளுமோ என் சாமி" என வெள்ளந்தியாகக் கேட்கும் உங்களைப் பிடிக்கும். நிச்சயமாக அவளுக்குப் பிடித்த கள்ளமற்ற பிள்ளை நீங்கள். விமர்சனங்களின் வழிகாட்டுதலின் படி 'வீணைவாசிக்க' முயற்சிப்பதைவிட 'கொட்டாங்கச்சி' தானெனக்கு எனும் தன்னிலை ஓர்மம் முக்கியம். விமர்சனம் கவிதைக்கு வழிகாட்டியா அல்லது கவிதை விமர்சனத்திற்குக் கைகாட்டியா எனக் காலந்தோறும் தொடர்கின்ற கேள்விக்கு ஒரு பொம்மை சொன்ன பதில் எனக்கு நீதி போதனை: கேதரின் பெல்ஸியின் 'பின் அமைப்பியல்' (மிகச் சுருக்கமான அறிமுகம்) (தமிழில் : அழகரசன்) எனும் புத்தகத்தின் தொடக்கத்தில் ஒரு குறிப்பு வருகின்றது. ஆங்கில எழுத்தாளர் லூயி கரோலின் புதினமான 'Through the looking glass' -இல் ஹம்பி டம்டி என்ற பொம்மைக்கும், சிறுமி ஆலிஸூக்கும், "பொருள் பற்றி நடக்கும் விவாதத்தில் யார் சொல்வது சரி" எனக் கேட்கின்ற பெல்ஸி, இருவருக்குமான அந்த உரையாடலின் ஒரு பகுதியினையும் மேற்கோள் காட்டுகிறார்: "நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது, அதற்கு நான் எப்படிப் பொருள் கொள்ள விரும்புகிறேனோ அதைத்தான் குறிக்கிறது. அதற்குக் கொஞ்சமும் கூடவோ குறையவோ அல்ல' என்றது ஹம்டி டம்டி எரிச்சலுடன். 'அப்படிச் சொற்களைப் பல பொருள் குறிக்கச் செய்யமுடியுமா என்பதுதான் கேள்வி' - ஆலிஸ் சொன்னாள். 'யார் யாருக்கு எஜமானாக இருப்பது என்பதுதான் இப்போது பிரச்சினை' என்று ஹம்டி டம்டி சொன்னது." இந்த எஜமானப் பிரச்சனையைக் கிடப்பில் போட்டுவிட்டுத், தன் போக்கில் பலூனூதிச் செல்லும் குழந்தமையின் கண்களோடு கவிதையில் பயணியுங்கள். ஊமையாயிருந்த கவிமனதின் உரையாடலைப் புரிந்து கொண்ட காட்டுப் பெண் காளி உங்கள் பலூன்களுக்கும் காற்றடைத்துத் தருவாள். மகளுக்குச் சொன்ன கதை தவிர்த்தும் இன்னும் பேச எவ்வளவோ இருக்கலாம் - உங்களுக்கும் எனக்கும். அவற்றைப் பகிர்ந்து கொள்ள, அதற்கான மழை, திரண்டு உருக்கொள்ள இனியும் சில ஆண்டுகளாகலாம். அதுவரை 'உரையாடாமல்', சும்மா பேசிக் கொண்டிருங்கள். ஏனெனில், "பேசுவது என்பது - எல்லாவற்றிற்கும் மேலாக - மற்றவர்களிடம் பேசுவது தான்". கவிதைக்கு அது போதும். உதவிய நூல்கள் : • பின்நவீனத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - கிறிஸ்தோஃபர் பட்லர், தமிழில் – பிரேம் • சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன் • சமகால உலகக் கவிதைகள் – பிரம்மராஜன் • பின் அமைப்பியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - கேதரின் பெல்ஸி, தமிழில் - அழகரசன்)

தொடர

சொல்லில் உயிர்க்கும் ப்ரெய்லி நகரம் - இளங்கோவன் புத்தக வெளியீடு பேச்சு

தமிழச்சி தங்கப்பாண்டியன்

சொல்லில் உயிர்க்கும் ப்ரெய்லி நகரம் - தமிழச்சி தங்கபாண்டியன் படிகளின் மீதிருக்கும் குழந்தையிடம் நீங்கள் பேச முடியாது படிகளின் மீதிருக்கும் குழந்தை காரணமாக அழ மட்டுமே முடியும் உங்களால் படிகளின் மீதிருக்கும் குழந்தைக்கு எதையும் நீங்கள் தர முடியாது படிகளின் மீதிருக்கும் குழந்தை தன்னந்தனியாய்... ஆனால் அது பெயரற்றது - எனவே நீங்கள் அதைக் கூப்பிட முடியாது நீங்கள் மாத்திரமே கூப்பிடப்படுவீர்கள் ஷண்டாரோ தனிக்காவா(1931- ) (சமககால உலகக் கவிதை (கவிதைகள்) - பிரம்மராஜன் : 462) ஒரு கவிதையும் அப்படித்தான். அதனோடு நீங்கள் உங்கள் மொழியில் பேச முடியாது; அதற்குப் பிடிமானமாக எதைத் தருவீர்கள் - அது தனித்திருக்கும் குப்புற விழுதலின் அபாயத்தோடும், சமநிலை தவறாத சாத்தியத்தோடும்; உண்மையில், அதுவும் பெயரற்றது, பெயர் வேண்டாதது, பெயரிடமுடியாததும்கூட; அதுவாக வேண்டி விரும்பி உங்களை அழைக்கலாம்; நீங்கள் அதனைக் கூப்பிட முடியாது. ப்ரெய்லியில் உறைந்திருக்கும் நகரம் ஒரு சில இளக்கங்களில் என்னை அழைத்ததை உங்களிடம் பகிர வந்திருக்கிறேன். “அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிதை இதழ் Choice. அது தன் 7+8ஆம் இதழ்களை ஒரு பெரும் தொகுப்பாக வெளியிட்டது(1972). அறியப்பட்டவர், புதியவர், ஆசிரியர், அவரது மாணவர், அமெரிக்கர், அல்லாதவர் எனும் வேறுபாடுகளற்றுக் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டன.” (தமிழ்நாடன் - உலகக் கவிதைகள்:12) இதுவரை அச்சு எழுத்தில் புத்தக வடிவில் அறியப்படாதவர், ஆனால் தகுதியானவர், புதியவர், என்கிற அடையாளம் மட்டுமே உடைய இளங்கோவின் இத்தொகுப்பு பல புதுமைகளைத் தாங்கி, மதிப்பிற்குரிய கவிஞர்.சுகுமாறன் சொன்னது போல, எமது பொறாமையின் வெதுவெதுப்போடு வெளி வந்துள்ளது. பல கவிதை நூல்கள் வெவ்வேறு வித்யாசமான முயற்சிகளோடு வெளி வந்திருக்கின்றன. தன்னை ஆகர்சித்த, வியப்புறவைத்த வடிவமைப்புக்கள் குறித்து திரு.சுகுமாறன் பட்டியல் ஒன்றை மிக அழகாக முன்னுரையில் தந்திருக்கின்றார். என்னை மிகக் கவர்ந்த முயற்சி ஒன்றுண்டு - ராபர்ட்டோ யூவாரோஸ் (1925-1995) “யூவாரோயின் முதல் கவிதைத் தொகுதி 1958 Vertical Poetry என்ற தலைப்பில் வெளியானது. 1963 இல் வெளிவந்த இரண்டாவது தொகுதி Second Vertical Poetry என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகு இரண்டு தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன - எண் வரிசை மாத்திரம் கூடுதலாக்கப்பட்டு, மற்றபடி தலைப்பு ஒன்றேதான். ஒரு வாழ்நாளில் அடுத்தடுத்த படைப்புகள்போல அவருடைய எந்தக் கவிதைக்கும் தலைப்பு கிடையாது, வெறும் எண்கள் மாத்திரமே தரப்பட்டுள்ளன." (சமககால உலகக் கவிதை - பிரம்மராஜன் : 324 - 325) வாழ்வே நீண்டதொரு, பகுக்கவியலாக் கவிதை எனும் குறியீடாகப் பட்டது அவரது மேற்சொன்ன முயற்சி. மேலிருந்து கீழாக அல்லாமல், கீழிருந்து மேலாக, பக்கவாட்டிலிருந்து, குறுக்கும் நெடுக்குமாக - இப்படிப் பல உத்திகள், உலகளவில் பல கவிதைத் தொகுப்புகளிலே பரிட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழிலக்கியச் சூழலில் தரமானதொரு பதிப்பைத் தன் கைச்செலவின்றி வெளிக்கொணர்வதே கானல் நீர் என்கையில், ஒரு தனித்த புல்டோஸர் தன் மலையுடன் போரிடுகிறது ஒரு கவிஞனைப் போல, (சமககால உலகக் கவிதை - பிரம்மராஜன் : 364) என்பது போலத் தரமாகப் பிரசுரிப்பது கடினமென்கையில், இளங்கோவிற்குக் கிடைத்த இந்த வாய்ப்பு அவரது கவிதைகளுக்குக்கான பரிசு என்றே சொல்ல வேண்டும். மொழியில் கடைசியான கண்ணீர்த் துளி இருக்குமெனில் அது எனது கோப்பைக்குள் விழட்டும். (பாப்லோ நெருதா கவிதைகள்: ப.103) (கவிதையின் அழியாத காதலன் - பா.இரவிக்குமார்) என்பது போல இதுவரை பிரசுரம் காணாத இக் கவிஞனின் துளியைத் தனது கோப்பைக்குள் ஏந்திக் கொண்ட பதிப்பாளர் திரு.சீனிவாசனுக்கு எனது பாராட்டுக்கள். உணர்ச்சிவயப்படுதலின் நிறங்களை என்ன செய்வதென்று உலகின் ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விட பிஞ்சு விரல்களுக்குத் தெரிந்திருக்கிறது. (ப்ரெய்லியில் உறைந்திருக்கும் நகரம்) ஆச்சர்யமான ஒற்றுமை பாருங்கள் தூரிகை ஏந்துகிற பிஞ்சுவிரல் இந்தப் பதிப்பாளருடையது! 'மெய்ப்பொருள்' காண்பது அறிவை மட்டுமல்ல கவிதையின் ஊற்றையும் கூடத்தான், என்று மெய்ப்பித்திருக்கிறார். ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கியவர்களில் ஒருவரான கேவர் 19ஆம் நூற்றாண்டில் கூறினார்: 'நமது நாட்டுக்குச் செய்ததையெல்லாம் நமக்குச் செய்துகொண்டால் என்ன வகையான அயோக்கியர்கள் நாமெல்லாம்" (அரசியல்-கென்னத் மினோக்: 76,77) தனக்கே தான் செய்து கொள்ளாதைக் கூட இளங்கோவிற்கு, சீனிவாசன் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால், அதற்கான யோக்யத்தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்! மனப்பூர்வமான பாராட்டுக்கள்! சரி, ஒரு கவிதைத் தொகுப்பிற்கு ஏன் இவ்வளவு மெனக்கிட வேண்டும்? வெறும் அச்சு வடிவில் அவற்றைக் கடத்துவதுதானே அறிவுஜீவித்தனம்? இம்மாதிரி முயற்சிகளெல்லாம் not on par with intellectuals என high brow வாசகர்கள், விமர்சகர்கள் தோள் குலுக்கி, ஒதுக்கலாம். அவர்களுக்கு நான் நீட்சேவின், "ஒரு தத்துவவாதிக்கு 'நன்மையும் அழகும் ஒன்றே' என்று சொல்வது பெரும்பழி; அதில் 'உண்மையும்' என்று சேர்த்துக்கொண்டால், அவனை நன்றாக உதைக்க வேண்டும். உண்மை குரூபமானது (அழகற்றது). நாம் உண்மையால் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கலையை வைத்திருக்கிறோம்," (நீட்சே - மைக்கேல் டேனர்:117) கூற்றை நினைவூட்டுவேன். கலாரசனையுடன், புதுமையாக ஒரு பிரதி, குறிப்பாகக் கவிதைப் பிரதி வருவது நம்மை நாம் மேலும் உயிர்ப்பித்துக் கொள்ளத்தானே? "ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில் தீர்ந்து விடலாம் பிறவித் தாகம் ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில் தீர்வதாயில்லை பிறவித் தாகம்" என்கிற இளங்கோவின் இத் தொகுப்பு முழுக்க, முழுக்க சொற்கள், சொற்கள் - அவற்றின் பல்வேறு ஊடுபாவு அர்த்தங்கள். சொல் இவருக்குச் சொர்க்கமும், சிலுவையுமாய், இவரை அடி முதல் முடி வரை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்ற கவிதைத் தோலாகாவுமிருக்கின்றது. அதுவே 'கவிதைக்காரன்' என்கிற இவரது அடைமொழியினை இவர் அணிந்து கொள்வதனை அங்கீகரிக்கும் அங்கியாகவுமிருக்கிறது. இவ்வுலகில், 'சிறப்புரிமை பெற்ற பார்வையாளன் எவனும் இல்லை' என்கையில் அதென்ன இவர் மட்டும் 'கவிதைக்காரன்' (என்னை அதென்ன இவர் மட்டும் தமிழச்சி, அப்போ நாங்களெல்லாம் யார் எனச் சிலர் கேலி தடவிய குரோதத்தோடு கேட்பது போல) நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கெல்லாம் 'சொற்கள்' எனும் புத்தகமெழுதிய சார்த்தரின் "சொற்களின் மூலமாக இந்த மனிதகுலம் முழுவதையும் வியாபித்திருப்பேன்" என்ற சொற்றொடரை நினைவூட்டி, அதனை அச்சொட்டாக இத் தொகுப்பில் நிகழ்த்தி இருக்கிறார் இளங்கோ என்பதையும் சுட்டிக் காட்டி, அவரது அடைமொழிக்கான நியாயம் சொல்வேன். "எழுத்தாளர்கள் மந்திரவாதிகள் மாதிரி சந்திரனைக் காட்ட தங்க நாணயம் கேட்பார்கள். கடைசியில் அவர்கள் நாலாணாவிற்கு முதுகைக் காட்டுவார்கள்." என்று சொன்ன அதே சார்த்தர் தான், மனிதன் தன்னை இடைவிடாது தினந்தோறும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் கடமை எழுத்தாளரிடம் இருப்பதுதான் என்றும் கூறினார். (சார்த்தர் விடுதலையின் பாதைகள் - எஸ்.வி.ராஜதுரை : 66) தன்னை புதிது புதிதாகக் கண்டு பிடிக்கிறானோ இல்லையோ, தன்னை உற்று நோக்க, உடன் புற உலகையும் உள் வாங்கி வெளிக் கொணர, சிந்தனையும், உணர்வெழுச்சியும் ஒரு சேரச் சந்திக்கும் புள்ளியில் பிரசவிக்கப்படும் கவிதையொன்றைக் கருக்கொள்வதென்பது ஒரு படைப்பாளிக்கான இயல்பான தேவையாகிவிடுகின்றது. தனக்கெனக் கடமை ஒன்று இல்லாவிட்டால் தான் என்ன, குடியா முழுகிவிடும் எனக் கேட்கும் பின்நவீனத்துவ காலகட்டப் படைப்பாளிகள், ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் உரிமைக்குப் போராடுவதற்காக எழுத்துப் பணியை நிறுத்திவிடுவதற்கு எப்போதும் தயாராக இருந்த சார்த்தரைத் தாண்டி வந்துவிட்டார்கள். உதாரணத்திற்கு, மிஷல் ஃபூக்கோ, “சார்த்தரின் 'இயங்கியல் அறிவு பற்றிய விமர்சனம்' (Critique of Dialectical Reason) என்னும் நூல் "இருபதாம் நூற்றாண்டைக் கற்பனை செய்து பார்க்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதனால் எழுதப்பட்டது" என்று கூறினார். மார்க்ஸைப் பற்றியும்கூட இதே தொனியில் ஃபூக்கோ எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது: "எப்படி மீன் தண்ணீரில் வாழும் ஜீவராசியோ அப்படி மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜீவராசி" (அதாவது பத்தொன்பதொம் நூற்றாண்டுக்குப் பிறகு மார்க்ஸின் பொருத்தப்பட்டு மறைந்துவிட்டது).” (சார்த்தர் விடுதலையின் பாதைகள் - எஸ்.வி.ராஜதுரை : 13) ஆனால் அவர்களே கூட, கருத்துப் பரப்புக்காகக் கவிதையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் சுத்த இலக்கியவாதிகளைப் 'பில்லி சூன்ய வேலைக்காரர்கள்' என்று வர்ணித்த நெருதாவின் கவிதைகளை ஏற்க மறுக்கவில்லை. கொண்டாடத் தவறவில்லை. தத்துவத்தை விடக் கவிதை ஒரு படி மேலாகக் கர்வமுற்றிருப்பது அதனால்தான் - ஒரு அனுபவத்தை மூளையால் அள்ளும் போது குறைபடும் இடத்தைக் கவிஞன் தன் இதயத்தைக் கொண்டு நிரப்புகிறான். மேலான தத்துவவாதிகள் எப்போதும் தம்மைவிட மேலான கவிஞர்களைப் பின் தொடர்ந்து வருவது அதனால்தான். தொகுப்பில் தொடர்ந்து பேசப்படுபவை - வனம், ஏடன் தோட்டப் பின்புலம், ஆதாம், ஏவாள், ஆப்பிள், நாகம், விலா, வெயில், சிறகுகள் - என்றாலும், "சொல் தனக்குகந்த வாசகனைச் சென்று சேர்ந்துவிடும்" என்று பால்ஸெலான் நம்பியதைப் போலவே இத்தொகுப்பில் என்னைப் பெரிதும் ஈர்த்தவை சொல், சொற்கள் - இவை குறித்த, பற்றிய கவிதைகள். சொல்லின் சருகுகள், கைப்பற்றி முறுக்கிடத் தீரும் அவஸ்தையின் சொற்கள் கூட்டம், கடக்கும் சந்தையிலிருக்கும் அனைத்துத் தூரிகைகளும் ஒளிந்து கொள்கின்றன தமக்கு வாகான ஒரு சொல்லின் பின்னே, உன் சொற் கூச்சலை வேடிக்கை பார்க்கச் சொல்லி இரண்டு காதுகளையும் அறுத்து வைக்கிறேன் வான்கோவின் கத்தி கொண்டு - சொற்களின் வினோத வடிவங்கள் மீது கானல் நீரின் நிழல் மிதக்கிறது, ஏந்திய கை நிறைய காளானாக முளைத்துவிட்ட சொற்குடைகளின் வனத்தைத் தவளையிடம் காண்பித்தேன். கருவளையத்தை விட்டுக் கீழிறங்கும் சொற்கள். சொல் மீது பரவும் சத்தியத்தின் ரத்தக் கசிவு, புசிக்கத் தூண்டும் நாவலில் பதியனிட்ட சொற்கள் சுரக்கும், வெளியேறிய சொற்களின் தந்திரத்தை இரவின் குளிர்ந்த உடல் பொத்தலிடத் தொடங்குகிறது - வெளியேறிய சொற்களின் தந்திரம் கொண்ட நனவிலிச் செதிலின் தவம் என உடல் முழுக்க வீங்கும் சொற்கள், திறக்க மறுக்கும் உதடுகளுக்குப் பின்னே நாக்கின் நுனியில் விஷம் குளிர்ந்து உலரும் சொல்லின் ருசியை, கொசுக்களின் ரிங்காரச் சிறகுகளில் மின்னுகிறது சொற்களின் வெளிச்சம். சொற்கள் நொறுங்கும் உடைவை கையேந்தித் தவறும் கேவல் ஒலி, நேற்றைய கெட்ட வார்த்தையின் துர்வாடை, சொற் பைத்தியங்கள் திணறுகின்றன, யாவற்றுக்கும் ஒத்திசைந்து திணறும் சொற் பைத்தியங்களின் சபை. நிறம் மயங்கும் சொற்கள், பரிமாறலில் தவறிவிழுந்த சொற்களின் வெளிச்சம், அனிச்சையாய் உதிர்ந்து விழும் ஒரு சொல்லின் அர்த்தத்தைக் கழுவி வழிகிறது புனித ரத்தம். (பிரெய்லியில் உறங்கும் நகரம்) எனப் பல்வேறு கவிதைகளில் சொற்கள் குறித்து வெவ்வேறு சித்திரங்களை எழுப்பினாலும், ஒரு சோறு பதமாகத், தற்கொலையை இவ்வளவு நுட்பமான படிமக் கவிதையாக வடிக்க முடியுமா என்று என்னை வியக்க வைத்த, பின் வரும் கவிதையைப் பகிர்கிறேன். அடுக்குக் குலையும் நொடியிழை பிம்பம் காயங்கள் ஆறுவதற்கான கயிறு தனிமைப் பிசிர் கொண்டு முறுக்குகின்றது குரல்கட்டை சொற்கள் நொறுங்கும் உடைவை கையேந்தித் தவறும் கேவல் ஒலி கண் பிதுக்கும் இறுதிக்காட்சி நொடியிழை பிடித்து உறையத் தொடங்குகிறது அடுக்குக் குலையும் பிம்பமாக வெளிவரும் நாக்கின் நீளத்தை நுனியில் தொங்கும் கடைசி உச்சரிப்பை கால் உதறலோடு உருளும் ஸ்டூலின் கால்கள் மல்லாந்து திகைக்கின்றன (பிரெய்லியில் உறங்கும் நகரம்) தொகுப்பில் சொற்கள் அளவிற்குக் கையாளப்பட்ட சொல் இறகு, சிறகுகள்: சாபத்தின் சிறகுகளில் ஒட்டடை படிந்திருக்கிறது சிறகு பிய்ந்து தரையிறங்கும் பறவை இறகைத் தவிர வேறில்லை. (பிரெய்லியில் உறங்கும் நகரம்) என்று பிரயோகங்கள் பல இருப்பினும் அவை எனக்குத் தட்டையாகவே பட்டன. விதிவிலக்காக, அற்புதமானதொரு பின்னலாக, மனித உடல், உரையாடல், பறவை, கூடு, பறத்தல், மெளனம் - இவற்றைக் கொண்டு வெகு அழககாகப் பின்னப்பட்ட நிறமற்று உதிரும் உடல்களின் இறகு எனும் பின்வரும் கவிதை என்னை மிகக் கவர்ந்தது. நிறமற்று உதிரும் உடல்களின் இறகு நம் இருவருக்கிடையில் ஒரு குறுகிய மௌனமிருந்தது அதுவரை பேசிய உரையாடல்கள் அங்கு மிதக்கின்றன அவற்றிலிருந்து வெளியேறும் பறவைகள் கூடு திரும்புவதில்லை என்றுமே நிறமற்ற அதன் சிறகிலிருந்து உதிர்ந்த இரண்டொரு இறகுகளோடு நாம் திரும்ப வேண்டியிருந்தது தத்தம் உடல்களுக்கு சாய்ந்த பொழுதின் துயரைப் பூசி கூடுடைய பறவையின் திசையெங்கும் பரவத் தொடங்குகிறது பொன்னந்தி நிறத்தில் உரையாடலின் இசை ஊற்றுக்கண் பிளக்கும் ரகசியத்தின் முதல் துளியில் உப்பென பூக்கிறது பறத்தலின் மௌனச் சொல் (பிரெய்லியில் உறங்கும் நகரம்) வான்கோவும், காதுகளும் கலைஞர்களுக்கும், படிப்பாளிகளுக்கும் சலிக்காத உந்துதல் என்பதை மெய்ப்பிப்பது போல இளங்கோவின் பல கவிதைகளில் காதுகள், அறுபட்ட காதுகள் ஒரு படிமமாக முன் வைக்கப்படுகின்றன காதுகளை அறுத்து மெளனத்தின் குப்பைத் தொட்டியில் போடும்படி கட்டளையிடுகிறது. சாத்தானின் முணுமுணுப்பு ரிங்கரிக்கும் சில்வண்டு இரவில் கடவுளின் செவிகளிரண்டும் கழன்றுவிழுகின்றன ஆப்பிள் தோட்டத்தில் உன் சொற் கூச்சலை வேடிக்கை பார்க்கச் சொல்லி இரண்டு காதுகளையும் அறுத்து வைக்கிறேன் வான்கோவின் கக்தி கொண்டு (பிரெய்லியில் உறங்கும் நகரம்) நீர்மையும், நீர்மைப் பொழுதுகளும், மெளனக் கோப்பைகளின் தளும்பலும், கண்ணாடி, கண்ணாடிச் சில்லுகளின் உருவகங்களும் தருகின்ற வழமையான சக்கை வார்த்தைகள் அதிகமுள்ளனவோ என்கிற சந்தேகத்தை உடைத்து எரிகின்றன இளங்கோவின் இந்த இணையவெளி நூற்றாண்டிற்கான தனிப்பட்ட வார்த்தைகள். மைக்ரோ நீர்ப்புள்ளி, உலோக வேர்கள், ஒளியாண்டுத் தொலைவு, நியூரான் பின்னுகிற செய்தி, ஸ்கேனர் சிகப்பொளி, பஸ்ஸர் ஒலி, உலோக வரைபடங்கள், கேலக்ஸிக்கள், வளி மண்டலம், புதிய கிரகம், புற ஊ¡தாக் கதிர்கள், சாட்டிலைட், அலை ஒலி ஈர்ப்புக் கருவியின் ஆன்ட்டனாக்கள், நேனோ நொடி... எனப் புதிய பயன்பாட்டுப் புழங்கு சொற்கள் கவிதைகளில் மிக இலகுவாகக் கையாளப்பட்டிருக்கின்றன. இவற்றின் பிரயோகம் இளங்கோவின் கவிதை ஒரு மிகை உணர்ச்சி வகை (Romantic poetry) என்கிற வட்டத்திற்குள் அடைபட்டு விடாமல், நடப்புலகின் யதார்த்தத்தைப் பிறிதொரு உரைநடை உருவக மொழியில் சொல்லும் உத்தியைச் செயல்படுத்துகிறது. 'தான்யா' பற்றிய இரண்டு கவிதைகளுமே பிடித்தவை. எனக்கும் இளங்கோவிற்குமான பிடித்ததொரு ஒற்றுமை ஒன்றுண்டு - எனது கவிதைகளைப் போலவே இவருடைய கவிதைகளிலும் வெயில் வீடு சுற்றும் பூனையாய்த் தொடர்ந்து வருகின்றது. வெப்பம் அனற்றும் அலமாரிக் கண்ணாடிக் கதவுகள். புன்னகைக்கிறாய் அதிலிருந்து வீசும் வெயில் கண் கூசுகிறது. சருகாகும்வரை காத்திருப்பதாக என் மீது வெயில் பூசுகிறாய். இலைகளை ஊடுருவி தோள்களின் வழியே நழுவும் வெயில் நீ வந்த பிறகு உன் மீதும் வரைய தன்னோடு வைத்திருக்கிறது பூக்களின் நிழல்களிரண்டை. பிறந்து சுழலும் துயரின் நிழல் ஜன்னல் துளை வழியே இறங்கும் வெயில் கற்றையைப் பற்றிக் கொள்கிறது. (பிரெய்லியில் உறங்கும் நகரம்) மிக ரசித்தேன் - வெயிலோடு இவருக்கிருக்கின்ற இந் நெருக்கம் எனக்கும் மிக அணுக்கம் என்பதால். குறிப்பாகப் பாராட்டப்பட வேண்டிய கவிதை - தான்யாவும், வெயிலும் பாத்திரங்களான, பின்வரும் அற்புதமான படிமக் கவிதை. காகிதங்கள் மீதமரும் உடைந்த சதுரங்கள் வராண்டாவில் திசைக்கொன்றாக உடைந்து கிடக்கிறது வெயில் அதன் சதுரங்களை சீராக அடுக்கி மேஜையில் காகிதங்கள் பறக்காமலிருக்க வைத்தபடி கைகளைத் தட்டி நிதானமாய் பிடரி துள்ள நடந்து போகிறாள் தான்யா (பிரெய்லியில் உறங்கும் நகரம்) துவினோ எலிஜிஸ் (இரட்டைக் கையறுநிலைகள்) என்பதன் தொடக்கத்தில் ரில்கே எழுதுகிறார்: 'அழகு என்பது ஒன்றுமில்லை/ஆனால் பயங்கரத்தின் தொடக்கம். அதையும் நாம் எப்படியாவது தாங்கிக்கொள்ளலாம்/ஆனால் அது அமைதியாக நம்மை அழிக்க மறுத்துவிடுவதால் நாம் பிரமிப்புக்குள்ளாகிறோம்' (நீட்சே - மைக்கேல் டேனர்: 26,27) இளங்கோவின் பின் வரும் 13வது குறிப்பு கவிதையில் அழகு மட்டுமல்ல, ICONS எனப்படுபவையும் கூட பேராபத்தாக மாறுகின்ற விதத்தை அழகாகப் பகடி செய்கிறது. 13வது குறிப்பு உனது அழகைப் பற்றிய துண்டுக் குறிப்புகளை உனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன் நேரில் சந்தித்தபோது சொன்னாய் படியலில் இடம்பெற்றிருந்த 13வது குறிப்பு மிகவும் பிடித்தமானதென்று ஓர் அடையாளத்துக்காக சுழியிடப்படும் எண்கள் வழிப்பாட்டுக்குரிய கடவுளாக மாறுவதை எந்த யுகத்திலும் நிறுத்த முடிவதில்லை உணர்வுகள் உறையவைக்கப்பட்டு அவை நிறுவனமாவதன் (branding) தொடக்கம் ஒருவேளை இது தானோ? மெல்லப் பரிச்சயமாகும் ப்ரைலி புள்ளிகளோடு வந்து நிற்கிறது எப்போதும் யாவற்றையும் நிறுத்திப் பார்க்கும் ஓர் அசாதாரண முற்றுப் புள்ளி (பிரெய்லியில் உறங்கும் நகரம்) எனும் வரிகள் கவிதைத் தொகுப்பின் தலைப்பிற்கு நியாயம் செய்கின்றன. பின்வரும் புதிய சொல்லாடல்கள் சிலவற்றையும் இத் தொகுப்பிலே படித்து ரசித்தேன்: தட்டும் கதவொலியில் டிக் என்று தொங்கியபடி இறக்கிறது சாவித் துவாரம் மூத்தோர் விந்து உமட்டும் நாபி உள் முடிப்பில் தாயின் மூச்சுக்காற்று திணறுவதையும் தற்கொலை பற்றி இன்னொரு சந்தர்பத்தில் பேசிக்கொள்வோம் துணைக்கு இரண்டொரு ஆட்கள் சேரட்டும். மிக அருகிலிருந்து பார்க்க நேர்ந்த ஒரு மரணத்திற்குப் பிறகு ப்ரியமானவளை புணரத் தூண்டும் ஹார்மோன்களை நொந்து கொள்ள வேண்டியதில்லை எப்போதும் போலவே அப்போதும் இருக்கலாம். புறங்கையில் நெளியும் பழைய நரம்பைப் போன்ற இந்தத் திமிரை என்னசெய்ய என்று தெரியவில்லை ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில் தீர்ந்துவிடலாம் பிறவித் தாகம். ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில் தீர்வதாயில்லை பிறவித் தாகம். கடவுளின் கால் பூட்சுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது எனது துர் இரவு ஒவ்வோர் எழுத்தின் வன்மைத்தையும் அலசித் தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது. ஒரு மாய மானின் உடல் மொழியைக் கற்றுக்கொள் என்று மின்னஞ்சல் அனுப்புகிறாய் இடது புறங்கையின் நாள வீக்கத்தில் புடைத்துக் கொண்டு நிற்கிறது ஓர் ஏககால நினைவு ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கழற்றியெறியப்படும் கையுறையை ஒத்திருக்கிறது நீ விரித்து வைத்த சந்தர்ப்பம். (பிரெய்லியில் உறங்கும் நகரம்) எனில், குறைகளே இல்லாத தொகுப்பா என்கிற ஐயப்பாடு எழலாம். உண்டுதான். ஆனால் பல வருடங்கள் தொடர் பயணிக்கின்ற கவிஞனொருவனது வரைபடத்தில் இவை இயல்பான இடறல்களே - அவற்றை விட நிறைகள் நிறைய, அவை நிறைவு தருவனவும் கூட. உதாரணமாகக் 'கூறியது கூறல்' எனும் கீழ் வருகின்ற, வார்த்தை, வாக்கியப் பிரயோகங்கள்: ஓர் அந்தரங்கத்தில் அபூர்வ ரகசிய வழி மதில் மேல் பதிந்து கண்ணாடிச் சில்லுகளைக் கேட்டுப் பெறுகிறது. அபூர்வத்தின் ரகசிய வழி அந்தரங்கத்தின் இருட்கிளையில் ஒரு வேதாளமென தொங்கிக் கொண்டிருக்க நெஞ்சு அதிர இறைஞ்சும் மன்றாடலின் முகட்டிலிருந்து நழுவி வீழ்கிறது ஒப்பந்த வாக்குறுதிகள் நெஞ்சதிர இறைஞ்சிய மன்றாடலின் அசெளகரியத்தைப் பற்றி விவாதிக்கும் மாலைநேரம். இன்னும் திறவாத கதவொன்றின் வாசலில் மெழுகப்படுகிறது எளிதில் கடக்க முடியாத காலத்தின் சொற்ப நிழல் இன்னும் திறவாத கதவுக்குப் பின்னால் விரியும் பெருங்காடு. வெளியேறிய சொற்களின் தந்திரத்தை இரவின் குளிர்ந்த உடல் பொத்தலிடத் தொடங்குகிறது - வெளியேறிய சொற்களின் தந்திரம் கொண்ட நனவிலிச் செதிலின் தவம் - சொற் பைத்தியங்கள் திணறுகின்றன, யாவற்றுக்கும் ஒத்திசைந்து திணறும் சொற் பைத்தியங்களின் சபை. ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில் தீர்ந்துவிடலாம் பிறவித் தாகம். ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில் தீர்வதாயில்லை பிறவித் தாகம். (பிரெய்லியில் உறங்கும் நகரம்) மேற்சொன்னவற்றிலும் விதிவிலக்காக ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில் தீர்ந்துவிடலாம் பிறவித் தாகம். ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில் தீர்வதாயில்லை பிறவித் தாகம். என்கிற வரிகளைச் சொல்லாம். அவ்வளவு ஆழம் - கூறியது கூறல் இங்கு! அது போலவே இளங்கோ விழிப்போடு தவிர்க்கவேண்டிய ஒரு நடையாக ஒன்றைச் சுட்டுவேன் - ஒரு வாக்கியத்தை மறுபடி மறுபடி உபயோகித்து ஒரு உணர்வை, சிந்தனையக் கிளருதல். உதாரணமாகக் கொடுக்க விரும்பிய முத்தம் போன்ற கவிதைகள். கொடுக்க விரும்பிய முத்தம் மறுக்கப் படும் போது அதுவரை பேசிய விஷயங்கள் சற்றே அமைதி இழக்கின்றன கொடுக்க விரும்பிய முத்தம் மறுக்கப் படும் போது திரும்பமுடியாத எல்லை நோக்கி நாம் அனுப்பப் படுகிறோம். ... இவ்வாறு தொடருகின்ற கவிதை எனக்கு வேறொரு கவிஞரின் சாயலை நினைவூட்டுகின்றன - அது கடிதற்குரிய குறை அல்ல என்றாலும் அசலாகப் பல பொறிகள் இளங்கோவின் கவிப் பயணத்தின் வெற்றியை உறுதி செய்கையில் இவை போன்ற Clichளூs கொஞ்சம் சலிப்பூட்டுகின்றன. உதாரணமாக, "வெவ்வேறு சாயலின் வெவ்வேறு பாதைகள்" 'நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்' “ஓர் இயலாமையின் பார்வை இத்தனை கூர்மையாய் இருக்குமென்று நான் நினைக்கவில்லை.” “நேனோ நொடிக்கவிதை” (முதன்முதலாக) “ஒரே ஒரு முறை மட்டும் கவிதை.” “தனிமைக்கு என்று ஒரு அறையை நிறுவுதல்" அதையே நினைத்து என்ன ஆகப் போகிறது" என்று பல கவிதைகளைச் சொல்லலாம். (பிரெய்லியில் உறங்கும் நகரம்) "ஒரு கவிஞனை ஏன் எல்லோரும் ஒருமித்துப் புரிந்து கொள்ள வேண்டும்" என்கிற கவிதை கவிதைக்காரனின் ஒட்டு மொத்த அடையாளம் தான். "அவனுடைய நிலவு இரவெல்லாம் அனலாய் எரியக் கூடியது அவன் ஒரு பைத்தியத்தின் நிழல் காலப் பெருவெளியின் விரும்பட்படாத அகாலம் அவனுடைய சூரியன் ரொம்பவும் குளிர்ச்சி மிகுந்தது" என்றெல்லாம் சொல்கின்ற கவிதை மிகச் சரியான வெளிப்பாடுதான். ஆனால் தன் சுய குறிப்பற்ற, எளிமையின் சிறு புள்ளியை, யதார்த்தத்தின் ஒரு கண்ணியை, மாயக் கோலமென ஒரு படிமத்தில், உருவகத்தில், காட்சியில் கண்முன் கொணர்ந்து, அனுபவப் பொதுமைக் கிளர்வை ஏற்படுத்தும் அவரது கவ்விக் கொள்ளும் மயில்களின் அழகு எழுதிய அந்தக் கவிதைக்காரனைத்தான் அதிகம் பிடிக்கின்றது. கவ்விக் கொள்ளும் மயில்களின் அலகு அதிர்ந்து விலகும் கள்ளத்தனத்தை புத்தகத்துக்குள் ஒளித்து வைத்துவிடுகிறேன் மறந்துவிட்ட பக்க எண்கள் கனவில் வந்து கண்களைத் தட்டுகின்றன தவறான முகவரி என்று திருப்பி அனுப்பிய பிறகு கவ்விக் கொள்ளும் தூக்கத்தில் மயில்களின் அலகில் துருத்திக் கொண்டு குட்டி போடுகிறது கள்ளத்தனம் வைகறை பரவும் வாசல் படியில் தூக்கக் கலக்கத்தோடு முகவாயில் கை தாங்கி மடியில் புத்தகத்தோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறது அறுபத்து ஒன்பதாம் பக்க எண் (பிரெய்லியில் உறங்கும் நகரம்) மேற்சொன்ன கவிதையின் சொற்சிக்கனம், கள்ளத்தனம் ஒரு நபர் போல எண் வடிவில் படம்பிடிக்கப்பட்ட புதுமை - அற்புதம். தூரன் குணாவின் எனக்கு மிகப் பிடித்த கவிதை பின்வருவது மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் முந்தைய நாட்களின் பணிச்சுமையால் பெருகிய மனவழுத்தத்தோடும் உறங்கவியலாமையால் சிவந்த கண்களோடும் தனிமை கொடுத்த துயரமைதியோடும் விடுமுறைநாளில் அலுவலகம் செல்ல ஏறிய பேருந்தில் பணியிலிருந்தாள் மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் பயணச்சீட்டை நீட்டும்போது அவள் முகத்தை உற்று நோக்கினேன் ஏதோவொரு தூரநிலத்தின் சாயைகொண்ட அச்சாதாரண முகத்தில் ஒன்று அதற்குச் சரியான இடத்தில் பொருந்துவதின் பேரழகோடு மின்னிய அம்மூக்குத்தி கண் நிறைந்த கணத்தில் இருதயத்திற்குள் பெருகிய காதலற்ற காமமற்ற சகோதரமற்ற ஆனால் உயிரை ஆற்றுப்படுத்தி வாழ்தலின் ருசியை மீட்டெடுத்த அவ்வுணர்ச்சியின் பெயரை அறியேன் உயிரின் பதட்டங்கள் மெல்லடங்க காலமும் சமைந்து சிலையாகையில் கண்களை மூடிக்கொண்டேன் உள்ளே உருப்பெற்றது ஒற்றை மூக்குத்தியால் ஒளிபெற்ற ஒரு பிரபஞ்சம். வார்த்தை ஜாலங்கள், திருகு மெழியின் வர்ணங்களற்ற தூரன் குணவின் இந்த நடைதான் வாழ்தலின் ருசியை அப்படியே ஒரு மூக்குத்தியின் ஒளியில் எனக்கும், உங்களுக்கும் கடத்துகிறது. அதே மூக்குத்தி தான் இளங்கோவிற்கு இங்கு ஒரு ப்ரைலி புள்ளி, ஆதி டி.என்.ஏக்களின் பழைய உச்சரிப்பைச் சுமந்த ஒரு சொல், ஹாரன்கள் அலறும் நகரத்தின் விலாவில் பசியோடு புரண்டு திரும்பும் செம்பட்டை ஏவாள். வாழ்த்துக்கள் இளங்கோ - இவ்வளவு வருடங்கள் தொகுப்பு கொண்டுவர வேண்டுமென்கிற யத்தனமின்றி, உங்கள் பயணத்தை ரசிப்போடு, நிதானமாகத் தொடர்ந்ததிற்கு! வாழ்த்துக்கள் இளங்கோ - இப்பொழுதேனும் உங்கள் சொற்களின் மாயத் திறப்பை எங்களோடு ஸ்தூல வடிவில் பகிர்ந்து கொண்டமைக்கு! உதவிய நூல்கள் : சமகால உலகக் கவிதைகள் - பிரம்மராஜன் தமிழ்நாடன் - உலகக் கவிதைகள் அரசியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - கென்னத் மினோக், தமிழில் மா.ஆனந்தராஜ் நீட்சே (மிகச் சுருக்கமான அறிமுகம்) - மைக்கேல் டேனர், தமிழில் க.பூரணச்சந்திரன் கவிதையின் அழியாத காதலன் - பா.இரவிக்குமார் சார்த்தர் விடுதலையின் பாதைகள் - எஸ்.வி.ராஜதுரை

தொடர

"ஞானம் நுரைக்கும் போத்தல் - குமரகுருபரன்" என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

தமிழச்சி தங்கப்பாண்டியன்

சுதந்திரம் ஒரு கந்தர்வக் கன்னி அவளால் வீட்டுக்கு வீடு செல்ல முடியாது ஓரிரு வீடுகளையே பார்த்துத் திரும்புகிறாள் மக்கள் துயரத்தில் தவிப்பர் ஆள்பவரோ மாப்பிள்ளை போல அவளோடு தனியறையில் சுகிப்பர். காஷ்மீர் கவி மசூர். "எனது கவிதைத் தொகுப்பு என்பது எனது அம்பு. இலக்கில்லாமல் எய்யப்படும் அம்பு. கால அவசியம் அற்ற அம்பு. தேவை எதுவும் அற்று எய்யப்பட்ட அம்பு" என்கிற சுதந்திரக் கந்தர்வக் கன்னி குமரகுருபரனின் கவிதைகள். நியாயமும், இயல்பின் படியுமாக அவை - அக்கவிதைகளெனும் இலக்கற்ற அம்புகள் என்னைத் தைத்தன என்பதையே நான் இங்கு பேச விரும்புகிறேன். கவிதைகளை விட அவை நிகழ்கின்ற தருணங்களைப் பதிவு செய்வது மட்டுமே அவற்றுடனான தனது பயணம் என்கிற குமரகுருபரனின் தன்னுரையைக் கடக்க எனக்கு அதிக நேரம் பிடித்தது. 15 ஆண்டுகளாகப் பத்திரிக்கை ஊடகத்தில் பணியாற்றி வருகின்றவரின், கவிதை குறித்து மிக நுட்பமாக உணர்ந்து தெளிவோடு பயணிப்பவரின் முதல் தொகுப்பு இப்போதுதான் வருகிறது என்கிற விஷயம், அவசரக்குடுக்கை போல 4 தொகுப்புக்களை கொண்டு வந்து விட்டேனோ எனச் சற்றுக் கூச்சத்துடன் என்னை எண்ண வைக்கிறது. இக்கவிதைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு வாசகனாக இருந்து, அறிமுகமற்ற ஒரு படைப்பாளியை இனங்கண்டு, அவரது கவிதைகளைப் புத்தகமாக்கிய ஆதிரை பதிப்பகத்தின் வசந்த் ஆதிமூலத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். கவிஞன் என்பவன் வேறு, கவிமனம் கொண்டவன் வேறு என்று நான் நினைக்கிறேன். கவிஞனாக இருப்பதை விடக் கவிமனம் கொண்டவனாக இருப்பதே உத்தமமானதும், எனக்குப் பிடித்தமானதும். அவ்வகையில் குமரகுரபரன் ஒரு கவிமனம் கொண்டவராகவே எனக்குப் படுகிறார். ஒரு கவிமனம் கொண்டவன் ஒருபோதும் idealist ஆக இருக்க முடியாது. ஒருவேளை Mystic ஆக வேண்டுமானால் அவன் இருக்கக்கூடும் என்பதையே அவரது கவிதைகள் நீருபிக்கின்றன. அதற்கு மிகச் சரியான சான்று ஒரு சிறுமியின் கதை எனும் கவிதை... "இவ்வாறு பல முதலுக்கு அப்புறம் முதலில் கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்த போது கதைசொல்லி சிறுமி ஆகியிருந்தான் சிறுமி கதை ஆகியிருந்தாள்." “Take what you have while you have it: you'll lose it soon enough, A single summer turns a kid into a shaggy goat,” says a greek epigram. (Poet's Choice - Edward Hirsch: 19) மேற்சொன்னதை அப்பட்டமான கவித்துவ உணர்வாக, ஆனால் மிக நேர்த்தியாக, ஒரு சமைக்கப்படாத நேர் உரைநடை மொழியில் கவிதையாக்கி இருக்கிறார் இதை எழுதுகிறவன் எனும் கவிதையில். "ஒரு கஜலின் உருக்கத்தை ஞாபகமுற ஜக்கித் சிங் இறந்து தொலைக்க வேண்டியதிருக்கிறது..." எனத் தொடங்கும் அதன் நகாசு வேலையற்ற மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. “THE PROSE POEM is a poem written in prose rather than verse, which makes it a weird hybrid, an anomalous genre. It avails itself of the elements of prose while foregrounding the devices of poetry. Prose poems work by the sentence rather than the line, the paragraph instead of the stanza, and yet they insistently define themselves as poems, which gives them an air of rebelliousness, a sense of breaking loose from old-fashioned strictures. Still, these compulsively modern creatures may look like prose, but they think metaphorically, like poetry.” (Poet's Choice - Edward Hirsch: 249) குமரகுருபரனின் வசன கவிதை இவ்வகைமையைச் சார்ந்ததே. சிற்பி ரோடினிடம் செயலாளாராகப் பணிபுரிந்த ஜெர்மன் கவிஞர் ரில்கே (ரெய்னர் மேரியா ரில்கே) பிராகுவில் பிறந்தவர், பொகீமிய இனத்தைச் சார்ந்தவர்; ஆஸ்திரியக் குடிமகன். சிற்பி ரோடினிடமிருந்து பெற்ற உள்ளொளியைக் கவிதைப்பாணியில் அவர் கடைப்பிடித்ததாக ஒரு கருத்துண்டு. "ரில்க்கேயின் இக் கவிதைப் பாணிக்குக் கருப்பொருள் கிடையாது. கவிஞன் ஆழ்ந்த தனிமையில் இருக்கும் போது, அது தனக்குரிய கருவைத் தானே படைத்து வெட்ட வெளியில் எடுத்து நிறுத்த வேண்டும். அதைக் கருக்கவிதை(Poem of Things) என்று ரில்கே குறிப்பிடுகிறார்" Rilke இன் இக்கருக்கவிதை பற்றி, "வாழ்க, ரில்க்கேயின் கருக்கவிதை. அது தனிமையின் சாந்தா க்ளாஸ்" (Santa claus) என்று பாராட்டுகிறார் W.H.Auden. நான் குமரகுருபரனின் இக் கவிதைகளை ஞானத்தின் சாந்தாக்லாஸ் என்பேன். இதற்காக இவர் உள்ளொளி, தரிசனம் என்றெல்லாம் தனிப்பட்டதொரு திருகு மொழியில், இருண்மையை வலியப் போர்த்தி இருக்கின்ற மெனக்கிடுதலைச் செய்யவில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சி, கூடுதலாக ஒரு அணுக்கத்தை உருவாக்குவதும், இத்தொகுப்பின் மிக முக்கியமானதாக என்னை உணரச் செய்வதும் இதனுடைய மொழிநடை. அதனை மிக அழகாக கவிதை எனில் என்கின்ற வசனம் அல்லது கவிதை அல்லது வசன கவிதையில் குமரகுருபரனே சொல்லி இருக்கிறார். பின்வரும் இவ்வா¢யைப் பாருங்கள் "எலும்புகள் தேய்ந்த ஒரு கிழக்கைதி சொல்வான் வாழ்க்கை பற்றி கடவுளுக்கும் தொ¢யாத அனைத்துமே" அப்பட்டமாக இது ஒரு உரைநடை வாக்கியம் - ஆனால் அச்சொட்டாக கவி உணர்வும், ஞானச் செறிவும் சா¢ சமமாகப் புணர்ந்த அற்புத கவிதை அனுபவமல்லவா அது! That way, Kumarakurubaran's expressions may look like prose, but they think metapholically, like poetry. அவருக்கு இன்றுமொரு pat on the shoulder & a lovely handshake - மிக ஆழமான, நுட்பமான Orgasmic கணங்களை, வாழ்வின் மொத்த ஞானத்தை ஒரு துளியில் துய்க்கும் கணமொன்றைச் சொல்கின்றார். அதன் வழியும், மொழியும் எளிமையாக, ஸ்பஷ்டமாக, அதீதமான படிம தோரணைகள், உவமைச் சுமைகளோடு கூடிய கனபாடிகளாக இல்லாமல், ஓடித் தி¡¢யும் சிறுமியொருவளின் வசதியான சிற்றுடை போலிருக்கிறது. மிக எளிமையான தொரு style to emulate wisdom in deep tone - என்கிற வழியை இவர் கைக்கொள்வது மிக முக்கியம் இங்கு. பாதலோ¢ன் Petit Poemsen Prose மீது பொ¢தும் செல்வாக்கு செலுத்தியவர் Aloysius Bertrand எனும் ஃப்ரெஞ்சு எழுத்தாளர் - அவர்தான் prose poem, வசனகவிதை எனும் வகைமையை (genre) தனது Gaspard de la Nuit எனும் புத்தகத்தில் நிலை நிறுத்தியவர். அதன்பின் அவ்வகைமை மீது பெருங்காதல் கொண்ட பாதலேர் இவ்வகை ஊடகம், (குறிப்பாகக் கவிதையில்) குறித்துத் தனது நண்பருக்கு, “Who among us has not, in his ambitious moments, dreamed of the miracle of a poetic prose, musical without meter or rhyme, supple enough and rugged enough to adapt itself to the lyrical impulses of the soul, the undulations of the psyche, the jolts of consciousness?” (Poet's Choice - Edward Hirsch:249) என்று சிலாகித்து எழுதி இருக்கிறார். மேற்சொன்ன அனைத்தையும் குமரகுரபரனின் கவிதைகளில் பார்க்கலாம் "பிரிவதுமில்லை விலகுவதுமில்லை பூக்கள்" - is the best lyrical impulse of a soul. "அரங்கங்கள் அற்ற நகருக்கு வந்திருக்கிறேன் புணர்வுகளற்ற காதல் ஊற்றெடுக்கும் அந்த நகருக்கு என்னைப் போல வழி தவறியவன் அவன் என்றறிந்த பின் திசை தவறினேன் நானும்" is sure the undulations of the psyche, "குழந்தையின் முகத்துடன் கொலைகள் நிகழ்த்தும் உலகு" "குற்றமான காதல்கள் நிறைய உண்டு. அவை அனைத்தாலும், இன்னமும் காதல் என்கிற உணர்வைக் குற்றப்படுத்தவே முடியவில்லை" are difinitely the jolts of consciousness. வாசித்தல் எப்போதும் ஒரு விடுதலை தருகின்ற அனுபவம் எனக்கு. நான் இதுவரை சென்றிராத இடங்கள், உணர்ந்திராத கணங்கள், என்னைச் சிறு தூசு என உணரச் செய்யும் தா¢சனங்கள் - இவற்றை வாசிப்பு அனுபவமே எனக்கு வழங்குகிறது. குறிப்பாக இப்படி ஒரு கவிமனதின் ஆழமான உலகம் - அதன் பதிவுகள். வரலாற்றின் வாசனை எனும் கவிதை அவ்வாறானதொரு விடுதலைதான் எனக்கு. "இந்தியா மீது அடுத்தடுத்து நிகழ்ந்த படையெடுப்புகளைத் தவிர இந்தியாவிற்கென்று வரலாறு ஏதும் இல்லை என கார்ல் மார்க்ஸ் ஒருமுறை கூறினார். இதனால், இந்திய தேசிய மரபில் வந்த தேசியவாத, மார்க்சிய வரலாற்று அறிஞர்களுக்கு மார்க்ஸ் மீது சற்றுக் கோபம்தான்! ஆங்கிலேயர் வரும் வரை, தன்னிறைவான, பார்ப்பனிய-சாதி அடிப்படையிலான கிராமியப் பொருளாதார சமூக அமைப்பு முறை ஆட்டங் காணாமல் அப்படியே நிலைத்திருந்தது என்னும் பொருளில்தான் மார்க்ஸ் மேற்கண்ட கூற்றை எழுதினாரேயன்றி வரலாற்றை உருவாக்குவதில் இந்திய மக்களுக்குள்ள ஆற்றலை மறுப்பதற்காக அல்ல." (கல் தெப்பம் கலை இலக்கியம் அரசியல் - எஸ்.வி.ராஜதுரை : 79) எப்போதுமே வரலாற்றின் பெருமை குறித்த புனிதப் பார்வை நமக்கு உண்டு! அதைக் கவிழ்த்திக் குலைக்கின்றார் பின்வரும் இக்கவிதையில்... "பழுத்த தாள் ஒன்றில் எழுத்தாய் இறப்பதைக் காட்டிலும் புதிய பக்கமொன்றின் வெறுமையாய் அரம்பியுங்கள். உங்கள் பழைய வரலாறு குப்பைக்குப் போகும் முன் தயைசெய்து ஒரு புதிய பக்கமொன்றின் வெறுமையாய்க் காத்திருங்கள்." "Peoples of the Earth Do not destroy the Universe of words" என்றொரு கவிஞர் வேண்டினான். ஆனால் உன்கனவுக்குள் என்கிற அற்புதமான கவிதையில் சிதைந்த கனவு குறித்துப் பதிகின்ற குமரகுருபரன் ஒரு Labryinthine(அடுக்கடுக்கான) மொழியில் ஒரு Labyrinth(சிக்கலான) வழியில் மிக நுட்பமானதொரு உணர்வைச் சொல்கிறார். “கனவின் சிதைவும் கனவே காணீர்” என. நான் நினைத்துக் கொண்டேன் - வார்த்தைகளைச் சிதைக்காமல், கனவின் சிதைவை ஒரு நிறைவான அனுபவமாக நமக்குக் கடத்தியிருக்கிறாரென. ஞானம் என்பது குமரகுருபரனுக்கு காபியிலும், "தூரத்தின் ஆற்றாமை என்பதைக் காபி அருந்துவது எனவும் கொள்ளலாம்." ஒரு போத்தலிலும், "பகார்டி கடவுளை இயல்பாக அழைத்து வந்து விடுகிறது கடவுளால் பகார்டியை கொண்டு வர இன்னும் முடியவில்லை." ஒரு சாத்தானிடத்தும், "சொல்பவன் சாத்தான் என்று அறியப்படுவான் எனினும், அவனே உண்மையின் கடவுள்" ஒரு பெண், பூ இவற்றிடத்தும், "அவள் பூவா? என்றேன் உனக்கு அவள் அப்படியா என்பதை அவள் தான் எழுத வேண்டும்". ஒரு கூடல், பு¡¢தல், ஒரு நிதர்சனம்... என எல்லாவற்றிலும் கைவரப்பெறுகிறது. உண்மையில் எல்லாவற்றிலும் கனிந்த ஒரு உள்வாங்குதலே, ஏற்றுக் கொள்ளலே,வேடிக்கை பார்த்தலே, கொண்டாட்டமே, தன்னைக் கரைத்தலே - இந்த ஒரு போத்தல் ஞானம். இதில் பிராதுகளோ, புகார்களோ, அறிவுறுத்தல்களோ, அறிவித்தல்களோ, நிரூபித்தல்களோ இல்லை மாறாக, For half a century Poetry was the paradise Of the solemn fool. Until I came And built my roller coaster. Go up, if you feel like it. I'm not responsible if you come down With your mouth and nose bleeding. (Poet's Choice - Edward Hirsch: 168) எனும் Roller coaster ride ஏ எனக்கு வாய்த்தது and I liked the journey of these poems immensely. நீட்சேவின் பின்வரும் இக்கருத்து எனக்கு மிக முக்கியமானது: "ஒரு கலைஞனை நாம் அவனுடைய படைப்பின் அளவுக்குத் தீவிரமாகக் கருதாமல், அவனுடைய படைப்பிலிருந்து பி¡¢க்க முயற்சி மேற்கொள்கிறோம்... உண்மை என்னவென்றால் அவனே தன்னுடைய படைப்பாக இருந்தால் அவன் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, மனத்தில் உருவாக்கவோ வெளியிடவோ முனையமாட்டான்: ஹோமரே அக்கிலிசாக இருந்தால், கெத்தெ-வே ஃபாஸ்ட்டாக இருந்தால், ஹோமர் ஒரு அக்கிலிஸை உருவாக்கியிருக்கமாட்டார், கெத்தே ஒரு ஃபாஸ்ட்டை உருவாக்கியிருக்கமாட்டார் இதன் முடிவு என்னவென்றால், கலைஞன் மனசாட்சியற்றவன். தனது படைப்பை மேம்படுத்தும் எந்தச் சாயலையும் ஏற்பவன் என்பதுதான். அவன் தனது படைப்பின் நோக்கத்திற்காக, அனுபவத்தைப் பயன்படுத்துகிறான். அதற்கும் 'உண்மை'க்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம்". (நீட்சே - மைக்கேல் டேனர் : 117) ஆனால் இதற்கு நேர்மாறாக இயங்குகின்றது குமரகுருபரனின் கவிமனம் - அது வெளிப்படுத்துகின்ற கவிதை உலகு. அவரது கவிமனம் தனது கவிதைகளை மேம்படுத்த எந்தவிதமான சாயலையும் ஏற்கவில்லை என எனது உள்ளுணர்வு சொல்கிறது. படைப்பினை மேம்படுத்துவதற்காக அவர்தம் அனுபவத்தைப் பயன்படுத்தவில்லை - அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அது உண்மையோடு உரையாடுவதால் மேன்மையாக வெளிவந்திருக்கிறது என்பது என் கருத்து. பாசாங்கற்ற பைத்தியக்காரன் போல, நண்பனோடு கொண்டாட உயர்கின்ற மதுக்கோப்பை போல, நேசம் கொள்வோ¡¢டம் திரைகளற்று ஒன்றாகக் கலந்து துய்ப்பது போல, ஒரு போத்தல் ஞானம் இயல்பாக, மிகையற்று, கனிந்து, நிறைந்து இருக்கிறது. வாழ்த்துக்கள்... குமரகுருபரன். போதலோ¢ன் படைப்புகள் பற்றி ஆர்தர் சைமன்ஸ் என்ற திறனாய்வாளர், தாம் எழுதியுள்ள "இலக்கியத்தில் குறியீட்டு இயக்கம்" (The Symbolist Movement in Literature) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "ஒரே ஒரு கவிதை நூலை எழுதுவதில் போதலேர் தமது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார்; அதன் பிறகுதான் பிரெஞ்சு மொழியில் உயர்ந்த கவிதைகள் எல்லாம் தோற்றம் எடுத்தன. ஒர் உரை நடை நூல் எழுதினார்: அந்த உரை நடை அழகுக் கலையாக (Fine Art) மதிக்கப்படுகிறது. ஒரு திறனாய்வு நூல் எழுதினார். அவர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய திறனாய்வு நூல்களில் இதுவே உயர்ந்ததும் உண்மையானதும் நுட்பமானதும் ஆகும். ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார்; அது மூலத்தை விடச் சிறப்பானது". (புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் - முருகுசுந்தரம்: 24,25) படைப்புக்களை பொழிந்து தள்ளி, எழுதிக் குவிக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. இது போல ஒன்று போதும்! உதவிய நூல்கள்: நீட்சே மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் டேனர் (தமிழில் க.பூரணச்சந்திரன்) புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் - முருகுசுந்தரம் Poet's Choice - Edward Hirsch கல் தெப்பம் கலை இலக்கியம் அரசியல் - எஸ்.வி.ராஜதுரை

தொடர

வா. மணிகண்டனின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவியை முன்வைத்து ஒரு உரையாடல்:

தமிழச்சி தங்கப்பாண்டியன்

“கவிதை சொற்களால் அமைவதே ஆயினும் மொழியின் ஆதிக்கப் பகுதிக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. மொழி வேறு, கவிதை வேறு.” - அபி. ஒரு கவிதைப் புத்தகத்தை அச்சுவடிவில் நெருங்குவதென்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். “கவிஞன் சொற்களைக் கொண்டு கவிதையின் சொற்களை உருவாக்குகின்றான்” என்று அபி சொல்லும் போது அதன் அர்த்த மதிப்பை விட அனுபவ மதிப்பினை அவர் அடிக்கோடிடுவதைப் புரிந்து கொள்ளலாம். அவ்வகையில் கைக்கு வருகின்ற ஒவ்வொரு கவிதைப் பிரிதியும் எனக்கு அளிக்கின்ற அனுபவங்கள் மிகவும் தனிப்பட்டவை. ஒரு உரைநடைப் பிரதியை விடக் (சிறுகதை, புதினம், நெடுங்கதைகள்) கவிதைப் பிரதி எனக்குள் கிளர்த்தும் உணர்வு நிலை மிக அலாதியானது. கவிஞன் ஒருவனை மிக அந்தரங்கமான அவனது அக உலகை, மிக நெருக்கத்தில் கொண்டு வந்து தருகின்ற கவிதைப் பிரதி, எனக்கொரு சவலைக் குழந்தை போல. கூடுதல் கவனமும், அடிக்கடி கொஞ்சுவதும், தன்போக்கில் விளையாடுகையிலும் ஒரு கண் வைத்திருக்கும் தாய்மையுமாய் எப்போதும் அதனைத் தூக்கி வைத்துக் கொள்வதும், இடுப்பில் இடுக்கிக் கொள்வதுமுண்டு. எத்தனைதான் மொழியின் துலக்கமும், வடிவநேர்த்தியும் கூடி வந்தாலும், வாசகனது சொற்களைக் கூடுதலாக இட்டு நிரப்பக் கோருகின்ற, தன் இடைவெளி மௌனத்தில் அவனைப் புனைவுச் சித்திரங்களை வரைய அனுமதிக்கின்ற, நெகிழ்தன்மையுடனும், அறுதியாகச் சட்டமிட்டு விடமுடியாத, இழுபடக் கூடிய வரைகோடுகளுடன் இருப்பதாலாயே ஒரு கவிதைப் பிரதி எனக்குக் கூடுதல் அணுக்கம்; கூடுதல் நெருக்கம்; சவலைப் பிள்ளையாக இருத்தலே அதன் சிறப்புத் தகுதியும் கூட - ஏனெனில் முழுமை, பூரணம் போன்ற சொற்களை மறுதலிப்பதே ஒரு கவிதைப் பிரதியின் உருவமும், உள்ளடக்கமும். அவ்வகையில் மணியின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி படிப்பதற்கும், உள்வாங்குவதற்கும், உரையாடுவதற்கும் எனக்கு மிகுந்த விருப்பத்தைத் தந்த ஒரு பிரதி. “விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது” என்பதை விரித்து, விழித்திருப்பவனுக்குப் பகலும் நீண்டது என்பதைச் சொல்வதாயிருக்கிறது மணியின் அக உலகம். அந்த விழித்திருக்கும் நிலையைத் தான் T.S.Eliot ‘Still Point’ எனவும், சித்தர்கள் ‘தூங்காமல் தூங்கும் நிலை’ எனவும் சொல்வதுண்டு. மணியின் கவிதை படைக்கின்ற மனோநிலை இந்த ‘Still Point’ என்பதுதான் அனுபவங்களின் மனப்பதிவை அவர் பகிர்ந்து கொள்வதற்கு சிக்கல்களற்ற ஒரு Laser மொழி அவருக்கு வாய்த்திருக்கிறது. காட்சியும், தன்னுணர்வும், விலகி நின்று பார்த்தலுமான ஒரு முப்பரிமான கோணத்தை, அதிக நகாசுகளற்ற புழங்கு சொற்களின் மேல் ஒரு புதுக்கத்தை ஏற்படுத்துகின்ற மணியின் நடை இக் கவிதைகளை மிக முக்கியமான, பேசப்படும்படியான படைப்பாக்குகின்றன. கவிதைப் புத்தகத்தின் தலைப்பினை ஒரு தவிட்டுக்குருவி தேர்வு செய்கிறது. அங்கு துவங்கி, தொகுப்பு முழுக்கக் கடவுள் கேள்விகளுடனும், எள்ளல்களுடனும், “என்ன மாமு, இன்னுமா கீர?” என்று பந்தாடப்படுகிறார். மணியின் பலம்; இதுதான் - அதீதக் கசப்பு, தீவிரமான சோகம், கரைபுரண்டோடும் காமம், கொலை வெறி தூண்டும் துரோகம் - இவையெல்லாவற்றையும் அலட்டல் இல்லாததொரு விவரணைகளில், “இப்படியாகத்தான் இருக்கிறது எல்லாமும் - இருக்கிறோம் நாமும்” என்கிற தொனியில் சுட்டுபவை - ஆனால் விரக்தியின் எல்லை அறிந்தவை. புலம்பலின் பாரமற்றவை. தீர்ப்புக்களோ நியாயத் தராசோ இல்லாதவை ‘ஒரு மெஷீன் துப்பாக்கியின் கிசுகிசுத்த செய்தியைப் போல’ (பிரேட்டன் பிரேடன்பாஹின் கவிதை வரி) ‘தலை நிறைய ஆணிகள் ஆனால், எனக்கல்ல நான் என்றுமே வலி தருவதில்லை அல்லது புகார் செய்வதில்லை’ என்று சொல்பவை. தொகுப்பின் தலைப்புப் தேர்வு ரமேஷ்: பிரேமினை நினைவு படுத்துகிறது - “பறவைக்குப் பெயரிடுவதிலிருந்து தான் ஒரு மொழியில் கவிதைக்கான சொல் தேர்வு பயன்று வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இந்தப் பறவைக்குப் பெயரிடுவதன் மூலம் எனது மொழிக்கு ஒரு கவிதையைக் கொண்டு வருகிறேன்” எனச் சொல்கிறார்கள் அவர்களென்றால், தவிட்டுக்குருவியின் மூலம் அருமையான கவிதைகளைப் பெயரிட்டுத் தந்திருக்கிறார் மணி. ‘பஞ்சமகாகவிகள்’ என்று கரிச்சான், வானம்பாடி, குயில், மணிப்புறா, மைனா ஆகியவற்றைக் கொண்டாடிய, மஹாகவிகள் என்று அவைகளுக்காக ஒரு காவியம் இயற்றிய ந.பிச்சமூர்த்தி துவங்கி பறவையைச் சுமந்தேதான் எல்லாக் கவிஞர்களும் இளைப்பாறுகிறார்கள். ந.பிச்சமூர்த்தியின் வாழ்வில் நடந்த சம்பவத்தைப் பொதியவெற்பன் பதிந்து இருக்கிறார். அவரது மொழியிலேயே அதனை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் - ஒருமுறை தாமும் எம்.வி.வி.யும் அவரைக் காணச் சென்றபோது சாலியமங்கலத்தில் கொட்டும் மழையில் நனைந்தவாறே காவிரிக்கரையில் ஒருபறவையைச் சுட்டிக்காட்டி வியந்ததை விவரிப்பார் தஞ்தைப்ரகாஷ், “ராவையா... ப்ரகாஷ்ரா... ச்சூஸ்திவா...த்தேனிபேரு முக்குளித்தான். இது ஒரு அபூர்வமான பறவை நீங்க பாத்திருக்கேளா வெங்கட்ராம். இதுதண்ணிக்குள்ள மீன்மாதிரி நீந்தி வாழும். அதே நேரத்துல மழைபெய்யிற நேரத்துல ஆகாய வானத்துல பறக்கும் பாருங்க. அற்புதமான சிருஷ்டி தண்ணீர் மழையில் கலங்கினா இதுக்குப் பிடிக்காது. தண்ணீர் அடிமட்டத்திலிருந்து நீந்தி வரும் மரத்துமேல போய் உட்காந்துக்கும், வானத்துலயும் பறக்கும்…” எனத் தொடங்கும் ந.பிச்சமூர்த்தி அப்பறவைக்கு ‘முக்குளித்தான்’ எனப்பெயர்வைத்த கிராமவாசியை ‘அவன் அல்லவா கவிஞன்’ என வியப்பார். ஆகத், “தன் அழகின்மையின் துக்கத்தைக் கண்களில் சேகரித்திருக்கும் தவிட்டுக்குருவியை” உருவாக்குகின்ற மணி, “சின்னஞ்சிறு மஞ்சள் அலகில் வயல்வெளியைத் தூக்கிச் செல்லும் என் குருவி தன் தலையைச் சிலுப்பி, ஒரு நதியை இடம் மாற்றும்” என்கையில் எனக்கு கோஃபி அவூனோர் எனும் கானாவில் பிறந்த கவிஞரது “எப்போதாவது நீ பார்க்கிறாய் ஒரு கடல் காக்கை உயர்ந்து எரிக்கும் சூரியனுக்கு எதிராய் விசையுடன் எழுவதை” எனும் வரிகள் நினைவிற்கு வந்தன. கோஃபியின் தூக்கணாங்குருவி கவிதை மிகப்பிரபலமானது. தான் வந்து தங்கிக் கூடுகட்டுகின்ற, தனக்கு விருந்தோம்பிய மரத்தையே தூக்கணாங்குருவி அழித்து விடுவதை, Western Imperialism இற்கு ஒரு படிமமாக ஒப்பிடச் சொல்லி, அதில் கையாண்டிருப்பார் கோஃபி. “தூக்கணாங்குருவி எங்கள் வீட்டில் கூடு கட்டியது எங்களின் ஒரே மரத்தில் முட்டையிட்டது. அதைத் துரத்த நாங்கள் விரும்பவில்லை. கூடு கட்டப்படுவதை நாங்கள் கவனித்தோம். முட்டையிடுவதைக் கண்காணித்தோம். குருவி திரும்பியது எஜமான்; ரூபத்தில் வீட்டை வைத்திருந்த எங்களுக்கு மீட்பைப் போதித்தது அது மேற்கிலிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள்” எனப் போகும் அக்கவிதை. ஆனால் மணியின் தவிட்டுக்குருவி எளிமையை, வல்லமைக்கு எதிராக முன்னிலைப்படுத்தி, வெற்றியையும் ஊர்ஜிதப்படுத்துகிறது. மழைத் துளியின் உதவியோடு அவநம்பிக்கையும், சிதைவும் நிறைந்த நகரத்தின் அதிகாரியான கடவுளுக்குச் செருப்படி தருகின்ற அறமுடையது அழகற்ற இந்த தவிட்டுக்குருவி. “காற்றைப் போல் எங்கும் வியாபித்திருக்கிறது அதிகாரம்” எனும் கிராம்ஸியின் கூற்றைப் போல, அதிகாரத்தின் படிமமான, அனைத்திலும் நிரம்பிய காற்றைப் போன்ற கடவுளின் ஆதிக்கத்தை மறுதளிக்கும் தவிட்டுக் குருவியினைப் பற்றிய விவரிப்பு மிக அற்புதம். “பாசிசம் அரசியலை அழகியல் ஆக்குகின்றது. கம்யூனிஸம் அழகியலை அரசியற் படுத்துகின்றது” என எங்கோ படித்த நினைவு. அழகற்ற இத்தவிட்டுக் குருவியை மணி உருவாக்குவதே ஒரு எதிர் அழகியல் உத்தியோடுதான். அதன் சாம்பல் நிறத்திற்கு இந் நகரத்தின் இல்லாத வனங்களைப் பொசுக்குகிறார் அலகிற்கு - சோடியம் விளக்கின் செம்மஞ்சு ஒளியைச் சேகரிக்கிறார். சீரற்ற அதன் பாடலுக்கு - வாகன இரைச்சலைப் பயன்படுத்திக் கொள்கிறார். ‘கடவுளுக்கும் சிற்பிதானே கண்ணைத் திறந்து வைக்கிறான்’ என்பது போல மணிக்கு இந்தத் தவிட்டுக் குருவியின் மூலமாக ஏராளமான கவிதைகள் வாய்க்கின்றன. “நகுலன் ஒரு பூனை போல வாசகங்களுக்கு ஊடே அலைந்தபடி தாளிருக்கிறார்” என்பார் எஸ்.ரா. ஒரு பகடிக்காக மணி ஒரு mouse ஐப் போல அலைகிறார் என்று சொன்னாலும் - உண்மையில் அவர் ஒரு தவிட்டுக் குருவியைப் போலத்தான் ஊடாடிக் கொண்டிருக்கிறார். தொகுப்பின் பல கவிதைகள் மேற்சொன்ன கவிதையினைப் போலத் தனித்த கவனிப்பும், வாசிப்பும் கோருபவை. “தன் மனைவியின் நிர்வாணத்தோடு, அவளோடு வேறொருவரின் நிர்வாணத்தையும்” பார்த்துக் கொண்டு நீந்துகின்ற சாதுவான பொன்னிற மீன், ஜப்பானியக் கவிஞரான ஹன்டாரோ தனிக்காவாவின் தங்க மீன் அல்ல. “பெரிய மீன் பெரிய வாயுடன் தின்கிறது மத்திய தரத்து மீனை மத்தியதர மீன் தின்கிறது சின்ன மீனை சின்ன மீன் தின்கிறது அதைவிடச் சிறிய மீனை வாழ்க்கை வாழ்க்கைக்காகத் தியாகம் செய்யப்படுவதால் வெளிச்சம் ஒளிர்கிறது. சந்தோஷம் சந்தோஷமின்மையால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. பூக்கள் கருவுறுகின்றன கடலின் ஆழ்ந்த சந்தோஷத்திலும் கூட ஒரு துளி கண்ணீர் உருகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்பட வேண்டும். ஆனால் மணியின் கவிதைகள் பல ஒரு சந்தோஷம் எப்படி நைச்சியமாக மற்றொரு சந்தோஷமின்மையால் கொழுக்கிறது எனச் சுட்டுபவைதான். செவ்வந்திப் பூக்கள் சிதறிய மயானம் எனும் கவிதை அதனைத்தான், “இந்தப் பகுதியின் வல்லவர்கள் தங்களின் பிரியமானவர்களைப் புதைத்த இடத்தின் மீது கான்கிரிட்டால் ஒரு சதுரக் கட்டடத்தை எழுப்புகிறார்கள் சாமானியர்கள் துலுக்கமல்லிப் பூவையோ செவ்வந்திப் பூவையோ தூவி விட்டுச் செல்கிறார்கள்” என்று சொல்கிறது. புலம்புதலோ, கழிவிரக்கமோ, உரத்த கோபமோ, குற்றஞ்சாட்டுதலோ அற்ற ஒரு unromantic மொழி மணியுடையது. அதுவே அவரது கவிமொழியின் தனித்தன்மையும், ஈர்ப்பும். தொகுப்பு முழுவதுமே ஹர்லிக்ஸ் பாட்டிலில் அடங்கும் மழை யைப் போல ஒரு ஷீணித்த குரல் - நகர மனிதனின் சிதைவை, அதனூடகவும், எளிய அறமென ஒரு தவிட்டுக் குருவியைப் பற்றிக் கொண்டிருக்கின்ற அவனுடைய உயிர்ப்பை - நமக்குச் சொல்லிக் கொண்டே செல்கிறது. அது அடுத்தவர்களின் கருணையை வேண்டாத நகரத்தின் ஒதுக்கத்தையும், நம் துக்கம் நமக்கேயானது என்கின்ற யதார்த்தத்தையும் புரிந்து கொண்ட சமகாலத் துக்கத்தின் குரல், அந்தத் தனிமையையும், கைவிடப்படுதலையும், நம்பிக்கையின்மையையும், கவிதைகளின் வழியே கண்டு கொண்டு, நைலான் கயிறுகளிலிருந்து மீண்டு வர வழிதேடுகின்ற சமகாலக் கவிஞரின் குரல். “உண்மை மிக நுட்பமானதும் எளிதில் சிதைந்து விடக்கூடிய நொய்மையானதும் கூட. அதன் தாத்பர்யம் மகத்தானது. அத்தகையதை வெளிப்படுத்தத் தகுந்ததோர் மொழி வேண்டும். அதுவே கவிதை” எனும் தேவதேவன் கூற்று எவ்வளவு உண்மை. அப்படிப்பட்டதொரு மொழிவாகு, (உரைநடைத் தன்மையின் கூறுகளே அதிகமென்றாலும்), மணிக்கு வாய்த்திருக்கின்றது. கறார்த்தன்மையைக் கவிதையில் லாவகமாகக் கையாளுகின்ற கலை மணியின் மொழிநடை. “எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்கையில்லை” எனும் இத்தாலியின் பாஸோலிணியின் தொனியே அவரது கவிதைகளின் அடிநாதம் இந்த கறார்த்தன்மையோடு, தனது இருப்பு, காதல், அன்பு, நட்பு, மழைத்துளி இவற்றின் மீதான நம்பிக்கையையும், நேசத்தையும் சேர்ந்து சொல்கின்ற ஒரு மொழிநடை அவருடையது. அதாவது - உணர்ச்சியினை அறிவின் தாக்கம் கொண்டு கத்தரித்தாலும், சிறு தளிர் ஒன்று போன்சாயின் கிளையில் துளிர்க்கையில், புன்னகையோடு அதற்கு முத்தம் தருகின்ற ஒரு நெகிழ் மொழி வேண்டுமல்லவா - அதுவே மணியின் கவிதை நடை. “போக்கிடமில்லாத மழை முறிந்த பிரியமென நகரச் சாலையின் குட்டைகளில் கொஞ்சமாகவும் தங்க மீன் நீந்தும் இந்த ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள் மீதமாகவும் அடைந்து கொண்டது” என்பது இரக்கம் கோராத, ஆனால் தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிற மொழிதான். இன்னொரு சிறப்புக் கூறு - கவிதைகளில் பெயர்களையும், நேரம், நாள் பற்றிய குறிப்புக்களையும் இணைத்தபடி எழுதியிருப்பது. பொதுவாக நவீனக்கவிதைகள் தன்மை, முன்னிலை இவற்றை வெளிப்படையாகச் சுட்டுவதில் நம்பிக்கை கொள்வதில்லை எனும் கோட்பாட்டைப் போட்டு உடைக்கிறார் மணி - இந்தப் புது உத்தியினால். பேச்சு வழக்கில் பெயர் சுட்டிப் பேசுகின்ற சகஜ பாவத்துடனான இவ்வகைக் கவிதை மொழி கவிஞனை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தாமல், வாசகனைச் சட்டென இழுத்துக் கொள்கின்ற நுட்பம் வாய்ந்தது. “யாரோ பறக்கச் செய்த பட்டத்தின் கயிறு வெங்கடேஷின் கழுத்தை அறுத்திருக்கிறது” “கௌசிக் துப்பாக்கி வாங்கியிருப்பதாகச் சொன்னான் ஸ்ரீலதாவின் குடும்பத்தைத் தீர்க்கப் போகிறானாம்” “மார்க்கெட் சாலையின் மூன்றாவது திருப்பத்தில் ஷோபனா விழுந்துகிடந்த இடத்தில் வட்டத்தினை வரைந்து கொண்டிருந்தார்கள்” “துடைக்க எந்தக் கையும் நீளாத வெறுமையில் ஈரம் காய்ந்த கண்களுடன் ஏங்கிக் கொண்டிருக்கிறான் நவ்நீத்” அதைப் போலவே எண்கள் - நிமிடத்தை, நேரத்தை, இருக்கையைச் சுட்டுகின்ற எண்கள் தேதிகள்; - சம்பவங்களை, அதன் நினைவினை மறுபடி எழுப்புகின்ற தேதிகள்; ஒரு தவிர்க்கவியலாத செய்தியினைப் போன்ற பாவனையுடன் இவரது கவிதைகளில் பதியப்படுகின்றன. “8:25 க்கு திருப்பூரை வந்தடைய வேண்டிய தொடரூர்தி இன்று 35 நிமிடங்கள் தாமதமாக... S7 பெட்டியின் 35 வது இருக்கையில் நளினமாகப் பாப்கார்ன் தின்று கொண்டிருக்கிறாள் ப்ரவீனா 36 வது இருக்கையில் இருந்தவன் ஒரு புத்தகத்தில் 217 வது பக்கத்தின் நுனியை மடித்துவிட்டு உறங்க எத்தனிக்கிறான்.” (35 நமிடங்கள் காலதாமதாமாக வந்த சேர்ந்த தொடரூர்தி) “இரவே வராத இந்நகரத்தின் இரண்டாவது 12 மணியின் 32வது நிமிடத்தில் அவன் கரியநிறப் பறவையொன்று நசுங்கிக் கிடந்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறான்” (மழைக் காலம்) “இரண்டாவது வாரத்தின் ஆறாம் நாளில் நம் முதல் முத்தத்தைப் பரிமாறிய போது பீடி மணக்கிறதென சிரித்தாய்” (புனிதக் காதல்) இப்படி ஒரு வசனத்தை உங்கள் காதலியிடம் பிற்பாடு சொல்வீர்கள் என்றால் எவ்வளவு துயர் மிகுந்த, தொல்லை தருகின்ற, ஞாபகப் பிசாசினைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றவனாக அவன் இருப்பான் என்று காதலி ஓடிப்போகலாம்! கவிதையை “The Bloodiest of the Art” என்று சொன்ன துருக்கியக் கவிஞர் நஹீம் ஹீக்மெத் சுயசரிதம் என்றொரு கவிதையை இதுபோல எண்கள், தேதிகள், நாட்கள் - இவற்றின் குறிப்புக்களோடு எழுதிருக்கிறார். “நான் பிறந்த வருடம் 1902 பிறந்த இடத்திற்கு ஒரு தடவைகூடத் திரும்பிச் செல்லவில்லை…” எனத் தொடங்கும் அக்கவிதை, “லெனினை நான் என்றும் பார்க்கவில்லை 24 இல் அவரின் சவப்பெட்டிக்கருகில் நின்று கவனித்தேன் 61 இல் நான் பார்க்கும் சமாதி அவரது புத்தகங்களே 52 இல் நான் நான்கு மாதங்கள் மல்லாக்கக் கிடந்தேன் 21 இலிருந்து பெரும்பான்மையோர் செல்லும் இடங்களுக்குச் சென்றதில்லை. மசூதிகள், தேவாயலங்கள், கோயில்கள் - ஆனால் குடித்து முடித்த காபியின் மிச்ச வண்டல்களைப் பார்த்து குறிகேட்டிருக்கிறேன்… எனத் தொடர்கின்ற அக்கவிதை, “நானொரு மனித ஜீவன் போல் வாழ்ந்தேன் என்று சொல்லவியலும் மேலும் யாருக்கு தெரியும் எவ்வளவு நாள் வாழ்வேன் இன்னும் என்னென்ன நடக்குமென்று” என்று முடியும். மணியின் இந்தத் தகவல்கள் அனைத்தும் அவரொரு மனித ஜீவன் போல் வாழ்ந்தார், வாழ்கிறார் என்பதற்கான தரவுகள் மட்டுமல்ல - அந்தப் பதிவுகளில் ஒரு தனித்துத் தெரிகின்ற சகஜபாவம் ஒன்று இருக்கிறது. ஒரு உருவக மொழிவகையினைத் தவிர்த்துவிட்டு, தன்மை விளித்தலோடு, நிகழ்வுகள், மனிதர்கள் பற்றிய குறிப்புக்களைப் புகுத்துவது என்பது ப்ரக்டின் கவிதைச் சாயல் கொண்டதுதான். “ப்ரக்ட் கவிதையில் ‘தன்மையில்’ பேசும்போது கூட எல்லோருக்குமாகவும், அரசியல் பூர்வமாகவும் பேச முடிந்திருக்கிறது. உருவகங்கள், உவமைகளைத் தேடிச் செல்லாதிருத்தலையும், ஆடம்பர சுய மொழியியல் துணைச் சேர்க்கைகளைத் தவிர்த்தலை தம் நோக்கமாகக் கொண்டு தம் கவிதைகளில் சாதிக்கவும் செய்தவர் ஃபரக்ட்” என்னும் பிரம்மராஜனின் கூற்று (சமகால உலகக் கவிதை:93) இங்கு நினைவு கூறத் தக்கது. மணியும் அவ்வகைப் புரிதலற்று, அல்லது அதற்கான யத்தனங்களின்றி மிக இயல்பாக இவற்றை எழுதியிருந்தாலும், அவை மனிதன் ஞாபகங்களின் பிரதியாக அலைவதனையும், அதே பொழுதில், இந்த நாட்கள், தேதிகள் இவை மாற்றப்பட்டாலும் நிகழ்வுகள் ஒரே மாதிரி வெவ்வேறு மனிதர்களுக்கு காலந்தோறும் நடைபெறுகின்ற யதார்த்தத்தினையும் சுட்டுவதாக அமைந்துள்ளதனையும், அவற்றில் நான் மேற்சுட்டிய ப்ரக்டின் “தன்மையில்” பொதுவாகப் பேசுகின்ற சாயல் இருப்பதனையும் மறுக்க முடியாது. இந்தக் கவிதைகளின் இன்னொரு மிக முக்கியமான பாடுபொருள் - தற்கொலை. Tagore ஐப் பற்றித் தான் எழுதிய ஒரு கட்டுரையில் சத்யஜித்ரே Tagore ஐ - அவரது தொனியைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஒரே ஒரு சொல்தானுண்டு - அது மழை என்கிறார். மணியின் தொனி - இக்கவிதைகள் மூலமாகத் துலங்குவது - தற்கொலைக்கான ஏக்கமும், செய்து கொள்ளமுடியாமையின் யதார்த்தமும்தான். மௌனத்தின் விஷம்: “நேற்று நிகழ்ந்த மரணத்தையொத்திருக்கிறது இந்த எதிர்பாராத மழை இந்தச் சில்லிடும் பிரியம் இந்த இதழ் உலர்ந்த முத்தம் இன்று நிகழும் கொலையை முடிவு செய்கிறது இந்தக் கோடையின் புழுக்கம் இந்த இரவின் மௌனம் இந்தக் கணத்தின் பதட்டம் நாளை நிகழவிருக்கும் தற்கொலையை உறுதியாக்குகிறது இந்தச் சொல்லின் வன்மம் இந்த மௌனத்தின் விஷம் இந்த துரோகத்தின் சிரிப்பு” மேற்சொன்ன கவிதை ஏறத்தாழ அனைத்துப் படைப்பாளிக்குமான அனுபவக் கொடை. “உறங்கச் செல்கிறீர்கள் இரவின் பெருமை உங்களை விழிக்கச் செய்கிறது அருகில் கிடக்கிறது ஒரு நைலான் கயிறு”. (நைலானில் சிதையும் பிம்பம்) இந்த நைலான் கயிறுதான் - “என்னால் என்ன செய்ய முடியும்… இவ்வளவு அபரிமிதங்களுடன் ஒரு அளவிடப்பட்ட உலகத்தில்” என்று கேட்ட, தனது 48 வயதில், தற்கொலை செய்து கொண்ட ரஷ்யக் கவிஞர் மரீனா ஸ்வெட்டயேவாவாவிற்கும் அருகில் இருந்து. இந்த நைலான் கயிறுதான் “மரணம் வருகிறது ஒரு எஜமானாக ஜெர்மனியிலிருந்து” என்று தனது பிரசித்தி பெற்ற மரணத்தின் ஃபியூக் இசை எனும் கவிதையில் எழுதிய, செயின் (Sein) நதியில் மூழ்கித் தற்கொலை செய்த கொண்ட பால் ஸெலானுக்கு அருகில் இருந்தது. இதே நைலான் கயிறுதான் “ஒரு நாள் இந்த நூற்றாண்டு தெலூஸியின் நூற்றாண்டு என்று அழைக்கப்படும்”. என்று ஃபூக்கோவால் புகழப்பட்ட, தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல் வழியே குதித்துத் தற்கொலை செய்து கொண்ட தெலூஸிற்கும் அருகில் இருந்தது. நிராகரிப்பைப் போர்த்திக் கொண்டவன் (கவிதையில்லாத பகிரல் மட்டுமே அது) “ஓருவன் கொதிக்கும் சுடுமணலில் மென்பாதங்கள் வதங்கிப் போக வழி தெரியாமல் அலையும் பூனையென இறக்கத் துவங்கினான்” என மணி எழுதுகையில் காற்றாடியையும், வேப்பமரக்கிளைகளையும், சூரிய ஒளியையும், பப்பாளியையும் ரசித்த, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துக் கொண்ட ஆத்மாநாமும், பதட்டமில்லாமல் ஒரு தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, தனது சட்டைப்பைகளில் கற்களை நிரப்பிக் கொண்டுத் தன் வீட்டின் பின்புறம் ஓடிய நதியில் இறங்கித் தற்கொலை செய்து கொண்ட வர்ஜினியா வுல்ஃபும், இன்னும் எமிலி டிக்கன்ஸன், ஸில்வியா ப்ளாத், மாயாகாவ்ஸ்கி - எல்லோரும் அதே நைலான் கயிறு மிக அருகிலிருக்கத் தோன்றுகிறார்கள். இப்படித்தான் - ஒரு கவிதைத் தொகுப்பில் நீங்கள் அந்தக் கவிஞனை மட்டும் பார்ப்பதில்லை - தற்கொலையின் ருசி கண்ட பலரையும் நினைவூட்டிய ஒரு தொகுப்பாக இது எனக்கு அமைந்துவிட்டது. மற்றுமொறு தொடர்கின்ற குறீயிடு மழை - காலம், மரணம், புலன்கள், அறிவு - இப்படி எல்லாவற்றையும் மழை எனும் ஒரு சொல்லில் மணிக்குச் சொல்லிவிட முடிகிறது. விதவிதமான வார்ப்புக்களில் மழையை ஊற்றித் தர முடிகின்றது அவருக்கு. ஒருவகையில் மணியின் ஆன்மா இந்த ‘மழை’ தான். ஆன்மாவைப்பற்றி “எல்லாச் சாலைகளும் உனக்காய் ஏகுகின்றன ஆனால் அவற்றில் எதுவுமே உன்னை எட்டுவதில்லை” எனப் படித்த நினைவு. மணிக்கு மழை தான் ஆன்மா எனச் சொல்வேன் நான். ஆனால் ஒரு grotesque தன்மையுடன் கூடிய மழை - வழமையான romanticising மிகைபுனைவு மழையல்ல அது. “என்னிலிருந்தே வெளியேறினேனினேன் நான் என் பின்னாலிருந்த கதவை அடைக்காமலே” “என்னிடமிருந்து நான் வந்துகொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்” என்ற நகுலனின் வரிகளை ‘சுயம்நசித்தல்’ (T.S.Eliot ம், பிரம்மராஜனும் முன்னவருக்கும் de personalisation) எனும் கவிதைக் கோட்பாட்டிற்கு உதாரணமாகச் சொல்வார்கள். மணி இந்த சுயம்நசித்தலை தனது ஆன்மாவை மழைக்கு நகர்த்துவதன் மூலம் நிகழ்த்தி, வந்து கொண்டும், போய்க் கொண்டுமிருக்கிறார். ஓயாதமழை, பெருமழை, அதீதமானது மட்டுமல்லாமல் மூர்க்கமுமான காதல், காம மழை, துரோகமும், அவநம்பிக்கைகளின் கசப்புக்களும் வழியும் அவரது வீட்டின் மீது பெய்யும் கடவுளின் மழை, கான்கிரிட் கட்டிடங்கள் தன் இசையைத் தின்றுவிட்ட வெறுப்பில் நகரத்தின் ஜன்னல்களை ஓங்கி அறையும் மழை, திரைகள் விலகிய ஜன்னல்களில் டிவி ஒளிரத் துவங்கிய போது தன் தோல்வியின் துக்கத்தில் துவண்டு அமைதியடைகின்ற மழை, கடைசியில், போக்கிடமில்லாமல், முறிந்த பிரியமென, ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள் மீதமாக அடைந்து கொள்ளும் அந்த மழை - அது மணியின் ஆன்மாவேதான். சிக்னலில் சலனமுறும் புறா எனும் கவிதை ஒரு Surreal கவிதைக்கான மிகச் சிறந்த உதாரணம். பொதுவான கண்கள் பார்க்காததைக் காண்கின்ற பார்வை ஒரு நுட்பமான கவிஞனாக மணிக்கு வாய்த்திருக்கிறது என்பதற்கு சலனமில்லாத வெறும் பகல், சுழன்று விழும் இலை டைனொசர்களுடன் வாழ்பவன் என்று பல கவிதைகளைச் சொல்லலாம். ஐந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட ஐம்பதிற்கும் குறைவான இந்தக் கவிதைகளின் எண்ணிக்கை ஏழ்மையே மணியை ஒரு ராஜாவாக்கியிருக்கின்றது. இந்த வருடத்தின் முதல் தற்கொலை செவ்வந்திப் பூக்கள் சிதறிய மயானம் - இவை இரண்டு போதும் மணி மிக முக்கியமான கவிஞராக உங்களை ஊர்ஜிதப்படுத்த இந்த இரண்டு கவிதைகளே போதும் - நீங்கள் ராஜாவேதான்! எனக்குக் கூடுதல் அணுக்கமான ஒரு கவிதை சாயல்களோடு வாழ்தல் ஏனெனில் நினைவுகளில், ஞாபகங்களில் வாழ்ந்து, உயிர்ப்பவள் நானென்பதால் ‘சாயல்களிலிருந்து விடுபடுதல் சுலபமில்லை’ என்பதால் - “மறக்கப்பட வேண்டியவர்கள் ஏதாவதொரு சாயலில் ஏதாவதொரு சாலையில் எதிர்பாராத பொழுதில் நம்மைக் கடக்கிறார்கள்” எனும் வரிகள் என்னைத் தம்மோடு இழுத்துக் கொள்கின்றன. இது போல இத்தொகுப்பில் என்னைச் சட்டென ஈர்த்து இழுத்துக் கொண்டன பல தெரிப்புக்கள். உதாரணத்திற்குச் சில: “தன் குழந்தை இறந்ததன் ஆழ்ந்த துக்கத்திற்குத் தயாராகும் ப்ரனீத்துக்கும் தெரியலாம் காமத்தின் நித்யம் ஓ அநித்யம்” “எப்பொழுதும் ஒரு சொல் அல்லது ஒரு வாக்கியம்தான் உறவின் விரிசலுக்குக் காரணமாகிறது” “எதிர்க்கவே முடியாத மனிதனிடம் மறுப்பு சொல்வதற்கான வழிமுறைகளை கூகிளில் தேடி இரவுகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன” “மழைக்கும் அவனுக்குமான பந்தம் அறுந்து போனது தீராத காமமும் ஓயாத மழையும் பொய் என்று அவள் சொன்னபோது” “பொம்மைகள் கிறுக்கப்பட்டிருக்கும் அறையின் சுவர்களில் வழிந்து கொண்டிருக்கிறது தனிமையின் குளிர்” “எந்த நடிகையும் அழுவதில்லை என் அறைச் சுவர்களில்” “மரணத்திற்கும் உடல் சிதறலுக்குமான இடைவெளியில் நிகழ்ந்த விபத்தொன்றில் சிவப்புச் சாயத்தில் விழுந்த துணியெனக் கிடந்தவனை நிலம் உரச இழுத்தார்கள்” “துளி விஷம் கூரிய கத்தி கொஞ்சம் வன்மம் போதுமானதாயிருக்கிறது உங்களின் பிரியத்திற்கும் என் காமத்திற்கும்” “சொல் பொருள் நிறைந்தது அது சூல் கொண்டு உயிர்களால் நிரம்பி இருக்கிறது” என்று நெரூடா சொன்னது உண்மைதான். வெறும் சொற்கள், கவிதையாகும்போது உயிர்களால் நிரம்பித் ததும்புவதை இத்தொகுப்பின் கவிதைகள் எனக்கு உணர்த்தின. சமகாலக் கவிஞர்களில் தவிர்க்க முடியாத ஒரு இடத்திற்குக், கவனம் தர வேண்டியதொரு படைப்பாளியாக மணிகண்டன் வந்திருக்கிறார் என்பதற்கு இத் தொகுப்பு ஒரு ஸ்தூல காட்சி. நைலான் கயிறு, பனிக்கட்டி, பேய்மழை - இவைகளை அணைத்தபடி, இவைகளோடு பயணிக்கின்ற இந்த கவிஞனை நான் கூடுதலாக விரும்புவது - இத்தனைக்கும் பின்பான, வாழ்வின் மீது அவனுக்கிருக்கின்ற இந்த நேசத்திற்கும், நம்பிக்கைக்காகவும்தான் - பின்வரும் இக்கவிதைக்காகத்தான் - “இந்த அடர்வனத்தின் ஓவ்வொரு பறவையும் உங்கள் அம்பு நோக்கியே வரும் என்கிறீர்கள் உங்களைவிடவும் அந்தப் பறவைக்குத் தெரிந்திருக்கிறது வானம் பெரிதென” அந்த வானம் பெரிதென தெரியாதவர்களல்ல தெலூஸிம், ஆத்மாநாமும், அன்னா கரீனானாவும், மாயாகாவ்ஸ்கியும், ஸில்வியாவும். ஆனாலும், அம்பை அவர்கள் காதலித்துவிட்டார்கள். நமக்கும் காதலுண்டு என்றாலும், வானம் பெரிதாக வசீகரிக்கவில்லை என்றாலும், வாழ்ந்துதான் தொலைப்போமே என்றில்லாமல் வாழ்ந்துதான் பார்ப்போமே - மணி! வாழ்த்துக்கள் என்று சொல்லி இக் கவிதை தொகுப்பினை வரவேற்கின்ற சம்பிரதாய உரை அல்ல இது. தமிழ்க் கவிதை படைப்புலகில் ஒரு முக்கியமான ஆளுமையாகப் பேசப்படவேண்டியவர் மணி என்பதற்கான சாட்சிகளுடான ஒரு பகிரல்! ஒரு சோறு பதமாகப் பின்வரும் மிக முக்கியமான சாட்சி, இக்கவிதை:

தொடர

பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி - மனோ மோகனின் கவிதைகளை முன்வைத்து ஒரு உரையாடல்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

உலகமகா மக்கள் கவிஞன் பாப்லோ நெருடா அவரது நோபல் பரிசு ஏற்புரையில், 'ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் உள்ள ஒரே வேறுபாடு நான் என் சித்தப்பிரமையை அறிந்தே இருக்கிறேன் அது கொடுமையை இன்னும் அதிகமாகத்தான் வைத்திருக்கிறது. நான் தரிசித்ததனை ஒருபோதும் அப்படியே சொல்ல முடியாது, சும்மா இருக்கவே முடியாது, வெளிப்பட்டே தீர்கிறது வெறி' என்கிறார். "கவிதை எளிமையாகவும் அதே வேளையில் ஆழமாகவும் தனக்கே உரிய அழகியல் கூறுகளுடன் இருக்க முடியாதா என்னும் கேள்விகளுடன்" (இன்குலாப்) எழுதும் நான் கவிதை என்று உண்மையைப் பேசுவது என்றும் நம்புபவள் என்பதால் மனோவின் இத்தொகுப்பு எனக்கு மனசிற்கு மிக நெருக்கமாகவும், தமிழின் நவீனத்திற்கு பின்பான கவிதைப் பரப்பில் முக்கியமான ஒன்றாகவும் படுகின்றது. "உர்-பாசிசம் (நித்திய பாசிசம் என்றும் பொருள்) நம்மைச் சுற்றிலும் இன்றும் இருக்கிறது; சில நேரங்களில் சாதாரண உடைகளில். எவராவது 'ஆஸ்விட்ச்சை மீண்டும் திறக்க வேண்டும். இத்தாலிய சதுக்கங்களில் கருப்புச்சட்டைகள் பேரணி நடத்த வேண்டும்' என்று சொன்னால், நமது சிக்கல் எளிதாகிவிடும். வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. உர்-பாசிசம் எந்த அப்பாவித்தனமான உருவிலும் மீண்டும் வரலாம். உலகின் எல்லா மூலைகளிலும் தினசரி அது எடுக்கும் புதுப்புது அவதாரங்களைச் சுட்டிக் காட்டுவது நம் கடமை", என்கிறார் உம்பர்தோ ஈக்கோ, (உர் -பாசிசம்' (Ur-Fascism), நியுயார்க் ரிவியூ ஆஃப் புக்ஸ், 22.6.1995). இப்பாசிசத்திற்கு எதிராகக் கவிதை இயக்கம் குறித்த ரமேஷின் முன்னுரையோடு இந்நூல் வெளிவந்திருக்கின்றது. கொலையும், தற்கொலையும் செய்யத் தூண்டுகின்ற சூழலில், சிதையாமல் இருக்க முயல்வதற்கும், சிதைவதற்குமான ஊடோட்டமே இக்கவிதைகள். "மோலியரின் லெ பூர்ஷ்வா ஜென்டில்ஹோம் என்ற நாடகத்தில் யோர்தான் என்ற மனிதர் 'நான் வாழ்க்கையில் இதுவரை உரைநடையா பேசிக்கொண்டிருந்தேன்' என்று ஆச்சர்யமடைகிறார். அதுபோல ஒருவகையான கவிதை மொழியிலேதான் நாமும் வாழ்நாள் முழுவதும் பேசுகிறோம் என்பதை அறிந்தால் நாமும் ஆச்சர்யம் அடைவோம். பலத்த மழை - நனைந்து வருகின்ற நண்பரைப் பார்த்து வீட்டிலிருக்கின்ற நண்பர்" அடடா, கொஞ்சம் நனைந்து விட்டாய் போலிருக்கே" என்கிறார் - முழுக்க நனைந்தவரைப் பார்த்து கொஞ்சம் நனைந்து விட்டாய் என்பது குறைநவிற்சி (under statement). பதிலுக்கு அந்த நனைந்த நண்பர் - "கொஞ்சமா? வானம் கூரையைப் பொத்துக் கொண்டு கொட்டுகிறது" என்று சொல்வது இல்பொருள். அதோடு, "நான் ஊறுகாய் போல் ஆகிவிட்டேன்" என்பது உவமையணி - இப்படித்தான் வாழ்க்கையில் அணிசார்ந்த மொழியைப் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் க. பூரணச்சந்திரன். கவிதை அல்லது கலைகளின் பிற வடிவங்களில் இந்த அணிசார்ந்த, நேர் அர்த்தத்திலிருந்து விலகுதல் நமக்கு இன்னும் சற்று கூர்மையாகச் சாத்யப்படலாம் என அங்கு நுழைந்தால், இந்தச் "சொல்லணி அல்லது விலகல் எதிலிருந்து விலகிப் போகின்றதோ அந்தச் சாதாரண, நேர் அர்த்தம் என்ற கருத்தையே அது கேள்விக்குள்ளாக்குகிறது" என்கின்ற அவர், சான்றாக, டெரிடா "உருவகம் குறித்த கோட்பாடு விளக்கங்கள் யாவும் தவிர்க்கவியலாத வகையில் உருவகங்களையே சார்ந்திருப்பதைச்" சுட்டிக்காட்டுகிறார். அடிப்படையிலேயே மொழி என்பது ஒன்றைச் சொல்லி மற்றொன்றை உய்த்துணர வைக்கும் குறியீட்டு இயல்பு கொண்டதுதானே? இந்தப் பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி என்பது எனக்கு ஒரு குறியீட்டு படிம உருவகம் தான் -அது வெறும் உவமையல்ல. தலைப்பே மிக நீண்ட உரையாடல்களை எனக்குள் நிகழ்த்துகின்றது. "இலக்கியம் என்பது உள்ளுணர்வால் உருவாவதன்று. அது செயற்கையாக செய்யப்படுவது" என்ற நோக்கை ரஷ்ய உருபுவாதம் முன்வைத்ததை நாம் அறிவோம். எனக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும், இலக்கியத்தைச் 'செய்வதற்கு' மிக முக்கியமான தேவையாக "பரிச்சய நீக்கம்" 'defamiliarization' என்ற ரஷ்ய உருபுவாதிகளின் கருத்து எனக்குக் கொஞ்சம் உடன்பாடானது. "முதன்முதலில் இக்கருத்தைக் கூறியவர் விக்டர் ஷ்க்ளாவ்ஸ்கிதான். தமது உத்திநோக்கில் கலை (ஆர்ட் ஆஸ் டெக்னிக்) என்ற நூலில் அவர், 'பழக்கவயப்படுதல் பொருட்களை, உடைகளை, மரச்சாமான்களை, ஒருவரது மனைவியை, போரின் பயத்தை - யாவற்றையும் விழுங்கி விடுகிறது. பல்வகை மனிதர்களின் சிக்கல்மய வாழ்க்கைகளும் நனவற்றநிலையில் செல்வதாக இருப்பின், அவை இருந்தும் இல்லாததுபோல்தான். வாழ்க்கையின் உணர்வை மீண்டும் பெற உதவுவதற்காகத்தான் கலை இருக்கிறது. பொருட்களை நாம் உணரவும், கல்லைக் கல் தன்மையுடையதாக ஆக்கவும் அது இருக்கிறது. கலையின் இறுதிப்பணி, பொருட்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்துகளை அல்ல - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படி உணரவைப்பது. இதற்குக் கலை கையாளும் உத்தி, பொருட்களைப் பரிச்சயமற்றதாகச் செய்வது - அவற்றின் வடிவங்களைச் சற்றே இருண்மைப்படுத்தி, நாம் அவற்றை உணர்தலாகிய செயலைக் கடினமாக்குவதும், நீண்டநேரம் கொள்ளச்செய்வதுமாகும். கலையில் அது உருவாக்கப்படும் நிகழ்முறைகள் முக்கியமே ஓழிய இறுதிப்படைப்பு அல்ல. ஒரு பொருளின் கலைத்தன்மையை அனுபவப்படுத்தும் வழி தான் கலை. அப்பொருள் முக்கியமன்று' என்று சொல்கிறார். அதாவது ஒரு பொருளை நமக்கு முற்றிலும் பரிச்சயமற்றதாகத் தோன்றச் செய்வதுதான் பரிச்சயநீக்கம் என்னும் உத்தி. இந்த உத்திக்கு இன்னொரு பெயர்தான் கலை, பரிச்சயநீக்கம் என்பது என்றும் மாறாத ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு செயல்முறை அல்ல. எந்தெந்த நேரங்களில், எந்த எந்த முறைகளில் பரிச்சய நீக்கம் செய்ய முடியுமோ அவற்றைக் கலை கையாளவேண்டும். இதனை மென்மேலும் செப்பமாக்கியவர் பக்தின். அவரது பார்வையில் மொழியின் குறிகள் மிக முக்கியம். சொற்கள் என்பன நிலையான அர்த்தம் பெற்றவை அல்ல பக்தினுக்கு. அவை சமூகத்தின் பல்வேறு தளங்களில் காணப்படும் பல்வேறு தன்மைகளும், போராட்டங்களும் நிரம்பியவை. It's a polyphony என்று மொழியை அதனாலாயே அவர் சுட்டினார்" (க. பூரணச்சந்திரன்). சொற்கள் போரிடும் கருத்தியல்களின் செயல் தளங்கள் என்ற பக்தினின் கூற்றுப்படி பார்த்தால் பைத்தியக்காரியும், பட்டாம்பூச்சியும் அப்படித்தான். அவற்றை defamiliarize செய்து, பழக்கவயப்படுதலின் தளை நீக்கி, அவற்றைப் பற்றிய நம் கருத்துக்களை அல்ல - அவை எப்படியிருக்கின்றனவோ அப்படி உணர வைப்பதுதான் மனோவின் இந்தத் தலைப்புத் தேர்வு. நினைவுபடுத்துகிறேன் - கலையில் "அது உருவாக்கப்படும் நிகழ் முறைதான் முக்கியமே ஓழிய இறுதிப்படைப்பு அல்ல" எனும் போது - நாமறிந்த பயித்தியக்காரியை, வண்ணத்துப் பூச்சியை - அவை குறித்த நாம் பரிச்சயப்படுத்தியிருக்கின்ற தன்மைகளை நீக்கி, புத்தம் புதிதாக - நமக்கு முற்றிலும் பரிச்சயமற்றதான ஒரு வண்ணத்துப் பூச்சியை பயித்திக்காரியை நமக்குத் தருவதுதான் மனோவின் கவிதைத் தலைப்பும் - உத்தியும். இந்தத் தலைப்புத் தேர்விற்காக, எனக்கு அவரிடம் தர அன்பு நிறைந்த புறங்கை முத்தம் ஒன்று உண்டு. பயித்தியக்காரியின் பட்டாம் பூச்சி தான் அவருடையது என்பதற்குத் தான் அம் முத்தம். இது பயித்தியக்காரனின் பட்டாம்பூச்சி அல்ல என்பதற்கும் சேர்த்துத்தான். பயித்தியக்காரியின் பெண் மொழியும், சமிக்ஞைகளும், உடல் மொழியும், இச்சைகளும், வலியும், துயரமும், கருணையும், தாய்மையையும் சொல்வதே நம் தமிழின் நாட்டார், செவ்வியல் மரபு. "சுயபோகம் முப்போகம் - விளைச்சலைப் போகமெனச் சொல்லும் மொழி பெண்ணாகியிருப்பதன்றி வேறு நிலையில்லை” என்று ரமேஷ் சக்கரவாகக் கோட்டத்தில் சொல்வதைப் போல், இது எனக்கான, இல்லையில்லை, எமக்கான, எங்களின் பைத்தியக்காரியான ஆதித்தாயின் வியர்வை நெடிக்கின்ற கரங்களுக்கான பட்டாம் பூச்சி. போதலேரின் 'கடற்பறவை'யில் Albatros - "The Prince of the clouds" எனும் பறவையைப் பற்றிய குறிப்பு ஒன்று வரும். நீண்டநாட்கள் கடல்மேல் நீரறருந்தாமல் பறக்கும் வல்லமை வாய்ந்த அவற்றின் நீண்ட இறக்கைகளே, பனிப் பிரதேசங்களில் அவை ஓய்வு எடுக்கும்போது உறைபனியில் சிக்கி மீளமுடியாமல் அவற்றிற்கு எமனாகிவிடும். பயித்திக்காரிகளான ஆதிப் பெண்களின் மரணமும் - பெண் இருத்தலின் மறுப்பும் - அப்படித்தான் காட்சிப்படுத்தப்படுகிறது மனோவின் தூண்டில்காரன் கதையில் வரும் இவ்வரிகள் அற்புதமான படிமக் குறியீடு. "பட்டாம்பூச்சியான பெண் மீன் நதியின் எல்லை கடந்து பறப்பது தக்கை ஆடும் தருணத்தை எதிர்நோக்கும் தூண்டில்காரனுக்கு ஆற்று நீரில் மிச்சமிருப்பது நீர்வெளியில் துள்ளும் பெண் மீன் பட்டாம் பூச்சியாவது பற்றிய கதைகள் மட்டுமே" "ஒரு படிமம் என்பது தான் உணர்த்தும் காட்சி அனுபவம் மட்டுமே. குறியீடோ தன்னை உணர்த்துவதன்றி, அதற்கு மேலும் பலவித அர்த்தங்களைக் கொள்ளக் கூடியது" (க. பூரணச்சந்திரன்). அபாரமான இக்குறியீடு நா. பிச்சமூர்த்தியின் முக்குளிச்சான் பறவையை எனக்கு நினைவூட்டியது. அப்பறவை பற்றி தஞ்சை பிரகாசிடமும், எம்.வி. வெங்கட்ராமிடமும் அவர் பகிர்ந்தாக வே.மு. பொதியவெற்பன் சொல்லும் செய்தி - "இது ஒரு அபூர்வமான பறவை. இது தண்ணீருக்குள் மீன் மாதிரி நீந்தி வாழும். அதே நேரத்தில் மழை பெய்யிற நேரத்துல ஆகாய வானத்தில் பறக்கும். அற்புதமான சிருஷ்டி. தண்ணீர் மழையில் கலங்கினா இதுக்குப் பிடிக்காது. தண்ணீர் அடிமட்டத்துல இருந்து நீந்தி வந்து மரத்து மேல போய் உட்காந்துக்கும். வானத்திலும் பறக்கும் இதற்கு. "முக்குளிச்சான்" என்று பெயர் வைச்ச கிராமவாசியை அவனல்லவா கவிஞன்" என்று வியந்தாராம் நா.பிச்சமூர்த்தி. அச்சொட்டாக பெண்ணிற்குப் பொருந்துகிற பறவை. அதை அப்படியே படிம வடிவில் நிறுத்துகிறது மனோவின் மேற் சுட்டிய கவிதை வரிகள். "எந்தவொரு சொல்லும் தனக்கான எல்லைக்குள் நின்று ஒரு பொருளை உணர்த்துவதில்லை எனக்கான சொல் அசைவுகளில் உருவகங்களைச் செய்கிறேன்... சொல்லற என்பதே எனது அறம்" எனும் ரமேசின் அகஉலகத்தைப், பிரதிமையாகப் சில இடங்களில் மனோவிடம் பார்க்கிறேன். "ரமேஷ் பிரேமின் திகம்பரக் கவித்துவத்துவமும், கலாப்ரியாவின் "படிம / உருவக / குறியீட்டு இடையீடில்லாத சாத்யம் கிட்டுமா என ஏங்கும் நிர்வாணக் கவித்துவத்துவமும், பிரம்மராஜன் முன்னிறுத்தும் பரக்டின் "மொழிச்சலவை கோட்பாடும்", பால் வெலரியின் "சொற்களைச் சந்தேகிக்கும் தன்மையும்" முன்னிறுத்துபவையே, சொல்லைக் கடந்த கவிந்த வெளியைப் பேசிச் செல்வனவே" என்று வே.மு. பொதியவெற்பன் ஓரிடத்தில் சுட்டியிருப்பார் (கவிதையில் சொல், மொழியில் வாழ்தலும், மொழிச் சலவையும்) அதன் தொடர்ச்சியாக இங்கு இணைந்து கொண்டிருக்கிறார் மனோமோகன். நகுலனுக்கு மஞ்சள் பூனை, வான்கோவிற்கு சுடரும் மஞ்சள் மலர் ஓவியம், நா.பிச்சமூர்த்திக்குக் பஞ்சமகாகவிஞன் (கரிச்சான், வானம்பாடி, குயில், மணிப்புறா, மைனா), யவனிகாவிற்கு கருப்பு பியர், ரமேஷிற்குப் பன்றிக்குட்டி போல மனோவிற்கு பட்டாம்பூச்சி. பறவைகள், சிறு விலங்குகள் அற்றுப்போன புதைவெளியைச் சொல்வதற்கு மனோவிற்கு ஒரு பட்டாம்பூச்சி வேண்டுமே? "கருடன் பார்த்து வெகு காலமாகிறது எப்போதேனும் வலசை போகின்றன நாரைகள் முயலும் காட்டுப் பூனையும் பிடித்து விற்றுப்போன பழைய குறவன் பிச்சை எடுக்க வேணும் வந்து போகிறான் ...... அவனது ஞாபகத்திலும் எமது திணை நிலத்தின் பச்சய வாசனை" (புதைவெளி) என்கிற ஆதங்கத்துடன், அவரிடம், இந்த பைத்தியக்கார எனக்கு, உங்களுக்கு, தனக்குதானே அன்றியும், இந்த உலகத்திற்கு கொடுப்பதற்கு ஏதுமில்லை – "சற்றுமுன் பிடித்த வண்ணத்துப் பூச்சியைத் தவிர" அவ்வண்ணத்துப் பூச்சி நிகழ் நிமிடம் தானோ? வண்ணத்துப் பூச்சிக்குப் புதிதான இறக்கைகளும், மீன் தொட்டிக்குள் நீந்துகின்ற பழக்கமும், மரணத்தில் உயிர்த்தெழும் சிறகசைப்பும் தருகின்ற இக்கவிஞன் அவை விலை பேச இயலாதவை எனவும் உறுதியளிக்கின்றான். கவிதைக்கான சொல்தேர்வு எங்கிருந்து தொடங்குகிறது எனக் கேட்கின்ற பொதியவெற்பன், "பறவைக்குப் பெயரிடுவதில் இருந்துதான் ஒரு மொழியில் கவிதைக்கான சொல் தேர்வு பயின்று வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இந்தப் பறவைக்குப் பெயரிடுவதன் மூலம் எனது மொழிக்கு ஒரு கிவதையைக் கொண்டு வருகிறேன்" என்பதைச் சுட்டி விட்டு, உதாரணத்திற்கு, ரமேஷின், 'போதையின் நிறம் காவி கவிதையின் மணம் பழம் காவி நிறப் பழம் - இது புத்தனுக்கு என் மகள் இட்ட பெயர்' என்பதைச் சொல்கிறார். சட்டைப் பையில் மாத்திரை - இது மனோ உறக்கத்திற்கு இட்ட பெயர். கூழாங்கல் - இது மனோவிற்கு சிமென்ட் ஓடுகளில் பெய்யும் மழை. நிலா ஊறுகாய் - மனோவிற்கு side dish பட்டாம் பூச்சிக்கு, விண்ணேகுகின்ற சிலுவையைத் தந்து அதனை ஒரு பறவையாக்குகிறார் மனோ- "ஓவ்வொரு வண்ணத்துப்பூச்சியைக் கையளிக்கும் போதும் ஒவ்வொரு முறை நிகழ்கிறது அவனது மரணம் பட்டாம் பூச்சியின் மூன்றாம் சிறகசைப்பில் உயிர்தெழும்போது சிலுவை சிறகு விரித்த பட்டாம் பூச்சியென விண்ணேகுகிறது" (பட்டாம் பூச்சி மேய்ப்பவன்) மனோவின் இந்த மூன்றாம் நாள் உயிர்தெழுதல், சிலுவை, புனித வெள்ளி எனும் அவரது இன்னொரு கவிதைக்கு என்னை இழுத்துப் போகிறது. சமகாலத்திய ஈழத்தின் இனப்படுகொலைக்கான மெளன, துயர சாட்சிகளென நான், நீங்கள், கொல்பவனாகவும், கொல்லப்படுவனாகவும் நாமிருக்கின்ற நகை முரணை இக்கவிதை மிக அற்புதமாகக் காட்சிப் படுத்துகிறது. "வரலாற்றாளன் ஒரு நிகழ்வின் விளைவுகளைக் கையாள வேண்டியவன் ஆகின்றான். ஒரு கலைஞனோ நிகழ்வின் உண்மைகளைக் கையாள வேண்டியவன் ஆகிறான்" எனும் Leo Tolstoy இன் கூற்றை மெய்ப்பித்த எனக்கு மிகப் பிடித்த கவிதை இது!" புனித வெள்ளி நம்பமுடியாதபோதும்கூட அது அப்படித்தான் நடந்தது அப்பழுக்கற்ற உனது வெள்ளை அங்கியின் மீது குருதியின் ஈரம் பரவிக்கொண்டிருந்தது சற்றுமுன் சுடப்பட்ட தோட்டா உனது இடதுபுற மார்பில் சற்று மேலேயோ சரியாக மார்புக் காம்பிலோ பட்டிருக்க வேண்டும் முப்பதாவது வினாடியே உயிர் பிரிந்தது சுட்டவனுக்கு அசலாக எனது முகம் ஆனாலும் அது நானில்லை என்பதை எப்படி உன்னிடம் சொல்வது அதுவும் இறந்துவிட்ட உன்னிடம் இனி அந்த சிலுவைக்கு நீ உபயோகப்பட மாட்டாய் அந்த ஆணிகளுக்கும் கூடத்தான் கொண்டுவந்த சிலுவையையும் ஆணியையும் திரும்ப எடுத்துப் போவதில் சரத் பொன்சேகாவுக்கு உடன்பாடில்லை கிடத்தப்பட்ட சிலுவையில் உனக்குப் பதிலாக என்னைக் கிடத்தினான் ஆணியடித்துக் நிமிர்த்தப்பட்ட எனக்கு அசலாக உனது முகம். "நகுலனது மஞ்சள் பூனை - சுயம் நசித்தலும் இல்லாதிருத்தலும்" கட்டுரையில் பொதியவெற்பன் நகுலன் குறித்துப் பகிர்ந்து கொண்ட கருத்து இது – "டேவிட் கூப்பரின் பைத்தியம் (அ) சித்தப்பிரமை என்பதும் அறிதலுக்கான வழி. இந்த எதிர் உளவியல் ரீதியில் நகுலன் எழுத்தில் நதி மூலம் காண்பார் சா. தேவதாஸ். "வான்காவையும் காப்காவையும் இப்படித்தான் (மனச்சிதைவு) சமூகம் கருதிற்று. ஆன் செக்ஸ்டனின் கவிதைகள் இப்பிக்ஞை நிலையின் தீவிரத்தையே முன்வைக்கின்றன. நகுலனின் எழுத்துக்கள் இங்கிருந்தே தொடக்கம் கொள்கின்றன" அறிதலுக்கான வழியே மனோவிற்கு இக்கவிதைகள். அவற்றின் அடிப்படை சிதைவு மனநிலையின் தீவிரமே. அவற்றைக் கடத்துவதே இவரது கவிதைகள். மனோவின் சிறு நீர் கழித்தல், மது, சிறுநீர், கொலை, கலவி, ஆகிய குறியீடுகளுடன் சிதைவை, நகுலனது தன்னிலிருந்து தான் தப்பித்தலை, பிரம்மராஜன் சுட்டுகின்ற T.S. Elliotன் சுயமற்ற நிலையை (impersonality) ஐச் சுட்டுகின்ற ஒரு கவிதை. சிறுநீர் கழித்தல் துயரமென்பது வேறொன்றுமில்லை அதுவொரு பீர்பாட்டில் அவ்வளவுதான் நாவில் கசப்பேற அதைப் பருக நேரும்போது இரண்டுமுறை சிறுநீர் கழிப்பது நல்லதென கிளிப்பாணி ஜோதிடன் சொல்லியிருந்தான் சிறுநீர் கழித்ததற்காக பதிமூன்று லட்சத்து முப்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாவது முறையாக நீ என்னைக் கடிந்து கொண்டபோது உன்னைக் கொல்ல வழியறியாது துயருற்றேன் என் ஆகச்சிறந்த துயரம் நீதான் தெரியுமா அதனால் தான் உன்னை முத்தமிட்டு இதழ் பருகும் ஒவ்வொரு தடவையும் சிறுநீர் கழிக்கிறேன் துயருறும்போது வாடிக்கையாகிவிடுகிறது நீ கவிதை எழுதும் நான் சிறுநீர் கழிப்பதும் இரண்டிற்கும் பெரிதாய் வேறுபாடில்லை. இங்கு அ. ராமசாமியின் பின் நவீனத்துவ விமர்சனமுறை எனும் கட்டுரையின் தொடக்க வரிகளை நினைவுகூர்கிறேன் – "மனித குல வரலாறு பல்வேறு வாழ்தல் முறைகளைக் கடந்து வந்துவிட்டது. பின்-நவீனத்துவம் என்பதுவும் அத்தகையதொரு வாழ்தல் முறைதான் என்பதை நாம் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ச்சூழல், மேற்கத்திய உலகம் தரும் கருத்து மற்றும் சிந்தனைகளைப் பெரும்பாலும் திறனாய்வுக் கோட்பாடுகளாக மாற்றிக் கொள்வதும், கலை இலக்கியத்தளங்களுக்குள் சுருக்கிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவமும் அத்தகைய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பின் நவீனத்தின் அடிப்படைகள் திறனாய்வுக்குள் மட்டும் அடங்கி விடுவன அல்ல. அது ஒரு வாழ்தல் முறை. அந்த வாழ்தல் முறை சரியான வாழ்தல் முறையா? தவறான வாழ்தல் முறையா? எனக் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் பதிலாகச் சொல்ல முடியும். நான் மட்டும் அல்ல ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அதற்கான பதில்". நகுலனும், மனோவும், ரமேசும், நானும் வாழ்கின்ற இவ்வாழ்வில் யவனிகாவும் இருக்கிறார் தன் திருடர்களின் சந்தையோடு. "நிறையவே குடித்தேன் நிதானம் வேண்டித்தான்" எனும் நகுலனைப் போலவே குடித்தலும், (துயருறும், சிசைவுறும் வேளைகளில்), சிறுநீர் கழித்தலும், முத்தமிட்டு இதழ் பருகுதலும், ஒரு குறுக்கு மறுக்கு தோற்றத்தில் மனோவிற்கு வாய்க்கிறது. யவனிகாவின் கடவுளின் நிறுவனத்தை முன்வைத்து குலசேகரன் சொன்னதாகப் பொதியவெற்பன் பதிகிறார் - "குடியும் கூட விடுபடுதலின் அம்சமாகிறது - மது பற்றிய குறிப்புக்கள் பிரக்கைஞ நிலையென்றால், குடித்தல் மறத்தலையும் சிதைத்தலையும் கொண்டாடுவதாகிறது. இந்தக் கவிதைகளில் போதைக்குணமும் மனச்சிதைவும் அருகருகே வைக்கப்படுகின்றா. குடியும் பயித்தியமும் ஒன்றாகிறது" மனோவின் கவி உலகும் யவனிகாவைப் போல மறத்தலையும், சிதைத்தலையும், போதைக் குணத்தோடு மனச்சிதைவின் அருகாமையினை முகர்பவை. "துயரமென்பது வேறொன்றுமில்லை அதுவொரு பீர் பாட்டில் அவ்வளவுதான்" "வழிவதும் பொங்குவதுமான அருவியைப் போலவே சலசலக்கிற மது விடுதி" "மதுகாலியாகும கணத்தில் கதைகளால் நிறைந்து விடுகிறது கோப்பை" எனும் மனோவின் வரிகளில் போதை மிக வலுவான குறியீடு. அவ்வகையில் பின் நவீனத்துவக் கூறு கொண்டவைகளாகவும் இவரது கவிதைகள் இருக்கின்றன. Totalising (ஒட்டுமொத்தப்படுத்துபவை) Hegemonising மேலாதிக்கப் பண்பு கொண்டவை ஆகிய கருத்தியல்களுக்கு முற்றிலும் எதிரானது பின்னை நவீனத்துவம். அகாலம் எனும் மனோவின் கவிதை சொல்கிறது - எனக்கு மிகப் பிடித்த ஒன்று. "பசி மிகும் போது தானின்ற குட்டிகளையே புசிக்கும் நாகமொரு அரசியல் விலங்கு ரோஜாவின் பெயர் கொண்ட உம்பர்டோ ஈகோவின் நாவலை வாசித்து முடித்த இரவில் ஒரு பின் நவீனக் கவிஞன் சொன்னான் வரலாறென்பது நஞ்சு தடவப்பட்ட காகிதம்" இதன் கடைசி வரிகள் அ. ராமசாமியின் கட்டுரைக்கு என்னை மறுபடியும் போகவைக்கிறது. "நவீனத்துவவாதிகள் கடந்த காலத்தை அழித்துவிட முயல்கின்றனர். ஆனால் பின் - நவீனத்துவமோ கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணப் பட வேண்டும் எனக் கருதுகிறது" எனும் அ.ராமசாமியின் வரிகளுக்கு உதாரணமாக மனோவின், மேற்சொன்னவை மட்டுமல்ல, அவரது தந்தம் முளைத்த கதை யும் தொல் பொருள் ஆய்வாளனின் கடமைகள் எனும் கவிதைகளையும் சுட்டலாம். "சிதைவுண்ட தன்மைக்கு நவீனத்துவம் வருத்தம் கொள்கிறது. பின்நவீனத்துவமோ கொண்டாட்டம் கொள்கிறது" என்பது அ. ராமசாமியின் மிக முக்கியமான அவதானிப்பு. "ஏன் இப்படிக் குடிக்கிறீர்கள் என்று கேட்டாள் ஏன் இப்படி வாழ்கிறீர்கள் என்று நான் கேட்கவில்லை உங்கள் வாழ்விற்கும் என் சாவுக்கும் இடையில் வேறொன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது" - இது கொண்டாட்டமன்றி வேறென்ன? நகுலனின் இக்கொண்டாட்ட மனநிலையை மனோவிடத்திலும் பார்க்கலாம். "அனுபவத்திற்கெட்டாத பெருங்கனவு இது கலவியைப் போலவே அலாதியானது கனவு" எனும் இவரது கனவுவெளி கவிதையில் புலப்படுவது இச்சிதைவின் பின் நவீனத்திய கொண்டாட்டம் தான். "அவன் என் எதிரி என்றார்கள் அவனைச் சுட்டுவிட்டேன் ஆனால் பாவம் அவனை நான் சாதாரணமாகச் சந்திருந்தால் ஒரு கப் பியர் வாங்கி அவனுக்களித்து இருவருமே சந்தோஷமாகக் குடித்திருப்போம் ஆனால் பாவம் அவன் என் நண்பன்போலவே இருந்தான்". D.H. Lawrence இன் கவிதை மேற்சொன்னது. மனோவின் பீர்பாட்டில் கவிதை லாரன்ஸின் கவிதையை மீள் உருவாக்கம் செய்கிறது - இப்படி. பீர்பாட்டில் உனது ஆளுமைக்குட்பட்ட அகதி முகாமொன்றில் குடியமர்த்தப்பட்ட நான் இதுவரை திறக்கப்படாத பீர்பாட்டிலென அமைதியாயிருந்தேன் நானுமொரு பாணன் தான் இப்பொழுது என் முறை எனது மூதாதை பாடலின் முதல் வரியைத் தொடங்குகிறன் கவனமாகத் திறக்கப்படும் பீர்பாட்டிலென எனது கபாலம் பிளந்து மரணத்தை ஒரு கண்ணாடி டம்பளரில் ஊற்றிக் குடிக்கிறாய் இதற்குமேல் நான் செய்ய என்ன இருக்கிறது எனது மரணம் உனது போதை மொழியின் துல்லியம் கொண்ட மனோவின் சில உவமைகள் புதுவிதக் கருத்தமைவு கொண்டுள்ளன. என்னை அவை மிகவும் கவர்ந்தன. "நீ பிடிக்கும் சிகரெட்டின் புகையைப் போல என் மார்புக் கூட்டுக்குள் நுழைகிறது உனது துரோகம்" ருத்ர தேசம் கவிதையின் முடிவில் உமைக்கும், சிவனுக்குமான வழக்கொன்றை முடிக்கின்ற மனோவின் உவமை – "இடைவேளையில் வெளியேறிய ஆதிபராசக்தி நீதிமன்றத்தை நிமிாந்து பார்க்கிறாள். மேகம் வழியும் ஆண்குறியென மகாலிங்கம் தெரிகிறது" கி. ராஜநாரயணன் அய்யா பகிர்ந்து கொண்ட செய்தி இதுவெனப் படித்தேன் - ஒருமுறை சம்போகத்தில் பரவசம் யாருக்கு மேலதிகம்? ஆணுக்கா, பெண்ணுக்கா எனக் கேள்வி கேட்கப்பட்டது புதுமை பித்தனிடம். அவரது பதில், "கோழி இறக்கையால காதைக் கொடைஞ்சிருக்கீரா வே?" மனோவின் வால் தின்னும் பல்லி கவிதையில், "யாரிடமும் சொல்லிவிடாதே ஆப்பிள் தோட்டத்தில் சந்தித்த பெண் சாத்தானின் நிர்வாணம் ரசித்த உலகத்தின் முதல் பெண்" என்ற வரிகள் புதுமைப்பித்தனின் பதிலை நினைவூட்டின. "ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதே எத்தனையோ தன்மைகளை மனதிற் கொண்டு அதைப்பிற புத்தகங்களோடு ஒத்தும் உறழ்ந்தும் பார்ப்பதாகிறது. இதுவே நவீன விமர்சகர்களால் பல்பிரதித்துவம் (Inter Textuality) எனப்படுகிறது" என்பார் க. பூரணச்சந்திரன். மனோவின் இப் பிரதியும் அப்படிப் பலவற்றைக் கிளறுகின்றது. ஷாராஜின் "பட்டாம் பூச்சியைக் கொல்லும் கலை" எனும் கவிதையை நான் வாசித்ததில்லை. ஆனால் ரமேசின், "எப்படிக் கொல்வது என்பது பற்றி முழு அறிவு எனக்குண்டு கொலையின் கவிதையியல் குறித்து எந்தப் பல்கலைக் கழகத்திலும் வகுப்பெடுப்பேன் எனக்குப் பல வழிகள் தெரியம் இருந்தாலும் எனக்குப் பிடித்த வழி உன் முன்னே என்னைப் பிணமாகக் கிடத்துவது" எனும் இக்கவிதையினைப் பலமுறை உள்வாங்கிக் கடத்தியிருக்கிறேன். 'தாயின் இனம் புரியாத கனவுகளால் இழுத்துவரப்ட்ட' யவனிகாவின் ஆயுதங்களுக்கான சோதனை எனும் கவிதையை இன்றைய ஒரு நாளின் பல கணங்களில் மறுமறுபடி தேடியிருக்கிறேன். அதுபோலவே, "சிறுநீர் கழித்ததற்காக பதிமூன்று லட்சம் முப்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரத்து என்பத்திரண்டாவது முறையாக நீ என்னை கடிந்து கொண்டபோது உன்னைக் கொல்ல வழியறியாது துயருற்றுந்தேன் என் ஆகச் சிறந்த துயரம் நீதான் தெரியுமா? எனும் மனோவின் வரிகளில் ஒரு வரியை - என் ஆகச் சிறந்த துயரம் நீதான் தெரியுமா? கடப்பது எவ்வாறு எனத் திகைக்கின்றேன். இப்படி நகுலனும், ந. பிச்சமூர்த்தியும், யவனிகாவும், ரமேஷீம், D.H. Lawrenceஉம், கொண்ட பல்பிரதித்துவம் பொதிந்த இக்கவிதைத் தொகுப்பு நவீனக் கவிதைப் பரப்பில் மிக முக்கியமான வரவு. இருந்தாலும் "இதைப் போல எதுவுமில்லை எதைப் போலும்" எனும் நகுலனோடு, மனோவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன். "மரபு என்றால் இலக்கணம் அல்ல. மரபு அனுபவத்தோடு சார்ந்து நிற்கிறது. பழமையோடு பூண்ட உறவில் தன் அடையாளங்களைப் பிறப்பிப்பது தான் படைப்பு. பாதையில் பார்த்து நடந்து வந்து, அதன் குருட்டு முனையில் வெட்டி விட்டதே மரபு" எனும் பொதியவெற்பனின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அவ்வகையில் தோழர் கரிகாலன் எனக்கு மிகமுக்கியமான கவிஞர். கூடவே, "குலப் பெருமை பேசும் பெற்றோர்களுக்கு எதிரான நடவடிக்கையே எனது கவிதைச் செயல்பாடு" எனும் யவனிகாவையும், ரமேஷையும், தமிழின் மிக முக்கியமான கவிஞர்கள் எனக் கொண்டாடுபவள் நான். இந்திய மொழிகளில் தமிழுக்கான நெடுங்கவிதை பரப்பு குறித்து பெருமிதப்படாத கவிஞர் நம்மில் யாருமுள்ளார்களா என்ன? அதில் இவர்கள் குறித்து எனக்கு பெருமை உண்டு. நகுலனுக்கு எது சுகம் பாருங்கள் – "ஒரு கட்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் ப்ளாஸ்க் நிறைய ஐஸ் ஒரு புட்டிப் பிராந்தி வத்திப் பெட்டி சிகரெட் சாம்பல் தட்டு பேசுவதற்கு நீ நண்பா இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு" மனோவிற்கு, "மின் விளக்கிலிருந்து வழியும் ஒளியின் கடைசிச் சொட்டு வரை மதுக்கோப்பையில் ஊற்றியபடியே உனக்கென்ன வேண்டுமென்கின்றேன் - ஒரு டம்பளர் இரவும் தொட்டுக் கொள்ள நிலவுமென்கிறாய் என்னிடமிருந்த ஒளி நிறைந்த கோப்பையை கவிழ்த்து வைத்துவிட்டு இரவையும் நிலவையும் சுவைக்கிறோம் சுரந்து கொண்டேயிருக்கிறது இந்த இரவு" பொதிய வெற்பனுக்கோ, "மனவெளி மண்டிலத்தில் நினைவோடைத் தாரை மடைமாறிப் புனல் பாய மஞ்சள் பூனை தாவ இன்றெனக்கு வாய்த்தது குவார்டர் ஓயிட் ரம்மும் கூடக் கொஞ்சம் நகுலனும் ஜ மீன் non - being" எனக்கும் தான் – மனோவின் பயித்தியக்காரியின் பட்டாம்பூச்சியில் விழித்திருந்த சில நீண்ட இரவுகள் வாய்த்தன. "ஒரு புன்னகை கைகுலுக்குமொரு பட்டாம் பூச்சி தன்னைப் பிரதிபலிக்காத கண்ணாடி கூடக் கொஞ்சம் கொலைவெறி. இந்தப் பயித்தியத்திலும் சுகமுண்டு நண்பா - வாதையின் குறுவாளுடன்!" நீட்ஷே ஏறத்தாழ மிகக் கடைசியாக எழுதிய வார்த்தைகள் இவை: "எனது பழக்க வழக்கங்களும், அதைவிட இன்னும் எனது இயல்புணர்ச்சிகளின் பெருமையுமே அடியாழத்தில் எதிர்ததுக் கலகம் செய்யும் ஒரு கடமை எனக்கிருக்கிறது. நான் சொலவதைக் கேளுங்கள்! ஏனென்றால், நான் இப்படி இப்படித்தான் இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் எதுவாக இல்லையோ அதுவாக என்னை ஆக்கிக் குழப்பாதீர்கள்! இதை எழுதியபின் ஒரு நூற்றாண்டுக் காலத்தில், அவருடைய வாசகர்களும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறரும் இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை" (க. பூர்ணச்சந்திரன்). எனவே மனோவை அவர் எதுவாக இருக்கிறார் என இக்கவிதைகள் வழி அறியத்தான் முயற்சித்துள்ளேன். அதில், அவர் எதுவாக இல்லையோ அதுவாக அவரை ஆக்கிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வே பிரதானம். உதவிய நூல்கள்: 1) நீட்சே மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் டேனர் : தமிழில் க.பூரணச்சந்திரன். 2) பாசிசம் மிகச் சுருக்கமான அறிமுகம் - கெவின் பாஸ்மோர் : தமிழில் அ. மங்கை. 3) சமகாலக் கவிதைகளும் கவிதைக் கோட்பாடுகளும் - வே.மு. பொதியவெற்பன். 4) கவிதையியல் - க. பூரணச்சந்திரன். 5) பின் நவீனத்துவ விமர்சன முறை - ஒர் அறிமுகம் - அ. ராமசாமி.

தொடர

அந்நிய நிலத்தின் பெண் - மனுஷிய புத்திரன் புத்தக வெளியீடு பேச்சு - 25.12.2014

தமிழச்சி தங்கப்பாண்டியன்

நான்கு பேர் பைன் மரத்தைப் பற்றிப் பேசினர். ஒருவன் அதைப் பேரினம், சிற்றினம், வகைப்பாடு ரீதியாக வரையறுத்தான். ஒருவன் மரம் அறுப்புத் தொழிலுக்கு அதன் பாதகச் சூழலை மதிப்பிட்டான். பைன் மரங்கள் பற்றிப் பல மொழிகளிலிருந்து கவிதைகளை மேற்கோள் காட்டினான் ஒருவன். ஒருவன் வேர்விட்டு, கிளைபரப்பி, இலைகள் கலகலத்தான். (சமகால உலகக் கவிதைகள் பிரம்மராஜன் : 378) நான் மேற்சொன்னவற்றின் முதல் மூன்று வகையறாவாகக் கவிதை பற்றி வாய்கிழியப் பேசுகிறேன் - ஆனால் மனுஷ்ய புத்திரன் கவிதைகளைப் படைக்கிறார். அதிலும் திகட்டத் திகட்டக் காதல் கவிதைகளை. என் வாக்குமூலங்கள் என்னை ஏன் பிடிக்கும் என்றாள் கன்னத்தோடு கன்னம் வைத்தபடி உன்னைப் பிடித்திருப்பதால்தான் இந்த உலகின் அத்தனை பெண்களையும் எனக்குப் பிடிக்கிறது என்றேன் காதோடு காதாக (அந்நிய நிலத்தின் பெண் - 274) இந்தக் காதலனின் காதல் கவிதைகள் குறித்து மட்டுமே இங்கு பேசலாமென்றிருக்கிறேன். கவிஞர்கள் ஊறு விளைவிப்பார்கள் என்ற காரணத்தால், அவர்களுக்குப் பிளேட்டோ தன்னுடைய லட்சியக் குடியரசில் தடை விதித்தார். (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 62) மனுஷ்ய புத்திரனின் காதல் கவிதைகளைப் படிக்க நேர்ந்தால் இன்றைய கலாச்சாரக் காவலர்களோடு சேர்ந்து, தனது தடையை அவர் மேலும் உறுதி செய்வார். மனுஷ்ய புத்திரனின் முந்தைய தொகுப்புக்களை விட இந்த அந்நிய நிலத்தின் பெண் மனம், புறம் சார்ந்த தடைகளை முற்றிலுமாகத் தகர்ந்தெறிந்து விட்டுக் காதலைக் கொண்டாடுகிறது. மகத்தான காதல் கவிதை - 2014 உன்னைப் பற்றிய என் மகத்தான காதல் கவிதையை இப்போதே படி என்று செய்தி அனுப்பினேன் 'பாதிப் புணர்ச்சியில் இருக்கிறேன் முடிந்ததும் கட்டாயம் படிக்கிறேன்" என்று ஒரு ஸ்மைலியுடன் பதில் அனுப்பினாள் (அந்நிய நிலத்தின பெண் : 229) மேலோட்டமாகப் பகடிக் கவிதை என்றெடுத்துக் கொண்டாலும், wry humour என்பது மனுஷ்ய புத்திரனின் நடை உத்தி என்றாலும், இக்கவிதை இந்த 21ம் நூற்றாண்டுக் காதலின் ஒட்டு மொத்தக் குறியீடு. காதலற்ற காமம், காதல் தவிர்த்த காமத்தினை இயல்பெனக் கொள்தல், முற்றாக "ஒரு ஸ்மைலியுடன் வரும் பதிலில்" தற்காலத்தில் Virtual Icons ஆகிவிட்ட உணர்வுக் குறியீடுகளென, மேற்சொன்ன கவிதை பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. பின்வரும் எனக்கான காதல் கவிதையும் அப்படித்தான் – 'எனக்காக ஒரு காதல் கவிதை எழுது' என்றாள் பிறகு சிரித்துக்கொண்டே அதில் ஒரு சிறிய திருத்தம் செய்தாள் 'அதில் எனக்கான காதல்தான் இருக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை' (அந்நிய நிலத்தின் பெண் : 448) ஆனால் தொகுப்பிலுள்ள பிற காதல் கவிதைகள் அற்புதமானதொரு, ஆழமிக்க, வேட்கை மிகு தீவிரக் காதலைப் பேசகின்றன. எத்தனை பகடி, நகைமுரண், sarcasm, irony, wry humour இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி, இக்காதலுணர்விற்கு தன்னை முழுக்க ஒப்புக் கொடுத்த, தன்னை முற்றாக வெறுத்தொகுக்குகின்ற பெண்ணிடமும் கூடத் தனது காதலுணர்வின் சீழ் வடியும் ரணத்தைக் காட்டிக் கசிந்துருகும் தொழு நோயாளியைப் போலவும், அதே சமயத்தில் போதத்தில், காதலுணர்வின் சகல சுகத்திலமிழ்ந்தபடி தோல்வியில் வெற்றிகாணும் பெருமிதத்திலுமென - இரு வேறு எதிர் நிலைகளில் இயங்குகின்ற காதலை மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வெகு நுட்பமாகப் பதிவு செய்கின்றன. "மொழி சார்ந்த சங்கேதம் என்பது உலகம் பற்றிய ஒரு கோட்பாடாகவே இருக்கிறது. வெவ்வேறு மொழிகள் உலகத்தை வெவ்வேறு விதமாகப் பிரிக்கின்றன. ஆங்கிலம் பேசுபவர்கள் செல்லப் பிராணிகளாகப் 'பெட்ஸ்' வைத்திருக்கிறார்கள்; ஃப்ரெஞ்சுக்காரர்கள் ஏராளமான எண்ணிக்கையில் நாய்களையும் பூனைகளையும் வீடுகளில் வைத்திருந்தாலும் 'பெட்ஸ்' என்ற பிரிவுக்கு ஒப்பான பதம் ஃப்ரெஞ்ச் மொழியில் இல்லை. ஒரு சிசுவைப் பற்றிப் பேசும்போது ('அவன்', 'அவள்', என்று) சரியானப் பிரதி பெயர்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்பதற்காகச் சிசுவின் பாலைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆங்கிலம் நம்மை வற்புறுத்துகிறது (குழந்தையை 'அது' என்று உங்களால் குறிப்பிட முடியாது). இவ்வாறு பால் முக்கியமானது என்று நமது மொழி உணர்த்துகிறது (பேசுபவர்களுக்குச் சரியான விடையைச் சமிக்ஞை செய்யும் இளஞ்சிவப்பு (பெண்) அல்லது நீல நிற (ஆண்) ஆடைகளின் ஜனரஞ்சகத்தின் தோற்றுவாய் இதுதான் என்பதில் சந்தேகமில்லை). ஆனால் பாலை இப்படி மொழி ரீதியாகக் குறியிடல் செய்வது எவ்வழியிலும் தவிர்க்க முடியாததல்ல. எல்லா மொழிகளும் பிறந்த குழந்தைகளின் பாலை ஒரு முக்கிய அம்சமாக ஆக்குவதில்லை. இலக்கண அமைப்புகள் கூட ஒரு மொழியின் மரபுகளேயாகும். அவை இயற்கையானவையோ தவிர்க்க முடியாதவையோ அல்ல. நாம் வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது, ஒரு சிறகடிப்பைக் கண்டால் 'பறவைகள் பறந்துகொண்டிருக்கின்றன' என்று சொல்வதற்குப் பதிலாக 1 'It's winging' (1 It's raining என்று நாம் சொல்வது போல) என்று சரியாகவே நம்முடைய ஆங்கிலம் நம்மைச் சொல்ல வைக்க முடியும். 'போல் வெர்லேனின் (Paul Verlaine)'2 பிரபலமான ஒரு கவிதை இந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது: 'II pleure dans mon coeur I comme il pleut sur la ville' (1 It cries in my heart, as it rains on the town). 1 'It's raining in the town' என்று நாம் சொல்கிறோம்; 1 'It's crying in my heart' என்று ஏன் சொல்லக்கூடாது?" (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 93,94,95) போகத்திலிருப்பது போகத்திலிருப்பது பூமியிலிருந்து மேல் நோக்கிச் செல்வது போலத்தான் இருக்கிறது ஆனால் நாம் ஒரு பறவையைப் போல மேலே செல்வதில்லை மாறாக ஒரு தீபாவளி ராக்கெட்டைப் போல செல்கிறோம் (அந்நிய நிலத்தின் பெண் : 372) என்று மனுஷ்ய புத்திரன் எழுதுகையில், மொழி ரீதியாக வழமையான குறியிடல் செய்வதை மீறித், தீபாவளி ராக்கெட் வெடியின் விடுதலைக் கிளர்ந்துணர்வை போகத்திலிருப்பதற்கு ஒப்பிடுகிறார். போல் வெர்லென் (Paul Verlaine, 1844-96) மிகப் பரவலான பாதிப்பு செலுத்திய ஃப்ரெஞ்சுக் கவிஞர்களில் ஒருவர். அவருக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் இன்னொரு ஒற்றுமையுண்டு. எளிதில் வசப்படாமல் நழுவிச் செல்லும் கணங்களைப் பற்றி எழுதியவர் போல் வெர்லென் குரலை உயர்த்தாமல், அதை மிகைபடச் சொன்னவர் அவர். கவிஞன் என்பவன் தார்மீகத்திற்கு வெளியே சுயேச்சையாகச் செயல்படுபவன் என்றார். தார்மீதத்திற்கு வெளியே தனது காம, காதலுணர்வினை வேஷமின்றிப் பேசுகின்றன மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பின் காதல் கவிதைகள். காதல் அதி தீவிர இன்பம் vs அதிதீவித் துன்பம் எனும் இரண்டு Extreme Ends இலும் இக்கவிதைகளில் வைத்துப் பேசப்படுகிறது. வழமையான ஆண் பெண்ணை மோகித்துப், தேவதை அல்லது சாத்தான் எனப் போற்றித் தூற்றும் கவிதைத் தடங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, பெண்ணை முன்னிறுத்தி, அவளது உணர்வினை முக்கியப்படுத்தி, அவளே ஆளுகை செய்கின்ற, அரசியாயிருக்கின்ற Female Alpha Poems இவை. ஒரு ஆண்மகனால் இந்த அளவிற்கு ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியுமா, அப்படியே புரிந்து கொண்டாலும், அவளை எடை போடுதலற்றுக், குறிப்பாக unconditional ஆக, அவளை உடைமையாக்க முனையாமல், அவளுக்கு விடுபடுதலின் சுதந்திரத்தை மட்டுமே காதலின் பரிசாகத் தர முடியுமா? என்னும் பல கேள்விகளுக்கு இயலும், முடியுமென்கின்ற ஒரு ஆண் மனதை முன்வைக்கின்றன இக் கவிதைகள். உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான Verner Hersak இன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு எழுத்தாளரது புத்தகத்தில் வாசித்து அயர்ந்து போனேன். ஒரு முறை ம்யூனிக்கிலிருந்து பாரிஸீக்கு நடந்தே சென்றார் ஹெர்சாக். இதைப் பற்றி If walking on Ice எனும் புத்தகமே எழுதியிருக்கிறார். அவரது தோழியும் சினிமா விமர்சகருமான Liot Eisner என்பவர் பாரிஸில் மரணப்படுக்கையில் கிடந்த போது அவரைப் பார்ப்பதற்காக ம்யூனிக்கிலிருந்து Hersak நடந்தே சென்றபோது கடும் குளிர்காலம். போய்ச் சேர அவருக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. அப்படி நடந்து போனால் ஐஸ்னர் பிழைத்து விடுவார் என்று Hersak நம்பினார். அவ்வாறே நடந்து ஜஸ்னரும் பிழைத்துக் கொண்டார். மனுஷ்ய புத்திரனும் தனது காதலுக்காக, அதுதரும் இன்ப, துன்பம், ஆட்படல், விடுபடல், வரம், சாபம் - இவைகளுக்காக இப்படி நடந்து போகக் கூடியவர்தான் என்பதை இக்கவிதைகள் நிரூப்பிக்கின்றன. "ஒரு காதலைப் புரிந்து கொள்ள இன்னொரு காதல் தேவையாக இருந்தது" எனும் தேடல் ஒரு முடிவுறாத் துயரம் தான். தீயின் நாக்கைத் தீண்டுதல் ருசியா அல்லது புண்படுதலா எனும் புதிரின் மாயவிடையை இதுவரை உலகின் எந்தக் காதலர்களாவது அறிந்திருக்கிறார்கள் என்ன? பின்வரும் தொகுப்பின் இக் கவிதையைப் பாருங்கள். காமுகன்-6 எப்படியெல்லாமோ புதிதாக இருக்கிறாள் என்னென்னவோ நடனங்களை உருவாக்குகிறாள் ஒரு சொல்லுக்கும் மறு சொல்லுக்கும் இடையே பெருகிறது அர்த்தங்களின் நதி ஒரு பார்வைக்கும் மறு பார்வைக்கும் நடுவே அவள் வேறொருத்தியாகிறாள் மழையில் கண்டதுபோல இல்லை வெயிலில் கண்ட பெண் படிகளில் இறங்கும்போது ஒரு கோலம் படியில் அமர்ந்திருக்கையில் இன்னொரு கோலம் இருளிலும் இருக்கிறாள் சிறு வெளிச்சமாக பெரும் வெளிச்சத்தில் உருக்கொள்கிறாள் சிறு இருட்டாக பார்க்கப் பார்க்கப் பார்த்துத் தீர்வதில்லை பார்க்கக் கிடைத்த ஒருத்தியை இருந்தும் எப்போதும் இரு முலைகளுக்கும் ஒரு யோனிக்கும் அப்பால் எதுவும் காணக் கிடைக்காமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறான் காமுகன் (அந்நிய நிலத்தின் பெண் : 131) காதலால் இன்புறுவதற்கும், காமத்தால் இன்புறுவதற்குமான அதிநுட்பமான வேறுபாட்டை இக்கவிதை அவ்வளவு அச்சொட்டாக முன்வைக்கின்றது. இங்கு சிந்தனையாளர் காண்ட்டின் மிக நுட்பமான, ஆனால் அதி முக்கியமான எச்சரிக்கையொன்று நினைவிற்கு வருகின்றது. காமம் தொட்டுத் தழுவினாலும், காதல் தியானித்துப் பிரிக்கின்ற இவ் உணர்வின் உன்னத அனுபவத்தைக் காண்ட்டின் கைவிளக்கு நமக்குச் சுட்டலாம். அழகால் இன்புறுவது, வேறுவிதமான இன்பங்களிலிருந்து தனித்தன்மையுடையது என்று காண்ட் எச்சரித்தார். "என் தோட்டத்திலிருக்கும் பழுத்த ஸ்ட்ராபெரி (Strawberry) களிப்பூட்டும் சிவந்த நிறம், மிருதுத்தன்மை, மணம் ஆகியவற்றோடு இருப்பதால் அதை என் வாயில் போட்டுக்கொண்டேனென்றால் என் அழகு இரசனை மாசுபட்டதாகும். நம் எதிர்வினை (response) அசிரத்தையானதாக இருக்க வேண்டும் என்று காண்ட் நினைக்கின்றார். அதன் குறிக்கோள் (purpose) அது உருவாக்கும் இன்ப உணர்வுகளிலிருந்து தனித்தியங்குவதாக (independent) இருக்க வேண்டும். இத்தாலிய ஓவியர் போட்டிசெல்லியின் வீனசை ஒரு கவர்ச்சிப் பாவையாக நினைத்து ஒரு பார்வையாளர் காம இச்சையோட எதிர்வினை செய்தால், அவர் அவளை, அவள் அழகுக்காக இரசிக்கவில்லை. பிரஞ்ச் ஓவியர் காகினின் (Gauguin) டாஹிட்டி (Tahiti) ஓவியங்களைப் பார்த்து, அங்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லலாம் என்று ஒருவர் கற்பனை செய்யும்போது அவற்றின் அழகோடுள்ள அழகியல் முறையான உறவு அவருக்கு அறுந்துவிட்டது என்று பொருள்." (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 13) காதல் எனும் உணர்வை மேற்சுட்டும் அழகு எனும் கருத்தியலோடு ஒப்பு நோக்கித் துய்க்கச் சொல்வது "பார்த்துத் தீர்வதில்லை பார்க்கக் கிடைத்த ஒருத்தியை" என்றாலும், அதன் குறிக்கோள் அது உருவாக்கும் இன்ப உணர்வுகளிலிருந்து தனித்து இயங்குவதாக இல்லை என்பதை "இருந்தும் எப்போதும் இரு முலைகளுக்கும் ஒரு யோனிக்கும் அப்பால் எதுவும் காணக் கிடைக்காமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறேன்" காமுகன்" எனும் கவிதை அப்பட்டமாகச் சொல்கிறது. அவ்வகையில் தொகுப்பின் காமுகன் கவிதைகளிலிருக்கின்ற இந்த இரட்டை நிலை காமுகி கவிதைகளுக்கு இல்லை. தொகுப்பின் காதல் தொனியே (the love of Love in this Collection) காமத்தை புலன்களால் துய்த்துவிட்டு, அறிவால் அதனை unemotional ஆகக் கடந்து போகின்ற, ஆணின் புணர்ச்சி சங்கேதம் மட்டுமே காதல் எனப் பகடி செய்கின்ற பெண் குரல்தான். விதிவிலக்காக அனுசூயாக்களும், (அனுசூயாவிற்கு எழுதிய கடிதம்), பதிலாக ஒரு காதல் கடிதம் கூட வரப்பெறாத மீனாக்களும் இருக்கிறார்கள் தாம்! ஆனால் அவர்களையெல்லாம் கதம் செய்துவிட்ட, அதகளக் காமுகியின் தொனியே தொகுப்பின் பிரதானம். காண்ட்டின் சித்தாந்திற்கு முற்றிலும் எதிர் நிலையில் காமுகன் நிற்கிறான். ஆனால் முழு ஒத்திசைவில் நிற்கிறாள் காமுகி: "வார்த்தைகளுக்கு எப்படி உயிரூட்டியிருக்கிறேன் பார் என்று காமுகியிடம் என் கவிதைகளை நீட்டினேன் ஒரே ஒரு கெட்ட வார்த்தைக்கு உயிர் கொடுக்க முடியுமா உன்னால் என்கிறாள் காமுகி கண்களைச் சிமிட்டிக் கொண்டே எனும் கவிதையே அதற்குச் சான்று. "காண்ட் ஒரு ஆழ்ந்த பற்றுள்ள கிறித்தவர். ஆனால், கலை மற்றும் அழகுக் கோட்பாடுகளை விளக்குவதில் கடவுளுக்கு எந்தப் பங்கும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. புலனால் அறியப்படும் ஒருபொருள் நம் உணர்ச்சிகளையோ, அறிவையோ, கற்பனையையோ தூண்டி விடும்போது அழகியல் அனுபவம் ஏற்படுகிறது என்பது காண்டின் கருத்து. இந்தத் திறன்கள் கட்டுப்பாடற்ற முறையில் தூண்டப் படுகின்றன; ஒருமைப்படுத்தப்பட்ட, முனைப்பான முறையில் அல்ல. ஒரு அழகான பொருள் நம் புலன்களைக் கவர்கிறது; ஆனால், ஈடுபாடற்ற, பற்றற்ற முறையில் ஒரு அழகிய பொருளின் வடிவமும் வடிவமைப்பும்தான் எல்லாவற்றிலும் முக்கியத் தன்மையான 'குறிக்கோள் இல்லாக் குறிக்கோளின்' அடிப்படை. ஒரு பொருளின் பயன்பாட்டை நாம் மதிப்பீடு செய்யாமலேயே, நம் கற்பனையையும் அறிவையும் திருப்திப்படுத்தும், அப்பொருளின் சரியான வடிவமைப்பிற்கு நாம் எதிர்வினை செய்கிறோம்." (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 13,14) அப்படிப் பார்த்தால், காதல், காமம் எனப்படுகின்ற அடிப்படை உணர்வினைக் கருப்பொருளாகக் கையாள்கின்ற ஒரு கவிஞனுக்கு அவ்வுணர்வுகளின் வடிவமைப்பிற்குக் காண்ட்டின் கூற்றுப்படி மிகச் சரியான எதிர்வினை செய்பவள் காமுகியான பெண்தான். தலைப்புக் கவிதையான பின்வருகின்ற அந்நிய நிலத்தின் பெண் மிக முக்கியமான கவிதை : காமத்தின் கதவுகளை ஒரு அந்நிய நிலத்தின் பெண் தட்டுவதுபோல வேறு யாரும் தட்டுவதில்லை கனவின் ஊற்றுகளை ஒரு அந்நிய நிலத்தின் பெண் திறப்பதுபோல வேறு யாரும் திறப்பதில்லை. ஒரு அந்நிய நிலத்தின் பெண்ணின் உடலில் அப்படி என்ன இருக்கிறது என்பதற்கு வரலாற்றில் இதுவரை பதில்கள் இல்லை ராவணன் சீதையை ஏன் கவர்ந்து சென்றான் என்பதற்கான பதிலில் இன்னும் அறியப்படாத ஒன்று இருக்கிறது ஒரு அந்நிய நிலத்தின் பெண்ணைக் கைவிட்டு அல்லது அவளிடம் தோல்வியடைந்து திரும்பிச் செல்பவர்கள் யாரும் ஒருபோதும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்புவதே இல்லை (அந்நிய நிலத்தின் பெண் : 309) இதை எழுதிய மனுசிய புத்திரனனின் ஆளுமையில் இசை மேதை ரிச்சர்ட் வாக்னரின் (1813 - 1883) பார்சிபல் இசைநாடகத்தின் தாக்கமிருக்கிறதோ எனத் தோன்றுகிறது. . "வாக்னர் புனைவியல் மேதை என்ற பட்டத்திற்கு மிகப் பொருத்தமாக விளங்கினார் என்று கூறக் காரணம், அவரது கொந்தளிப்பான காதல் வாழ்க்கை, வெறித்தனமாக ஆர்வலர்கள், அவறூறுகளிலிருந்தும் கடனிலிருந்தும் தப்பி ஓடியமை, பின்னர் பன்னாடுகிளல் புகழ்பெற்றமை போன்ற நிகழ்வுகளே. நற்பேற்றால் அவர் பவேரிய அரசன் இரண்டாம் லுட்விக்கின் ஆதரவைப் பெற்றார். இவ்வரசன் அவருக்குப் பேய்ருத்தில் (Bayreauth) கட்டிக் கொடுத்த வீடும் அரங்கமும் வாக்னர் இரசிகர்கள் புனிதப் பயணம் செல்லும் இடமாக இன்றும் விளங்குகிறது (அனுமதிச் சீட்டுக்காகக் காத்திருப்போர் பட்டியல் - ஏழுவருடங்கள்). வாக்னரின் பார்சிபல் இசைநாடகத்தின் கதையில் துன்பம் போற்றப்படுகிறது. இதில் ஒரு முழு முட்டாளாக இருந்து இன்னல்களால் அறிவாளியான ஒரு இளவீரனின் வாழ்க்கைப் பாதையைத் தொடர்கிறோம். விமரிசகர்கள் ஒன்று அதை விரும்புகிறார்கள் அல்லது அதை வெறுக்கின்றார்கள்; சிலர் அதை விழுமியது (Sublime) என்றும் சிலர் அதை நசிவுத்தன்மை (decadent) உடையதென்றும் கூறுகிறார்கள்." (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 46,47) மனுஷ்ய புத்திரனின் மொத்தக் கவிதைகளையும் சிலர் விழுமியது (Sublime) எனவும் பலர் நசிவுத்தன்மை (decadant) உடையதென்றும் விமர்சிப்பார்கள். இரண்டுதன்மையும் உடையவையே அவரது கவிதைகள் என்பேன் நான். அதற்கான உதாரணமாக அந்நிய நிலத்தின் பெண் மேற்சொன்ன கவிதையையே சுட்ட முடியும். ஒரு சேர விழுமியம், நசிவுத்தன்மை இரண்டையும் பேசுகிறது இது: "அந்நிய நிலத்தின் பெண்ணிடம் நிபந்தனையற்று ஒரு ஆண் மண்டியிடுகிறான் அந்நிய நிலத்தின் பெண்ணை அச்சமற்று வெல்ல விரும்பினான் ஒரு நிலத்தில் வாழும் ஆண்கள் இன்னொரு நிலத்தின் பெண்களை எப்போதுமே கனவு காண்கிறார்கள் அவர்கள் யுத்தங்களில் அரசனுக்காகவோ தேசத்திற்காகவோ ரத்தம் சிந்துவதில்லை அந்நிய நிலத்தின் பெண்களை வேண்டியே தங்களின் ரத்தத்தைச் சிந்துகிறார்கள்" .... .... "ஒரு அந்நிய நிலத்தின் பெண் ஆணின் கண்களை அவன் எந்த நிலத்திலிருந்து வந்தானோ அந்த நிலத்தைக் கைவிடச் செய்கிறாள் அந்த நிலத்திற்குத் துரோகம் செய்கிறாள் (அந்நிய நிலத்தின் பெண்) என்பதில் நசிவுத்தன்மையும், ஒரு அந்நிய நிலத்தின் பெண்ணின் உடலில் அப்படி என்ன இருக்கிறது என்பதற்கு வரலாற்றில் இதுவரை பதில்கள் இல்லை ராவணன் சீதையை ஏன் கவர்ந்து சென்றான் என்பதற்கான பதிலில் இன்னும் அறியப்படாத ஒன்று இருக்கிறது ஒரு அந்நிய நிலத்தின் பெண்ணைக் கைவிட்டு அல்லது அவளிடம் தோல்வியடைந்து திரும்பிச் செல்பவர்கள் யாரும் ஒருபோதும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்புவதே இல்லை (அந்நிய நிலத்தின் பெண் : 309) என்பதில் விழுமியமும் கலந்தே இருக்கின்றன. இன்னுமொரு பொருத்தப்பாடும் வாக்னருக்கும், மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொனி, (tone) அடுக்குகள் (textures) வெளிப்பாடு (expression) இவற்றிற்கும் உண்டு. இவ்வளவு நுட்பமாக, sublime ஆக அடிப்படை மனித உணர்வுகளை, அன்றாடத்தின் கணங்களை, நகரும் காலத்தின் நிழல்களை, ஒரு கவிதையில் பிடிக்க முடியுமா எனும் வியப்பை மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. மறுக்கவில்லை - ஆனால் ஒரே மாதிரியான மொழி நடை (style) சலிப்பை ஊட்டுகின்றது என்றும் விமர்சிப்பர். இப்போக்கு, எனக்கு வாக்னரின் பார்சிபல் நாடகத்தின் மிகக் கடுமையான திறனாய்வாளர்களில் ஒருவரான தத்துவஞானி நீட்சேவின் விமர்சனத்தை நினைவுபடுத்துகிறது. "1876இல் வாக்னரின் குற்றவியல் நீதிபற்றிய 'ரிங்' நாடகத்தின் முதல்காட்சியில் பார்வையாளர்களோடு இருந்து (இசை அமைப்பாளர் லிஸ்ட் சைக்காவ்ஸ்கி, அரசர்கள், அரச குலத்தவர்கள் கும்பலோடு) பார்த்த, அவரின் முன்னாளைய ஆர்வலரான நீட்க்ஷே அவரை 1868இல் சந்தித்ததற்குப்பின் இருவரும் நண்பர்களாயினர். நீட்சேயின் நூல் அவல் நாடகத்தின் பிறப்பு (1872), வாக்னருக்கு அர்ப்பணஞ்செய்யப்பட்டது. அதில் வாக்னரை மனதல் வைத்தே அவல நாடகத்தின் மறுபிறப்பபைப்பற்றி மிகச்சிறப்பாகக் கூறப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மொழியறிஞரும் இளம் பேராசிரியருமான நீட்ஷே, கிரேக்கத் தெய்வமான டயனீசியஸின் வழிபாட்டிலிருந்து துன்பியல் நாடகம் பிறந்ததை விளக்கினார். வாழ்வின் பெருந்தத்துவமே, 'அர்த்தமோ நீதியோஅற்ற வன்முறையும் துன்பமும்' என்பதை அவரது அவல நோக்குக் காட்டியது. துன்பியல் நாடகங்களின் 'அப்பல்லோனியன்' (கட்டமைப்பிற்குள் இருப்பது) கவிதையின் அழகு, இசை மற்றும் ஒத்திசைவு மூலமாகச் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கும் அச்சத்தையூட்டுமெனினும், கவர்ந்திழுக்கும் டயனீசியன் நோக்கைச் (கட்டுப்பாடற்றது) சகித்துக்கொள்வதற்கான ஒரு முகத்திரையை வழங்குகிறது. வாக்னரின் இசை நாடகங்களில் கிரேக்கத் துன்பியல் நாடகங்களில் போலத் துன்பம் வெளிப்படுத்தப்படுவதோடு போற்றப்படுகின்றது. அத்தோடு வாக்னரின் வியக்கத் தக்க, ஆனால் முரண் ஒலியமைந்த இசை டயனீசியன் உயிர்ச் சக்தியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்றது. வெளிநாட்டுக் கூறுகளால் ஜெர்மனியின் தூய, சக்திவாய்ந்த மையம் (core) வலுவிழந்ததாகப் புலம்பிய நீட்க்ஷே, கெமிட்டியப் புராணங்களை விடுத்து ஆரியப் புராணங்களைப் பயன்படுத்திப் பண்டைய வேர்களை நினைவுக்குக் கொண்டுவந்து ஜெர்மானிய, ஐரோப்பியப் பண்பாட்டை மீண்டும் வீரியமூட்டியதற்காக வாக்னரைக் கொண்டாடினார்." (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 48) ஆனால், "1888இல் இசையமைப்பாளர் வாக்னரையும் அவரது பார்சிபல்லையும் வசைபொழிந்து 'தி கேஸ் ஆப் வாக்னர்' என்ற நூலை நீட்ஷே வெளியிட்டார். பார்சிபல்லின் இசையை வியக்கத்த தக்கதாகக் கண்டார் நீட்ஷே. அவர் அதன் தெளிவு, மனோத்த்துவ அறிவுடைமை (Psycological Knowingness) மற்றும் துல்லியத்தைப் பாராட்டி அதை 'விழுமியது' (sublime) என்றுகூடக் கூறினார். ஆனால், தியாகியான மீட்பர், பாமன்னிப்பு போன்ற கருத்துருக்கள் கொண்ட, பார்சிபல்லின்மிக அதிகமாகக் கிறஸ்தவத்தைச் சார்ந்த செய்தியை, நீட்சே நிராகரிதார் ; "நலிவுற்று, சோர்வுற்று, நம்பிக்கையிழந்து, உதவிசெய்வாரின்றி உடைந்துபோய் கிறிஸ்தவச் சிலுவைக்குமுன் வாக்னர் வீழ்ந்தார்" என்கிறார். (கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் : 50) மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் மீதும், குறிப்பாகக் காதல் கவிதைகள் மீதும் இப்படியானதொரு விமர்சனத்தை முன்வைக்கலாம். டயோனிசியன் உயிர்ச்சக்தியும், அப்பல்லோனியன் கவிதைத் தன்மையோடு துன்பியல் நாடகத் தன்மையுமிணைந்த வெளிப்பாடு என மனுஷ்ய புத்திரனின் கவிதைகளைக் கொண்டாடலாம். அதே சமயம், தேய்ந்து போன மொழி நடை உத்தியின் மூலம், உரைநடையில் இசை மற்றும் ஒத்திசைவு ஒலி குறைந்த கவிதை நடையை மட்டுமே முன்னெடுக்கிறார் எனக் குறை கூறலாம். நான் முதலாம் வகையைச் சார்ந்தவள் - இக்காதல் கவிதைகளை, அவை முன்னிறுத்துகின்ற ஒரு தளையற்ற, கட்டுப்பாடற்ற, கலாச்சாரப் பண்பாட்டின் சுமையற்ற, பெண் மனதின் வெளிப்பாட்டிற்காகக் கொண்டாடுபவள். மனுஷ்ய புத்திரன் தனது முந்தைய தொகுப்புக்களை விட, இத் தொகுப்பில் மனத்தடைகளிற்று, without inhibitions, பெண், ஆண், மனம், உடல் சார்ந்த ஆதி உணர்வுகளைத், தயக்கங்களை, துய்த்தலை, வெளிப்படுத்துதலை, விடுபடுதலை, காதல், காமம் சார் கிறக்கமோடும், தெளிவோடும், முயங்குதலின் மயக்கமுடனும், விடுபடுதலின் தெளிவுடனும், குறிப்பாக ஆண், பெண் பால் பேதமெனும் கலாச்சாரப் பொதியற்று வெளிப்படுத்தி இருக்கிறார். இதயமும், அறிவும் உணர்வும், சிந்தனையும் - ஒருசேர அபாரமான பகடியுடனும், விக்கியழுகின்ற குழந்தையின் சரணாகதியுடனும், தன்னை ஒப்புக் கொடுக்குமொரு அடிமையின் துயரத்துடனும், இந்த பின்நவீனத்துவ காலத்தின் வாழ் சிக்கல், நகைமுரண் இவற்றைப் பேசுகின்ற இவற்றை நான் வரவேற்கவே செய்வேன். நிறைவாக ஒன்று ; After the Second World War, ஐந்தாறு ஆண்டுகளுக்கு, ஆங்கில மொழிப்படங்கள் காட்டப்படும் நாடுகள் அனைத்திலும், "எந்த நடிகை உங்களைச் செயல் இழக்கச் செய்யும்படி மயக்குகிறார்?" என்ற கேள்விக்கான பதில் Reeta Hayworth என்பதே. Reeta, Guilda, Loves of Karman என்ற வெற்றிப் படங்களில் நடித்தவர். உலகத் திரைப்படத்தின் மகா கலைஞன் எனப்படும் Arson Wells ஐ மணந்தவர். பின்னாளில் Wells ஐ விவாகரத்து செய்துவிட்டு உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிகானை அவர் திருமணம் செய்து கெண்டார். தனது முதல் கணவரான Arson wells பற்றி Reeta சொன்னார் - "ஒரு மேதையை யாரும் மணந்து கொள்ளக் கூடாது" என்று. ஒரு கவிஞனும் அப்படித்தானோ? ஒரு கவிஞனைக் காதலிக்கலாம் மணந்து கொள்ள முடியாதோ? எனும் ஐயத்தை மனுஷ்ய புத்திரன், உங்கள் கவிதைகள் உங்களது தோழிகளுக்குத் தந்துவிடலாம். அதற்கெல்லாம் சளைக்காமல் ஏற்கனவே ஒரு பதிலை ஐயம் தீர்க்கின்ற கவிதையாகப் பின்வருமாறு எழுதிவைத்துவிட்டார் மனுசிய புத்திரன் ஆண்களின் நரகத்தில் நரகத்திற்குச் செல்லும் பாதை நீண்ட வரிசை இருந்தது முதல் கேட்டில் நல்ல தகப்பன்களாக இல்லாதவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள் இரண்டாம் கேட்டில் நல்ல மகன்களாக இல்லாதவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள் மூன்றாம் கேட்டில் நல்ல கணவர்களாக இல்லாதவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள் நான்காம் கேட்டில் நல்ல காதலர்களாக இல்லாதவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள் நான் தயங்கித் தயங்கி ஒரு சக்கர நாற்காலியில் அங்கே போயிருந்தேன் 'உங்களுக்கு சிறப்பு அனுமதி எந்த கேட்டின் வழியாகவும் நீங்கள் செல்லலாம்' என்றான் நரகக் காவலாளி (அந்நிய நிலத்தின் பெண் : 191) உதவிய நூல்கள் : கலைக் கோட்பாடு - சிந்தியா ஃப்ரீலேண்ட் இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் சமகால உலகக் கவிதைகள் பிரம்மராஜன்

தொடர

சித்திரம் பேசேல்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

இன்றைக்குப் பெரும்பாலும் பேரம் பேசுதல், சமரசம் செய்து கொள்ளல், ஓற்றைத் தீர்வு ஒன்றை முன்வைத்தல் - இவையே விமர்சனத்தின் போக்காக இருக்கின்றது. எப்பொழுதாவது நம்பிக்கை தருகின்ற ஒரு விமர்சகர், கட்டுரையாளர் தென்பட்டாலும், அவரும் கூடியவிரைவில் நடந்து தேய்ந்த பாதைக்கே திரும்பி விடுகின்றார். ஒரு சிறையின் சுவரை ஏறித் தாண்டிக் குதித்து விடுதலை பெற்றதாக நாம் நினைக்கின்ற விமர்சகர்கள், சில நாட்களிலேயே அதுவும் இன்னொரு சிறைச்சாலையின பயிற்சி மைதானம் தான் என்பதை நமக்குப் புரிய வைத்து விடுகிறார்கள். "ஓரு நிலையான சமூகத்தில் பொதுவாகவும், பரவலாகக் காணப்படுகின்ற ஒத்துச் செல்லுதல் என்கின்ற ஜோதியில் அவர்களும் கலந்துவிடுகிறார்கள். ஆனால் மீனா அவ்வாறான ஒரு விமர்சகர் அல்லர் என்ற நம்பிக்கையை இப்புத்தகம் எனக்குத் தருகின்றது. ஒரு விமர்சகர் உலகுசார்ந்த ஒழுக்கவியல், கலாச்சாரப் பண்பாட்டுப் புனைவுகள், பாலியல் பாகுபாடு, நிறுவனங்களின் ஆதிக்கம், அரசின் அதிகாரம் முதலியவற்றைப் பற்றி மட்டும் கேள்வி கேட்பவன் அல்ல. பொது புத்தியையும், அர்த்தம், எழுத்து, இலக்கியம், அனுபவம் ஆகியவை பற்றிய நடைமுறை அறிவுசார்ந்த பார்வைகைளுயம் கேள்விக்குட்படுத்துபவர். புறவய யதார்த்தம் - அது மோதுகின்ற அக உலகு சார்ந்த புனைவுகள் இவற்றினையே அறிவின் துணையோடு, மிக முக்கியமாக அறம் சார் ஒளியோடு பயணிப்பவர் விமர்சகர் அறிவின் அனுக்கிரகம் அவருக்கு இருந்தாலும் அறத்தின் முத்தம் அவருக்குக் கிட்டவில்லை என்றால் அவர் ஒரு பூஜ்யமே. (உ-ம்) நானே. ஒரு கட்டுரையாளருக்கு, ஆய்வாளருக்கு வேண்டிய அறிவுத் துணை எனக்கு வாய்த்திருக்கலாம். ஆனால் ஒரு விமர்சகனுக்குத் தேவையான. மிக முக்கியமான அறத்தின் ஒளி - அதன் முத்தம் எனக்கு முழுமையாக கிட்டவில்லை என்பேன். என் பின்னணியின் கருமை நிழல் அதனைக் குறைக்கின்றது - சாம்பலென எனைத் தொடரும் புகைமூட்டத்தில் ஒளிக்கு ஏது இடம்? ஆனால் மீனா அறிவின் துணை, தர்க்கத்தின் உதவி, அறத்தின் பொறி இவற்றோடு இந்தப் புத்தகத்தில் பயணித்திருக்கிறார் என நம்புகின்றேன். (இரண்டு கட்டுரைகளில் அவரோடு எனக்கு மாற்றுக் கருத்து உண்டு - ஆனாலும் அவரது கருத்துரிமையில் எனக்கு பிரச்சனையேதுமில்லை). சமூகக் கட்டமைப்புக்கான யாவும் மக்கள் பகிர்ந்து கொள்ளும் வரை மட்டுமே உயிர் வாழக் கூடியவை. மக்களின் பகிர்தலைக் கேள்விகளால் குறைத்து, கட்டமைப்புக்களைத் தகர்க்கின்ற மிக முக்கியமான பணியை இதில் இருக்கின்ற கட்டுரைகள், விமர்சனங்கள் செய்கின்றன. மீனா ஒரு கருத்து சொல்பவர் அல்ல இன்றைக்குத் தமிழகத்தில் நீங்கள் ஒரு பிரபலமாக இருந்துவிட்டால் போதும் - ஒரு விமர்சகர் - என்பதை நிரூபிக்கின்ற தடயங்கள் இவை. பொதுவாக பெண்ணியச் சிந்தனை மிகுந்த வீர்யம் அடைந்த 18ம் நூற்றாண்டின் இறுதி, 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை, பெண்கள் விமர்சனத் துறையில், (கோட்பாட்டுத் துறையில் Judith Butler போன்ற Queer Theory இன் முன்னோடிகள் விதிவிலக்கு) பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத சூழல் இருந்தது. Cannon Literature எனும் பிரதான இலக்கியத்தின் வரைபடமும் இதனையே முன்வைத்தது. "வளர்ந்து பெரியவனாகும் ஒரு சிறுவனின் (எகாட்டு - ஹபின் - இன் Huckeberry, Mark Twain இன் Finn நாவலின் நாயகன்) உலகளாவிய ஓர் அனுபவமாகக் கருதப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ஒரு சிறுமியின் (எகாட்டு) 'தி மில் அன் த ப்ளஸ்" இல் வரும் மேகி டுலிவரின் (Geroge Elliot என்ற புனைபெயரில் மேரி ஆன் இவான்ஸ் (1819-80) எழுதிய நாவலில் வரும் முக்கிய பாத்திரம்) அனுபவம் அவ்வளவு போதுமானதாக இல்லாமல் வரம்பிற்கு உட்பட்டதாகவே பார்க்கப்பட்டது" என்பதை நாம் அறிவோம். விமர்சனங்களில் பாடுபொருளை விட அதன் போக்கும் தொனியும் முக்கியம். வானொலிக் குடும்ப நாடகத் தொடர்களைவிட ஷேக்ஸ்பியரை ஆய்வு செய்வது அதிக மதிப்பானது என்று சொல்லவிட முடியாது. பாடுபொருள் முக்கியமல்ல இங்கு! மீனா David, அட்டகத்தி திரைப்படங்கள், இந்த தேசத்தில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி (அப்சல்குரு, காஷ்மீர் பிரச்சனை) ஊடகங்களின் கண்டிக்கத்தக்க போக்கு, மரணதண்டனை எதிர்ப்பு எனச் சமகால - தகிக்கின்ற விஷயங்கள், சிக்கல்கள், நுண் அரசியல் பற்றிப் பேசுகிறார். யாழன் ஆதியின் கவிதைப் பகிரறல் போன்ற இலக்கியப் பகிரல்கள் குறைவுதான் - எதைச் சுட்டுகிறது இது என்றால் பாடுபொருள் அல்ல அதில் விமர்சகரது தொனியும், போக்குமே பிரதானம் என்பதை முன்வவைத்தே அவர் முழுவதும் இயங்கி வருகிறார் என்பதனையே! தட்டையான, ஒற்றைப் போக்கு விமர்சனமென்பது ஒரு ஆளுமையினை எவ்வாறு வரலாற்றில் முற்றிலும் தவறாகப் பதிய வைத்து விடுகிறது என்பதற்கு அவரது வ.வே.சு. ஐயர் கட்டுரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. "இலக்கியம், கலை, மற்றும் இசையில் பெரும் ரசிகர்கள்தான் ஜெர்மனிய சித்ரவதை முகாம்களின் அதிகாரிகளாக இருந்தனர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" எனும் வாசகம் ஏனோ இங்கு நினைவிற்குவருகிறது. இலக்கிய அடையாளத் தேடல்களுக்கும், விமர்சன, கோட்பாடு ரீதியான விஷயங்களுக்கும் மிக முக்கியமான அடைப்படை - அறிவுரீதியான, மற்றும் அறம்சார் பயிற்சி! ஒரு பெண்ணாக இருப்பது என்றால் என்ன? ஒரு கருப்பராக இருப்பது என்றால் என்ன? என்பதை உணர்ந்த விமர்சகர்கள் மிக அவசியம் மீனாவின் இயங்குதளம் பரந்துபட்டது என்றாலும் கீழ்க்கண்டவற்றை நான் அதில் உணர்ந்தேன். கைனோகிரிடிஸிஸம் 'Gynocriticism' என்பது பெண் எழுத்தாளர்களிடத்திலும் பெண்களுடைய அனுபவத்தைச் சித்தரிப்பதிலும் அக்கறை கொண்ட 'பெண்ணிய விமர்சனமாகும்' - அதனையொட்டிய விமர்சனப்பாங்கு. 1) சிறுபான்மைச் சொல்லாடல் (Minority Discourse) பெரும்பான்மைச் சொல்லாடல்களின் கற்பிதங்களை அம்பலப்படுத்துகின்றன. அவற்றின் கோட்பாட்டு விவாதங்களில் குறுக்கிடுகின்றன. 2) பின் காலனிய கோட்பாடு. அறிவு பற்றிய ஐரோப்பியச் சொல்லாடல்களால் கட்டமைக்கப்பட்ட கிழக்கத்திய 'மற்ற'தை (other) ஆய்வு செய்ய Said இன் (Orientalism - கிழக்கத்திய மரபு) எனற நூல் இவ்விவாதத்தின் அடிப்படை. 3) கோணல்கள் குறித்த கோட்பாடு Queer Theory (Judith Butler) 19ம் நூற்றாண்டு பத்திரிக்கையாளர் வால்டர் பாகெஹாட், "எந்தச் சீர்திருத்தத்தின் விளைவுகளையும் அது கொண்டு வரப்பட்ட காலத்திய தலைமுறை கடந்து போகாமல் தீர்மானிக்க இயலாது" - இதனையே நான் மீனாவின் - ஷோபாசக்தியின் புத்தகவிமர்சனத் தொடர்பான கட்டுரைக்குப் பதிலாக வைக்க விரும்புகிறேன். Harry S. Trauman, "மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் கூறாமல் கூறுவதில் அதிபரின் மிகப் பெரும் அதிகாரம் உள்ளது" - என்பதை ராஜபக்ஷே மெய்பித்து வருகிறார். "க்யூ போனோ?" என்று ரோமானியர்கள் வழக்கமாகக் கேட்பார்கள். யார் நலம் பெறுகின்றனர்? இன்று ஈழம் தொடர்பாக இந்தக் கேள்வி மகி முக்கியமானது. ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கியவர்களில் ஒருவரான கேவர் 19ம் நூற்றாண்டில் கூறினார். "நமது நாட்டுக்குச் செய்ததையெல்லாம் நமக்குச் செய்து கொண்டால் என்ன வகையான அயோக்கியர்கள் நாமெல்லாம்! - மரணதண்டனை ஓழிப்பு குறித் கட்டுரை, காஷ்மீர் மக்களுக்கு இன்றுவரை கிடைக்காத நீதி. அப்சல்குருவின் தூக்கு - இவற்றைப் படித்தபோது இந்தக் கேள்வியே மிஞ்சியது. இந்துவாக இருப்பதும் இந்துத்வவாதியாக இருப்பதற்குமான நூழிழை மிக ஆபத்தானதொரு சிலந்தி வலை - மீனா. இந்துவாக இருக்கின்ற (பெனர் சிலந்தி) புணர்ச்சி முடிந்ததும் (ஆண் சிலந்தியை)க் கொல்வதான ஆபத்து அதிகமிருக்கும் ஒனறுதான் அந்த நூழிழை. "குழந்தைகளை வற்புறுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை சரியான சமயம் வரும்போது அவர்கள் உரிய பால் வகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்" என்பது எனக்கு மிகப் பிடித்த வாசகம். தீர்வுகளின் தொகுதி ஒன்றைக் கோட்பாடு வழங்குதில்லை - மாறாக அது கூடுதல் சிந்தனைக்கான வாய்ப்பு வளத்தை வழங்குகிறது. அது வாசித்தல், சவால்கள் நிரம்பிய முன் ஊகித்தல்கள், நீங்கள் எந்தக் கற்பிதங்கள் மீது செயல்படுகிறீர்களோ அவற்றைக் கேள்விக்குள்ளாக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபாட்டைக் கோருகிறது. 1960களில் தொடங்கிய, உளப்பகுப்பாய்வு, மார்க்ஸியம், அமைப்பியல் வாதம், தகர்ப்பமைப்பு போன்ற பல பார்வைகளை, சொல்லாடல்களை - இந்தப் புத்தகம் முன்வைக்கிறது மிக நம்பிக்கைக்குரிய ஒரு விமர்சகராகக், கட்டுரையாளராக மீனாவை நான் பார்க்கிறேன்.

தொடர

சி.மோகனின் ஓநாய் குலச்சின்னம் மொழிபெயர்ப்புப் புதினத்தை முன்வைத்து ஒரு உரையாடல்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

உறைந்த மூலப் பிரதியை உயிர்ப்பிக்கும் மாயக்கண்ணாடி : "மொழி தன் எஜமானனிடமே இடக்கு செய்கிறது" எனும் பின் அமைப்பியல் கூற்றை முதலில் நினைவு கூர்கின்றேன். Translation (மொழிபெயர்ப்பு) என்பதனைக் கடந்து Transcreation (மொழியாக்கம்) எனும் பதத்திற்கு வந்து வெகுகாலமாகி விட்டபோதும் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பிற்கான அளவுகோலோ கருத்தியலோ இன்று வரை அறுதியாக இல்லை. எனது ஆதர்ச விமர்சகரான Mathew Arnold "மூலமொழியில் படைப்பினை வாசிக்கும் போது எந்த வகையான பாதிப்பினை வாசகர் அடைகின்றாரோ, அதுபோன்ற விளைவினைப் பெறுமொழியில் வாசிக்கும் போது ஏற்பட வேண்டும்" என்கிறார். அவருக்கு நேரெதிராக, F.W. Newman "மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புத் தான். அது ஒரு போதும் மூலப் படைப்பின் விளைவினைப் பிரதிபலிக்க இயலாது" என்கிறார். விவாதங்களைத் தாண்டி, ஒரு மொழிபெயர்ப்பு என்பது மிக மிக முக்கியமான பங்களிப்பு. அது வெறும் இலக்கியம் சார்ந்ததொரு நிகழ்வு அல்ல. "Translators are international knwoledge co-ordinators" என்கிறார் Puskin. மொழிபெயர்ப்பு என்பது "நிரந்தரமாக நாடு கடத்தப்பட்ட நிலையிலுள்ள ஒரு பிரதியின் அலைந்து திரியும் இருப்பேயாகும்" எனும் J. Hillis Millerஇன் கூற்றும் இங்கு மிக முக்கியமானது. Andre Lefever மற்றும் Susan Bassnett ஆகிய இருவரும் 'மொழிபெயர்ப்பியல் கல்வியல் வார்த்தையும் அல்ல, பிரதியும் அல்ல, மாறாக கலாச்சாரமே மொழிபெயர்ப்பின் செயலாக்கம் கூடிய அலகாக மாறுகிறது" என்ற கண்ணோட்டத்தை முன் வைத்தார்கள். இந்தக் கண்ணோட்டம் மொழிபெயர்ப்பியல் ஆய்வுக் கல்வித்துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விளைவாக, கலாச்சாரவியல் கல்வித்துறைக்கும் மொழிபெயர்ப்பியல் கல்வித்துறைக்குமிடையேயான ஒத்திசைவும், இணைவும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவ்வகையில் கலாச்சாரம் சார்ந்த பிரதிகள் முக்கியத்துவம் பெறுகின்ற காலகட்டமிது. இந்த ஓநாய்க் குலச்சின்னம் அவ்வாறான ஒருபிரதி. ஒரு மொழிபெயர்ப்பாளரின் பொறுப்புடைமை என்பது மண் - சாராத பார்வையாளர்களை மண்சார்ந்த பார்வையாளர்களாக்குவதில் தான் அடங்கியிருக்கிறது. இந்திய மொழி ஒன்றி எழுதப்பட்ட கவிதையொன்றை ஆங்கிலம் போன்ற அந்நிய மொழியொன்றில் மொழிபெயர்க்கும்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் சம்பந்தப்பட்டவர்களை இலக்குமொழிசார் மண் சார்ந்தவர்களாக மாற்ற வேண்டுமென்று விரும்புவது தவிர்க்க முடியாததாகிறது. இந்த ஓநாய்க் குலச்சின்னம் ஒரு மேய்ச்சல் பிரதிதான். மொழிபெயர்ப்பு என்பது உலக மொழிகளுக்கிடையில் தற்செயலாகவோ அல்லது இயல்பாகவோ நடைபெறும் நிகழ்வு அல்ல. சமூக அக்கறையுள்ள மனிதர்களின் முன் முயற்சியினாலும், கடின உழைபினாலும் மட்டுமே காலந்தோறும் மொழிபெயர்ப்பு சாத்தியப்படுகிறது. அவ்வகையில் இரண்டு மனிதர்களுடைய சமூக அக்கறையினால், அதில் ஒருவருடைய மிகக் கடினமான உழைப்பினால் இந்த 'ஓநாய்க் குலச் சின்னம்' எனும் மொழிபெயர்ப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. 'அதிர்வு' எனும் பதிப்பகத்தை இப்புத்தகத்திற்காக துவங்கிய திரு. வெற்றிமாறன், மிக அசாத்தியமான உழைப்பு, உத்வேகத்துடன் ஒரு 'அடாவடி' மொழிபெயர்ப்பாளராக, கொஞ்சமும் பணிய மறுத்து, தமிழ் மொழியில் தனக்கிருக்கின்ற ஆளுமையுடன் மிக நுட்பமான இந்த செவ்வியல் மொழிபெயர்ப்பைச் சாத்தியப்படுத்தி இருக்கின்ற திரு. மோகன், இருவருமே பாராட்டப்பட வேண்டிய ஆளுமைகள். மொழிபெயர்ப்பாளர்கள் பல ஆக்கபூர்வமான மாற்றங்களுக்குக் காரணமாகின்றார்கள் என்பதற்கு அவர்களது இப்புத்தகம் ஒரு ஸ்தூல சாட்சி. இந்த நூலின் மூலம் மோகன் பல clich - தேய்ந்து போன சொல்லாடல்களைத் தவிடு பொடியாக்கியுள்ளார் - "மொழிபெயர்ப்பாளர்கள் படைப்பாக்கம் என்ற துறையில் தோல்வியுற்றவர்கள்" என்பது அதிலே முதலாவது. தமிழின் நவீனக் கவிதைகளுக்கான பங்களிப்பில் மோகனுக்கு முக்கியப் பங்குண்டு. நற்றிணையில் வெளிவந்த அவரது கட்டுரைகள் மிகப் பெரிய பாய்ச்சலை உருவாக்கியவை. அதற்கான சான்றுகளை இப்புத்தகத்தில் பல இடங்களில் பார்க்கலாம். அடுத்ததாக மொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள் - எனும் கருத்து. அதாவது they can never do full justice to the source Language என்கிற கருத்தாடல். மூலப் பிரதியின் மொழியைப் பேசுபவர்களுக்கு அதன் மொழிபெயர்ப்பு திருப்தி தராதுதான். நானுமே, ஒரு கவிதையை மொழி பெயர்க்க இயலாது என்றே கருதுகின்றேன். கவிதையில் 'சர்வதேசபாணி' என்ற ஒன்று கிடையாது. "கவிதையைப் படைக்கும் மூலப் பொருள் மொழியாக இருக்கும் வரையிலும், கலைகளிலேயே அதிகமாகப் பிரதேசத் தன்மைகொண்டது கவிதையாகத் தானிருக்க முடியும்" என நான் நம்புகிறேன். "மொழிபெயர்க்க இயலாதது எதுவோ அதுவே கவிதை" என்று வரையறை செய்யும் அளவிற்குப் பிரதேசத் தன்மை கொண்டவை எனது கவிதைகள். "கவிதையை மொழிபெயர்க்க இயலாது" என்பதே Tagore இன் கருத்தும். "சாம்பல் என்பது நெருப்பின் மொழிபெயர்ப்பாகுமா? என்று கேள்வி கேட்கிறார் - George Steiner. ஆனால் ஒரு புதினத்தைக், கட்டுரையை, சிறுகதையை எறக்குறைய, மிகச் செறிவாக, ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளன் மொழியாக்கம் செய்ய முடியும் என்பதை இப்புதின மொழியாக்கத்தின் மூலம் நிரூபித்து இருக்கின்றார் மோகன். நோபல் பரிசு பெற்ற தாகூரின் படைப்பிற்கு இணையாக எழுதியவர் பாரதியார். ஆனால், தாகூர்க்கு ஒரு W.B. Yeats ஆங்கில மொழிபெயர்ப்பாளராக வாய்த்தது போல பாரதியாருக்குக் கிட்டவில்லை. கிட்டியிருக்கிறார் மோகன் - வெற்றிமாறனுக்கு. மனித உள்ளங்களை இணைப்பதன் மூலம் நாடுகளை இணைத்திருக்கிறார். ஒரு ஹேன் வம்சாவளி சீனனுக்கு, மங்கோலியனை, இவர்கள் இருவரையும் ஒரு ஆங்கிலேயனுக்கு, அந்த ஆங்கிலேயனின் தாய்மொழி மூலமாக, கீழைத் தேய ஆசியாவின் ஒரு பின்காலனிய பிரஜையான எனக்கு - மிகப் பெரிய பாலமாயிருக்கின்றார் மோகன். ஒவ்வொரு தமிழ் வாசகனும் பெருமைப் படவேண்டிய, தவறவிடக்கூடாத பொக்கிசம் ஒன்றை அச்சு வடிவில் அளித்திருக்கிறார். Oriental Countries என்றவகையில் கிழக்காசியாவின் நிலவரைவியல் படியே நாம் சீனாவிற்குப் பக்கத்து வீட்டுக்காரர் (இப்போது பங்காளியும் கூட)! விவசாய இனமான சீனர்களுக்கும், மேய்ச்சலும், வேட்டையும் கண்ணெனக் கொண்ட மங்கோலியர்களுக்கும், தமிழர்களுக்குமான வாழ்முறை, சடங்கு, நம்பிக்கை, குலக்குறிகள், ஞானம் - எப்படி ஒரு பொதுவான நதியாக நம்மை இணைத்திருக்கிறது என்று புரிய வைத்திருக்கின்றார். புத்தகம் முழுவதும் - வெவ்வேறு அடிகள் என்றாலும் ஒரே நதி தான் - மூன்று சமவெளிகளிலும்! "இன்றைய மூன்றாம் உலகைச் சேர்ந்த ஒரு பின்காலனியப் படைப்பாளிக்கு முன் ஒரு வரலாற்றுக் கடமை எழுந்து நிற்கிறது. வெளிநாட்டு ஆட்சியின் கீழ் நசுங்கி, தங்களது பண்பாட்டு முகம் சிதைக்கப்பட்டு, வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டுவிட்ட இந்த நாடுகள், இன்று தங்கள் அடையாளம் என்ன என்று தெரியாமல் நிற்கின்றன" எனும் இந்திரனின் கூற்றை இங்கு நினைவுபடுத்துகிறேன். இத்தகைய நிலையில் இருக்கும் வளரும், பின்காலனிய நாடுகளின் படைப்பாளிகளின் கடமை, எவற்றை இழந்தோம் என்பதைக் கவனிப்பதும், அந்த அடையாளங்களைக் காண்டெடுப்பதும் - நம்மைச் சுற்றி இருக்கின்ற இந்த 21ம் நூற்றாண்டின் வாழ்க்கை பற்றிய நேர்மையான புரிதலுடன், அதன் சிக்கல்களைப் பதிய வைப்பதுமாகும்!. ஒரு படைப்பாளியாய் அதனை இதுவரை நேர்பட செய்திருக்கின்ற மோகன், தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் அப்பணியைச் சரிவரச் செய்திருக்கிறார். வரலாற்று அடிப்படையில் அணுகினால், கி.மு. 240 இல் இலீவியஸ் அந்திரோனிக்ஸ் எனம் இலத்தீன் இலக்கியப் படைப்பாளி கிரேக்க மொழியில் ஹோமர் எழுதிய ஓடிசி என்ற காப்பியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததே, காலத்தினாற் தொன்மையானது. தமிழுக்கும், மொழிபெயர்ப்பிற்குமான உறவென்பதும் மிகத் தொன்மையானது தான், தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நூல்களை 1) முதல் நூல், 2) வழி நூல் என வகைப்படுத்தும் தொல்காப்பியர், வழி நூலினை, "தொகுத்தல விரித்த தொகைவிரி மொழிபெயர்த்து அர்த்தப் பட யாத்தலோடு அனை மரபினவே" என நான்கு வகைகளாகப் பிரித்துள்ளார். அவ்வகையில் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பு நூல் என்பது தமிழ் இலக்கியப் பரப்பிற்கு எச்சமயத்திலும் ஒரு காத்திரமான பங்களிப்பே. இக்கணம் - "மொழி பெயர்ப்பே ஒரு கடினமான இலக்கிய வேலை. சீமை ஓட்டைப் பிரித்து விட்டுக் கீற்று வைக்கும் வேலை போன்றது" என்ற கு.ப.ராவை நினைத்துக் கொள்கிறேன். சீனர்களின் ஒட்டைப் பிரித்துவிட்டு தமிழர்களின் ஓலைக் கீற்றை மிக அழகாக வைத்திருக்கிறார் மோகன். சீனர்களின் ஓட்டை (ஜியாங் ரோங் எனும் சீனர் எதியதை) முதலில் பிரித்து, அதனடியில் இருந்த சீமை ஓட்டை ஊடுறுவிப் பார்த்து (ஹோவர்டு கோல்டுபிளாட் எனும் ஆங்கிலேயரின் மொழபெயர்ப்பு) நிறைவாகத் தமிழில் திருப்திகரமான கீற்றாக இந்த 'ஓநாய் குலச்சின்னம்' வெளிவந்திருக்கின்றது. குலக்குறியும், சின்னங்களும் மிகத் தொன்மையான, தமிழரது பண்பாட்டில் ஒரு வாழ்முறைதான். ஒவ்வொரு தமிழினக் குழுவின் தலைவனுக்கும் (பேரரசர்களைச் சுட்டவில்லை இங்கு) ஒரு விலங்கு, மலர், ஆயுதம் அவன் தம் குலக்குறியின் சின்னங்களாக இருந்தவற்றிற்கான தடயங்களை நாமறிவோம். அவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு, அனுபவத்தின் ஞானம் செறிந்த நமது கடந்தகால குழுவாழ்வின் கள் மணம் சுமந்து, புலாலின் வெதுவெதுப்பான சுவையோடு - ஓலோன் புலாக், எனும் புல்வெளியும், அதன் பிரதான வேட்டைக்காரராக இருந்த பில்ஜியும், ஒரு ஓநாயோடு சண்டையிடும் உடல் வலு மிக்க கஸ்மாய் எனும் மங்கோலியப் பெண்ணும், இந்த மங்கோலிய மக்களோடும், மேய்ச்சல் நிலத்தோடும், அதன் முனனோடி செங்கிஸ்கானோடும், அவனது ஆசான்களான மேய்ச்சல் நில ஒநாய்களோடும், இவர்களையெல்லாம் வழிநடத்தும் டெஞ்ஞர் எனும் தேவதை அல்லது தேவன் அல்லது துணை (வனப்பேச்சியைப் போல) இவற்றோடும் தன்னைப் பிணைத்துக் கொள்கின்ற சீனன் - ஜென் சென்னோடும், அவனோடு புரட்சிப் படையினரால் அங்கு அனுப்பட்ட மேலும் முன்று சீனர்களான அவனது தோழர்கள் யோங்கீ, காவோ, சாங்ஜியான் ஆகியோரோடும் - ஒரு கனவுச் சொர்க்கம் விரிகின்றது என் கண் முன்பு! ஒரு நல்ல மொழிபெயர்ப்புப் பிரதி மிகச் சரியான வாசகனைச் சேரும் என்பதைப் போல நான் இந்தப் புத்தகத்தோடு மூன்று மாதங்கள் வாழ்ந்தேன். ஒரு கணம் கூட ஒரு மொழி ஆக்கப் பிரதி இது என்ற எண்ணம் சற்றும் வரவில்லை இதனோடு நான் வாழ்ந்த அந்தக் காலத்தில். அதுவே இதன் வெற்றி. அக்காலக்கட்டத்தில் மொழிபெயர்ப்பு விஞ்ஞானமல்ல - அது ஒரு கலை என்பதை இப்புத்தகம் எனக்கு உணர்த்தியது. "மொழிபெயர்ப்பு ஒரு மிக முக்கியச் செயல்பாடு. பிரபஞ்ச வெளியிலேயே மிக மிகச் சிக்கலான செயல்பாடுகளில் இதுவும் ஒன்று" என்ற I.A. Richards இன் வாசகத்தையும் இது எனக்கு மெய்ப்பித்தது. "ஒரு பின் காலனிய மொழிபெயர்ப்பில் அதன் சமூக, கலாச்சார, பொருளாதார, மற்றும் அரசியல் சார்ந்த சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். அதனை இப்புத்தகம் பூர்த்தியாக்கி இருக்கின்றது. மாவோவின் புரட்சிக்குப் பின்னான வளர்ச்சி என்பது வீக்கமே என அறிவுறுத்துகிறது. தொழில்முறை மொழி பெயர்ப்பாளர்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. அவர்கள் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் தன்னார்வ மொழி பெயர்ப்பாளர்கள் மீது எனக்குப் பெரும் அன்பும், அடிபணிதலும் உண்டு. I Love professional translators - but I worship non-professional translators - coz - they do translation just for the passion if it - as a Dragon of Fire! மதிப்பிற்குரிய சி. மணியைப் போல, மோகன் அவ்வாறான ஒரு தன்னார்வ மொழிபெயர்ப்பாளரே. My Salutes to him! "புரிந்து கொள்ளல், கட்டமைத்தல் முதலிய உள்ளடக்கம், உருவாக்கம் என்கிற சட்டங்களை விட, வாழ்க்கை குறித்த உள்ளொளி, விழிப்புணர்வு, அனுபவ ஞானம், பரஸ்பர இசைமை" ஆகியவற்றைச் சமகமனிதர்களோடு பகிர்ந்து கொள்வதையே சிறந்த படைப்பாளி ஒரு மொழிபெயர்ப்பின் மூலம் முன் வைக்கின்றார். அவ்வகையில் - Releigh Shakespeare ஐப் பற்றிச் சொன்னாரே - He is a Wholesome Man என்று - அது போல இது ஒரு முழுமையான மொழியாக்க நூல் - This is a Wholesome Transcreation. இந்தப் பகிரலுக்கான எனது தயாரிப்பின்போது நான் வாசித்த ராபர்ட் ஜே.சி. யங்கின் - பின்காலனியம் (தமிழில் அ.மங்கை) எனும் புத்தகம் இங்கு மிக முக்கியமானது. 'மொழிபெயர்ப்பு' எனும் சொல் வெறும் பிரதிகளை மொழிபெயர்த்தல் மட்டுமன்று. காலனி ஆதிகத்திலிருந்து விடுபட்டு, அதன் எச்சங்கோளோடும், பொதிகளளோடும், பயணிக்கின்ற பின்காலனிய பிரஜைக்கு, அது ஒரு அரசியல் சொல்லாடல். கருத்து ரீதியாக அச்சொல் சுட்டும் தளங்களைப் புரிந்துகொள்ள, அதன் கருத்துருவினை, ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்குள் பொருத்திப்பார்க்க மேற்சொன்ன நூல் எனக்குப் பெரிதும் துணைபுரிந்தது. மொழிபெயர்ப்பு எனும் சொல்லின் அரசியற்புரிதலோடும் மோகனது ஓநாய் குலச்சின்னத்தை அணுகுதல் முக்கியம் எனப்படுகின்றது எனக்கு. அதன் சில பத்திகளை சுட்டி, நான் தொடர்கிறேன்: "பின்காலனியத்துவத்தின் மையச் செயல்பாட்டிற்கும் அரசியல் ஊடாட்டத்திற்கும் நெருக்கமாக மொழிபெயர்ப்பு இருப்பது போல வேறெந்தத் துறையும் இல்லை. நடுநிலைமை கொண்ட, தொழில்நுட்பத் துறையாக மொழிபெயர்ப்பு தோன்றலாம். ஒரு பனுவலை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கொண்டுவரும் களம், பின்காலனியத்துவ உலகின் அரசியல் களம் சார்ந்த வெளியில் இருந்து வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால் தொழில்நுட்ப அளவில்கூட இந்த அரசியல் தொடர்புகள் முக்கியமாகின்றன. ஒரு காலனி மொழிபெயர்ப்பாகத்தான் தொடங்குகிறது. வரைபடத்தில் எங்கோ உள்ள மூலத்தின் நகலை உருவாக்குவதில் இருந்து தொடங்குகிறது - புதிய இங்கிலாந்து. புதிய ஸ்பெயின். புதிய அம்ஸ்டர்டாம். புதிய யார்க். இவை காலனிய நகலாக்கமாக உயிரணு சோதனைச்சாலை நகலாக்கமாக உருவாக்கப்படுகின்றன. தொலைதூர இன உற்பத்தியான இக்கூறு தவிர்க்க இயலாமல் வேறாக மாறும் நகலாகிறது" (ராபர்ட் ஜே.சி. யங் - பின்காலனியம் : 172 & 173). இப்பின்புலத்தில், மொழிபெயர்ப்பு என்பது வெறும் பிரதிகளின் மறு ஆக்கம் மட்டுமல்ல எனம் புரிதலோடும், அதன் அரசியல் தெளிவோடும் பின்வரும் பத்தியைப் படிக்கின்றேன்: ஓநாய் குட்டியின் தலையை வருடியபடியே ஜென் தொடர்ந்து பேசினான். "மாறும் மானோபாவம், ஒரு மனிதனின் தலைவிதியைத் தீர்மானிப்பது மட்டுமல்ல, ஒரு இனத்தின் தலைவிதியையும் திர்மானிக்கிறது. விவசாய மக்கள் பண்பட்டவர்கள்; அவர்களின் பலமற்ற மனமே அவர்களின் தலைவிதியை நிர்ணயித்தது. உலகின் மகத்தான நாகரிகமாக விளைநிலம் சார்ந்த நான்கு நாடுகளே அமைந்திருந்தன. அவற்றில் மூன்று மடிந்துவிட்டன. நான்காவதான சீனா, அதன் பிராந்தியத்துக்குள் ஓடிய இரண்டு மாபெரும் நதிகளான மஞ்சள் மற்றும் யாங்செயினால் அந்த விதியிலிருந்து தப்பிப் பிழைத்தது. மேலும், அது உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமை கொண்டிருப்பதால் அதைப் பிற நாட்டவரால் அவ்வளவு சுலபமாக அபகரிக்க முடியவில்லை. இவை தவிர, மேய்ச்சல்நில நாடோடி மக்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். (ஓநாய் குலச்சின்னம் : 235). விவசாய இனமான ஹேன் சீனர்கள் மேய்ச்சல் மங்கோலியர்களை வளர்ச்சி எனும் பெயரால் காலனியப் படுத்துவதுதான் மூலப் பிரதியின் அடியோட்டம். பிறநாட்டவர் ஆதிக்கம் செய்யாவிட்டாலும், ஒரு இனம் இன்னொன்றை உள்நாட்டிலேயே ஆதிக்கம் செய்வதிலிருந்து புதினம் துவங்குகிறது. "'பேபலி'ன் (Babel) சாபம் இருந்திருக்காமல் போனால், உலகம் ஒரே மொழியை மட்டுமே பேசிக்கொண்டிருந்திரும்" என்பார்கள். அப்போது மொழிபெயர்ப்புகளுக்கும் வேலை இருந்திருக்காது. ஒரு எழுத்தாளர் தன் வேலையைத் தொடங்கும்போது அவர் முன் ஒரு வெற்றுத்தாள் மட்டுமே இருக்கிறது; ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளர் தன் வேலையைத் தொடங்கும்போது அவர் முன் ஒரு படைப்பே உள்ளது" என்கிறார் சுக்ரிதா பால்குமார். ஆக, மிகக் கடுமையான சவாலை முன்னெடுத்திருக்கிறார் மோகன் என்பது தெளிவு. பயன்படுத்தப்பட்ட மொழியைவிட அதன் ஆன்மாவையே அதிகமாகக் காண வேண்டும் எனும் மொழிபெயர்ப்பு விதியை மிகக் கச்சிதமாப் பின்வரும் பத்திகளில் நாம் உணரலாம்: இந்த ஓநாய்கள் ஜப்பானிய சாமுராயின் ஆன்மாவை உத்வேகமாகக் கொண்டிருக்கின்றன. தற்கொலைத் தாக்குதலுக்கு அவை கொஞ்சமும் அஞ்சுவதில்லை. அதனால்தான் எவற்றை விடவும் மங்கோலிய ஓநாய்கள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. அவற்றின் கடைசி ஓநாயைக் கொல்லும் வரை நான் ஓயப் போவதில்லை. (ஓநாய் குலச்சின்னம் : 139) "ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும். ஓநாய்களின் தற்கொலையெனும் ஆன்ம பலத்தை முன்மாதிரியாக மேற்கொள்ளும் எவரும் ஆளுமைமிக்க நாயகனாகலாம்; பாடல்களாலும் கண்ணீராலும் அவன் புகழ் பாடப்படும். தவறான பாடத்தைக் கற்றுக்கொள்வது, சாமுராய் அடக்குமுறைக்கே வழி வகுக்கும். சரணடைவதற்கு முன்பாக மரணம் என்ற ஆன்ம பலத்தை இழந்துவிட்டிருக்கும் எவரும் சாமுராய் அடக்குமுறைக்குப் பணியவே நேரிடும்" என்றான் ஜென். (ஓநாய் குலச்சின்னம் குலச்சின்னம்: 139 & 140) மொழிபெயர்ப்பு எனும் சொல் உரையாடல் ஆகின்றது - பின் காலனியச் சூழலில் என்பதனையும் இங்கு நான் அடிக்கோடிடுகின்றேன். "காலனியத்தின் தொடக்ககாலச் செயல்பாடுகள், முக்கியமான பூர்வீக மொழிகளிலிருந்து எழுதப்பட்ட, வாய்மொழிப் பனுவல்களை காலனிய மொழியில் பெயர்ப்பதாக இருந்தது. அதன் மூலம் வாய்மொழிப் பண்பாடுகளை மொழிபெயர்ப்பு எழுத்து முறையின் வலைப் பின்னல்களுக்குள்ளும், கண்ணிகளுக்குள்ளும் சிக்கவைத்தது". இலத்தீன் அமெரிக்க விமர்சகர் ஏஞ்சல் ரமா இதனை 'எழுத்து நகரம்' என்பார். இந்தக் கருத்தாக்கத்தை மிக வலுவாக நிறுவுகிறது பின்வரும் வரிகள்: 'சொர்க்கம் மிக உயரத்திலும் மகாராஜா வெகுதொலைவிலும்' இருக்கிற இந்த ஒதுக்குப்புறமான பகுதியில், நான்கு பழமைகளை - பழைய கருத்துகள், கலாசாரம், சடங்குகள், பழக்கவழக்கங்கள் - அழித்தொழிக்கும் முனைப்போடிருக்கும் சிவப்புக் காவலர்களின் கவனம் இதுவரை பில்ஜியின் திரைச்சீலைகள் மீதோ தரை விரிப்பு மீதோ விழுந்திருக்கவில்லை. (ஓநாய் குலச்சின்னம் : 38). ஒரு பழங்குடியினன் தனது அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள சிறிதளவே அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்பது எவ்வளவு வலியும், அபத்தமுமிகுந்தது! "காலனியத்திற்கும் மொழிபெயர்ப்புக்குமான உறவு பகிர்தலில் தொடங்குவதில்லை. வன்முறையிலும், தன்னகப்படுத்துவதிலும், தொடங்கி நாட்டு எல்லைகளை இழத்தலில் முடிகிறது" எனும் கூற்றிலும் மொழிபெயர்ப்பு ஒரு ஆதிக்க மனிதனின் செயல்பாடு எனும் அரசியல் பொதிந்து உள்ளது. ஜென், தன்னுடைய சிந்தனையைத் தொடர்ந்து வெளிப்படுத்தினான். "உலக வரலாற்றில், ஐரோப்பியர்களுக்கு எதிரான சண்டையை மேற்கொண்ட கீழைமக்கள், நாடோடிகள் மட்டுமே. மேற்கின் அஸ்திவாரங்களை, ஹன் மக்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் என்ற மூன்று இனத்தவர்களே உண்மையில் ஆட்டம் காணச் செய்தவர்கள். பழைய ரோமாபுரியைக் கட்டியமைத்தவர்கள். ஓநாயால் வளர்க்கப்பட்ட இரு சகோதரர்களே. இன்றும்கூட, அந்நகரத்தின் சின்னத்தில் ஓநாய் மற்றும் அதனுடைய இரண்டு ஓநாய்க் குழந்தைகளின் படிமங்கள் அமைந்திருக்கின்றன. ஓநாய்கள் மட்டும் இருந்திருக்காவிட்டால், உலக வரலாறு வேறு மாதிரியாக எழுதப்பட்டிருக்கும். ஓநாய்களைப் பற்றி ஏதும் தெரிந்திருக்காவிட்டால், நாடோடிகளின் ஆன்மாவையும் குணாம்சங்களையும் புரிந்துகொள்ள முடியாது; நாடோடிகளுக்கும் விவசாயிகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை நம்மால் பாராட்ட முடியாது". (ஓநாய் குலச்சின்னம் : 291 & 292) ஆக, மேற்சொன்ன வரிகளில், வன்முறையையும் தன்னகப்படுத்தலையும், இழத்தலையும் உணர்த்துகின்ற அரசியலை நாம் அறியலாம். ஐரிஷ் நாடகாசிரியர் பிரயான் பிரெய்ல் தனது 'மொழிபெயர்ப்புகள்' (ட்ரான்ஸ்லேசன்ஸ் 1981) நாடகத்தில் காட்டுவதுபோல் "ஒரு நிலப்பகுதிக்குப் புதுப் பெயரிடுதல், மறுபெயர் அளித்தல் ஆகியவை அதிகாரத் திணிப்பு மற்றும் தன்னகப்படுத்தும் செயல்பாடுகளாகும். அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏகாதிபத்தியச் செயல்பாட்டின் உடன் நிகழ்வாக வரைபடம் உருவாக்குதல் இருந்தது. எனவே அங்கு ஏற்கனவே புனிதமாக நிலவியவற்றை அவமதிப்பதுவரை நடந்தேறியது". புனிதங்களைக் குலைக்கின்ற ஒரு மொழிபெயர்ப்பு அரசியலை கீழ்வரும் பத்தி சுட்டுவதாகவே கருதுகிறேன்: "கடந்த காலங்களில் சீனர்கள் ஒருபோதும் ஓலோன்புலாக்குக்கு வந்ததில்லை. நூற்றி முப்பது அல்லது நூற்றி நாற்பது குடில்களிலும் ஏழு நூறு அல்லது எண்ணூறு மங்கோலியர்களே குடியிருந்தனர். கலாசாரப் புரட்சியை அடுத்து மாணவர்களாகிய நீங்கள் நூறு பேர் பீஜிங்கிலிருந்து வந்தீர்கள். உங்களைத் தொடர்ந்து ராணுவ வீரர்களும் ராணுவ வண்டிகளும் அவற்றின் ஓட்டுனர்களும் வந்தனர். இப்போது அவர்கள் பெரிய கட்டிடங்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் ஓநாய்களை வெறுக்கிறார்கள். அவற்றின் தோல்கள் மட்டுமே அவர்களுக்குப் பிடித்திருக்கின்றன. கூடிய சீக்கிரம் தங்கள் துப்பாக்கிகளால் அவற்றைத் தீர்த்துக் கட்டி விடுவார்கள். அனத் பிறகு, அவற்றுக்கான இரையாக உன் உடலைக் கொடுக்க நீ விரும்பினாலும் அது நடக்காது". (ஓநாய் குலச்சின்னம் : 171) தலைவர் மாவோ சொல்லியிருக்கிறார்: 'பகைவனைத் தோற்கடிப்பதற்கு நாம் முதலில் பகைவனைப் பற்றிப் பயில வேண்டும்'. ஓநாய்கள் பற்றி நானும் கூடுதலாகக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எப்படி நடந்துகொள்கிறது என்பதைக் கவனிப்பதற்காக, நானும் தவறாமல் இங்கு வரப் போகிறேன். நீ ஓநாய் வகை வேட்டை நாய்களை உருவாக்க போவதாக அவர்கள் சொன்னார்கள் (ஓநாய் குலச்சின்னம் : 364). பகைவனைப் பற்றிப் பயிலுதல் அவனது இருப்பை, அடையாளத்தை அழிப்பதன் முதல் படி. பீஜிங்கின் வண்டி ஒரு நிலத்தின் முகத்தை எப்படி சீர்குலைத்தது என்பதைப் பார்க்கையில் 'மொழிபெயர்ப்பு'ப் செயல்பாட்டின் அரசியலை நாம் அச்சொட்டாகப் புரிந்துகொள்ளலாம். இப்புத்தகம் பழங்குடிகள் இலக்கியம் (Aboriginal Literature) எனும் வகைமை சார்ந்தது. ஒவ்வொரு மொழி பேசுவோரும் "இடம், காலம், எண்ணிக்கை ஆகியவற்றை வெவ்வேறு முறைகளில் சொல்லக்கூடிய மொழித் தரவுகளைக் கொண்டவர்கள் என்றும், மொழியைக் கற்பதன் வாயிலாக இவற்றையும் இவ்வுலகத்தையும் கற்கின்றனர்" என்பதை அறிவோம். "இரத்தம் தண்ணீரைவிடக் கெட்டியானது போன்றே அது சமூகத்திலும் மக்களை ஓட்டிக் கெட்டிப்படுத்துகிறது. இத்தகு ஓட்டுறவால் மனிதர்கள் குடும்பங்களாகவும் குலங்களாகவும் கட்டுண்டு தத்தம் வலிமையினை வெளிப்படுத்துகின்றனர். எளிய சமூகங்கள் (simple societies) பலவும் குழுக்களின் தொகுதியாகவே உள்ளன. விலங்குகள், தாவரங்கள், இயற்கை நிகழ்வுகள் (இடி, மின்னல், இதுவரை புரியாத புதிராக உள்ள ஆஸ்திரேலிய முதுகுடிகளின் நாய்வாந்தி போன்றவை) ஆகியவற்றால் அமையும் குலக்குறிக் குழுக்கள் (totemic groups) உலகின் பல இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. எவ்விதப் பாகுபாடுமில்லாமல் ஒருபடித்தான நிலையிலிருக்கும் குடியினர் இவ்வாறு பல குலக்குறிக் குழுக்களாக அடையாளப்படுவது என்பது, ஒருவிலங்கு இன்னொரு விலங்கினத்திலிருந்து மாறுபடுவதுபோல, 'எனது குழு மற்ற குழுக்களிலிருந்து மாறுப்பட்டது' என்று கூறுவதற்கு வழிகோலுகிறது" (சமூக பண்பாட்டு மானிடவியல்: 132) எனும் கூற்று அடையாள அரசியலோடு தொடர்புடையது. இக்குழுவாழ்வின், குலக்குறிகள் மிக முக்கயமானவை. மொழிபெயர்ப்பாளர் அதன் ஜீவன் குறையாமல், சாரம் குறையாமல் இந்தக் கூற்றை மிகச் சரியாக பின்வரும் பத்தியில் படம் பிடிக்கிறார்: பாவோ - "ஓநாய்கள் அறிந்திருப்பவற்றைப் பாருங்கள் :வானிலை, நிலவியல், சந்தர்ப்பம், அவற்றினுடைய மற்றும் எதிரியினுடைய பலங்கள், இராணுவத் திட்டங்கள் மற்றும் தந்திரங்கள், நெருக்கமான தாக்குதல், இரவுத் தாக்குதல், கொரில்லா தாக்குதல், நகரும் தாக்குதல், நீண்ட தூரத் தாக்குதல், பதுங்கியிருந்து தாக்குதல், மின்னல் தாக்குதல், மேலும் எதிரியைக் கொல்ல தம் பலத்தில் முழு கவனம் கொண்டிருத்தல். நடந்திருப்பது ஒரு பாடப் புத்தக யுத்த திட்டம்". (ஓநாய் குலச்சின்னம் : 141). "உலக வரலாற்றில் மிகப் பெரிய பேரரசை மங்கோலியர்கள் நிர்மாணித்தார்கள். ஒரு நாடோடிக் கூட்டம், நாகரிகமற்றது, எழுத்து முறையற்ற பின்தங்கிய இனம், எலும்பு முனை கொண்ட அம்புகளைப் பயன்படுத்துபவர்கள் (இரும்பு கிடையாது) எப்படி இவ்வளவு மேலான இராணுவ உபாயங்கைளுயம் ஞானத்தையும் பெற்றிருந்தார்கள்? வரலாற்றில் பதிலளிக்கப்படாத மகத்தான கேள்விகளில் இதுவும் ஒன்று". (ஓநாய் குலச்சின்னம் : 143) "கடந்த இரண்டான்டு காலமாக ஜென்னுக்கு மேய்ச்சல் நிலத்தில் ஓநாய் களுடன் ஏற்பட்ட அனுபவங்களும், அவன் சேகரித்த எண்ணற்ற பழங்கதைகளும், மான் கூட்டத்தை அவை வெகு நேர்ததியாக கொன்றதை அவன் நேரில் பார்த்ததும், குதிரை மந்தைக்கு எதிராக அவை நடத்திய யுத்த முறையின் சிறந்த உதாரணமும் ஜெங்கிஸ்கானின் இராணுவ ஆற்றலுக்கு ஓநாய்களே காரணமாக இருந்திருக்கின்றன என்ற பதிலில் அவனுக்கு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தின. (ஓநாய் குலச்சின்னம் : 143) ஒரு மொழி பெயர்ப்பாளர் மூன்று முக்கியமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பார்கள்: எதை மொழிபெயர்க்க வேண்டும்? ஏன் மொழிபெயர்க்க வேண்டும்? எப்படி மொழிபெயர்க்க வேண்டும்? எதை மொழிபெயர்க்க வேண்டும் - கீழைத்தேய மரபின் உயிர் நாடியாக விவசாயத்தை முன் நிறுத்துவது விளைநிலக் கலாசார அடிப்படையில் அமைந்த உலகப் பார்வை - எனவே மேய்ச்சல் நில மரபு பேசப்பட வேண்டியது - நாடோடி மரபு அதற்குரிய அறமும், அரசியலும் உடையது என்பதை முன்வைக்கின்ற ஒரு புதினத்தை மொழிபெயர்க்க வேண்டுமெனத் தீர்மானித்திருக்கின்ற, மொழிபெயர்ப்பாளரின் தேர்வு மிக முக்கியமிங்கு! ஏன் மொழிபெயர்க்க வேண்டும் - என்கிற கேள்வியும் - ஒரு மூன்றாமுலகப் பின் காலனியப் பிரஜையாக, படைப்பாளியாக, மிக அடிப்படையான ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறது. "ஒரு கவிதையையோ, கதையையோ மொழிபெயர்ப்புக்கென தேர்ந்தெடுக்கிறபோது அந்த மொழிபெயர்ப்பு தமிழ்ச்சூழலில் என்ன மாதிரியான ஒரு பங்களிப்பைச் செய்யப்போகிறது என்பதை மொழி பெயர்ப்பாளன் தீவிரமாக சிந்திக்க வேண்டும். தனக்கு அந்த மொழி தெரியும். எனவே அதனைத் தமிழில் கொண்டு வருகிறேன் என்பது தேவையற்றது. இன்றைய உலகில் அசுர வேகத்துடன், இந்தத் தமிழ்ச் சாதியை முன்னேற்றக் கூடிய மொழிபெயர்ப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இந்த தேர்ந்தெடுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது" என்று இந்திரன் சொல்வதற்கிணங்க, மிகச் சரியான பங்களிப்பை, அதற்கான அரசியல் தெளிவுடன் முன்னெடுத்து இருக்கிறார் மோகன். எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்றால் - அது அப்பட்டமான வரிக்கு வரியான மொழிபெயர்ப்பாக இல்லாமல் - ஒரு Transcreation ஆக மூலத்தின் கருவும், ஆன்மாவும் சிதையாமல் வெளிவரும் படைப்பாக இருத்தல் வேண்டும் - Transcreation and not as a Transliteration. ஒரு படைப்புக் கலைஞரால் மட்டுமே ஒரு வெற்றிகரமான மொழிபெயர்ப்பைச் செய்ய முடியும், என்பார்கள். அதனைச் சரியாக மெய்ப்பித்திருக்கிறார் மோகன். ஒருசோறுபதமாக. கீழ்வரும் இரண்டு கவிதை வரிகள்: "வானம் பாடிகள் ஜோடியாகப் பறந்து சென்றன. ஒரு சிறகில் இரண்டு கோப்பைகள்" என்றான் (ஓநாய் குலச்சின்னம் : 85) மொழி பெயர்ப்பு வெறும் சமமான சொற்களைத் தேடி அலையும் கருவி அல்ல - மூலத்தின் உணர்ச்சி, அனுபவம், சாரம் - இவற்றைக் கடத்துவது அது என்பார்கள். புல்லைத் தின்று உயிர் வாழும் ஆடுகளின் தைரியம்தான் சீனர்களாகிய உங்களுக்கு இருக்கும். நாங்கள் மங்கோலியர்கள், கறி தின்னும் ஓநாய்கள். ஓநாய்த் துணிச்சலை நீ கொஞ்சம் பயன்படுத்திக்கொள்ளலாம். (ஓநாய் குலச்சின்னம் : 40) "ஒரு ஓநாய்த் தோல் தரும் வெப்பத்தை,இரண்டு ஆட்டுத் தோல்கள் சேர்ந்தாலும் தர முடியாது. ஆனாலும் நாங்கள் அவற்றைப் படுக்ைக்கு பயன்படுத்துவதில்லை. நாங்கள் ஓநாய்களைப் பெரிதும் மதிக்கிறோம். அப்படி இல்லாத ஒருவன் உண்மையான மங்கோலியன் இல்லை. ஒரு ஓநாய்த் தோலில்படுப்பதை விடவும் மங்கோலியன் உறைந்து சாவதையே மேலாக நினைப்பான். அப்படிச் செய்வது மஙகோலியக் கடவுள்களைப் புண்படுத்தும். அவர்களுடைய ஆத்மா ஒருபோதும் டெஞ்ஞர் போய் சேராது. டெஞ்ஞர் ஏன் ஓநாய்களிடம் பெரும் கருணை கொண்டிருப்பதாக நீ கருதுகிறாய்?" (ஓநாய் குலச்சின்னம் : 41) மேற்சொன்னவை மேய்ச்சல் நில மக்களின் ஆன்மாவை மிகச் சரியாகக் கொணர்ந்திருப்பதாகப் படுகின்றது எனக்கு! மொழி பெயர்ப்பாளர் இரண்டு மொழிகளின் நுணுக்கங்களையும், பண்பாட்டு, கலாச்சார நுட்பங்களையும் அறிந்தவராக இருக்க வேண்டும். இங்கு ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே அறிந்தவராக இருக்கின்ற தமிழ்மொழி பெயர்ப்பாளருக்கு அதன் வழி மங்கோலிய, சீனப் பண்பாட்டு, கலாச்சார நுட்பங்களை அறிந்து கடத்துவதில் சிக்கலேதுமிருப்பதாகத் தெரியவில்லை - தமிழும், சீனமும், ஆங்கிலமும் அறிந்த ஒருவரது சான்றிதழ் இதற்கு அவசியமில்லை. மேய்ச்சலின் விதியை, அதன் அத்தியாவசியமானதொரு அலகைப் பின்வரும் பத்தி எவ்வளவு நேர்த்தியாகச் சொல்கிறது: "இன்று ஓநாய்களுடைய நல்ல பண்புகளை நீ நேரடியாகப் பார்த்தாய். அவை மேய்ச்சல் நிலத்தைக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் மட்டும் செய்யவில்லை; அவை நமக்குப் புத்தாண்டுப் பரிசுகளும் தந்திருக்கின்றன. இது ஒரு நல்ல வருடமாக அமையப் போகிறது. அதற்காக அவற்றுக்கு நன்றி சொல்வோம். வேட்டையின்போது மிஞ்சியவை, அதை யார் முதலில் பார்த்தார்களோ அவர்களுக்கே சொந்தமென்பது மேய்ச்சல்நில விதி. ஆக, நீயும் நானும்தான் நேரடி சாட்சிகள் என்பதால் உன்னுடைய குடிலுக்குக் கொஞ்சம் அதிகப்படியாகக் கிடைக்கும்படி நாங்கள் பார்த்துக்கொள்வோம். மங்கோலியர்களாகிய நாங்கள் நன்றிக்கடனைத் தீர்ப்பதற்குப் பெரிதும் முக்கியத்தும் கொடுப்போம்". (ஓநாய் குலச்சின்னம் : 52 &53) மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு "ஆறாவது அறிவு" Sixth Sense மிக அவசியம் அல்லவா! அந்த ஆறாவது அறிவின் நுட்பமே மேய்ச்சல் நிலத்தின் ஓநாயை மூலத்திலிருந்து பிசகாமல் பின்வருமாறு மொழிபெயர்க்கின்றது – மங்கோலியக் குதிரையில் திறமையாக சவாரி செய்பவனை விடவும், அவருடைய ஆத்மாவில் ஓநாய் குலச்சின்னமே அசைக்க முடியாத இடம் பெற்றிருந்தது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், மேய்ச்சல் நிலக்காரர்கள் பிற விலங்குகளைக் கொன்று வாழ்கிற குலச்சின்னத்தைக் குறை சொல்வதில்லை. எழுபது அல்லது எண்பது குதிரைகளைக் கொன்ற பிறகும்கூட அவர்களின் ஒரே புனித உருவாக அதுவே இருந்து கொண்டிருக்கிறது. ஜென்னுக்கும் சில பழமொழிகள் நினைவுக்கு வந்தன: 'மஞ்சள் நதி நூறு பேரழிவுகளை விளைவித்தாலும், அது தொட்டுச் செல்லும் எல்லாவற்றையும் வளப்படுத்துகிறது;' 'மஞ்சள் நதி தன் கரைகளை உடைத்துப் பாயும்போது, மக்கள் மீன்களாகவும் கடல் ஆமைகளாகவும் ஆகிவிடுகிறார்கள்'; 'மஞ்சள் நதி - நம் அன்னை நதி'; 'மஞ்சள் நதி - சீன இனத்தின் தொட்டில்'. மஞ்சள் நதியானது சீன இனத்தின் தொட்டில் என்பதை சீனர் எவரும் மறுப்பதில்லை. அவர்களுடைய இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அது முக்கிய பங்கு வகிக்கிறது. அது சமயங்களில் பொங்கிப் பிரவாகமெடுத்துக் கரைகளை உடைத்துப் பல ஏக்கர் பயிர் நிலங்களையும் ஆயிரக்கணக்கான உயிர்களையும் விழுங்கிவிட்டாலும் அதன் பெறுமதி குறைவதில்லை. மேய்ச்சல் நிலத்தவரின் ஓநாய் குலச்சின்னமானது அதுபோன்றே போற்றப்படத் தகுதியானது. (ஓநாய் குலச்சின்னம் : 133) வெளியீட்டாருக்கோ “ஒரு ஏழாவது உணர்வும்” தேவைப்படுகிறது. இப்பத்தியைப் பாருங்கள் – டேங் பிரதேசத்தின் தெய்சாங், சீனாவின் மகத்தான பேரரசராகத் திகழ்ந்தவர். அவருக்கு வேட்டை மீது தீராக் காதலிருந்தது. அவருடைய மகன், அவருடைய வாரிசு, தன்னுடைய துருக்கியப் பாதுகாவலர்களோடு மேய்ச்சல் நிலத்துக்கு குதிரைகளில் வருவதையும், வேட்டையாடுவதையும் வழக்கமாக வைத்திருந்தான். அவன் அரண்மனை முற்றத்தில் மேச்சல்நில பாணியில் கூடாரம் ஒன்றையும் அமைத்திருந்தான். அங்கு அவன் உங்களைப்போலவே, ஆட்டை வெட்டித தன்னுடைய கத்தியாலேயே துண்டங்களாக்கி சாப்பிடுவான். ஒரு பேரரசனாக இருப்பதை விடவும் மேய்ச்சல்நில வாழ்க்கை மேம்பட்டதாக அவனுக்கு இருந்தது. தன் துருக்கியப் பாதுகாவலர்களோடு, அவனுடைய துருக்கிய ஓநாய் கொடியுடன் வேட்டையாடுவதையே அவன் விரும்பினான். மேய்ச்சல் நிலத்தில் ஒரு துருக்கியனைப் போல வாழவே அவன் ஆசைப்பட்டான். அதன் விளைவாக, அவன் சிம்மாசனத்துக்கான உரிமையை இழந்தான். அவனுடைய அப்பா அவனுடைய சகோதரனை வாரிசாக தேர்வு செய்தார். இங்குள்ள வாழ்க்கை ஒரு பேரரசனையும் வெல்லக் கூடியது" (ஓநாய் குலச்சின்னம் : 85,86). இந்த வெளியீட்டாளர் இப்படித்தான் மகத்தான பேரரசு சிம்மாசனங்களை, காசு குவிகின்ற வியாபார ரீதியிலான புத்தகங்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு பேரரசனையும் வெல்லக்கூடிய, ஒரு தரமான புத்தகம் போடுவதற்காகப் பதிப்பகம் தொடங்குபவர்! "நடைமுறையில் மொழிபெயர்ப்பு பண்பாடுகளுக்கு இடையேயான தொடர்பாடலாகத் தொடங்குகிறது. ஆனால் அதில் எப்போதும் அதிகார வரைவுகளும், ஆதிக்க வடிவங்களும் பொதிந்துள்ளன. எனவே அதனால் அரசியல் சிக்கல்களைத் தவிர்க்க இயலாது. தற்போதைய அதிகார வடிவங்களோடு மொழி பெயர்ப்புக்குள்ள தொடர்புகளைக் குறித்த கேள்விகளையும் புறந்தள்ள இயலாது. எந்த மொழிபெயர்ப்புச் செயல்பாடும் முழுமையான நடுநிலைமைக் களத்தில், அப்பழுக்கற்ற சமத்துவத்தோடு நடைபெறுவதில்லை. யாரோ, யாருக்காகவோ, எதையோ மொழிபெயர்க்கிறார்கள். யாரோ அல்லது எதுவோ மொழிபெயர்க்கப்படுகிறது. தன்னிலை இருப்பிலிருந்து, பிறநிலை இருப்பதாக மாற்றம் பெறுகிறது. வட அமெரிக்காவிற்குச் செல்லும் ஸ்பானிஷ் பெண் முதல் உலகத் தனிமனிதர் என்ற நிலையிலிருந்து, மூன்றாம் உலக 'லாடினோ' இனப் பெண்ணாக பெயர்க்கப்படுகிறாள். கானா நாட்டு இளவரசி அமெரிக்கா செல்லும்போது தான் இரண்டாம் பட்ச பிரஜையாக நடத்தப்படுவதை உணர்கிறாள். அவள் அங்கு இன்னுமொரு ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண் அவ்வளவே. காலனியப்படுத்தப் பட்ட மனிதரும் மொழி பெயர்க்கப்பட்ட ஆண் / பெண்களின் நிலையில்தான் உள்ளனர்" என்கிறார் ராபர்ட் ஜே.சி.யங் (பின்காலனியம்: 174). இந்த மிக ஆபத்தான, அதி நுட்பமான அரசியலை, மக்கள் திரளைக் கட்டமைக்க வேண்டியதின் கட்டாயத்தை, ஒன்றை மற்றொன்றாகக் கட்டமைத்து மாற்றுகின்ற மொழிபெயர்ப்புச் செயல்பாட்டைப் பின்வருகின்ற பத்தியில் நாம் முழுமையாக உணரலாம்: சிவப்புப் பாதுகாவலர் அமைப்பின் பீஜீங் டாங்ஜியோ பிரிவைச் சார்ந்த மாணவனுமான லீ ஹாங்வெய் உணர்ச்சி வசப்பட்டவனாகப் பேசினான். "ஓநாய்கள் உண்மையான வர்க்க எதிரிகள். உலகமெங்கும் பரவியிருக்கிற பிற்போக்குவாதிகள் அனைவருமே பேராசை கொண்ட ஓநாய்கள்தாம். ஓநாய்கள் குரூரமானவை. மக்களின் உடமைகளை - அதாவது, நம்முடைய குதிரைகள், ஆடு மாடுகளை - அவை கொன்று குவிப்பது ஒரு புறமிருக்கட்டும்; அவை தம் சொந்தத்தைக் கூடக் கொல்கின்றன. அவற்றை வேட்டையாடி அழிக்க நாம் மக்கள் திரளைக் கட்டமைக்க வேண்டியது அவசியம். எல்லா ஓநாய்களுக்கும் எதிராக நாம் உழைக்கும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும். பூமியில் அவற்றை இல்லாமல் அழித்தொழிக்க நாம் உறுதியெடுக்க வேண்டும். அதேபோல, பழமையான எல்லாக் கருத்துகளையும், சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் - ஓநாய்கள் மீது இரக்கம், ஓநாய்களுக்குப் பணிந்து போவது, இறந்தவர்களின் உடல்களை ஓநாய்களுக்கு உணவாக அளிப்பது போன்றவை - நாம் தீவிர விமர்சனத்துக்கு உட்படுத்தியாக வேண்டும்". (ஓநாய் குலச்சின்னம் : 149). ஜான் மோனகன் என்றும் சமூக இயலாளர், "ஒரே நேரத்தில் பிறக்கும் மனிதனும் விலங்கும் இவ்வுலக அனுபவங்களை ஒன்றாகவே பகிர்ந்து கொள்கின்றன: ஒரே ஆன்மாவைக் கொண்டுள்ளன: ஒத்த ஓர்மையைக் கொண்டுள்ளன. இந்த ஓர்மையானது பெரும்பாலும் கனவில் தோன்றுகிறது. அதாவது நம்முடன் வாழ்ந்து பயனளிக்கும் விலங்கின் கண்கள் மூலம் நாம் காணும் உலகமிது (விலங்குகளும் அவற்றுடன் சேர்ந்து வாழும் மனிதர்களும் ஒன்றையொன்று சார்ந்தவர்கள்)" என்று விளக்கங்கொடுப்பார். எந்த ஒரு பொருளானது உடலோடு ஒட்டாமல் தூரத்தில் இருக்கிறதோ அது மிக அன்யோன்யமாக அமைந்துவிடும் என்ற மரபினை இந்த இனவரைவியல் எழுத்துக்கள் மூலம் அறிந்திருக்கின்றோம்" (சமூக பண்பாட்டு மானிடவியல் : 189) என்றும் சுட்டுவார் அவர். அக்கூற்றை அச்சொட்டாக மெய்ப்பிக்கிறது புத்தகத்தின் பின்வருகின்ற இப்பத்தி: "ஒரு மனிதனால் தான் வளர்க்கப்படுவதான உணர்வு அதனிடமிருந்து வெளிப்பட்டதில்லை. அதனுடைய எஜமானன் அதற்கான உணவுடன் வருகிறான் என்பத்றகாக ஒரு அடிமை போல அதனால் நடந்துகொள்ள முடியாது. ஜென்னுக்கும் ஓநாய்க்குட்டிக்குமான உறவில் 'வளர்ப்பு' என்ற வார்த்தை இல்லவே இல்லை. இப்போதைக்கு அவனால் அது சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதானே தவிர, அவனுடைய பராமரிப்புக்குட்பட்டதல்ல அது. அதனிடம் ஒரு தனித்துவ இயல்பாகப் பிடிவாதம் அமைந்திருப்பதை அறிந்த ஜென்னுக்கு முதுகுத்தண்டு ஜில்லிட்டது. கடைசியாக,அது சாப்பிடும்போது அதை செல்லம் கொஞ்சும் ஆசையை அவன் கைவிட்டான். அதனுடைய புனிதமான,இயல்பான உள்ளுணர்வுகளை மதித்தான். இங்கு ஓநாய் குணங்களுடன் ஒரு மனிதனும், ஒநாய் இயல்பு கொண்ட நாயும், ஒரு அசல் ஓநாயும் மேய்ச்சல் நிலத்தில் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஓநாய்ச் சிறுவர்களின் கதைகளை விடவும் மிகவும் விசித்திரமானதாக அவனுடைய வாழ்க்கை திடீரென அமைந்துவிட்டிருக்கிறது (ஓநாய் குலச்சின்னம்). ஒவ்வொரு கதையும், மொழிபெயர்ப்பாளர் அதன் உள்ளே வர கதவுகளாகவும், ஜன்னல்களாகவும் பயன்படும் சில சொற்களை, சொற்றொடர்களைக் கொண்டிருக்கும். உள்ளே நுழைந்த பிறகு அவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாய் அந்தக் கதையின் ஆன்ம ஒளியை சேகரித்து அதை வெளிக் கொணர்ந்து. அதை மற்றொரு மொழியில், கலாச்சாரத்தில் மீண்டும் உருவாக்குகிறார் என்கிறார் சுக்ரிதா பால்குமார். சொர்க்கமும் பூமியும் எவ்வளவு வேறுபட்டவையோ அவ்வளவு வேறுபட்டவை ஒநாய்களும் நாய்களும். ஆனால் நீ இரண்டையும் சேர்த்து வளர்க்கத் திட்டமிடுகிறாய். அது மட்டும் போதாதென்று, அதை நாய்களோடு இணை சேர்க்கும் நம்பிக்கை வேறு வைத்திருக்கிறாய். மங்கோலியர்களாகிய நாங்கள், உங்களுடைய 'டிராகன் அரச'னோடு ஒரு பெண் பன்றியை இணை வைக்க விரும்பினால், அது பற்றி சீனர்களாகிய நீங்கள் என்ற நினைப்பீர்கள்? அது தெய்வ நிந்தனை என்று சொல்வீர்கள். நல்லது, இப்போது நீ செய்துகொண்டிருப்பது எங்கள் மூதாதையர்களை அவாமதிப்பது. டெஞ்ஞரையும் கூட. இதற்கெல்லாம் நீ ஒருநாள் அனுபவிப்பாய்.. (ஓநாய் குலச்சின்னம் : 354). ஒரு போர்வீரனைக் கொல்லலாம்; அவனை அவமதிக்கக்கூடாது. ஒரு ஓநாயைக் கொல்லலாம்; அதை வளர்க்கக்கூடாது. இப்போது இங்கே, மங்கோலியர்களின் மூதாதையர் நிலமான மேய்ச்சல் நிலத்தின் இதய ஆழத்தில், ஒரு இளம் சீன மாணவன், ஒரு நாயை வளர்ப்பது போல ஒரு ஓநாயை வளர்க்கிறான். இந்நிலத்து வாசிகள் டெஞ்ஞரை வணங்குகிறார்க்ள. இந்தப் புனிதமான இடத்தில் அவர்களுடைய மூதாதை வடிவமாக ஓநாயை வழிபடுகிறார்கள். ஓநாய்: அவர்களுடைய ஞானகுரு; போர்க்கடவுள்; மேய்ச்சல் நிலக் காவலன்; அவர்களுடைய குலச்சின்னம். இங்கு அவன் இதைச் செய்வது, உண்மையிலேயே ஒரு கொடுங்செயல். (ஓநாய் குலச்சின்னம் : 355) மேற்சொன்ன பத்தியில் மூலத்தின் ஆன்ம ஒளிக்கீற்று அவ்வாறாக வேகப்படுத்தப்பட்டு இருப்பதாக நான் உணர்கிறேன். சீனத் தொன்மமும், மங்கோலியத் தொன்மமும் முன்வைக்கின்ற கதை, கேள்வி - அதன் வழிபெறுகின்ற ஒளி, மிகச் சரியாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. 'ULFA' என்ற அஸ்ஸாமிய புரட்சிக்குழுவின் மக்கட் தொடர்புத் துறைத் தலைவராக இருந்த மேகன் கச்சாரி தமது வாழ்வில் சூறாவளி வீசிய காலங்களில் எழுதிய கல கவிதைகளை இந்திரா கோசுவாமி வெளிக் கொணர்ந்திருக்கிறார். அதில் ஒரு சம்பவம் மொழிபெயர்ப்பின் சவால்கள் - Dr.G. ஜெயராமன், லதா ராமகிருஷ்ணன் எனும் நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது. தமது இரண்டு அழகிய பசுமைப் புறாக்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் மோகன் கச்சாரி பூடானின் காடுகளில் பிடிபட்டார் என்பதும், தம்மைப் பிடிக்க வீரர்கள் அச்சுறுத்தும் அளவில் நெருங்கிவந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும், தம்மைக் காப்பாற்றிக்கொள்வதை விட அந்த புறாக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என்ற அவரது எண்ணமும், அவரது வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, இந்த ஆளுமை அவரது கவிதைப் புத்தகத்திலும் வெளிவர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார் கச்சாரி குறித்து மன்ஜித் பரூவா. இது போன்றதொரு ஆளுமையினை மொழிபெயர்பாளரும் கொண்டிருப்பார் என்பதை உருவாக்குகின்றது பின்வரும் மோகனது ஓநாய் குறித்த மூலத்தின் மொழிபெயர்ப்புப் பத்திகள்: ஜென் அமைதியாகப் பேசினான். "அப்பா, இந்த ஓநாய்க் குட்டியை நான் ஒரு அடிமை போல் நடத்தவில்லை. அப்படிச் சொல்லப்போனால், நான்தான் அதன் அடிமையாக இருக்கிறேன். ஒரு மங்கோலிய அரசன் அல்லது இளவரசனுக்காகக் காத்திருப்பதை போல நான் அதற்காகக் காத்திருக்கிறேன். அதற்குக் கொடுப்பதற்காக நான ஒரு பசுவிலிருந்து பால் கறக்கிறேன். அதற்காக இறைச்சிக் கூழ் தயாரிக்கிறேன். அது குளிரில் அல்லது நோயில் வாடிவிடுமோ என்று கவலைப்படுகிறேன். அதை நாய்கள் கடித்து விடுமோ அல்லது அதன் தாயோ அதைச் தூக்கிச் சென்றுவிடுமோ என்று பயந்துகொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் நான் சரியாகத் தூங்குவதில்லை. ஓநாயின் அடிமை என்று காவோ என்னைக் கூப்பிடத் தொடங்கியிருக்கிறான். எந்தவொரு சீனனையும் விட அதிகமாக ஓநாய்களை நான் போற்றுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். டெஞ்ஞர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறது; டெஞ்ஞர் நியாயமானது; எதற்காகவும் டெஞ்ஞர் உங்களைக் குற்றம் சாட்டாது". (ஓநாய் குலச்சின்னம் : 357) "மூலமொழி குறித்த போதுமான அறிவு இல்லாமல், இணைப்பு மொழியொன்றைப் பயன்படுத்தி மொழி பெயர்ப்பு செய்தல், என்னளவில் நிறைவளிக்காத அனுபவமே" என்கிறார் அம்பிகா ஆனந்த். அவரும், எனது பேராசிரியர், ஆசான் T.V. Subba Rao அவர்களும் இணைந்து சில கவிதை மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், ஆங்கில இணைப்பு மொழியின் மூலமாக மோகன் செய்திருக்கின்ற இம் முயற்சி எனக்கு மிக நிறைவளிக்கிறது. மூலத்தைப் படித்திராத குறை பற்றிய சிறு நெருடல் கூட அற்று இதில் ஒன்ற முடிகிறது! "குஜராத்தின் தேஜ்கர் பகுதியில் அமைந்துள்ள பழங்குடி ஆய்வு அகாதெமியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், சைனாவிலிருந்து வெளிப்படும் மொழி பெயர்ப்புக் கோட்பாடு குறித்து Red Chan, 'சீனர்கள் மொழிபெயர்ப்பை இனவரை வியலாகப்பார்க்கிறார்கள்' என்று குறிப்பிட்டார்" என்கிறார் உதய நாராயண சிங். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த ஓநாய் குலச்சின்னம். கீழ்காணும் வரிகளை ஒரு சோறுபதமாக சொல்லலாம் அதற்கு: நம்முடைய கன்பூசிய வழிகாட்டுதல் கொள்கையானது, பேரரசரிடமிருந்து அமைச்சருக்கு, தந்தையிடமிருந்து மகனுக்கு என்று மேல்-கீழ் தத்துவத்தையே வலியுறுத்துகிறது. சீனாவின் சிறு அளவிலான குடியானவப் பொருளாதாரமும் கன்பூசியக் கலாசாரமும் மக்களின் சுபாவத்தை பலஹீனமாக்கி விட்டன. (ஓநாய் குலச்சின்னம் : 398,399&400) "எல்லாவற்றையும் ஒருபடித்தான தன்மை வாய்ந்தாகச் சித்தரிப்பதைத் தொடர்ந்த ரீதியில் மறுதலித்து வருவதன் மூலம் ஒரு மொழிபெயர்ப்பாளர் 'பணியமறுப்பதன்' வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமொன்றில் பங்கேற்பவராகிறார். ஸேய்த் Parochial domination and fussy defensiveness என்று வர்ணித்த விஷயத்தை ஒரு மொழிபெயர்ப்பாளர் கைக்கொள்வதில்லை. காரணம், மனிதர்களிடையே நிலவும் வேறுபாடுகளின் காரணமாகவே அனைத்துவகையான கலைவடிவங்களும் சாத்தியமாகின்றன என்பதே முழுநிறைவான உண்மை" எனப் படித்திருக்கிறேன். பன்மைத்தன்மையின் பல வீச்சுகளை, இருவேறு கலாச்சாரங்களின் நியாயங்களை, நியதிகளைச் சொல்கின்ற மூலப் பிரதியினைத் தேர்வுசெய்து (ஒரு வகையில் மங்கோலியர்களும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்றாலும்) - இப்போக்கு Fascism என்கின்ற ஒரு சித்தாந்தைத் தூக்கிப் பிடிக்கின்ற அபாயமுடையது எனும் புரிதலுடன், தான் மூலத்தின் ஆன்மாவை மட்டுமே கடத்துகின்ற மொழிபெயர்ப்பாளன் எனும் தெளிவுடன், பயணித்திருக்கின்றார் மோகன். இதில் எங்கே பணிய மறுக்கிறார் என்றால், மங்கோலிய மேச்சல் நில நாடோடிகள் குரூரமான ஒடுக்கு முறைவாதிகள் - செங்கிஸ்கான் ஒரு கொடுங்கோல் ஆக்கிரமிப்பு முறைக்கு வழிகோலியவன் எனும் ஒருபடித்தான - ஒற்றைப் பரிமாணத்தைவிடுத்து - அந்த மக்களின் நியாயங்கள், அறம் சார்ந்த எளிய வாழ்முறை, (பெரிய உயிர்கள், சிறிய உயிர்களை விட மதிப்பு வாய்ந்தவை) விவசாய மக்களது வளர்ச்சி எனும் கோட்பாட்டில் சிதைந்த நாடோடிகளின் பூர்வகுடி விழுமியங்கள் - இவற்றை முன்னிறுத்துகின்ற ஒரு படைப்பினை மொழிபெயர்த்திருக்கிறாரே - அங்குதான்! இதுவே, மூலப் புத்தகத்தை வெறும் பாசிஸத்தின் வெளிப்பாடகப் பார்க்கின்ற தட்டையான பார்வைக்கு மிகச் சரியான பதிலாக இருக்க முடியும். ஒரு சந்தேகம் மோகன் - பின்வரும் வரியில் நீங்கள் கையாண்டுள்ள, 'பொக்காகவே' ஆங்கிலத்தில் எந்த வார்த்தைக்கான சரிநிகர்ச் சொல் - equivalent? ஓநாய்கள் பற்றிய தன்னுடைய புரிதல், இன்னமும் கூட மிகவும் பொக்காகவே இருப்பதாக ஜென் நினைத்தான். ராமராவ் எனும் மொழிபெயர்ப்பாளர் தனக்கான ஒரு பாராட்டுரையாக, "இவர் ஒரு அடாவடியான மொழிபெயர்ப்பாளர்" எனத் தான் அழைக்கப்பட்டதைச் சுட்டுகிறார். மோகனும் ஒரு அடாவடியான மொழிபெயர்ப்பாளர் தான். பணிய மறுக்கின்ற, மொழியின் சவால்களோடு, மூலத்தின் சத்யத்திற்குத் துரோகம் செய்யாத 'அடாவடியானதொரு' மொழிபெயர்ப்பாளர். இலக்கிய மொழியாக்கம் என்பது அன்பினால் மேற்கொள்ளப்படும் உழைப்பாகச் செய்யப்படுவது. அது அதனளவிலேயே ஒரு பரிசு. அன்பளிப்பு. விருது அல்லது பரிசு என்பது அதிர்ஷ்டவசமாகக் கிடைப்பது என்றும் ராமாராவ் சுட்டுகிறார். அதனளவில் கிடைக்கின்ற திருப்திக்காக, அன்பினால், ஒரு பரிசாக இம்மொழிபெயர்ப்பை மோகன் செய்திருக்கின்றார். மனமார்ந்த வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள். உதவிய நூல்கள்: 1) பின்காலனியம் : மிகச் சுருக்கமான அறிமுகம் - ராபர்ட் ஜே.சி. யங், தமிழில் அ.மங்கை 2) பின்நவீனத்துவம் : மிகச் சுருக்கமான அறிமுகம் - கிறிஸ்தோஃபர் பட்லர், தமிழில் பிரேம் 3) சமூக - பண்பாட்டு மானிடவியல் : மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜான் மோனகன் – பீட்டர் ஜஸ்ட், தமிழில் பக்தவச்சல பாரதி 4) மொழிபெயர்ப்பின் சவால்கள் - Dr. G. ஜெயராம், லதா ராமகிருஷ்ணன் 5) கவிதை ஓவியம் சிற்பம் சினிமா - இந்திரன்

தொடர

சி.மோகனின் விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

புதினம் எனப்படுகின்ற நாவல் ஒரு கந்தர்வக்கன்னி. அவளோடு தனியறையில் சுகிப்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுதலை ஒரு தவம் போல மேற்கொள்ள வேண்டும். ஒரு கலைப்படைப்பென நாவலை உருவாக்க ஆன்மாவின் அத்தனை அடுக்குகளையும் மொத்தமாக அதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். “முன்னொரு காலத்தில் இலக்கியம் என்பது வேறெதையும்விட அதிகம் கவிதையையே குறித்தது. நாவல் திடீரென்று தோன்றிய ஒரு நவீன வரவாகும். அது வாழ்க்கை வரலாறு அல்லது வரலாற்றுப் பதிவுக்கு மிக நெருங்கியதாக இருந்ததால் அதற்கு மெய்யான இலக்கியத் தன்மை இருக்கவில்லை. அது தன்னுணர்ச்சிக் கவிதைக்கும் காவியக் கவிதைக்கும் இருந்த உயர் குணங்களை அடைய இயலாத ஜனரஞ்சக வடிவமாகும். எழுத்தாளர்கள் என்ன எழுதுகிறார்கள் என்ற முறையிலும் வாசகர்கள் என்ன வாசிக்கிறார்கள் என்ற முறையிலும் நாவல், கவிதையை மறைத்து மங்க வைத்துவிட்டது. 1960களுக்குப் பிறகு கதையாடல் இலக்கியக் கல்வியின்மீதும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்டது. வாசகர்கள் இப்போதும்கூட கவிதை வாசிக்கிறார்கள் (பல சமயங்களில் அது வலிந்து கோரப்படுகிறது). ஆனால் நாவல்களும் சிறுகதைகளும் பாடத்திட்டத்தின் மையமாகிவிட்டன. உலக விஷயங்களைப் புரிந்துகொள்ள நமக்குள்ள பிரதான வழி கதைகள்தான் என்ற ஒரு வாதம் உள்ளது. ஆனால் காரண காரியம் தொடர்பான விஞ்ஞான தர்க்கத்தை வாழ்க்கை பின்பற்றுவதில்லை. அது கதையின் தர்க்கத்தைப் பின்பற்றுகிறது” என்கிறார் ஜானதன் கல்லர் (இலக்கியக் கோட்பாடு: 133,134). இந்தக் 'கதையாடல்' மற்றும் 'கதை கூறல்' ஒரு புதினத்தின் முக்கியக் கூறுகளாகவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வந்துள்ளது. ஆனால் இந்தக் கூறுகளை உள்ளடக்காத, வெறும் சம்பவக் கோர்வைகளைச், சமூக, வரலாற்றுப் பின்னணியுடன் இணைத்துச் சொல்லாத, எத்தனையோ புதினங்கள், மேற்சொன்ன வரையறைகளை உடைத்துவிட்டுப் புதிதானதொரு தேடலோடும், தனித்துவமானதொரு மொழியோடும், குறிப்பாக ஒரு ஆன்ம தரிசனத்துடனும் எழுதப்பட்டுப், பெருவாரியான வாசக மனங்களைச் சென்றடைந்திருக்கின்றது. மோகனின் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’; அவ்வாறான ஒரு படைப்புதான். இதைப்போன்றதொரு நாவல் கல்லூரிகளில் நவீனத் தமிழ்ப் புனைக்கதைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமாயின் அது எவ்வளவு நம்பிக்கைக்கும், உற்சாகத்திற்குமுரிய விஷயமாயிருக்கும் என்கிற கனவோடு நான் இதனைப் படித்து முடித்தேன். “இருத்தலின் சாத்தியங்களை இந்த நாவல் தன் ஞானப் பாதையின் வழி கண்டடைகிறது” என்று மோகன் தன்னுரையில் சொல்கிறார். உண்மையில் இந்த நாவல் ஒரு மகா கலைஞனைப் பற்றிய புனைவினூடே கலை பற்றிய ஒரு தரிசனத்தை, கலையின் ஜ்வாலைக்குத் தன்னை முழுமையான திருப்தியுடன் தின்னக் கொடுத்த ஒரு கலைஞனின் வாழ்வு பற்றிய சித்திரத்தின் மூலம் முன்வைக்கிறது. கலை தர்க்கங்களை மீறக் கூடியது. ஆனால் வாழ்வியல் யதார்த்தமோ தர்க்கத்தின் மீது கட்டுமானம் செய்யப்பட்டது. அந்த யதார்த்திற்குள்ளிருந்தும், கலையின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான சாத்தியமின்மையின் தோல்வியிலிருந்தும், விடுதலை பெற மரணத்தை ஒரு அழகான சாத்தியமாக நாவலின் protagonist, இராமன் என்கிற அற்புதமான ஓவியக் கலைஞர் தேர்ந்தெடுப்பதை, அதற்குரிய நியாயத்தோடு சொல்கிறது. மோகன் தனது ஆன்மபலத்தை இதனைப் படைப்பதன் மூலம் மீண்டும் புத்தாக்கம் செய்திருக்கிறார் என்பதை அதன் ஒவ்வொரு அத்தியாயமும் உறுதிப் படுத்துகின்றது. அற்புதமானதொரு மனக்கிளர்வையும், ஆன்ம பலத்தையும், சிந்தனையும் உணர்வும் ஒருங்கிணையும் ஒரு கூடலின் ஒத்திசைவையும் தரவல்லது கலை மட்டுமே என்பதையே அவரது மொழிநடையும், ஓவியர் ராமன் குறித்த மனப்பதிவுகளும் புனைவின் மூலம் விளக்குகின்றன. இராமனுடைய விந்தையான கற்பனை உலகமும், படைப்பு மொழியும் மிகப் பெரிய அற்புதம் என்றாலும், இராமனே அற்புதமான ஒருவராக இந்நாவலின் வழி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். மோகன் இராமன் வழியாக, டக்ளஸ் மூலமாக, பணிக்கர் மூலமாகத், தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர்களோடு இணைந்த தன் கலைவேட்கைப் பயணத் துளிகளை அவர் பகிரும் போது, நான் உணர்ந்ததெல்லாம் மோகன் என்கிற கலைஞனின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களே. கவிதைகள், சிறுகதை, மொழிபெயர்ப்பு என நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வருகின்ற மோகனின் கலை நம்பிக்கையை, உள்ளுணர்வு சார்ந்த ஒரு கலை ஆராதனையை அல்லது அதனைக் கொண்டாடுதலை, இந்த ஓவியக் கலைஞனின் புனைவுச் சித்திரம் என் முன்னிறுத்துகிறது! கதையோ, சம்பவங்களின் கோர்வையோ நகர்த்திச் செல்லாத, ஒரு கலைஞனின் வாழ்வையும், நம்பிக்கையையும் மட்டுமே சொல்கின்ற ஒரு புதினத்தை, ஒரு சில உரையாடல்கள், நினைவுகள், திரும்பிப் பார்த்தல் - இவற்றின் மூலமாகப் பேசுவது, அவ்வகைத் தொனியிலேயே ஒரு அர்த்தத்தினையும், இசைவினையும் ஏற்படுத்தி வாசகனை நாவலோடு ஒன்றைச் செய்வது - மிகப் புதிதான உத்திதான். மோகன் இதனை Samuel Richardson இன் கடித வடிவ நாவலான Pamela வைப் போல வலிந்து செய்யவில்லை. (ஆங்கில நாவல் வரலாற்றை இரண்டாம் கட்டத்திற்குக் கொண்டு சென்ற Samuel Richardson பிறர் கேட்டுக் கொண்டபடி, பல வகைச் சூழலுக்குத் தக்கமாதிரி கடிதங்களை எழுதும்போது, கடிதங்களின் வாயிலாகக் கதைசொல்லும் எண்ணம் வர, அவ்வாறு அவர் எழுதிய முதல் நாவல் தான் பாமிலா) நாவலில் இடையீடு / சந்திப்பு என்கிற டக்ளஸீடனான நினைவுப் பகிரலில் நேரடியாக நாவலாசிரியரும் இதன் ஒரு பாத்திரமாகப் பொதிந்து கொள்கிறார். தவறியும்கூட கதை சொல்லும் யத்தனம் இல்லை - மாறாகப் பலகுரல் தன்மையுடைய ஒரு உரையாடல் வழியே இப்புனைவை நகர்த்துகின்றார். இது வாசகனை மேலான ஒரு ஆன்ம அனுபவத்திற்குத், தானே ஒரு கலைஞனின் மனவெழுச்சியைத் தன்னந்தனியாகத் தரிசிக்கின்ற அற்புதமானதொரு அனுபவத்திற்கு அழைத்துப் போகின்றது. மிகைல் பக்தின் சொன்னது போல - நாவல் என்பதே Polyphonous, Mutivoiced கொண்டது தானே - நாவலில் இராமனுடைய இணைபிரியா Companion தேவி என்கிற நாய், பொய்யாக ஒரு பெண் ரசிகையின் காதல் கடிதம்மூலம் இராமனைப் பரிசுசிக்கின்ற சரவணன், அதனைக் கண்டிக்கின்ற மூத்த சிற்பி சீத்தாராமன், இராமனுடைய பெண்தேடும் விளம்பரத்தைப் பார்த்து நேரிலே வந்து திட்டிவிட்டுச் செல்கின்ற பெரியவர், ஏன், அந்தக் கடலோசை கூட - இப்படி எல்லாக் குரல்களின் வழியே நான் கண்டடைவது ஒரு மாபெரும் கலைஞனின் சிருஷ்டி உலகத்தையும், அதன் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு அவனால் செல்ல முடியாத துயரத்தையும், அதை உணர்ந்தபின் அவன் தேர்ந்தெடுக்கின்ற 'அழகிய சாத்தியமான' அந்தத் தற்கொலையையும்தான்! ஓவியர் டக்ளசுடனான நட்பு குறித்துப், “பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது கூட இல்லை; சில மணிநேரம் கூட இருந்து கொண்டிருந்தால் போதும். வாழ்வு அர்தத்தோடும் கலை நம்பிக்கையோடும் சலனம் கொள்ள ஆரம்பித்துவிடும்” என்று எழுத ஒரு ஆழ்நிலைத் தியானமெனக் கலையின் சன்னமான மூச்சை உள்வாங்கியவராலேயே முடியும். உளவியலை நாவல் மாதிரி எழுதிய அமெரிக்கத் தத்துவஞானி William James இன் சகோதரரான Henry James நாவலை உளவியல் போல எழுதிச் சென்றார் எனப் படித்தது நினைவிற்கு வருகிறது. தேவியுடன் இராமனுக்கிருந்த உறவு, கையில் கொஞ்சம் பணம் கிடைத்தவுடன் நல்ல ஜிப்பா, அழகான தொப்பி, பாலியல் இச்சையைத் தூண்டுகின்ற ஒரு புத்தகம் இவற்றைப் பற்றிய நாவலாசிரியரின் பதிவுகள் உளவியல் அவதானிப்பின் உச்சம். இந்த நாவலின் நடையினைத் தன்மைக் கதை சொல்லல் (அ) படர்க்கைக் கதை சொல்லல் என்றெல்லாம் வரையறுக்க முடியாது. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட உத்திகள் மீதெல்லாம் பெரிதாகக் கவனம் குவிக்காத எழுத்து மோகனுடையது. இருத்தல், வாழ்தல் எனும் Binaries இன் இடையில் கனவுலகில் வானத்தில் வாழ்ந்த ஒரு மகோன்னதமான கலைஞன், அவனுடைய கலையின் உன்னதத்தைப் போலவே, தற்கொலையை ஒரு கௌரவமான, மாறுபட்ட சாத்தியமாகத் தேர்ந்தெடுக்கின்றான், அப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டு, நம்பிக்கைகளை உறுதிப் படுத்திக்கொண்டு, ஆன்ம பலத்தை மேலும் திடப்படுத்திக் கொள்கின்ற ஒரு சாதனமாக மட்டுமே மோகன் இதனைக் கையாண்டிருக்கிறார். இதில் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கின்ற ஒரு நாவலுக்குரிய எந்தவிதமான செயல்பாடும் (functionality) உம் கிடையாது - ஒரு மகத்தான ஓவிய ஆளுமையின் விந்தையான கனவுலகையும், அதில் அவருக்கிருந்த அபாரமான ஆளுமையையும், கனவின் அடுத்த நிலைக்குச் செல்ல இயலாமையின் தோல்வியினை அவன் தற்கொலையின் மூலம் தாண்டிச் செல்வதையும் - ஒரு அசையும் மனச்சித்திரம் போலப் பதிவு செய்வதைத் தவிர! நான் நினைத்துக் கொண்டேன் - ஒரு கலைப்பித்தன் இன்னொரு கலை உன்மத்தனைப் பின் தொடர்வதில் என்ன வியப்பு என! இளவயதில் சற்றுப் பிசகிய இராமனுடைய மனநிலை, திக்குவாய் - இவற்றூனாடாக அவரது அம்மாவிடம் மட்டுமே இருந்த மன நெருக்கம் (சொல்லப்போனால் அம்மாவோடு அவன் சேர்ந்து பார்த்த புராணப்பட, மாயாஜாலப் படங்களின் மாடமாளிகைகள், பிரம்மாண்டமான அரண்மனை அடுக்குகள் - இவைதான் பிந்தைய அவரது ஓவியப் படைப்புக்களுக்கான அடிப்படை), அவனைப் புரிந்து, ஓவியத் திறமையை ஊக்குவித்த கோயிலின் மூத்தபட்டர் கிருஷ்ணமாச்சாரி, எக்மோர் ஓவியப்பள்ளியின் ஓவியமாஸ்டர், இராமனுக்குப் பிடித்த தொப்பியணிந்த கிருஷ்ணாராவ் மாஸ்டர், இராமனது கருடன் குழலூதும் சித்திரத்தில் மனதைப் பறிகொடுத்து “நிலவில் நீ ரொம்ப அழகா இருக்கே” என்று அவரை ஆதர்த்த ஓவியப் பள்ளி முதல்வர் பணிக்கர், 'Madras Movement' என்கிற அமைப்பின் கலை இயக்கச் செயல்பாடுகளில் தீவிரம் கொண்டு பணிக்கர் இயங்கிய அக் காலகட்டம், ஓவியப்பள்ளியில் அவரை விட்டுச் செல்ல வருகின்ற இராமனது அப்பா, இராமனை ஒரு பிரத்யட்சமான பெண் துணை வேண்டிக் கொல்லும் காமம், ஓநாயெனத் தொடர்ந்து காத்திருக்கும் மரணம், இராமனுக்கு பிடித்த பனங்காட்டின் ஊளை, சாராயக் கடை, பிராந்திபாட்டில், புரோட்டா பார்சல், இறுதியாக அந்தப் பூச்சி மருந்து - இப்படி மோகனால் புனையப்பட்ட கனவுலகில் ஒவ்வொன்றும் ஒரு இசைமையுடன், இப்புதினத்தின் ஓட்டத்திற்குள் தம்மைப் பொருத்திக் கொள்கின்றன. ஃப்ரெஞ்ச் மொழியில் வெளிவந்து, உலகமுழுவதும் கவனம் ஈர்த்து, பல லட்சம் பிரதிகள் விற்ற நாவல் பாப்பிலான். Henry Shariyar எழுதியது. திரைப்படமாகவும் வந்து வெற்றிபெற்ற இதன் மையக்கருத்து - உயிர் வாழும் வேட்கையே. அதன் கதாநாயகன் பாப்பிலான் 'உயிருடன் இரு - அது ஒன்றுதான் தன் மதம்' எனக் கருதுபவன். தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவர்கள் அந்த முயற்சிக்கு முன் பாப்பிலான் நாவலை அவசியம் படிக்க வேண்டும் - படித்தால் தமது முடிவை மாற்றிக் கொள்வார்கள் எனப்படுவதுண்டு. மோகனின் இந்த நாவல் பாப்பிலானை அதற்கு நேரெதிர்த் திசையில், வாழ்வின் முழுமையைக் கனவின் மரணமே தீர்மானிக்கின்றது எனும் உண்மையோடு எதிர்கொள்கிறது. அதற்கான நியாயங்களை, கலைஞன் தனது கனவின் பரிசான படைப்பாற்றலை ஒரு பூரணமான முற்றாக உணர்ந்தபின், மேலும் அவ்வுலகில் ராஜாவாக, Cow Boy ஆக வசீகரத்தின் வனப்பில் இருந்தவன், ஒரு சவலைப்பிள்ளையாக, கனவின் சோகை மடியில் தவழ விரும்பாமல் விடைபெற்றுக் கொள்ளுதலைப், புகார்களற்று அங்கீகரிக்கின்றது. புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறது. தற்கொலை மட்டுமே மரணத்திற்கு நிதானத்தின் ருசியை வழங்கமுடியும் என்பதையும், உலகெங்கிலும் கலைஞர்கள், படைப்பாளிகள் இந்த நிதானத்தின் ருசிக்கு அடிமைப்பட்டே இருந்திருக்கிறார்கள் - இறந்திருக்கிறார்கள் என்பதையே இராமனது தேர்வின் மூலம்; மோகன் மெய்ப்பிக்கின்றார். முடிப்பு - என மோகன் சொல்கிறார்: “பூமியில் மனிதன் தன் பணி முடிந்ததும் உலக வாழ்விலிருந்து துண்டித்துக்கொண்டு. விடைபெற்றுக்கொள்ள முடிந்தால் அதுவே விவேகமான காரியமாக இருக்க முடியுமென்று தோன்றுகிறது. இளம் மேதைகள் விஷயத்தில் இதுதான் நிச்சயம் அழகான முடிவாக இருக்கமுடியும். இளம் மேதைகள் இளம் பிராயத்திலேயே தங்கள் கனவுகளின் உச்சத்தை எட்டிவிடுவதோடு அவ்வுலகில் பரிபூரணமாக வாழ்ந்தும் விடுகிறார்கள். தங்கள் துறை சார்ந்த மேதைமையின் சிகரத்தை எட்டிவிட்ட பிறகு. முதலில் மரணம் நேர்வது அவர்களுடைய கனவுகளுக்குத்தான். கனவுகளின் மரணத்துக்குப்பின் வாழ நேர்வது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; அவலமும்கூட. அப்படி நேராமல் தடுத்தாட்கொள்ளும் அழகிய சாதனம்தான் மரணம்”. இராமனுடைய மரணத்தை இதனைவிடத் தாய்மையோடு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு கலைஞன் ஒருபோதும் idealistic ஆக இருக்க முடியாது. ஒருவேளை Mystic ஆக வேண்டுமானால் அவன் இருக்கக்கூடும் என்பதை அழுத்தமாக மெய்ப்பிக்கிறது இப்புதினம். நாவலில் இரண்டு மிகமுக்கியமான இடங்கள் - ராமனைப் பற்றிய பணிக்கருடைய வர்ணனை: டக்ளஸ் சொல்வதாக நாவலாசிரியர் எழுதுகின்ற அந்த இடம். “அவருடைய தன்மை மற்றும் அவருடைய கலை மேதமை காரணமாக, பணிக்கர் அவ்வப்போது, குறிப்பாக வெளிநாட்டவர்களிடம், சாமர்செட் மாமுடைய 'த மூன் அண்டு த சிக்ஸ் பென்ஸ்' நாவலின் பிரதான பாத்திரமான சார்லஸோடு அவரை ஒப்பிடுவார். எங்களுடைய சார்லஸ் ஸ்டிரிக்லாண்ட் இராமன் என்பார். ஒருமுறை பணிக்கர் அப்படி ஒப்பிடும்போது இப்படி சொன்னார்: 'நாலு காசுக்காக ராமனுடைய கால்கள் இந்த மண்ணில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது.' உண்மையில் அப்போதுதான் அந்த நாவல் தலைப்பின் அர்த்தமும் நாவலின் சாரமும் எனக்குப் புரிந்தது”. இது இராமனுக்கான வாசகம் மட்டுமல்ல - நெகிழ்வான, செறிவான முன்னுரை தந்திருக்கின்ற, அற்புதமான கவிஞர் யூமா வாசுகிக்கான, ஓவியர் டக்ளஸிற்கான, மோகனுக்கான வாசகம் - இன்னும் சொல்லப்போனால் - “கலை ஆன்மாவின் கருணை” பெற்றபின் லௌகீக வாழ்வின் இருத்தலையும், சமரசத்தினையும், நாலு காசுக்காக ஒப்புக்கொடுக்காத உன்னதமான கலையைத் தரிசிக்கின்ற அத்தனை படைப்பாளிகளுக்குமான வாசகம்! இன்னொரு அற்புதமான இடம், மோகன், டக்ஸஸ் மூலம் இராமனின் மரணம் குறித்துப் பேசுகின்ற முத்தாய்ப்பு வாசகங்கள் - “அவர் தன்னைக் கொன்றுகொள்ளவில்லை… அவர் தன்னைக் கொன்றுகொள்ளவில்லை… புரிகிறதா… வந்த வேலை முடிந்துவிட்டது… விடை பெற்றுக்கொண்டுவிட்டார்… அவ்வளவுதான்… உங்களுக்குத் தெரியுமா… தற்கொலை என்பது ஒரு அழகிய சாத்தியம்… அதைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார்… என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார்”. சிற்பி ரோடினிடம் செயலாளாராகப் பணிபுரிந்த ஜெர்மன் கவிஞா; ரில்கே (ரெய்னா; மேரியா ரில்கே) பிராகுவில் பிறந்தவர், பொகீமிய இனத்தைச் சார்ந்தவர்; ஆஸ்திரியக் குடிமகன். சிற்பி ரோடினிடமிருந்து பெற்ற உள்ளொளியைக் கவிதைப்பாணியில் அவர் கடைப்பிடித்ததாக ஒரு கருத்துண்டு. இந்த நாவலுக்கான உள்ளொளியை டக்ளஸிடமிருந்தும், ஒரு ஓவியக் கண்காட்சியில் தான் பார்க்க நேர்ந்த இராமனுடைய இரண்டு ஓவியங்களிடமிருந்து - மோகன் பெற்றிருக்கிறார் என நான் நினைக்கின்றேன். “ரிலக்கேயின் இக் கவிதைப் பாணிக்குக் கருப்பொருள் கிடையாது எனவும், கவிஞன் ஆழ்ந்த தனிமையில் இருக்கும் போது, அது தனக்குரிய கருவைத் தானே படைத்து வெட்ட வெளியில் எடுத்து நிறுத்த வேண்டும். அதைக் கருக்கவிதை (Poem of Things) என்று ரில்கே குறிப்பிடுகிறார்” என்று சொல்கிறார் முருகு சுந்தரம். மோகனின் இந்தப் புதினமும், ஆன்மாவை எடுத்து வெட்ட வெளியில் நிறுத்துகின்ற அற்புதக் கலை தான். மோகனின் இந்த நாவலில் அனுபவம் இருக்கிறதா, உண்மை இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்வதோ, அவரே அவருடைய படைப்பாக இருக்கிறாரா என்று கவனிப்பதோ தேவயற்றது. அவசியமற்றது; அதில் 'ஆன்மா' இருக்கிறது. அது எனக்குப் போதும்! இந்தக் கலைஞனைக் கொண்டாடுவேன்! உதவிய நூல்கள்: 1. இலக்கியக் கோட்பாடு மிகச்சுருக்கமான அறிமுகம் - ஜானதன் கல்லர் (தமிழில் ஆர்.சிவகுமார்) 2. புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் - முருகுசுந்தரம்

தொடர

ADOLESCENTLY IN LOVE - Nitharsha Prakash's Book Release Speech

தமிழச்சி தங்கப்பாண்டியன்

I am here to congratulate and appreciate the Debut venture of Nitharsha as well sharing some moments of my reading experience of the Novel. As an old – timer, I am always for British Novel’s rather than modern American Novels with a few exceptions. But as an academic, I have always tried to keep myself abreast in the modern Indian Literary Fiction. That way, I welcome this chance to go thro’ this fiction of a young adult, which has opened up a new vocabulary of words, trendy, in the vogue amidst the teens. After completion I tried to fix up – where does it stand or in which genr’e does it fall? “In the eighteenth century the English novel grew quietly to its full stature. The Elizabethans had toyed with romance and with realism; Bunyan had made a story out of his religious convictions; Addison and Steele had expressed common beliefs and sentiments in essays with a touch of fiction; Defoe had given to homely fact an imaginative appeal. The way for the modern novel was thus fully prepared. A clearer day of probity and fervor among the general public had followed the rake-hell noctambulism of the Restoration. A new public for a new fiction was ready, and almost expectant. Richardson, a contemporary of John Wesley, is the typical figure of a changed order”. (The Concise Cambridge History of English Literature - George Sampson: 418) Samuel Richardson’s Pamela come out in 1741, is a famous novel written in epistolary form, i.e the entire story will be revealed through the form of letters. It is the story of an attractive girl employed as a domestic servant. “The success of Pamela in kitchen and boudoir alike proved that Richardson had given his public what the novel-reading public has demanded in some form ever since, namely, realism and romance nicely blended”. (The Concise Cambridge History of English Literature - George Sampson: 418) I would say that exactly that is what I felt - a nice bled of realism & romance when I read this novel Adolescently in love. Set in the Bison Valley School Campus it takes us through the lives of Rohit, Lavanya, Sanjana, Tarun, Nishi, Yaashan, Yamuna. It has a Prologue in a lucid, simple style and has been divided into Book 1 Sanjana; Book 2 Tarun; Book 3 Yamuna divided into chapters in between, ending perfectly with an Epilogue – again with the same dream as in the Prologue, the difference here is it’s dream come true – Rohit marrying his girlfriend Lavanya – a dream come true. The whole novel takes us away smoothly observing the common concerns and interests of this century’s adolescent youngsters in teens. . I am here neither to criticize nor to applaud blindly but to appreciate Prakash whole heartedly. Infact, “in the Middle English literature there is no literary criticism. In the middle of the sixteenth century there was a Cambridge “school” of criticism, represented by Roger Ascham, Sir John Cheke and Thomas Wilson, who set themselves deliberately against over-elaboration of style. They opposed “inkhorn” terms and the “aureate” phraseology of the fifteenth century, and were anxious that English should be written “pure”. (The Concise Cambridge History of English Literature - George Sampson: 129) Imagine the shock of Roger, John Cheke & Wilson if they happen to read this passage – ““Guys, today the new chicks would be coming. Dibs on the hottest one.” Chris distracted all eyes off the food”. (ADOLESCENTLY IN LOVE – Nitharsha Prakash : 2) ““Yeah. Beware man; just because you called dibs, all are going to be so not-hot.” Said Vajish and the table erupted into laughter. The guy had finished applying his Nutella and took a bite of the slice. He then looked over to the conversation and joined in”. (ADOLESCENTLY IN LOVE – Nitharsha Prakash : 2 & 3) “Well, what was the last thing you spoke to a girl about?” “It was…… Um… Something personal.” Rohit lied. “I know what. The last thing you said was sorry. It literally was, ‘sorry.’ Don’t say you spoke to a girl after that.” It was Ajay. “What? I didn’t ask sorry to anyone.” Apologising to a girl belonged in the lower end of the coolness scale amidst those teens. (ADOLESCENTLY IN LOVE – Nitharsha Prakash : 3) “What the fuck?” Chris cried out loud. The girls gave him a shocked look. Profanities are a common thing among teens, having learnt them newly, they try and frame sentences with those and end up using too much of them. (ADOLESCENTLY IN LOVE – Nitharsha Prakash : 6) But it’s cool stuff now-a-days, because the novelist triumphs over the moralist here. “Clarissa is the second novel written by Samuel Richardson after Pamela. D.H.Lawrence in Pornography and Obscenity went so far as to say, with some justification, that “Boccaccio at his hottest seems to me less pornographical than Pamela or Clarissa Harlowe”. Sexual respectability, however important, is not the whole and final concern of human life”. (The Concise Cambridge History of English Literature - George Sampson: 420) I am reminded of Lawrence’s statement when I read Nishi’s argument with her dad. “Dad, if you are afraid that I may fall in love with someone, you are being juvenile. I might have as well fallen in love with some guy in while I was at school. You put me in a girl school. What if I had turned out to be a lesbian after being there? I haven’t told you, there were two lesbian girls in my own dorm. What is immoral to us will always be there everywhere, even in our own agraharam. I know what I should do and what I shouldn’t.” Nishi said. Her mother had a horrified expression on her face”. (ADOLESCENTLY IN LOVE – Nitharsha Prakash : 105 & 106) How clear-cut, unambiguous, definite is this view of a young adolescent girl – they are pranksters but also pragmatic to the core and it is well brought out by the author through Conversations. I am not sure about the formative years of Nitharsha Prakash – but I am sure he must have reaped the genetic seeds from his proud Mom. Other than that, he must have proved his mettle in many other creative ways. “Would Dickens have become the Dickens we know if he had not been engaged to write humorous letterpress to pictures of Cockney sportsmen? Would Richardson have become the Richardson we know if he had not been asked to write model letters? Would Fielding have become the Fielding we know if Richardson’s narrowly virtuous Pamela had not offended his broader charity? These are engaging questions” (The Concise Cambridge History of English Literature - George Sampson: 421) Probably Prakash should channelize all his writing and creative abilities to a more focused social novel of a broad canvas and depth. He would, I am damn sure, take a chill pill, before his next venture because beneath the seemingly shallow puppy-love world of adolescence which he portrays, there runs a deep philosophical tinge of a matured adult. And I am amazed by that. Here is a dialogue between Nishi and Yashan - “Look, he needs a pure moment, wherein he realizes what he needs to. This marriage might have the pure moment he needs.” “Please get this in your head. There is no pure moment in life. Every beautiful moment is a work of a thousand manipulation. You need to do something to create the pure moment you are talking about. And how are you planning to do that.” (ADOLESCENTLY IN LOVE – Nitharsha Prakash : 90) I congratulate him for this and throughout the novel (which runs into 333 pages,) you can see glimpses of this maturity abloom - for example, when Nishi chose to confront her father regarding her college admission: “Nishi understood what her dad meant. He was just trying to be discreet about the whole concept of love and sex. Every parent in the Indian family does that. Nishi chose not to be discreet about it anymore”. (ADOLESCENTLY IN LOVE – Nitharsha Prakash : 105) “Initially we divided novelists into three groups (1) the novelists of sentiment and reflection, typified by Henry Mackenzie, (2) the novelists of home life, typified by Fanny Burney, and (3) the novelists of “Gothick” romance, typified by Horace Walpole and Clara Reeve”. (The Concise Cambridge History of English Literature - George Sampson: 424) The categorizing have been more broad-brimmed in this century with the widening of English Literature to post – colonial arena, particularly with the rise of Indian writing in English. So I wouldn’t rather categorize this Novel as a novel of ‘Sentiment’ or ‘Sensibility’ as in earlier days but as a Novel of Netizen draped in bits and pieces of sentiments of tender, romantic, infatuated, nostalgic feeling coupled with occasional maturity to cope with Life. Today’s youth icon is Internet. Connection and Relation through the Virtual World is so easy, fickle, volatile as well a straight shooter. Listen to Ranjana when she reveals that Sanjana her twin sister is dead and sums up to Rohit – “Rohit, I don’t care for the issues in your life. But from what Yashan told me it sounded like you are throwing away your life. Just as you throw your life away, do remember that there are people who don’t have a life to live like my sister”. I am really impressed by the manner in which Prakash has given flesh and blood to sheer adolescent experience in a vivid, lucid narrative style. That too, his mastery of teen vocabulary is awesome - Of course, there are a few mistakes of an Indianised English like, “Sir, today only the new students have reported back Sir”, but, all of us were committing errors like this before we mastered the Queen’s language a bit. But sure Prakash wins over me and has an edge of surprise as a Debutant when he asks, “you want to rely on a drunk’s direction, rather than Google’s?” Well someone said – “ Spontaneity is among the best gifts of the novelist” and Prakaash is brilliant in it. The world he portrays, to-days adolescent world is a world without much of a guilt, embarrassment, but of a splendid tiny cooing world of romance and infatuation inspite of the pressures to prove their worth as children and students. They seem to be rebellious but not in the real sense – they are just assured, bold, frank and no-nonsensical when it comes to terms with Life. Well – I would like to sum up with Wordsworth’s lines… Bliss was it that dawn to be alive, But to be young was very heaven. I realized the worth of these lines after putting down the novel. The novel is certainly long, but the pace is gripping with an interesting narrative style which is simple, quite interspersed with current jargons like Bamboozle, dips, it’s a guy thing smooches, and spiced with profanities. Also, to be bold and sure enough to write a novel at this young age needs tremendous will power and focus. Do you know that Sir. Walter Scott has concealed his authorship for so many years and had not revealed his identity till he was well past middle age? He was over forty when Waverly was published – with due respect to him I would say, Prakaash is gutsy and I admire his gutsiness. He has a long way to go – but I am sure he would fathom through successfully. The real birth of English Literature and Literary studies in India dates back to the closing years of the Indian career of Warren Hastings and it is a very vast arena of a grand stature demanding devotion, slavery, commitment and pride to carve a small niche in it. Whenever I am tempted by suggestions to write a novel I would remember George Eliot, D.H. Lawrence and Melville and the next moment I would be humbled to turn down such suggestions. Because, novel is the most challenging and risky venture. Your Betrothment to it can be forever – to complete it successfully and satisfactorily, in all it’s stature, volume, canvas is a Herculean Task. Prakaash has touched the tip of the Iceberg – My Best Wishes to him to proceed and succeed fruitfully. I always have had this attitude to compare or judge – right from Eliot’s ‘Touchstone Method’ days – a work or a writer with his or her’s predecessors as a Researcher. But today, I am not going to do it for two reasons. All said and done, it is a remarkable venture for a young man like Prakaash to choose a literary career in English, with this debut attempt. Only kudos to him at the moment! Secondly an interesting passage from ‘The Concise Cambridge History of English’ till by George Samson has given me an insight to perceive writers on their own, treating them separately. It may be a digression, but I would like to share that passage here – “Whitman and Melville… They were born in the same year, both of Dutch- British ancestry, one in New York itself, the other thirty miles away on Long Island. They spent much of their lives in their native or neighbouring city and died within a year of each other. They shared the same love of the sea, the same admiration for what the aristocratic Melville called “the kingly commons” and what the carpenter’s son Whitman called the “nobility” of ordinary people. They both wrote memorably of the Civil War and its aftermath, particularly of the fundamental issues involved. They even had the same powerful physique and much the same preference for the simple life over the sophisticated. One would have thought they must have spent much of their time in each other’s company. Yet there is no record of their ever having met, except in the columns of the The Brooklyn Eagle when Whitman reviewed Typee and Omoo. They must have passed each other in the New York streets as ships pass in the night. Melville knew Hawthorne, Whitman Hawthorne’s friend Longfellow, but the author of Moby-Dick knew not, apparently, the author of Leaves of Grass. It is as if Shakespeare and Ben Johnson, or Dickens and Thackeray, had been strangers all their lives in literary London. In that bustling city of New York, with its bohemian and journalistic flavor, there was apparently no Horace Greeley, Bayard Taylor or other notability of the time to introduce Ishmael to the Democratic Bard or the Democratic Bard to Ishmael. “Herman, I want you to meet Mr Whitman”; “Walt, do you happen to know Mr Melville?” It should all have been so simple, yet the introduction, apparently, never took place. The poet who saw in Salut au Monde “the whale-crews of the South Pacific and the North Atlantic” never saw the whaler who wrote of captain Ahab and of his chase in the “Pequod” of the mightiest Leviathan of them all. Despite the temptation, therefore, to treat of Whitman and Melville together, we shall have to take them separately, as they lived. They are great enough, when all fair criticisms have been made of them—and they are open to criticism on several accounts—to stand on their own feet”. (The Concise Cambridge History of English Literature - George Sampson: 810) Let’s read Prakaash’s debut novel, as a separate entity, trying to figure out his imaginary space circumambient of an adolescent life and love. Let me not be rigid in distincting or harsh in criticsizing but frank and genuine in my appreciation for him with a big welcome and cheers. Good job and kudos Prakaash! Work Cited: The Concise Cambridge History of English Literature - George Sampson

தொடர

பாலை நிலவன் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

தமிழச்சி தங்கப்பாண்டியன்

எம்.ஜி.ராமச்சந்திரனும், கார்ல் மார்க்ஸ்சும் 1600-களில் ஆங்கிலக் கவிதைப் பரப்பிலே நான்கு தத்துவவாதிகள் (John Davies, Samuel Daniel, George and Lord Brooke) ஒன்றிணைந்து, ‘ஒரு கிருத்துவ மனிதம்’ என்ற சட்டகத்தினுள், தத்துவக் கவிதைகள் எழுதத் துவங்கினார்கள். விவிலியத்தை நாம் ஒரு மத நூலாக மட்டுமே பார்ப்பதில்லை அல்லவா? அந்தச் சட்டகத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதற்கு முற்றிலும் புதிதான, அவைதீக, சிதிலப்பட்ட, அலைந்து உழலுகின்ற, பந்தாடப்படுகின்ற உள் மனத்தின் ரணத்தின் நிணத்தோடும், பிணவாடையின் சவக்களையோடும், வெளிவந்ததிருந்தது பாலையின் இத்தொகுப்பு. "இந்தக் கதைத் தொகுப்புக்குள் நுழைந்து வெளிவந்தவர்கள் எவ்வளவு நிர்வாணங்களைப் பார்த்தீர்கள்? இவர்கள் அனைவரும் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - அவர்கள் ஒவ்வொருவரும் சொல்வார்கள் - "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று - எம்.ஜி.ராமச்சந்திரனையும், கார்ல் மார்க்சையும் போல!" - என்கிறார் ஸ்ரீபதி தனது அவதானிப்பில். எனக்கோ தொகுப்பைக் கீழே வைத்தவுடன் தோன்றியது - ப்ராய்டும், கார்ல் மார்க்சும் போல என்று! "சமூகத்தை மார்க்ஸ் அணுகிய விதத்திலும், ஃப்ராய்ட் அணுகிய விதத்திலும் வேறுபாடுகளுண்டு. சமூகமே மனிதனை உருவாக்குகிறது என்கிறார் மார்க்ஸ். சமூகத்தை மனிதனே உருவாக்குகிறான் என்கிறார் ஃப்ராய்ட்" (பக்கம் 59 - ஃப்ராய்ட் யூங் லக்கான் - அறிமுகமும் நெறிமுகமும் - தி.கு. இரவிச்சந்திரன்). ஒரு ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வுப் பிரதியாக இக்கதைகளை நான் ஆய்வதற்கு முன்பாக மிகமுக்கியமான "எனதேயான எளிய உலகத்தில் இருந்தே நான் பாலை நிலவனை இதில் கண்டுபிடித்தேன்". "ஒவ்வொருவரிடமும் ஒரு நிலா இருக்கிறது" என்கிற அவரது வரியை நான் கடன் வாங்கிக் கொண்டு இத்தொகுப்பில் நுழைந்தால் புரிந்தது - பாலைக்கோ குழந்தைமையில் நிலா தனது தந்தையின் மலத்தைக் கையில் ஏந்தியபொழுது இருந்தது. தந்தை தூக்கித்தில் எழுப்பித் தருகின்ற, வறுக்கப்பட்ட ஆட்டின் இரண்டு காதுகளைத் தின்றபோது இருந்தது, நிலா இதில் அவருக்கு நிறங்களாகவும் இருக்கிறது - பேரொளியால் மெருகேற்றப்பட்டவருடனான காதல் கொண்ட பழுப்பு நிறக் கண்களையுடையவனின் துக்கமாகவும், துரோகத்தின் நஞ்சால் மெருகேற்றப்பட்ட இரவு போன்ற நிறமாகவும், வெளிறிய சுண்ணாம்புச் சுவராகவும் கொஞ்சம் வளர்ந்தபின் இருக்கிறது. அந்த நிலா - தொகுப்பு முழுவதிலும் பாழ்மையாக, நோய்மையாக, உடலாகக், இருளாக, சவமாக, துரோகத்தின் சாம்பல் நிறமாக, காமமாக, அதிகாரமாக, பறவையாக, கசப்பாகத் துன்பமாகப் பலருக்கும் இருக்கிறது. இந்த பலர் என்பவர் - இதிலே யார்? அவன், மனைவி, மகன், ஷங்கர், ஸ்ரீதேவி, நகுலன், பாமா, குணசேகரன், மித்ராகக்கா, சாரதி, ஸ்ரீகிருஷ்ணன், அப்சல், பாபு, முரளி, தீபன், ஆறுச்சாமி, ஆகாஷ், ஜீசாய், மஹாராஜா, சந்தோஷ் - இப்படிப் பலரும் வந்தாலும், அவர்களில் ஒரு குரல் தனித்து நின்று மன்றாடுகிறது அது. "சமகாலத்தில் சிதிலப்பட்ட எதோ உள்ளுணர்வு கலந்த ஒளியைத் தேடிக் கொண்டிருக்கும் பாலை நிலவனின் குரல். குறிப்பாக - ‘நாவல் எழுதுபவனில்’ சந்தோஷாக அவனை நான் உணர்ந்தேன். "சந்தோஷ் என்பவனின் தகப்பனுக்குப் பிறந்தவன் நான். நீ சந்தோஷ் என்பவனின் சகோதரனா?" என்ற அந்தக் கேள்வி என்னை மீண்டும் ஃப்ராய்டிற்குத் திருப்பியது. "குலக்குறியும் விலக்கும்" நூலில் மானிடவியல் கூறும் மனித இன வளர்ச்சிக் கட்டங்களைத் தனியார் வளர்ச்சிக் கட்டங்களோடு இணைநிலையாக்குகிறார். குறிப்பாகத் தொன்மம், சமயம், அறிவியல், கட்டங்கள் முறையே குழவிப் பருவம், குழந்தைப் பருவம், முதிர்ச்சிப்பருவம் ஆகியவற்றுடன் இணைக்கிறார். மேலும் தொன்மக் கட்டத்தைத் தன்மோகத்துடனும், சமயக் கட்டத்தை இடிபால் சிக்கலுடனும், அறிவியலைப் புறநிலை மோகத்துடனும் இணைக்கிறார்" (பக். 59 ஃப்ராய்ட் யூங் லக்கான் அறிமுகமும் நெறிமுகமும் - தி.கு. இரவிச்சந்திரன்). "வெள்ளை அங்கியும், இரத்த நிறத் தோள் பட்டையும் அணிந்த மஹாராஜா"" எனும் parody கதை விவிலியத்தின் தானியேல் : 7 : 9, 10. "நான் பார்த்துக் கொண்டிருக்கையில் சிங்காசனங்கள் வைக்கப்பட்டது, நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். கோடானகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்...." எனும் மேற்கோளுடன் துவங்குகிறது. இலங்கையின் தற்பொழுதைய இனப்படுகொலைக் கோரமுகத்தைப் பாலை நிலவனின் இராஜா, தளபதி சித்திரங்களில் காட்சிப் படுத்திவிட்டுச் சொல்கிறார். "மஹாராஜாவின் பிரத்யேக ஆயுதம் வாளும் கவசமுமல்ல - அவை காவலளர்களின் உடமை. ராஜாவின் ஆயுதம் நஞ்சேற்றப்பட்ட மிருதுவான சொற்காளகவே இருந்திருக்கிறது. இப்போது தளபதி அது போன்ற ஒன்றையே தேர்ந்தெடுக்க விரும்புகிறார்" இலங்கையின் சிங்களவர்களால் புனையப்பட்ட தொன்மத்தைத் தன் மோகத்துடன், ஃப்ராய்ட் வழி நான் பார்த்த இடம் இது. ‘மூலிகை’ என்கிற கதையில் சமயக் கட்டத்தை இடிபால் சிக்கலுடன் இணைக்கலாம். கதையின் நாயகன் சாமுவேல் - கசப்பினாலும், துன்பத்தினாலும் பிழியப்பட்ட விநோத மூலிகையின் சாறு கொண்ட மனிதன். தடைசெய்யப்பட்ட போதை தரும் இலைகளைக் கடத்தியவன். ருக்மணியின் அம்மணத்தில் ஆறெனப் பாய்பவன், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அன்னை மரியாளுக்கு மெழுகுவாத்தியையும் உப்பையும் கொண்டு போய் வைத்து, அவன் அப்பா அருமைராஜன் கொடுத்த ஸ்தோத்திரப் பாடல்களை இதயத்திலிருந்து மீட்டுபவன். அவனும், ருக்மணியும் புணர்ந்தபின், ருக்மணி தனது அந்தரத்தை ஒரு பூனைக்குப் பிறாண்டக் கொடுப்பவள். இதனூடே யசோதோ என்பவளும் வருகிறாள். பல ஆண்களால் சுவைக்கப்பட்டும், குறிப்பாக பருவம் எய்துவதற்கு முன் ஒரு கிழவனால் அவள் பாலியல் சித்ரவதைப்பட்டவள். அவைளைப் பற்றிய விவரணையில் பாலை நிலவனது வரிகள். "தனக்குள் நெருப்பைச் செலுத்தும் ஆடவர்களின் குரல் வளையைக் கடித்துக் குதறிவிட வேண்டுமென்றுதான் முத்தமிடத் தொடங்குவாள். ஆனால் தீடிரென்று வசியம் செய்யப்பட்டது போல, தனது உடலை இயக்குபவனிடம் ஒரு மெல்லிய மலரெனக் கொடுத்து விடுவாள். அவன் ஒரு புரவியை ஓட்டிச் செல்வதைப் போல, ஓட்டிச் சென்று ஒரு எருமை மாட்டை விட்டுச் செல்வது போல உடலை விட்டுச் சென்று விடுவான்" "ஆன்மாவின் வாசனையே, மலவாசனைதான் எனும் அம்மா" கருந்திரை - II (பாலச்சந்திரனின் அம்மாவின் நித்திரைக் குறிப்பில் காணலாம்). துல்லியமாக இதில் இடிபால் சிக்கலைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட, பெண் உடம்பின் மீதான கட்டற்ற வெறியுற்ற ஆணின் காமம், பெண் தனது வேட்கைக்கான தேவையாக ஒரு ஆணின் உடலை அவள் கையாள்வது போன்றவற்றின் நுட்பமான பதிவு இக்கதை. முதிர்ச்சிப் பருவத்தினை அறிவியல் கட்டத்தோடு ஃப்ராய்ட் இணைக்கிறார். ஊர் ஊராகச் சுற்றும் ஒரு வேலை, அது கொசுவலை விற்பனை அல்லது வேறு எதுவாகட்டும், ஒரு முதிர்ச்சிப் பருவ சிதிலப்பட்ட இளைஞன் "விவசாயிகளின் கடைசி உலகத்தையும் பார்கிறான்". வியாபாரத்தில் தோற்றவர்களைக் காண்கிறான், மலத்தின் மீது மலக் குழியின் மீது பழைய பேப்பர் விரித்துப் படுப்பவனைப் பார்க்கிறான். தானே எல்லாவனுமாகவும் இருக்கின்ற அவனுக்குத் "தனிநிலை, சமூகநிலை பற்றிய சிந்தனை மட்டுமல்லாமல் இனம்சார்ந்த வளர்ச்சி பற்றிய சிந்தனையும் இருக்கிறது". ‘பாம்புச்சட்டை’ எனும் வீடு பற்றிய கதையில் பாலை சொல்கிறார். "குடியிருப்பு வாசிகளான பலரும் இந்தப் பெருச்சாளிக் குழியில் தான் கால்நூற்றாண்டு காலம் மலமிருந்து வருகிறார்கள் என்பது கூட தவறு, ஆசன வாயிலிருந்து மலம் எவ்வளவு கனத்திற்கு விழுகிறதோ அந்தளவுக்கு சப்தமும் மேலெழும்ப வேண்டும். இங்கேயும் நியூட்டனின் விதி மறைந்திருக்கவே செய்கிறது. இது போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கக்கூஸ்களில் மலமிருந்து பழக்கப்பட்டவர்கள் எதையும் ஜீரணம் செய்துவிட முடியாத மரண அவஸ்தையுடன் வயிற்றுடனே வாழ்ந்து வருகிறார்கள்". அநேகமாக பாலையின் எல்லாக் கதைகளிலும் ‘மலம்’ பிரதானமாக இடம் பெறுகிறது. இக்குறியீடு ஃப்ராய் எனும் குழந்தைப் பாலுமையின் மூன்று கட்டங்களான வாய்மோகம், குதமோகம், லிங்கக் கட்டம் ஆகியவற்றை நினைவு படுத்துகின்றது. அதோடு, "மலம் என்பது முழுமைக்கும் புறநிலை அல்ல அகநிலையின் ஓர் அங்கம். அதுவே ஒரு கட்டத்தில், புறநிலை ஆகிறது. அதாவது அகநிலையின் ஒரு பகுதியே புறநிலை ஆகிறது. (பக்கம் -31) அதனை ஒரு வலிமையான குறியீடாகப் பாலை கையாள்கிறார் - தனிநிலைக்கும், சமுகநிலைக்குமாய். இலக்கியத்திற்கும், உளவியலுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற யூங் - படைப்பாளி ஒரு புதிர் என்கிறார். தனியாள் நிலையிலும், தனியாளற்ற நிலையிலும் தொகுப்பு முழுவதும் இயங்கி இருக்கின்ற பாலையின் இக்கதைகளைப் படிக்கும் போது அவரது ‘ஆழ்மனத்தை’ நான் தேடி, அடைந்துவிட்டேன் என நம்பி, உங்களிடையே பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவை. ஆனால், அவனது ரகஸியம் என்னவென்று கடைசி வரை என்னால் அறிந்துவிட முடியாது - படைப்பாளியின் சிக்கலும், படைப்பின் மகத்துவமும் அதுதான். அவனது சொற்களிலேயே "ஒரு உளவியலானாலும், ஒரு கடவுளும், ஒரு குழந்தையையும், ஒரு சாத்தானும் சேர்ந்து எழுதிய கதைகள் இவை. அகிலமெல்லாம் பறந்து திரியும் புனைவின் ஓர் அந்தர நடனம் தான் அவனது நனவிலி மனம்" அந்த மனம் எழுதிய, நமது ஊனை, உயிரை ஊடறுத்துச் செல்லும் கதைகள் இவை. நவீனச் சிறுகதைப் பரப்பில் மிக முக்கியமானவை. புனைவின் வெளியில் பாத்திரங்களாகவே வருகின்ற பூனையும், பாம்பும், சிலுவையும், பறவையும் இவனை ஒரு ஆளுமையுள்ள படைப்பாளியாக அறிவிக்கின்றன. "மகிழ்ச்சியின் புனிதமான Wine" ஐப் பருக முடியாத, உப்பின் தடயமற்ற புளிப்பின் வாடையையுடைய கோப்பைகளை மட்டுமே அறிந்த சவங்களாகி விட்டோமோ எல்லாரும் எனும் அதி முக்கியமான கேள்வியை எழுப்புகிறது தலைப்புக் கதையான "எம்.ஜி & மார்க்ஸ்". ஆம், "நமது சொந்தப் பிணத்தைக் குளிரூட்டுவது அவ்வளவு சுலபமானதல்ல - ஆனால் பாலையின் கதைகளைப் படித்தபின் கொஞ்சம் சுரணையாவது வரவேண்டும் நமக்கு. ஆமென்! நாம் எல்லாருமே Hamlet, அல்லது ழயஅடநவ ஆக, அல்லது மாதாம் பொவாரியாக அல்லது ஜேனி ஸ்டார்க்ஸாக இருக்கலாம் என உணரவைத்தவை பாலையின் கதைகள். (கதைகளில் வருகின்ற சில வரிகள் சம தத்துவம் வாய்ந்தவை) MGR & Marx - முழுக்க தர்க்க ரீதியிலான இக்கதை - நாம் நம்புகின்ற எல்லாவிதமான கோப்புகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. குற்ற உணர்விக் குள்ளாக்கப்படுகின்ற மனிதன் அதனை எதிர்கொள்கின்ற விதத்தைப் பேசுகிறது. * * * * *

தொடர

இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள் நூல் வெளியீட்டு விழா- மலர்ச்சி பிரபாகரன்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

2002 இல் க்ரியாவில் வெளிவந்த C.மணி அவர்களின் ‘தாவோ தே ஜிங்’ - லாவோட்சு, இன்று வரை எனக்கு பெரிய பொக்கிஷம். மேற்கு மலைத் தொடரின் பல பகுதிகளில் இயற்கை இயலாளர், புகைப்படக் கலைஞர் இயான் லாக்வுட் எடுத்திருந்த புகைப்படங்களுடன், மிக நேர்த்தியான முறையில், அருமையான வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அந்தப் புத்தகம் எனக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. பல்வேறு பண்பாடுகளின் மறைஞானச் சிந்தனைகளைக் கற்றவர், ஆங்கிலப் பேராசிரியர் எனும் பின்புலமுடன் தமிழின் முன்னோடிக் கவி ஊ. மணி தான், ‘தாவோயிஸம் என்பது பௌத்தம் முதலியவை மாதிரித் தனிமனித ஞானத்தின் விளைவு அல்ல. மாறாகப், பல காலகட்டங்களில் பல தலை முறைகளின் தேடலில் கிடைத்த விஷயம்’ என்கிற புரிதலைத் தந்தவர். தாவோவின் சாராம்சம் - 1) தனிமனித நலம், 2) சமூக இணக்கம், 3) பிரக்ஞையின் பரிணாம வளர்ச்சி எனவும், அதன் மூலம் ஞானம் பெற்றவர்கள் """"அந்த ரகசியத்தை மறைக்கவும் விரும்பவில்லை, பறைசாற்றவும் விரும்பவில்லை - நயமாகப் பரப்ப விரும்பினார்கள் - அதன் விளைவே, 1) லாவோட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ உம், சுவாங் ட்சு எழுதிய ‘சுவாங் ட்சு’ என்ற நூலும் எனவும் தெரிந்து கொண்டேன். ‘தாவோ’ என்பது ஆமாம் என்பதற்கும், இல்லை என்பதற்கும் அப்பால் இருக்கிறது ; அது உடன்பாட்டுக்கும் எதிர்மறைக்கும் அப்பால் இருக்கிறது - எனவேதான் லாவோட்சு தாவோ பற்றிப் பேசும்போது, ‘தோன்றுகிறது’, ‘கருதப்படுகிறது’, ‘என்கிற மாதிரி இருக்கிறது’ என்பனவற்றைப் பயன்படுத்துகிறார் எனவும் தெரியவந்தது. ‘தே’ என்றால் ஒரு விதையில் புதைந்திருக்கின்ற முளை. முளைப்பது விதையின் தே அசைவது காற்றின் தே காண்பது கண்ணின் தே எனவும், ‘வே’ என்றால் செய்வது, செல்படுவது, ‘வூ’ என்றால் எதிர்மறை முன்னொட்டு, ஆகையால் ‘வூவே’ என்றால் ‘செய்யாமல், செயல்படாமல்’ இருப்பது எனவும் புரிந்துகொண்டேன். குறைந்தபட்ச முயற்சியுடன், சரியான சமயத்தில், இயல்பாகச் செயல்படுவது - வூவே - 1) நீர் புவி ஈர்ப்பு விசையோடு சென்று, வளத்தைச் சேர்ப்பது மாதரி, 2) கைக்குழுந்தை ஒரு விரலை நீட்டி அல்லது ஒரு பார்வையை ஒட்டிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வது என்ற C.மணியின் விளக்கம் அதன் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. "வூவே யைப் பழக முடியாது அன்பைப் பழக முடியாத மாதிரி" என்றவுடன் இன்னும் பிரமிப்பும் ஈர்ப்பும் கூடியது. ‘தே’ என்பது போவது, நேரான இதயம் என்கிற 3 குறியீடுகளால் ஆனது. "ஒரு மனிதனின் வெளிப்புறப் பாதிப்பும், ஆத்மாவின் உட்புறப் பாதிப்பும் தான் ‘தே’. காப்பியம், மறைநூல் என்பதற்கான சீன வார்த்தை ஜிங், அது துணியில் நீட்ட வாக்கில் இருக்கிற பாவு நூல்; அது நீண்டு துணி முழுவதும் நுழைந்து செல்வது ‘அனுபவிப்பது’, ‘நடத்துவது’. தாவோ தே ஜிங் என்றால் தாவோ மற்றும் தே பற்றிய நூல் எனவும் தெரிந்து கொண்டு பின் லாnhட்சு விற்குள் நுழைதலே தகும் என்பதால் இந்த நீண்ட விளக்கம், a) 5000 சித்திர எழுத்துக்களில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இதுதான் பைபிளுக்கு அடுத்து மிக அதிக அளவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். b) காரணம் - ஒன்று - அதன் சுருக்கம், இரண்டாவது - முக்கிய விஷயங்களை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்தல் - எளிமையாகச் சொல்லுதல். சீன மூல மொழியின் படைப்பை, ஆங்கில இடைமொழியின் வாயிலாக உணர்ந்து, அதனைத் தமிழில் மொழி பெயர்ப்பது அதிலும் மறைஞானச் சிந்தனைத் தளத்தில் இயங்கும் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்தல் மிகக் கடினம் சாரம் கெடாமல், சில முக்கியச் சீனப் பெயர்களையும், வார்த்தைகளையும், யின், யாங், சீ முதலானவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து, பின் பழக்கப்படுத்தி, அவனை நுழைய விடுதல் என்பது சுலபமான காரியம் அல்ல. தோழர் மலர்ச்சி பிரபாகரன் அதனைச் செரிவாகச் செய்திருக்கிறார் - ‘இருளுக்குள் இருள்’ எனும் தலைப்பிட்டு. பொதுவாக இந்த ஆசிரியர்களின் பெயர்களை வைத்து ஜாலம் பண்ணித் துவக்குவதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் - ‘மலர்ச்சி’ என்கிற அந்த அடைமொழியும், ‘பிரபாகரன்’ என்கிற பெயருமே ஒரு ‘தே’ தான். ஆத்மாவின் உட்புறப் பாதிப்பாய் ‘மலர்ச்சியும்’ மனிதனின் வெளிப்புறப் பாதிப்பாய் ‘பிரபாகரனும்’. C.மணியின் மொழிபெயர்ப்பில் கவிதைகளுக்குத் தலைப்பில்லை. அவருக்கு ‘ஞானி’ - பிரபாகரனுக்கோ ‘சித்தர்’- இப்படிப் புத்தி ஒட்பு நோக்க விழைந்தது. ‘நுங்’கென்று தலையில் குட்டுவைத்தது ‘தே’ - அவரவர்க்கான ‘தே’ வேறு - பாதை வேறு, இயல்பு வேறு இது புரியாமல், இந்த அடிப்படை இல்லாமல், தாவோ விற்குள்ளோ ‘அல்லது’ ‘இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருளுக்குள்ளே நுழையாதே என்றது’. "அழகாயிருப்பது அழகு என்று எல்லோரும் புரிந்து கொண்டால் விகாரம் தோன்றுகிறது. நன்மையை நன்மை என்று எல்லோரும் புரிந்து கொண்டால் தீமை தோன்றுகிறது. எனவே இருத்தல் இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது. எளிமை கடினத்தைத் தோற்றுவிக்கிறது" எனும் C.மணியின் வரிகளும், "கடினமும் இலகுவும் வளர்ச்சியிலிருந்தும் தொலைவும் பக்கமும் அளவிலிருந்தும், முன்னும் பின்னும் வரிசையிலிருந்தும் உருவாகின்றன எல்லாமும் ஒன்றையொன்று சார்ந்து தம்மை வெளிப்படுத்துகின்றன ஒப்பீடுகள் ஒன்றை ஒன்று அளவிடுகின்றன ஆகவே, சித்தர் எதையும் செயலின்றிச் செயலாற்றுகின்றார்". எனும் பிரபாகரினின் வரிகளும் ‘ஒப்பிடுதல்’ என்கிற அபத்தத்திலிருந்து என்னை ஒரு குட்டு வைத்து வெளியேற்றின. அவரே மிகச் சரியாக, "அனுபவம் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறது, புத்தகமும் அதிலுள்ள கருத்துக்களும் அனுபவம் பற்றிப் பேசுவதே அல்லாமல் இது உங்கள் அனுபவம் ஆகாது"" என்று தன் உரையில் குறிப்பிட்டும் விடுகிறார். Heraclites என்ற அறிஞன் சொன்னது போல - ஒரே நதி என்றாலும் இரண்டாவது முறை அதிலே இறங்கும்போது அது வேறு நதி"". ஒரே லாவோட்சு தான் - ஆனால் பிரபாகரனின் மொழிபெயர்பில், இரண்டாவது முறையாக இறங்கும்போது அது எனக்கு வேறு அனுபவம். மிக முக்கியமாக, இதில் அவர் கையாண்டுள்ள ‘சித்தர்’ என்கிற பதம். ‘ஞானி’ என்கிறபோது கொஞ்சம் விலகி நிற்கின்ற தமிழ் மனம், ‘சித்தர்’ என்றவுடன் ஒரு அணுக்கமுடன் ஒட்டிக் கொள்கிறது. "ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கு ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய் ஞானந்தான் ஏதுக்கடி தாவரம் இல்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் தேங்காய்பால் ஏதுக்கடி எனும் குதம்பைச் சித்தரும், ஊத்தைச் சடலமென்றெண்ணாதே இதை உப்பிட்ட பாண்டமென்றெண்ணாதே பார்த்த பேருக்கே ஊத்தையில்லை இதைப் பார்த்துக் கொள் என்றன் உடலுக்குள்ளே" என்ற கொங்கணச் சித்தரையும் கொண்ட தமிழ் மரபிற்குள் கி.மு. 571-ல் பிறந்த லாவோட்சுவை அறிமுகப்படுத்த இவர் கையாண்ட உத்தி மட்டுமல்ல அது. ‘சித்தர்’ என்ற அர்த்த பூர்வமான உருவகம் ‘ஞானி’ என்றதனையும் உள்ளடக்கியது என்கிற புரிதலும் அதிலே புலப்படுகிறது. கிறித்துவின் காலத்திற்கு முன்னரே தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் உள்ளதை நாம் அறிவோம். "நாடா கொன்றோ...." எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல், பாலி மொழியில் அமைந்த ‘தம்மபதம்’ எனும் பௌத்த நூலில் ‘அரகந்த வர்க்கம்’ எனும் பகுதியில் பேசப்படும் அறநூல் கருத்தின் நேரடி மொழிபெயர்ப்பே என்பதை மு.கு. செகநாதராசா நிறுவி உள்ளார். மணிமேகலையின் ‘சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில்’ பெரும்பகுதி சிறந்த மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை மயிலை சீனி வேங்கடசாமி ஆராய்ந்து காட்டியுள்ளார் (பக்கம்-66, நாள் மலர்கள் - தொ.பரமசிவன்). சீன மொழியின் மிகத் தொன்மையான தாவோவைத் தமிழ் மொழியில் தரும்பொழுது உரைநடையின் வீச்சு சற்று அதிகமாகத் தென்படுகிறது பிரபாகரனது மொழிபெயர்ப்பில். ஆனால் அது கூட வாசகனுக்காக, அவன் நெகிழ்ந்து நுழைவதற்காகக், கவிதை வடிவத்தில் மிக இறுக்கமின்றி இலகுவாகச் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நீரின் நெகிழ்வியல்வோடு அவர் தாவோவை அவ்வாறே அறிந்து, உய்த்திருக்கலாம். "சித்தர் வயிற்றிற்காகக் கொடுக்கிறார், புலன்களுக்காக அல்ல, சித்தர், நிறைவைத் தேடுவதில்லை தேடலின்றி, எதிர்பார்ப்பின்றி அவர் விழிப்புடன் இருக்கிறார் - அவரால் அனைத்தையும் வரவேற்க முடியும்" "பிறரைச் சம்மதிக்க வைக்க அவர் முயல்வதில்லை, ஏனெனில், அவர் தன்னுள் நிறைவடைந்து உள்ளார், பிறரது அங்கீகாரச் சான்றிதழ்கள் அவருக்குத் தேவையில்லை, ஏனெனில், அவர் அவரை ஏற்றுக் கொண்டுள்ளார் - போன்ற கனகச்சிதமான வாரிகளும், அதனால், அகில உலகமும் அவரை ஏற்றுக் கொள்கிறது"" மரத்தச்சன் இளவசரன். புத்தர் சொல்கிறார். "ஒரே ஒரு களங்கமற்ற உயர்ந்த நம்பிக்கை கூட மனிதனை மாற்றிவிடும். ஒரு களங்கமற்ற நம்பிக்கை...." அதனை மறுபடியும் லாவோட்சு மூலம் எனக்குள் விதைத்திருக்கிறார், பிரபாகரன். அவருக்கும் ‘எழுத்து’ பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள். ஏசு சொல்கிறார்..... "நீங்கள் இரண்டை ஒன்றாக்க ஆரம்பிக்கும்போது, உங்களுடைய உள்ளத்தை வெளிக்காட்டும் போது, வெளியை உள்ளாக்கும்போது, மேல் கீழாகும் போது, ஆண் ஆணாக இல்லாது, பெண் பெண்ணாக இல்லாது, ஆணும், பெண்ணும் ஒன்றாக மாறிப் போகும்போது தான் ராஜ்யத்தில் நுழைய முடியும்" லாவோட்சுவின் ராஜ்யத்திற்குள் கொஞ்சம் நுழைய முடிந்த இந்த வாய்ப்பிற்கு நன்றி. * * * * *

தொடர

களவு காமம் காதல் - சாம் நாதன் புத்தக வெளியீட்டு விழா

தமிழச்சி தங்கப்பாண்டியன்

இலக்கியம் மில்ட்டனின் 'இழந்த வானக'த்தில் (Paradaise Lost) நிகழும் கடவுளுக்கு எதிரான சாத்தானின் கலகத்திலிருந்து, தாஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) என்பதன் பிரதான பாத்திரமான ராஸ்கல்நிகோவ் செய்யும் ஒரு கிழவியின் கொலை வரையிலான எல்லா வகைப்பட்ட குற்றங்களையும் கவர்ச்சிகரமாக ஆக்குகிறது. அது முதலாளித்துவ மதிப்பீடுகளையும், சம்பாதிப்பதும் செலவு செய்வதுமான நடைமுறை விஷயங்களையும் எதிர்க்க ஊக்குவிக்கிறது. இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் செய்தியாகவும் அதே சமயம் அதனுடைய கூச்சலாகவும்கூட இருக்கிறது. அது கலாச்சாரத் தலைநகரமாகவும் அதேசமயம் அது சீர்குலைவுக்கான ஆற்றலாகவும்கூட இருக்கிறது. அது வாசிப்பைக் கோருவதும், அர்த்தம் தொடர்பான பிரச்சினைகளில் வாசகர்களை ஈடுபடுத்துவதுமான ஒரு எழுத்து முறையாகவே உள்ளது. - ஜானதன் கல்லர் அன்புள்ள சாம் நாதன், களவு காமம் காதல் குறுநாவல் (Novella) வாசித்தேன். தமிழில் சொல்