உரைகள்

பாராட்டு விழாக்களில்

காதலே காலத்தின் சிறந்த முதலீடு எனும் போது உலகெங்கிலும் இவ்வுணர்வில் ஒத்து ஒலிப்பதே காதல் கொண்ட பெண்குரலோ எனத் தோன்றுகிறது

தொடக்கம், சுருக்கம், நிறைவு !

கே.பாலச்சந்தர் - பாராட்டு விழா

தமிழச்சி தங்கப்பாண்டியன்

கே.பாலச்சந்தர் - பாராட்டு விழா தாதாசாகேப் விருது பெற்ற முதல் தமிழ்த்திரைப்பட இயக்குநர் K.B. அவர்கள் இந்த விருதைப் பெற்றவுடன் கடவுளுக்கோ, உற்றவர்களுக்கோ அதை அர்ப்பணிக்கவில்லை. மாறாக, தனக்கு ஊக்கமும், உயர்வும் கொடுத்த, உலகம் முழுதுமுள்ள தமிழ் ரசிகர்களுக்கு இதை அர்ப்பணித்திருக்கிறார். இதற்கு முன்பாகவே விருதுகள் பல பெற்றவர்தான். ஆனாலும், பல படங்களை இயக்குவதற்காக இதனைப் பெற்றேன் எனச் சொல்வதை விட, பல நல்ல கலைஞர்களை அறிமுகம் செய்து, கலை உலகிற்குக் கொடுத்திருக்கிறேன் என்பதையே இத்தருணத்தில் நினைத்துப் பார்ப்பதாகச் சொல்கின்ற பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர். அவரைப் பாராட்ட இலக்கிய உலகில் இருந்து நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்றால் - இரண்டு காரணங்கள். ஒன்று - ஒரு இலக்கியவாதியோ, கலைத்துறை படைப்பாளியோ உண்மையை அறிய மூளையையும், எண்ணங்களையும் நம்பியிருப்பதில்லை. இதயத்தை மட்டுமே நம்புகிறார்கள். இலக்கியம், சினிமா இரண்டுமே வெவ்வேறு அனுபவங்களைத் தருவதாக இருந்தாலும், இரண்டுமே மனிதனின் கற்பனையைத் தூண்டி, அக்கற்பனை விரிவில் ஒரு அனுபவத்தை ஏற்படுத்துபவை. அவ்வகையில் திரு.K.B., அவர்களது படைப்புகளை உன்னிப்பாக ரசித்து, உய்த்து அனுபவித்தவள் நான். இரண்டாவதாக, த்ரூஃபோவின் படங்கள் பற்றி ழான் கோலே சொன்னதைப் போல, நம் சம காலத்தின் மிக முக்கியமான படைப்பாளியைப் பாராட்டுவதில் எனக்குத் தனிப்பட்ட பெரும் விருப்பமுண்டு. ழான் கோலோ சொன்னார் "நம் வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்யம் குன்றியிருக்கும் போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து நம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும். ஒரு காட்சியோ, வசனமோ போதும், நமக்குத் தைரியம் அளிப்பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு. இந்தக் காரணத்திற்காகவே த்ருஃபோவின் படங்களைப் பார்ப்பவர்கள் உண்டு". எனக்கு K.B. அவர்களின் திரைப்படங்கள் அப்படித்தான். நேர்கோட்டுக் கதைகள் எனக்குப் பிடிக்காது - ஏனெனில் வாழ்க்கை சீரானதன்று. அது, மாபெரும் புதிர். அதன் நெளிவு, சுளிவுகளைக் கோணல்களை அதன் போக்கிலேயே வெளிச்சமிட்டுக் காட்டியவை அவரது படைப்புக்கள். செனகல் என்ற ஒரு சிறிய மேற்கு ஆப்பிரிக்க நாடு. அங்கிருந்து வந்து உஸ்மான் செம்பீன் என்ற இயக்குநர், உலக அளவில் பேசப்படுகிறார். பொலிவியா ஒரு வறுமையான நாடு - அங்கிருந்து வந்த ஸான்ஹினேஸ் விவாதிக்கப்படுகிறார். மிகச் சிறிய நிலப்பரப்பான கூபாவிலிருந்து எத்தனை தரமான இயக்குநர்கள் உலகம் முழுவதும் பேசப்படுகிறார்கள்? ஆனால், தமிழ் நாட்டில், திரையுலகில் மிகச் சிறந்த இயக்குநர் ஒருவருக்கு இப்போதுதான் நாட்டின் மிக உயரிய அங்கீகாரம் இத்துறையில் கிடைத்திருக்கிறது. தாமதமாகவேனும், கொடுக்கப்பட்ட அதனைக் கொண்டாட, அண்ணன் சிவா முனைந்திருப்பதற்கு எனது பாராட்டுக்களும், நன்றியும். மிகப் பெரிய கலாரசிகர் சிவா அண்ணன். நல்ல படிப்பாளி. உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான Verner Hersak இன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு எழுத்தாளரது புத்தகத்தில் வாசித்து அயர்ந்து போனேன். ஒரு முறை ம்யூனிச்சிலிருந்து பாரிஸீக்கு நடந்தே சென்றார் ஹெர்சாக். இதைப் பற்றி If walking on Ice எனும் புத்தகமே எழுதியிருக்கிறார். அவரது தோழியும் சினிமா விமர்சகருமான Liot Eisner என்பவர் பாரிஸில் மரணப்படுக்கையில் கிடந்த போது அவரைப் பார்ப்பதற்காக ம்யூனிசிச்சிலிருந்து Hersak நடந்தே சென்றபோது கடும் குளிர்காலம். போய்ச் சேர அவருக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. அப்படி நடந்து போனால் ஐஸ்னர் பிழைத்து விடுவார் என்று ழநசளயம நம்பினார். அவ்வாறே நடந்து ஜஸ்னரும் பிழைத்துக் கொண்டார். சிவா அண்ணன், K.B. அவர்களிடம் வைத்திருக்கும் அன்பும், மரியாதையையும் அப்படித்தான். அவரைப் பார்க்க திருச்சியிலிருந்து சென்னைக்கு நடந்து சென்று விடும் அளவிற்கு ஆழமானது. அதனால் தான் இப்படிப்பட்ட ஒரு விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் பங்கேற்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. ஆனந்த விகடனின் ஆரம்பகால கட்டத்தில் R.K. நாராயண், (சுவாமியும், சிநேகிதர்களும்) எழுதியவர் - சினிமா விமர்சனம் கூட எழுதினார் - எப்படி தெரியுமா ? இப்படி (இந்தப் படத்தில் நன்றான நடித்தவர்கள் பின்வருமாறு 1. தென்னைமரம், 2. குதிரைவண்டி......... ஆனால், K.B. இன் படங்களில் ரயிலும் நடித்தது. திரைச்சீலைகளும் கூட நடித்தன. S.S.வாசனது குறிக்கோள் - """"ஒரு பாமரனைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைக் காட்டிலும் அவனுடைய தேவையுணர்ந்து மதிப்பதே மக்கள் மத்தியில் நீடித்து வெற்றி காண முடியும்"", என்பதே. K.B. யும் அப்படித்தான். Hollywood சித்தாந்தம் என ஆரம்பத்தில் ஒன்றைச் சொல்வார்கள் - சில விஷயங்களில் "thus for & no further" என மிகக் கண்டிப்பாக இருப்பது. அதை உடைத்த படங்களாக ‘Deep Throat, ‘The Last Dango in Paris’ ஐச் சொல்வார்கள். பாலச்சந்தரது அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவர்கள் - மூன்றும் இப்படித்தான். புனிதம் எனப்படுபவற்றை உடைத்தவை. ஒழுங்காக ஒரு கதை சொன்னாலே மனித வாழ்வின் பல பரிமாணங்களை உணர்த்த முடியும் என்பவை K.B. யின் படங்கள். சிந்தாமணி என்ற பழைய படம் குறித்து உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். அது ஒரு பாலியல் தொழிலாளியைப் பற்றிய கதை. அதில் அந்த வேஷம் தரித்தவர் அசுவத்தாமா, எனும் நடிகை. சிந்தாமணி படத்தில் அசுவத்தாமா உடுத்திய ஒவ்வொரு புடவையைக் கொண்டும் இன்றைய கதாநாயகிகள் மூவருக்கு உடை தைத்துவிடலாம். அந்தப் பாத்திரம் அன்று உடையின் பலத்தைச் சார்ந்திருக்கவில்லை. பாலச்சந்தரின் எந்தப் படத்திலும் பெண்ணைத் தரக்குறைவான உடைகளோடு அவர் காட்சிப்படுத்தியதேயில்லை. (உ-ம்) அவள் ஒரு தொடர்கதையில் கதாநாயாகி சுஜாதா உடைமாற்றுகின்ற காட்சி. ஒரு மத்தியதரவர்க்கத்தின் இடைஞ்சல்களுக்கிடையே வெகு இயல்பாக அந்தப் பெண் கதாபாத்திரம் ரவிக்கையை அணிந்து கொள்வது, விரசமின்றிக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அது போலத்தான் அரங்கேற்றம் படத்தில், நாயகின் வெற்று முதுகு பணக் கற்றையால் மறைக்கப்பட்டுப் பின் மின்விசிறியில் அது விலகுகின்ற காட்சியும். பல வருடங்களுக்கு முன்பு, கர்நாடகா திரைப்பட மாணவர்கள், Poland Director Roman Polanski யின் பத்திரிக்கையாளர் சந்திப்பைப் படமெடுக்கப் பிரமாதமாக ஏற்பாடுகள் செய்திருந்தார்களாம். "யாராவது அந்த விளக்கை அணைத்து விடுகிறீர்களா ? என் தலை முடியில் தீப்பற்றிக் கொள்ளப் போகிறது !" என்று சொன்ன Polanski, "இந்த technique, இந்த மாதிரி ஒளியூட்டுவது - 30 வருடத்துப் பழசு. Before 30 yrs மேலை நாடுகளில், படம் நல்லதோ இல்லையே சினிமாவுக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள். இப்போது இந்தியாவில் இந்தப் பழக்கம் நீடிப்பதாக எனக்குத் தெரிகிறது. இங்கு சினிமா பார்ப்போர் பொறுமைமிக்கவர்களாக இருக்கிறார்கள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்ற technical அம்சங்களில் இங்கு இருப்பது போலக் குறைகள் அங்கு ஏற்கப்படுவதில்லை"" என்றார். அந்த குறை இன்றைக்கு மிகப் பெரிய அளவில் தீர்ந்திருக்கலம். ஆனால், அதற்கான மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவை பாலச்சந்தரது கறுப்பு & வெள்ளைப் படங்கள். அவர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள் ரவிச்சந்திரன், ஜெயசங்கர் நடித்தது - 1971 ம் ஆண்டு வெளிவந்தது. அதற்குப் பின்னர் மீண்டும் கறுப்பு வெள்ளைக்கே திரும்பிய பாலசந்தர் மறுபடியும் வண்ணத்திற்குள் பிரவேசித்தது, முற்றிலும் புதுமுகங்கள் நடித்த பட்டினப் பிரவேசம் படம் - அதன் பின் கமலஹாசனின் மன்மதலீலை. அவரது கடைசிக் கறுப்பு வெள்ளைப்படம் நிழல் நிஜமாகிறது. பெண்ணின் வெளித்தோற்றம் தாண்டிய மன உணர்வுகளை நுட்பமாகப் பதிவு செய்த மிகத் தரமான படம். அரங்கேற்றம், அவள் ஓரு தொடர்கதை, அவர்கள் என கருப்பு வெள்ளைப் படங்களைக் காவியமாக்கியவர். இவரது அவள் ஓரு தொடர்கதை ரித்விக் காடக்கின் ‘மேகோ தாஹே தாரா’ என்ற படத்தின் தழுவல் எனச் சிலர் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் - மத்தியதர வர்க்கச் குடும்ப வாழ்வின் சிக்கல்களைக், குறிப்பாகப் பணி புரிகின்ற பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, குடும்பத்தின் பலி ஆடுகளாக அவர்கள் ஆக்கப்படுவதை, தமிழ்த் திரைப்படச் சூழலில் வேறு எவரையும் விட சிறப்பாகச் சித்தரித்தவர் பாலச்சந்தர் மட்டுமே. மிகப் பெரிதான ஒன்றாக அவரிடம் நான் மதிக்கின்ற விஷயம் - தான் சார்ந்த சமூகம் குறித்த விமர்சனங்களை நேர்மையாக சித்தரிக்க முயன்ற நெஞ்சுரம் அவரிடம் இருந்தது என்பதே. மனதில் இருப்பதைத் துணிவுடன் சொல்கின்ற, திடமும் அவருக்கு இருக்கிறது எனபதற்கு ஒரு சாட்சி - ஒரு சமயம், ஆனந்த விகடனில் ‘விகடமேடை’ பகுதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.அமல்ராஜ் என்பவர் பாலச்சந்தரிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். "பொதுவாகப் பெண்விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும் அவரது பாடல்களையும் அதிகம் பயன்படுத்தி இருக்கிறீர்கள். பாரதியாரை விடத் தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால் உங்கள் படங்களில் ஏன் அவரைப் பற்றிய சித்தரிப்புக்கள் இல்லை" K.B. இன் பதில் - "ஒரு வேளை பெரியார் பாடல்களை எழுதி இருந்தால் பயன்படுத்தி இருப்பேனோ? பெரியாருக்கு முன்பே பாரதி பிறந்து விட்டதாலும், அவருடைய பெண்ணியக் கருத்துக்களில் பாரம்பரியத்தின் நல்ல அம்சங்களும், புதுமையின் அவசியமும் சேர்ந்து இருந்ததாலும், அதுவே எனக்குப் போதுமானதாக இருத்தது."" பகுத்தறிவுக் கருத்தாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லைதான் இந்த பதிலை. ஆனால், வெளிப்படையாகச் சமரசமின்றி தனது கருத்தைத் துணிந்து சொன்னவர் - தனது படங்களைப் போலவே. மேலும், ஒரு கலைஞரின் படைப்புச் சுதந்திரம் அவரது தனிப்பட்ட விஷயம்., பாரதியாரைப் பற்றி மட்டும் ஏன் சொல்கிறீர்கள், பாரதிதாசனை விட்டுவிட்டீர்களே எனும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன், கலைஞன் ! Roman Polanski லாரான்ஸ் ஒலிவியேவின் ‘Hamlet’ படத்தை முப்பது தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறாராம். நானும் இவரது தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான், மூன்று முடிச்சு, வானமே எல்லை, அழகன் - முதலானவற்றை எத்தனைமுறை பார்த்தேன் எனக் கணக்கே கிடையாது. சினிமாவிற்குக் கலாசாரத்தில் இருந்து வரும் உந்துதலைக் காட்டிலும், சமகாலத்தைப் பற்றி பிரக்ஞையும், பார்வையுமே மிக அவசியம் என உணர்த்தியவர் K.B. ஆரம்பத்தில் வந்த நந்தனார் படத்தை முழுக்கத் தமிழ் உணர்வும் தமிழ்த் தன்மையும் கொண்ட படமெனச் சொல்வார்கள். அதற்கு முன்மாதிரியாக எந்த வெளிப் பிரதேச, வெளிநாட்டுத் திரைப்படமும் இருக்க நியாயமில்லை என்பார்கள். அதுபோல முழுக்க, முழுக்க நடுத்தர வகுப்பினரின் அக வாழ்வுச் சிக்கல்கல், பலவீனங்கள், சமரசங்கள் போன்வற்றைக் கொஞ்சம் அதிர்ச்சியூட்டுகின்ற விதத்தில் அப்பட்டமாக சொன்னவர் K.B. சாமானிய மக்களைப் பற்றியும், தண்ணீர் தண்ணீர், தப்புத் தாளங்கள் - படம் செய்தவர் தான். "தமிழ் சினிமாவைப் பற்றிய வரலாறு ஒன்று என்னால் எழுத முடியும். ஆனால், விவாதிக்கத்தான் முடியவில்லை" என்று ஒருமுறை எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். சொல்லிவிட்டு, அவர், தமிழ் சினிமாவின் சில அம்சங்கள் குறித்து வந்த முறையான ஆராய்ச்சி நூல்கள் மிகக்குறைவு எனவும் வருத்தப்பட்டார். (எஸ்.கிருஷ்ணஸ்வாமியும், எரிக்கபார்னோவும், (Eric Barnow) எழுதிய இந்திய சினிமா நூலில் ஒரு பகுதி, தமிழ் சினிமா பற்றியது. அதன் பின் எஸ்.டி பாஸ்கரனின் ‘மெஜெஸ் பேரர்ஸ்’ மட்டுமே ஆய்வு பூர்வமான நூல்கள் என்கிறார் அசோகமித்திரன். ஆனால் பாலச்சந்தர் விவாதத்திற்குத் தயாராக இருப்பவர். தனிப்பட்ட முறையில் கலைஞர்கள் பலருக்கும் கடிதங்கள் எழுதுவதன் மூலம், ஆக்கபூர்வமான படைப்புச் சூழலை, மகிழ்ச்சியை, நம்பிக்கையை உருவாக்குபவர். பாரதிராஜா, மணிரத்தினம் முதற்கொண்டு இன்றைய இளம் இயக்குநர்களது படைப்புகள் வரைக் கூர்ந்து கவனித்துத் தன் பாராட்டையும், விமர்சனத்தையும் முன்வைப்பவர். அதனால் generation next ஐ இணைக்கின்ற கண்ணியாக இருப்பவர். K.B. அடிப்படையில் ஒரு நாடகக் கலைஞர் என்பது அவர் மீது எனக்குச் சற்று கூடுதல் மரியாதை வரக் காரணம். மேடையில் ஒளியின் மூலமாகப் பெறும் மாறுதலை ஏற்படுத்திய நாடகமாக ‘இருளும் ஒளியும்’ எனும் நாடகத்தைச் சொல்வார்கள் .அந்நாடகம் ஒரே காட்சி அமைப்பும், நான்கு அல்லது ஐந்து ஹஉவள மட்டுமே கொண்டு முதன்முறையாக நடிக்கப் பெற்ற ஒன்று. K.B.இன் Major Chandrakath, நீர்க்குமிழி போன்றவை அந்தக் காலகட்டத்தில் மிகப்புதிய முயற்சிகள். இந்தி மொழியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று புருஷோத்தம தாஸ் தாண்டன், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முனைந்து நிற்கையில். அப்போதைய பிரதம மந்திரி நேருவின் செயலாளர் பணிக்கர், நேருவிடம் இப்படிச் சொன்னராம் - ஐயா - இந்தி மொழியின் இலக்கியங்கள் இரண்டே இரண்டு - ஒன்று துளசிதாசரின் இராமாயணம் மற்றது ஆல் இண்டியன் ரயில்வே கைடு! யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமன்று. 30 ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா தான்’ என்ற எண்ணம் நிலவியது. அந்தக் கருத்தைத் தகர்த்துத் தமிழ் சினிமாவை அகில இந்திய அளவிற்கு நகர்த்தியதில் K.B. க்குப் பெரும் பங்கு உண்டு. நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்ட இத்துறையில் கொஞ்சம் யோசித்தால் எல்லாப் படங்களுமே ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது போலத் தோன்றும். ஓரே ஆட்டத்தைத்தான் வெவ்வேறு மனிர்களை வைத்து K.B. ஆடிப்பார்த்திருப்பார். எதிரொலி படத்தில் சிவாஜி, வெள்ளிவிழாவில் ஜெமினி, நூல்வேலியில் சரத்பாபு, சிந்துபைரவியில் சிவகுமார். ஆனால், அந்த மனிதர்களில் தான் எத்தனை விதமான நுணுக்கமான ளுhயனநள ஐ வித்யாசங்களாகக் கோர்த்திருப்பார் ? அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதா என்றால், மனதில் உறுதி வேண்டுமில் சுஹாசினி - இருகோடுகளில் சௌகாருக்கு நேர்ந்ததுதான் சிந்துபைரவியில் சுஹாசினிக்கும். மரோசரித்திராவில் இறந்த காதலர்களில் காதலன் மட்டுமே புன்னகை மன்னனில் பிழைத்திருப்பான். ஆனால் சூழல்கள் மாறுவதில்லை - மனிதர்களும், மனங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன என்ற அடிப்படை வாழ்க்கைப் பார்வையை அழுத்தமாகச் சொல்வதுதான் K.B. யின் பலம். பெண்களின் உடலை நம்பிப் பிறரைப் போல் அவர் படம் எடுத்ததில்லை என்பது எனக்கு மிகப் பெரும் ஆறுதல் தான் - என்றாலும், இன்னொரு பெண்ணைக் காப்பாற்றச் சொல்லத்தான் நினைக்கிறேனில் தன் உடலை இழக்கும் ஜெயசித்ராவின் உத்தியையே இருபது வருடங்களுக்குப் பிறகு வந்த அவரது கல்கியின் நாயகியும் பின்பற்ற வேண்டுமா என் அவரிடம் நான் கனவுகளில் உரிமையுடன் சண்டை போட்டிருக்கிறேன். ஒரு போதும் நாயகத் தன்மைக்கு மட்டுமே இடமளித்த Hero Centric படங்களை அவர் எடுத்ததில்லை. M.G.R அவர்களின் காலத்திலேயே அவர் இதனைச் செயல்படுத்தியிருக்கிறார். நான் மிக மதிக்கின்ற மரியாதைக்குரிய இயக்குநர்கள் கூட பின்னாட்களில், ‘காயா, இது பழமா’ எனும் கொச்சைப் பாடலுக்கு இடமளித்து M.G.R. படங்களை இயக்கியிருக்கிறார்கள். ஆனால் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதியதோடு - பின் K.B. எந்தவித சமரசத்திற்கும் இடமளித்ததில்லை. இத்தனைக்கும் வெற்றி, தோல்வி இரண்டையும் ஓரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் சந்தித்தவர் அவர். அவரது நான்கு சுவர்கள் தோல்வி அடைந்து ஒதுக்கப்பட்ட அதே காலகட்டத்தில், அவரது நூற்றுக்கு நூறு வெளிவந்து பெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்றது. நாடகத்துறையில் சிவாஜி, R.S.மனோகர் உள்ளிட்டோருக்கு மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். அவரது வசனங்கள் தான் படங்களில் பெரும் பலம். Cinema Visual Medium - ஆனாலும் மொழியின் கூர்மையைச் சரிபார்க்கின்ற சாணைக் கத்தியும் அதுதான். I Salute to you specifically for three reasons sir - தமிழ்த் திரையைப் பொறுத்தட்டில் நடிகைகளைப் பெண்களாகப் பார்க்கும் வழக்கம் பானுமதி, கண்ணாம்பா காலத்திற்குப் பிறகு மீண்டும் துளிர்த்தது. அதை மாற்றி அவர்களைக் கலைஞர்களாகவும் காட்டியது நீங்கள் தான் - சரிதாவின் கண்களை ஒரு கதாபாத்திரமாக்கியது நீங்கள் மட்டுமே. Secondly, அபத்தங்களற்ற தொலைக்காட்சித் தொடர்களை பல வருடங்களுக்கு முன்பே பங்களித்தமைக்காக. உங்களின் ரயில் ஸ்நேகமும், கையளவு மனசும், சஹானாவும் மறக்கக் கூடியவையா என்ன ? Thirdly, for that one particular song ‘பாடறியேன் படிப்பறியேன் in சிந்து பைரவி. இசை உங்கள் படங்களில் மிக முக்கியமானதொரு கதாபாத்திரம். அதிலும், இளையராஜா எனும் மேதை அப்பாடலை தியாகராஜர் கீர்த்தனையுடன் கலந்து செய்த கலகம் - குறிப்பாக - "எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான். சட்ஜமமென்பதும் தைவதைமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறம்தான்" எனும் வரிகளினூடாக நீங்கள் சொன்ன புரட்சிகரமான அந்தச் செய்தி. Finally, வெவ்வேறு தளங்களைத் தொட்டவையாக மட்டுமல்ல, வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வதாக வானமே எல்லையையும், உன்னால் முடியும் தம்பியையும், வறுமையின் நிறம் சிகப்பையையும் கொடுத்தமைக்காக ! கட்டமைக்கப்பட்ட நேர்கோட்டு வாழ்விலிருந்து விலகி முதலில் Divorce, பின் திருமணம், அதன்பின் காதல் எனும் அவர்கள் பட கதாநாயகிக்காக ! வாழ்வின் வக்கிரங்களையும், சறுக்கல்களையும், எல்லா மனிதர்களும் எந்தநேரமும் வெளிப்படுத்தலாமென்கின்ற மூன்று முடிச்சு, அபூர்வராகங்களுக்காக! தமிழ் சினிமா அதுவரை பொருட்டாகக் கருதாத துணை நடிகர், நடிகையின் வாழ்வை மிக வலியோடு காட்டிய ஒரு வீடு இரு வாசலுக்காக ! திரைப்படம், நாடகம், தொலைக்காட்சித் தொடர் மூன்றும் எப்போதும் இணைந்தே செயல்பட வேண்டும் என்று சொல்லி, தொடர்ந்து இயங்கிக் கொண்டே ஒரு நதிபோல ஓடிக் கொண்டிருப்பதற்காக ! After the second world war, ஐந்தாறு ஆண்டுகளுக்கு, ஆங்கில மொழிப்படங்கள் காட்டப்படும் நாடுகள் அனைத்திலும், "எந்த நடிகை உங்களைச் செயல் இழக்கச் செய்யும்படி மயக்குகிறார்?" என்ற கேள்விக்கான பதில் Reeta Hayworth என்பதே. Reeta, Guilda, Loves of karman என்ற வெற்றிப் படங்களில் நடித்தவர். உலகத் திரைப்படத்தின் மகா கலைஞன் எனப்படும் Arson Wells ஐ மணந்தவர். பின்னாளில் Wells ஐ விவாகரத்து செய்துவிட்டு உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிகானை அவர் திருமணம் செய்து கெண்டார். தனது முதல் கணவரான Arson Wells பற்றி Reeta சொன்னார் - "ஒரு மேதையை யாரும் மணந்து கொள்ளக் கூடாது" என்று. தமிழ்த் திரையுலகம் K.B. எனப்படுகின்ற இந்த மேதையை மணந்து கொள்ளவில்லை என்றாலும் மனதாரக் காதலனாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. ரித்விக் காடக்கைப் பற்றி சத்யஜித் ரே, """"இந்திய சினிமாவில் ரித்விக் கடந்து செல்ல முடியாத (unsurpassable) ஒருவராகவே இருக்கிறார்"" என்கிறார். K.B. அவர்களும் தமிழ் சினிமாவில் கடந்து செல்ல முடியாத ஒருவராகவே இருக்கிறார். எப்போதும் இருப்பார். ரேயும், ரித்விக்கும் சமகாலத்தவர்கள். ஆனால், ரே அளவிற்கு ரித்விக் அறியப்படவோ, கொண்டாடப்படவோ இல்லை. ஏன் என்ற காரணத்தை Jacab Levich எனும் விமர்சகர் சொல்வார். - "Ray is the suitable boy of the Indian film, presentable, career – oriented, & reliably tasteful. Ghatak by contrast, is an undesirable guest, he lacks respect, has ‘Views’, makes a mess, disdains decorum”. Dear K.B. Sir, you are always desirable – though you have ‘views’, makes and disdain decorum. Hats off to you!.

தொடர

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள், திரை இசைப்பாடல்களில் வாழ்வியலும், அழகியலும்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

"மலரோடும் ஆராய்ச்சி நடத்த வேண்டும் மழைபாடும் சங்கீதம் ருசிக்க வேண்டும் சிலரோடு கவிதைகளைத் துய்க்க வேண்டும் சிந்தனையைக் காற்றாகப் பரப்ப வேண்டும் நிலவோடு நதிநீரில் குளிக்க வேண்டும் நித்திரையைக் கலைக்காத கனவு வேண்டும் பலரோடும் ஒன்றாகப் பழக வேண்டும் பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்". சாக்ரடீஸ் தனது உரையாடல் ஒன்றில் "பேச்சுதான் உண்மையானது. எழுத்து பொய்யானது. எழுத்து என்பது கெட்ட ஞாபகம் (ஈவில் மெமரி). பேச்சு என்பது சட்டபூர்வமான வாரிசு. எழுத்து சட்டபூர்வமான தகப்பன் இல்லாமல் பிறந்த மகன் (பாஸ்டர்ட்)" என்கிறார். "நான் பேசும்போது உயிர்ப்புடன் பேசுபவனாக இருக்கிறேன். என் பேச்சுக்கு நான் தகப்பனாக இருக்கிறேன். ஆனால் நான் எழுதும் பிரதியோ நான் இல்லாமல் கூட இருக்கிறது. அது தனது தந்தையுடன் எவ்விதத் தொடர்புமின்று ஒரு சட்ட விரோத வாரிசைப் போல் தனியே இருக்கிறது. பேச்சு உயிருள்ளது. எழுத்தோ இறந்தது. அதனால்தான் எழுத்து இறந்தவர்களின் கல்லறைகளின் கல்வெட்டுகளில் உறைந்த நிலையில் காணப்படுகிறது" என்றெல்லாம் சாக்ரட்டீஸ் எழுத்தை இழித்துப் பேசுகிறார். சாக்ரட்டீஸிற்கு ஒரு வேளை கவிஞரது கவிதைகளைப் படிப்பதற்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் - பேச்சு மொழி வாயிலாகத் நம் மூதாதையர், தாய், தந்தையர், பாட்டிமார்கள், பங்காளிகள், தோழிமார்கள், பேசிய வட்டார வழக்கு மூலமாக, எழுத்தை எவ்வளவு உயிர்ப்பு உள்ள ஒரு மொழியாக, சாகாவரம் பெற்றதாக, ஒரு இலக்கிய வடிவமாக மாற்ற முடியும் என்கின்ற ரசவாதத்தை அதன் மூலம் அவர் உணர்ந்திருப்பார். மேற்சொன்ன தன் கருத்தையும் மறுபரிசீலனைக்கு அவர் உட்படுத்தி இருக்கலாம்! கவிதையும் பாடலும் இலக்கியக் கிளையின் வெவ்வேறு விழுதுகள் என்ற போதிலும் இரண்டும் உள்ளடக்கங்களால் வேறுபடுகின்றன. கவிதை (Poem) என்பது பொதுவாகப் பொது உணர்ச்சி என்றும் பாடல் (lyric) என்பது பொதுவாகத் தன்னுணர்ச்சி என்றும் இலக்கியத்தின் கருதுகோள் கூறுகிறது. lyric என்ற சொல்லே lyre என்ற கிரேக்கச் சொல்லின் வேரடியில் முளைத்தது. lyre என்பது ஓர் இசைக்கருவி. அது ஓர் ஏழ்நரம்பு யாழ். lyre கருவிகொண்டு இசைத்துப் பாடப்பட்ட பாடல் காலத்தால் மருவி lyric ஆயிற்று என்பது வரலாறு. "As we cry we sing and ringing the sentiment in you and you in me" இதுதான் 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் பாடப்பட்ட முதல் இசைப்பாடல் என்று கண்டறியப்பட்டுள்ளது. (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 29) இந்த மண்ணிலுள்ள மக்களுடைய சுவாசத்தை தன்னுடைய மூச்சிலும், அவர்களுடைய பேச்சு மொழியை தன்னுடைய ரத்தத்திலும், அவர்களுடைய கவுச்சி மணத்தைத் தன்னுடைய இலக்கிய மொழிநடையிலும், பொதிந்திருக்கின்ற கவிஞரது கவிதைகள், கவிதைகளாக மலர்ந்திருக்கின்ற அவரது திரை இசைப் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதை நான் உங்களிடையே இப்போது பகிர வந்திருக்கிறேன். ஆனால் அவை என்ன செய்கின்றன என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் தனியே அமர்ந்து தங்களுக்காகவே பயணித்து, அதனைப் படித்தும், கேட்டும் பின் அனுபவித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவரது பலகவிதைகள் அச்சுகோர்த்து, எழுத்துவடிவிலே கொடுக்கப்பட்ட புத்தகங்கள் மட்டும் அல்ல. கூடு வைரமுத்துவின் சிறந்த கவிதைகளில் ஒன்று. புறம் போக்கு நிலத்தில் கட்டப்பட்ட தனது கனவு வீடு இடிக்கப்படுவது கண்டு புலம்பும் ஒரு தாயின் குரலில் கவிதை விரிகிறது. அவள் கண்ணீரும் கவி நிறைந்த புலம்பலும் அந்த வீட்டைக் காப்பாற்றவில்லை. நாமும் விதிர்த்துப் போயிருக்கும் போது கவிதை சட்டென்று திரும்புகிறது: "கொல்லையில எம் மகதான் மல்லியப்பூ நட்டிருக்கா நீர்குடிச்ச கொடி இப்ப வேர் பிடிச்சு நின்னுருக்கு பொத்தி வளத்த கொடி பூப்பூக்கும் முன்னால கத்தி எறியாதீக கடப்பாரை வீசாதீக ஆசையில வச்ச கொடி அசங்காம இருக்கட்டும் அவ வச்ச மல்லிகைதான் எவளுக்கோ பூக்கட்டும்" (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 49,50) இது வெறும் கவிதையல்ல வீச்சறிவாள்; இது உங்களுடைய பூட்டிகளால் கட்டிவைக்கப்பட்ட களத்துமேட்டுக் கம்பு; இது உங்களுடைய அப்பத்தாவினுடைய அந்த ஆட்டு உரல்; இது உங்களுடைய அம்மத்தாவின் சுருக்கு பை; இது உங்களுடைய அக்காமார்களும், மதனியார்களும் ஒருவருக்கு ஒருவர் முழங்கையால் குத்திக்கொள்ளும் உலக்கை; இது உங்கள் தகப்பன்மார்களின் குழுதாடி; இது உங்களது ஆத்தாமார் தங்களுடைய கண்ணீரையும், மகிழ்வையும் மசாலாவோடு சேர்ந்து அறைத்த அம்மிக்கல்லும், திருகைக்கல்லும்! ஒரு மூன்றாம் உலகப் பிரஜைக்கான உறுதி, திடம், மொழி, பண்பாடு, திமிர், கலை, இலக்கியச் செறிவு, முதுசொம் - அனைத்தும் நிரம்பிய கவிஞரது கவிதைகள் சிலவற்றிலும் பாடல்களிலும் வாழ்வியலும், அழகியலும் எப்படி இணைந்து பயணிக்கின்றன எனப் பார்க்கலாம். மயாகோவ்ஸ்கி என்கின்ற உலகப் புகழ்பெற்ற ரஷ்ய கவிஞர் கவிதைகள் பிறப்பது எவ்வாறு என்று எழுதி வெளியிட்ட ஒரு சிறிய வெளியீட்டில் சொல்கின்றார் - "ஒரு படைப்பாளிக்கு, ஒரு கலைஞனுக்கு, ஒரு கவிஞனுக்கு சமூக ஆணை என்பது மிக மிக முக்கியம். சமூக ஆணை என்றால் என்ன? சமூக ஆணை என்பது சமூக யதார்த்தத்தில் கலைஞனின் தலையீடு ஆகும். அரசியலில் அறிவியல் சோசலிசம் அப்படியோ அது போலக் கலையில் சமூக ஆணை". 'சமூக ஆணை'யும் மென்மையான மானுட உணர்ச்சிகளும் எதிரும் புதிருமாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு மயாகோவ்ஸ்கியின் வாழ்க்கையும் கவிதைகளுமே சாட்சி. ஒரு மனிதகுமாரன் சிந்திக்கிறான் ஒரு மனிதகுமாரன் சிந்திக்கிறான் இருண்டு கிடக்கும் இதயக் கிழக்குகள் விடிவதற்காகவும் மனிதகுலத்தின் கண்ணீரை சந்தோஷத்தின் சமிக்ஞையாய் மட்டும் தரிசிக்கவும் பச்சையம் இல்லாத மனிதத்தாவரங்களும் ஒளிச்சேர்க்கை செய்யும் உத்தி காணவும் ஒரு மனிதகமாரன் சிந்திக்கிறான் ஒரு மொட்டு பூவாய் வெடிக்கும் ரகசியச் சப்தத்தை ஒலிப்பதிவு செய்ய முடியாதா? அலைகளின் மொழிக்கு ஓர் அகராதி காண முடியாதா? சூரியச் சிலந்தி பின்னும் மேகவலைகளைத் தன் பேனாவை உயர்த்திப் பிய்த்துவிட முடியாதா? பூமாதேவியைப் பார்த்துக் கண்ணடிக்கும் மின்னலைக் கைதுசெய்ய முடியாதா? என்ற சின்னச் சின்ன ஆசைகளில் சிம்மாசனமிட்டும் ஒரு மனிதகுமாரன் சிந்திக்கிறான் அழகியல் அவனுக்கு அந்நியமல்ல கலைகளின் பெருமூச்சும் அவனுக்குச் சங்கீதமே கலைகள் மனிதனைப் பதிவுசெய்யும் மகத்துவம் பெறவும் அந்த மனிதகுமாரன் சிந்திக்கிறான் தனது இரத்தக் கையெழுத்தில் எழுத்துப் பிழைகள் எண்ணுவோரைக் கண்டு சிரித்தக் கொண்டும் சிலரின் கைகுலுக்கல்களுக்குப் பிறகு தன் விரல்களைச் சரிபார்த்துக் கொண்டும் நாளையின் வானில் கிழக்கில் ஒரு கிரணமாவோம் என்ற நம்பிக்கையோடும் சாட்சிகளில்லாத ஊமைகளின் வழக்கில் ஆஜராகத் துடிக்கும் அவசரத்தோடும் அவன் சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறான். (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 228,229,230) ஒரு காத்திரமான சமூகக் கடப்பாடும், மென்மையான மானுட உணர்வான அழகியலும் அருமையாகப் பொருந்திப் பயணிக்கின்ற அற்புதமான கவிதை இது. "இலக்கியத்தின் உதவியோடு தன் பூர்விகத்தை அறிந்து கொள்வது ஏன் மனித நடவடிக்கையாக இருக்கக் கூடாது?" - என்பது வரலாற்றில் மானிடவியலாளர்களின் மிக முக்கியமான கேள்வி. தனது வேர் குறித்து கவிஞரது பதிவு: "'ஜா' வராது நம்ம சனங்களுக்கு. 'ராஜா' ன்னு சொல்லமாட்டாக; 'ராசா'ன்னு தான் சொல்லுவாக. ரோஜான்னு சொல்லச் சொல்லுங்க; 'ரோசா' தான் வாயில வரும். 'எம்ச்சியார்', 'சிவாசி'ன்னு சொல்லித் தான் பழக்கம் நம்ம நடிகர்கள. பேரு வச்சிருக்கான் பாரு பேரு - வாயிலேயே நொழையாத பேரு மூளையிலயா ஏறப் போகுது? பேருன்னா வெறும் பேரா? அதுல ஊரும் மண்ணும் ஒட்டியிருக்கணுமா இல்லையா? பேருல நம்ம ரத்தமும் வேர்வையும் கலந்து ஒரு வாடை அடிக்கணுமா இல்லையா? வம்சவரலாறு இருக்குடா ஒரு பேர்ல. பேருங்கறது வெறுஞ் சத்தமா? சரித்திரமடா. ஒட்டாத பேரு வச்சா ஓட்டுமா உதட்டுல? வெள்ளைக்காரன் எவனாச்சும் விருமாண்டின்னு பேரு வைக்கிறானா? டி.வி.யில சொல்றாகல்ல அமெரிக்க சேனாதிபதி ஒபாமான்னு - அந்தாளு பொண்டாட்டி பேரு ஓச்சம்மா-ன்னு வச்சா நல்லாயிருக்கும்ல.. வச்சிருக்கானா? வட நாட்ட எடுத்துக்க. பெரியக்கான்னு பேரு வைக்குமா பிரியங்கா? தண்டுச்சாமின்னு வப்பானா டெண்டுல்கரு? அவுக ஊரு மண்ணு பரம்பரையை ஒட்டித்தான வச்சிருக்காக. நாம மட்டும் மாறிப் போனா மூதாக்கமாரு விட்ட மூச்சு வீணாப் போகும்டா" - எழுதி வைக்க வேண்டும் இந்தத் தலைமுறைக்கு கவிஞரது இந்த வரிகளை ஒரு ஆத்தி சூடியென! சொல்லித்தர வேண்டும் இந்த உணர்வை நமது இளைய தலைமுறைக்கு ஒரு விழிப்பூட்டலென! - ஒரு சமூக ஆணையென! ஏன் நம் மண்ணில் செல்லப்பாண்டி என்றும், தங்கப்பாண்டி என்றும், சின்னப்பாண்டி என்றும் பெயர் வைக்கிறார்கள்?. ஏன் கருப்பையா, மூக்கைய்யா, வெள்ளைச்சாமி, முத்துப்பேச்சி, வனப்பேச்சி என்று பெயர் வைக்கிறார்கள்? அவர்கள் அனைவரும் நம்முடைய பாட்டன், பூட்டன்மார்கள். நம் மண்ணில் ஏதோ ஒரு காலத்தில் உலவி, ஊர்க் காற்றில் கலந்தவர்கள், தமது ரத்தத்தை வியர்வையென நமக்காகக் தந்திருப்பவர்கள். ஒரு காலக்கட்டத்தில் ஊருக்காக, ஏதோ ஒரு பகை தீர்க்க, குறை களைய, நல்ல விஷயத்திற்காகத் தன் உயிரைக் கொடுத்த குடும்பத்திலுள்ள ஒருவரின் பெயராக அவை இருக்கலாம்!. ஆகவே ஒரு பெயரைச் சொல்லும்போது வரலாற்றின் உண்மை அதில் தகிக்கிறது. கவிஞர் இதனைச் செய்வதின் மூலமாக மிக முக்கியமான மனித நடவடிக்கையினை - தனது பூர்விகத்தை நிலை நிறுத்துவதை, ஒரு இலக்கிய செயல்பாடாகக், கலையின் வழியாக இங்கே முன்னிறுத்துகிறார். ஊருக்குப் போயிருந்தேன் என் பாசத்துக்குரிய பழைய முகங்களே உங்களுக்கு நான் அந்நியமில்லை என் வெள்ளைச் சட்டை உங்களுக்கு விரோதியில்லை புகழ் என்னும் போதை வஸ்து உங்கள் பெயர்களைக் கூடவா மறக்கடித்து விடும்? எனக்குத் தெரியும் பொருளும் தலைமுடியும் ஒரே ஜாதிதான் இரண்டும் உதிர்ந்து விடுவது நிச்சயம் அன்றி குறைந்து விடுவது சத்தியம் உங்கள் வார்த்தைகளில் வீசும் வட்டார வாசனை நுகர வந்தேன் நான் பழகிய பழைய கண்களைப் பார்க்க வந்தேன் என் உடம்பில் இருக்கும் இரத்தம் தான் புதிது இருதயம் பழசுதான் உங்களின் காய்த்துப் போன கைகளின் ஸ்பரிசம் என் உள்ளங்கைகளுக்கு ஞாபகம் இருக்கிறது உங்கள் கிண்டலில் இருக்கும் மண்ணின் மணம் எப்போதும் பிடிக்கும் எனக்கு எங்கே? என்னைத் தன் தோள் நாற்காலியில் தூக்கிக் கொண்டு அத்தனை சினிமாவுக்கும் அழைத்துச் செல்வானே... எங்கே அந்த ஆதிதிராவிட அண்ணன்? எனக்குப் பிரியமாய்க் கடன் கொடுக்கும் பெட்டிக் கடைக் கிழவரும் மரணமா? (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 340-343) அடையாளம் என்பதற்கும் தன்னிலை என்பதற்குமான வேறுபாடு மிக முக்கியம். கவிஞருடைய அடையாளம் - தமிழ் மொழி, இனம், நாடு, பண்பாடு, இலக்கியம் இப்படியாக இருக்கலாம். ஆனால் அவருடைய தன்னிலை - அது ஒரு உலகப் பிரஜையாக மானுடத்தின் மடியில் மட்டுமே அடைக்கலமாகி இருப்பது. கலை, இலக்கியமும் மட்டுமே அதைத் நமக்குப் புரிந்து, உணரவைக்க முடியும். ஒன்பதாம் யோகம் வைகை நீர்த்தேக்கத்தின் வட புலத்தில்... ஓணான்களின் ஜென்மபூமியான கள்ளிக்காடுகளில்... கற்றாழைக் கதகதப்பில் பாம்புறங்கும் கரடுகளில்... இலந்தையும் நெருஞ்சியும் இந்திய ஜனத் தொகையாய் அடர்ந்திருக்கும் வனாந்திரத்தில்.. கால்சட்டை கிழிக்கும் காற்றின் வெடவெடப்பில் நான் மாடு மெய்த்திருக்கிறேன் மாடுமேய்த்தல் கல்வி மாடுமேய்த்தல் தவம் மாடுமேய்த்தல் ஞானம் மாடுகள் நுனிப்புல் மேய்கையில் நான் தமிழின் வேர்வரை மேய்ந்ததும் அங்குதான் அந்த வெயில் என் ஊனினை உருக்கியது அந்தத் தனிமை என் உள்ளொளி பெருக்கியது அது பார்வைக்குக் கூர்மைதந்தது மனதுக்கு ஒருமைதந்தது ஞானிகளே ஆய கலைகள் அறுபத்துநான்கா? அறுபத்து ஐந்து மாடுமேய்த்தல் யோகம் மொத்தம் எட்டா? ஒன்பதாம் யோகம் மாடுமேய்த்தல் (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 486,487,490) ஒரு கீழ்காட்டுத் தமிழனாக மாடுமேய்ப்பது எனும் வாழ்வியல் அனுபவத்தை, ஒன்பதாம் யோகமென உலக ஞானத்தின் பாற் பொதுமைப் படுத்துகையில் அடையாளமும், தன்னிலையும் இலக்கியத்தில் ஒரு மகோன்னதமான இடத்தைப் பெறுகின்றன. தங்களது கொண்டாட்டங்களுக்குச் சிறந்த வடிகாலாகவும், தங்களது மன அவலங்களை ஆழ்ந்து அனுபவிக்கவும் திரைப்படப்பாடல்கள் தமிழர்களுக்கு உதவிய அளவுக்கு வேறு எந்த இனத்திற்கும் உதவியதாகத் தெரியவில்லை. இத்திரைப்படப்பாடல்களில் கவிஞர் முகம், இசையமைப்பாளர் முகம், பாடகர் முகம் நடிகர் முகம் என்று நான்கு முகங்கள் காணக் கிடைக்கின்றன. பாடலுக்குக் கிடைத்த புகழ் முதல் முதலில் கவிஞருக்குச் சேர்ந்து கொண்டிருந்தது. பிறகு நடிகருக்கு என்றாகித் தற்போது இசையமைப்பாளர் அந்த அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். உண்மையில் இதன் முழு உரிமை கவிஞருக்குத் தான் உரியது. சங்க காலத்திலும் பாணர், விறலியர், கூத்தர் என எல்லோரது முகங்களே காலத்தை வென்று நிற்கின்றன. எக்காலத்திலும் தட்டிக் கொடுப்பவர்களும், தட்டிக் கேட்பவர்களும் அவர்கள் தாம். அவர்கள் முகமிழந்து கடைச்சரக்காகிப் போகாமல் இருப்பதற்கு அவர்களது தன்மான உணர்வும், பெருமிதமும் உதவவேண்டும். இது சாதியும் இனமும் மட்டும் சார்ந்து வருவதல்ல. தனக்கென்று ஓர் அடையாளம் இருக்கிறது என்று உணரும் எந்தத் தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் அமைந்து வர வேண்டிய அம்சங்கள் தான். இசை தன்னளவில் ராஜாவாக இருக்கலாம். ஆனால் மொழியோடு சேரும் போது அது தாளம் போட்டுத்தான் ஆகவேண்டும். இது இசைக்கு இழிவு இல்லை. மாறாக அது மொழியின் பலத்தை அதிகரித்து மொழியின் பாகமாக ஆகிறது. (வெங்கட் சாமிநாதன்) கவிதைகளை ரட்சியும் அதிகாலை சூரியன்கூட இன்னும் முகம் கழுவவில்லை வாசிக்க ஆளில்லை எனினும் வானப்புத்தகம் திறந்திருந்தது எனது தவச்சாலையாய் மொட்டைமாடி நட்டுவைத்த மெளனங்களாய் மரங்கள் அங்கங்கே புள்ளினங்களின் பூபாளம் கலை என்பது இயற்கை வாழ்க்கை இரண்டின் மொழிபெயர்ப்போ? "அப்பா உங்களைப் பார்க்க நிறையப்பேர்" என் மகன் கதவு தட்டிக் கனவுடைத்தான் கலைந்த தலை கசங்கிய லுங்கி முகத்தில் முள் பரவாயில்லை கவிதைக்கும் கவிஞனுக்கும் நிஜமே கம்பீரம் கீழே வந்தேன் முகங்கள் முகங்கள் முழுக்க முழுக்க முகங்கள் படித்த முகங்கள் பாமர முகங்கள் கனவு முகங்கள் கழுவாத முகங்கள் அன்பில் குழைத்த ஆர்வ முகங்கள் மழலை சுமந்த மாதர் முகங்கள் "வணக்கம்" ஓ! ஒரே பொழுதில் அத்தனை உதட்டிலும் பூப்பூக்க வைக்கும் அற்புத மந்திரமா "வணக்கம்"? "எந்த ஊர் நீங்க?" ஊர் சொன்னார்கள் "என்ன விஷயம்?" "ஒங்க பாட்டுன்னா உசுரு" லுங்கி சிறகானது "எல்லோருக்கும் டீ சொல்லுப்பா" தேநீரைப் போலவே சுடச்சுடக் கேள்விகள் "ஒரு பாட்டு எழுத எவ்வளவு நேரம்?" "அதிகபட்சம் அரைமணி நேரம்" "பாட்டுக்கு எவ்வளவு பணம் வாங்குறீங்க?" "வாங்கவில்லை கொடுக்கிறார்கள்" "பாரதிராஜா உங்களுக்குச் சொந்தக்காரரா?" "ஆமாம் - கலைச்சொந்தம்" "ரஜினியோடு சாப்பிட்டதுண்டா" "உண்டு" "கமல் டெலிஃபோன் பண்ணுமா?" "எப்போதாவது" "நடிகைகள் வருவார்களா?" "வந்திக்கிறார்கள் கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்கு" "உங்களைப் பற்றியும் கிசு கிசு வருகிறதே" "என் புகழுக்கு அது போதாது" "உங்களைத் தொந்தரவு செய்கிறோமா" "இல்லை தோகை, மயிலுக்குத் தொந்தரவா?" "உங்களுக்குப் பிடித்த பாட்டு" "காதல் சிறகைக் காற்றினில் விரித்து" "நீங்கள் நினைத்து நிறைவேறாமல் போன ஆசை?" "மொட்டை மாடியிலிருந்து குதிக்க வேண்டும்" "உங்கள் பலம் எது? பலவீனம் எது?" "பலம் பகை பலவீனம் சொந்தம்" "குறைந்த நாளில் நிறையச் சம்பாதித்த கவிஞர் நீங்கள் தான்" "இல்லை எனக்கும் மாசக்கடைசிகள் உண்டு" "எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" "மீண்டும் வணக்கம் சொல்ல விரும்புகிறேன்" சிரித்தார்கள் அலையலையாய் அழகழகாய்ச் சிரித்தார்கள் கலைந்தார்கள் கனவுகளாய் கலர்க் கலராய் கலைந்தார்கள் எல்லோரும் போனபின் அந்த அறையில் யாரோ முனகுவது கேட்டது திரும்பிப் பார்த்தேன் தன்னை யாரும் விசாரிக்கவில்லையே என்ற விசாரத்தில் கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது என் கவிதை (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 473-476) கவிதையை இதுகாறும் விசாரித்தாகிவிட்டது. இனித் திரை இசைப் பாடல்களுக்கு வருவோம். திரையுலகத்தில் பாடலாசிரியனுக்கு மட்டும் ஒரு தனித்தகுதி உண்டு. எந்த மொழி பேசுகிறவரும் எந்த மாநிலத்திலும் நடிகராகலாம்; எந்த மொழிப் படத்தையும் எவரும் இயக்கலாம்; தயாரிக்கலாம்; ஒளிப்பதிவு - ஒலிப்பதிவு செய்யலாம்; இசையமைக்கலாம்; பாடலாம். ஆனால், தாய்மொழி வேறாயினும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்த் தண்ணீர் குடித்துத் தமிழ்க் காற்றை சுவாசிக்காத யாரும் பாடலாசிரியனாக ஆகிவிடமுடியாது. தமிழ் மொழிக்கு மட்டுமல்ல; எம்மொழிக்கும் இது பொருந்தும். ஏனென்றால் ஒரு பாடலாசிரியன் என்பவன் மண்ணோடும் மக்களோடும் வளர்த்தெடுக்கப் படுகிறவன். அவன் பாடல்களின் ஊடாக சமூக வரலாறு படைக்கிறவன் அல்லது பதிவு செய்கிறவன். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 30) காற்றின் தேசம் எங்கும் - எந்தன் கானம் சென்று தாங்கும். காதல் ஓவியம் படத்தில் ஒரு பாடல் வரி. இது வெறும் சினிமாவுக்காக எழுதிய வார்த்தைகள் அல்ல. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்களைத் தன் வார்த்தைகளால் வசியப்படுத்தி வைத்திருக்கும் வைரமுத்து என்கிற பாடலாசிரியர் - கவிஞரின் ஆளுமையின் மிக முக்கியமான ஒரு பரிமாணத்தை - தன்னம்பிக்கையை - பிரபதிலிக்கும் வார்த்தைகள். கவிதை எழுத இனி நான் பிராயாசைப்பட வேண்டியதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுமளவுக்கு இவரது தன்னம்பிக்கை இவருடன் வாசம் புரிகிறது. (அரவிந்தன்) (பம்பாய் - மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது) மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனம் இங்கு பகைகொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே காற்றுக்குத் திசை இல்லை தேசம் இல்லை மனதோடு மனம் சேரட்டும் துளியெல்லாம் கைகோத்துக் கடலாகட்டும் கடலோடு கடல் சேரட்டும் துகளெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும் மண்ணோடு விண் சேரட்டும் விடியாத இரவொன்றும் வானில் இல்லை வாழ்வோடு ஒளிசேரட்டும் (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 515) வாழ்வியலுக்கான உதாரணம் மேற்சொன்ன அந்தப்பாடல் என்றால் அழகியலுக்கு கீழ்வரும் இந்தப்பாடல். (இந்தியன் - பச்சைக்கிளிகள் தோளோடு) பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம் வெயிலின் சுத்தம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம் வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - பெண்ணே நரை எழுதும் சுய சரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 538) பொழுது போக்குக்கு என்று மட்டும் தமிழ்ச்சமூகம் கலை வடிவங்களை ஒரு போதும் உண்டாக்கிக் கொண்டதில்லை. சமூக ஒருங்கிணைப்பு புராண அறிவு. பக்தி வடிவம், இசை, அனுபவம், இலக்கிய ரசனை என்பவற்றோடு சேர்த்துப் பொழுதுபோக்கும் ஓர் அம்சமாக இருந்தது. இரவு நேரத்தில் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு பார்ப்பதை எப்படிப் பொழுது போக்காக எடுத்துக் கொள்ள முடியும்? தெருக்கூத்து, உடுக்கடிப்பாட்டு, கணியான் கூத்து முதலிய வடிவங்கள் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவின. வாழ்க்கை பற்றிய பயத்தையும் உருவாக்கின. பயங்கள் மூலம் விழுமியங்கள் பெறப்பட்டன. இப்போது நிலைமை மாறிவிட்டது. தொழிற்புரட்சியின் மூலம் ஏற்பட்ட முதல் கேடு கலை வாணிகமாக்கப்பட்டதுதான். ஆரம்ப காலத்தில் புராண இதிகாசங்களும், தொன்மங்களும் சினிமாவின் பாடு பொருளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சினிமா அவற்றை உதறித்தள்ள வேண்டியதாயிற்று. தொழில் நுட்பம் மேலும் மேலும் வலிமை பெற்றுக் கொண்டே வர பாடலும் வசனமும் அதன் பலத்திற்கு அடிபணிய வேண்டியதாயிற்று. ஒவ்வொரு சமூகக் குழுவும் தனக்கென்று சில கலை வடிவங்களை உருவாக்கி வைத்திருந்தது. தொழில்நுட்பம் அதைச் சிதைத்தது. ஆனாலும் இந்தச் சமூகக் குழுக்கள் தோன்றிவரும் புதிய கலை வடிவங்களை ஏற்றுக் கொண்டன. இப்புதிய கலை வடிவங்களின் ஆக்கத்தில் அந்தந்த சமூகக்குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். உழவர் சமூகத்திற்கும் இது பொருந்தும். பொது மரபின் ஒரு பாகமாகவே இருந்து கொண்டு தனி மரபுகளையும் பேணிக் கொண்டு வந்த உழவர் சமூகம் மாறிவரும் கலை வடிவங்களோடு இணைந்தும், விலகியும் உறவு கொண்டிருந்தது. மரபிலிருந்து முற்றிலும் தங்களைத் துண்டித்துக் கொள்ளாமல் அதேசமயம் புதிய கலை வடிவங்களின் மயங்கு தன்மையிலிருந்தும் விடபட முடியாமல் புதிய அடையாளங்களைத் தேடிய ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக வெளிப்படுவர்தான் கவிஞர். (ப.கிருஷ்ணசாமி) (கருத்தம்மா - காடு பொட்டக்காடு...) காடு பொட்டக்காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு... கூழு சோளக் கூழு வெங்காயம் கூடச் சேரு தை மாசம் நெல்லுச் சோறு பூமி எங்க பூமி வானம் பாத்து வாழும் பூமி தூங்கிப் போச்சு எங்க சாமி அந்தி நேரம் வந்தா தலையெல்லாம் எண்ணிப்பாரு ஆடு மாட்டச் சேத்து எங்க வீட்டில் ஏழு பேரு ஆறு எங்க ஆறு அட போடா வெக்கக்கேடு மழை வந்தா தண்ணி ஓடும் மறுநாளே வண்டி ஓடும் கண்ணு பெத்த கண்ணு - எங் கன்னுக் குட்டியும் பொண்ணும் ஒண்ணு கஞ்சி ஊத்தும் எங்க மண்ணு (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 475) சிற்பியினுடைய 'சிகரங்கள் பொடியாகும்' என்ற கவிதை உள்ளடக்கத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணின் சோகக் கதையைக் கூறுவது. ஆனால் அதன் வடிவம் ஒரு வேதியியல் மாணவனுக்கு மட்டும் புரியக்கூடிய வடிவம். உடலாலும், உள்ளதாலும் தன் சமூகத்தைச் சார்ந்து நிற்காத எந்த எழுத்தும் இப்படி அடையாள மிழந்து போவது இயற்கை தான். கி.ராஜநாராயணன், தோப்பில் முகமது மீரான் என்ற இரண்டு உதாரணங்களில் இந்த அடையாளம் துலக்கம் பெறுவதைக் காணலாம். கவிஞருக்கு தன் சமூகத்தைப் பற்றிய ஒரு தெளிவு இருக்கிறது. அதன் ரசனை, அதன் தேவை என்பது குறித்த கணிப்பும் இருக்கிறது. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுகிறபோது தன்னுடைய சமூகத்தைப்பற்றிய அறிவோடு தொழில் நுட்பம் உருவாக்கி வைத்திருக்கிற 'ஒட்டுமொத்தச் சமூகத்தையும்' கணக்கில் கொண்டு தான் செயல்படுகிறார். அதன் அறியாமை, அதன் பலவீனம், அதன் ஆசாபாசங்கள் என்பவற்றோடு அதன் எதிர்ப்பார்ப்புகளும் அவருக்குத் தெரியும். (ப.கிருஷ்ணசாமி) "நீரில் பொருட்கள் எடை இழக்கும் நிலவின் மனிதன் எடையிழப்பான் காதலில் கூட எடையிழக்கும் கண்டு கொண்டேனடி உன்னாலே" என்பதுபோன்ற அறிவியல் உண்மைகளை இவர் அங்கங்கே இடைச் செருகலாகச் செருகி விடுகிறார். (டாக்டர் பேரா.சு.சண்முகசுந்தரம்) தன் ஆளுமைச் சிறப்புடன் புதுக்கவிதையின் பேச்சுப் பாணி, படிமத் தன்மை, நகரமயம் போன்ற தன்மைகளுடன் வாய்மொழிமரபு சார்ந்த நாட்டுப்புற இலக்கிய வளத்தையும் திரைப்படப் பாடல்களுக்குள் கொண்டு வந்தார். (வைரமுத்து இலக்கியத் தடம்) (கருத்தம்மா - தென்மேற்குப் பருவக்காற்று) தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலு சிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல் வெங்காட்டுப் பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டு விட செங்காட்டுச் சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க நீ என்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே காதல் என்ற மந்திரத்தின் மாயம் என்ன கல்லும் முள்ளும் இப்போது பூவானதே வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே. (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 474) கவிஞராக, பாடலாசிரியராக தமிழ் நாட்டில் அவர் வெற்றி பெறுவது எனக்குப் புரிகிறது. ஆனால் தேசிய அளவில் இத்தனை மொழிப் பாடலாசிரியருக்கு இடையே அவர்கள் யாருக்கும் புரியாத, தமிழ்ப் பாடலாசிரியருக்கு, பல மொழிப் பிராந்தியங்களிலிருந்து வரும் தமிழ் அறியாத நடுவர்கள் வைரமுத்துவைச் சிறந்த பாடலாசிரியர் என்று தேர்ந்தெடுத்தது எவ்வாறு? வைரமுத்துவின் தமிழ்ப் பாடல்களில் அவர்கள் என்ன கண்டார்கள்? என்ன ரசித்தார்கள்? (வெங்கட் சாமிநாதன்) ஆனால் வைரமுத்துவுக்குப் பரிசு கொடுத்துப் பெற ஏதும் இல்லை. அதுவும் பாடலுக்கு, வட இந்தியாவில் மிகப்புகழ் பெற்ற கவிஞர்களும் பாடலாசிரியர்களும் இருக்க, அவர்கள் பாடல்களைக் கேட்டு இந்தியத் துணைக்கண்டமென்ன, மத்திய ஆசியா என்ன, அனைவரையும் மனம்கிறங்கவைக்கும் பாடலாசிரியர்கள் இருக்க, மொழி புரியாத, தகுதி நிர்ணயிக்க இயலாத, தேர்வு நியாயம் சொல்ல இயலாத, அவர்கள் அறியாத தமிழ்மொழிப் பாடலைச் சிறந்த பாடலாகத் தேர்ந்தெடுக்க அவ்வளவு நடுவர்களையும் சரிக்கட்டுவது என்பது எந்தச் செல்வாக்குக்கும் அரசியல் சக்திக்கும் சாத்தியம் இல்லை. சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒருமுறை சரி, ஐந்து முறை சாத்தியமா? அவசியமா? அவர்களுக்கு ஏன் தேசிய விருது ஒரு முறை கூடக் கிடைக்கவில்லை? யாருக்காவது ஐந்து முறை கிடைத்துள்ளதா? இசையமைப்பாளர்களோ பரிசு பெறுவது எனக்குப் புரிகிறது, ஆனால் பாடல்? (வெங்கட் சாமிநாதன்) இதன் அடித்தளம், தன் படைப்பிற்குச் செலாவணி உண்டு, மக்கள் கவர்ச்சி உண்டு என்ற பலம். செல்வாக்கினால், அரசியல் பலத்தால், விருதுகள் பெறலாம்; பதவிகள் பெறலாம். ஆனால் மக்கள் விரும்பும் ஒரு திறனை யாரும் ஏதும் செய்து விடமுடியாது. வைரமுத்து பாடலாசிரியராகப் பெறும் வெற்றி அரசியல் வெற்றியல்ல. ஒரு குழு, பதவி திருப்தி அடைந்த வெற்றி அல்ல. மார்க்கெட்டினாலேயே, மக்கள் ஆதரவினாலேயே துலாக்கோல் நிலுவையாகப் புகழும் வரவேற்பும் தீர்மானிக்கப்படுவது திரைப்பட உலகம். இத்தனை ஒதுக்கீடு. கதாநாயகர்களில், கதாநாயகிகளில், இடம் வேண்டும் என்று போராட்டம் நடத்த முடியாது. கோட்டையிலிருந்து அரசு ஆணை பிறப்பிக்க முடியாது. தமிழ்த் திரைப்பட உலகம் தமிழருக்கே, வந்தேறிகளுக்கு இல்லை என்று கோஷம் எழுப்ப முடியாது. இப்படித் தொடமுடியாத இடத்தில் இருக்கிறது வைரமுத்துவின் பலம். (வெங்கட் சாமிநாதன்) இந்தி மொழிப் பாடல்களை இவர் தமிழில் செய்யும் போது நினைத்துப் பார்க்காத சிகரத்தை இவரது பாடல்கள் சென்றடைகின்றன. சான்றாக மணிரத்னம் இயக்கிய 'தில்சே' 'உயிரே' ஆனது. அதில் குல்சார் "முகமூடிப் பெண்ணே நீ எங்கே, உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று எழுதினார் வைரமுத்து. "பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன் கடல்மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்" என்று கவிதை செய்தார். "காற்றின் அலைவரிசை கேட்கின்றதா? இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா?" என்று நாயகன் வானொலி அறிவிப்பாளன் என்பதையும் மனதில் கொண்டு பாடலைக் கவிதைத் தளத்துக்கு உயர்த்திவிட்டார். இவரது பாடல்கள் பிறமொழிகளுக்குப் போகும்போது பிறமொழிக் கவிஞர்கள் மொழிபெயர்க்குபோது இவர் உயரம் தொடமுடியாமல் திணறுகிறார்கள். 'ஜீன்ஸ்' படத்தில் ஒரு காதல் பாடல், அதனை வைரமுத்து, "ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான்" என்று எழுதியுள்ளார். இதனை ஜாவேத் அக்தர் இந்திக்கு மொழி மாற்றம் செய்யும்போது 'ஒற்றைக்காலில் என்னால் தவம் செய்ய முடியாது' என்று சொல்லிவிட்டாராம். இவரது கற்பனையை வியந்து கரைந்து போனாராம். (டாக்டர் பேரா.சு.சண்முகசுந்தரம்) தமிழ்த் திரைப் பாடல் வரலாற்றில் ஐந்து விடி வெள்ளிகளை அடையாளம் கண்டு சொல்ல முடியும். பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் ஐந்து நட்சத்திரங்கள். இதில் வைரமுத்து ஐந்தாவது நட்சத்திலம் என்றாலும் ஏனைய நான்கு பேரையும் செரித்து அவர்களின் சத்தையும் சாரத்தையும் உள்வாங்கி ஒளிவீசம் துருச நட்சத்திரம் என்றால் மிகையன்று. (வைரமுத்து இலக்கியத் தடம்) கண்ணதாசனின் காலம் கொடுத்த பல்வேறு செளகரியங்களை இவர் பெற வாய்ப்பில்லாமல் போயிற்று இப்போது மிக நல்ல கதைகளும், நடிகர்களும், கதாபாத்திரங்களும் குறைவு. சிவாஜி, எம்.ஜி.ஆர், போன்ற மிகப் பிரம்மாண்டமானவர்கள் கோலோச்சிய காலத்தில் கொடி கட்டி வாழ்ந்தவர் கண்ணதாசன். இந்த இரண்டுங்கெட்டான் காலத்தில் திரைப்படத்தில் கவிதைப் பயிர் செய்வது கடினம். எனினும் வைரமுத்து தேசியம், திராவிடம், பொதுவுடைமை, பகுத்தறிவு போன்ற பாடல்கள் எழுத இயலாத காலகட்டத்தில் காதல் சமூகம் என்ற இரண்டையும் மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு வெற்றி பெற்று வருகிறார். அதுவும் 99.5 விழுக்காடு மெட்டுக்கு எழுதியவை என்பதும் குறிப்பிடத்தக்கது. (செங்கோட்டை - பாடு பண் பாடு) பாடு பண் பாடு - எங்கள் பாரதப் பண்பாடு விண்ணோடு காற்றோடு மண்ணோடு ஒளியோடு பண்பாடு இங்கேதான் பிறந்ததென்று கொண்டாடு மொழி பிறந்ததும் இங்கேதான் கலை பிறந்ததும் இங்கேதான் காதல் பிறந்ததும் இங்கேதான் கற்பு பிறந்ததும் இங்கேதான் வில்லவன் ராமன் சீதையை மீட்க வில்லூன்றியதும் இங்கேதான் அக்கினி தீர்த்தம் கோடித்தீர்த்தம் அத்தனை தீர்த்தமும் இங்கேதான் தாலி என்று சின்னக்கயிறு வேலி ஆவதும் இங்கேதான் தாரம் தவிர இன்னோர் பெண்ணைத் தாயாய் நினைப்பதும் இங்கேதான் சிற்பக் கலைகள் என்னென்ன சித்திரக் கலைகள் என்னென்ன நடனக் கலைகள் என்னென்ன நாதம் கீதம் என்னென்ன காளிதாசனும் கம்பநாடனும் கவிதை சொன்னது என்னென்ன ராஜ ரிஷிகளும் ஞான முனிகளும் வேதம் சொன்னது என்னென்ன விஞ்ஞானத்தால் முடியா இன்பம் ஞானம் தந்தது என்னென்ன இதயம் திறந்து சொல்லடி பெண்ணே இதைவிட சொர்க்கம் வேறென்ன. (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 556) 'இருவர்' படத்தில் வரும் "நறுமுகையே நறுமுகையே" பாடல், கவிஞரின் உச்சபட்சக் கவித்துவமும் புதுமையும் கொண்டது. திரைப்பாடப்பாடல் வரலாற்றிலேயே வெற்றிபெற்ற ஒரு சோதனை முயற்சி. சங்கப்பாடல் வரிகள் போலவே திரைப்படத்திற்கு எழுதிச் சாதனை செய்திருக்கிறார். ஓர் அழகுபட்ட செவ்வியல் தன்மை பாடல் முழுக்க விரவியிருக்கும். வெறும் திரைப்பட பாடலாசிரியர் அல்லர் இவர். கவிஞர் என்பது புரியும். "கண்ணுக்கு மைஅழகு கவிதைக்குப் பொய்யழகு அவரைக்குப் பூவழகு அவருக்கு நானழகு மழை நின்றபின்னாலும் இலை சிந்தும் துளியழகு அலை மீண்டும் போனாலும் கரைகொண்ட நுரையழகு இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தானழகு இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நானழகு ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூடப் பேரழகு என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு" இந்தப் பாடல் ஒரு நல்ல கவிதையாகவே திரண்டு உருக்கொண்டு விடுகிறது. கட்டுகளற்ற சுதந்திரம் தந்தால் திரை இசைப்பாடல்களையே இவர் கவிதையாக்கி விடுவார் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு இது. இப்படி நவரசங்களையும், நல்லபடி எழுதுகிற கவிஞர் இவர். ஒவ்வொரு சங்கீத வித்வானும். ஒவ்வொரு ராகத்தில் தேர்ந்தவனாக இருப்பான், சிறப்பாக, மற்ற ராகங்கள் வராது என்பதில்லை இதற்குப் பொருள். கவிஞர் வைரமுத்து காதல் ராகத்தில் தேர்ந்த வித்வான் என்பது ஒரு பார்வை இவற்றின் உணர்வுபூர்வம், கற்பனை வளம், அனுபவ அடர்த்தி, துடிகொண்ட குரல், புதுமை நயம், எளிமை, இனிமை, மெய்ம்மை - எல்லாமும் உள்ளபடியே பெறுமதி உடையவை. ஒரு நல்ல திரைப்படப்பாடலாசிரியன் தமிழ்ப் பெருவாழ்வில் கலந்துவிடுகிறான். திசையெட்டும் உள்ள தமிழ்ப்பெருங்குடி மக்கள் தலைமுறை தலைமுறையாக அவனைக் கொண்டாடிக் கொண்டேயிருப்பார்கள். (விக்ரமாதித்யன்) "மொழியும் மொழி சார்ந்த வாழ்க்கையும்தான் என் வாழ்க்கை" என்று 13 வயதிலேயே தீர்மானித்துவிட்டதாகக் கூறும் கவிஞர் தனது மொழி சார்ந்த யாத்திரையில் பதித்த முத்திரைகள் அனேகம் தமிழ்க் கவிஞர் - பாடலாசிரியர்களில் யாரும் இவரைப் போல மூன்று முறை உலகம் சுற்றியதில்லை. முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியதில்லை. ஐந்து முறை ஜனாதிபதி விருது வாங்கியதில்லை. (வைரமுத்து இலக்கியத் தடம்) (அந்தி மந்தாரை - சகியே நீ தான் துணையே) அடிமை இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்டு சுதந்திர இந்தியாவில் கைவிடப்பட்ட முதியோர் காதல் இது. காவிரி நதியும் ரெண்டாகக் கூடும் கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும் காலத்தின் கணக்கு யார் காணக் கூடும் நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு ஓடி வயசாச்சு உருமாறிப் போச்சு நினைப்பது மட்டும் தான் மாறாம இருக்கு என்னைச் சுற்றி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும் ஒன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும் காத்து மழை எதனாலும் கரையாத பாசம் கட்டையிலும் வேகாது கைதொட்ட வாசம். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 550) (என் சுவாசக் காற்றே - சின்னச் சின்ன மழைத்துளிகள்) மழை கவிதை கொண்டு வருது - யாரும் கதவடைக்க வேண்டாம் ஒரு கருப்புக்கொடி காட்டி - யாரும் குடை பிடிக்க வேண்டாம் - இது தேவதையின் பரிசு - யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம் - நெடுஞ் சாலையிலே நனைய - ஒருவர் சம்மதமும் வேண்டாம் அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய் நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழுக்கிறாய் நீ கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 692) தன்னையொத்த உயிர்க் கூட்டத்தையும், பயிர்க்கூட்டத்தையும் அவற்றின் இருப்பையும். வாழ்வையும் ஏற்றுக்கொள்வதே கலாசாரத்தின் ஆணிவேராகும். கற்றுத் தரப்படாத, தன்னியல்பான இந்த ஏற்பே மனிதனை மனிதனாக்குகின்றது. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்' வாடச் செய்து அவனைக் கவிஞனாகவும் ஆக்குகின்றது. காலம் (Time) வெளி (Space) என்ற இரண்டு பரிமாணங்களின் பின்னணியில் மனிதவாழ்வின் அசைவுகளைப் புரிந்து கொண்ட கவிஞர்களுக்கே இது சாத்தியமாகும். கவிஞர் வைரமுத்துவிற்கு இது சாத்தியமாகியிருக்கிறது. பாடலாசிரியர் என்ற எல்லையைக் கடந்த வைரமுத்து கவிஞர்தான். 'கூடு' கவிதை போன்ற 'பேர் சொல்லும் பிள்ளைகள்' அவருக்கு நிறையவே இருக்கின்றன. (டாக்டர் தொ.பரமசிவன்) (அசல் - சிங்கம் என்றால் எம் தந்தைதான்) சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் கதாநாயகன் தந்தையின் பெருமை பேசுவதாக ஒரு பாடல். படத்தில் கேட்டால், கதாநாயகன் தன் தந்தைக்குப் பாடுவதாகவும் - தனியே கேட்டால் நடிகர்திலகம் சிவாஜியை நினைவூட்டுவதாகவும் வரிகளை அமைத்தார் கவிஞர். பாடலைக் கேட்டு நடிகர் திலகத்தின் குடும்பமே ஆனந்தக் கண்ணீர் சிந்தியது - எனக்கு மிகப் பிடித்த அவரது திரை இசைப் பாடல் அது – சிங்கம் என்றால் எம் தந்தைதான் செல்லம் என்றால் எம் தந்தைதான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் எம் தந்தைதான் எம் தந்தைதான் எல்லோருக்கும் அவர் விந்தைதான் விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே வேல்வந்து விளையாடும் அவர் சொல்லிலே அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே அவர் பேரைச் சொன்னாலே பகை நீங்கும் அழியாத உயிர்கொண்ட எம் தந்தையே ஆண்வடிவில் நீ என்றும் எம் அன்னையே வீரத்தின் மகனென்று விழி சொல்லுமே வேழத்தின் இனமென்று நடை சொல்லுமே நிலையான மனிதன் எனப் பேர் சொல்லுமே நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே உன் போல் சிலரின்று உருவாகலாம் - உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா எப்போதும் தோற்காது உன் சேனைதான் இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான் கண்டங்கள் அரசாளும் கலைமூர்த்தி தான் கடல்தாண்டிப் பொருள்ஈட்டும் உன் கீர்த்திதான் தலைமுறைகள் கழிந்தாலும் உன் பேச்சுதான் தந்தை எனும் மந்திரமே எம் மூச்சுதான். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 1134) பெயரில் என்ன இருக்கிறது என்பார்கள்? எல்லாமே உண்டு என்பதைப் பார்த்தோம் – வைரமுத்து பற்றி நினைக்கும் போதே முதலில் எனக்கு குறிப்பாகப்படுவது வைரமுத்து என்ற பெயர்தான். இவ்வளவு புகழ் பெற்ற மனிதர் அதுவும் கவிதை உலகில். அதிலும் பார்க்கத் திரைப்பட உலகில் கோலோச்சுபவர், எப்படி வைரமுத்து என்ற பெயரை விடாப்பிடியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்? சினிமா உலகிலும் சரி, கவிதை உலகிலும் சரி கவர்ச்சிகரமான, புதுமையான. சட்டென யாருடைய கவனத்தையும் கவரும், வேறு எந்த சிந்தனையிலோ, காரியத்திலோ ஈடுபட்டிருந்தாலும் சிண்டைப் பிடித்து இழுத்து, 'இதோ பார் இந்தப் பெயரைக் கவனி' என்று கட்டளையிடும் பெயராக அல்லவா வைத்துக் கொள்ள அவண்டும்? இந்த இரண்டு துறைகளிலும், கவர்ச்சிகரமான பெயர்கள் புனைந்து கொள்ளாதவர்கள் மிகக்குறைவு. முத்து, பொன்னுசாமி, அழகிரிசாமி, ராமையா, செல்லப்பா, என்ற சாதாரணப் பெயர்கள் (இவர்கள் எல்லாம் யார்? பலசரக்குக்கடை எடுபிடிகளா, சினிமா கொட்டைகையில் சோடா விற்கும் பையன்களா?) உலவும் கதைத்துறையிலே கூட, புதமைப்பித்தன் என்ற தேர்வில் அமெரிக்க விளம்பர யுக்தி படிந்திருப்பதாக புதுமைப்பித்தனே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்; தான் அதிகம் பேர் கவனத்தை ஈர்த்து நினைவில் நிலைத்து விடக்காரணம் தன் புதுமையான பெயர்தான் என்று ஞானக்கூத்தன் ஒருமுறை சொன்னார். இந்தப் பெயர் சொன்ன மாத்திரத்திலேயே, இவர் ஏதோ வித்தியாசமான கலை ஈடுபாட்டில் இருப்பவர் என்று சொல்லியாகிவிடுகிறது, இதில் பெயரே ஒருவகைக் கருத்து வெளிப்பாடு (Statement) ஆகிவிடுகிறது. (வெங்கட் சாமிநாதன்) (ராவணன் - கோடு போட்டாக் கொன்னு போடு) கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்லப் பெத்தா வீரனடா சல்லிக் கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா செத்த கெழவன் எழுதி வச்ச ஒத்தச் சொத்து வீரமடா கோடு போட்டாக் கொன்னு போடு வேலி போட்டா வெட்டிப் போடு எங்க காத்து மீன் சுட்ட வாசம் அடிக்கும் எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒறைக்கும் வத்திப்போன உசுரோடு வாழ்வானே சம்சாரி - ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி எட்டுக்காணி போனா - அட எவனும் ஏழை இல்ல மானம் மட்டும் போனா - நீ மய்க்கா நாளே ஏழை மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம் தான் சிய்யான் காட்டத் தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான் கோடு போட்டாக் கொன்னு போடு வேலி போட்டா வெட்டிப் போடு. (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 1122) ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரும், சிறையிலிருந்த போது உலகின் முதல் நாவல் என்ற கருதப்படுகின்ற "டான் குவிக்சோட் டி லா மான்ச்சா" வை எழுதிய டான்குவிக்சட் (Don Quixote) தொடங்கி, Ulysses எனும் மகத்தான நாவலை எழுதிய James Joyce வரை, தலைசிறந்த நாவலாசிரியர்களின் பலமே - அவர்களது இலக்கிய மொழி "என்ன சொல்கிறது" என்பதைவிட "என்ன செய்கிறது" என்பதுதான்.

தொடர

வத்தலக்குண்டில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் திறனாய்வு விழாவில் ஆற்றிய உரை

தமிழச்சி தங்கப்பாண்டியன்

மூன்றாம் உலகப்போர் என்ற புதினத்தின் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையையும், இந்த மண்ணையும் சற்றே புரட்டிப் போட்டிருக்கின்ற கவிஞர் வைரமுத்து அவர்களுடைய இந்த புத்தகத் திறனாய்வு விழாவில் பங்கேற்பதில் மிக மகிழ்ச்சி. மூன்றாம் உலகப்போர் எனும் இப்புதினம் உலகின் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டபின்பு, எம் மண்ணினுடைய இந்தக் கருப்புக் கவிஞன் இதே போல உலக அரங்கத்தில் அமர்ந்திருக்க, அவரிடத்தே சீனாவைச் சேர்ந்தவர்களும், ஜப்பானைச் சேர்ந்தவர்களும், ஐரோப்பியர்களும், ஆங்கிலேயர்களும் கையெழுத்து வாங்குகின்ற காலம் வெகுதூரத்திலில்லை. அதை மெய்ப்பிக்கும்வண்ணம், இந்த மூன்றாம் உலகப்போர் வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் வெயிடப்பட்ட ஐம்பத்திஐந்து நாட்களுக்குள் ஐந்தாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. தமிழ்ப் பதிப்பக உலகில் இப்படி ஒரு சாதனையைக் குறுகிய காலத்தில் வேறு எவரும் எட்டியதில்லை. அந்த பெருமைக்குக் கவிஞர் உரியவர் என்றால் அந்த பெருமையை ஊர் கூடிப் பங்குபோட்டு, உளமாற மகிழ நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம். ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரும், சிறையிலிருந்த போது உலகின் முதல் நாவல் என்ற கருதப்படுகின்ற "டான் குவிக்சோட் டி லா மான்ச்சா" வை எழுதிய டான்குவிக்சட் (Don Quixote) தொடங்கி, Ulysses எனும் மகத்தான நாவலை எழுதிய James Joyce வரை, தலைசிறந்த நாவலாசிரியர்களின் பலமே - அவர்களது இலக்கிய மொழி "என்ன சொல்கிறது" என்பதைவிட "என்ன செய்கிறது" என்பதுதான். இந்த மண்ணிலுள்ள மக்களுடைய சுவாசத்தை தன்னுடைய மூச்சிலும், அவர்களுடைய பேச்சு மொழியை தன்னுடைய ரத்தத்திலும், அவர்களுடைய கவுச்சி மணத்தைத் தன்னுடைய இலக்கிய மொழிநடையிலும், பொதிந்திருக்கின்ற கவிஞரது மூன்றாம் உலகப் போர் என்கின்ற புதினம் என்ன சொல்கிறது என்பதை நான் உங்களிடையே இப்போது பகிரலாம். ஆனால் அது என்ன செய்கிறது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் தனியே அமர்ந்து தங்களுக்காகவே பயணித்து, அதனைப் படித்துப், பின் அனுபவித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது வெறும் அச்சுகோர்த்து, எழுத்துவடிவிலே கொடுக்கப்பட்ட புத்தகம் மட்டும் அல்ல. இது உங்களுடைய முப்பாட்டன்களுடைய வீச்சறிவாள்; இது உங்களுடைய பூட்டிகளால் கட்டிவைக்கப்பட்ட களத்துமேட்டுக் கம்பு; இது உங்களுடைய அப்பத்தாவினுடைய அந்த ஆட்டு உரல்; இது உங்களுடைய அம்மத்தாவின் சுருக்கு பை; இது உங்களுடைய அக்காமார்களும், மதனியார்களும் ஒருவருக்கு ஒருவர் முழங்கையால் குத்திக்கொள்ளும் உலக்கை; இது உங்கள் தகப்பன்மார்களின் குழுதாடி; இது உங்களது ஆத்தாமார் தங்களுடைய கண்ணீரையும், மகிழ்வையும் மசாலாவோடு சேர்ந்து அறைத்த அம்மிக்கல்லும், திருகைக்கல்லும்! இது தகவல்களை மட்டும் முன்னெடுத்து செல்கின்ற, ஆராய்ச்சிகள், முடிவுகள் மட்டுமே நிரம்பிய தொகுப்பு அல்ல. இது முழுக்க முழுக்க இந்த மண்ணிலே பிறந்து, இந்த மண்ணிலே வாழ்ந்து, இந்த மண்ணிலே நடந்து, படுத்து, உழன்று கொண்டிருக்கின்ற, இன்னமும் இந்த மண்ணுக்காக உயிர் கொடுக்கவும் சித்தமானதொரு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற வேளாண் விவசாயி ஒருவருடைய வாழ்க்கைப் பதிவு. வேளாண் விவசாயி என்றால் அதில் நீங்களும் அடக்கம், நானும் உண்டு. எந்த புத்தகத்திற்கும் நீங்கள் அதற்குரிய முழுமையான விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் கொடுப்பதெல்லாம் அதற்கான அச்சுக் கூலியும், காகித விலையும் மட்டும்தான். குறிப்பாக, இந்த மூன்றாம் உலகப்போர் புதினத்திற்கான விலை - வாங்கிய காகிதத்திற்கும், அச்சுக்கூலிக்கும்தான். கவிஞர் நம் முன்பு இதன் மூலம் வைத்துள்ள வாழ்க்கை விலையற்றது. மதிப்பு மிக்கது. அந்த வாழ்க்கை மூலம் சொல்லப்பட்டிக்கின்ற செய்தி இந்த உலகம் முழுவதற்குமானது! இந்தியா என்பது ஒரு வல்லரசு என்று நாம் பல்வேறுவிதமாக அறிவித்தாலும், நாம் இன்னும் வல்லரசு கிடையாது. நாம் இன்று வரை வளர்கின்ற, ஒரு மூன்றாம் உலக நாடு தான் என்பதைத் தான் இந்தப் புதினம் இரத்தமும், சதையுமான எளிய, உண்மையான மனிதர்கள் மூலம் உறுதிப் படுத்துகின்றது. ஒரு மூன்றாம் உலகப் பிரஜைக்கான உறுதி, திடம், மொழி, பண்பாடு, திமிர், கலை, இலக்கியச் செறிவு, முதுசொம் - இவற்றை மொத்தமாக ஒரு சங்கிற்குள் ஊற்றிய ஊழிப் பெருஞ்கடலெனக் கவிஞர் இங்கே பதிவு செய்திருக்கிறார் - அதன் உள்ளடக்கம், உருவம் - இவற்றின் வழியாக! மயாகோவ்ஸ்கி என்கின்ற உலகப் புகழ்பெற்ற ரஷ்ய கவிஞர் கவிதைகள் பிறப்பது எவ்வாறு என்று எழுதி வெளியிட்ட ஒரு சிறிய வெளியீட்டில் சொல்கின்றார் - "ஒரு படைப்பாளிக்கு, ஒரு கலைஞனுக்கு, ஒரு கவிஞனுக்கு சமூக ஆணை என்பது மிக மிக முக்கியம். சமூக ஆணை என்றால் என்ன? சமூக ஆணை என்பது சமூக யதார்த்தத்தில் கலைஞனின் தலையீடு ஆகும். அரசியலில் அறிவியல் சோசலிசம் அப்படியோ அது போலக் கலையில் சமூக ஆணை." ‘சமூக ஆணை’யும் மென்மையான மானுட உணர்ச்சிகளும் எதிரும் புதிருமாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு மயாகோவ்ஸ்கியின் வாழ்க்கையும் கவிதைகளுமே சாட்சி. வாழும் ஒரு உதாரணமாக இந்தப் புதினத்தின் மூலம் வெளிப்படுகிறார் கவிஞர். இது போர் பற்றியதொரு புதினம். மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். புவி வெப்பமயமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் போர் என்கிற கருவைச் சுமக்கிறது இப்புதினம். போர் என்பது தமிழர்களுக்கு புதிதானதொன்றல்ல. ஆனால் இது கண்ணுக்கு தெரிந்த எதிரிகளிடம் மோதுகின்ற போர் அல்ல. மிக நுட்பமான அரசியல், தட்பவெட்பப் போர். தமிழன் இதுகாறும் சந்தித்திராத, புதிய மிகச் சிக்கலான போர். அப்போரை எதிர்கொள்பவன், பலியாகின்றவன், ஒரு அப்பாவி தெற்கத்தித் தமிழ்நாட்டு விவசாயி மட்டுமல்ல - இந்திய விவசாயிகள் அனைவரும் தான்! நீட்ஷேவின் மிகக் கடைசியாக அவர் எழுதிய வரிகளாகக் கீழ்வருபவற்றைச் சொல்வார்கள்: "எனது பழக்க வழக்கங்களும், அதைவிட இன்னும் எனது இயல்புணர்ச்சிகளின் பெருமையையுமே அடியாழத்தில் எதிர்த்துக் கலகம் செய்யும் ஒரு கடமை எனக்கு இருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்! ஏனென்றால், நான் இப்படி, இப்படித்தான் இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் எதுவாக இல்லையோ, அதுவாக என்னை ஆக்கிக் குழப்பாதீர்கள்!" - இதை அவர் எழுதிய ஒரு நூற்றாண்டுக்குப் பின் கவிஞர் எழுதுகிறார் : "இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன்; பத்துமாதங்கள் எழுதினேன். எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தைப் பதிவு செய்தேன். மண்ணில் முளைத்த மனிதர்கள் - உணர்ச்சியில் ஊறிய மொழி - சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள் - அனுமதிக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் நிகழும் கற்பனை - நான் நடந்து பழகிய பூகோளம் - எல்லாரும் அறிந்த, ஆனால் எழுதப்படாத எளியவர்களின் சரித்திரம் இவற்றின் கூட்டுத் தொகுப்புதான் மூன்றாம் உலகப் போர்"" - தான் எதுவோ, தன் வேர் எதுவோ அதனைத் தெளிவாக முன்வைத்து ஊன்றி நடக்கிறார் கவிஞர். அவர் கலகக்காரரில்லை - ஆனால் பாசாங்கற்ற வாழ்க்கையை முன்வைப்பவர். "இலக்கியத்தின் உதவியோடு தன் பூர்விகத்தை அறிந்து கொள்வது ஏன் மனித நடவடிக்கையாக இருக்கக் கூடாது?" - என்பது வரலாற்றில் மானிடவியலாளர்களின் மிக முக்கியமான கேள்வி. தனது வேர் குறித்து கவிஞரது பதிவு: "‘ஜா’ வராது நம்ம சனங்களுக்கு. ‘ராஜா’ ன்னு சொல்லமாட்டாக; ‘ராசா’ன்னு தான் சொல்லுவாக. ரோஜான்னு சொல்லச் சொல்லுங்க; ‘ரோசா’ தான் வாயில வரும். ‘எம்ச்சியார்’, ‘சிவாசி’ன்னு சொல்லித் தான் பழக்கம் நம்ம நடிகர்கள. பேரு வச்சிருக்கான் பாரு பேரு - வாயிலேயே நொழையாத பேரு மூளையிலயா ஏறப் போகுது? பேருன்னா வெறும் பேரா? அதுல ஊரும் மண்ணும் ஒட்டியிருக்கணுமா இல்லையா? பேருல நம்ம ரத்தமும் வேர்வையும் கலந்து ஒரு வாடை அடிக்கணுமா இல்லையா? வம்சவரலாறு இருக்குடா ஒரு பேர்ல. பேருங்கறது வெறுஞ் சத்தமா? சரித்திரமடா. ஒட்டாத பேரு வச்சா ஓட்டுமா உதட்டுல? வெள்ளைக்காரன் எவனாச்சும் விருமாண்டின்னு பேரு வைக்கிறானா? டி.வி.யில சொல்றாகல்ல அமெரிக்க சேனாதிபதி ஒபாமான்னு - அந்தாளு பொண்டாட்டி பேரு ஓச்சம்மா-ன்னு வச்சா நல்லாயிருக்கும்ல.. வச்சிருக்கானா? வட நாட்ட எடுத்துக்க. பெரியக்கான்னு பேரு வைக்குமா பிரியங்கா? தண்டுச்சாமின்னு வப்பானா டெண்டுல்கரு? அவுக ஊரு மண்ணு பரம்பரையை ஒட்டித்தான வச்சிருக்காக. நாம மட்டும் மாறிப் போனா மூதாக்கமாரு விட்ட மூச்சு வீணாப் போகும்டா" - எழுதி வைக்க வேண்டும் இந்தத் தலைமுறைக்கு கவிஞரது இந்த வரிகளை ஒரு ஆத்தி சூடியென ! சொல்லித்தர வேண்டும் இந்த உணர்வை நமது இளைய தலைமுறைக்கு ஒரு விழிப்பூட்டலென!. ஏன் நம் மண்ணில் செல்லப்பாண்டி என்றும், தங்கப்பாண்டி என்றும், சின்னப்பாண்டி என்றும் பெயர் வைக்கிறார்கள்?. ஏன் கருப்பையா, மூக்கைய்யா, வெள்ளைச்சாமி, முத்துப்பேச்சி, வனப்பேச்சி என்று பெயர் வைக்கிறார்கள்? அவர்கள் அனைவரும் நம்முடைய பாட்டன், பூட்டன்மார்கள். நம் மண்ணில் ஏதோ ஒரு காலத்தில் உலவி, ஊர்க் காற்றில் கலந்தவர்கள், தமது ரத்தத்தை வியர்வையென நமக்காகக் தந்திருப்பவர்கள். ஒரு காலக்கட்டத்தில் ஊருக்காக, ஏதோ ஒரு பகை தீர்க்க, குறை களைய, நல்ல விஷயத்திற்காகத் தன் உயிரைக் கொடுத்த குடும்பத்திலுள்ள ஒருவரின் பெயராக அவை இருக்கலாம்!. ஆகவே ஒரு பெயரைச் சொல்லும்போது வரலாற்றின் உண்மை அதில் தகிக்கிறது. கவிஞர் இதனைச் செய்வதின் மூலமாக மிக முக்கியமான மனித நடவடிக்கையினை - தனது பூர்விகத்தை நிலை நிறுத்துவதை, ஒரு இலக்கிய செயல்பாடாகக், கலையின் வழியாக இங்கே முன்னிறுத்துகிறார். ‘மாதாம் பொவார்’ என்பது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு நாவல். உலகமெங்கிலும் தடைசெய்யப்பட்ட அந்த புகழ்பெற்ற நாவலை எழுதி முடிக்க அதன் ஆசிரியர் க்யுஸ்தாவ் ஃப்ளோபெர் (1821-1888) நாலரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் எனப்படுகிறது. அது சுய வாழ்க்கை வரலாற்று விதமான நாவல் அல்ல. எனினும்கூட நாவலாசிரியர், கதாநாயகி எம்மாவுடன் தன்னை மிக அதிகமாகவே ஐக்கியப்படுத்திக் கொண்டார். அவள் விஷம் அருந்தி இறந்துபோனதும் இவர் உடல் நலம் கெட்டுப்போய் பல நாட்கள் அவதியுற்றார் என்பார்கள். கவிஞரது இந்த நாவலுடன் அவர் அணுஅணுவாக வாழ்ந்திருக்கிறார். மிக அபாரமான உழைப்புடன் நுணுக்கமான தகவல்கள், தரவுகள் சேகரித்திருக்கிறார். அவற்றை வாழ்வின் குருதி கலந்து உயிர்ப்போடு சமைத்திருக்கிறார். நாவலில் வருகின்ற சின்னப்பாண்டி, முத்துமணி, கோபாலசாமி நாயக்கர், எமிலி, என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன்னுள் செரித்து, வெளிக் கொணர்ந்துள்ளார். அவை தத்தமது மொழி, வெளிகளில் உலவினாலும் - உணர்வு ஒன்றே தான்! அடையாளம் என்பதற்கும் தன்னிலை என்பதற்குமான வேறுபாடு மிக முக்கியம். கவிஞருடைய அடையாளம் - தமிழ் மொழி, இனம், நாடு, பண்பாடு, இலக்கியம் இப்படியாக இருக்கலாம். ஆனால் அவருடைய தன்னிலை - அது ஒரு உலகப் பிரஜையாக மானுடத்தின் மடியில் மட்டுமே அடைக்கலமாகி இருப்பது. கலை, இலக்கியமும் மட்டுமே அதைத் நமக்குப் புரிந்து, உணரவைக்க முடியும். கவிஞரது மொழியில், சொல்வதென்றால் இந்தப் படைப்பு, "உள்ளுர் மனிதர்களின் நாவலினால் பேசப்படும் உலகக்குரல், விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும். வாசிப்பு - ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி, தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு". ஒரு அடையாளமாகத் தமிழன், விவசாயி, மூன்றாம் உலகப் பின்காலனியப் பிரஜை எனப் பயணிக்கிறார் கவிஞர் இந்தப் புதினம் முழுவதிலும். ஆனால் ஒரு தன்னிலையாக அவர் தன்னைத் தெளிவாக உணர்ந்ததை புதினத்தின் நிறைவுப் பகுதி எடுத்துக்காட்டுகிறது. மானுடம் எனக்கு மட்டுமல்ல, எல்லா கலை, இலக்கியக் காரர்களுக்கும் கொடுத்திருக்கும் தெளிவும், தீர்க்கமும், பேரன்பின் முத்தமும் இதுதான். அந்தப் பேரன்பு முத்தத்தின் மொத்த உருவம் இப்புதினத்தின் நாயகன் சின்னப்பாண்டி. Hamlet, ஷேக்ஸ்பியரின் தலைசிறந்த நாடகத்தின் பிரபல கதாபாத்திரம். Hamlet என்பது அந்த இளவரசனைப் பற்றிய கதை மட்டும் தானா, அல்லது தந்தையை இழந்த மகனது பற்றிய கதை மட்டும் தானா? இல்லை - அவற்றைத் தாண்டிய உலகளாவிய தன்மையை, Hamlet எனும் பாத்திரமும், ஷேக்ஸ்பியர் எனும் கதை சொல்லியும், தங்களது நெருக்கடிகள், மற்றும் சிந்தனைகளின் மூலம் முன்வைத்து, அவற்றில் ஈடுபாடுகொள்ள வாசகர்களை அழைக்கிறார்களே - அதுதான், அந்த பொதுத்தன்மைதான், அது மட்டுமேதான் ஒரு படைப்பின் வெற்றி! அதைச் சாதித்தது சமகாலத்துச் சிந்தனை, உலகளாவிய மொழி என்கிற இரண்டு மந்திரங்கள் தான்! கருத்தமாயி, சின்னப்பாண்டி இவர்களுடைய கதைகளின் மூலம் கவிஞர் சாதித்ததும் இதைத்தான். அட்டனாம்பட்டியை அட்லாண்டாவிற்கு அழைத்துச் சென்றது மட்டுமல்ல, அட்டனாம்பட்டியை உலகளாவிய ஒரு கவனத்தை ஈர்க்கின்ற இடமாக, மாற்றத்திற்கு ஆட்படுகிற மையப்புள்ளியாக இடம் பெயர்த்து, ஒரு எளிய மனிதரின் வாழ்வு மூலம் ஒரு உலகப் படைப்பை நோக்கி நகர்ந்திருக்கிறார் கவிஞர். எனக்கு பெனடிக் ஆண்டர்ஸன் இந்த புதினத்தைப் படிக்கையில் நினைவிற்கு வருகிறார். "இலக்கியச் செயல்பாடுகளில், குறிப்பாக மூன்றாம் உலகச் சேர்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களில், ஒரு தேசியச் செயல்பாடு உண்டு" என்கிறார் அவர். "உலகளாவிய தன்மையை வழங்கல், மற்றும் குறிப்பிட்ட மொழியை வாசிக்க இயலும் எல்லாரையும் பார்த்துப் பேசுதல் ஆகிய இரண்டின் இணைப்புக்குச் சக்தி வாய்ந்த ஒரு தேசிய செயல்பாடு இருக்கிறது" என்பது அவர் கூற்று. கவிஞரும் இந்த மிகச் சிறந்த புதினத்தின் மூலம் ஒரு மிக முக்கியமான சக்தி வாய்ந்த தேசியச் செயல்பாட்டை முன்னெடுக்கிறார். "மறுக்கப்பட்ட பொருளாதாரத்தை, சுரண்டப்படும் வாழ்க்கையை இந்திய உழவர்களுக்குக் மீட்டுக் கொடுத்தால் போதும், அவர்கள் வாழ்க்கை நிமிர்ந்துவிடும். இங்கே மண் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது, மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்கிற இவரது கூற்று தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானது. தனித்து ஒலிப்பது. மிகத் தேவையானதொரு தேசியச் செயல்பாட்டைத் திடமானதொரு தமிழ் தேசியக் குரலோடு முன்னெடுத்து செல்கிறது இந்தக் குரல். "இரண்டு பணிகள் உள்ளன இந்தியாவிற்கு; விவசாயத்தை மீட்டெடுத்தல், அல்லது விவசாயத்திலிருந்து விவசாயியை மீட்டெடுத்தல்" எனும் இந்தக் குரல் உலகளவிலும் ஒலிக்க வேண்டும். கவிஞர் தனது இந்தப் புதினத்தின் மூலம் புதியதொரு விவசாயச் சமுதாயத்தினை, இயற்கைக்கு மீண்டும் திரும்புகின்ற வேளாண் புரட்சியை முன்னெடுக்கிறார். புரட்சி என்ற சொல் நீர்த்துவிட்ட காலமிது என்றாலும் - ஒரு நிலக்கரிக் கவிஞன் முன்னெடுக்கிற வைரப்புரட்சி இது! மேற்குத் தொடர்ச்சி மலையை மாதம் ஒரு முறையாவது பார்க்காவிட்டால் இந்தப் படைப்பாளிக்குப் பைத்தியம் பிடித்துவிடுமாம். "மேற்குத் தொடர்ச்சி மலை எங்கள் மண்ணின் முது பொருள் மட்டுமல்ல முதற் பொருளும் கூட" என்கிறார். நம் மேற்கு தொடர்ச்சி மலையை பற்றி இப் புதினம் தருகின்ற அத்தனை செய்திகளையும் பார்க்கின்றபோது, மேற்குத் தொடர்ச்சி மலையினை சில வருடங்களுக்கு முன்பு, நம் நாட்டினுடைய புராதான சின்னமாக, இந்திய தொல்லியில் துறை அறிவித்திருக்கின்ற அந்த செய்தி நினைவிற்கு வருகின்றது. அந்த முக்கியத்துவத்தைக் கவிஞர் ஒரு அரசியல் கிண்டலோடு நம்மிடம் இவ்வாறு பகிர்கிறார் - "கங்கா யமுனா நிதிகளைப் போல் இவை கவனிக்கப்படவில்லை. அசோகர் சக்கரவர்த்திக்குள்ளும், அக்பருக்குள்ளும் எங்கள் சேர-சோழ-பாண்டியர்கள் மறைக்கப்பட்டது போல் இமயமலையின் இடுக்குகளில் எங்கள் மேற்குத் தொடர்ச்சிமலை புதைக்கப்பட்டுவிட்டது" - இது மிகத் திடமானதொரு தமிழ்த்தேசியக் குரல்! பால்சாக் (Balzac) என்கின்ற ஃப்ரென்ஞ் நாவலாசிரியர் பற்றி எங்கல்ஸ் (Engels), "நான் கண்டறிந்த எழுத்தாளர்களில் மிகச் சிறந்த யதார்த்த எழுத்தாளர் இவர்தான்" என்பார். பால்சாக்கின் மானிட இன்பியல் எனும் புதினத்தை வாசித்த எங்கல்ஸ், "அந்தக் கால கட்டத்தைப் பற்றி ஒட்டு மொத்தமாக, உத்தியோகபூர்வமான வரலாற்று ஆசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், புள்ளி விவர நிபுணர்கள் ஆசிரியர்களிடமிருந்து தெரிந்து கொண்டதை விட அதிகமாக அந்த நூலிலிருந்து கற்றுக் கொண்டேன்" என்கிறார். கடந்த இருபத்தி ஐந்தாண்டுகளாக உலகின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கின்ற புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் அல்லது விவசாயத் தற்கொலைகள், அவற்றின் மூலகாரணம் குறித்துப் பல செய்திகளை நாம் அறிவோம். அரசு அறிக்கைகள், தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்திகள், நண்பர்களது உரையாடல், அறிஞர்களது ஆராய்ச்சிகள் - இவை சொல்லித் தீர்த்த விஷயங்களை, சொல்ல முடியாத வேதனையை இந்த ஒரு புதினம் இம் மண்ணின் மக்களுடைய வாழ்க்கையைச் சொல்வதன் மூலம், அதன் வலியைச் சுட்டுவதன் மூலம் செய்திருக்கிறது. இது ஒரு உலகத் தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டிய புதினம் என்பதற்கு இதனை விட வேறென்ன வேண்டும்? உலகளவிலேயே இந்த புதினத்தையொத்த வேறொரு புதினம் உண்டு. Roots : The Saga of American Family எனும் அப்புதினம் 1978 இல் வெளிவந்தது. ஒரு 18ம் நூற்றாண்டு ஆப்ரிக்க அடிமையாக தனது மிக இளவயதில் அமெரிக்காவிற்கு விற்கப்பட்ட அதன் கதாநாயகனது - அந்த கறுப்பின மனிதனது அடிமை வாழ்வும், வரலாறும் ஒரு மிக மிகப் பெரிய பண்பாட்டுப் புரட்சியை அமெரிக்காவில் ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நிறவெறி மற்றும் அடிமைத்தனத்தின் மீது மிகப் பெரிய சம்மட்டியாக விழுந்தது அந்தப் புதினம். வெளிவந்த அந்தக் காலக்கட்டத்தில், அமெரிக்காவில் மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சி வெடிக்க அது காரணமாக இருந்தது. அதுபோலவே, கவிஞரின் மூன்றாம் உலகப் போர் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அரங்கில் எடுத்துச் செல்லப்பட்டால் மிக மிகக் காத்திரமானதொரு பண்பாட்டு மாற்றத்தை, அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகச் சமூக, அரசியல், பொருளாதார சூழல்களை மாற்றுகின்ற படைப்புகளாகச் சில புதினங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவதாகச் சொல்லப்படுவது, வெளிவந்த காலத்தில் மிக அதிகமாக விற்பனையான Hariat Peacher Stove (ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்) என்பவரின் புதினமான டாம் மாமாவின் குடில். அடிமைத் தனத்திற்கு எதிரான வெறுப்பை உருவாக்கி அமெரிக்க சுதந்திரப் போர் நிகழ அப்புதினம் வழி வகுத்தது. விவசாய இழப்பை தேசிய இழப்பாகக் கருத வேண்டும் எனும் கவிஞர் சொல்கிறார் - "ஆண்டுக்கு 41 ஆயிரம் மருத்துவர்களையும் 9 லட்சம் பொறியாளர்களையும் உண்டாக்கும் இந்தியா எத்தனை வேளாண்மைப் பட்டதாரிகளை உருவாக்கி விவசாய வெளிகளில் விட்டிருக்கிறது? இந்தியாவை நான் நேசிக்கிறேன்; அதனால் இவ்வளவு சிந்திக்கிறேன்" - மிகத் தொன்மையான விவசாய வாழ்வின் வீழ்ச்சியை, அதற்கான காரணத்தை அத்துயரிலிருந்து மீண்டு வெளிவரும் வழிகளை முன்வைக்கிறது இப்புதினம். பன்னாட்டு முதலைகளுக்கு எதிரானதொரு வெறுப்பை உருவாக்கி, விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான புதியதொரு போரை இப்புதினம் துவக்கலாம். இரண்டாவதாக சொல்லப்படுவது, 1931இல் வெளிவந்த Pearl S.Buck எழுதிய The Good Earth. சீன விவசாயிகளது துயரங்களை, மகிழ்ச்சியை, வீழ்ச்சியைப் பதிவு செய்த மிக முக்கியமான புதினம் அது. Pearl S.Buck எனும் அமெரிக்கப் பெண்மணி சீனாவில் பிறந்து, ஆங்கில மொழியில், சீன விவசாய மக்களது வாழ்வினை, மிக அற்புதமாகப் பதிவு செய்து அதற்காக நோபல் பரிசையும் பெற்றார். அவரது The Good Earth உலகை உலுக்கிய மற்றுமொரு சிறந்த புதினம். 1938இல் இந்தப் புதினத்திற்காக Pearl S. Buck-ற்கு நோபல் பரிசு கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, சீனக் கிராமம் ஒன்றில் வாழ்ந்த விவசாயக் குடும்பத்தின் வீழ்ச்சி பற்றிப் பேசுகின்ற அந்தப் புதினம் தான் - அமெரிக்கர்களை 1931-ல் இரண்டாம் உலகப் போரின் போது சீனாவைத் தனது நட்பு நாடாகச் சேர்த்துக் கொள்ளவைத்தது. மூன்றாம் உலகப் போரின் கருத்தமாயியைப் போல அதன் பிரதான பாத்திரம் வாங் லூ. அமெரிக்காவின் Best Seller ஆக இன்றுவரை இடம் பிடித்துள்ள இப்புதினம் முப்பத்தி மூன்று அந்நிய மொழிகளிலும், கிட்டத்தட்ட ஏழு வகையான சீன மொழிபெயர்ப்புகளிலும் வெளிவந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக எழுதப்பட்ட இப்புதினத்தில். ஒரு சீன விவசாயினுடைய வாழ்க்கை எவ்வாறு சூதாட்டத்திலும், தற்கால அரசியலிலும், விஞ்ஞான வளர்ச்சியாலும் தலைகீழாக மாறிப்போனது என்பதைப் படித்த அமெரிக்கர்கள் மனமுருகி அக்காலக்கட்டத்தில் ஒரு முக்கியமான முடிவை எடுத்தனர். இரண்டாம் உலகப்போரின் போது சீனாவைத் தங்களுடைய நேச நாடாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அம்முடிவு. வரலாற்று முக்கியத்துவமான அந்த முடிவை அன்று எடுக்க செய்தது Pearl S. Buck -ன் The Good Earth எனும் அப்புதினம்தான். அதுபோல நம்முடைய இந்திய அரசாங்கம், ஐ.நா. சபைக்கோ அல்லது புவி வெப்பமயமாதல் (Gobal Warming) குறித்த உலக அரங்கிற்கோ உரையாட, விவாதிக்கச் செல்கையில், மிக முக்கியமானதொரு முடிவை எடுக்க வைக்க இந்த மூன்றாம் உலகப் போர் வழி வகுக்கலாம். அதற்கான வல்லமை அதன் உயிர்ப்பு மிக்க பக்கங்களில் பொதிந்துள்ளது. மிகச் சுலபத்தில் மொழிபெயர்க்க முடியாத புதினம் இது. இடையில் புகுந்து வடிகட்ட முடியாத அடர்த்தியான பண்பாட்டு மொழி இதன் நடை. நம்முடைய பயிர்களுக்கு வரும் நோய்களை ஓரிடத்தில் பட்டியிலிடுகிறார் கவிஞர் : "நானும் மூணு தலைமுறையா மண்ணக் கிண்டியே மண்ட காஞ்சு கெடக்கேன். இன்னைக்கு எந்த வெள்ளாமையாச்சும் முழுசா வீடு வருதாப்பா? எங்கிட்டுருந்துதான் வந்துச்சோ வெள்ளாமைக்கு இத்தனை சீக்கும்? வாழை போட்டா ‘கு(i)ழ நோய்’ தாக்குது. கரும்பு போட்டா ‘செந்தா(i)ழ அடிக்குது’ தென்னைய நட்டா ‘மண்டைப் புழுவு’ விழுந்து குருத்து அழிஞ்சு போகுது. ‘செவட்டை’ அடிச்சா செத்தே போகுது தக்காளி, கத்தரி. வெண்டை நட்டா ‘கத்தாழைச் சீக்கு’. சக்கர வள்ளிக்கெழங்கு நட்டா ‘அரக்கு’ அடிக்குது. ‘காம்பழுகல்’ நோய் வந்து மொண்ணையாப் போயிருது மொளகாச் செடி. கணக்குப் போட்டுப் பாத்தா விதைச் செலவுக்கு வந்து சேரல வெள்ளாமை. எங்க போயிச் சொல்ல? நம்ம பக்கம் இருந்த கடவுளே கட்சி மாறிருச்சு"" இதனை எவ்வாறு, எந்த மொழியில், மொழி பெயர்க்க இயலும்? அம் மொழிபெயர்ப்பினது மூல, வட்டார வழக்குப், பண்பாட்டுச் சொற்களின் அடிக்குறிப்புக்களே ஒரு துணை நூலாகிவிடுமே! ‘நான் என்பது எனக்கு நிகழும் கதையே’ என்கிறார் பின்நவீனத்துவவாதி பார்த். கவிஞரின் கூற்று இது - "இந்தப் படைப்பில் புண்ணில் ஒழுகும் ரத்தமும் கண்ணில் வழியும் கண்ணீரும் இரவல் உணர்ச்சியல்ல - பெரிதும் என்னுணர்ச்சி. என்னைப் பெருமை செய்யும் சில படைப்புகளைப் போன்றதல்ல இது; மண்ணைப் பெருமை செய்யும் படைப்பு; மானுடத்திற்கான திடக்கண்ணீர்" - அவரென்பதும், நாமென்பதும் அவரவருக்கான கதைதான் என்பதை மெய்ப்பிக்கிறது கருத்தமாயின் வாழ்க்கை! பிறரது சரிதையின் ஊடாக தனது சுயத்தையும் வெளிப்படுத்தும் புதினம் ஒரு வகை என்றால், கருத்தமாயினது சரித்திரத்தின் மூலம் மானுடத்திற்குப் புதியதொரு சுயத்தைக் கட்டமைக்க முயல்கிறது மூன்றாம் உலகப் போர். அவ்வகையில் இது வெகு சனத்தின் சரித்திரம் - ஆனால் மானுடத்தின் சுயம். சாக்ரடீஸ் தனது உரையாடல் ஒன்றில் "பேச்சுதான் உண்மையானது. எழுத்து பொய்யானது. எழுத்து என்பது கெட்ட ஞாபகம் (ஈவில் மெமரி). பேச்சு என்பது சட்டபூர்வமான வாரிசு. எழுத்து சட்டபூர்வமான தகப்பன் இல்லாமல் பிறந்த மகன் (பாஸ்டர்ட்)" என்கிறார். "நான் பேசும்போது உயிர்ப்புடன் பேசுபவனாக இருக்கிறேன். என் பேச்சுக்கு நான் தகப்பனாக இருக்கிறேன். ஆனால் நான் எழுதும் பிரதியோ நான் இல்லாமல் கூட இருக்கிறது. அது தனது தந்தையுடன் எவ்விதத் தொடர்புமின்று ஒரு சட்ட விரோத வாரிசைப் போல் தனியே இருக்கிறது. பேச்சு உயிருள்ளது. எழுத்தோ இறந்தது. அதனால்தான் எழுத்து இறந்தவர்களின் கல்லறைகளின் கல்வெட்டுகளில் உறைந்த நிலையில் காணப்படுகிறது" என்றெல்லாம் சாக்ரட்டீஸ் எழுத்தை இழித்துப் பேசுகிறார். சாக்ரட்டீஸிற்கு ஒரு வேளை இந்த புதினத்தை படிப்பதற்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் - பேச்சு மொழி வாயிலாகத் நம் மூதாதையர், தாய், தந்தையர், பாட்டிமார்கள், பங்காளிகள், தோழிமார்கள், பேசிய வட்டார வழக்கு மூலமாக, எழுத்தை எவ்வளவு உயிர்ப்பு உள்ள ஒரு மொழியாக, சாகாவரம் பெற்றதாக, ஒரு இலக்கிய வடிவமாக மாற்ற முடியும் என்கின்ற ரசவாதத்தை இந்த புதினத்தின் மூலம் அவர் உணர்ந்திருப்பார். மேற்சொன்ன தன் கருத்தையும் மறுபரிசீலனைக்கு அவர் உட்படுத்தி இருக்கலாம்! Arthur Hailey இன் Roots, Pearl S.Buckஇன் The Good Earth, Peacher Stove இன் டாம் மாமாவின் குடில், ஆகியவற்றோடு வைத்துப் ஒப்பு நோக்க வேண்டிய படைப்பு இப்புதினம் என்றாலும், உணர்ச்சி வசப்படாமலோ, ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தாமலோ, தனியாக அமர்ந்து அழுது, சிரிக்காமலோ, இந்த புதினத்தைத் தள்ளி நின்று objective ஆகத் திறனாய்வு செய்தல் கடினம். இம்மண்ணில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, மண்ணோடு வளர்பவளான எனக்கு இது தரும் வாசிப்பு அனுபவம் மிக நெருக்கமான, அந்தரங்கமான நெகிழ்வையும், வலியையும், இயலாமையையும் தருகின்றது. திறனாய்வதை விட, இதனை உய்த்து உண்ணத்தான், அரற்றி அமரத்தான் எனக்கு விருப்பமதிகம். இப்புதினத்தின் பிரதான கதாபாத்திரமான கருத்தமாயி சொல்வார் - "மொதத் தேக்கங்கண்டு இருக்கே இதான் எங்கப்பன் சாமி - உனக்கு மாமன். ரெண்டாம் தேக்கங்கண்டு இருக்கே அதான் எங்காத்தா சாமி - உனக்கு மாமியா. இந்த மூணாவது புங்கங்கன்னு இருக்கே அதான் எந்தங்கச்சி சாமி - ஒனக்கு நாத்தனா. குலசாமிக மூணும் கூடவே வரும். தொட்டுக் கும்பிட்டுக்க" - விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அந்த மூன்று கண்டுகளோடு சேர்த்து, இந்தப் புதினத்தையும் வைப்போம்! எமது சிலிக்கான் பள்ளத்தாக்கின் இளையதலைமுறைக்கு நம் விவசாயப் பழங்குடி முன்னோரின் மூத்த ஆவணமாக கவிஞரது இப்படைப்பைப் பரிசளிப்போம்! * * * * *

தொடர

வைரமுத்து என்னும் மொழிக் கலைஞன் (தமிழாற்றுப்படை ஓர் ஆய்வுப்பார்வை)

தமிழச்சி தங்கப்பாண்டியன்

”என் தாய்மொழி நாளை மடிவதாக இருந்தால் நான் இன்றே மடிந்துவிட விரும்புகிறேன்” என்று தன் தமிழ்ப்பற்றைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஓங்கியுரைத்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. தன் தமிழ்கொண்டு தமிழுக்குத் தொண்டு செய்தவர்…செய்துகொண்டிருக்கிறவர். எதிர்காலத்திலும் எதிர்பாராத இலக்கியங்கள் செய்து சிகரத் தமிழுக்குச் சிறப்பு செய்வார். பிறந்தநாள், விருதுநாள், பாராட்டுநாள், மகிழ்ந்தநாள்,துக்கநாள் என எல்லா நாள்களிலும் தமிழ் செய்தவர். காய்ச்சல் நாள்களிலும் கவிதை செய்தவர். இவரிடம் செவ்வியல் இலக்கியத்தின் செறிவையும் காணலாம். நாட்டார் இலக்கியத்தின் நுட்பங்களையும் காணலாம். அற்பப்பொருளையும் நுட்பக்கவிதையாய்த் தீட்டும் நுண்மாண் நுழைபுலம் கொண்டவர். இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த கவிஞனாய் அடையாளப்பட்டவரும் ஆறு தேசிய விருதுகளை அள்ளிக் குவித்தவரும் சாகித்ய அகாடமி விருதை இடக்கரத்திலும் பத்மபூசன் மரியாதையை வலக்கரத்திலும் ஏந்தி வந்தவரும் தன் எழுத்தையே எரிதழலாக ஏந்தியவரும் ஒருவரே. அவரே காலப்பெட்டகம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். விழா நாயகனான அவரையும் அவையையும் வணங்கி மகிழ்கிறேன். ’’எழுதிய படிதான் நடக்கும் எல்லாம் விதிவசம் என்பதை விட்டுவிடு இளமையுன் தோள்களில் இருக்கும்போதே எதுநிசம் என்பதை எட்டிவிடு படி படி படி அதுவே வெற்றிப்படி ஒரு காக்கா உன் தலைக்குமேல் பறப்பதை உன்னால் தடுக்க முடியாது அதுவே உன் தலையில் கூடு கட்டுவதை உன்னால் தடுக்க முடியும்!” என்று இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியும் பட்டுவேட்டி பற்றிய கனாவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது என்று விடுதலையை விமர்சித்தும் எந்தப் பேய்மழைக்கும் உண்டு ஒரு கடைசித்துளி எந்த இரவுக்கும் உண்டு ஒரு சூரிய முற்றுப்புள்ளி எங்களுக்கும் விடிந்தது என்று கடைக்கோடி மனிதனுக்கும் நம்பிக்கையூட்டியும் ”கட்டாகிப் போச்சு கரண்ட்டு. இருட்டுக்குள்ள முங்கிக் கெடக்கு ஊரு. சத்தத்தத் தொடச்சு வெளிய போட்டுட்டு இப்ப நான் மட்டும்தான் இருக்கேன்னு சொல்லுது இருட்டு. இருட்டை எதுத்து என்னால நிக்க முடியலையேன்னு அழுதுகிட்டிருக்கு கருத்தமாயி வீட்டு லாந்தரு…” என்று மூன்றாம் உலகப் போரில் முற்போக்கு இலக்கியம் படைத்தும்…காற்றழுத்த தாழ்வுநிலை காலத்திய அடைமழையைப் போல தொடர் இலக்கியச் சாதனை செய்யும் கவிப்பேரரசுவின் அடுத்த படைப்புதான் தமிழாற்றுப்படை. காற்று நுழைய முடிந்த இடமெல்லாம் கவிஞரின் குரல்வழி இந்நூலின் சாரம் ஒலியாகச் சென்றிருக்கிறது. ஒளி நுழைய முடிந்த இடமெல்லாம் நூலாக இவரின் எழுத்து சென்றிருக்கிறது. அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு சேர்க்கும் அரிய முயற்சியே இந்த நூலாக்கம். இளைஞர்க்குத் தமிழை ஆற்றுப்படுதுவதே இந்நூலின் நோக்கம். இளைய தலைமுறைக்கும் இணைய தலைமுறைக்கும் தமிழை அறிமுகப்படுத்தும் பெரிய பொறுப்புணர்வே இந்நூல். ஈராயிரமாண்டு காலத் தமிழைச் சுண்டக் காய்ச்சிச் சுருங்கச் சொல்லும் யுகப்பணியை யாரோ செய்வார் என்றில்லாமல் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்ற இளங்கோவடிகளைப் போல கவிஞரே களத்தில் நின்று தாமே செய்த தார்மீகப் படைப்புதான் ரத்தமும் சதையுமாய்ப் புத்தம்புதிதாக உதித்திருக்கும் இந்தத் தமிழாற்றுப்படை. கவிப்பேரரசுவுக்கு என் செம்மாந்த இருபத்துநான்கு பாராட்டுகள். பாராட்டு - 1 தொன்மை மொழியாம் தமிழை வியந்தோத வந்த கவிஞர், ஒல்காப் புகழ் தொல்காப்பியனிருந்து தொடங்குகிறார். முதலில் தொல்காப்பியத்தின் காலம் குறித்துப் பல்வேறு ஆய்வாளர்கள் கூறிய கருத்துக்களைப் பட்டியலிடுகிறார். இதில் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 400 என்று கூறியுள்ள கால ஆராய்ச்சிக் கலகக்காரர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் மீது ஒரு சின்ன கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளமை சிறப்பு. தொல்காப்பியத்தின் காலம் குறித்து ஆயிரம் கருத்து வேறுபாடுகள் பூமிப் பந்தெங்கும் நிலவினாலும், அது தாய்த் தமிழுக்குப் பொற்காலமே என்பதில் அறிஞர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு நிலவ வாய்ப்பில்லை என்று கவிஞர் நம்பிக்கையை நட்டுச் செல்கிறார். இயற்கையிலிருந்து கருவானதாலும் இலக்கணம் என்னும் அறிவியல் கொண்டு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருப்பதாலும் மட்டுமே தமிழ் இன்றளவும் உயிர்த்திருக்கிறது என்று தமிழ் நிலைப்புக்குத் தக்க காரண காரியம் கற்பித்துச் செல்கிறார். மொழி ஓர் உயிரி. அதிலும் தமிழ்மொழியை ஒரு பேருயிரி என்று குறிப்பிட்டுள்ளமை அபாரம். பொருளதிகாரம் குறித்து மிக நுட்பமாகச் சிந்தித்திருக்கின்ற கவிப்பேரரசு அவர்கள், அது தமிழர் வாழ்க்கைக்கான இலக்கணம் என்கிற அழுத்தத்தை இன்னும் சற்று கொடுத்திருக்கலாம். ஏனெனில், உலகில் எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் சொன்னது. தொல்காப்பியன் மட்டுமே வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்னவன். பாராட்டு – 2 குறிஞ்சித் திணை பாடுவதில் வல்லவன் கபிலன். மலையும் மலைசார்ந்த நிலக்காட்சியை உணர்ச்சி பொங்கச் செய்யுளாக்கியவர் கபிலர். 99 பூக்களைப் பட்டியலிட்டதிலேயே கபிலரின் பாண்டித்தியமும் குறிஞ்சிநிலக் காதலும் புலப்படுகிறது. தலைமகன் வாய்மையில் பொய்மை தோன்றினால் அது திங்களுள் தீத்தோன்றியதுபோல…(குறிஞ்சிக்கலி: 41) என்கிற இந்த ஒரு வீரிய உவமை போதும் கபிலனை உலகக் கவியென்று ஓதிட. மேலும், பாரி மகளிரின் மீது காட்டிய பரிவும், இயற்கையோடு இயைந்து வாழாவிடில் மனிதராசிக்கே இறுதியேற்பட்டுவிடும் என்ற சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் கபிலரின் மனிதநேய மேன்மைகள். இப்படி பாசத்தோடு பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார். இருக்காதா பின்னே ஒரு கபில கர்வம்? அதனால்தானே கவிப்பேரரசு தன் இரண்டாம் மகனுக்குக் கபிலன் என்று பெயர் சூட்டியுள்ளார். பாராட்டு – 3 ஒளவையார் என்று சொல்லாமல் அவ்வையார் என்றெழுதியதேன்? ஒளகாரம் தவிர்த்து அகரம் கொண்டு சிகரக்கிழவியின் பெயரெழுதியதேன்? என்று கவிஞரிடம் ஒரு வினா வைக்கிறேன். வாழ்வாங்கு வாழ்ந்து சொல்லாலும் செயலாலும் அறம்காத்த மூதாட்டியார் அனைவரையும் ஒளவை என்று விளிப்பதே தமிழ்மரபு என ஒளவைக்குப் புத்தர்த்தம் சொல்லிப் பெண்மூலத்திற்கே பொன்முலாம் பூசியுள்ளமை கைத்தட்டலுக்குரியது. பிற்கால ஒளவையின் பிற்போக்குத்தனத்தை விளக்கியுள்ளமையும் சிறப்பு. தண்ணீரில் அம்பு கிழித்த தடம் அடுத்த நொடியே அழிந்துவிடும் என்பது போன்ற சொற்பயன்பாடுகளைக் கவிஞர் அழகாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். பாராட்டு – 4 கவிப்பேரரசின் வள்ளுவக் காதல் சிலிர்க்க வைக்கிறது. தன் சவத்தின் மீது வள்ளுவம் போர்த்தப்பட வேண்டும் என்ற வரத்தை உயிலாகக் கேட்கிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லும் சமஸ்கிருதத்தின் தர்மம் வேறு; அறம், பொருள், இன்பம் என்று மட்டும் சொல்லும் வள்ளுவ தர்மம் வேறு என்பதனை ஏழையின் வைராக்கியத்தைப் போல வீரியமாகப் பதிவு செய்துள்ளார். கெளடில்யர் படைத்த அர்த்தசாஸ்திரத்தை விட, திருவள்ளுவரின் திருவள்ளுவம் அர்த்த சத்து நிறைந்தது என்பதைக் கவிஞர் ஆணியடித்துக் கூறியுள்ளார். கல்வேர்களால் தாங்கப்படும் மலைபோல வள்ளுவர் ஓங்கி நிற்கிறார் என்ற இடத்திலும் (வடமொழிக் கவி பர்த்ருஹரி அவநம்பிக்கை விதைக்க… வள்ளுவனோ ஊழையும் உப்பக்கம் காண்போம் என நம்பிக்கை விதைக்க…) மனிதனின் நம்பிக்கையைக் குலைப்பதென்பது கல்லீரலில் ஆணியடிப்பது போன்ற கடுஞ்செயலாகும் என்ற இடத்திலும் வள்ளுவனுக்கு வாரிசாக வைரமுத்துவைப் பார்க்க முடிகிறது.பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வள்ளுவத்தை நிலா முட்ட நிமிர்த்திப் பிடித்திருக்கிறார். பாராட்டு – 5 இறை வாழ்த்தில் தொடங்காமல் இயற்கை வாழ்த்தில் தொடங்கிக் காப்பியம் படைத்த புரட்சித் துறவி இளங்கோவடிகள். ஐம்பெருங்காப்பியங்களின் ஆரம்பப் புள்ளி சிலப்பதிகாரம். Of the people For the people By the people என்று ஜனநாயகத்திற்கு விளக்கம் தந்த ஆபிரகாம் லிங்கனுக்கு மூத்த முன்னோடியாக, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று சொன்ன இளங்கோவடிகளைக் கொள்ளலாம். இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்தின் பெயரிலும் நாடு என்ற பின்னொட்டில்லை. தமிழ்நாட்டிற்கு மட்டுமே தகைசான்ற அந்தப் பெருமையுண்டு. அந்தப் பெருமையின் தொடக்கம் இளங்கோவடிகள். அதாவது, அந்தப் பதத்தை, ”இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய…” என்று தன் சிலப்பதிகாரத்தில் முதன்முதலாகப் படைத்துக் காட்டுகிறான். சிலப்பதிகாரம் இல்லாவிடில் தமிழ்நாடு என்ற பெயருமில்லை. சிலப்பதிகாரம் இல்லாவிடில் தமிழிசையும் சாத்தியப்பட்டிருக்காது. கண்ணகியைச் சொல்ல வந்த கவிஞர் புகைபடிந்த பூவாய்…மழையூறிய சித்திரமாய்…சொல்லோவியம் தீட்டிச் செல்கிறார். கண்ணகி முலை திருகியெறிந்து மதுரையெரித்த சர்ச்சைக்கு ஒரு வீரிய விளக்கம் தந்துள்ளமை நன்று. ஞாயிறு போற்றுதும்; திங்கள் போற்றுதும்; மாமழை போற்றுதும்….வைரமுத்து போற்றுதும். பாராட்டு – 6 சமயத்தைச் சலவை செய்து சைவத்தைச் சிகரத்தில் வைத்தவர் திருநாவுக்கரசர் என்கிற அப்பர் பெருமகனார். சமணத்தின் கொட்டமடக்கும் கொள்கை கொண்டு வென்றவர். வடமொழியை வாகைசூடி, தமிழைச் சமயபீடத்தில் சஞ்சரிக்க வைத்த சமயப் போராளியே அப்பர். அச்சத்தைக் கருவறு… பொறுமை சூடு…பெறுவாய் பீடு என்றிருந்த அப்பர் வாழ்வை அப்பழுக்கற்றுச் சாறுபிழிந்து தந்திருக்கிறார். இத்தகைய ஒரு ஆத்திக ஞானியை, நாத்திக சல்லடை கொண்டு சலித்தெடுத்திருக்கிறார் கவிஞர். பாராட்டு – 7 சமயம் சமைத்து வைத்த கட்டுப்பெட்டித்தனங்களைத் தகர்த்தவர் ஆண்டாள் என்னும் பெண்ணாழ்வார். ஆண்டாள் என்ற கருத்தாக்கம் எப்படியிருப்பினும் ஒரு பெண்ணாக எண்ணியதை எண்ணியாங்கு எய்தியது பெருஞ்சாதனைதான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளை ஆழ்வாராக அணுகுவதில்தான் சிடுக்குகள். அவரைக் கவிதாயினியாக அணுகுவதில் எந்தச் சிராய்ப்பும் இல்லை. ஓர் ஆய்வாளர் என்ற அளவில் தன் கருதுகோளுக்கு நேர்மையாகவே கவிஞர் கடைசிவரை நின்றமை போற்றுதலுக்குரியது. பாராட்டு – 8 பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பாராட்டப்பட்ட பழங்கவி. காதலையும் களத்தையும் கடவுளையும் பாடிய கவிகளுக்கு நடுவில். பேய்களைப் பாடிப் பெருமை கொண்டது வியப்புதான். கற்பனைப் பேய்களைப் படைக்க செயங்கொண்டாரிடம் ஒரு பேய்க்கற்பனை மூண்டிருக்கிறது. குலோத்துங்கனின் வரலாற்றையும் கருணாகரத் தொண்டைமானின் பின்புலத்தையும் எடுத்தோதியுள்ளமை கவிஞரின் வரலாற்றுத் தேடலுக்குச் சான்றாகிறது. ஆயிரம் போர்களில் வென்றாலும், ஆயிரம் யானைகளை அமரிடைக் கொன்றாலும் அமைதியே அனைவரின் ஆர்வமும் என்று கவிஞர் கச்சிதமாகச் சொல்லிச் செல்கிறார். 96 வகைச் சிற்றிலக்கியத்தில் பரணியைத் தேர்ந்தெடுத்தது ஏன்? என்ற வினாவைக் கவிஞர் முன் வைக்கிறேன். பாராட்டு – 9 ’கம்பன் கவிதைக் கொம்பன்’ என்றால் அது மிகையில்லை. கம்பனைப் போன்ற கவி காலத்தின் கொடைதான். உலகின் எந்தக் கவியோடு ஒப்பிட்டாலும் கம்பனின் புலமை தலைமை தாங்கும் தரங்கொண்டதே. அதனால்தான் மகாகவி பாரதிகூட கம்பனைக் கொண்டாடினான். வால்மீகியே கம்பனைத் தோள்மீது தூக்கிக் கொண்டாடுவான் என்பது மிகையில்லை. ஷேக்ஸ்பியரோடும் வால்மீகியோடும் கம்பனை உரசிப் பார்த்து ஒரு ஒப்பில்லா ஒப்பிலக்கியம் படைத்திடக் கவிப்பேரரசு முயன்றுள்ளமை மெச்சத்தக்கது. பாராட்டு – 10 தமிழ் மூவாயிரம் படைத்த திருமூலனே மனித உடலெனும் எந்திரக் கூட்டின் ரகசியங்களை மந்திரமாகச் சொன்னவன். ”உடம்பார் அழியில் உயிரார் அழிவர்” என்ற உன்னத மருத்துவம் செப்பியவன். மூச்சுக்காற்றின் நதிமூலம் ரிஷிமூலம் கூறியவன். ஆழ்ந்து சுவாசித்தால் வாழ்ந்து கிடக்கலாம் என்ற ஆயுள் அறிவியலை எடுத்துரைத்தவன் திருமூலன். படுத்திருந்தால் நுரையீரல் எவ்வளவு காற்று குடிக்கும்; உட்கார்ந்திருந்தால் நுரையீரல் எவ்வளவு காற்று குடிக்கும்; நடக்கும்போது நுரையீரல் எவ்வளவு காற்று குடிக்கும் என்று கவிஞர் தரும் காற்றுக்கணக்கெல்லாம் நம்மைத் திகைக்க வைக்கிறது. பாராட்டு – 11 கால்டுவெல் என்னும் இந்த அயர்லாந்து அறிஞன் வந்திறங்கியிருக்காவிட்டால், ஆரிய மாயைக்கு முன் திராவிடம் தேய நேர்ந்திருக்கும். இடையன்குடி தேடி, இந்த இங்கிலாந்து சாமி வாராதிருந்திருந்தால் தமிழின் தடம் முடமாகிப் போயிருக்கும். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமே ஐரோப்பியர்களின் அறிவுக்கண்ணை அகலத் திறந்தது. தெற்கின் திருக்கூட்டத்தைக் காட்டுமிராண்டிகள் என்றே வடக்கின் வந்தேறிக் கூட்டம் ஓயாமல் நாக்குநீள வாக்குமூலம் தந்தது. கால்டுவெல்லின் காரியத்திற்குக் கண்கசிய நன்றி சொல்லும், கவிப்பேரரசின் அமுதூற்றுத் தமிழ் சிலிர்க்க வைக்கிறது. பாராட்டு – 12 ”அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி…” என்று சொல்லி இனி ஒளியே வழியென புதுவிதி சமைத்த வள்ளலார் காலம் தந்த கொடை. அதிலிருந்து பிரிந்த கிளைகள்தான் நாத்திகப் பெரியாரும் கவித்துவ பாரதியாரும் ஆவார். காவிக்கு மாற்றாக வெண்மையைத் தந்த ராமலிங்க அடிகளாரின் அருட்பாவை மருட்பா என்று ஏசினார்கள். சேற்றை வாரிப் பூசினார்கள். எத்தனை இடர் படர்ந்தாலும் வடலூரில் பற்ற வைத்த நெருப்பு இதுவரை அணையவில்லை. இதுவே வள்ளலாரியம் வாழ்வதற்குச் சாட்சி. நாளை ஏதேனுமோர் நாள் சமரச சன்மார்க்க ஆட்சி மலர்ந்தே தீரும் என நம்பிக்கை விதைக்கிறார் கவிஞர். பாராட்டு – 13 என் சரித்திரம் தீட்டிய தமிழ்த்தாத்தாவின் நூல் பதிப்பிப்பு அனுபவங்களைப் பொன் சரித்திரமாய்ப் பொறித்துள்ளமை பாராட்டுக்குரியது. எவ்வளவோ சுவடிகளைக் கண்டறிந்த உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதையர் பிறந்த ஊரான சூரியமூலையைக் கண்டறிந்து, ”சூரியமூலையில் பிறந்த ஆரிய மூளையே உமக்கு எம் திராவிட வணக்கம்…” என்று அதற்கொரு கவிதை சொல்லி முடித்தமை சிறப்புக்குரியது. பாராட்டு – 14 தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளாரே வடமொழியென்னும் வாதையிலிருந்து தனித்தமிழ் என்ற பாதைக்கு மாற்றியவர். அவரின் அரும்பணி தொடர வேண்டும். பெயர்ச்சொற்களெல்லாம் பிறமொழிச் சொற்களாக நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன. அதைத் தமிழ்ப்படுத்த வேண்டும். தமிழ்ப்பெயரும், தமிழ்க்கல்வியும் சாத்தியமாக வேண்டும். எட்டுக் கோடி பேரும் தமிழ்ப்பெயர் சூடிட, சட்டென எட்டுக்கோடி பெயர்ச்சொற்கள் கிடைக்கும். மொழி மேன்மையுறும். வேதாசலம் மறைமலைகளாக வேண்டும்; மறைமலைகள் வேதாசலங்களாக மாறிவிடக் கூடாது எனக் கவிஞர் தன் ஆதங்கத்தைக் கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளார். பாராட்டு – 15 பாரதி ஒரு தீ… எந்த ஊழிப்பெரு வெள்ளத்தாலும் அழிக்க முடியாத கவிதைப் பெருந்தீ. சோதிமிக்க நவ கவிதை படைத்த சீற்றக் கவியை உச்சிமேல் வைத்து மெச்சுகிறார் கவிப்பேரரசு. சனாதனத்திற்குச் சாட்டையடி கொடுத்த பாரதி சாதாரணன் இல்லை… அசாதாரணன். பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே என்று மகாகவி எக்காளமிடுகிறான். கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டதும், காக்கை குருவி எங்கள் ஜாதி என்றதோடு மட்டுமில்லாமல் கழுதையைத் தூக்கி முத்தமிட்டதும் தான் பாரதியைச் செயல்கவியாகவும் புயல்கவியாகவும் கொண்டாட வைக்கின்றது. தமிழால் பாரதி தகுதி பெற்றானோ இல்லையோ… பாரதியால் நிச்சயம் தமிழ் தரமான தகுதி பெற்றதென்பது சாகாத உண்மையே. வ.உ.சி..யிடமிருந்து பாரதியின் இன்னொரு பக்கத்தையும் பதிவுசெய்த கவிஞரின் துணிவைப் போற்றுகின்றேன். பாராட்டு – 16 பரம்பொருளுக்கே சம்மட்டி அடிகொடுத்த பெரும்பொருள் பெரியார். சுயமரியாதைச் சூரியன், பாமர மேதை, கலகக்காரர், பகுத்தறிவு நெருப்பு என எப்படி விளித்தாலும் அதற்குள் பெரியார் தெரிவார். பிராமணன் – சூத்திரன், ஏழை – பணக்காரன், கற்றவன் – கல்லாதவன், ஆண் – பெண் என எல்லா பேதங்களையும் நில்லாமல் செய்த பெரியாரைக் கூரிய ஆயுதமாகத் தீட்டித் தருகிறார் கவிப்பேரரசு. தமிழின் இரண்டு வார்த்தைகள் முட்டிக் கொண்டால் திருநீறு கொட்டுகிறது; ஒரு தமிழ் வாக்கியத்தை முகர்ந்து பார்த்தால் துளசி வாசமடிக்கிறது என்பதில் வைரமுத்துவின் யுகக்கோபம் தெரிகிறது. நீங்கள் கொல்லப்படுவீர் என்று மகாத்மா காந்தியிடமே சொன்ன பெரியாரைப் பெரியார் என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது? இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் இருவர் மட்டுமே நின்று நிலைப்பார்கள்… ஒருவர் பிரபாகரன்; மற்றொருவர் தந்தை பெரியார் என்று எழுதியுள்ள கவிஞரைப் பார்த்தால் பிரமிப்பே மேலிடுகிறது. பாராட்டு – 17 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! என்று பாடிய கனக சுப்புரத்தினமே பார் போற்றும் பாரதிதாசன். பனிக்கட்டி மீது உருண்டோடும் ஆப்பிள் போன்ற தடையற்ற ஓட்டமே பாரதிதாசனின் கவியோட்டம் என்று கவிஞர் சொல்லும்போதே செல்கள் சிலிர்த்துச் சில்லிடுகிறது. பாவேந்தரின் தமிழ்ப்பற்றும், பகுத்தறிவுப் பற்றும் போற்ற வேண்டிய பொக்கிசம். எட்டயபுரக் கவியாளுமையும் ஈரோட்டுக் கருத்தாளுமையுமே பாவேந்தரின் பாட்டுத்திறம். தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்ற புரட்சிக்கவிஞரை உவமைக் கவிஞர் சுரதா என் அதங்கோட்டாசான் என்று முரசறைந்து சொல்கிற தகவலைக் கவிஞர் எடுத்துரைக்கத் தவறவில்லை. பாரதிதாசன் என்ற கவியாளுமையைப் பறைகொட்டி பாராட்டியுள்ளார் கவிப்பேரரசு. பாராட்டு – 18 ’தான்தோன்றி’ என்று ராஜாஜியால் கணிக்கப்பட்டவர் புதுமைப்பித்தன். காலப்பதிவாளன் மற்றும் கலைப்பதிவாளன் என்று கவிஞர் புதுமைப்பித்தனுக்கொரு பாராட்டுப் பத்திரம் தீட்டுகிறார். தொந்தரவு செய்து கதைகேட்ட, பத்திரிகை ஆசிரியரிடம் ” எலே என் எழுத்து நெருப்பு. உம்பத்திரிகை சாம்பலாகிப் போகும்லே..” என்று கம்பீரம் காட்டியவர் கதைப்போராளி புதுமைப்பித்தன். அந்தக் காலத்திலேயே பிஏ படித்தவர். முழுநேர எழுத்தாளர். உலகின் எந்த எழுத்தாளரோடும் ஒப்புநோக்கத்தக்கவர் சொ.விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன். இத்தகையவரைக் காசநோயும், காசுநோயும் தின்றுதீர்த்தது. சினிமா சிதைத்தவர்களில் புதுமைப்பித்தனும் ஒருவர். படுத்த படுக்கையாகிறார். பார்க்க வரவில்லை பழகியவர்கள் யாரும். சிலர் சொல்லிவிட்டும் வரவில்லை. அழைக்காமல் வந்தது மரணம்தான்… இந்த வரிகளை அழாமல் படிக்கமுடியவில்லை கவிஞரே. பாராட்டு – 19 பச்சையப்பன் கல்லூரி மாணவனாக…. பெரியாரின் தொண்டனாக… பாராளுமன்ற உறுப்பினராக… முதலமைச்சராக… பச்சைத்தமிழனாக…. பேரறிஞர் அண்ணாவின் பெரும்பயணம் பிரமிப்பானது. யேல் பல்கலைக் கழகம் வரை அண்ணாவின் உரைவீச்சு ஆட்சி செய்தது. தமிழர்களுக்குப் பாயசம் போல் இனித்தது அண்ணாயிசம். No sentence can end with because because, because is a conjunction என ஆங்கிலத்திலும் சொற்சிலம்பமாடும் அறிவுலக மேதை அண்ணா. திரைப்படத் தமிழைச் செப்பனிட்டார். அரசியலில் அதிசயம் நிகழ்த்தினார். 1962 தேர்தலில் தோற்றாலும் ஒரு விரலில் தன் கண்ணீர் துடைத்து, ஒன்பது விரல்களால் ஊர்க்கண்ணீரைத் துடைத்தார். கடைசிவரை பெரியாரையே தன் தலைவராக ஏற்றுச் செயல்பட்டார்…என்று கவிஞர் எழுத்தை வாசிக்கும்போதே அண்ணா கண்முன் வந்துபோகிறார். சி.என். அண்ணாதுரை என்ற பெயரில் சி.என் என்பது சிங்க நிகர் என்றே பொருள் புரிவோம். பாராட்டு – 20 ஒரு தலைவன் இத்தனை பெரிய தாக்கங்களை ஏற்படுத்த முடியுமா? ஒரு தலைவன் இத்தனை பெரிய மாற்றங்களை உருவாக்க முடியுமா? ஒரு தலைவன் இத்தனை பெரிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முடியுமா? முடியும்… அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு வாழ்ந்த … வாழும் உதாரணம். பாட்டு சினிமாவைப் பேச்சு சினிமாவாக மாற்றி பிரளயம் செய்தவர் டாக்டர் கலைஞர். பயமறியாத இளைஞனாக தமிழின் நயமறிந்து எழுதியவர் டாக்டர் கலைஞர். சரித்திரப் படத்திலும் சமூகமே பேச வைத்தவர் டாக்டர் கலைஞர். சிலந்திக்கூடாகக் கிடந்த தமிழ்நிலத்தைச் சிங்கத் திருநாடாக்கியவர் டாக்டர் கலைஞர்…இப்படி கலைஞர்காதலோடு கவிப்பேரரசு அடுக்க அடுக்க அந்த உன்னதத் தலைவரின் உயரம் இன்னும் நன்றாகப் புரிகிறது. பெரும்பேறு கிடைத்தாலும் கடைசிவரை திருநீறு பூசாத, ஆத்திகம் பேசாத அந்த நாத்திக வைராக்கியம்தான் கலைஞர். நல்லாட்சி நாயகர் கலைஞரைத் தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது. வள்ளுவக்கோட்டம் எழுப்பிய தலைவர் கலைஞருக்குக் கவிஞர் எழுத்தோவியம் தீட்டிய திறத்துக்கு எழுந்துநின்று கைதட்டத் தோன்றுகிறது. பாராட்டு – 21 எட்டாம் வகுப்பு படித்த கண்ணதாசன் எட்டாத உயரத்துக்குத் தரக்கவிதை தந்தவர். சிறுகூடல்பட்டி முத்தையாவே சிகரம் தொட்ட கண்ணதாசன். போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் ஏற்றதொரு கருத்தென்று எனதுள்ளம் ஏற்குமாயின் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்” என்று சுயம்புவாகச் சுற்றித் திரிந்தவர். தன் அக வாழ்வைக் கூட, அனைவரும் அறியும்படி வாழ்ந்தார். அத்தனை கட்சியிலும் அடைக்கலமானார். கவிதையில் மட்டும் யாரும் அசைக்க முடியாத படைக்கலமானார். தமிழ் இலக்கிய வரலாற்றில் கண்ணதாசன் ஒரு ஆச்சரிய அதிசயம்தான். அனுபவக் கவி அவர். என் வீரிய விளைச்சலுக்குப் பலர் காரணமானாலும், என் விதைநெல்லுக்குக் கண்ணதாசனே காரணம் என்று கவிஞரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது அருமை. பாராட்டு – 22 செங்கப்படுத்தான்காட்டில் பிறந்த பட்டுக்கோட்டை தங்கமெடுத்தான் பாட்டில். 29 ஆண்டுகள் என்னும் சின்ன வாழ்வில் பட்டுக்கோட்டை எட்டிய உயரம் எவருக்கும் கிட்டாதது. பொதுவுடைமையையும் பாரதிதாசனையும் தின்று செரித்து நின்று நிலைத்தவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தான் வாழவிருந்த ஆயுளையும் தன் பாட்டுக்கு ஊட்டிவிட்டு விண்ணுக்குச் சென்றுவிட்டார். அவரால் எழுதப்படாத பாடல்கள் காலவெளியில் கலங்கி நிற்கின்றன. "உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன் - இந்தச் செருப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன்.. கொதிக்கும் தார்… எனக்குக் குளிர் நீர்… என்று வீரியம் பேசியவன் பட்டுக்கோட்டை. அந்தப் பட்டுக்கோட்டைக்குக் கவிஞர் ஓர் உயில் எழுதியிருக்கிறார். அந்த நூற்றாண்டு விழா கனவை உங்கள் மகன்களல்ல…நீங்களே நிறைவேற்றுவீர்கள் கவிஞரே. பாராட்டு – 23 எளிய மக்களின் எழுத்தாளன் ஜெயகாந்தன். விளிம்புநிலை மக்களின் கண்ணீரையும், கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையையும் தன் எழுத்தில் பதிவு செய்தவர். ஞானபீடம் வாங்கியவனின் எழுத்தில் ரத்தமும் சதையுமாய் எளிய மனிதர்கள் கதைமாந்தர்களாக உலவித் திரிகிறார்கள். திரைப்படம் எல்லோரையும் போல ஜெயகாந்தனையும் பதம் பார்த்திருக்கிறது. ஒரு நாளும் இதம் சேர்க்கவில்லை. ஆகையால், கசப்போடு சினிமாவை விட்டு வெளியேறுகிறார். எளியவர் மொழியை இலக்கியமாக்கிய ஜெயகாந்தனுக்குச் சினிமா சிரமம்தான் . ஞானபீடம் வென்ற யுகக் கலைஞன் ஜெயகாந்தனை வரிவரியாகக் கவிஞர் மிகையில்லாமல் போற்றியுள்ளார். பாராட்டு – 24 புவிக்கோள் முழுவதும் போற்றப்பட வேண்டியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் கழுத்தை கெளரவிக்க, ஒரு பொன்மாலையைத் தயாரிக்காமலே காலந்தாழ்த்திவிட்டது தமிழ்கூறும் நல்லுலகம். இவரை இன்னும் பெருமைப்படுத்தியிருக்க வேண்டும். சித்திரைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசித்தவரைப் போல அதிகம் கவனப்படுத்தப்படாமலே போய்விட்டார். குடிசை விளக்காகவல்ல… மாளிகை விளக்காக மகிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் கவிக்கோவை… கவியரங்கத்தில் புது சகாப்தம் படைத்தார். சர்ரியலிசம் கொண்டு சத்தான கவிதை செய்து சரித்திரம் படைத்தார். ஒருவித தத்துவத் தன்மைகள் தவழும்படி கவிக்கோ தன் கவிதைகளைப் உருவாக்கினார். வாழ்நாள் முழுவதும் வாசித்தார்…எழுத்தையே யோசித்தார்… கவிதைகளை மட்டும் ரகசியமாய் நேசித்தார். சமகாலப் பெருங்கவிஞனுக்கு ஒரு சொட்டுக் கண்ணீரைக் காணிக்கையாக்குவதோடு நூல் நிறைவடைகிறது. நிறைவாக… தமிழாற்றுப்படையைப் போற்றுகிறேன்! கவிப்பேரரசுவைப் பாராட்டுகிறேன்! இன்னும் மின்னும் நூல்வரிசையைக் கூட்டுங்கள்! தமிழின் பெருமையை உங்கள் தமிழ் கொண்டு நீட்டுங்கள்!

தொடர

அண்மை

குறுஞ்செய்திகள்

தொடர்பு கொள்க

தென் சென்னை நாடாளுமன்ற
உறுப்பினர் அலுவலகம்

எண் 115, Dr முத்துலெட்சுமி சாலை,
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13,
அடையார், சென்னை - 600 020

புது தில்லி இல்லம்

சி-3, சிந்து அபார்ட்மெண்ட்,
எ பிளாக், எம் எஸ் பிளாட்ஸ், பி கே எஸ் மார்க்,
புது டெல்லி - 110 001

பின்பற்றுங்கள்

© 2022 தமிழச்சி தங்கபாண்டியன்.