உரைகள்

இதர நிகழ்ச்சிகளில்

காதலே காலத்தின் சிறந்த முதலீடு எனும் போது உலகெங்கிலும் இவ்வுணர்வில் ஒத்து ஒலிப்பதே காதல் கொண்ட பெண்குரலோ எனத் தோன்றுகிறது

தொடக்கம், சுருக்கம், நிறைவு !

குழந்தைகள் தின விழா பேச்சு, இராஜபாளையம் - 14.11.2014

தமிழச்சி தங்கப்பாண்டியன்

குழந்தைகள் தின விழா பேச்சு - 14.11.2014 இராஜபாளையம் இவர்களது எழுதுகோலுக்குள் இருப்பது எழுதுகின்ற மையா பிறர்தம் ஊன் இல்லை உயிர்ச் சுடரை உருக்குகின்ற நெய்யா இவர்கிளருக்கின்ற மேடையிலே நானும் இருக்கின்றேன் என்பதென்ன மெய்யா? என என்னை வியக்க வைக்கின்ற விழாவினைக் சிறப்பிக்க வந்திருக்கின்ற மூத்த தமிழறிஞர் Dr அவ்வை நடராஜன் அவர்களே மதிப்பிற்குரிய திரு.குமாரசாமி I.P.S அவர்களே என் இனிய குடும்ப நண்பர் திரு. சந்திரசேகரன் I.A.S அவர்களே விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் திரு. பிரபாகர் I.A.S அவர்களே ஆரோக்யமான ஒரு குழந்தையை விட்டுச் செல்வதன் மூலமோ, அழகான ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்குவதன் மூலமோ, ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பதன் மூலமோ நீங்கள் இந்த உலகத்தை முன்பிருந்ததைவிட மேலும் அழகானதாக விடுகிறீர்கள் என்று சொல்வதற்கிணங்க, ஒரு சிறந்த பள்ளியை உருவாக்கித் தனது கல்விப் பணியின் மூலம் இந்த உலகத்தை மென்மேலும் அழகாக்கிவிட்ட, மீனாட்சி Matriculation பள்ளியின் நிறுவனர், நண்பர் திரு.சந்திரசேகரன் அவர்களே, ஒரு பெரிய ரோஜா ஆரத்தைத் தொடுத்தது போன்று என் முன் அமர்ந்திருக்கின்ற பள்ளிக் குழந்தைகளே... அந்த ஆரத்தை ஆர்வமுடன் தொடுத்திருக்கின்ற ஆசிரியப் பெருமக்களே... இந்த அற்புதமான ரோஜாக்களைச் சூழற்றுப் பேணி வளர்த்து, அவற்றை இந்த மண்ணில் அர்ப்பணித்துச், செழுமைப் படுத்தித், அதன் மூலம் தம்மையும் மலரச் செய்து கொண்ட பெற்றோர்களே... உங்களனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம். பிள்ளைப் பிராயத்திலே தன் பிஞ்சுக் கைகளுக்குப் பிடிபடாத அந்த அழகு நிலாவிலேயே பின்னொரு நாளில் காலடி பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் அற்புதமான மனோநிலையில் உங்கள் முன் நிற்கிறேன் நான். ஆம்... நீச்சலடித்துக் கொண்டே முத்துக் குளிக்கின்ற திறமையுள்ள பூரண சந்திரர்கள் பலர் நிறைந்திருக்கும் இம் மேடையில், நீச்சலே தெரியாத, இன்னும் பிறை நிலாவாகக் கூட அறிமுகமாகாத என்னைப் பேச அழைத்திருப்பது – 10 மனிதர்களுடைய கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது என்பதால் இருக்கலாம். கிடைத்த வாய்ப்பினை எண்ணி ஆனந்தமும், அதனை அடியொட்டி சிறு பயமும் எழுகின்றது என்றாலும், கூரையின் விளிம்பில் புறாக்கள்... பெருவெளியில் எவ்வளவு குறைந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு பெரிய அழகை ஏற்படுத்துகின்றன, என்று சொன்ன எழுத்தாளர் சுந்தரராமசாமியின் வாக்கியத்தை நினைத்துப் பார்த்து, சின்னஞ் சிறிய புறாவாய் என் சிறு உரையைத் தொடங்குகிறேன். எளிய மனம் படைத்தவர்கள், கபடம் இல்லாமல் நெஞ்சைத் தருகிறவர்கள் குழந்தைகள். அவர்களைப் பற்றி ஒரு கவிஞர், "வர்ணக் கனாக்களின் வாரிசு நீ அர்த்தம் தெரியாமலே நேசிக்கப்படும் ஒரு தேசியமொழி உனது மழலை மட்டுமே விளைந்து வெளிந்த பிறகும் சிப்பியைக் கெளரவப்படுத்தும் ஒரு வித்யாச முத்து நீ! விஞ்ஞானம் உன்னை விதையன்கிறது கலையோ உன்னை மலரென்கின்றது! என்று அழகாகச் சொல்லுகிறார். ஒரு தேசத்தின் எதிர்காலமே தன் குழந்தைகளை அது எவ்வாறு நடத்துகிறது என்பதில் தான் இருக்கிறது எனும் பெருமையைப் பெற்றவர் நீங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த பள்ளி வாழ்க்கையில் நீங்கள் உங்கள் புலன்களைக் கூர்மையாக்கக் சற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் இந்த உலகத்தை உற்று நோக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அப்படி உற்றுக் கவனித்து நோக்கினால், நீங்கள் பூமியிடமிருந்து பொறுமையைக் கற்றுக் கொள்ளலாம் காற்றிடமிருந்து அனைவரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ளலாம் ஆகாயத்திடமிருந்து நிர்மலமான மனதுடன் இருக்கக் கற்றுக் கொள்ளலாம் தண்ணீரிடமிருந்து பிறருக்குச் சேவை செய்யக் கற்றுக் கொள்ளலாம் சூரியனிடமிருந்து கடமையுணர்வைக் கற்றுக் கொள்ளலாம் சந்திரனிடமிருந்து பிறரை மகிழ்விக்கக் கற்றுக் கொள்ளலாம் கடலிடமிருந்து முயற்சியைக் கற்றுக் கொள்ளலாம் அனைத்தையும் கற்றுக் கொண்ட பின்னர் அரும்பாடுபட்டு வளர்த்த பெற்றோரையும், அரவனைத்திருந்த ஆசிரியர்களையும் மறக்காதிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். சத்யமோகன் என்கிற கவிஞரின் போய்ச் சேராக் கடிதம் என்கின்ற கவிதையைக் கேளுங்கள்... ப்ரிய அம்மா... நீ ஆசையாய்க் கொல்லையில் நட்டு வைத்த செடி என் வீட்டில் பூ விட்டுள்ளது நீ முடிச்சிட்டுக் கொடுத்த துணைவியும் நலமே நீ நீர்பாய்ச்சி 29 வருடம் காத்த பி.ஈ படித்து வேர்விட்ட நானும் நல்ல சுகம் நீ எவ்விடத்தில் சுகமற்று நலம் தேய்ந்து படர வழியற்று எம் மனவெளியில் திரிகிறாயோ இவ்வறுபது வயதில்? தந்தையைக் கவனிக்க முடியாத ஒரு மகனின் ஏக்கத்தைப் படிக்கையில் நம் பெற்றோரை நாம் நன்கு கவனித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். காரைத் தரையில் என் குழந்தையின் தளிர் நடை ஒவ்வொரு அடிக்கும் சிராய்ப்பு மனதில் எனக் குழந்தைகளைப் போற்றி வளர்க்கின்ற பெற்றோரும் குழந்தைகள் அவர்களுக்காகவே இருக்கின்ற பெற்றோரைவிட அவர்களுடன் இருக்கின்ற பெற்றோரையே அதிகம் நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். கண்டிப்பும், பயமும் குழந்தைகளின் சுதந்திர உணர்வைப் பாதித்துவிடக் கூடாது. கண்டித்தே வளர்க்கப்பட்ட குழந்தைகள் எவ்வாறு sterio - typed children ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக இதனைச் சொல்லலாம். Tom Story – அதே போல் பயமுறுத்தியே வளர்க்கப்பட்ட குழந்தை பின்னாளில் இப்படி ஒரு கவிதை எழுதலாம் – "எப்பொழுது சென்றாலும் கடல் நீரில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சென்றதேயில்லை. அலைகளிடம் பயமில்லை... பயம் - அப்பாவிடம்தான்" அதோடு, பெற்றோரும் எவ்வாறு இன்றைய உலகில் குழந்தை வளர்ப்பு கடினமானதோ, அதை விட மிகக் கடினமானது இன்றைய உலகில் குழந்தையாக இருப்பதுவும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக... இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் எனக் கண்டறிகின்ற ஆசிரியர்கள். பெரும்பாலான இன்றைய குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள். ஒரு சின்னக் கதை நினைவிற்கு வருகின்றது. அம்மாவும், குழந்தையும் - மிட்டாய்க் கடையும். எனவே அவர்களின் மனவோட்டமறிந்து, இந்தியச் சரித்திரத்தைப் பிரம்பசைவால் முதுகு வழியாகச் செலுத்த முடியாது. என்பதையும் உணர்ந்து கற்றுக் கொடுங்கள். கடுமையான சட்ட திட்டங்களுடான கண்டிப்பை எதிர் கொள்கின்ற குழந்தைகள் ஒரு கவிஞன் கேட்டது போல்... "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரரே வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வீர்கள்?" எனக் கேட்கலாம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையின் வேர்களும் வித்யாசமானவை. இப்படித்தான் ஒரு முறை ஒரு ஓவிய வகுப்பு ஆசிரியர் வகுப்பில் மரத்தின் படத்தினை வரைந்து அனைவரையும் வரையுமாறு கூறினார். Story... அதே மாதிரி ஒரு குழந்தை தின்பண்டத்தைப் பார்க்கும்போது, வாய்ப்பேச்சல்ல, கண்கள் சொல்வது அல்லவா முக்கியம். அந்தக் கண்களின் பேச்சை ஆசிரியர்கள் அறிந்து கொண்டு அவர்களுக்குச் சிகரத்தில் பனியாக இருப்பது முக்கியமல்ல சமவெளியில் நதியாக நடந்து வருவது முக்கியம் என்பதைக் கற்றுத் தர வேண்டும். Tell me... I will forget Show me... I may remember Involve me... I shall understand என்றொரு அருமையான சீனப் பழமொழி உண்டு. ஈடுபடச் செய்தலின் மூலமே, புரியவைக்க முடியும் என்ற உண்மையைப் பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து கொண்டால், உறவுகளில் நேர்மை; உண்மை மீது மதிப்பு; பொது நன்மை சார்ந்த சில சுய நியதிகளைக் கடைப்பிடித்தல் முதலிய உன்னத குணங்களை குழந்தைகளிடம் உருவாக்கலாம். அதன்பின் இந்த உலகமே உன்னதமாகிவிடும்தானே? அத்தகைய அதிசயத்தை நிகழ்த்துகின்ற ஆற்றல், ஆசிரியர்களே... உங்கள் கைகளுக்குத்தான் இருக்கிறது. "இந்தக் கை ஒரு நெம்புகோலை அழுத்தும் பொழுது வலிமை கொள்ளும் ஒரு பிச்சைக்காரனை அலட்ச்சியப் படுத்துகையில் நாணம் கொள்ளும். உள்ளங்கையில் நீர் ஊற்றிப் பாருங்க்ள உலகையே தலைகீழாகப் பார்க்கலாம். இந்தக் கை ஒரு ஆப்பிளை எவ்வளவு அற்புதமாக ஏந்துகிறது... அதனால், ஆசிரியர்களே... அந்தக் கரங்களால் ஒரு ஒப்பற்ற மாணவச் சமுதாயத்தை உருவாக்குங்கள்.

தொடர

பவா என்றொரு கதைசொல்லி ஆவணப்பட வெளியீட்டு விழாவில ஆற்றிய உரை

தமிழச்சி தங்கப்பாண்டியன்

பவா என்றொரு கதைசொல்லி ஆவணப்பட வெளியீட்டு விழாவில ஆற்றிய உரை நான் அதிகம் மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார், டிம் ஓ பிரியென் (Tim O'Brien) எனப்படும் அமெரிக்க நாவலாசிரியர். ஒரு ராணுவ வீரராகச் சில காலங்கள் வியட்நாமில் கழித்தார். அவருடைய எழுத்து, 'போர் பற்றிய உண்மைக் கதையை' சொல்வதன் சாத்தியங்கள், சாத்தியமின்மைகள் மற்றும் உண்மைக்கதையென்பது என்னவாக இருக்கலாம் என்பவற்றுடன் போராடுகிறது. 'கதைகளால் நம்மைக் காப்பாற்ற முடியும்' யார் பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்து கிரேக்கர்கள் படைப்புகளை மூன்று பெரிய வகைகளில் பிரித்தார்கள். கதைசொல்லி தன்னிலையில் பேசினால் கவிதை அல்லது தன்னுணர்ச்சிப்பாடல் என்றும் கதைசொல்லி தன்னுடைய குரலிலேயும் பேசி அதே சமயம் கதாபாத்திரங்களை அவர்களுடைய குரலிலும்பேச அனுமதித்தால் அது காவியம் அல்லது கதையாடல் என்றும் கதாபாத்திரங்கள் மட்டுமே பேசினால் அது நாடகம் என்றும் ஆகிறது. (இலக்கியக் கோட்பாடு, 117) அடுத்தது - எங்களது தெக்கத்திக் கதைசொல்லி கி.ரா. அவரது நாட்டுப்புறக் கதைகள். நாட்டுப்புறக் கதைகளையும் புராணங்களையும் எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கே நமக்குத் தனிப்பயிற்சி தேவை. பவாவின் மனஉலகமும் அப்படித்தான். திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கின்ற ஒவ்வொரு அடி மண்ணும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. எப்படிப்பட்ட கருக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை எப்படி வாசகனுக்குச் சொல்லவேண்டும், எங்கு அதனை நிறுத்த வேண்டும். புதுமைப்பித்தன் என்ற சிறுகதைச் சிகரம் 'பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணிவைக்கும் இன்ஷீயரன்ஸ் ஏற்பாடும் அல்ல. இவையாவும் கலை உதாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள் என்று தனக்கே உரிய கேலியும் கிண்டலுமாக 'காஞ்சனை' தொகுப்பு முன்னுரையில் 1943இல் எழுதுகிறார் புதுமைப்பித்தன். (உலக இலக்கிய வாசக சாலை, 14) 'கதை சொல்லும் மேன்மையும் சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கை வந்திருப்பது போல் தமிழில் வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை' என்று க. நா. சு. தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழில் அத்தனை விதமான சிறுகதை முயற்சிகளையும் எழுதிபார்த்த ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான். 'நீச்சல் குளத்திற்கு ஒரு திமிங்கலம் வாலை அசைத்துக் கொண்டிருப்பது போல்' என்று சுந்தரராமசாமி உதாரணம் காட்டுவார். (உலக இலக்கிய வாசக சாலை, 13) பஷீரின் பால்ய கால ஸகி இந்திய உரைநடை இலக்கியத்தின் மேதைகள் என்று மூன்று பேரை மதிப்பிட வேண்டுமானால் அவர்களில் ஒருவராக மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் இருப்பார். தன் வாழ்நாளில் கணிசமான பகுதியை மன நோயாளியாக மனநோய் மருத்துவமனையில் கழித்த பஷீர் இலக்கியம் படைப்பதன் மூலம் வாழ்வின் உண்மைகளைத் தேடினார் என்றுதான் சொல்ல வேண்டும். (உலக இலக்கிய வாசக சாலை, 1) மஜீதினுடைய இளம்பருவத்துத் தோழி சுஹ்ரா. சிறுவயதில் இவர்கள் நட்பு மாமரத்திலிருந்து விழும் மாம்பழத்தை யார் சாப்பிடுவது என்ற சண்டையில் ஆரம்பமாகிறது. அப்போதெல்லாம் தன் கையில் இருக்கும் கூர்மையான நகங்களால் சுஹ்ரா பிறாண்டி விடுவாள். மஜீதின் கனவுகளில் அவன் ராஜ குமாரனாக இருக்கும்போது சுஹ்ராதான் அரசகுமாரி. பிறகு அரசகுமாரி பிறாண்டக் கூடாது என்ற விதி முறையினால் மஜீத் தப்பிக்கிறான். "ஒன்றும் ஒன்றும் எத்தனைடா?" என்று கணக்கு ஆசிரியர் கேட்கிறார். அதற்கு மஜீத் சொல்லும் பதில் நாவலில் பல இடங்களில் சுஹ்ராவால் கிண்டல் செய்யப்படுகிறது. 'இரண்டு சிறு நதிகள் ஒன்றாகச் சேரும்போது சற்றே பருமனான பெரிய நதியாக உருவெடுக்கிறது' என்பது மஜீதின் நினைவுக்கு வரவே அவன் பதில் சொல்கிறான்... "கொஞ்சம் பெரிய ஒன்று". (உலக இலக்கிய வாசக சாலை, 2) இந்த உலக வாழ்க்கை ஒரு பெரிய தமாஷ். ஒருமுறை வி.கே.என் மரணத்தைப்பற்றி என் கருத்தைக் கேட்டார். நான் சொன்னேன்.... He Puts off till the last moment. இதோ வைக்கம் முகம்மது பஷீர் இறப்பதற்குமுன் எழுதி வைத்துவிட்டு இறந்தது நம் நினைவில் இப்போதும் நிற்கிறது. (உலக இலக்கிய வாசக சாலை, 4) போர்ஹே என்ற அற்புதக் கதை சொல்லி 1899-1986 ஆகிய கால கட்டத்தில் வாழ்ந்த லத்தீன் அமெரிக்க நவீன இலக்கியத்தின் முன்னோடியான ஜோர்ஜ் லூயி போர்ஹே உலக இலக்கியத்தில் அல்லது இலக்கிய உலகத்தில் நிலையான புகழைப்பெற்ற அற்புதக் கதைசொல்லி ஆவார். "வாழ்தலின் பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்கமுடியம்" என்று பிரம்மராஜன் சொல்லுவார். 'வாளின் வடிவம்' என்பது அவருடைய நேராக சொல்லப்பட்ட சோகம் மிகுந்த சிறுகதை. 'ஒரு வன்மம் மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது' என்று அசாதாரணமாக ஆரம்பமாகிறது கதை. 1922 இல் அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் நடந்த 'பெரும் அவமானமான, இழிவான' சம்பவத்தை போர்ஹேவிடம் அவன் விளக்குகிறான். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனுடன் ஜான் வின்சென்ட் மூன் என்பவனும் சேர்ந்து கொள்கிறான். மூன் முதுகெலும்பில்லாத பிராணியை போல அசெளகரிகமான மனப்பதிவினை ஏற்படுத்துகிறான். துப்பாக்கி சத்தத்திற்கே நடுங்கும் அவன், "நீ ஈடுபட்டது மிக ஆபத்தான காரியம்" என்று கோழைத்தனமாக விவாதிக்கிறான். மூன் அவனுடன் 'காய்ச்சல்' என்ற காரணம் பொய்யாகக் காட்டி போக மறுக்கிறான். திரும்பி வந்த அவன் மூன் தொலைபேசியில் தன்னைக் காட்டிக் கொடுப்பதைக் கேட்கிறான். அவன் மூனுடைய முகத்தில் ரத்தத்தினால் ஆகிய அரைச் சந்திரனை செதுக்குகிறான். பிறகு மூன் காட்டிக்கொடுத்து பெற்ற பணத்தை எடுத்துக்கொண்டு பிரேசிலுக்கு ஓடி விடுகிறான். இதைச் சொல்லி முடிக்கும்போது, "நான்தான் வின்சென்ட் மூன்" என்று குறிப்பிடுவது கலாபூர்வமான அதிர்ச்சியை நம்மிடம் நிகழ்த்துகிறது. (உலக இலக்கிய வாசக சாலை, 8,9,10) கைடி மாப்பசானின் படைப்புலகம் உலக இலக்கியத்தில் சிறந்த நாவல் ஆசியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் என்று பார்த்தால் பத்துப் பேருக்குமேல் இல்லை என்பதுதான் உண்மை. 'சிறுகதை' அவ்வளவு கடினமான, ஆழமான வடிவம். அந்த சிறந்த பத்து எழுத்தாளர்களும் பிரமித்து வியந்து பாராட்டக்கூடிய எழுத்தாளர்களின் எழுத்தாளர் கைடி மாப்பசான். பிறமொழி எழுத்தாளர்களை அதிகம் பாராட்டாத ரஷ்ய மேதைகள் அனைவரும் பல இடங்களில் மாப்பசானின் கதைகளை பொறாமையோடு சிலாகித்திருக்கிறார்கள். அன்புடன் செக்கால், "எதை எழுதினாலும் மாப்பசான் எழுதிய ஏதாவது ஒரு கதையின் சாயல் வந்து விடுகிறது" என்று ஒருமுறை எழுதியது பெரிய செய்தி. (உலக இலக்கிய வாசக சாலை, 17) காலையில் கரப்பான் பூச்சியாய் மாறிய மனிதன் "எழுத ஆரம்பித்தது எப்படி?" என்று நொபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸிடம் கேட்கப்பட்டது. அவர், "காப்காவின் The Metamorphosis கதையைப் படித்தேன், முதல்வரி படுக்கையிலிருந்து தூக்கி எறிந்தது. 'தொல்லை மிகுந்த கனவுகளிலிருந்து க்ரகோர் ஸாம்ஸா காலை விரித்தபோது படுக்கையில் ராட்சஸப்பூச்சியாக தான் மாறியிருப்பதைக் கண்டு' என்ற வரியை வாசித்த உடன் வியப்படைந்து, 'போல' எழுத யாருக்கும் அனுமதியுண்டு என்றறிந்த எழுதத் தொடங்கினேன்" என்று அதற்கு பதில் சொன்னார். (உலக இலக்கிய வாசக சாலை, 36) சிறுகதை மன்னன் சதக் ஹஸன் மாண்ட்டோ 'கடவுள் மீது ஆணையாக' என்ற சிறுகதை மாண்ட்டோவின் அற்புதமான ஒரு சிறுகதை. மிகவும் உருக்கமான சிறு காவியம். இந்தியா - பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட காலத்தில் ஒரு கிழவி பைத்தியம் பிடித்தவள் போல அழகான தன் மகளைத் தேடி அலைகிறாள். முதலில் ஒரு அதிகாரி அவளிடம், "உன் மகள் கொல்லப்பட்டிருக்கலாம்" என்கிறார். தாய் நம்பவில்லை. சில மாதங்கள் கழித்து அதே அதிகாரி மீண்டும் அந்தத்தாயை சந்திக்கிறார். இன்னும் மோசமான நிலையில் தாய் "உன் மகள் செத்துப்போய்விட்டாள்" என்று சொல்கிறார் அவர். தாய் நம்பவில்லை. மூன்றாவது தடவையாக அந்தத்தாயை அந்த அதிகாரி சந்திக்கும்போது அவள் தன் மகளைப் பார்த்து விடுகிறாள். ஆனால் மகளோ தன் தாயைப்பார்த்தும், "வா.... இந்த இடத்தை விட்டுப் போயிடலாம்" என்று உடனிருந்த சீக்கிய இளைஞனோடு போய்விடுகிறாள். அந்த அதிகாரி அந்தத் தாயிடம், "கடவுள் மீது ஆணையாகச் சொல்றேன். உங்க பொண்ணு செத்துட்டா..." என்று சொல்கிறார். அதைக்கேட்டு அந்தக்கிழவி ஒரு குவியலாக வீதியில் விழுந்தாள் - என்று கதை முடிகிறது. இந்தக்கதை ஏற்படுத்தும் உணர்வை எப்படி விளக்க முடியும்? வாசகன் உணர்ந்துதான் அனுபவிக்க வேண்டும். (உலக இலக்கிய வாசக சாலை, 142, 143)

தொடர

குழந்தைகள் தின விழா உரை - 14.11.2014 - இராஜபாளையம்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

குழந்தைகள் தின விழா உரை - 14.11.2014 - இராஜபாளையம் இவர்களது எழுதுகோலுக்குள் இருப்பது எழுதுகின்ற மையா பிறர்தம் ஊன் இல்லை உயிர்ச் சுடரை உருக்குகின்ற நெய்யா இவர்கிளருக்கின்ற மேடையிலே நானும் இருக்கின்றேன் என்பதென்ன மெய்யா? என என்னை வியக்க வைக்கின்ற விழாவினைக் சிறப்பிக்க வந்திருக்கின்ற மூத்த தமிழறிஞர் Dr அவ்வை நடராஜன் அவர்களே மதிப்பிற்குரிய திரு.குமாரசாமி I.P.S அவர்களே என் இனிய குடும்ப நண்பர் திரு. சந்திரசேகரன் I.A.S அவர்களே விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் திரு. பிரபாகர் I.A.S அவர்களே ஆரோக்யமான ஒரு குழந்தையை விட்டுச் செல்வதன் மூலமோ, அழகான ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்குவதன் மூலமோ, ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பதன் மூலமோ நீங்கள் இந்த உலகத்தை முன்பிருந்ததைவிட மேலும் அழகானதாக விடுகிறீர்கள் என்று சொல்வதற்கிணங்க, ஒரு சிறந்த பள்ளியை உருவாக்கித் தனது கல்விப் பணியின் மூலம் இந்த உலகத்தை மென்மேலும் அழகாக்கிவிட்ட, மீனாட்சி Matriculation பள்ளியின் நிறுவனர், நண்பர் திரு.சந்திரசேகரன் அவர்களே, ஒரு பெரிய ரோஜா ஆரத்தைத் தொடுத்தது போன்று என் முன் அமர்ந்திருக்கின்ற பள்ளிக் குழந்தைகளே... அந்த ஆரத்தை ஆர்வமுடன் தொடுத்திருக்கின்ற ஆசிரியப் பெருமக்களே... இந்த அற்புதமான ரோஜாக்களைச் சூழற்றுப் பேணி வளர்த்து, அவற்றை இந்த மண்ணில் அர்ப்பணித்துச், செழுமைப் படுத்தித், அதன் மூலம் தம்மையும் மலரச் செய்து கொண்ட பெற்றோர்களே... உங்களனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம். பிள்ளைப் பிராயத்திலே தன் பிஞ்சுக் கைகளுக்குப் பிடிபடாத அந்த அழகு நிலாவிலேயே பின்னொரு நாளில் காலடி பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் அற்புதமான மனோநிலையில் உங்கள் முன் நிற்கிறேன் நான். ஆம்... நீச்சலடித்துக் கொண்டே முத்துக் குளிக்கின்ற திறமையுள்ள பூரண சந்திரர்கள் பலர் நிறைந்திருக்கும் இம் மேடையில், நீச்சலே தெரியாத, இன்னும் பிறை நிலாவாகக் கூட அறிமுகமாகாத என்னைப் பேச அழைத்திருப்பது – 10 மனிதர்களுடைய கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது என்பதால் இருக்கலாம். கிடைத்த வாய்ப்பினை எண்ணி ஆனந்தமும், அதனை அடியொட்டி சிறு பயமும் எழுகின்றது என்றாலும், கூரையின் விளிம்பில் புறாக்கள்... பெருவெளியில் எவ்வளவு குறைந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு பெரிய அழகை ஏற்படுத்துகின்றன, என்று சொன்ன எழுத்தாளர் சுந்தரராமசாமியின் வாக்கியத்தை நினைத்துப் பார்த்து, சின்னஞ் சிறிய புறாவாய் என் சிறு உரையைத் தொடங்குகிறேன். எளிய மனம் படைத்தவர்கள், கபடம் இல்லாமல் நெஞ்சைத் தருகிறவர்கள் குழந்தைகள். அவர்களைப் பற்றி ஒரு கவிஞர், "வர்ணக் கனாக்களின் வாரிசு நீ அர்த்தம் தெரியாமலே நேசிக்கப்படும் ஒரு தேசியமொழி உனது மழலை மட்டுமே விளைந்து வெளிந்த பிறகும் சிப்பியைக் கெளரவப்படுத்தும் ஒரு வித்யாச முத்து நீ! விஞ்ஞானம் உன்னை விதையன்கிறது கலையோ உன்னை மலரென்கின்றது! என்று அழகாகச் சொல்லுகிறார். ஒரு தேசத்தின் எதிர்காலமே தன் குழந்தைகளை அது எவ்வாறு நடத்துகிறது என்பதில் தான் இருக்கிறது எனும் பெருமையைப் பெற்றவர் நீங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த பள்ளி வாழ்க்கையில் நீங்கள் உங்கள் புலன்களைக் கூர்மையாக்கக் சற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் இந்த உலகத்தை உற்று நோக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அப்படி உற்றுக் கவனித்து நோக்கினால், நீங்கள் பூமியிடமிருந்து பொறுமையைக் கற்றுக் கொள்ளலாம் காற்றிடமிருந்து அனைவரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ளலாம் ஆகாயத்திடமிருந்து நிர்மலமான மனதுடன் இருக்கக் கற்றுக் கொள்ளலாம் தண்ணீரிடமிருந்து பிறருக்குச் சேவை செய்யக் கற்றுக் கொள்ளலாம் சூரியனிடமிருந்து கடமையுணர்வைக் கற்றுக் கொள்ளலாம் சந்திரனிடமிருந்து பிறரை மகிழ்விக்கக் கற்றுக் கொள்ளலாம் கடலிடமிருந்து முயற்சியைக் கற்றுக் கொள்ளலாம் அனைத்தையும் கற்றுக் கொண்ட பின்னர் அரும்பாடுபட்டு வளர்த்த பெற்றோரையும், அரவனைத்திருந்த ஆசிரியர்களையும் மறக்காதிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். சத்யமோகன் என்கிற கவிஞரின் போய்ச் சேராக் கடிதம் என்கின்ற கவிதையைக் கேளுங்கள்... ப்ரிய அம்மா... நீ ஆசையாய்க் கொல்லையில் நட்டு வைத்த செடி என் வீட்டில் பூ விட்டுள்ளது நீ முடிச்சிட்டுக் கொடுத்த துணைவியும் நலமே நீ நீர்பாய்ச்சி 29 வருடம் காத்த பி.ஈ படித்து வேர்விட்ட நானும் நல்ல சுகம் நீ எவ்விடத்தில் சுகமற்று நலம் தேய்ந்து படர வழியற்று எம் மனவெளியில் திரிகிறாயோ இவ்வறுபது வயதில்? தந்தையைக் கவனிக்க முடியாத ஒரு மகனின் ஏக்கத்தைப் படிக்கையில் நம் பெற்றோரை நாம் நன்கு கவனித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். காரைத் தரையில் என் குழந்தையின் தளிர் நடை ஒவ்வொரு அடிக்கும் சிராய்ப்பு மனதில் எனக் குழந்தைகளைப் போற்றி வளர்க்கின்ற பெற்றோரும் குழந்தைகள் அவர்களுக்காகவே இருக்கின்ற பெற்றோரைவிட அவர்களுடன் இருக்கின்ற பெற்றோரையே அதிகம் நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். கண்டிப்பும், பயமும் குழந்தைகளின் சுதந்திர உணர்வைப் பாதித்துவிடக் கூடாது. கண்டித்தே வளர்க்கப்பட்ட குழந்தைகள் எவ்வாறு sterio - typed children ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக இதனைச் சொல்லலாம். Tom Story – அதே போல் பயமுறுத்தியே வளர்க்கப்பட்ட குழந்தை பின்னாளில் இப்படி ஒரு கவிதை எழுதலாம் – "எப்பொழுது சென்றாலும் கடல் நீரில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சென்றதேயில்லை. அலைகளிடம் பயமில்லை... பயம் - அப்பாவிடம்தான்" அதோடு, பெற்றோரும் எவ்வாறு இன்றைய உலகில் குழந்தை வளர்ப்பு கடினமானதோ, அதை விட மிகக் கடினமானது இன்றைய உலகில் குழந்தையாக இருப்பதுவும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக... இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் எனக் கண்டறிகின்ற ஆசிரியர்கள். பெரும்பாலான இன்றைய குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள். ஒரு சின்னக் கதை நினைவிற்கு வருகின்றது. அம்மாவும், குழந்தையும் - மிட்டாய்க் கடையும். எனவே அவர்களின் மனவோட்டமறிந்து, இந்தியச் சரித்திரத்தைப் பிரம்பசைவால் முதுகு வழியாகச் செலுத்த முடியாது. என்பதையும் உணர்ந்து கற்றுக் கொடுங்கள். கடுமையான சட்ட திட்டங்களுடான கண்டிப்பை எதிர் கொள்கின்ற குழந்தைகள் ஒரு கவிஞன் கேட்டது போல்... "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரரே வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வீர்கள்?" எனக் கேட்கலாம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையின் வேர்களும் வித்யாசமானவை. இப்படித்தான் ஒரு முறை ஒரு ஓவிய வகுப்பு ஆசிரியர் வகுப்பில் மரத்தின் படத்தினை வரைந்து அனைவரையும் வரையுமாறு கூறினார். Story... அதே மாதிரி ஒரு குழந்தை தின்பண்டத்தைப் பார்க்கும்போது, வாய்ப்பேச்சல்ல, கண்கள் சொல்வது அல்லவா முக்கியம். அந்தக் கண்களின் பேச்சை ஆசிரியர்கள் அறிந்து கொண்டு அவர்களுக்குச் சிகரத்தில் பனியாக இருப்பது முக்கியமல்ல சமவெளியில் நதியாக நடந்து வருவது முக்கியம் என்பதைக் கற்றுத் தர வேண்டும். Tell me... I will forget Show me... I may remember Involve me... I shall understand என்றொரு அருமையான சீனப் பழமொழி உண்டு. ஈடுபடச் செய்தலின் மூலமே, புரியவைக்க முடியும் என்ற உண்மையைப் பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து கொண்டால், உறவுகளில் நேர்மை; உண்மை மீது மதிப்பு; பொது நன்மை சார்ந்த சில சுய நியதிகளைக் கடைப்பிடித்தல் முதலிய உன்னத குணங்களை குழந்தைகளிடம் உருவாக்கலாம். அதன்பின் இந்த உலகமே உன்னதமாகிவிடும்தானே? அத்தகைய அதிசயத்தை நிகழ்த்துகின்ற ஆற்றல், ஆசிரியர்களே... உங்கள் கைகளுக்குத்தான் இருக்கிறது. "இந்தக் கை ஒரு நெம்புகோலை அழுத்தும் பொழுது வலிமை கொள்ளும் ஒரு பிச்சைக்காரனை அலட்ச்சியப் படுத்துகையில் நாணம் கொள்ளும். உள்ளங்கையில் நீர் ஊற்றிப் பாருங்க்ள உலகையே தலைகீழாகப் பார்க்கலாம். இந்தக் கை ஒரு ஆப்பிளை எவ்வளவு அற்புதமாக ஏந்துகிறது... அதனால், ஆசிரியர்களே... அந்தக் கரங்களால் ஒரு ஒப்பற்ற மாணவச் சமுதாயத்தை உருவாக்குங்கள். என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, அரியதொரு மேடையினை எனக்களித்த நண்பர் திரு.சந்திரசேகருக்கு என் உளமார்ந்த நன்றி..! வணக்கம்.

தொடர

அசோக மித்ரன் - நினைவு நாள் உரை

தமிழச்சி தங்கப்பாண்டியன்

'புதுமைப்பித்தனுடைய சமூகப்பார்வை நடை, கிண்டல் ஆழமானது. அகவியல் உலகும் அலட்டிக் கொள்ளாத நடையும் கு.ப.ரா. வுடையது. அகத்துள் திளைப்பவர் மெளனி, இறுகிய சோதனைகள் அவருடையது. தம்மன எழுச்சிகளைப் புறஉலகிற்குக் காட்டிச் சிந்தனைக் களத்தில் ஆராயும் பிச்சமூர்த்தியின் நடை அனுபவ வளம், எளிய உவமைகள் நிரம்பியது. உவமையின்றி தத்துவக் கருத்துக்கள் எழுச்சி நிலைகளை சாமான்ய நிகழ்ச்சிகளில் கண்டவர் ந.சிதம்பர சுப்பிரமணியன். மனிதனைக் குடும்ப உறவு அடிப்படையில் அறிவு பூர்வமாகச் சிந்தனைக்குப் பிரதானம் தந்து எழுதுவார் க.நா.சு. உணர்ச்சி பின்னிய குடும்ப உலகும் அகத்துறை அனுபவமும் அபரிமித சப்த தந்திரமும் புதிய நடையும் லா.ச.ரா. வுடையது. 'இவ்வளவு அகண்ட வித்தியாசங்கள் மணிக்கொடி குழுவுக்கு ஒவ்வொருவரின் எழுத்து பலமே அக் கோஷ்டியின் பலம். ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர். ஒவ்வொருவருமே மூலப் புருஷர்களாகத் திகழ்ந்தனர். கோஷ்டி என்பது இங்கு ஓர் இலக்கிய இயக்கமாக மட்டுமே. ஒரேவித பார்வையின் ஒற்றைக் குரலாக அல்ல. தனித்தன்மை கலைஞனின் இயல்பு. மணிக்கொடி இயக்கத்திற்கு ஆதாரம் தனித் தன்மை. எழுத்தாளர்களின் பார்வை வித்தியாசங்களும் நம்பிக்கைகளின் துருவ வேறுபாடுகளுமாகும். மனித அனுபவத்தைக் கலையாக உருவாக்கும் பொறுப்பில் ஏற்பட்ட இயக்கமான அது தம் கோஷ்டிக்கு எந்த சித்தாந்தத்தையும் நடுச்சுழலாகக் கொள்ளவில்லை' என மணிக்கொடிக் கலைஞர் தனித்தன்மைகளை விதந்தோதிச் செல்வார் பிரேமிள் (தமிழின் நவீனத்துவம்). அசோக மித்திரன் அய்யா, அத்தகையத் தனித்தன்மை கொண்டவர். தன்னளவில் ஒரு மூலப் புருஷர். 1953 துவங்கி 2017 வரை - சுமார் 65 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வந்த எழுத்தாளர்கள் அரிதினும் அரிது. அசோமித்திரன் அவர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், கட்டுரைகள் என விரியும் அவரது தளத்தில் அவர் நுழைந்து பார்க்காத இண்டு, இடுக்கு எதுவுமில்லை. R.K.Laxman இன் The Comman Man எப்படி வார்த்தைகளில் பொது மனசாட்சியைத் தட்டி உலுக்கினாரோ, அதுபோலத்தான், இன்னும் சொல்லப்போனால், கூடுதல் எள்ளலுடன், அது கலையாக மாறுகின்ற ரசவாதப் பூச்சுடன் நம்மை உலுக்கி, ஆட்கொண்டவர். பெரிதான தத்துவ விசாரணைகளே, முன்முடிவுகளோ, ஆணித்தரமான தீர்ப்புகளோ, கறாரான எடைபோடுதலோ இல்லாமல் இந்த மனுசப் பிறவியை அதன் அனைத்துக் கசடுகள், பயங்கள், சமரசங்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், இவற்றோடு சித்தரித்தவர். தன் பாட்டுக்குப் போற வழியில் சடக்கென்று நெருஞ்சி முள் தைத்தாற்போல அந்த மனுசன், மனுசி பேசும் ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம் 'சுருக்' கென்று தைத்துப் பின் மண்டை வரை ஏறும். எனக்கு அசோகமித்திரன் அய்யா இப்படிச் சிறு சிறு உருத்தான, கனமான வாக்கியங்களில் தான் மிகுந்த அணுக்கமானார். விரிவாகப் புதினம், சிறுகதைகள் என வாசித்தாலும், அவரது இது போன்ற வாக்கியங்களைக் கடக்க முடியாமல், அங்கேயே, நின்று, சமயங்களில் அப்புதினம் முடிந்த பின்பும், அவ்வுணர்வெழுச்சி அடங்காமல், குறிப்பிட்ட சில தரிசனங்களுக்காக நான் அவற்றிற்கு, மறுபடி, மறுபடி, பயணம் செல்கிறேன். அவரது 18வது அட்சக்கோடு தெலுங்கு தேசத்தில் சென்று குடியேறிய ஒரு தமிழ்க் குடும்பத்தின் மூத்த பையன், சந்திரசேகரின் அனுபவங்களைப் பேசுவது. நிஜாம் சுதந்திர இந்தியாவுடன் இணைய மறுக்கும் பொழுது ஹைதரபாத், சிக்கந்த்ராபாத் வாழ் முஸ்லிம், இந்துக்களின் வாழ்முறையில் ஏற்பட்ட பெரும் விரிசலைப் பற்றிய சித்திரங்கள் நிறைந்தது. அது ஹைதராபாத் சிகந்தராபாத்தில் சர்வ சகஜமாக வறுமை விரித்தாடும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் வீடுகளில் ஒன்று, ஒரே ஒரு கோழிமுட்டை விளக்கு. மூன்று நான்கு ஆண்கள், மூன்று நான்கு பெண்மணிகள். மூன்று நான்கு குழந்தைகள். தவிர்க்க முடியாத கிழவி ஒருத்தி. அந்த மூன்று ஆண்கள் சேர்ந்துகொண்டு சந்திரசேகரனைக் கொன்று கூடப் போட்டு விடலாம். ஆனால் அவர்களிருந்த கிலி நிலையில் அவர்கள் சக்கைகளாக இருந்தார்கள். அந்த இடம் ஒரேயடியாக நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது. (18-வது அட்சக்கோடு - அசோகமித்திரன்: 263) சந்திரசேகரன் நிலைமையைப் புரிந்துகொள்வதற்குள் ஒன்று நடந்தது. அவர்கள் அப்படி ஒரு திட்டத்தை முன் கூட்டியே பேசி வைத்திருக்க வேண்டும் அந்தப் பெண் மணிகளில் பதினைந்து பதினாறு வயது மதிக்கக்கூடிய ஒரு பெண் சந்திரசேகரன் முன்னே வந்தாள். 'நாங்கள் பிச்சை சேட்கிறோம். எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்,' என்றாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய கமீஸைக் கழட்டினாள். ஒரு நொடிக்குள் பைஜாமா நாடாவையும் அவிழ்த்தாள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவளுடைய விலா எலும்புகளை தனித் தனியாக எண்ணி எடுக்கும் வகையில் சந்திரசேகரன் முன் நிர்வாணமாக நின்றாள். சந்திரசேகரனின் கண் கூசிற்று. "ஐயோ!" என்றான். அந்தப் பெண் அதை என்ன அர்த்தம் செய்து கொண்டாளோ இன்னும் ஓரடி முன்வந்தாள். சந்திரசேகரன் மீண்டும் "ஐயோ! ஐயோ!" என்றான். அவனுக்குத் தலை சுற்றி வாந்தி வந்தது. வாயில் கொப்புளித்து வந்த கசப்புத் திறளை அப்படியே அடக்கிக்கொண்டு முன்பு உள்ளே வந்தபடியே சுவர் ஏறித் தெருவில் குதித்து வெறி பிடித்தவன் போல் ஓடினான். அவனுக்கு ரெஃப்யூஜிகள் பூண்டோடு அழித்து விரட்டப்பட்டதுகூட இவ்வளவு குமட்டலை உண்டு பண்ணவில்லை. அவன் வாழ்க்கையில் அவன் முதன் முதலாக நிர்வாணமாகப் பார்த்த பெண் அவனைச் சிதற அடித்து விட்டாள். அவனைப் புழுவாக்கி விட்டாள். அவள் வீட்டாரைக் காப்பாற்ற அவள் எவ்வளவு இழிவுபடுத்தி கொண்டு விட்டாள்! அவள் இன்னும் ஒரு குழந்தை. இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தைகூட எவ்வளவு இழிவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது? அதற்கு அவனும் காரணமாகி விட்டான். இந்த கறையை என்று எப்படி அழித்துக்கொள்ள முடியும்? இதை அழித்துக்கொள்ளத்தான் முடியுமா? ஓடிக்கொண்டேயிருந்த சந்திரசேகரன் பொழுது விடிந்திருப்பதையும் உணர்ந்தான். (18-வது அட்சக்கோடு - அசோகமித்திரன்: 264) அத்தனை விவரனைகளையும் மீறி, அந்த ஒரு வாக்கியம், "இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தை கூட எவ்வளவு இழிவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது" - காலத்தை வென்று வலியின் விசத்தை, உலகெங்கும் இந்தக் கணமும் நடக்கின்ற இத்தகைய விபா£தக் கொடூரங்களை, உள் நாவிற்குக் கடத்தும் வரி இது. ப்ராது என்று எங்களூர்ப்பக்கங்களில் புகார் கொடுப்பதற்குச் சொல்வார்கள். வாழ்க்கை குறித்துப் பெரிதான ப்ராதுகள் இல்லாத அல்லது அதனை உரக்கச் சொல்ல முடியாத, அல்லது அப்படிச் சொல்ல நேர்ந்தாலும் பயனேதுமிராத சராசரி, மத்தியதர வர்க்கத்தின் மன ஓட்டத்தைப், பாடுகளை, வாழ்வோட்டத்தில் வெறுமனே மூச்சுவிட்டு, உண்டு, செரித்து, உறங்கி, மரணமடைவதை தன் விதியாகக் கொண்டுள்ளவர்களைப் பற்றிய அவர் தரப்புப் பார்வையை, ஒரு ஹீனக் குரலாக அவர் தொடர்ந்து முன்வைத்தார். ஆனால் அது நம்மை மிகத் தொந்திரவு செய்யும் குரல். கதவிடுக்கில் சிக்கிக் கிறீச்சிடுகின்ற செல்லப் பிராணியின் வதைக்குரலாய் நம்மைப் பின் தொடரும் குரல். அவரது படைப்புக்களில், இருந்து சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதே என் வகையில் சரியான அஞ்சலி. அவரது இன்று குறு நாவல் எனக்கு மிகப் பிடித்த படைப்பு. வேறு வேறு தளங்களில் வெவ்வேறு மனிதர்களைப் பற்றிப் பேசுவது போலப் பின்னப்பட்டிருக்கும் - ஆனால் ஒரு நுட்பமான சரடு அவற்றை இணைத்திருக்கும். அதில் வரும் இரண்டு இடங்கள்... இந்த ஆட்டோரிக்ஷாக்களுக்கு மட்டும் எப்படி இந்த இடம் சந்தேகமில்லாமல் தெரிகிறது? அவ்வளவிற்கும் பெயரையே தவறாகச் சொல்லியிருக்கிறான். இவனுக்கு அந்த முகவரியைத் தந்தவர்களே அந்தச் சாலையின் பெயரைத் தவறாக எழுதித் தந்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழகான சாலையில் நரைத்த தாடியும். சிகையும் உள்ள அந்த ஆட்டோரிக்ஷாக்காரனுக்கு அந்தத் தவறான முகவரியும் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் இந்த விதத்தில் குரூரமான மொழி. தொழிலைக் கொண்டு ஒருவனைக் குறிக்கும் போது விகுதி பாரபட்சம் காண்பிக்கிறது. இல்லாது போனால் இவனை ஆட்டோரிக்ஷாக்காரனாகக் குறிக்க முடியாது. (இன்று - அசோகமித்ரன்: 27) ஜோடுகளிலும் கம்பளி பாண்ட்டுகளிலும் கூடப் பணம் பணமின்மை தெரிந்து விடுகிறது. (இன்று - அசோகமித்ரன்: 29) அதில் வருகின்ற இன்னொரு இடம் - "எழுத்தாளர் அரிதாசன் இருக்காரா?" "நான்தான் ஹரிதாசன்." "உங்களைப் பாத்து ஒரு பேட்டி எழுதிண்டு போக ஆசிரியர் அனுப்பிச்சார்." "என்னையா?" இநத போட்டியின் தலைப்பே 'இவர்கள் உள்ளே இருக்கிறார்கள்." "இந்தத் தலைப்புலே ஜெயகாந்தன் கட்டுரைங்க எழுதியிருக்கார் இல்லே?" "இது பேட்டி, உள்மனிதன் பேட்டி." (இன்று - அசோகமித்ரன்: 38) "நீங்க எவ்வளவு நாளா எழுதறீங்க?" "முப்பது முப்பத்தஞ்சு வருஷமா இருக்கும்." "குறிப்பாச் சொல்ல முடியுமா?" "குறிப்பாவா? முப்பத்தி மூணு வருஷம் ஏழு மாசம்." "அப்போ முப்பத்தி நாலுன்னு போட்டுக்கறேன்." "போட்டுக்குங்க. இதுக்கு ரேஷன்லே அரை கிலோ ஒரு கிலோ சக்கரை கூடக் கொடுத்தா நன்னாயிருக்கும்." (இன்று - அசோகமித்ரன்: 39) "என் கதை எதாவது நீங்க படிச்சிருக்கீங்களா?" "ஓ, நிறையவே படிச்சிருக்கேன்." "எதுலே?" "ஆனந்த விகடன், கல்வி... ஏங்க? நான் நிறையப் படிச்சிருக்கேன்." "போனாப்போறது, உங்களுக்கு எந்தக் கதை ரொம்பப் பிடிச்சுது?" "ரொம்பப் பிடிச்சுதா? ரொம்பப் பிடிச்ச கதை - முன்னே நீங்க ஒருத்தன் பாங்க்லே கொள்ளையடிக்கிறான், பாங்க் இரும்புப் பொட்டியிலேயே ஒரு பாம்பு இருக்க், அதையும் இவன் சேத்துப் போட்டுக் தூக்கிட்டுப் போறான்..." "இந்தக் கதையை நான் எழுதலே." "நீங்க எழுதலையா? ரொம்ப நல்ல கதை." "என்ன செய்யறது? நான் எழுதலை" "நாம நிறையப் படிச்சுண்டே இருக்கோமா. எது யார் எழுதினாங்கன்னு நினைவுலே இருக்கிறதில்லே." ஆமாம், கஷ்டந்தான்" (இன்று - அசோகமித்ரன்: 40) "சார், உங்க பத்திரிகையிலே இந்தப் பேட்டி போடப் போறதில்லை. உங்க நேம், என் நேரம் எல்லாம் வீண்?" "இல்லே, சார். ஆசிரியர்தான் அனுப்பிச்சார். உங்க கதைங்கன்னா ரொம்பப் படிச்சிருப்பார்." "அவரும் அந்த பாங்க் இரும்புப் பொட்டிக் கதையைப் படிச்சிருப்பார்." (இன்று - அசோகமித்ரன்: 41) சார்த்தரின் சமூக அக்கறைகளைப் பகிர்ந்து கொண்டாலும் மிஷல் ஃபூக்கோ, சார்த்தரின் 'இயங்கியல் அறிவு பற்றி விமர்சனம்' (Critique of Dialictical Reason) என்னும் நூல் "இருபதாம் நூற்றாண்டைக் கற்பனை செய்து பார்க்கும் 19ம் நூற்றாண்டு மனிதனால் எழுதப்பட்டது" என்று கூறினார். மார்க்ஸைப் பற்றியும் கூட இதே தொனியில் பூக்கோ எழுதினார், "எப்படி மீன் தண்ணீரில் வாழும் ஜீவராசியோ அப்படி மார்க்ஸ் 19ம் நூற்றாண்டு ஜீவராசி (அதாவது 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு மார்க்ஸின் பொருத்தப்பாடு மறைந்து விட்டது) எனும் அர்த்தத்தில். ஆனால் அசோக மித்திரன் 21ம் நூற்றாண்டிற்கும் பொருத்தமான எழுத்தாளர். ஆனால் தண்ணீரின் சாயா, ஜமுனா, பாஸ்கரராவை நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 18ம் அட்சக்கோட்டின், அந்த நாக்பூர் ரெஃயூஜிகள், தின்பண்டங்கள் பண்ணிவிற்ற, அவர்களைப் போல எண்ணற்ற பேர்கள் இன்றைக்கு அகதிகளாக உலகமுழுதும் அலைகிறார்கள். அசோக மித்திரன் எழுதுகிறார்... 1977... இல், "அவர்கள் செய்வதை எவ்வளவோ ஓட்டல்கள் மொத்தமாக வாங்கிக் கொள்கின்றன. இந்து ஓட்டல்... முஸ்லிம் ஓட்டல் என்று இதில் வித்யாசம் இல்லை. எல்லாருக்கும் சாப்பிட வேண்டியதெல்லாம் ஒன்றாகத் தானிருக்கிறது." புனர்ஜன்மம்: அசோக மித்திரன் எழுதுகிறார்... 1984... இல், அதன் திருஷ்டியே கோணப்பட்டுவிட்டது போல ஒரு பஸ் ஒரு புறமாகச் சாய்ந்தபடி அங்கு வந்து நின்றது. பஸ் கால்படியில் தொத்திக் கொண்டிருந்த நான்கைந்து பேர் ஒரு சிறு இடைவெளிக்காக இறங்கிக் கீழே நின்றார்கள். அவர்கள் நடுவில் நுழைந்து சீதா பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் அவளுடைய உடலின் மேற்பரப்பைப் பகிர்ந்து கொண்டார்கள். (இன்று - அசோகமித்ரன்: 59) இன்றைக்கும் ஏற்புடைய சாஸ்வதமான எழுத்து. அவருடைய எள்ளல், அங்கதம், நகைச்சுவை சக்சிதமாக அளவெடுத்துத் தைத்த சட்டை போல. அவரது விவரணைகளோ ஒரு செங்கலைக் கூட இடையில் எடுத்துச், சொருக முடியாத கட்டமைப்பு. விவரணை passage to be read out here... விவரணை: காரியாலயத்திற்கு விடுமுறை என்றால் முகஷவரம் செய்து கொள்ளத் தோன்றாத மனிதன். முகத்தைக் கோரப்படுத்த அப்போதே நரைக்கத் தொடங்கிய தாடி மீசை போல எதாலும் முடியாது. ஆனால் அந்த ஆள் மனதிலுள்ள மீசை நரைக்கத் தொடங்கி வெகு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். மீசை முளைக்க ஆரம்பித்தபோதே நரை மயிராக இருக்க வேண்டும். (இன்று - அசோகமித்ரன்: 71) ஆனால் இதை நடத்துபவர்கள் நீண்ட கால அரசாங்க உத்தியோகம் ஏற்படுத்திய முகமாற்றத்தையும் நடை உடை பாவனைகளையும் உதறித் தள்ளி விட முடியவில்லை. அமைப்பாளர், அமைப்பாளரின் உதவியாளர், உதவியாளரின் உதவியாளரான ராமபத்திரன் எல்லாருக்கும் முகத்தில் அதிகாரமும் அச்சமும் உறுதியும் சந்தேகமும் கலந்த ஒரு சிலேடை முகபாவம். நினைத்தமாத்திரத்தில் பணிவு ஏற்படுத்திக் கொள்ளும் தோள்கள். (இன்று - அசோகமித்ரன்: 79) எள்ளல்: ஜெமினி ராஜாங்கத்தில் இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வேலையைச் செய்து கொண்டிருந்தேன். நான் விஷயம் தெரிந்தவன் என்று நம்பினார்கள். ஆனால் இதெல்லாம் ஒளவையார் படத் தயாரிப்பில் என்னைப் பங்கு கொள்ளவிடவில்லை. அந்த முதிய ஒளவையாரைப் பற்றி படமாக்கப்பட்டதை எல்லாம் நான் பார்த்தேன். ஒளவையாரின் பிறப்பு இரண்டு மணி நேரம் ஓடும் படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. ஒளவையாரின் இளமைப்பருவம் இரண்டு மணி நேரம் ஓடியது. ஒளவையார் உலக வாழ்வைத் துறப்பது இரண்டு மணி நேரம். ஒளவையார் பேயைச் சந்திப்பது இரண்டு மணி நேரம் - மன்னிக்கவும் நான்கு மணி நேரம். தாராள மனப்பான்மை கொண்ட நாட்டாண்மைக்காரர் வீட்டில் ஒளவையார் தங்கியிருந்தது பற்றி இரண்டு மணி நேரம். இது போல் பல இரண்டு மணி நேரங்கள். வாசன், தனது கதை இலாகாவைச் சேர்ந்தவர்கள் மதியம் தூங்கி வழிவதைப் பார்த்ததால், அவர்களிடம் 'ஒளவையாருக்காக ஏன் ஒரு சீன் எழுதக்கூடாது' என்று கேட்டுக் கொண்டதின் விளைவுதான் அது. (பயாஸ்கோப் - அசோகமித்திரன்: 93) இந்தக் காலத்தில் நீங்கள் முதல்வர்களையே படத்தில் நடிக்க வைக்க முடியும். ஆனால் 1953-ல் ராஜாஜி போன்ற ஒரு நபரை வெளிவரவிருக்கும் ஒரு திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு அழைப்பது என்பது ஸ்ரீகாந்த் வர்மா (ஒரு தீவிர காங்கிரஸ்காரர்) அவர்களை ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கலந்து கொள்ள வைப்பதைப் போன்றது அல்லது மொரார்ஜி தேசாயை, சிகரெட் பிடிக்கும் தம்பதியருக்கான போட்டிக்குத் தலைமை வகிக்க வைப்பதைப் போன்றதாகும். (பயாஸ்கோப் - அசோகமித்திரன்: 95) சொற்களை எளிதில் செலவிட்டு விடாத ராஜாஜி, முழுப்படத்தையும் மவுனமாகப் பார்த்தார். படம் முடிந்த பிறகு வாசனும் அவரது முக்கிய உதவியாளர்களும் அவரது ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். ராஜாஜி காரை நோக்கி நடந்தார். மவுனமாக ஏறிச் சென்றுவிட்டார். ஆனால் உலகம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே விஷயம், ராஜாஜி, 'ஒளவையார்' படம் முழுவதும் பார்த்தார் என்பது. (பயாஸ்கோப் - அசோகமித்திரன்: 97) ஒளவையார்: ஒருநாள் டாக்டர்களாகப் படம் பார்ப்பார்கள். அடுத்த நாள் இன்ஜினீயர்கள், அடுத்த நாள் நீதிபதிகள், இன்னொரு நாள் கல்லூரி முதல்வர்கள். ஒவ்வொரு நாளும் பார்த்தார்கள். மாலை 5மணி முதல், ஸ்டுடியோ கேட்டில் நின்றுகொண்டு எனது பெரிய தொள தொளத்த சட்டையையும், விரிந்த புன்னகையையும் அணிந்துகொண்டு கார்களில் வந்து குவியும் பிரமுகர்களையும் பெண்களையும் நான் வரவேற்பேன். (பயாஸ்கோப் - அசோகமித்திரன்: 98) என்ன சார் இது இவ்வளவு அருமையாக எழுதுறீங்க! அற்புதமான காவியங்களை எல்லாம் தமிழுக்குப் படைத்திருக்கீங்க. தமிழர்கள் உங்களைப் போதுமான அளவில் பாராட்டிக் கெளரவிக்கலியே' பிச்சமூர்த்தியிடம் தஞ்சை ப்ரகாஷ், தஞ்சை ப்ரகாஷ்க்கு பிச்சமூர்த்தியின் பதில்: (சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மெளனமும் - வே.மு.பொதியவெற்பன் : 88) 'பிரகாஷு தான்ளெ ஏமி உந்தி? லோகமந்தா இதுமாதிரிதானே கதா? உலகம் முழுவதும் வேறு காரியங்களைப் பார்க்கிறது தானே சகஜ உண்மை. குயில் கூவுகிறது, மயில் அகவுகிறது, எருமை கத்துகிறது எருக்கும் பூக்கிறது. யார் என்ன செய்ய, லோகம் இப்லனே ஜரிகிதுந்தீ லபம் வத்சர யுகயுகாந்தர இதே கதி - இதுக்காக நாம் கோவிச்சுக்கக் கூடாது அபத்தம்.' (சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மெளனமும் - வே.மு.பொதியவெற்பன் : 89) ஒரே ஒரு தாளாத வருத்தம் அசோகமித்திரனுக்கு, ஞானபீட விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொடர

அண்மை

குறுஞ்செய்திகள்

தொடர்பு கொள்க

தென் சென்னை நாடாளுமன்ற
உறுப்பினர் அலுவலகம்

எண் 115, Dr முத்துலெட்சுமி சாலை,
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13,
அடையார், சென்னை - 600 020

புது தில்லி இல்லம்

சி-3, சிந்து அபார்ட்மெண்ட்,
எ பிளாக், எம் எஸ் பிளாட்ஸ், பி கே எஸ் மார்க்,
புது டெல்லி - 110 001

© 2022 தமிழச்சி தங்கபாண்டியன்.