நூல்கள்

என்னை எழுதிய பாத்திரங்கள்

அவளுக்கு வெயில் என்று பெயர்

என்னை எழுதிய பாத்திரங்கள்

தமிழச்சி தங்கப்பாண்டியனின் கவிதை வெளி

உயிர்மை பதிப்பகம்

எஞ்சோட்டுப் பெண் கவிதைத் தொகுப்பு முதலாகத் தமிழச்சிக்குத் தெளிவான தீர்மானம் இருக்கிறது. உலக மொழிகளில் கொண்டாடப்படுகிற சிறந்த கவிதைகள் குறித்து நன்கறிந்திருந்தும், அவருடைய மனம் அசலானது எனக் கருதுவதைக் கவிதையாக்குவதில் இருந்து ஒருபோதும் பின் வாங்கவில்லை. அதுதான் தமிழச்சியின் தனித்துவம். உலகமயமாக்கல் காலகட்டத்தில், தொன்மையான தமிழ் மொழி, தனது அடையாளத்தையும், இருப்பையும் எப்படி தக்கவைக்கப் போகிறது என்ற கேள்வி முக்கியமானது. இந்நிலையில் நினைவுகளின் வழியே மிதந்திடும் தமிழரின் பாரம்பரியத்தையும், சமகாலத்தையும் தமிழச்சி கவிதைகள் மூலம் மீண்டும் பதிவாக்கியிருப்பது, இன்றைய தேவை. தமிழச்சி, கவிதைகள் மூலம் தமிழ்ச் சமூகத்துடன் தொடங்கியுள்ள பேச்சுகள் குறித்து மறுபேச்சுகளை உருவாக்கிட முயன்றுள்ள விமர்சகர்களின் எழுத்துகள், அவரின் கவித்துவத்துவ ஆற்றலையும், பன்முகத்தன்மையையும் புரிந்திட உதவுகின்றன. ந. முருகேசபாண்டியன்

தொடர

சொட்டாங்கல்

உயிர்மை பதிப்பகம்

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தமிழச்சி தங்கபாண்டியன். எப்போதும் மண் வாசமடிக்கும் அவரது எழுத்துகளில், மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள் அமர்ந்திருப்பதை தமிழ் வாசகர்கள் நன்கறிவர். ‘இந்து தமிழ் திசை’யின் ஓர் அங்கமாக ‘காமதேனு’ வார இதழை கொண்டுவந்தபோது, தமிழச்சியின் மண் மணச் சாரலடிக்கும் எழுத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று எங்கள் ஆசிரியர் குழு முடிவு செய்தது. ‘சொட்டாங்கல்’ எனும் தலைப்பில் அவரது பால்யம் சுமக்கும் எழுத்து, தொடராக வெளிவந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர

நிழல் வெளி

உயிர்மை பதிப்பகம்

பின்காலனிய மற்றும் புலம்பெயர் கோட்பாடுகள் சார்ந்த விவாதங்களின் அடிப்படையில், மக்கின்ரயரின் நாடகங்களை இப்புத்தகம் மிகக் கவனமாக அணுகுகிறது. அதேசமயம், இலங்கையின் புலம்பெயர் வரலாற்றுப் பின்னணியையும் கவனத்தில் கொண்டிருக்கிறது. இடப்பெயர்ச்சி நிகழ்வானது, தாயகத்துடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதையும், புலம் பெயர்ந்த நாட்டின் சமூக-அரசியல் சூழலை இனம், மொழி, வர்க்கம் ஆகிய குறிப்பிட்ட வேறுபாடுகளை மிகச் சரியாகக் கவனத்தில் கொண்டும் பரிசீலிக்கிறது. மக்கின்ரயரின் அங்கத நாடகங்கள் ஆஸ்திரேலிய மற்றும் இலங்கைப் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் செய்திகளை மிகத் தெளிவாகக் கண்டடைகிறது. இரண்டு நாடுகளுக்கிடையேயான இலக்கிய அறிவுப் புலத்தில் இப்புத்தகம் ஒரு முக்கியமான சேர்க்கை. மக்கின்ரயரின் படைப்புகள் வெகுவாக அறியப்படவும் போற்றப்படவும் வேண்டியவை. இப்புத்தகம் அதை நிறைவேற்றக்கூடிய பெறுமதி மிக்கது. பேரா.பால் ஷராட், ஆங்கில இலக்கியம்/கலைகள், வொல்லோகாங் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா.

தொடர

கல்லின் கடுங்கோபம்

உயிர்மை பதிப்பகம்

மரியா ரேமோந்தஸ் கலீசிய மொழியில் எழுதிய கவிதைகளை தமிழச்சி தங்கபாண்டியனின் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது கவிதையில் பெண் மொழிக்கு ஒரு சர்வதேச பொதுத்தன்மை இருப்பதை உணர முடிகிறது. நிலத்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும் கடக்க முடியாத கோபமும் ஆதங்கங்களும் கொண்டது இப் பொதுத்தன்மை. மரியாவின் கவிதைகள் பண்பாட்டின் நுண்ணிய தளங்களில் நுட்பமாகவும் அதேசமயம் உரத்த குரல்களிலும் உரையாடுகின்றன. கலீசிய மொழியில் இருந்து ஒரு கவிஞரின் கவிதைகள் தமிழுக்கு வருவது இதுவே முதல்முறை.

தொடர

அவளுக்கு வெயில் என்று பெயர்

உயிர்மை பதிப்பகம்

சங்கச் சித்திரங்களின் ஈர்ப்பும் அரவணைப்பும் தமிழச்சி கவிதைகளின் அநேக இடங்களில் இணையாகவும் எதிரொலி யாகவும் வெளிப்படுகின்றன. இந்தத் தொகுப்பே திணைகளின் வரிசை போல் பொருள் அடிப்படையில் வெவ்வேறு தலைப்புகளில் ஓர் உத்தேசத்துடன் பிரிக்கப்பட்டிருக்கின்றன. - கவிஞர் வைதீஸ்வரன் ஆயர்களின் கவிதை என்று உலகக் கவிதை வரலாற்றில் குறிப்பிடப்படும் தொன்மையான ஒரு கவிமரபை தமிழச்சி தனது அவளுக்கு வெயில் என்று பெயர் எனும் தொகுதியின் மூலமாக தற்காலக் கவிதைப் பரப்புக்குள் நீட்சித்துக் கொண்டுவருகிறார். இது சங்க காலத்தின் தொன்மையான தமிழ் அழகியல் மரபு மட்டுமல்ல, கிரேக்கக் கவி தியோகிளிட்டசும், ரோமானிய கவி விர்ஜிலும், ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியரும், ஸ்பென்சரும், பிரெஞ்சுக் கவி மேரொட்டும் தொடரோட்டமாக ஓடிவந்தபோது கொண்டுவந்த தீப்பந்தத்தைத்தான் இன்று தமிழச்சி தனது கரத்தில் ஏந்தி நடக்கிறார். - கலை விமர்சகர் இந்திரன் மண்ணைவிட்டு மிதக்கின்ற இருண்மை சார்ந்த கவிதை வரிகளைச் சிலாகிக்கின்ற தமிழிலக்கியச் சூழலில் மண்ணையும் நிலவெளியையும் முதன்மைப்படுத்துவதில் தமிழச்சியின் கவிதைகள் தனித்து விளங்குகின்றன. இயற்கையான சூழலியல் சார்ந்து தனது இருப்பினைக் கண்டறிந்துள்ள தமிழச்சியின் மனம், கோட்பாடுகளுக்கப்பால், அசலானவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது. விருப்பு வெறுப்பு சார்ந்த நிலையில், அவர் முக்கியமானதாகக் கருதுகின்றவற்றைக் கவிதையாக்கியுள்ளார். உலகமயமாக்கல் சூழலில் பண்டைத் தமிழரின் தொன்மையான நவீனப் படைப்புகளில் மீண்டும் மீண்டும் பதிய வைப்பது இன்றைய தேவையாக உள்ளது. இந்த இடத்தில் தமிழச்சி தனது கவிதைகள் மூலம் தமிழ்ச் சமூகத்துடன் தொடங்கியுள்ள பேச்சுகளில் பொதிந்துள்ள நுண்ணரசியல் கவனத்திற்குரியது, அவசியமானதும்கூட. - விமர்சகர் ந.முருகேசபாண்டியன்

தொடர

பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை

உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 11 Jan 2015

தமிழச்சி தங்கபாண்டியன், மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வரை தமிழ் இலக்கியப் பிரதிகளினூடே மிக விரிவான பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார். தனது மொழியில் இயங்குகிற படைப்பாளிகளை இப்படி இடையறாமல் கொண்டாடுவதற்கு படைப்பின்மீதும் படைப்பாளிகள்மீதும் ஒரு பேரன்பு இருக்க வேண்டும். தமிழச்சியிடம் அந்தப் பேரன்பு இருக்கிறது. ஒரு விமர்சகராகவும் படைப்பாளியாகவும் ஒவ்வொரு பிரதியின் ஆதாரமான இழைகளை நெருங்கிச் சென்று தொடுகிறார். அந்த வகையில் நவீனத் தமிழ் விமர்சன மரபிற்கு தமிழச்சி ஓர் ஆழமான அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

தொடர

மண்வாசம்

விகடன் பிரசுரம்

விகடன் குழுமத்தில் இருந்து ‘டாக்டர் விகடன்’ ஆரம்பிக்க முடிவான நேரம். மருத்துவ விஷயங்களில் வாசகர்களை மிரட்சிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக டாக்டர் விகடனில் சுவாரஸ்ய எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என ஆலோசித்தோம். அந்தக் கணத்தில் முதல் ஆளாக மனக் கண்ணில் வந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன். ‘‘கிராமிய மருத்துவங்களைப் பற்றி எழுத முடியுமா?’’ எனக் கேட்டபோது, தமிழச்சியிடத்தில் அப்படியொரு பூரிப்பு. சொலவடையாக, மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களையும் தமிழச்சி விவரித்தபோது, கண்முன் விரிந்த கிராமங்கள் நிறைய! படிப்பாளி, படைப்பாளி என உயரிய அடையாளங்களைச் சுமக்கும் தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பது இன்றைய பரபர உலகில் பார்க்க முடியாத அபூர்வம். அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், அவர்கள் இவரிடம் பகிரும் வாஞ்சையும் உடல் சுளித்து ஓடும் அணிலாக மனதுக்குள் விரிகிற காட்சிகள். மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் வார்த்தைச் சாயல் மாறாமல் தமிழச்சி எழுதியிருக்கும் விதம், வேறு எவருக்குமே கைவராதது. கிராமப் பத்தாயங்களில் இருந்து சொலவடைகளைச் சேகரித்து வெகுஜனப் பார்வைக்கு வைத்து, அதன் வழியே கிராமிய மனசை அடையாளப்படுத்தி இருக்கிறார் தமிழச்சி. மண், மருத்துவம், மனசு என தனக்கு மிகப் பிடித்த விஷயங்களை வாசகப் பார்வைக்கு வைக்கும் தமிழச்சி, உலகின் பேரற்புதங்களின் திசையாக கிராமங்களையே காட்டுகிறார். மகத்துவத் தமிழில் மருத்துவத்தையும் மனத்துவத்தையும் ஒருசேரச் சொல்கிற நுணுக்க நடையைப் படித்துச் சிலிர்க்கிறபோது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது, பார்க்கும்போதெல்லாம் அழகிய தமிழச்சி... படைக்கும்போதெல்லாம் அசத்திய தமிழச்சி!

தொடர

Island to Island

Emerald Publishers
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

This book carefully locates Macintyre’s plays within the critical debates around postcolonial and diaspora theories and also within the particular diaspora history of Sri Lanka. Examining “how displacement relates to homeland” and to the socio-politics of the adoptive country, it appropriately keeps in mind specific differences of ethnicity, language and class, and traces the messages in Macintyre’s satirical plays for both Australian and Sri Lankan audiences. It is an important addition to the literary scholarship of both countries. Macintyre’s work deserves to be much better known and this book is a worthy means to achieve this. Prof. Paul Sharrad, English Literatures / Arts University of Wollongong, Australia.

தொடர

மயிலிறகு மனசு!

விகடன் பிரசுரம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துக்களின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். எழுதிக் குவிக்கும் இயந்திரத்தனத்தில் இத்தகைய எழுத்துக்கள் எப்போதாவது - எவரிடம் இருந்தாவது வெளிப்படும். தமிழச்சியிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் ‘மயிலிறகு மனசை’ப்போல்! ‘மயிலிறகு மனசு’ எனத் தலைப்பிட்டதாலோ என்னவோ... மிக மெல்லியத் தூரலைப்போல் நம்மை மிதக்க வைக்கிறது அவருடைய எழுத்து. கட்டுரைக்கான கட்டமைப்பிலும் கவிதைத்தனம் நிகழ்த்தியிருப்பது கைகுலுக்கத்தக்கது. நமக்கு மிக நெருக்கமான நண்பர்களிடத்தில் நம் எண்ணச்சாயல் நிச்சயம் இருக்கும். அறுபடாத ஆத்மார்த்த நட்பை அந்த எண்ணச்சாயலே ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் தமிழச்சி அறிமுகப்படுத்தும் அத்தனை தோழிகளிடத்திலும் எளிமை, நேர்மை, யதார்த்தம் எனத் தமிழச்சியின் பிரதிபலிப்புகளையே பார்க்க முடிகிறது. தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப்போல் அடம்பிடிக்கவும் கற்றுவைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அதனால்தான் அன்பின் அவசியத்தைப் பெருமையாகவும், ஏக்கமாகவும் ஒரே நேரத்தில் அவரால் எடுத்துவைக்க முடிகிறது. ஒரு பூக்காரப் பெண்ணையும் தன் ரத்தம் பிரித்த மகளையும் ஒரே தட்டில்வைத்துப் பாசம் பாராட்டும் பக்குவம் தமிழச்சிக்கு வாய்த்திருப்பது வரம். நடிகை ரோகிணி தொடங்கி தன் வீட்டு வேலைக்காரப் பெண் பாண்டியம்மா வரை தமிழச்சி விவரிக்கும் நட்பும் நெகிழ்வும் அலாதியானவை. ‘சமயங்களில் வாழ்வின் விழுமியங்களை, அதிகம் படிக்காத அன்பானவர்களே நமக்குக் கற்றுத் தருகிறார்கள் - போகிறபோக்கில் ஒரு மாம்பூ மேலுதிர்வதுபோல்!’ என்ற வரிகளில் தமிழச்சியின் எழுத்து தோகை விரித்து ஆடுகிறது. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏராளமான இதயங்களைக் குத்தகைக்கு எடுத்த இந்தப் படைப்பு, நூல் வடிவில் நிச்சயம் உங்களையும் ஒரு பூனைக்குட்டியாக மாற்றும்!

தொடர

அருகன்

உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரபின் சாரத்தீற்றல்கள் துலங்க வளைய வருபவை தமிழச்சியின் படைப்புகள். போகிற திசையெல்லாம் ஒரு வெளிச்ச வெளியை மலர்த்திவிட்டுப் போகிறது தமிழச்சியின் உலகம்.

தொடர

காலமும் கவிதையும்

உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

தற்காலத்தில் கவிதையைப் படிக்கவோ, கவிதை நூலை வாங்கவோ ஆளில்லை என்ற நிலையை மாற்றியிருக்கிறது தமிழச்சியின் கவிதை நூல்கள். அவருடைய கவிதைகள் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் அதிகமாகப் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும், இருக்கின்றன. இது அவருக்குக் கிடைத்த கெளரவம் அல்ல, அவரது கவிதைக்கு - தமிழ்க் கவிதைக்குக் கிடைத்த கெளரவம். தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரும் தமிழச்சியின் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் பரவலான கவனிப்பும், அங்கீகாரம் என்பதும் படைப்பின் தரம் சார்ந்தே நிர்ணமாகிறது. தற்காலத்தில், தமிழின் மிக முக்கியமான கவிஞர் தமிழச்சி என்று கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், இமையம், ந. முருகேசபாண்டியன், அ. ராமசாமி, பிரம்மராஜன், த.பழமலய், அறிவுமதி, க.பஞ்சாங்கம், பிரபஞ்சன், சுதீர் செந்தில், வெங்கட்சாமிநாதன், சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், பத்மாவதி விவேகானந்தன், கே.ஆர். மீரா போன்றோர் கூறியிருக்கிறார்கள். இவர்கள் கூறுவது தமிழச்சிக்காக அல்ல, அவருடைய கவிதைக்காவே என்பதை 'காலமும் கவிதையும்' நூலைப் படிக்கும்போது நாம் அறியலாம். இந்த விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு நூல் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய வாசல்களைத் திறந்துவிடும்.

தொடர

சொல் தொடும் தூரம்

உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

நான், இக்கட்டுரைகளை விமர்சகராக வேண்டுமென்ற நோக்கில் எழுதவில்லை. விமர்சகராக மாறவேண்டும் என்பது எனது ஆசையுமில்லை. பல விஷயங்கள் கவனப்படுத்தாததன் காரணமாக அழிந்து போயிருக்கின்றன. நாம் பல விஷயங்களில் இன்னும் பல்வேறு காரணங்களினால் தயக்கத்துடனே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தயக்கத்தினால் கவனப்படுத்த வேண்டியதைக் கவனப்படுத்தாமலும் இருக்கிறோம். புறந்தள்ள வேண்டியதை முன்னிலைப்படுத்துகிற முரண்பாடான காரியங்களும் நடக்கின்றன. நான் அறிந்தவற்றை, முக்கியமென்று கருதியவற்றைக் கவனப்படுத்த விரும்பினேன். - தமிழச்சி தங்கபாண்டியன்

தொடர

பாம்படம்

உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

இன்று நகரமாக இருப்பவை நேற்றைய கிராமங்களே. மனிதர்களை மட்டுமல்ல, இடங்களையும் நாம் தீண்டாதவையாக மாற்றி வைத்திருக்கிறோம். நகரம் அதற்குரிய இயல்பில் இருக்கிறது. கிராமம் அதற்குரிய ஒழுங்கில் இருக்கிறது. உயர்ந்தது, தாழ்ந்தது என்பது நோய்க்கூறு கொண்ட மனங்களின் வெளிப்பாடு...

தொடர

காற்று கொணர்ந்த கடிதங்கள்

உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்களைவிட எழுத்தின் வழியே பேசுவது என்பது நீடித்த, நிலைத்த பேச்சாக இருக்கிறது. சில கடிதங்கள், நம்மை உணர்விழக்கச் செய்கின்றன. என்னை அறிந்தவர்களும், அறியாதவர்களும் எனக்கு எழுதிய கடிதங்கள் அளித்த மகிழ்ச்சியை, உற்சாகத்தை, விமர்சனத்தை நான் எளிதில் இழக்க முடியாது. அந்த உணர்ச்சிகளை, சிலிர்ப்பை அப்படியே பாதுகாக்க விரும்பினேன். - தமிழச்சி தங்கபாண்டியன்

தொடர

நவீனத்துவவாதி கம்பன்

அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

நாட்டுப்புற வாழ்க்கையை நுகர்ந்த பால்யகாலத்துக்கும், நகர்ப்புற நெரிசலில் பதைக்கும் நிகழ்காலத்தும் இடையே, மனம் அங்கும், உடல் இங்குமாக முறுக்கிப் பிழியும் அனுபவங்களின் நோவும், நொம்பலமும் தமிழச்சியின் கவிதை பிரபஞ்சமாகின்றன. முரண்களின் மோதலே வளர்ச்சி என்பதால் கவிதையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் அதுவே காரணம். முன்னைப் பழைமையோடு முரணுவதால் பின்னைப் புதுமை விளைகிறது. இதை மிகச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார் தமிழச்சி. தமிழன் என்ற அட்சரேகையும், மனிதம் என்ற தீர்க்க ரேகையும் இவர் கவிதையில் சந்திக்கின்றன. -சிற்பி பாலசுப்பிரமணியம்

தொடர

மஞ்சணத்தி

உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

நகுலனின் ‘சுசீலா’ போலவும் கலாப்ரியாவின் ‘சசி’ போலவும், தமிழச்சியின் ‘வனப்பேச்சி’ பல அர்த்தங்களை ஒருங்கிணைத்த, ஆதீத ஆற்றலுள்ள உருவமாகிறாள்… ‘மஞ்சணத்தி மரம்’ போன்ற கவிதைகளில் வரும் ஆற்றல், ஒரு அரூவமான மொழிச்சக்தியாகும். தமிழச்சி ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியாவில் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், ஆங்கிலத் துறையினர் மூலம்தான் ‘மாடர்னிசம்’ அவர்கள் அவர்கள் மொழிகளில் நுழைந்தன. தமிழச்சி கவிதைகள் நேர்மாறாக மாடர்னிசத்தைத் தாண்டி நிற்கின்றன… தமிழச்சி, தமிழ்க்கவிதை குவலயமயமாகும் தருணத்தில், பிராந்தியத்திலிருந்து ஒரு வனப்பேச்சி உருவாக்கிக்கொண்டு வருகிறார். இதுவும் பின் நவீனத்துவத்தின் கிழக்கத்திய போக்குத்தான். -தமிழவன் வனப்பேச்சியின் கதகதப்பில் பாவாடை மண்ணில் புரள இளவரசி போல் கிராமத்தில் வாழ்ந்த ஒரு குட்டிப் பெண் நகரைச் சரணடைந்து, தாயாகி, நகரின் வெறுமையும், நாடு கடந்து தமிழ்ச்சாதி சந்திக்கும் சிறுமையும் கண்டு, தன் ஆதிக் கொள்கைகளைக் கைவிடாமல் நம்பிக்கையுடன் கவிதையில் இயங்கிக்கொண்டிருக்கிற தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் மென்மேலும் மெருகேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது - கலாப்ரியா

தொடர

பேச்சரவம் கேட்டிலையோ

உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

திராவிட இயக்க அரசியலின் முற்போக்கான சாராம்சத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம்தலைமுறையைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் அக்கறைகள் பரந்துபட்டவை. கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராகப் பணியாற்றிவரும் அவர் தனது நம்பிக்கைகளை மிகத் தெளிவாக இந்த நேர்காணல்களில் முன்வைக்கிறார். விவாதங்களை திறந்த மனதுடன் எதிர்கொள்ளும் நேர்த்தியும் தனது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காத உறுதியும் அவரது உரையாடல்களுக்கு உயிரூட்டுகின்றன. மனத் தெளிவும் நேர்மையும் கொண்ட இந்தப் பேச்சுகளின் வழியே தமிழச்சி ஒரு தனித்துவமான ஆளுமையாக வெளிப்படுகிறார்.

தொடர

வனப்பேச்சி

அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

தகிக்குமொரு உக்கிரத்தனிமையால் தமிழச்சியின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர்பிராயத்தினருடையது போன்ற தனிமை அனுபவமல்ல. உணர்வுலகினைப் புரிந்து பகிர இயலாத கையறுநிலையால் உணரப்படும் தனிமை தமிழச்சியினுடையது. பலர் கூடியிருக்கையிலும் ஒருவர் தன்னுணர்வு உணர்ந்து அறுபட்டுத் தொலைந்து போகும் மனநிலையது. -பிரம்மராஜன்

தொடர

எஞ்சோட்டுப் பெண்

அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட தேதி: 14 Jan 2013

“அடுக்கு மாடிகள் நிறைந்த கட்டிடக் காட்டில் வாழ்ந்தாலும் அடுக்குப் பானைகளுக்குள் தமிழ்தொன்மம்தேடி அள்ளித்தருகிற தமிழச்சியின் கசிதைப் பணி தொடரட்டும்” -அறிவுமதி “உறவுகளையும் ஊர் மக்களையும் எண்ணித் தாய் என்றும் தாயுமான தந்தை என்றும் உருகி உருகிக் கவிஞர் தமிழச்சி எழுதியிருக்கும் இக்கவிதைகளின் பொழிவு உலர்ந்த இதயங்களிலும் ஒரு கனமழையாக இறங்குகிறது” -த. பழமலய் “கிராமியச் சூழலில் சுற்றிவர நகர்ந்த வெறும் மனிதர்களைத் தன்னுடன் உறவிறுத்தி தமிழச்சி எழுதியிருக்கும் கவிதைகள் நேர்மையான தொடர்புகையின் சத்திய மீட்டலாயிருப்பதால்தான் இரும்புத் தரமும் / தனமும் பெறுகின்றன.” -அளவெட்டி சிறீசுக்கந்தராசா

தொடர

அண்மை

குறுஞ்செய்திகள்

தொடர்பு கொள்க

தென் சென்னை நாடாளுமன்ற
உறுப்பினர் அலுவலகம்

எண் 115, Dr முத்துலெட்சுமி சாலை,
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13,
அடையார், சென்னை - 600 020

புது தில்லி இல்லம்

சி-3, சிந்து அபார்ட்மெண்ட்,
எ பிளாக், எம் எஸ் பிளாட்ஸ், பி கே எஸ் மார்க்,
புது டெல்லி - 110 001

© 2022 தமிழச்சி தங்கபாண்டியன்.