கட்டுரைகள்

என்னை நிறுவும் மணித்துளிகள்

காதலே காலத்தின் சிறந்த முதலீடு எனும் போது உலகெங்கிலும் இவ்வுணர்வில் ஒத்து ஒலிப்பதே காதல் கொண்ட பெண்குரலோ எனத் தோன்றுகிறது

தொடக்கம், சுருக்கம், நிறைவு !

பெண்ணியப் பார்வையில் ஆண்கவி உலகு

படைப்புத் துறையில் இயங்குகின்ற ஒரு பெண்ணாகச் சக ஆண் கவிஞர்களது படைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும் சமயங்களில் அவை குறித்துப் பகிர்தலும் மிக முக்கியமான செயல் என்று நான் கருதுகின்றேன். நான் ஒரு பிரதியோடு சந்திப்பு கொண்டு, வெளியே எடுத்து வருகின்ற 'உள்ளார்ந்த அறிவின்' மீது இலக்கியத் திறன் தனது கவனிப்பைச் செலுத்துகிறது. நான் ஒரு வாசகி என்பதை விட ஒரு பெண் வாசகி என்பதும், பெண்கள் எழுதுகின்ற பிரதிகளைப் படிப்பதற்கும், ஆண்கள் (மிகக் குறிப்பாக இங்கு ஆண் கவிஞர்கள்) எழுதுகின்ற பிரதிகளைப் வாசிப்பதற்குமான சிற்சில வேறுபாடுகளை, அதிர்வுகளைத் தொட்டுச் செல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இரண்டு மிகப் பெரிய சவால் பரப்புகள் என் முன்பு. முற்றிலும் இறுதியென அறுதியிடப்படாத / 'பெண்ணியம்' & 'ஆண் கவி உலகு' - இவற்றிடையேயான பயணம் என்பது ஒரு முழுமைப்பட்ட பார்வையாக இருக்க இயலாது என்பதால் - I accept with humbleness - I am restricting myself to situate, participate & point out few junctures - in this process. இங்கு நான் ஜானதன் கல்லருடைய மிக முக்கியமான கூற்றொன்றைச் சுட்ட விரும்புகிறேன். ஷேக்ஸ்பியரின் சமகாலத்து வாசகனுடைய எதிர்பார்ப்பகளிலிருந்து வேறுபட்ட எதிர்பார்ப்புகளோடு 1990களின் வாசன் 'ஹேம்லட்'டை அணுகுகிறான். வாசகர்களுடைய எதிர்பார்ப்பு எல்லைகளைப் பல்வேறுபட்ட காரணிகள் பாதிக்கலாம். வாசகர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது என்ன வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது, அது என்ன வேறுபாட்டை உண்டு பண்ணவேண்டும் என்று பெண்ணிய விமர்சனம் சர்ச்சித்துள்ளது. 'ஒரு பெண் வாசகர் என்ற கருதுகோள் (hypothesis) ஒரு பிரதியின் பாலியல் சங்கேதங்களுடைய தனிச்சிறப்பின் மீது நம்முடைய கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரதியைப் பற்றி நம்முடைய புரிந்துகொள்ளலை எவ்வாறு மாற்றுகிறது?' என்று எல்ய்ன் ஷோவால்டர் (Elaine Showalter) கேட்கிறார். இலக்கியப் பிரதிகளும் அவை பற்றிய பொருள் விளக்கங்கள் குறித்த மரபுகளும் ஒரு ஆண் வாசகரையே கற்பித்தில் கொண்டிருப்பதாகவும் ஒரு ஆணின் கருத்துப் பார்வையில் பெண் வாசகர்களையும் (பிரதிகளை) வாசிக்கத் தூண்டுவதாகவும் தோன்றுகின்றன. எவ்வாறு படைப்புகள் பல்வேறு யுக்திகள் மூலம் ஆண்மயப் பார்வையை நியதியாக்குகின்றன என்பதைப் பெண்ணிய விமர்சகர்கள் இலக்கிய ஆய்வில் ஆராய்ந்துள்ளார்கள். அவ்வகைக் கட்டமைப்புகள் மற்றும் விளைவுகள் குறித்த ஆய்வு, பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் கூட எவ்வித வாசிப்பு முறைகளை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் சர்ச்சித்துள்ளார்கள். (இலக்கியக் கோட்பாடு, 101) இப்படி வாசிப்பு முறைகளை மாற்றவேண்டும் என்கின்ற பட்சத்தில் ஒரு பெண் வாசகியாக, ஆண்களது கவி உலகு (தமிழ் இலக்கியப் பரப்பில்) எவ்வாறு எனக்கு அறிமுகமாகின்றது, அர்த்தப்படுகின்றது, பகிரப்படுகின்றது என்பதை விவாதிப்பதே எனது நோக்கம். பெண்ணியப் பார்வை என்பது - மிகக் குறிப்பாக ஆண்மையக் கருத்தாடல்களின் புரிதலும், அதனைத் தகர்க்கின்ற தெளிவும், கூடுதலாக ஆணைப்புரிந்து கொள்கின்ற தன்மையும், ஒன்றிணைந்த, பெண்ணிய நோக்குள்ளது என்பதே இங்கு மிக முக்கியம். தமிழ்க் கவிதை வரலாறு மூவாயிரமாண்டு பாரம்பர்யம் உள்ளதெனும் போது, அதன் ஆண் கவி உலகை ஒரு பிடியில் அள்ளுவது என்பது பூனை கடலைக் குடிக்க எண்ணுவது போலத்தான். ஒரு வசதி கருதி கடந்த 10 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆண் கவிஞர்களது படைப்புகள் என வரையறுத்துக் கொண்டாலும் கூட - அது எவ்வகையில் மிகச் சரியான அணுகுமுறை என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. ஆகவே, நான் கால வரையறை, குறிப்பிட்ட சில கவிஞர்கள் போன்ற சட்டகங்களை விடுத்து, என் பார்வைக்குக்கிட்டிய, கைப் பரப்பில் கிடைத்த புத்தகங்களிலிருந்து சில கவிதைகளைக், கவிஞர்களைச் சுட்டுகிறேன். தவிர்க்கப்பட்ட, விலக்கப்பட்ட, மறக்கப்பட்ட கவிஞர்கள் என்கிற வார்த்தைகளை இங்கு தயவுசெய்து கற்பிதம் செய்து கொள்ளக் கூடாது. இது ஒரு சிறு முன்னோட்டம் - முழுமை பெற்ற ஒரு கருத்தாக்கக் கட்டுரை அல்ல! இத்தலைப்பு பெரும் கடல். கடற்கரையில் நின்று சிப்பியைக் கூட இதில் பொறுக்க முடியாது. நுரைப் பூக்கள் சிலவே உங்கள் பார்வைக்கு இங்கு! மேலும் கவிதைப் பரப்பில் இயங்குகின்ற ஒரு பெண் மட்டுமே நான் என்கிற தெளிவும், சிறந்த படைப்பாளி அல்ல என்கின்ற புரிதலும் எனக்கு உண்டு! ஒரு பெண்ணாக ஆண் கவி உலகை அணுகும்போது "ஓரு பிரதியின் அர்த்தம் என்பது அதனுடைய வாசகனின் அனுபவம்" என்கிற கூற்று முன்நிற்கின்றது. இங்கும், நான் ஜோனதன் கல்லரின் மிக முக்கியமான இந்தக் கேள்வியை முன்வைக்கின்றேன் - "நோக்கம், பிரதி, சூழமைவு, வாசகன் - இவற்றில் எது அர்த்தத்தைத் தீர்மானிக்கிறது?" எடுத்துக்காட்டாக - ரவி சுப்ரமண்யனுடைய பின்வரும் இக்கவிதைகளைப் பாருங்கள் – பெண் ஒட்டிக் கொண்ட மகரந்தங்கள் சூல் கனத்துக் கொண்டிருந்தது பொழுதுகளை இதமாக்கிய பிரமையில் இருந்த போதுதான் மனச்சுவர்கள் அதிர்ந்து நொறுங்க வந்து விழுந்தது அச் சொல் இலக்கு தவறாது வெடித்த அச்க்ஷணத்தின் அதிர்வு கொடூரமானது பின் ஒரு நிலையில் இருக்க விடாதபடி உலுக்கி எடுக்கும் அடி வயிற்றை துளைக்கும் வலி உதறிக் கதற முடியாதபடி தவித்துத் திமிறின மடக்கிக் கட்டிய கால்கள் அசைத்து அசைத்து அரற்றும் ஆகிருதியை அழுத்திப் பிடித்தபடி கரங்கள் தளதளக்கும் பனிக்குடத்தின் பிசுபிசுப்பு கசிகிறது உக்கிரம் கொண்ட வலி தொண்டை வரள சபிக்கிறது 'மூச்சை இன்னும் இழுத்து விடு பல் கடித்து இன்னும் அழுத்தி இன்னும் அழுத்தி....இழுத்து விடு' வாதை நிரம்பிய இரவு நீண்டு கொண்டே யிருக்கிறது திடீரென குத்துப் பட்டது போல் கிழிபட்டு வீறிட மயக்கமும் நிசப்தமும் சுருட்டிப் போட்ட அழுக்குத் துணியாய் துயர் வடியாத நிர்வாணத்தோடு உதடு கடித்தபடி மெல்லக் கண் திறந்த அவள் முன் கொழகொழப்பும் ரத்தமும் திருத்தப் படாத நஞ்சுக் கொடியுமாய் தாதி காண்பித்தபோது அவள் கையில் இருந்தது கடவுளின் கருணை. சீவு சிக்கெடு அலங்கரி சிரி பூட்டு பூசு உடுத்து பளபளப்பெல்லாம் கூட்டு எல்லாம் அவிழ்க்கத்தான் இவை இரண்டுமே ஒரு பெண்ணாலும் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற பொதுத்தன்மை கொண்டவை - இன்றைக்குப் பாலுமை, மாற்றுப்பாலினம், ஒருபால்புணர்ச்சி முதலியனவை அடைந்துள்ள மாற்றங்கள், அவற்றிற்கான அங்கீகாரங்கள் - இவற்றை முன்வைத்துப் பார்க்கும்போது - அந்த இரண்டாவது கவிதை ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து எழுதுவதாகவும் இருக்கலாமே என எனது பெண் வாசக மனம் கேட்கிறது. இந்தக் கவிதையை எழுதிய ஆண் கவி மனதை முதற் கவிதைக்காகக் கொண்டாடும் பெண் வாசக மனம், இரண்டாவது கவிதையைப் பெண்ணிய நோக்கில் கடுமையாக உதாசீனம் செய்யும். அப்படியெனில் - அந்த ஆணின் கவி உலகை எதனை வைத்து நான் அளக்க? நோக்கம், பிரதி, சூழமைவு, வாசகன் - இவற்றின் எதன் துணையோடு நான் பயணிக்க? அக்கவிதைகளின், 1. நோக்கம் - இரண்டிலும் வெவ்வேறான ஒன்றைச் சுட்டுகின்றன. முதல் கவிதை அச்சொட்டாகப் பெண்ணின் உடல், மன, ரீதியான பிரசவ அழுத்தமும், ஆசுவாசமும் குறித்துப் பேசுகிறது. இரண்டாவது - புணர்ச்சிக்கான தேவையை, நடைமுறையை மிக யதார்த்தமாகச் சொல்கிறது. 2. பிரதி - இரண்டு பிரதிகளுமே இப்பின்நவீனத்துவக்காலக் கட்டத்தில், மறுவாசிப்பில் வேறு அர்த்தம் தருகின்றவை. முதல்கவிதையில், தாய்மை என்கின்ற பண்பைச் சிலாகித்துப், போற்றி, பிரசவித்தலைப் புனிதமாக்கி, குழந்தைப் பிறப்பினைக் கருணை என்பதை - காலம் தோறும் கட்டமைக்கப்பட்ட ஆண் மையக் கருத்தாடலாகப் பார்க்கலாம் - மறுவாசிப்பில்! இரண்டாவது கவிதையைத், தன்பாற்புணர்ச்சியை விரும்புகின்ற ஒரு பெண்ணோ, ஆணோ எழுதுகின்ற பிரதியாகவும் பார்க்கலாம் - மறுவாசிப்பில்! 3. சூழமைவு - "அர்த்தம் என்பது சூழமைவிற்குக் கட்டுப்பட்டது - ஆனால் சூழமைவு எல்லையற்றது" என்கிறார் ஜோனதான் கல்லர். எடுத்துக்காட்டாக, அமெரிக்க வரலாற்றில் அடிமை முறையின் பிரசன்னம் (presence) பல சமயங்களில் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆனால் அது அமெரிக்க இலக்கியத்தில் தனது அடையாளத்தை ஆழமாகப் பதித்திருக்கிறது என்று டோனி மாரிசன் வாதிடுகிறார். மேலும் எல்லைப்புறச் சுதந்திரம், தடையற்ற சாலை வழி உரிமை, தடையற்றக் கற்பனைச் சுதந்திரம் என்று சுதந்திரம் பற்றிய பிரச்சனையில் அமெரிக்க இலக்கியம் தன்மை ஈடுபடுத்திக்கொண்ட இடங்கள் இந்த அடிமையாக்கச் சூழமைவில் வைத்து வசிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த அடிமையாக்கச் சூழமைவிலிருந்துதான் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பிரிட்டிஷ் பேரரசின் காலனிகளில் நிகழ்ந்த சுரண்டல்தான் பிரட்டனில் மதிப்புமிக்க குடும்ப வாழ்க்கையின் ஆதாரமான செல்வவளத்தை வழங்குகிறது. இந்தப் பின்புலம் ஜேன் ஆஸ்டினுடைய நாவல்களில் விலக்கப்பட்டுப் போயிருக்கின்றன. ஆனால் அந்தப் பின்புலத்தில் வைத்தே அவை விளக்கப்பட வேண்டும் என்று எட்வர்ட் சயீத் சொல்லியிருக்கிறார். அர்த்தம் சூழமைவுக்குக் கட்டுப்பட்டது; ஆனால் சூழமைவு எல்லையற்றது. (இலக்கியக் கோட்பாடு, 108) என்றும் சுட்டுகிறார் அவர். அப்படியெனில் ஒரு ஆண் கவி உலகின் மேற்சொன்ன கவிதைகளைச் சூழமைவின் எல்லையற்ற வெளிக்குள் எப்படி வரையறுக்க எனும் குழப்பம் வருகின்றது. அவனது மனம் சார்ந்த வாழ்க்கை, சகாப்தத்தின் சமூக இறுக்கங்கள், மாறுதல்கள் குறித்த அக்கறை, எதிர்பாலினம் (பெண்) மீதான கருத்தியல் மாற்றங்கள், புரிதல்கள், அணுகுமுறை - இவை நாள்தோறும், மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்ற இக்காலக்கட்டத்தில், ஒரு ஆண்கவி உலகைச் சிற்சில கவிதைகளை வைத்து மட்டுமே அவதானிக்க முடியுமா? அப்படி முடிந்தாலும் அது சரியான கணிப்புதானா?. 4) வாசகன் : வாசகன் என்று வரும்போது ஜோனதன் கல்லர் - ஒரு படைப்பின் அர்த்தம் என்பது ஏதோ ஒரு கணத்தில் ஆசிரியன் தன்னுடைய மனத்தில் கொண்டிருந்த ஒன்று அல்ல; அது வெறுமனே படைப்பின் ஒரு பண்பும் அல்ல, ஒரு வாசகனின் அனுபவமும் அல்ல. அர்த்தம் தப்பிக்கவே இயலாத ஒரு கருத்தாகும்; ஏனென்றால் அது எளிமையான ஒன்றும் அல்ல, எளிமையாகத் தீர்மானிக்கப்படமுடிவதும் அல்ல. அது ஒரே சமயத்தில் ஒரு அகமியின் அனுபவமும் ஒரு படைப்பின் பண்பும் ஆகும். அது நாம் என் புரிந்துகொள்கிறோம் என்பது மட்டுமே அல்ல. மேலும் அது நாம் பிரதியில் என்ன புரிந்துகொள்ள முயல்கிறோம் என்பதும் ஆகும். (இலக்கியக் கோட்பாடு, 107) என்கிறார். ஆக, பெண் வாசகியாக நான் என்ன புரிந்து கொள்கிறேன் என்பதைவிடவும், நான் என்ன புரிந்து கொள்ள முயல்கிறேன் என்பதை ஒரு பெண் என்கிற கருத்தாக்கம் முன்மொழிகிறது, தீர்க்கமான தெளிவான பெண்ணியப் புரிதல் அதனை முன்னெடுக்கிறது என்பதே இங்கு என் தெளிவு. ஜோனதன் கல்லர் இன்னொன்றும் சொல்கிறார் - இயல்பான ஒன்று என்று ஏற்றுக்கொள்ளப்படும் எதையும் விமர்சிப்பது, இயல்பான ஒன்று என்று நினைக்கப்பட்டது அல்லது அறிவிக்கப்பட்டது எதுவும் உண்மையில் ஒரு வரலாற்று, கலாச்சார விளை பொருளே என்று தெளிவுபடுத்திக் காட்டுவது அண்மைக் காலக் கோட்பாட்டின் பிரதான கருப்பொருளாக இருந்து வந்திருக்கிறது. இங்கு என்ன நிகழ்கிறது என்பதை வேறு ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்: 'இயல்பான பெண்ணாக என்னை நீ உணர வைக்கிறாய்', என்று அரிதா ப்ரேங்க்ளின் (Aretha Franklin) பாடும்போது, அவளை ஒரு ஆண் நடத்தும் விதத்தில், கலாச்சாரத்துக்கு முந்தைய அந்த 'இயல்பான'ப் பாலின அடையாளம் தனக்கு உறுதிப்படுத்தப்படுவது கண்டு அவள் மகிழ்ச்சியுறவதாகத் தோன்றுகிறது. ஆனால், 'இயல்பான ஒரு பெண்ணைப்போல என்னை நீ உணர வைக்கிறாய்' என்று அவளுடைய கூற்று, இயல்பாகக் கருதப்படுகிற அல்லது வழங்கப்பட்டுள்ள அவளுடைய அடையாளம் என்பது ஒரு கலாச்சாரப் பங்கு என்பதை உணர்த்துகிறது. அந்த அடையாளம் கலாச்சாரத்திற்குள்ளேயே உண்டாக்கப்படுகிற ஒரு விளைவாகும். அவள் ஒரு 'இயல்பான பெண்' இல்லை. மாறாக அவள் ஒரு இயல்பான பெண்ணாக உணரவைக்கப்பட வேண்டியிருக்கிறாள். இயல்பான பெண் என்பவள் ஒரு கலாச்சார விளைபொருளாகவே இருக்கிறாள். (இலக்கியக் கோட்பாடு, 21 & 22) ஆக "நான் ஒரு இயல்பாக உணர வைக்கப்பட்ட பெண். இயல்பான பெண் என்பவள் ஒரு கலாச்சார விளைபொருளாக இருக்கிறாள்" என்கிற தெளிவோடு அணுகும் போது தான் ஒரு பெண் வாசகி கண்டடைகின்ற ஆண் கவி உலகு இங்கு மேலும் தெளிவாகின்றது. அதன் நுண்ணரசியலும் பிடிபடுகின்றது. ஆனால் முற்றிலுமாகக் கோட்பாடுகளின் வழியாக மட்டுமே ஒரு ஆண் கவி உலகைக் கண்டுணர முடியாது - அது அவசியமுமில்லை. பொதுவாக எனது உரையாடல்களில் கோட்பாடுகள் அல்லது அவை குறித்த மேலைநாட்டுச் சிந்தனையாளர்களது மேற்கோள்கள் அதிகமிருப்பதாக ஒரு சாரார் - சிலர் குற்றமாகக் கூடச் சுட்டுவதுண்டு. அவர்களுக்குமே நான் சொல்வது ஜோனதன் கல்லரின் இக் கூற்றைத்தான் - பிரதிகளின் தொகுப்பைப் புரிந்து கொள்ள கோட்பாடுகள் எனக்கு உதவுகின்றன - அவ்வளவே! ஆனால் அதைக் கற்று நாம் துறைபோக முடியாது - என்கிற புரிதல் எனக்குண்டு. அது அவ்வளவு அவசியமுமல்ல. என்றாலும், சில தெளிவார்ந்த கண்டைதலுக்குத், தர்க்க பூர்வமான நிலைப்பாட்டிற்கு, திறனாய்ந்து ஒன்றைச் சுட்டுவதற்கு, பிரதிகளின் அரசியலைச் சுட்ட, தகர்த்துக் கட்டமைக்க அவை உதவுகின்றன - அவ்வளவே. 'என்ன, நீங்கள் லக்கானைப் படிக்கவில்லையா? (இலக்கியப் படைப்பில்) பேசும் அகத்தின் பிரதிபலிப்பு அமைவைக் கணக்கில் எடுக்காமல் தன்னுணர்ச்சிப் பாடலைப்பற்றி எப்படி உங்களால் பேச முடியும்?' அல்லது, 'பால் தன்மை மற்றும் பெண்களின் உடல்கள் நரம்புக் கோளாறுகளுக்கும் ஆளுாகும் தன்மை ஆகியவற்றைத் தீவிர விவாதத்துக்குள் கொண்டு வருதல் பற்றிய பூக்கோவின் விளக்கத்தைப் பயன்படுத்தாமலும், அந்நிய ஆட்சியில் பெருநகர்க் குடிமகனைப் பற்றிய கட்டுமானத்தில் காலனியத்தின் பங்கை காயத்ரி ஸ்பைவக் மெய்பித்துக் காட்டுவதைப் பயன்படுத்தாமலும் விக்டோரிய நாவலைப்பற்றி உங்களால் எப்படி எழுத முடியும்? சிலசமயங்களில், கோட்பாடு உங்களை அறிமுகமில்லாத களங்களில் கடிமான வாசிப்புக்கு ஆட்படுத்தும் கொடிய தண்டனையாகக்கூடக் காட்சியளிக்கும், இப்படியான வாசிப்பில், ஒரு படிப்புப் பணியை முடித்தபின் கிடைப்பது ஓய்வு இல்லை, மேலும் கடினமான பணிகள்தான். (ஸ்பைவைக்கா? சரி, ஆனால் ஸ்பைவைக்கைப் பற்றிய பெனினட்டா பேரியின் விமர்சனத்தையும் அதற்கு ஸ்பைவக்கின் மறு மொழியையும் படித்தீர்களா?) எனும் கூற்றை இங்கு நினைவுகூர்கின்றேன். கோட்பாட்டில் வல்லமை பெறமுடியாத தன்மையே அதற்கான எதிர்ப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இதில் எவ்வளவுதான் துறை போனவராக உங்களை நினைத்துக் கொண்டாலும், ழான் பாத்ரிலா, மிகைல் பக்தின், வால்டர் பெஞ்சமின், ஹெலின் சிசூ, சி.எல்.ஆர்.ஜேம்ஸ், மெலனி க்ளெய்ன், அல்லது ஜுலியர் க்ரிஸ்தெவா-வை 'நீங்கள் படிக்க வேண்டுமா' அல்லது அவர்களை நீங்கள் 'வசதியாக' மறந்துவிடலாமா என்பதில் நீங்கள் உறுதியாக ஒரு முடிவுக்கும் வரமுடியாது. (இலக்கியக் கோட்பாடு 22,23,24) என்பதையும் நான் நம்புகின்றேன். ஆக, முற்று முடிவாக, ஒரு சில கவிதைகளை வைத்து, சில கோட்பாடுகளை உட்புகுத்தி அவை ஒரு ஆண் எழுதியவை என்பதற்காக, அவற்றின் எடைக்கல்லில் மேலேற்றி ஆண் கவி உலகை அவதானிப்பது என்பது எவ்வளவு அபத்தமோ அதே அளவு அபத்தம் அந்த ஆண் கவி உலகு பற்றிப் பேசாமலிருப்பதும்! சமூகவியல் எனும் நூலில் ஸ்டீவ் புரூஸ் (தமிழில் பூரணச்சந்திரன்) சொல்கிறார் : தனிப்பட்ட ரசனை என்பதற்கும், உண்மையான சிறப்பு என்பதற்கும் இடையில் நியாயமாக எங்கு ஒரு கோடு கிழித்துக் காட்ட முடியும்? சர்வதேச யூத நிதியாளர்களின் கூட்டமைப்பினால்தான் உலகம் இயங்குகிறது என்றோ, மேற்கத்திய அரசுகள் வெளிக்கிரகத்தவர்களோடு தொடர்ந்து தொடர்புவைத்திருக்கிறார்கள் என்றோ தனிப்பட்ட நம்பிக்கை வைப்பதற்கான மக்கள் உரிமையை நான் ஆதரிக்கிறேன். ஆனாலும் இந்த நம்பிக்கைகள் சரியானவை அல்ல என்றும் வலியுறுத்துவேன். (சமூகவியல், 126) ஒரு கலாச்சாரத்தில் ஆண்குழந்தைகளும் பெண்குழந்தைகளும் சமமாக நடத்தப்படலாம். ஆனால், பெற்றோர் ஆவதற்கான கஷ்டங்களும் மகிழ்ச்சிகளும் உலகம் முழுவதும் ஒன்றாகத் தான் உள்ளன. அதுபோலத்தான் கவிஞராக உள்ளதில், கவிஞராக ஆவதற்கான கஷ்டங்களும், மகிழ்ச்சியும் ஒன்றுதான்! பல நூற்றாண்டுகளாக, கிழக்கு ஆப்பிரிக்காவின் மசாய் இனத்தவர் கடினமான சூழல்களில் மாடுகளை வளர்ந்து வந்துள்ளனர். ஆகவே ஸ்காட்லாந்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மாட்டுக்கறி விவசாயிகளோடு அவர்களுக்கு எவ்விதத் தொடர்பு இருக்கமுடியாது என்று நம்பலாம். ஆனால், ஸ்காட்லாந்தின் பான்ஷயர் பகுதியின் மெத்லிக் கிராமத்தைச் சேர்ந்த சிறுவிவசாயி ஒருவர் மசாயுடன் ஏற்படுத்திய கூட்டின் விளைவாகத்தான் ஆப்பிரிக்காவில் சிம்மெண்டல் மாடுகளின் முதல் தலைமுறை 1990இல் உருவாயிற்று. தங்கள் உலகங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் இரண்டு இனத்தவரும் மாடுகளை நேசிப்பவர்கள், எனவே பொதுச்செயல்பாட்டிற்கான பொதுமொழி ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. (சமூகவியல், 128) அவ்வகையில், ஆண், பெண் கவி உலகு வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பொதுச் செயல்பாட்டிற்கான ஒரு பொதுமொழியாகக் கவிதையை உருக்கொள்ள வைப்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அது வெறுமனே ஆண் உலகு, அல்லது தனித்ததொரு பெண் உலகு என - இவற்றைக் கறாராக, வரையறுத்து அதன் அடையாளங்களைச் சொல்கின்ற மொழியால் மட்டுமே தகவமைக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு, மேற்சொன்ன கூற்றினாலாலேயே மாற்றுக் கருத்தும் உண்டு. இங்கு நான் 'சார்பியல் நோக்கு' என்ற ஒரு பார்வையையும் முன்வைக்க வேண்டும். இதுகுறித்து ஸ்டீவ் புருஸ் மேலும் சொல்வது :- கலாச்சார ஆய்வுகளில் சார்பியல்நோக்கு ஏன் பிரபலமாகியுள்ளது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். பிளைட்டனைவிட ஆஸ்டின் சிறந்த எழுத்தாளாரா என்பதும், பிக்காசோவைிட கான்ஸ்டபிள் சிறந்த ஓவியரா என்பதும் ரசனையைச் சார்ந்த விசயம். பல சமூகங்களில், சமூகப் படிநிலை தான் ரசனையின் படிநிலைகளையும் உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்டவர்க்கம் எது நல்ல கலை எது மோசமானது என்பதை முடிவுசெய்கிறது.1950களில் பிரிட்டனில், 'எனக்குக் கலைப்பற்றி அதிகம் தெரியாது, ஆனால் நான் எதை ரசிச்கிறேன் என்று எனக்குத் தெரியும்' என்று அதிகமாகப் படிக்காத கீழ்மத்தியதர வகுப்பினர் கூறுவதாக மேற்குடித் தற்பெருமையாளர் (கீழ்வகுப்பினரின் ரசனையின்மையைக் குறைகூறும் விதமாக) நகையாடுவது வழக்கம். (சமூகவியல் 125 & 126) எனது ரசனையின் அடியொற்றி இங்கு சில கவிதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன் – கணையாழி கவிதைகள் இதயவீணை தூங்கும்போது பேசும் கேள்என் கிளியென்ணுன் கூண்டைக் காட்டி. வால் இல்லை வீசிப் பறக்கச் சிறகில்லை வானம் கைப்பட வழியில்லை 'பார்பார் இப்போது பேசு'மென மீண்டும் மீண்டும் அவன் சொல்ல 'பறவை என்னுல் பறப்பதெனும் பாடம் முதலில் படி'யென்றேன். கைதியின் குழந்தை நீலவானின் நினைவே மறந்த கூண்டுக் கிளிகளின் காதலில் பிறந்த குஞ்சுக் கிளிக்கு எப்படி, எதற்கு வந்தது இறகுகள்! - கல்யாண்ஜி ஜனவரி 1978 துணை வராதே போ மழையே முற்றத்தில் ஊசலிட்ட குருவிகள் இரண்டு மூன்று நாட்களாய் பட்டினி. காதலன் ஜில்லென்ற தொடுதலில் உஷ்ணங்கள் ஜனிப்பது என்ன ரசாயணம்? -தஞ்சாவூர்க் கவிராயர் ஏப்ரல் 1973 'காலிஃபிளவர்' கோஸின் தமக்கை நீதானோ என்பது போலே ருசிக்கிறாய் இலையை இடுப்பில் சுற்றியே வெளுப்பாய் நீயும் மினுக்குறாய் சிறிதே மஞ்சள் பூசிக்கொண்டு ஐஸ்க்ரீம் போலும் தோன்றுகிறாய் புதுசாய் சந்தையில் இருந்தாலும் நீ துணியேன் அணிந்து கொள்ளலை தமிழில் உனக்கு பெயரில்லை தமிழ் மண்ணில்தானே விளைகிறாய் காலிப்பூவென சொன்னாலோ ஆட்சேபம் ஏதும் உனக்குண்டோ? -ஆத்மாநாம் ஜூன் 1973 'யாவரும் கேளிர்' கார்டு கவர்களின் இந்தி எழுத்தை நன்றாய் அடித்து மசியால் மெழுகி அஞ்சல் செய்யும் தனித்தமிழ் அன்பர் 'பாபி' பார்த்ததும் 'இருடிக் கபூரும் இடிம்பிள் கபாடியாவும் (ரகரமும் டகரமும் மொழிமுதல் வாரா) அருமையாய் நடித்தனர்' என்று தனது டயரியில் எழுதிப் புன்னகை செய்தார் -ந. ஜயபாஸ்கரன் ஏப்ரல் 1974 பெண் மனம் சூர்யன் புத்ரியோ சந்திரிகையின் சோதரியோ மாறன் மனைவியின் மறுபிறப்போ - நீயென புகழ ஆசைதான். பண்டு தொட்ட காலம் முதல் எத்தனைப் பாடாவதி கவிகள் பிதற்றி யிருப்பார்கள் இப்படி. இரவல் வார்த்தைகளில் புகழ்ந்தால் உனக்கென்ன பெருமை? புதிதாகப் புகழ ஒன்றும் தோன்றவில்லை நீயே சொல்லடீ - என்றேன். அவள் நாணிக்கோணி தலை கவிழ்ந்து முகம் சிவந்தும் சொன்னாள்; 'டிம்பிளை விட நான் அழகுதானே....?' - கி. ஞானதீபன் ஜூன் 1974 நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல இக்கவிதைகள் மிகக் கறாராகக், காலவரிசைப்படியோ, அனைத்துப் படைப்பாளிகளின் ஆளுமைகளையும் உள்ளடக்கிய பட்டியலில் தேர்ந்தோ எடுக்கப்பட்டவை அல்ல - என் மனப் பரப்பில் நினைவில் நிற்கின்ற, சிலவற்றை எனது நோக்கின் கைத்துணையாக மேலே சுட்டியிருக்கின்றேன். இவற்றில் 'பெண் மனம்' என்கிற ஒரு கவிதையைத் தவிர மற்றவை அனைத்தும், ஒரு ஆண் எழுதியது என்கின்ற அடையாளங்களற்று, ஒரு பொது மொழியில் இயங்குகின்றன. ஏன் 'பெண் மனம்' எனும் கவிதை கூட மீள் வாசிப்பில் ஒரு பெண்ணே இன்று எழுதியிருக்கக் கூடிய சாத்தியத்தைத் தன்னுள்ளே வைத்திருக்கிறதல்லவா? ஓரினச் சேர்க்கையினைத் தெளிவாகத் தேர்ந்த பெண்ணொருத்தி தன் துணைக்காகவோ அல்லது இவைபோன்ற தெரிவுகளற்ற மற்றொரு பெண் வெறும் 'பகடிக்காகக்' கூட 'பெண் மனம்' கவிதையினை எழுதலாம் - எழுதியருக்கவும் கூடும். ஆண் உடலைக் கொண்டாடியவர் Michael Angelo. அதே Michel Angelo பெண் உடலைக் கொண்டாடி இருந்தாலும், ஒரு கலைஞனாக நாம் அவரது படைப்பை உச்சி முகர்வோமே அன்றி, வெறும் ஆண்மையவாதம், அல்லது பெண்உடலைப் போகத்தின், காமத்தின் வடிகாலாக அவர் கையாண்டுள்ளாரென அதனை ஒருக்காலும் தவறாகப் புரிந்து கொள்ளமாட்டோம். கலையின் மொழி நமக்குத் தருகின்ற அற்புதமான தரிசனம் அது. நுண்ணரசியலைப் புரிந்து கொள்ளும் அதே நுட்பமுடன், அழகியலையும், ஒரு கலைஞனின் கலை வெளிப்பாட்டு நோக்கம், அதன் வெளிப்பாட்டுத் தன்மை இவற்றின் கூடலையும் ஒரு தேர்ந்த ரசிகராக நாம் பிற கலைப்படைப்புக்களில் எவ்வாறு கைக்கொள்கிறோமோ, அதே அளவுகோலை 'ஆண் கவி உலகு' நமக்களித்துள்ள கவிதைகளை உணரவும், பகுக்கவும், துய்க்கவும், அவதானித்து எடைபோடவும் நாம் துணை கொள்ள வேண்டும். தனித்த விருப்பங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மை - இவை குறித்த தெளிவு ஒரு சார்பியல் தன்மைக்கான மறுப்பினையும் நமக்குத் தருகின்றது. ஆண், பெண் - இவர்களது கவி உலகு வெவ்வேறானது என்றாலும் கூட, ஏன் ஒரு பொது மொழி சாத்தியமில்லை? அப்படிச் சாத்தியப்படுத்துதலை ஒரு சார்பியலாக ஏன் ஒரு பெண் மறுக்க வேண்டும்? துல்லியமான, ஸ்தூலமான ஒரு பிரிவினைக் கோட்டை அவள் ஏன் இரு உலகுக்கிடையில் கிழிக்க வேண்டும் - பெண்ணிய விவாதங்கள், வாதங்களின் கறார்த்தன்மை எந்த அளவிற்கு இரு கவி உலகிற்குமான பொதுத்தன்மையைக் குலைத்துப் போடுகின்றன - இவைதான் - இந்தக் கேள்விகள்தான், இனி நாம் இந்தத் தளத்தில் மேலும் பயணம் செய்யவேண்டிய போக்குகள் என நினைக்கிறேன். ஒரு சார்புநோக்குள்ளவர் எந்த விமரிசனத்தையும் கருத்தியல் என்று கூறிப் புறக்கணிக்கின்ற தவறைப் ஒரு பெண்ணிய நோக்குள்ள வாசகியாக நான் செய்துவிடக் கூடாதென்றே கருதுகின்றேன். அமெரிக்கச் சமூகவியலாளர் கிளிபோர்டு கீயர்ட்ஸ் கூறியதுபோல, கிருமிகளற்ற ஒரு சுற்றுச்சூழலை உருவாக்க இயலாதென்று நமக்குத் தெரியும். இருந்தாலும் நமது இதயச் சிகிச்சை ஒரு சாக்கடையில் செய்துகொள்ள விரும்பமாட்டோம். நவீன மருத்துவ மனையில்தான் செய்துகொள்ள விரும்புவோம்.(சமூகவியல், 125) அந்த நவீன மருத்துவமனையில் ஆண்களும், அவர்களது கவி உலகும் அடக்கம் என்கின்ற தெளிவு இருந்தால் போதும் - பெண் வாசகிக்கு! பெண்ணியப் பார்வையின் பலத்தோடு கூடுதலாக மேற்சொன்ன அவதானங்களும் அதிமுக்கியம் என்கிற கடப்பாடும் அவளுக்கு மிக மிக அவசியம்! பின்வரும் ரமேஷ் பிரேதனின் கவிதை எனக்கு மிக நெருக்கமானது : அவளும் அவனுக்குமிடையே ஒரு பழம் மாதவிலக்கு நாட்களில் அவள் நெற்றியில் குங்குமம் இடுவதில்லை அவன் அந்த நாட்களில் ரத்தத் திலகமிட்டு அலுவலகம் செல்வான் இணையரின் அன்யோன்யம் இசங்களுக்கு அப்பாற்பட்டது பிழிந்தால் மனிதக் குருதி வடியும் பழம் ஒரு ஆணின் கவி உலகை அரசியலற்று, வெறும் அன்பால் மட்டுமே நான் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை. அவ்வகையில் "இணையரின் அன்யோன்யம், இசங்களுக்கு அப்பாற்பட்டது" என்பதை எனது இதயம் அச்சொட்டாக ஏற்கிறது. ஆனால், "பிழிந்தால் மனிதக் குருதி, வழியும் பழம்" என்பதே பகுத்தறிவு சார், தெளிவான, புத்திஜீவியான பெண்ணிற்கு உவப்பானதும், சரியானதுமாகும் என்கின்ற எடைத்தராசும் என்னிடத்தில் உண்டு. அவளும் அவளுக்குமிடையேயே கனிந்தும், புதிதாகவும், செழுமையாகவும், உரமாகவும் கவிதைப் பழம் என்றுமிருக்கட்டும்!   உதவிய நூல்கள் : 1) கணையாழி கவிதைகள் - முதல் பத்து: கணையாழி வெளியீடு. 2) இலக்கியக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம் : ஜானதன் கல்லர் (தமிழில், ஆர். சிவகுமார்) 3) சமூகவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்: ஸ்டீவ் புரூஸ் (தமிழில், க. பூரணச்சந்திரன்)

தொடர

'நிலவொத்த நிறமும், நெடுவானின் சுடரும்' ஒளிரும் தொல் தூரிகைக்காரன்!

"மக்கள் சிறந்த ஓவியங்களைக் காண்பதற்கு யாத்திரைகள் மேற்கொள்கிறார்கள். ஆனால், ஒரு கவிதையைப் படிப்பதற்குக் கல் தொலைவுகள் (miles) யாரும் பயணம் செய்வதில்லை" - லியானார்டோ டாவின்சி அந்தி சாயத் தொடங்கிய ஒரு மாலைப்பொழுதில் தான் நான் மருது அண்ணனை முதன் முதலாகச் சந்தித்தேன். அன்றிலிருந்து எனது வண்ணங்கள் அவரது கருப்பு வெள்ளைக் கோடுகளாலும், எனது கருமை அவரது வண்ணக் கலவையாலும் இடமாற்றப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. "ஓர் அழகியல் நிகழ்வாகத்தான் வாழ்க்கையை நியாயப்படுத்த முடியும்" என்றொரு வரியை அவரைச் சந்திக்கும் பொழுதெல்லாம் நினைத்துக் கொள்ளத் தூண்டும் அவரது அந்த அன்பான அணைப்பும், "என்னம்மா" என்கிற அந்தக் குரலின் நெகிழ்வும் - இந்திய ஓவிய வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைச் செய்திருக்கின்ற அந்தக் கைகளின் குலுக்கலும் - ஒரு கானகவெளியில் நான் எப்போதும் அருந்துகின்ற சுனைநீர்! எழுபதுகளின் பிற்பகுதியில் துவங்கி, ஓவியப் பரப்பின் பல எல்லைகளிலும் உயிர்ப்புடன் இயங்கி வருகின்ற இந்தக் கலைஞனுடைய முன் அட்டை ஓவியம் இல்லாமல் இன்றுவரை எனது படைப்புகள் வெளிவந்ததில்லை. அது எனக்குப் பெருமை என்றால் - அவரது வேலைப்பளுவினிடையே சுணங்காமல் அதனை எனக்குத் தருகின்ற கூடுதலான பெருந்தன்மை அண்ணனுடையது! "கலைஞன் தன் கலையின் உணர்வை எப்பொழுதும் அறிந்திருந்தான். வேளை வாய்த்தபோது அதற்கேற்றபடி நடந்து தன் தகுதியை நிலைநாட்டிக் கொண்டான்" எனும் கூற்றை மெய்பிப்பது அவருடைய வாழ்க்கைப் பயணம் எனில், "எவ்வாறு ஓர் ஓவியன் உள்ளானோ அவ்வாறே ஓவியத்தின் உருவமும், கோடுகளும்" - (காவிய மீமாச்சை) எனப்படுவது போலவே அவருடைய கோட்டோவியங்களும், வண்ணப் படைப்புகளும்! அவரைப் போலவே தீர்க்கமுடன், தெளிவுடன், வாழ்வின் மீது தீராக் காதலுடனும், நம்பிக்கையின் ஒளியுடனும் வெளிப்படுத்தபடுபவை அவை! அவரது ஓவியங்களின் பிரதானமான அடர் சிவப்பும், ஓளிர் மஞ்சளும், என் ரசனைக்கு மிகப் பிடித்தமானவை என்றால், அண்ணனும், அண்ணியும் என் அகத்திற்கு அதைவிட நெருக்கமானவர்கள். என் வீட்டு முற்றத்தை அவரது பறக்கும் தேவதைகளும், வண்ணப் புள்ளிக் கோலங்களும் அலங்கரிக்கின்றன. எனது கைபேசியில் கனல் தெறிக்கும் கண்களுடன் அவரது பாரதியார் ஓவியம் உடனிருக்கின்றது. என் கவிதைகளை அவரது கோட்டோவியங்கள் கூடுதலாக மிளிரச் செய்கின்றன. தனித்திறனும், கற்பனைச் செறிவும் நிறைந்த அவரது கோட்டுச் சித்திரங்களுக்கு எனது மூத்த மகள் விதந்தோதும் விசிறி என்றால், குழந்தைகளுக்கான அசைவூட்டச் சித்திரங்கள் (Animation) இளையமகளது பெரு விருப்பம். "காண்போரின் சிந்தையை ஆக்கிரமித்து மேம்படுத்துவதால் மனிதகுலத்திற்கு ஒரு பெருமை மிக்க கருவூலம் ஓவியம்" என்று "சித்ர சூத்ரா" சொல்கிறது - இந்திய ஓவிய மரபிற்கு ஒரு மிக முக்கியமான கருவூலம் அண்ணனது தமிழர்களது பண்பாட்டு முத்திரை தாங்கிய கோட்டோவியங்கள். அவை வெறும் பழம்பெருமை பேசுபவை மட்டுமே அல்ல - உரிய வண்ணங்களைத் தெரிதல், உணர்வுகளுக்கேற்றவாறு உடல் வலுவினை வடிவமைத்தல், தனித்துவமானதொரு மனோபாவம், இழந்துவிட்டதொரு மகோன்னதம் - அதனைக் கலையின் வழி மீட்டெடுக்கின்ற அற்புதம் - இவற்றின் சரிநிகர் கலவை! காஷ்மீரத்து ஓவியங்கள் காந்தாரக் கலைவழி, ஆசியக்கலை வழி இரண்டையும் இணைத்துப் புதியதொரு பாணியில் உடை, அணிகலன்களை வடிவமைத்ததாக நான் படித்ததுண்டு. அண்ணனது ஓவியங்கள் தமிழரின் வாழ்வியல், அவர்தம் நிலம், பயிர், அறுவடை, கனவு, சடங்கு, பறவைகள், பொழுது, போர், இசை, விளையாட்டுக்கருவிகள், பெண்டிர், ஆண்மக்கள், சிறார், கொண்டாட்டம் - இவற்றை ஊடுறுவிச் செல்பவை என்றாலும், கலையில் லியானார்டோவின் புரட்சிமனப்பான்மையையும் அவை பிரதிபலிப்பவை. ஓவியத்தைக் காட்சிக் கலைகள் (visual arts), இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு தளங்களுக்கு இசைவாகக் கடத்தியவர் இவர். ஓளியும், நிழலுமாக அவரது ஓவியங்கள் இருக்கலாம். ஆனால் அவரது குழந்தை மனம் வண்ணங்களால் மட்டுமே ஆனது. ஐம்புலனறிவும் உய்ப்பதற்காக ஓவியங்கள் வரையலாம் அவர். ஆனால் உணர்வும், அன்பும், எளிமையும் கொண்ட உலகம் மட்டுமே அவருக்கும், எனக்குமானது. அவரது கோட்டோவியங்களின் முப்பரிமாண நிலையைப் போலவே இந்தச் சரடில் எங்களோடு கூடவே அண்ணியும் உண்டு. க்யுபிசம் படைப்புத்தியைப் புகுத்திய Pablo Picasso, George Braque இருவருமே பாரிஸில் ஒரே பகுதியில் வாழ்ந்து, ஒன்றாக, ஒரே கூரையின் கீழ் ஓவியங்களைப் படைத்தவர்கள். ஒருவரையொருவர் பாதித்துத் துணையாகப் பயணித்தவர்கள். ப்ராக் பின்நாட்களில் பிக்காஸோவுடனான தனது அனுபவத்தை, "ஒரே கயிற்றில் பிணைக்கப்பட்ட இரண்டு மலையேறிகள்" என்று நினைவு கூர்ந்ததாக அறிந்தேன். அண்ணியும், அவரோடு அப்படியாகப் பிணைக்கப்பட்ட மலையேறிதான். புன்னகை, கனவு, வெள்ளந்தி அன்பு இவற்றைச் சுமந்த அண்ணியோடு, அண்ணனை எப்போதும் ஒரு சேரக் காண்பது எனக்கு ஹாலந்தின் புகழ்பெற்ற ஓவியர் ரெம்ப்ரெண்டையும் அவரது காதல் மனைவி சாஸ்கியாவையும் நினைவு படுத்தும். "சித்திரங்களில் காணும் தொனிப்பொருள் (Suggesstion) அவற்றின் அழகை அதிகப்படுத்தி அவற்றை தீட்டக்கூடிய ஓவியனின் உயர் திறமையை நிலைநாட்டுகிறது" என்பார் பேராசிரியர், ஓவியக் கலைஞர், திரு. சி. சிவராமமூர்த்தி. அண்ணனுடைய தனிப்பட்ட வாழ்வின் அழகை, செழுமையை மேம்படுத்துகின்ற தொனி அண்ணிதான். அவர்களிருவரோடு அன்பினால் இணைந்ததொரு கண்ணியாகப் பயணிப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. ஒரு நவீனக் கலைஞனுக்குரிய சமகாலச் சிந்தனை, போக்கு, (Contemporaneity) சுய வெளிப்பாடு, புதிய முயற்சிகள், நிறுவப்பட்ட மதிப்பீடுகளை எதிர்த்தல், மாற்று உரையாடல்களைக் கலையின் வழி உட்புகுத்துதல், தேர்ந்த குறியீட்டு உத்திகள், தொன்மங்களை மீட்டுயிர்த்தல், நவீன அழகியல், தன் வேர் சார்ந்த உணர்வெழுச்சி - இவற்றின் அருஞ்சுவைக் கலவையான இந்தக் கலைஞனுக்கு, அவரது தூரிகைக்கு, அந்த மாயாஜாலக் கோடுகளுக்கு, மயக்கமுறக் கிளர்த்தும் அந்த வண்ணங்களுக்கு - வயதாவதுண்டா என்ன? "ஒவ்வொருவருக்கும் ஒரு 15 நிமிடப் புகழ் உண்டு" எனப்படுவதுண்டு. ஆனால், ஒரு கலைஞனின் புகழை எண்களா தீர்மானிக்க முடியும்? கலைஞன் என்பவன் அந்த ஒவ்வொருவரில் வருகின்ற ஒருவர் அல்ல. எண்களால் பெருக்கவோ வருடங்களால் வகுக்கவோ படமுடியாதவன் அவன்! இந்தியாவின் (அஜந்தாவிற்கு முற்பட்ட) சங்க, சாதவாகன, கலிங்க, குஷாணக் கலை ஒவியங்களை வரைந்த கரங்களுக்கு வயதாவதுண்டா என்ன? மாமண்டூரின் குடவரைக் கோயில்களிலும், காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவக் கட்டிடக் கோயில்களிலும், பாண்டிய நாட்டின் திருமலைபுரம் குகைக் கோயில்களிலும், சேரநாட்டின் திருநந்திக்கரை குகைக்கோயிலிலும், சோழநாட்டின் நார்த்தாமலை விஜயாலயச் சோழீச்சுரக் கோயிலின் அர்த்த மண்டபச் சுவர்களிலும், விஜயநகரப் பேரரசின் தலைநகரமாயிருந்த விரூபாஷீர் கோயிலின் முன் மண்டபத்துக் கூரைகளிலும், நாயக்கர் காலச் சுவரோவியங்களிலும் - எண்ணற்ற ஓவியங்களைத் தீட்டிய கைகளுக்கு என்றாவது வயதாவதுண்டா? அதன் ஒரு துளி ஏந்தி வந்த தூரிகையை இந்தக் கலைஞன் லியானார்டோவின் வெள்ளி முனையோடு (Silver Point) ஏந்தியிருக்கிறான் - அந்தத் தூரிகைக்கு, அதன் புகழுக்கு எண்களால் அடைப்புக் குறி இட முடியுமா என்ன? ஒரு ஓவியராக, மிகச் சிறந்த கலைஞராக அண்ணன் அறியப்பட்டாலும், ஒரு தனிப்பட்ட மனிதராக பெரிதும் மதிக்கப்பட வேண்டியவர். எனக்கு மிகப் பிரியமானவர் - என் போற்றுதலுக்கு உரியவர் - அவர் சார்ந்துள்ள நம்பிக்கைக்களுக்காக, அவர் இயங்குகின்ற சமூகத் தளத்திற்காக, அவர் நிற்கின்ற அறம் சார்ந்த கலைக்காக! 'மனிதன் மற்றும் மனித மனதின் இயக்கம்' - இவை இரண்டு மட்டுமே ஒரு ஓவியனுக்கு மிக முக்கியமான செய்திகள் என்று சொன்ன லியானார்டோவைப் போல இந்தக் கலைஞனுக்கும் மேற்சொன்ன இரண்டு மட்டுமே முக்கியம். மனிதன் - அவரது கண்கள் என்றால் மனித இயக்கம் - அவரது வண்ணம். "நன்றாகக் கழிந்த நாள் மகிழ்வான உறக்கத்தைத் தருவதைப் போலவே நன்றாகப் பயன்பட்ட வாழ்க்கை மகிழ்வான இறப்பைத் தருகிறது" என்று சொன்னதும் லியானார்டோதான். கலைக்கு மரணமில்லை. அண்ணனுடைய தூரிகைக்கும், மனதிற்கும் என்றும் முதுமையில்லை. அவருடைய ஏதாவது ஒரு ஓவியம் எங்காவது ஒரு மூலையில் இருக்கின்ற பெயர் தெரியாத ஏதோவொரு ரசிகனுக்கு நன்றாகக் கழிந்த ஒரு நாளையும், மகிழ்வான உறக்கத்தையும் தந்து கொண்டே இருக்கும். ஏனெனில் தூரிகை தான் அவருக்கு வாழ்க்கை - கலையின் ஒளிர்விற்காய் நன்றாகப் பயன்படுகின்ற அந்தத் தூரிகைதான் அவருக்கு வாழ்க்கை! அது கொட்டித் தீர்க்கின்ற வண்ணங்களின் ஒரு தீசலாய் அவரது வாழ்வில் நானுமிருப்பது எனக்குப் பெருமையும் சுகமும்! புத்தமத போதனைகள் தொடக்க காலத்தில் பிக்குகளால் பனை ஓலைகளில் எழுதப்பட்டன. பின்னர் அவற்றில் ஓவியங்களும் தீட்டப்பட்டன என அறிந்திருக்கிறேன். அருகனும், வனப்பேச்சியும் இணைந்திருக்கும் பனையோலை ஓவியம் போல அண்ணன் மருதுவும், அவரது வண்ணங்களும் எனக்குக் காத்தும், கருப்பும்! கண்களை விற்றும் சித்திரம் வாங்கலாம் - இந்த கலைஞனுக்காக!

தொடர

உக்கிரத்தின் கூர்முனையில் உயிர்வலி பதியும் பயணம்

அகரமுதல்வனின் கவிதைகளைக் கையில் வைத்திருக்கின்ற இந்த இரவு பாலச்சந்திரனின் 'கடைசி உணவு'க் காட்சியைக் கண்டு தூக்கமிழந்து, பித்து முற்றிய இரவு. 'இனி எழுதித் தீர என்ன இருக்கிறது?' என மனமுடைந்து வார்த்தைகளைச் சபித்த இரவு. அவன் போல பல பாலச்சந்திரன்கள் முள்ளிவாய்க்காலில் உறைந்ததை மீண்டும் தோண்டியெடுத்த இரவு. வெறும் கோஷங்களை மென்று துப்பி துர்நாற்றமெடுக்கின்ற என் வாயை இயலாமையின் இரத்தம் கொண்டு சுத்தம் செய்த இரவு. இவ்வளவு நிர்க்கதியோடு இருக்கின்ற ஒரு மனம், நம்பிக்கையின்மையின், அவலத்தின் உச்சத்தில் இருக்கின்ற ஒரு மனோ நிலையில் - கவிதைகள் - குறிப்பாகப் போர்ச்சூழலில் பிறந்து, ஊர் ஊராகத் திரிகின்ற ஒரு ஈழத் தமிழனது கவிதைகள் குறித்து என்ன எழுத முனையும்? வெறும் எழுத்துக்கள் கோர்க்கப்பட்ட வாக்கியங்களை வைத்துக் கொண்டு அதிகாரத்தின் முன் மன்றாடியாயிற்று, கதறி அழுதாயிற்று, நீதி கேட்டுப் போராடியாயிற்று - அத்தனையும், "அரிசி மூட்டையிலிருந்து சிதறிய அரிசி மணிகள் போல் தப்பித் தவறி திசை தடுமாறி ஓடிவந்த சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல் மொஸைக் தரையில் தவறிப்போன ஒற்றைக் குண்டூசி போல் இவற்றைப் போன்ற இன்றும் ஆயிரக்கணக்கான போல்கள்"- என ஆத்மாநாம் சொல்வது போல் ஆயிரத்து ஒன்றாவது போலாயிற்று. இருந்தாலும் "எவற்றிற்கும், எவருக்கும் தன்னை ஒப்புக் கொடுக்காத" கொள்கைகளைத் தன் எழுத்தின் மூலமாக முன்வைக்க ஒரு இளைஞன் முயலுகையில், அவனது பாதையை, வலியை, அதன் உக்கிரத்தை, தடைகளை, ஓட்டத்தை - அவன் கவிதையில் பகிர்ந்து கொள்கையில் சற்று திரும்பிப் பார்க்கத்தான் வேண்டியதிருக்கிறது. முற்றிலும் கையறு நிலையிலிருந்து அவனது கவிதையெனும் முழுங்கையூன்றிச் சற்று உட்காரவும் கூட! "முகம் மலர்ந்து போய் சிரிக்க விரும்பிய போது, கோபத்தோடு கிடக்கிறது பகை மீதான என் வன்மம்" என்கிற அகரமுதல்வனது கவிதைகள் முழுவதிலும் ஈழத்தின் போர் நிகழ் களம், களப்பலி, தொலைத்த நிலம், விரட்டப்படுகின்ற அம்மாந்தர் தம் துயரம், இவற்றையெல்லாம் மீறி மிக அழுத்தமாக, மீண்டும், மீண்டும், பகை வீழ்த்தி நிலம் மீட்கத் துடிக்கும் ஒரு உ¡¢மைக் குரல் உரத்து எழுகிறது. "கடல் பிரித்திரிந்தும் தொப்புளால் இணைந்திருக்கின்ற" நம் கண்முன்னே நடந்து முடிந்த வரலாற்றுத் துயரின் சாம்பல் பூசி, நாம் மெளனித்திருக்கையில், "கல்லறையில் தெய்வங்களிருக்கும் தேசத்தில் கருவறைக் கடவுள்களுக்கு வேலையில்லை - அற்புதம் எங்களால் மட்டுமே நிகழ்த்தப்படும்" எனும் அகரமுதல்வனது நம்பிக்கை - புனித வெள்ளி எனும் மனோமோகனின் பின்வரும் கவிதையை நினைவூட்டியது. "நம்பமுடியாதபோதும் கூட அது அப்படித்தான் நடந்தது அப்பழுக்கற்ற உனது வெள்ளங்கியின் மீது குருதியின் ஈரம் பரவிக் கொண்டிருந்தது சற்றுமுன் சுடப்பட்ட தோட்டா இடதுபுற மார்பில் சற்று மேலோ சரியாக மார்புக் காம்பிலோ பட்டிருக்க வேண்டும் முப்பதாவது வினாடியே உனது உயிர் பிரிந்தது சுட்டவனுக்கு அசலாக எனது முகம் ஆனாலும் அது நானில்லை என்பதை எப்படி உன்னிடம் சொல்வது அதுவும் இறந்துவிட்ட உன்னிடம் இனி அந்த சிலுவைக்கு நீ உபயோகப்பட மாட்டாய் அந்த ஆணிகளுக்கும் கூடத்தான் கொண்டு வந்த சிலுவையையும் ஆணியையும் திரும்ப எடுத்துப் போவதில் சரத் பொன்சேகாவுக்கு உடன்பாடில்லை கிடத்தப்பட்ட சிலுவையில் உனக்குப் பதிலாக என்னைக் கிடத்தினான் ஆணியடித்து நிமிர்த்தப்பட்ட எனக்கு அசலாக உனது முகம்" மெளனத் துயரென அலைந்து உழல்கின்ற புலம்பெயர்தலை, "கடந்த வாழ்வே மீண்டும் என்னை அணைத்துக் கொள் - அன்றைக்கு என்னை நீ விட்டுச் சென்றபின் இன்றுவரை நான் ஏதிலி" எனப் பகிர்கின்ற வரிகள், "சிறுவர்கள் சாகடிக்கப்படும் யுகத்தில் ஒரு பாலஸ்தீனச் சிறுவனைப் போல நான் ரொட்டிக்கு அலைந்தேன் கிழிந்த என் அகதிப் பைகளுக்குள் இறுதிவரை உனக்காகச் சில ரொட்டித் துண்டுகளிருந்தன" எனும் தீபச்செல்வனது கவிதையைத் தொட்டுச் செல்கிறது. அகரமுதல்வனது ஆற்றாமை - "என்னூரில் நான் இல்லாமலிருந்து இன்று எவ்வளவு நாளாகிவிட்டது" எனத் தொடங்கி, முற்றத்து செவ்வரத்தை, வைரவர் கோவில், இரட்டைக்கேணி அம்மளாச்சியின் கோவில் மணி, சாவகச்சேரி கலையமூர்த்தியின் நாதஸ்வர இசை, பாளைநகர், செந்தில் நகர் - என்று அவரது ஊரின் பசுமை நினைவுகளை பட்டியலிடுகின்றது என்றால், அவரது காதல், "உன் சிரிப்பில் குளிர்ந்தபடி நான் திரும்பியபோது புதிதாய்ப் பிறந்தெழுந்த ஒரு ஆட்டுக்குட்டியாய்த் துள்ளியபடி சிலிர்ப்புடன் ஓடி வந்தது மனது" என்கிறது. தொகுப்பின் மீறலின் தர்மம் காதலுக்கு எனும் கவிதை எளிமையான மொழியில் காதலின் தர்மம் மீறல் தான் என்கிறது. அகரமுதல்வனுக்கு அவர்தம் அடிபட்ட வாழ்க்கை - வலியோடு, ஒருவித உக்கிரத்தையும் கொடுத்திருக்கிறது. உக்கிரத்தின் கூர்முனையில் யதார்த்தத்தினை மிகையற்றுப் பதிவு செய்வது மிகக் கடினம். செய்திருக்கிறார் அதை - "எங்கள் வீட்டில் மூத்திரம் போகவே அடையாளப் பத்திரம் காட்டவேண்டியதாய்த் தொடர்கிறது எங்கள் மூத்திர வாழ்வு" என்று. கவிதையின் ஒவ்வொரு சொல்லும் காலம், இடம், பொருள், ஏவல் கருதிப் பல்வேறுவிதமான அர்த்தங்களைக் கொடுப்பவை. அவ்வகையில் - 'மூத்திரம்' எனும் சொல் அடைந்திருக்கின்ற உக்கிர உருமாற்றம் இங்கே கவனிக்கத் தக்கது. ஒரு புறச் செய்தியை ஒரு கவிஞன் எவ்விதமாகப் புரிந்து கொள்கிறான் என்பது தான் அவனது ஆளுமையைக் காட்டுகிறது என்பார்கள். போர் -நமக்கெல்லாம் ஒரு புறச்செய்தி. அகரமுதல்வனுக்கோ அது வாழ்விற்கும் சாவிற்குமான மரண ஊடாட்டம். அந்த ரணத்தினை எட்ட நின்று தத்துவார்த்தமாக, அல்லது அதில் முழுக்க ஒன்றி மிகையுணர்ச்சியுடன் வெளிக்கொணர்வது - என்கிற இந்த இரண்டு எதிர்முனைகளில், அகரமுதல்வன் இரண்டாவதையே தேர்ந்தெடுத்திருக்கிறார். புரிந்து கொள்ள முடிகின்ற தேர்வு. "தமிழச்சிகளின் யோனிகளினால் அரசமர இலைகளுக்குப் பச்சயம் தயாரிக்கப்படுகின்றது. துட்ட கைமுனுக்களால் அரசமரத் தேவனுக்கு எங்கள் ரத்தத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது என் உறவுகளின் அங்கங்களின் போர்ச்சிதைவுகளிலிருந்து கண்ணை மூடியபடியே வருகிறான் புத்தன்" -இது உரைநடை வசனம் தான். ஆனால் அதன் பின்பிருக்கின்ற வலி உண்மையானது, அனுபவத்தின் நேர்மையில் இவ்வரிகள் "கவிதை தானா" எனும் தர்க்கம் கடந்து தகிக்கின்றன. விருட்சத்தின் உரம் குருதி எனும் கவிதையில், "எமைக்கொல்லும் விமானங்கள் தேசியப்பறவையாய் பிறப்பெடுத்தது" என்கிற உருவகத்தை - 'ஆஹா, அற்புதம்' என ரசித்தால், "பிணவாடை அடிக்கிறது" எனும் கவிதையில், "..... அவள் குறிகளில் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது சப்பாத்துக்காரனின் ஆண்மை" எனும் சித்தரிப்பை ஒரு கவித்துவமான உத்தி எனக் கடந்து சென்றால் - அது எவ்வளவு பெரிய வன்முறை! ".... நான் மெதுவாகக் கற்றுக்கொள்கிறேன் ஒரு கவிதையில் நிஜமாய்ப் பொருட்படுவது என்னவென்று" எனச் சொல்லும் வாஸ்கோ போப்பாவை நினைத்துக் கொண்டேன் - அகரமுதல்வனின் அத்தனை கவிதைகளையும் படித்து முடித்தபின்பு, அவரது கவிதைகளில் நிஜமாய்ப் பொருட்படுவது தீராத வலி குறித்த துயரும், அதனைத் தடவிப் பார்த்தபடி, ரணம்கீறி, மீண்டும் விடுதலையை முன்னெடுக்கின்ற உறுதியும் தான். இவை கவிதைகளென நான் அறுதியிடவில்லை - அது அவசியமுமில்லை. ஏனெனில், இவற்றின் பின்பிருக்கின்ற உண்மை அளவிடுதலுக்கு அப்பாற்பட்டது. தனது தீவிரமான மன எழுச்சியை, இடை வரு(டு)கின்ற காதலுணர்வைப் பகிர்ந்து கொண்டிருக்கின்ற அகரமுதல்வன் தனது தாய் மண்ணின் போர்க்காலம் குறித்த வரலாற்றுப் பதிவுகளோடு தனது விடுதலையின் கனவையும் சேர்த்துப் பொதிந்திருக்கிறார் இக் கவிதைகளில். இது அவருக்கு ஆறுதல் தருமாயின் - அகரமுதல்வன் இத்தடத்தில் தொடர்ந்து பயணிக்கட்டும். எல் சால்வடரின் சிறந்த கவிஞர் கிளாரிபெல் அலெக்ரியாவின் பின் வரும் கவிதையோடு "அத் தருணத்தில் பகைவீழ்த்தி" எனும் தொகுப்பிலிருந்து இத்தருணம் விடைபெறுகிறேன் - இரவு நேர விஜயங்கள் எண்ணிப்பார்க்கிறேன் நான் நமது வலுவிழந்துபோன வீரர்களின் பெயரறியாப் பிள்ளைகளை உடலுறுப்பு அறுபட்டவர்களை முடமாக்கப்பட்டவர்களை இருகால்களையும் இழந்தவர்களை கண்கள் இரண்டையும் பறிகொடுத்தவர்களை தீக்குவாய் பதின்பருவத்தினரை. இரவில் காதுகொடுத்துக் கேட்கிறேன் அவர்களின் ஆவியுருக்கள் என் செவிக்குள் பெருங்கூச்சலிடுவதை மந்தநிலையிலிருந்து என்னை உலுக்கி எடுப்பதை எனக்குக் கட்டளை பிறப்பிப்பதை எண்ணிப் பார்க்கிறேன் அவர்களின் நைந்து கிழிந்த வாழ்வுகளை ஜூரவேகமாய்த் தகிக்கும் அவர்கள் கைகள் நம் கைகளை இறுகப் பற்றிக்கொள்ள நீள்வதை. அவர்கள் பிச்சை கேட்கவில்லை உரிமை கோரிக்கை வைக்கின்றனர் உழைத்துப் பெற்றிருக்கிறார்கள் அவர்கள் உரிமையை நமக்கு உத்தரவிட நம் உறக்கத்தை முறிக்க விழித்தெழுந்துகொள்ள என்றைக்குமாய் இந்த அயர்வை உலுக்கித் தள்ள. * * * * *

தொடர

பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை' – வர்ஜினியா வுல்ஃபின் சட்டைப் பைகளில் நிரப்பப்பட்ட கற்களும், சில கேள்விகளும்:

மரணம் ஒரு பெரும் வாதையின் முடிவு. மரணம் ஒரு தொடர் போதையின் இறுதி முத்தம். மரணம் ஒரு சிதறலின் உன்மத்த ஒன்று சேரல் - என்பதை உலகிற்கு நிரூபணம் செய்பவை தற்கொலைகளே. இயற்கையாகச் சம்பவிக்கின்ற மரணங்களை விடத் தற்கொலைகள் ருசிகரமானவை - செய்து கொள்பவர்களுக்கு; குரூரமானவை சாட்சிகளாய் அவற்றைக் கவனித்திருப்பவர்களுக்கு; தற்கொலைகள் வரலாற்றின் பல கணங்களில் தீடிரென்றும், சில கட்டங்களில் மிக நிதானமான திட்டமிடுதலுடன், ஒரு தேநீர் தயாரித்துப் பருகுவதனைப் போன்ற ஆசுவாசத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான தற்கொலைகள் அவற்றைச் செய்துகொண்டவர்களை விடுத்து, அவர்களோடு தொடர்புடையவர்களை நிழலெனத் துரத்துபவை. தம் மீது தாமறியாமல் அறையப்பட்ட சிலுவைகளைத் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஒரு வலி உறைந்த விடுதலையின் மூலம் எதிரே இருப்பவர்கள் மீது இலகுவாக இறக்கி வைத்து விடுகிறார்கள். தம் வாழ்நாள் முழுவதும் தானாகத் தன்னை மாய்த்துக் கொண்ட ஒரு உயிரின் இறுதிமூச்சை என்ன செய்வது எனத் தெரியாமல் கனவுகளிலும், தனிமையிலும், துயரத்திலும் தன்னைத் தொலைத்துக் கொள்பவர்களது பட்டியலில் என் பெயரும் உண்டு. "அற்புத மரங்களின் அணைப்பில் நான் ஒரு காற்றாடி வேப்பமரக்கிளைகளின் இடையே நான் ஒரு சூரிய ரேகை. பப்பாளிச் செடிகளின் நடுவே நான் ஒரு இனிமை சடை கடையாய்த் தொங்கும் கொடிகளில் நான் ஒரு நட்சத்திரம்". என்றெழுதிய என் நேசத்திற்குரிய கவிஞன் ஆத்மாநாமையும், "ஒரு நாள் இந்த நூற்றாண்டு தெலூஸியன் நூற்றாண்டு என்று அழைக்கப்படும்" என்று ஃபூக்கோவால் புகழப்பட்டபோது "அது ஒரு நகைச்சுவை" என்று சொன்ன, 1995 ஆம் ஆண்டு தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல் வழியே குதித்துத் தற்கொலை செய்து கொண்ட, ஈடிபஸீக்கு எதிராக : முதலாளித்துவமும் மனப்பிறழ்வும் என்கிற மிக முக்கியமான நூலை எழுதிய, பின் நவீன இரட்டையர்களில் ஒருவரான, எனக்கு பிடித்த தெலூஸையும், அவள் ஒரு கதாபாத்திரமே என்றாலும், தனிமையின் நிழல் படிந்திருக்கும் ஒவ்வொரு ரயிலடியும், மரணத்தின் இரத்தம் சுவைக்கின்ற ஏதேனும் இரு தண்டவாளங்களும், இன்றளவும் நினைவுபடுத்துகின்ற, என் ப்ரியமான அன்னாகரீனினாவையும், மறக்க முடியாத இரவுகள் எனக்கும் வாய்ந்திருக்கின்றன. இந்த இரவுகளை நான் உளவியல் திறனாய்வில் பெருந் திருப்பத்தை ஏற்படுத்திய பிராய்டின் துணைகொண்டே கடக்க முயற்சிக்கின்றேன். பிராய்டு கவிதையை நனவலி மனத்தோடு தொடர்பு படுத்தியவர். கவிதை மட்டுமல்ல கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களது நனவிலி மனமே படைப்பூக்கத்தின் தூண்டுதல் என்பதை நம்புவள் நான். இந்த நனவிலி மனம் நனவுடை மனதோடு நடத்தும் தொடர் போராட்டமே பொதுமைப் பண்பிலிருந்து அந்தரங்க உலகிற்கு ஒருவனை துரத்துவதென்பது. அதன் கண்ணியில் அனைத்துப் படைப்பாளிகலும் சிக்கியவர்கள் தானென்றாலும், சிலர் அதன் மீளாச் சிறையில் விரும்பி மாள முடிவெடுக்கையில் தற்கொலைகள் நிகழ்கின்றன. அவ்வாறு தற்கொலையின் ருசிக்குத் தன்னைத் தின்னக் கொடுத்தவர்கள் பெரும்பாலும் கலைஞர்களும், இலக்கியவாதிகளுமே! "இத்தகைய நனவிலி மனம், ஒரே சீராக நேர்கோட்டில் அமைவதில்லை. ஒன்றினைத் தொட்டு ஒன்று படர்வதாக அமைகிற அதன் திசைகள் எண்ணிறந்தன; வேகம் அளவு கடந்தது. நனவிலி மனத்தின் இந்தப் பண்புகளின் பின்னணியில், அதனோடு தொடர்ந்து போராடுகிற நனவுடை மனத்தின் நானாவித இயங்கு திசைகளை சித்திரிப்பது, நனவோடை உத்தி (Stream of Consciousness) ஆகும். உள்ளார்ந்த தனிநிலைக் கூற்று (Interior Monologue) என்பது இத்தகையதேயெனினும் இது பெரிதும் நாடக பாணியிலே அமைந்ததாகும். நனவோடை என்பது கதைமாந்தரின் உளவியல் வாழ்க்கையையும் அதன் முனைப்புக்களையும் அவற்றின் போக்கிலேயே சென்று சித்திரிக்கின்றது. நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் சொல்லுகின்றபோது அவற்றை அவற்றின் நேர்வரிசை முறையில் அல்லாமல், அவை உணரப்படுகின்ற முறையில், ஒன்றனைத் தொட்டு ஒன்று தாவியும் உருண்டும் போகிற முறையில் சொல்லுகிறது" (இலக்கிய இஸங்கள் - இ.எஸ்.தேவசிகாமணி: 24, 25) என்பதை இலக்கிய உத்திமுறைகளில் பரிட்சயம் உள்ளவர்கள் அறிவார்கள். மேற்சொன்ன இருவகை படைப்புத்திகளில் இயங்கிய இரண்டு பெண் படைப்பாளிகள் - ஸில்வியா பிளாத் (Sylvia Plath), வர்ஜினியா வுல்ஃப் (Virginia Woolf). இருவருமே தற்கொலை செய்து கொண்டு தம் வாழ்வினை முடித்துக் கொண்டவர்கள். பெண்ணியவாதிகளென அறியப்பட்டவர்கள். வர்ஜினியா வுல்ஃப் புனைகதைகளின் களமான புதினங்களில் நனவோடை உத்தியைக் (Stream of Consciousness) கையாண்டவர் என்றால், ஸில்வியா பிளாத் தனது கவிதைகளில் உள்ளார்ந்த தனிநிலைக் (Interior Monologue) கூற்றினை வசப்படுத்தியவர். இவர்களது படைப்பும், வாழ்வும், அதிகாரத்திற்கெதிரான இவர்களது இயக்கமும், மனச்சிதைவும், தற்கொலை மரணமும் பற்றிய ஒரு உரையாடல், அவநம்பிக்கையின் மணி அடிக்கப்பட்ட நவீனகால, பின்நவீனக் காலகட்டத்தில் மிக அவசியமானதொன்று. சற்று விரிவாக வர்ஜினியா வுல்ஃபின் படைப்பு, வாழ்க்கைப் பின்புலம் குறித்து உரையாடுவதே என் நோக்கம். அதனை, ராமானுஜம் எழுதிய, தற்கொலைகளைக் கொண்டாடுவோம் எனும் தொகுப்பில் இருக்கின்ற ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை எனும் சிறுகதை குறித்த விவாதமோடு துவங்கினால் உசிதம் எனப்படுகிறது. அதில் ராமானுஜம் எழுதிய ஒரு முக்கியமான வரி: "நவீனத்துவத்தோடு இணையாதது அனைத்தும் கொல்லப்பட்டாலும் அவை தற்கொலைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன". கதைசொல்லி, ஒரு அழுக்கு மனிதர் (வெள்ளிக்கிழமை என்று பெயர் வைக்கப்பட்டவர்), வயலின் வாசித்துப் பிச்சையெடுக்கும் 'அன்னா' - மூவரும் ஒரு மெத்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அந்த அழுக்கு மனிதர் பிச்செயடுத்து ஒரு குத்துவிளக்கு வாங்கி, ஒரு படத்தின் முன் அதனை ஏற்றிக் கும்பிட்டுப்,பிறகு வந்து கொண்டிருக்கும் ஒரு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறார். கதைசொல்லியை, ஒரு Globalised Citizen ஆக முன்னிறுத்தும் ராமானுஜம், கதைசொல்லி, "அந்த அழுக்கு மனிதர் ரயிலின் முன் குதிக்கும்போது கூட எவ்விதமான பதற்றத்திற்கும் உள்ளாகாமல் அவருடைய பண்புக்கு ஏற்ற நிதானத்தோடு அதை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்" என விவரிக்கிறார். "நவீனத்துவம் என்பது நவீனத்துவத்திற்கு முந்தைய காலத்திய விழுமியங்களை முற்றாக அழித்துவிடும் என்ற நிலைப்பாட்டிலிருந்து கதைசொல்லியால் கொலை செய்யப்பட்ட அந்த அழுக்கு மனிதரைப் படைப்பாளி உயிர்த்தெழ வைக்கிறார். ஒரு கொலை தற்கொலையாகச் சித்திரிக்கப்படும் அபத்தங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார். 'அன்னா'வை ஏற்றுக்கொண்ட நம் படைப்பாளி ஏண் 'வெள்ளிக்கிழமை'யை நிராகரிக்கிறார்? ஏனெனில் அந்த அழுக்கு மனிதர் கதைசொல்லியின் நிழல். கதை சொல்லியால் ஏற்றுக்கொள்ள முடியாத, புரிந்துகொள்ள முடியாத அவனுடைய தர்க்கத்திற்கு அடங்காத அவனுடைய வரலாறு, அவனுடைய கலாசாரம், அவனுடைய நாகரிகம் இவை அனைத்தும் நவீனத்துவ மனத்திற்குச் சங்கடங்களாகவும் பிற்போக்குத்தன்னைங்களாகவும், மூடநம்பிக்கைகளாகவும் சுய மோகங்கள் கொண்டதாகவும் பார்க்கப்படுவதால் நவீனத்துவத் தளத்திலிருந்து கொலை செய்யப்படுவதற்குத் தகுதியாக்கப்படுகிறது. ஆனால் கேடுகெட்ட இந்த நவீனத்துவ மனம் கொலைகளுக்கான தார்மீகப் பொறுப்பேற்கும் வக்கற்று அதைத் தற்கொலைகளாக மாற்ற முயற்சிக்கிறது. ஆந்திராவிலும் மஹராஷ்ராவிலும் நடந்த விவசாயிகளின் (தற்) கொலைகளை நாம் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்" என்கிற ராமானுஜம் மிக நுட்பமாகத் தற்கொலை என்பது கொலையே எனவும், இக் காலக்கட்டத்தில் சமூகம் சாதுர்யமாகவும், வஞ்சகமுடனும் நம்மை எவ்வாறு தற்கொலைகளுக்குத் தூண்டுகின்றது எனவும் இக்கதை மாந்தர் மூலம் விளக்குகிறார். இந்த அவநம்பிக்கைகளைக் காலந்தோறும் ஒரு படைப்பு மனம் தகர்க்கவும், சாம்பலிலிருந்து உயிர்த்து எழவும் தம் படைப்பின் மூலமாகவே முயல்கிறது. பெளதலேர், எனும் பிரெஞ்சுக் கவிஞர், "Come on, come and travel. in dreams, beyond the possible, beyond the known" என்று சொல்வதைப் போல, விழிப்பு நிலையை விடக் கனவு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கின்ற இரண்டு பெண் படைப்பாளி மனங்கள் இறுதியில் கனவுகளைத் தற்கொலையில் தக்கவைத்துக் கொள்வதென்பது இயல்பானதாகவே தோன்றுகிறது. இருபதாம் நூற்றாண்டின் பெரும் தாக்கமான உளப்பகுப்பாய்வியலுக்கு பெரிதும் கடன்பட்டிருப்பவர் வர்ஜினியா வுல்ஃப் என்றால் மிகையில்லை. அவரது அலைகள் (The Waves) முழுவதும் நனவோடை உத்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒன்று. "Restless Genius" என்று அழைக்கப்பட்ட வர்ஜினியா இலக்கிய வரலாற்றில் பெண்களுடைய இடம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியான தெளிவுடன் இருந்தவர். 1882 ஆம் ஆண்டு ஜீலியா பிரென்செப் (Julia Prencep) - லெஸ்லீ ஸ்டீபன் (Lessly Stephen) பெற்றோருக்குப் பிறந்த வர்ஜினியாவே தனது A Room Of One's Own எனும் நூலின் மூலமாகப் பெண்ணிய விமர்சனத்தை ஆங்கில இலக்கியத்தில் ஒரு முக்கியமான கட்டத்திற்கு நகர்த்தியவர். கல்விச்செழிப்பும், பண்பாடும், கலை ஊக்கமும் நிறைந்த குடும்பச் சூழலில் பிறந்த வர்ஜினியா தனது பூட்டனாடமிருந்து கலை ஆர்வத்தையும், தனது பாட்டியிடமிருந்து நகைச்சுவை உணர்வையும், தனது பாட்டனாரிடமிருந்து மன அழுத்த உணர்வுகளைப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. வர்ஜினியாவின் உளநோய்க் கூறு அவரது இளவயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் அத்துமீறல் தொடர்பானதாக இருக்கலாம். தாஸ்தாவிஸ்கி எனும் புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளரின் மனநடத்தைக் கோளாறு நிலை பற்றி ப்ராய்ட், "தாஸ்தாவிஸ்கியின் இயற்கை மனப்போக்கு, அவருடைய தந்தையின் தொடர்பாக ஆண்பாலுக்குரிய (சேடிச) கிளர்ச்சிக்கும், பெண்பாலுக்குரிய (மேசாகிஸ) கீர்ப்படிதலுக்கும் இடையிலான தீர்வு காணப்படாத போராட்டத்தில் வேர்கொண்டுள்ளது" (ப்ராய்ட் - மிகச் சுருக்கமான அறிமுகம் - அந்தனிஸ்டோர்: 141) என்கிறார். அதுபோலவே வர்ஜினியாவிற்கும் அவரது இளவயதில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் (அவரது ஒன்றுவிட்ட சகோதரன் ஜெரால்ட் டக்வொர்த் (Gerald Duckworth) வர்ஜினியா நான்கு வயதாக இருந்தபோது அவர் மீது செலுத்திய பாலியல் அத்துமீறல்) பிற்காலத்தில் அவரது மனஅழுத்த நோய்க்கான அடிப்டைக் காரணியாக இருக்கலாம். தனது பதிமூன்று வயதில், தாய் ஜீலியாவை இழந்தது வர்ஜினியாவை மேலும் சோர்விற்கும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. 1904- கோடைகாலம் வெனிஸ் நகரம் சென்றிருந்த வர்ஜினியா அதீத மன அழுத்தத்தின் காரணமாக ஜன்னலின் வழியே குதித்து சிறு காயமுடன் மீண்டது... அதன் பின் அவரது வாழ்க்கையில் ஒரு தொடர் நிகழ்வே. தனது சகோதரி வனேஸாவுடன் முரண்பட்ட பிரிவும் வர்ஜினியாவைத் தொடர்ந்து துன்புறுத்தித் தாக்கியது. இவற்றினூடே பெண்களின் ஓட்டுரிமைக்கான பணியிலும் தன்னை இணைத்துக் கொண்ட வர்ஜினியா, தனது வருங்காலக் கணவர் லியோனார்ட் வுல்ஃப் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியபோதும் மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர். பின்னாளில் திருமணத்திற்குப் பின்பும் ஒரு ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்வை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டவரல்ல. மனத்திரிபு (Paranoid) நோய்க்கூறுகளும் உடைய அவரது வாழ்வின் பல கால கட்டங்களைப் பார்க்கையில், "கலைஞர்கள் தங்கள் நேரத்தில் அவ்வளவு பெரும் பகுதியை, உன்னத வகையாக்கத்தின் விளைவாக உள்ள செயல்களில் ஈடுபடுத்துவதால், அவர்கள் சராசரி மனிதர்களை விட நரம்புப் பிணியாளி நிலைக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்" என்று அந்தனிஸ்டோர் (ப்ராய்ட் - மிகச்சுருக்கமான அறிமுகம் : 147) சொல்வது மிகச் சரியே எனப்படுகிறது. The Voyage out எனும் அவரது புதினமும் வாழ்வு, மரணம் குறித்தே பேசினாலும், 21ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் பெண்களது பங்கு என்ன என்பது குறித்தும் வினா எழுப்புகிறது. 1940இலிருந்து 1941 வரையிலான போர்ச்சூழல், பாதுகாப்பின்மை, இரண்டாம் உலகப்போரின் அழுத்தம் இவையே வர்ஜினியாவின் மன அழுத்த நோய்க்கும், (மூன்றுமுறைகள்) இறுதி மரணத்திற்கும் காரணம் எனப்படுகிறது. "கற்பனையிலேயே செத்துப்போ என்றது மனம் நானும் செத்துப் போனேன்" எனும் ஆத்மாநாமின் வரிகளைத் தினமும் சுமந்திருப்பாரோ வர்ஜினியா? அவரது July மாத நாட்குறிப்பு ஒன்று சுட்டுகிறது: "Never Settle, is my principle" "unless I am myself I am nobody". இது அவநம்பிக்கைகள் நிறைந்த காலம்' இரண்டு உலக யுத்தங்கள், ஸ்டாலின், நாஜி முகாம்கள், ஹிரோஷிமா, போல் பாட் (கம்போடியாவின் சர்வாதிகாரி), இருந்த கொஞ்ச நம்பிக்கைகளையும் தகர்தெறிந்துவிட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சி, 1960 மற்றும் 70களில் லத்தீன் அமெரிக்காவில் காணப்பட்ட புரட்சிக்கான உந்துதல் இவை எல்லாம் நம்மை எங்குதான் கொண்டு விட்டன. நம்பிக்கைகள் எல்லாம் வற்றிப்போய் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டோம்”(தற்கொலைகளைக் கொண்டாடுவோம் - ராமானுஜம் : 35, 36, 57) என்கிற ராமானுஜத்தின் கூற்றுப்படி யதார்த்தத்தினை ஏற்றுக் கொள்ளாதவர்கள் - குறிப்பாகப் படைப்பு மனம் கொண்டவர்கள் தம் துயரைத்தின் சீழைத் துடைப்பது தற்கொலை எனும் பன்னீரால் என்கிறது வர்ஜினியாவின் வாழ்க்கை. Mrs. Dalloway என்கிற அவரது புதினத்திற்குப் பின் 1925இல் வெளியான To the Light House, புகழின் உச்சியில் அவரை உட்கார வைத்தது. தனது பிடிக்குள் இல்லாத அறிவையும், உடலையும் அவர் வெறுப்பதாக அவர் எழுதியது இக்காலக்கட்டத்தில்தான். "ஒரு மனோதத்துவக் கவிதை" என வர்ணிக்கப்பட்ட அது 1927இல் வெளியிடப்பட்டது. 1936இல் தனது மனைவி ஐந்தாவது முறையாகப் கடுமையான மன அழுத்த நோய்வாய்ப்பட்டதாக (Leonard) லியோனார்ட் குறிப்பிடுகிறார். இலக்கியப் படைப்பாளிகள் தமது கோட்பாடுகளைத் தமக்கான குறியீடுகளில் கற்பனைத் திறனுக்கும், சொல்லாற்றலுக்கும் ஏற்ப வெளிப்படுத்துவார்கள். வர்ஜினியாவும் "Never trust the artist. Trust the tale" எனும் D.H. Lawrence இன் படைப்புக் கொள்கையைப் பின்பற்றியவரே. தனது நாட்குறிப்பொன்றில் பின்வருமாறு மிக அழகாக அதனை ஒரிரு வாக்கியங்களில் உலகிற்குச் சொல்கிறார்: "When Sydney web visits me- Sydney comes and I'm Virginia, When I write I'm merely a Sensibility" படைப்புரீதியாக இத்தனை தெளிவு மிக்க, ஒரு கலாபூர்வமான அக்கறை உள்ள பெண் தன் வாழ்நாள் முழுமைக்கும் சாவின் மேல் பெருவிருப்பம் கொண்டவராகவும், கடும் அழுத்த நோயாளியாக வாழ்ந்தாரென்பதும் எத்தகைய முரண்நகை? தனது Orlando படைப்பில் வெளிப்படுத்தியிருக்கின்ற தீவிர பெண்ணியக் கருத்துக்களுக்காக Herbert Marder, Ralph Samuelson போன்றோரால் விமர்சிக்கப்பட்ட, இருபத்தோரு வருடங்களில் பதினேழு புத்தகங்கள் எழுதிய வர்ஜினியாவின் பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் மனைவிகளும், அம்மாக்களுமே, என்பதுவும் ஒரு வியக்கத்தக்க முரணே! தனது புதினங்களில் அவர் விவரிக்கின்ற கதாபாத்திரங்கள் போலவே நிஜவாழ்க்கையில் திடம் x ஊசலாட்டம், ஆண்தன்மை x பெண்தன்மை, உண்மை x புனைவு - இவற்றிற்கிடையே எப்போதும் இழுபடுகின்ற பெண்ணாகவே இருந்த வர்ஜினியா, "I am amphibious still, in bed and out of it" எனக் கூறியது அவரது ஒட்டுமொத்த ஆளுமையின் விவரிப்பு! ஆண்மைய அதிகாரத்கெதிராகத் தொடர்ந்து பெண்மையக் கருத்துக்களை முன்வைத்த வர்ஜினியாவின் A Room of one's own எனும் படைப்பு மிக முக்கியமானது. நீட்சே, வான்கோ, சாய்கோவ்ஸ்கி போன்றோரின் சாதனைகள் அனைத்தும் அவர்கள் மனிநிலை பிறழ்ந்த சமயத்திலேதான் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. வர்ஜினியாவின் படைப்பூக்க உச்சமும் அவ்வாறான கட்டங்களில் தான் பரிமளித்திருக்கின்றது. தனது ஆணாதிக்க எதிர்ப்பை மிக நேர்த்தியாக ஒரு கல்லூரிச் சொற்பொழிவில் பதிந்திருக்கிறார். ஷேக்ஸ்பியருக்கு Judith என்றொரு கற்பனையான சகோதரி இருந்திருந்தால் ஷேக்ஸ்பியருக்கு இணையான அங்கீகாரம், புகழ் அந்தச் சகோதரிக்குக் கிட்டியிருக்குமா எனக் கேள்வி கேட்டு, 'இல்லை' என்று அவர் பெற்ற பதில், காலந்தோறும் 'பெண்' என்பதால் மறக்கடிக்கப்பட்டிருக்கின்ற வாய்ப்புக்களை, வரலாறுகளை நினைவூட்டுகின்றது. தனது Orlando நூல் வெளியான சமயத்தில் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்லூரியில் (Arts Society of Newham College) பெண்களும் புனைகதையும் எனும் தலைப்பில் உயைாற்றும் போது ஆண்கள் கல்லூரிக்கும், பெண்கள் கல்லூரிக்கும் உள்கட்டமைப்பிலேயே (infrastructure) பேதமும், பாகுபாடும் நிலவியதைச் சுட்டுகிறார். தனது நாட்குறிப்பில் - சிறிய, இருண்ட, அலங்காரமற்ற பெண்கள் கல்லூரிகளின் வராந்தை (corridors) "leads to vaults in some horrid high church cathedral... cold & shiny" என்று குறிப்பிட்டு விட்டு, ஒரு ஆண்கள் கல்லூரி உணவு விடுதியில் தான் உண்ட வயிறு நிறையும் உணவையும், சற்றும் சமச்சீரில்லாத, குறைவான உணவு (meagre food) பெண் கல்லூரி உணவு விடுதியில் வழங்கப்படுவதையும் நினைவு கூர்கிறார். ஃபூக்கோ சுட்டுகின்ற "அமைப்பு ரீதியில் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்ற" இம்மாதிரியான விஷயங்களில் பெண்களுக்கு ஓட்டுரிமை தொடங்கி, தொடர்ந்து இயங்கிய வர்ஜினியாவைக் காட்டமாக இதற்காகப் பின்வருமாறு E.M. Forster விமர்சித்திருக்கிறார்: "In my judgement there is something old - fashioned about this extreme feminism; it dates back to her suffragette youth of the 1910's, when men kissed girls to distract them from wanting the vote, and very properly provoke her wrath. By the 1930's she had much less to complain of, and seems to keep on fumbling from habit. She complained, and rightly, that though women today have won admission into the professions and trades they usually encounter a male conspiracy when they try to get to the top. But she did not appreciate that the conspiracy is weakening yearly, and that before long women will be quite as powerful for good or evil as men. She was sensible about the past; about the present she was sometimes unreasonable. However, I speak as a man here, and as an elderly one. The best judges of her feminism are neither elderly men or even elderly women, but young women. If they, if the students of Fernham, think that it ex-presses and existent grievance, they are right". (Virginia Woolf: A collection of critical essays - Ed - Claire Sprague:23) ஒரு ஆணாகப் பேசுகின்ற E.M. Forster இன் இந்தக் குரல் ஒரு கயமைத் தனமான ஆணாதிக்க வெளிப்பாடு அல்லவா? E.M. Forster வர்ஜினியாவை பகட்டுதன்மை உடைய ஒரு சீமாட்டி என்று அழைத்தது மட்டுமின்றி, "And her snobbery - for she was a snob- has more courage in it than arrogance" (Virginia Woolf: A collection of critical essays - Ed - Claire Sprague : 23) என்றும் சொல்கையில், வாழ்நாள் முழுவதும் வர்ஜினியா எதிர்த்த, ஒரு ஆண்மையக் குரலாகவே அதனைப் பார்க்க முடிகின்றது. சமூகத்தில் அதிகார உறவு, குறிப்பாக ஆண்மையை அதிகார மையம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது குறித்துப் பேசியும், புதினங்களில் எழுதியும் வந்த வர்ஜினியாவிற்கு அவரது கணவர் லியோனார்ட் வுல்ஃப் பெருந்துணையாக இருந்தார் என்பதே இங்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி. ஒரு அமைப்பு சார்ந்த சூழ்நிலையாக (Structural Situation) இல்லாமல், புரிதல், ஒத்துப்போதல், இணைந்து படைப்புகளை ஊக்கப்படுத்துதல் - இவற்றை லியோனார்டுடன் அனுபவித்தாலும், ஒரு உள்வாங்கிய மனநிலையாளராக (introvert) தற்கொலையை வர்ஜினியா பல சமயங்களில் பரீசீலித்துப், பயிற்சித்தும் பார்த்திருக்கிறார் என்பது ஃபூக்கோவை நினைவு படுத்துகிறது. தற்கொலைக்குத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பவர்கள் பைத்தியகரமான மனோநிலையில் இருப்பவர்கள். நாமனைவருமே வாழ்வின் எக்கணத்திலும் தற்கொலைக்குத் துரத்தப்படுகின்ற சாத்தியத்தோடு வாழ்பவர்கள் என்றவர் ஃபூக்கோ. பைத்தியக்கார மனோநிலை என்பது தனிப்பட்ட ஒன்றல்ல - நம்மில் அனைவரும் சதவிகிதத்தில் சிறிது மாறுபட்ட பைத்தியங்களே. ஃபூக்கோ, "பைத்தியம் என்ற கருத்துரு இதுநாள் வரையிலும் பைத்தியம் அல்லாதவனின் பார்வையிலிருந்து தான் வரையறுக்கப்பட்டு வந்தது. என்னுடைய கட்டுரை 'பைத்தியம் என்பதை அதற்குள்ளாகேவ' (Madness in itself) இருந்து பார்ப்பதாக இருக்கிறது" (ஃபூக்கோ - எம்.ஜி.சுரேஷ்: 16) என்கையில் தற்கொலைகளையும் நாம் அவற்றிற்குள்ளாக வைத்தே அணுகவேண்டியிருக்கிறது. "I shall pass like a cloud on the waves" என்று சொன்ன வர்ஜினியா, தனது வாழ்வின் மிக முக்கியமான செய்தியொன்றைத் தனது குளியலறைத் தொட்டியில் சோம்பிக்கிடக்கையில் பெற்றார். அவரது "வீட்டின் தேவதையைக் கொல்வோம்" (Need to kill 'the angel of the house') எனும் கோஷம் பெண்ணியவாதத்தின் மிக முக்கியக் கருத்துருவாக்கமொன்றை எட்டியது. விக்டோரிய மேலைத் தட்டு மகளிர் கற்பிதம் செய்திருந்த மாதிரிப் பெண் என்பவள் மற்றவர்கட்குச் சேவை செய்பவதை மட்டுமே (Service) இலக்காகக் கொண்டவள் அல்ல - தன்னையும் கவனித்துக் கொள்பவள் என்னும் புதிய பெண்ணியப் பார்வையோடு அவர் முன்வைத்த இந்தக் கோட்பாடே அவரது அலைகள் (The waves) எனும் நாவலின் அடிப்படையாகவும் அமைந்தது. பால் சமத்துவம், மனித உரிமை, உழைக்கும் பெண்களைச் சமூகம் கேலிக்குள்ளாக்குதல் போன்றவற்றில் தீவிரமான கருத்துக்களை முன்வைத்த வர்ஜினியா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு அளித்த 'கிளார்க் சொற்பொழிவுகள்' (Clark Lectures) எனும் வாய்ப்பை நிராகரித்த பெருமைக்குரியவர். அதன் மூலம் கெளரவ முனைவர் பட்டம் பெற்றிருக்ககூடிய வாய்ப்பையும் இழந்தவர். காரணம் - இங்கிலாந்தின் பெருமைக்குரிய கல்விக்கூடங்கள் பெண்களை நடத்தியவிதம் இரண்டாந்தரமாக இருந்தது என்பதே. பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை. பெண்களால் ஷேக்ஸ்பியரது நாடகங்களைப் போல எழுத முடியாது என்று சொன்ன பாதிரியாரைக் கண்டனம் செய்த குரல் வர்ஜினியாவினுடையது. ஏன் பெண்கள் எலிசபெத் அரசியின் காலத்தில் கவிதைகள் எழுதவில்லை எனக் கேட்ட குரல் வர்ஜினியாவின் பெண்ணியக்குரல். ஷேக்ஸ்பியருக்கு ஜீடித் என்றொரு சகோதரியைப் புனைந்துப் பெண்களை விழித்தெழ உலுக்கியது வர்ஜினியாவினுடையது. தனது A Room of One's Own நூலில் ஒரு பெண்ணிற்கு ஏன் ஆணிற்கான வாய்ப்புக்கள், அங்கீகாரம் வழங்கப்படவில்லை, குறிப்பாகப், படைப்புலகில் என்று பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றார்: I told you in the course of this paper that Shakespeare had a sister; but do not look for her in Sir Sidney Lee's life of the poet. She died young - alas, she never wrote a word. She lies buried where the omnibuses now stop, opposite the Elephant and Castle. Now my belief is that this poet who never wrote a word and was buried at the cross roads still lives. She lives in you and in me, and in many other women who are not here tonight, for they are washing up the dishes and putting the children to bed. But she lives; for great poets do not die; they are continuing presences. (Virginia Woolf - A Room of One's Own: 354) எனும் அவரது இந்த ஆணாதிக்க அதிகாரத்திற்கு எதிரான குரல் அப்பொழுது பலரால் உற்றுக் கவனிக்கப்பட்டது. சமகாலப் பெண்கள் பலரையும் உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பிய தனித்துவக் குரலாகவும் அது அறியப்பட்டது. நாஜிக்களின் வருகையில் பெரிதும் நிலை குலைந்தாலும், தங்களது பெயர் அறியப்படாத பெண் படைப்பாளிகள் குறித்து, Anon - ('Anonymous' என்பதன் சுருக்கம்) எனும் கட்டுரைத் தொகுப்பை அவர் எழுதியதும் அப்போதுதான். கடந்த காலம் x நிகழ்காலம், ஆண் x பெண், உணர்வு x அறிவு என்று இரும விண்மீன்களில் (Binaries) இறுதிவரை வாழ்ந்த வர்ஜினியா 1941, மார்ச், மாதம் மிக மோசமான மனச்சிதைவிற்கு ஆளாகின்றார். மார்ச் 18, ம் தேதி அவரது கணவர் முழுவதும் சேறு பூசிய வர்ஜினியா தனது நடைபயிற்சி முடிந்து திரும்புவதைக் கண்டு,அது ஒரு தற்கொலைக்கான முயற்சியே அறிந்து கொள்கிறார். வர்ஜினியா அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து மூன்று தற்கொலைக் குறிப்புக்களை எழுதுகின்றார் - அதில் முதலாவதில், 'இந்தப் பயித்தியக்காரத்தனம் என்னை நெருங்குகின்றது' எனவும், இரண்டாவதில், தனது தமக்கைக்குத் தான் பல குரல்களைக் கேட்பதாகவும் கற்பனை உருவெளித்தோற்றம் (Hallucination) தென்படுவதாகவும், தான் இம்முறை வெகுதூரம் சென்று விட்டதாகவும் குறிப்பிடுகின்றார். பெண்மைத் தன்மைக்கு எதிரான பெண்ணிய நிலைப்பாடாக, தங்களது ஆண்மையக் எதிர்ப்பினைப் பதிவு செய்த வர்ஜினியாவும், ஸில்வியா பிளாத்தும் ஆழமாக புரிந்து கொண்டு மிக விரிவாகப் பேசப்பட வேண்டியவர்கள். வர்ஜினியாவின் அலைகள் (waves) காட்சிகளுக்கு இடையே (Between the Acts) உம், ஸில்வியாவின் பெல் ஜார் (Bell Jar) உம் கருத்தொற்றுமை வாய்ந்தவை. அழிவு, (Chaos) வாழ்க்கை - இவை குறித்து ஒரே ரீதியில் ஆராய்பவை. அலைகளில் ஆறுவிதமான ஆளுமைகள் பற்றி (கிட்டத்தட்ட அவரது உடைந்த, வெவ்வேறான ஆளுமைக் குணங்கள் தாம் அவை) வர்ஜினியா பேசுவது போலவே, Bell Jar இல் தனது, வெந்நீர்க் குளியல் தொட்டி அனுபவத்தைப் பேசுகிறார் ஸில்வியா. காண்பவற்றிற்கும், உண்மைக்கும் இடையேயான ஊசலாட்டமே - Dangling between Perceptive and Factual Worlds - இருவரது அனுபவங்களும்! தனது Ariel கவிதையில் "The dew that flies / Suicidal /" எனும் போது, தரிசனம் (vision) எனும் ஒரு அனுபவத்தை இயற்கையின் மீது ஏற்றிப் பார்க்கின்ற ஸில்வியாவும், Between the Acts, இல் சாதாரணக் கண்ணாடியில் தனது உருவப் பிரதிபலிப்பினை முக்கோண வடிவக் கோணத்தில் (Prism - Sighted Dimension) காணும் Mrs. Giles Oliver ஐப் படைக்கின்ற வர்ஜினியாவும் ஒரே பெண் மனதின் வெவ்வேறு உருவங்களே! Schizophrenia (மனக்கோளாறு) நோயால் பீடிக்கப்பட்ட ஸில்வியாவும Bipolar (மனச்சிதைவு) நோய் பீடித்த வர்ஜினியாவும் ஒரே பெண்ணின் இருவேறு பிம்பங்களே. வர்ஜினியாவின் Rhodaவும், ஸில்வியாவின் Esther உம் தங்களைத் துண்டு துண்டான விவரணைகள், சிராய்ப்புக்களான உரையாடல்கள், இடையிடையே தொடர்பு துண்டிக்கப்பட்ட வாக்கியங்கங்களால் வெளிப்படுத்துபவர்கள். மனநோயாளிகளின் உலகம் இப்படி எல்லைகள் தூண்டாடப்பட்டவைதான். கோடுகள், விளிம்புகள், சட்டகங்கள் அற்ற இந்தப் பெண்களது உலகைப் பற்றிப் பேசுகின்ற ஜீலியா கிறிஸ்தவா (Julia Kristeva) தனது "In about chinese women", எனும் கட்டுரையில், இவர்களது தற்கொலையைத் தாய்மையின் குரலுக்கான பதில், "an answer to the Maternal call" என்கிறார். தந்தைமை சமூக ஆதிக்கத்தினால் முற்றிலும் தங்களைத் தாய்மையோடு மீண்டும் இணைத்துக் கொள்ள விழைந்து, முயன்று, தோற்று அதற்குத் தீர்வாகத் தற்கொலையைத் தேர்கிறார்கள் ஸில்வியாவும், வர்ஜினியாவும் எனும் கிறிஸ்தவாவின் பார்வை ஒரு புதிய கோணத்தைத் திறக்கிறது. "In her chapter 'I who want not to be' Kristeva examines Suicide as a woman's answer to the maternal call. For her, this call of the mother, closely related to "the Socio - political battle", is victorious and irrestible for the vulnerable ego whom the weakening superego represented by family and history can not really support. The call, resulting from "The love that bound the little girl to her mother and lain in wait for her" is purely semiotic (பொருட்குறி). The woman hears "Voices", experiences "madness", "hallucinations" and "life itself cann't hang on: slowly, gently, death settles in" என்கிறார் விமர்சகர் ஒருவர். இந்த இரண்டு ஆளுமைகளில் வர்ஜினியா குறித்து விரிவாகப் பேசியாகிவிட்டது. ஸில்வியா குறித்துப் பிறிதொரு அவகாசத்தில் விரிவாக விவாதிக்கலாம். இருவருடைய படைப்புலகம், ஆளுமை, குறித்து ஆராய்ந்த Solenne Lestinne, (University of Paris), தற்கொலையின் மூலமாக இவர்கள் தேடிக்கொண்ட மரணம் இவர்களுக்கு தண்டனையோ, தப்பித்தலோ அல்ல- மாறாக அது ஒரு விடுதலை என்கிறார். "Death offers an Epiphany. It mends Plath's and Woolf's Fragments" எனும் Sollenne Lestienne இன் வாக்கியம் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது! ஆம்-மரணம் இவர்களுக்கு ஒரு தெய்வீகத் தோற்றமே! (Death is a divine manifestation to them) இத்தற்கொலையின் பார்வையாளர்களாகிய, நீங்களும், நானுமே தற்கொலைக்குத் தூண்டுவதன் மூலம் தண்டனைக்குரியவர்களே! படைப்பாளிகளை, கலைஞர்களை அவர்களது மனநோயோடு, பயித்தியக்காரத்தனங்களோடு நாம் அங்கீகரிக்கையில், பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வது உறுதி செய்யப்பட்டுவிடும். ஒரு புகைப்படம், அதனை எடுத்தவரது தற்கொலை குறித்த பதிவொன்றை நிறைவாக இங்கு பகிர விரும்புகிறேன். 'தெ நியூயார்க் டைம்ஸ்க்'கான கேவின் கார்ட்டருடைய புகைப்படம் ஒன்று - பசியினால் ஒடிந்து உள்விழுந்த ஒரு சூடான் சிறுமியின் அருகில் ஒரு கழுகு குந்தி இருக்கும் இந்தப்படம் பட்டினிக் கோலத்திற்கே படிமமாக அமைந்துவிட்டது. "தெ நியூயார்க் டைம்ஸ்" நடத்திய கேமிரா படப்பிடிப்புப் போட்டியில் மேற்கண்ட இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற புளிட்ஸர் பரிசு (Prize) கிடைத்தது. தனது 33 வயதில் - புளிட்ஸர் பரிசு அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளே 1994 சூலை 29 தேதியிட்ட 'த நியார்க் டைம்ஸ்' பத்திரிக்கையில் இறந்தோர் அறிவிப்புப் பகுதியில், தற்கொலை செய்து கொண்டார் என்ற அறிவிப்போடு கார்ட்டரின் படம் இடம் பெற்றது. செய்தியாக இது வெளியானபோது அறம்சார் அதிர்வலைகள் எழுப்பிய தற்கொலை அது. "'தெ டைம்ஸ்' இதுழில் இது குறித்து "வேலைப்பாட்டின் கொடூரமான பேரச்சம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், கார்ட்டருடைய அறவுணர்வு குறித்து பத்திரிக்கையாளருக்கேயான சில வினாக்களை எழுப்பினார். கார்ட்டர் ஏன் அந்தக் குழந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை? என நண்பர்கள் வியந்ததாகக் கூறுகிறார். இந்த மனிதர் அந்தக் குழந்தையின் துயரத்தை, வலது பக்கத்தில் இருந்து எடுப்பதற்குத் தனது கேமராவை ஒழுங்குப்படுத்தும்போது, அந்தக் கழுகைப் போலவே இவரும் ஒரு கொன்று தின்னும் மற்றொரு கழுகாகவே அந்தக் காட்சியில் வெளிப்படுகிறார் என எழுதினார்". (புனைவுகளும் உண்மைகளும் - க. பஞ்சாங்கம்: 361, 363) என்கிற இது தொடர்பான இன்னொரு செய்தியையும் வாசித்தபோது ஒரு தற்கொலைக்கான தூண்டுதலை செயலாக - அதனைப் பூர்த்தியாக்குகின்ற பாதையை, ஒரு இதயமோ, இரண்டு கண்களோ, இரு கால்களோ, இரு கைகளோ மட்டுமே செய்வதில்லை. பல்லாயிரம் சாட்சிகள் பங்கு கொள்கின்ற ஒரு மேடை நாடகம் அது என்கிற புரிதல் முகத்தில் அறைந்தது. ஸ்ல்வியாவின், வர்ஜினியாவின் தற்கொலைகளைப் பார்த்தும், விவாதித்தும், துக்கித்தும், பின் வாழ்க்கையைத் தொடரும் நாமும் கழுகுகள் தானே! வர்ஜினியாவின் சட்டைப்பைகளுக்குள் நதிக்குள் மூழ்குவதற்கு முன்பு அவர் சேர்த்து வைத்த கற்களின் எடை ஆண்டுகளின் எண்ணிக்கையில் கூடுதலாகக் கனக்கும்போது - பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வது ஒரு கனவு மட்டுமே ! வர்ஜினியா பலமுறை ஒத்திகை பார்த்த அந்த நாடகத்தினை மிக நேர்த்தியாகப் பூர்த்தித்துக் கொண்ட அந்த இறுதி நாள் - மார்ச் 28ம் தேதி. அதிர்ஷ்ட / துரதிர்ஷ்ட வசமான அந்த மார்ச்மாதம் 28ம் தேதியன்று, வர்ஜினியா தனது மூன்றாவது தற்கொலைக் குறிப்பை மிகத் தெளிவாக எழுதுகின்றார். "இந்த நோய்வராத வரையில் நாமிருவரும் மகிழ்ச்சியாகவே இருந்தோம்" என்று தன் கணவருக்கு எழுதிய அக் கடிதத்தைக் கணவரது பார்வையில் படும்படி கணப்படுப்பின் மீது வைத்துவிட்டு, வீட்டின் பின்புறவழியாக அவரது கணவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெளியேறுகிறார். தனது நிலை மாறாட்டங்கள் (disorders) தொல்லைகள், பேதலிப்பு (delirium) இவற்றை அணைத்தபடி, சமூகக் கட்டாயத்தனம் துரத்த, அவரது நனவிலி மனதின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றாார். தனது வழக்கமான காலனி, உரோமத்தோலாடை, ஊன்றுகோல் இவற்றோடு வெளியேறிய அவரை அதற்குப்பின் யாரும் பார்க்கவில்லை. லியோனார்ட் அவரைத் தேடியபோது, 'ஊஸ்' (Ouse) நதியின் கரையில் அவரது ஊன்று கோல் மட்டுமே கிடைத்தது. அதற்கு மூன்று வாரங்களுக்குப் பின், April 18ம், தேதி, அந்த ஆற்றோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் கரையொதுங்கிய அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. இம்முறை மரணத்தைத் தள்ளிப்போடக் கூடாது எனும் உறுதியுடன் அவர் தனது மேலாடையின் சட்டைப் பைகளிலும் கற்களை நிரப்பியப்படி, தன் மரணத்தை நிச்சயம் செய்திருந்தார். தன் வீட்டின் பின்புறம் அந்தக் காலைப் பொழுதில் நடந்து சென்று தன் மரணத்தை வர்ஜினியா தழுவியதாக நான் நினைக்கவில்லை. ஏறக்குறைய தன் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களில், நனவிலி மனதின் ஆணைப்படி அவர் அந்தப் பாதையில் பலமுறை சென்று திரும்பி இருக்க வேண்டும். மரணத்தை அவர் ஒத்திப்போட்டோ, தள்ளிவைத்தோ தான் வந்திருக்கிறாரேயொழிய ஒருபோதும் அதனை வெறுக்கவோ, வென்றிருக்கவோ இல்லை என்றே தோன்றுகிறது. தற்கொலை மட்டுமே மரணத்திற்கு நிதானத்தின் ருசியை வழங்கமுடியும் என்பதை வர்ஜினியாவின் பதட்டமில்லாத தற்கொலைப் பாணி எனக்கு உணர்த்தியது. அவரது தற்கொலைக்குப் பின்பு இருபத்தெட்டு ஆண்டுகள் உயிர்வாழ்ந்த லியோனார்ட் வுல்ஃப், தனது மனைவி நேசித்த அந்த வீட்டுத் தோட்டத்தில் (Garden at Monk's House) வர்ஜினியாவின் தலையளவு சிற்பத்தை அங்கிருந்த ஒரு மரத்தினடியில் வைத்து, அதனருகே அலைகள் எனும் (The waves) அவரது புதினத்தின் நிறைவு வரிகளை, இரங்கல் வரிகளாகப் பதிவு செய்திருக்கின்றார்: "Against you, I will fling myself, unvanquished, and unyielding, O, Death" என்பதே அவ்வரிகள்! மரணமே – உனக்கு எதிராக, வெற்றிகொள்ள முடியாத, விட்டுக்கொடுக்க முடியாத என்னை நான் எறிவேன்! வர்ஜினியா தன் சட்டைப் பைகளில் நிரப்பிய கற்கள் நம் நடைபாதையெங்கும் கிடக்கின்றன: என்றேனும் ஒரு நாள் - நம்மில் யாருடைய சட்டைப் பைகளுக்காவது தாம் தேவைப்படுவோம் என்று அவைசொல்வது எனக்கு மட்டுமே கேட்கின்றது! ஏனெனில் நான் வர்ஜினியாவைக் காதலிக்கிறேன் - அவளது தற்கொலையின் ருசியோடு! அவளது மரணத்தின் தீராத பசியோடு! உதவிய நூல்கள்: 1) இலக்கிய இஸங்கள் - இ.எஸ்.தேவசிகாமணி 2) புனைவுகளும் உண்மைகளும் - பேரா. க. பஞ்சாங்கம் 3) தற்கொலைகளைக் கொண்டாடுவோம் - ராமானுஜம் 4) சிக்மண்ட் ப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல் - தி.கு. இரவிச்சந்திரன் 5) ஆத்மாநாம் படைப்புகள் - பிரம்மராஜன் 6) Virginia Woolf: A Collection of Critical Essays - Claire Sprague 7) Virginia Woolf: A Room of One's Own

தொடர

எரிந்த வனத்திலிருந்து கிளம்பிய சிறுபறவை - எழில் ராஜனின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்

கொடும் துயரம் நிகழ்ந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. திரும்பிய பக்கமெல்லாம் போரின் செய்தி நிலைகுலைய வைத்தது. வானைக் கிழித்து விழும் எரிகனைகளுக்கு அஞ்சி ஒளிந்த பகுங்கு குழிகள் புதைகுழிகளாக மூடின. வெடிக்கும் துப்பாக்கிகள் ஓய்ந்த சிறுபொழுது இடைவெளியில் தமிழர்களின் கிடத்தப்பட்ட உடல் வரிசையை தொலைக்காட்சிகள் தினம் தினம் காட்டி கணக்கைக் கூட்டின. இடிந்த வீடுகள், சரிந்த மரங்கள், உடைந்த நீர்நிலைகள், தொலைந்த உறவுகள் என சொல்லிச்சொல்லி பக்கங்கள் கூடின. தலைவர்களின் அறிக்கைகள், போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள். படைநகர்வும் புலம்பெயர்வும் எல்லோரையும் வதைசெய்தன. வரலாறுதொட்டு வாழ்ந்த பூமி இல்லையென்றாகி மானுட அறங்கள் பொய்யென மாறி கிடைத்ததை அள்ளிக்கொண்டு திசையற்ற வெளியில் மக்கள் நடந்தனர். தொலைக்காட்சிகளில், மேடைகளில், சுவரொட்டிகளில், செய்தித்தாள்களில், துண்டறிக்கைகளில் படர்ந்த ரத்தச்சுவடு நமது வீடுகளில், உணவில், பொழுதில் கடந்து இமைகளில் தேங்கியது. வேளயெரிந்து நெடுநாளாய் வாசல் எரிந்து கடைசியாய் கூரை எரிந்தது அந்த மே மாதத்தில். உலகத்தை நோக்கி உள்ளிருந்த குரல்கள் அலரின. அதன் ஈரமற்ற கைகளை உதவிக்கு அழைத்துப்பார்த்தன. கடல் எரிந்தது. காற்று எரிந்தது. காடு எரிந்தது. வனெரிந்து நட்சத்திரங்கள் எல்லாம் கருகி வீழ்ந்தன. ஏதொன்றும் செய்யமுடியாமல் கையறு நிலையில் உலகத் தமிழினம் தவித்த வேளையில் எல்லாம் முடிந்தே போனது. பிணத்தின் மீது வெற்றிக்கொடி ஏற்றப்பட்டது. ரத்தத்தில் முகம் கழுவி உலகத்திற்கு சிங்களம் ஒரு புதிய உண்மை சொன்னது. வலுத்தவன் செய்வதே அனைத்தும் அறன் ஆகும் என்றது. முன்னெப்போதும் நிகழாத கொடுமையும் பின்னெப்போதும் கழுவமுடியாத அவமானத்தையும் நம் தலைமுறை கண்டடைந்தது. வரலாற்றில் நமது காலம் மிக மோசமான இடத்தைப் பிடித்தேவிட்டது. எதுகொண்டும் எழுப்பமுடியாத பள்ளத்தில் நமது வார்த்தைகள் விழுந்து கிடக்கின்றன. நமது பெருமைகள்யாவும் ஒரு மௌனத்தில் முடிந்துபோனது. ஆனால் வனம் எரிந்த துயரத்தை பறவைகள் திசையெங்கும் கூவிச்செல்வது போல ஈழத்தமிழ்ப் படைப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வந்தவண்ணம் உள்ளன. ஒன்றை வெட்டினால் ஓராயிரமாய்த் தளிர்ப்பதுபோல போர் நம்மை பலவாராக எழுத பேச அடுத்த நகழ்வுக்குச் செல்ல இட்டுச் சென்றுள்ளது. அப்படியான ஒரு முன்னெடுத்தலை செய்திருக்கின்றார் எழில் ராஜன். முள்ளி வாய்க்காலும், பின் முள்ளி வாய்க்காலும் என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பு போருக்குப் பிரகான வாழ்வைப் பேசுகிறது. ‘எல்லாமே தோற்றுப்போனதான தோற்றப்பாடு’ என்று போரின் சூழலை விளங்கவைக்கிறார். ‘கடவுளரும் கைவிட்டதான ஏக்க நிலை’ என்று விழிகளின் வெறுமையை நம்மிடத்தில் பெருமூச்சோடு சொல்கிறார். ‘நம்பிக்கைகள் தோன்றாமலேயே நேரம் நகர்வதான யதார்த்தம்’ என்று காலம் வெட்டவெளியாய்க் கிடப்பதை உணர்த்துகிறார். இன்றைக்கும் இப்படித்தான் இருக்கிறது. முள்வேலி முகாமுக்குள் முடிந்துவிட்டது நமது ஆகாயம் என்று புள்ளியற்ற திசையில் தாய் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மழலை ஒன்று வண்ணத்துப் பூச்சியைத் துரத்துகிறது என்று ஒரு கவிதையை முடிக்கிறார். ‘மிதியடி’ பதாகை தாங்கி நிலம் தரிசாய்க் கிடக்கிறது. ஆனால் தரிசு வாழ்விலும் மேகம் எழும். தூரல் விழும். என்றோ புதைந்த விதைகள் தளிர்த்துப் பூக்கும். வண்ணத்துப்பூச்சியை காற்று அழைத்து வரும். கனிகள் குலுங்கும். வனம் தழைக்கும் என்று இந்தக் கவிதையின் வழியாக நம்புகிறோம். இத்தொகுப்பு எழுபதுக்கும் மேற்பட்ட குறுங்கவிதைகள் கொண்டது எனினும் ஒரே பேசுபொருளைக் கொண்டது. போரின் அவலமும் நம்பிக்கையுமே எல்லாக் கவிதையின் பாடுபொருள். முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின் தமிழ் நிலம் எத்தகைய கொடுரங்களைச் சந்திக்கிறது என்பது கவிதை நெடுகிலும் காண்கிறோம். கேள்வியற்ற ஆக்கிரமிப்பு; காரணமற்ற கொலைகள்; இரக்கமற்ற வண்புணர்ச்சி; விடையற்ற காணாமல் போதல்கள் என இரவின் கொடூரம் முன்னைய காலங்களைவிட முழுவீச்சாக நடக்கிறது என்பதை ஒவ்வொரு கவிதையிலும் குமுறுகிறார். நிறம் மாறிய கட்டாக் காலிகளின் ஊளையிடல்கள் அனுமதியின்றிய உள்நுழைவுகள் சத்தமின்றி ஓலமிடும் முலைகள் பற்களுக்குள் செத்சல்போகும் காம்புகள் அவள் மூச்சற்று இயங்குகின்றாள் பிள்ளை விழித்துவிடக் கூடாதென. இதுதான் இன்றைய நிலை என்கிறார். போருக்கு முன்பு ஓலங்கள் நமக்குக் கேட்டன. தற்போது கேட்கவில்லை. ஓலமிட்டு இழந்த பிள்ளைகளை அவள் அறிவாள். இருக்கிற ஒரு பிள்ளையையும் போருக்கு அனுப்ப அவள் சங்க காலத்தில் வாழவில்லை. இது இருபத்தியோராம் நூற்றாண்டு என்பதை அவள் உணர்ந்தேயிருக்கிறாள். உறங்கும் பிள்ளையைக் காப்பாற்றுவதே அவளின் உயிர்ப்பாக இருக்கிறது. அந்த உயிர்ப்புதான் இந்தக் கவிதைத் தொகுப்பு. சாவல்கள் இல்லை. சவடால்கள் இல்லை. அறைகூவலோ முழக்கங்களோ இல்லை. வலியைப் பேசுகின்றன கவிதைகள். சிறுசிறு நம்பிக்கைகளை நமக்குச் சொல்கின்றன. இன்றில்லையேல் என்றேனும் விலங்குகள் முறியும் என்பதற்காக சுவாசிக்கின்றன கவிதை மூச்சு. எளிய கவிதை நடை. துயரங்களை நேராய்ச் சொல்லுகிற பாங்கு கவிஞருக்குக் கைவந்திருக்கிறது. வெள்ளைக் கம்பிகளுக்கு கருப்பு வர்ணம் பூசிக்கொண்டோம் ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திற்கு சட்டியிலிருந்து அடுப்புக்குள் என்பது அவரது கவிதைச் சாட்டை. சின்னச்சின்ன தொடர்களில் சம்பவங்களை அடுக்கும் லாவகம் துள்ளியமானது. வீணடிக்கிற வேளையில்லாமல் வலியை நமக்கு கண்ணீர்த்துளியில் கனந்தோடு சொல்கிறார். இமையில் தேங்கி நிற்கிற ஒருதுளி கண்ணீரோடு கைகள் பற்றி சொல்லும் ஒருசில வார்த்தைகளுக்கு ஈடேது. அப்படித்தான் இவரது கவிதைகளும். குதறப்பட்ட பூமியில் இருந்து ஒரு பறவை தன் கூடு சிதைந்த வரலாறு சொல்கிறது. மரமற்ற கானகத்தில் அலைகிறது அதன் வாழ்வு. காற்றில் கேட்கும் அந்தப் பாடல்களால் நமது இரவுகள் எரிகின்றன. மாண்டவர்களின் கல்லறைகளை அடுப்புகளாக்கி விடுதலைப் பால் பொங்க இந்தக் கவிதைகளை நமது கையில் தந்திருக்கிறார். காயங்களும் கண்ணீர்த்துளிகளும் நிரம்பிய வாழ்வில் நம்பிக்கையான வார்த்தைகளை நாம் கவிதையிலிருந்தே கண்டடைவோம். எழில் ராஜனின் இந்தக் கவிதைத் தொகுப்பு நமக்கு வாழ்வின் மீதான நம்பிக்கை சுடறை ஏற்றும். துயரங்களைப் பேசுவது கோழைத்தனம் அல்ல. பயணத்தின் திசைவழியை அது தீர்மானிக்கும். இதுபோன்ற கவிதைத் தொகுப்புகளால் எழில் ராஜன் காயங்களை ஆற்றி வாழ்விண்பக்கம் இட்டுச் செல்வார் என நம்புவோம். * * * * *

தொடர

வண்ணங்களால் குழலூதுபவரைக் கொண்டாடுவோம் - கலைஞர், படைப்பாளி பாரதிமணி அய்யாவை முன்வைத்து ஒரு பகிரல்

பெருங்கடலை ஒரு துளி உப்பின் மூலம் அளக்கவோ, அதன் விந்தைகளை அரியதொரு உயிரினத்தின் அறிமுகத்தால் விவரிக்கவோ, அல்லது ஒரு நல் முத்தின் விளைச்சலின் மூலம் உணர்த்தவோ முடியுமா - அதுபோலவே என் அன்பிற்கும் மரியாதைக்குரிய அய்யா பாரதிமணி எனும் ஆளுமையும்! அவரது கம்பீர உருவமும், ஆழங்கால்பட்ட அறிவுத் தேர்ச்சியும், அரங்கம் எனப்படுகின்ற நிகழ்த்துகலைத் துறையில் அவர் பதித்திருக்கின்ற முத்திரையும், பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைத்திறனும் அவரை எனக்கு Boswell இன் Dr.Johnson ஆகவே உணரச் செய்யும். மேற்சொன்ன அத்தனையையும் மீறி அவரது எளிமையும், மனிதர்களை எடைத்தராசின்றி அவரவர் இயல்புகளோடு ஏற்று நேசிக்கின்ற குழந்தைமையும், அபாரமான நகைச்சுவைத் திறனுமே என்னை அவரிடம் கூடுதலாக நெருங்கச் செய்தவை. A man who hobnobs as a globetrotter can love a nondescript wholeheartedly என்பதை இவரே எனக்குப் புரியச் செய்தவர். எளிமைதான் இவரது பலம். எளிய மனிதர்களுடனான இவரது பிணைப்பும், மிகப் பெரிய அந்தஸ்த்துக்காரர்களைத் தாமரை இலைத் தண்ணீரெனக் கடத்தலுமே இவரது அறம். வாழ்வையே கலையாகச் சுவைத்தலே இவரது ஆன்ம ரஸம். தாம் வாழ்ந்த அனுபவத்தின் நிறைகடலைத் தளும்பாமல் ஒரு சொட்டு உள்ளன்போடு மனிதர்களின் உள்ளங்கையில் தருபவர். செழுமையடைந்த ஒரு மனித மனத்தின் கனிவையும், நிறைவையும், கலையின் வழி வாழ்வைத் துய்த்த பூரணத்தையும் ஒரு சேர ஒரு மனிதரிடத்திலே நான் கண்டு வியக்கிறேனென்றால் - அது இவரிடத்தேதான் - 'A Wholesome Man!'. அவரோடு அதிகம் பழகச் சந்தர்பங்களில்லை எனக்கு - ஆனால், ஆர்வமும், அன்பும், அக்கறையும் துலங்க என்னை அணைக்கின்ற அந்த ஒரு அணைப்பில் உண்மையான வாஞ்சையும் ஆதுரமும் புலப்படும். அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் வாழ்வின் மீதான நம்பிக்கையைத் திரி தூண்டிவிடும் அற்புத நிமிடங்கள். தொடர்ச்சியாக இல்லை என்றாலும், அவ்வப்பொழுது இவரது நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே கட்டுரைகளைப் படித்ததுண்டு. ஸ்காட்லாந்தில் பிறந்து தனது பதினெட்டு வயதில் லண்டனுக்குக் குடிபெயர்ந்த மருத்துவர், நாடக ஆசிரியர் Tobais George Smollet (1721 - 71). அவரது The Adventurer of Roderick Random எனும் அற்புதமான படைப்பினைப் படிக்கும் பொழுதெல்லாம் தோன்றியதில்லை அதற்குச் சமமான நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்றொரு கட்டுரை வகைமை எழுத்தினை 21ம் நூற்றாண்டில் நான் வாசித்து மலைப்பேனென! Picareque Novel எனும் புனைகதை வகைமையின் "rascaldom, travel and adventure" ஆகிய கூறுகளுடன் எழுதப்பட்ட பாரதிமணி அய்யாவின் கட்டுரைகளைக் காழ்ப்பு, உவப்பற்ற, துலாக்கோலின் பாரம் சுமக்காத முழு மன விகாசிப்பு என்பேன் நான். சக மனிதர்களது பலம், பலவீனம், கடந்த - நிகழ் நாட்களின் நகர்வில் தெரிக்கின்ற சூட்சுமங்கள், புதிர்கள் எனத் தன் அகக்கண் வழி உய்ந்தவற்றை, ஒரு கனவானைப் போலவோ, நீதிபதியைப் போலவோ அன்றி, நம் தோள் தொட்டுப் பகிரும் நண்பனைப் போல நமக்குக் கடத்தியவை அவை. நாகர்கோவிலில் பிறந்து, பெரும்பான்மை நாட்களைப் (50 வருடங்களைப்) புது தில்லியில் கழித்த பாரதிமணி அய்யாவின் ஆளுமையை ஒரு கழுகுப்பார்வை பார்த்தால் - உம்பர்க்கும் இம்பர்க்கும் அன்பர் இவர் என உரத்துச் சொல்லத் தோன்றுகிறது. மனித மனதின் விசித்திரங்களை, ஆசைகளை, சுயநலத்தை, எதிர்பார்ப்புக்களை நேர்மையோடு, சுய பரிசோதனையின் தம்பட்டமற்ற தொனியில் பகிர்ந்து கொள்கின்ற genial humourist ஆன அய்யாவை ஆங்கிலத்தில் சுட்டும் ஒரே ஒரு சொற்றொடர் - A phenomenal avant garde! yes - he is one such! Dr.Johnson The Lives of the Poets எனும் புகழ்பெற்ற நூலைத் தனது அறுபத்தி ஏழு¡வது வயதில் தான் எழுதினார். பாரதிமணி அய்யாவும், தனது 'இளமை துள்ளுகின்ற' எள்ளல் எழுத்துப் பயணத்தைச் சற்று தாமதமாகவே துவக்கியிருக்கிறார். மனித வாழ்க்கையில் மட்டுமே ஆர்வம் கொண்டவர் ஜான்சன் என்பதால் மேற்சொன்ன புத்தகத்தில் அவர் பதிந்த கவிஞர்கள் எவரும் வெறும் நூலாசிரியர்களல்ல என்பார்கள். பாரதிமணி அய்யாவும் அப்படியே - வாழ்வை விரும்பி, ரசித்து, ருசித்து நேசிக்கும் அவருக்கு யாருமே வெறும் கதாபாத்திரங்களோ, அதிகாரிகளோ அல்லது கலைஞர்கள் மட்டுமோ அல்ல. அனைவரும் அவரது புரிதலுக்கும் அன்பிற்குட்பட்ட சக மனிதர்கள், மனுஷிகள் தான். அபாரமான இசை ஆர்வம், ஞானத் தேர்ச்சி, கனிந்த நேசம், நேர்த்தியான ரசனை, மனிதர்களின் நாடி பிடித்து ஒரு புன்னகையுடனோ, புரிதலுடனோ (எடைபோடும் தீர்ப்புக்களற்று) ஆட்கொள்ளும் நுட்பம், சுயதம்பட்டமின்றி மிக நேர்மையாகத் தன் விவரணனைகளை மானுடமும், மனிதமும் கைகோர்க்கின்ற எளிய அறத்தோடு பதிவு செய்தல் - என்று வாழும் பாரதிமணி அய்யாவின் அறிமுகமும், தோழமையும் எனக்குக் கிடைத்ததொரு பொக்கிஷ உறவு. ரஷ்யன் பாலே நடன மேதையும் கோரியோக்ராபருமான (Coreographer) வாட்ச்லாவ் நிஷேன்ஷ்கி (Vaslav Nijinsky) உலகம் பார்த்த நடன மேதைகளில் முதல்வராக இருந்தவர். அவருடைய வாழ்க்கையைப் பற்றி அவருடைய மனைவி ரொமோலா எழுதியிருக்கின்ற சுயசரிதைக்கு உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு கவி பால் க்லாடேல் (Paul Claudel) முன்னுரை எழுதியிருக்கின்றார். "மின்னல் சரத்தைப் போல அவர் மேடையைக் கடக்கிறார். திரும்பிப் போகவில்லை, அதற்கு முன் இடியைப் போல நம் முன் நிற்கிறார். நமது அநாகரிக நடனத்தை தடுக்கும் ஈஸ்வரனைப் போல மகத்துவமான மனிதனின் கற்பனை உலகம் அது. நித்தியத்தின் ஸ்தூல வெளியில் நம் அதீத உணர்வுகளை சித்தரித்துச் செல்கிறார். அவர் நம்முடைய ஒவ்வொரு ஆதிகால கலனங்களையும் எடுத்து பிரக்ஞையின், ஆற்றலின், உச்சபட்ச பிரபஞ்சத்துக்குள் எறிகிறார்; வெர்ஜில் நம் வார்த்தைகளையும் கற்பனைகளையும் பரிவர்த்தனம் செய்வதைப் போல!" என்று நிஷேன்ஷ்கி குறித்துப் பால் கீலாடல் சொன்னது அச்சொட்டாகப் பாரதிமணி அய்யாவிற்கும் பொருந்தும். 'அய்யா' எனும் இவ் விளித்தல் அவர் மேல் எனக்கு எப்போதும் இருக்கும் பெரும் மரியாதையின்பாற்பட்டது எனினும், வாழ்வின் ஒவ்வொரு நொடியையையும் ரசித்து, ருசித்துக் காதலுடன், நிதானமாகத் துய்க்கும் அவரை நான் Lovable Rascal என்றுதான் கொண்டாடுவேன். அதற்கான உரிமையை, என்னை எங்கு பார்த்தாலும் அணைத்துத் தன் அன்பைச் சொல்லும் இக் குழந்தமை மனிதர் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்பது எனது பெரும் நிறைவும், திருப்தியும். Shakespeare இன் பின்வரும் புகழ்பெற்ற இவ்வரிகளை மாற்றி இவருக்காக நான் கையாள்கின்ற poetic licence உம் இம் மாமனிதருக்காக மட்டுமே. "Age cannot wither him, nor custom stale his infinite variety. Other men cloy The appetites they feed, but he makes hungry Where most he satisfies". தன்னை யார் மிக அதிகம் நேசிக்கிறார்கள் எனும் பரிசோதனையினைத் தனது மூன்று புதல்விகளுக்கும் லியர் அரசன் (king Lear) வைக்கும் பொழுது, அவரது புதல்வி கார்டிலியா (cordelia) சொல்வது போல, "I love you Aiya According to my bond, no more nor less". * * * * *

தொடர

இந்தக் கவிஞன் நிச்சயம் ஜெயிப்பான்

அன்பு நண்பர் சு. ரகுநாத் கவிதை வெளியில் புதியதாய் பிரசவித்துத் தவழத் துவங்கிய புதுக்கவிதைக் குழந்தை. அபத்தசிந்தை நோயாகத் தாக்காமல் சமுக மேம்பாட்டின் மீது தீராக் காதல் கொண்ட ஆரோக்கியமான குழந்தை என்பதாலேயே இதை வரவேற்கிறேன். கவிஞர் கந்தர்வன் “ஒவ்வொரு மனிதனும் சாவதற்குள் ஒரு முறையாவது ஒரு கவிதை எழுதிவிட வேண்டும்” என்று சொல்வார். காரணம் - கவிதை தான் மனிதனை மனிதனாய் உணர்த்தும் மகாசக்தி. ரகுநாத் மானுடநேயனாக தன்னை உணர்ந்துள்ளார். ஆக அவர் எழுதுவதற்கான முதல் தகுதியைப் பெற்றுவிட்டார். இனி பயணத்தை துவங்க வேண்டியது தான். “பனியின் நடுக்கம் சூரியனின் வியர்வை ஆற்றின் தாகம் நிலத்தின் வலி” இதை உணர்ந்ததுண்டா என்று கேட்கையில் "சூரியனின் வியர்வை” என்ற சொல் கற்பனைக்கு சவால் விட்டு சொக்கவைக்கிறது. “கோபத்தில் விடும் காய் கூட சீக்கிரம் பழுத்து விடுகிறது” என்று குழந்தையை ரசிக்கும் ரகுநாத்தின் இவ்வரி எனக்கு மிகப் பிடித்திருந்தது. கவிஞர் மேத்தாவின் கண்ணீர் பூக்களின் காலத்து கவிமொழியை மீண்டும் தம் பிரதியில் இயக்கியுள்ளார். அதனை உரமாகக் கொண்டு, புதிய நடைக்குள் அவர் பிரவேசிக்க வேண்டும். தனக்கானதொரு கவிமொழியை அவர் கண்டடைவார் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. வார்த்தை நுட்பமானது. அதனுள் இயங்கும் நுண் அரசியல் அதை விட நுட்பமானது. நமது பிள்ளைகளுக்கான வரலாற்று பாடதிட்டத்திலிருந்து ஒரு சான்று : இரண்டு இனங்கள் இந்தியாவிற்குள் நுழைகின்றன. ஒரே குறிக்கோள் தான். ஆனால் ஒன்றை ஆரிய வருகை என்றும், இன்னொன்றை இஸ்லாமியப் படையெடுப்பு என்றும் எழுதுகிறோம். சொல்லிக் கொடுக்கிறோம். ஆரியத்திலிருந்து திராவிடத்தை மீட்க எத்தனை போராட்டம் - எத்தனை தலைவர்கள் - எத்தனை இயக்கங்கள் தேவைப்பட்டன! அதை நினைவுப்படுத்தும் விதமாய் அதையொத்த யதார்த்த சொல்லாட்சி ஒன்றைச் சொல்கிறார் ரகுநாத் - “வழிமாறும் பெண்ணை ஆண் அடக்கவேண்டும். தடம் மாறும் ஆணை பெண் திருத்தவேண்டும்” என்றெழுதிவிட்டு ஏன் இப்படி, எனக்கேட்கிறார் ரகுநாத். ஒரே செயல் தான் - ஒன்று அடக்கப்படுகிறது. ஒன்று திருத்தப்படுகிறது. ஆதிக்கத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறையை மிகக் காத்திரமாக, நுட்பமான அரசியல் நோக்கோடு கோடிட்டுக் காட்டியதை நான் மிக ரசித்தேன். ஆண்டவனை “இறந்தகால வினைச்செயல்” என்று எழுதி பகுத்தறிவு முகம் காட்டும் ரகுநாத், "அடுத்த வீட்டுப் பெண் என்றால் ஆடை களவு. தன் தங்கை என்றால் சேலை அருளா” என்று கிருஷ்ணனைக் குற்றவாளி கூண்டில் ஏற்றிப் பேத புத்தியை சுட்டிக்காட்டும் வரி சுகமானது. இக்காலக்கட்டத்திற்கு மிக அவசியமானது. 39வது எண்ணில் வரும் மோர் கிழவி கவிதையில் சோலையம்மனுக்கு வைகையில் நீர் இல்லாமல் ஆழ்துளைகிணற்றில் நீர் பெறுவதை சொல்லுமிடத்தில், விழாவின் போது “வைகையில் வெயிலில் குளிக்கும் மக்கள் மந்தை” என்று முரணாகிப் போன சூழலை சொல்வது சமகால அவலம் குறித்த அவரது கவலைப் பதிவு. கதைவெளியில் முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, எனச் சிறுகதையில் ஒரு நீள்பயணம் வழியாக ஒருவாசகன் கடந்து வருகையில் படைப்பாளியாய் பரிணாமம் பெற்றுவிடுவதை போல் தான் கவிதை வனத்தினூடான பயணமும். சு.ரகுநாத் இந்த நூலின் வழியாக துவங்கியுள்ள முதல் கவிதைப் பயணம் மகிழ்ச்சியை மட்டுமல்ல - சிறந்த கவிஞராய்ப் பரிமாணம் பெறுவார் என்கிற நம்பிக்கையையும் தருகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் தீவிரமாகப் பயணப்பட தனது வாசிப்பு அனுபவத்தை அவர் விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். கவிதை எனும் மொழியின் இளவரசியைக் கொஞ்சமேனும் கைவசப் படுத்தும் மாயச்சாவி வாசிப்பின் துணையோடு கூடிய வாழ்வனுபத்தின் மையத்திலே தான் இருக்கிறது. தொடர்ந்து இதே உத்வேகத்தோடு முனையுங்கள் - ரகுநாத்! உங்கள் வளர்ச்சியை அன்போடும், ஆவலோடும் எதிர்பார்த்தபடியிருக்கும். * * * * *

தொடர

அதன் முத்தம் அனைவருக்குமானது!

இறுதியில் இந்தச் சாலையில் தான் வந்தாக வேண்டும் நான் என நன்றாகத் தெரியும் ஆனால், இன்றுதான் அந்த நாள் என்று எனக்குத் தெரியாது நேற்று. -ஒரு ஜென் கவிதை மிக ஆழ்ந்த வாசிப்பு அனுபவம், அறிவின் கூர்மை, தேர்ந்த ஞானத்தின் தேஜஸ், அற்புதமான சொல்லற்றலோடு கூடிய நண்பர் இறையன்புவை நான் அவரது எழுத்துக்கள் மூலமாகவே அதிகமாக அறிவேன். அவரது தத்துவப் பார்வையின் எளிமையும், வசீகரமுமே அவர்பால் என்னப் பெருமதிப்பு கொள்ள வைத்தது. அவரை எண்ணும் போதெல்லாம் மொகமத் தர்வீஸின் பின்வரும் கவிதை நினைவிற்கு வருவதுண்டு: கவிதை வீட்டுக்கு வீடு ஒரு விளக்கை எடுத்துச் செல்லவில்லையானால் ஏழைகளுக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லையானால் அதை விட்டொழிப்பது உத்தமம். உழைப்பாளியின் கைச்சிற்றுளியாக உழவனின் கைக்கலப்பையாக ஒரு சட்டையாக ஒரு கதவாக ஒரு சாவியாக ஆக வேண்டும் கவிதை. இறையன்புவிற்கு எழுத்தும், பேச்சும் மேற்சொன்னது போலத்தான். சாமானிய வாசகனின் புழக்கத்திற்கு வாகான ஒரு சட்டைப்பையாக, ஒரு கைப்பிடியாக, ஒரு சாவியாக இருப்பது அவரது எழுத்தும் - சொற்பொழிவும். பொதுவாக எழுத்தும், சொற்பொழிவும் - ஒருங்கிணைந்த ஆற்றலைப் பெற்வர்கள் மிகச் சிலரே. கூடவே, நல்ல கனவுகளையும், நம்பிக்கைகளையும் விதைக்கக் கூடியவர் அதனினும் சொற்பம். இறையன்பு அப்படி ஒருவரே. மானுடத்தின் மீது மாறாத அன்பும், வாழ்வின் மீது தீராக் காதலும் கொண்ட அவர், அதன் பொருட்டே அரசுப் பணியோடு, இலக்கியப் பங்களிப்பினையும் இணைத்து மிகச் செறிவாகச் செயல்படுகிறார். அவரது மரணத்தின் நிழல் எனும் புதினத்தைப் படித்தது ஒரு தத்துவார்த்த பயணம் எனக்கு. ஞானம் என்பது கூட சமயங்களில் தோற்குமிடம் - மரணத்தில் மட்டுமே! வாழ்க்கையை உதறிவிட்டு விலகி ஓடுபவன் கூட மரணத்தைத் தவிர்க்க முடியாது. அதன் முத்தம் அனைவருக்குமானது. பட்டறிவு, வாழ்வியல் அனுபவம், தேடல், - இவற்றின் ஒருமித்த ஒளி ஞானமெனில், அதன் ஒரு துளி இந்தப் புதினத்தைப் படித்து முடிக்கையில் நமக்கு ருசிக்கக் கிடைக்கலாம். மரணம் என்பது ஒரு இருள் என்றுதான் நமக்கு திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. அது கொஞ்சம் இருளைப் போன்றுதான் நமக்கு காட்சி தருகிறது. சில மரணங்கள் கொண்டுவரும் இருளை நம்மால் கடக்கவே முடியாது என்று தோன்றிவிடுகிறது. ஆனால், அது உண்மையில் இருள் மட்டும்தானா? இந்த வாழ்க்கை எவ்வளவு சாதாரணமானதாகவும் கஷ்டங்கள் நிறைந்ததாகவும் இருந்தபோதும் அது மகத்தானது என்ற தரிசனத்தை நமக்குத் தருவது மரணம் மட்டுமே. மரணமே வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வைக்கிறது. ஆப்படியெனில், மரணத்தைப் பற்றிய புரிதல்தான் வாழ்க்கையை அவ்வளவு பிரகாசிக்க வைக்கிறதா? இருளும் வெளிச்சமும் ஒன்றாக இருக்கும் தத்துவம், மரணத்துக்கு அல்லாமல் வேறு எதற்கு சாத்தியம்? வெ.இறையன்புவின் இந்தப் புதினம், இந்த மகத்தான உண்மையை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. பொதுவாக வாழ்வை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளின் நடுவே மரணத்தையே மையமாகக் கொண்டு ஒரு முழு புதினத்தை எழுதுவது சாகசம். அந்த சாகசத்தை இறையன்பு இந்தப் புதினத்தில் வெகு நேர்த்தியாக நிகழ்த்தியிருக்கிறார். ஏனென்றால், மரணத்தின் ரகசியத்தை திறந்து பார்ப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். இதன் சஞ்சலமூட்டும் பாதையைத் தொடர்ந்து போவதற்கு ஒரு மன உறுதி வேண்டும். இறையன்புவுக்கு அந்த உறுதி இருக்கிறது. இந்த நாவலில் அவர் ஒரு கதை சொல்லியின் பாத்திரத்தையும் ஒரு தத்துவவியலாளனின் பாத்திரத்தையும் ஒரே நேரத்தில் ஏற்கிறார். ஒன்று இன்னொன்றை அழுத்திவிடாமல் இரண்டையும் வெகு அழகாகச் சமநிலையில் கையாள்கிறார். கதையின் மையப்பாத்திரமான நசிகேதன், தன்னுடைய வாழ்க்கையில் இடையறாத மரணங்களைப் பார்க்கிறான். குறிப்பாக நம்பமுடியாத, ஏற்க முடியாத அகால மரணங்கள். காலப் பொருத்தமற்ற மரணங்கள். நாம் நம்மை மனோரீதியாகத் தயாரித்துக் கொள்ள அவகாசம் தராத மரணங்கள். இந்த மரணங்களை இறையன்பு காட்டும் விதம் நசிகேதனை மட்டுமல்ல - நம்மையும் நிலைகுலைய வைக்கிறது. நசிகேதனின் வாழ்வில் இருந்தது யார், எந்த நேரத்தில் மறையப் போகிறார்கள் என்கிற பெரும் பதற்றத்தை நாவலாசிரியர் உருவாக்கிவிடுகிறார். நசிகேதன் ஒவ்வொரு மரணத்தையும் தன்னுடைய மரணமாக அறிகிறான். தன்னுடைய வலியாக, தன்னுடைய இன்மையாக உணர்கிறான். குறிப்பாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பார்த்திபனின் மரணத்தை நினைக்கும்போது சுருக்குக் கயிறு அவனது கழுத்தில் இறுக்குகிறது. அந்த அனுபவத்திற்குள் முழுமையாக தன்னை இழக்கிறான். உண்மையில் இதுவும் மரணம்தான். தொடர்ச்சியான, நெருக்கமான மரணங்களின் வழியே நசிகேதன் கடும் மனமுறிவுக்கு ஆளாகிறான். வாழ்வின் அர்த்தமும் மரணத்தின் அர்த்தமும் அவனை எண்ணற்ற புதிய கேள்விகளுக்கும் நிம்மதி இன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. மரணத்தின் புதிரை விடுவிக்க அவன் மேற்கொள்ளும் பயணமே புதினத்தின் பிற்பகுதி. காடுகள், மலைகள் வழியாக சித்தர்கள், ஞானிகளைத் தேடி அவன் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில், அவன் அறியும் உண்மைகளும் மறைபொருள்களும் நமது சிந்தனையின் புதுப்புது கதவுகளைத் திறக்கின்றன. கீழைத்தேய இயற்கை அறிவியல் மரபும் தத்துவ மரபும் உருவாக்கிய மகத்தான சிந்தனைகளை நசிகேதனின் பயணத்தின் வழியே, இறையன்பு நமக்கு வெகு அற்புதமாகத் தொகுத்து அளிக்கிறார். பயமற்ற மனிதனே மரணத்தை வெல்ல முடியும் என்ற பாடம், அவனுடைய பயணத்தில் குறுக்கிடுகிறது. அவன் மேலும் மேலும் உண்மையைத் தேடிச் செல்கிறான். இப்புதினத்தின் மூன்றாவது பகுதியாகிய 'சலனம்' என்ற பகுதியில் காலம் உறைந்து நின்றுவிட்ட தீவில் வசிப்பவர்களின் துயரம் நம்மை பெரிதும் சஞ்சலப் படுத்தி விடுகிறது. மரணம் மகத்தான விடுதலை என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. இறையன்புவின் ஆற்றொழுக்கான நடை இப்புதினத்திற்கு மிகுந்த சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்துகிறது. சம்பவங்களையும் உரையாடல்களையும் வெகு வேகமாக நகர்த்திச் செல்கிறார். ஆழமான தத்துவார்த்த விஷயங்களை விவாதிக்கும் போது கூட அவற்றைச் சிக்கல் இல்லாமல், சுவை குன்றாமல் சொல்கிறார். ஒரு வாழ்வியல் சிந்தனையாளராக தனது முத்திரையை நீண்ட காலமாக பதித்துவரும் இறையன்புவின் ஆளுமையில் இன்னொரு ஆழமான முத்திரை இந்தப் புதினம். நல்ல நண்பரான இறையன்புவின் இலக்கிய முகத்தை, அவரது ஓயாத தேடலை, நுட்பமான புரிதலை கொஞ்சம் கூடுதலாகப் புரியவைத்திருக்கின்ற இந்தப் புதினத்திற்கு நன்றி. * * * * *

தொடர

களவு காமம் காதல் - சாம் நாதனின் புத்தகத்திற்கு எழுதிய மதிப்புரை

இலக்கியம் மில்ட்டனின் 'இழந்த வானக'த்தில் (Paradaise Lost) நிகழும் கடவுளுக்கு எதிரான சாத்தானின் கலகத்திலிருந்து, தாஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) என்பதன் பிரதான பாத்திரமான ராஸ்கல்நிகோவ் செய்யும் ஒரு கிழவியின் கொலை வரையிலான எல்லா வகைப்பட்ட குற்றங்களையும் கவர்ச்சிகரமாக ஆக்குகிறது. அது முதலாளித்துவ மதிப்பீடுகளையும், சம்பாதிப்பதும் செலவு செய்வதுமான நடைமுறை விஷயங்களையும் எதிர்க்க ஊக்குவிக்கிறது. இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் செய்தியாகவும் அதே சமயம் அதனுடைய கூச்சலாகவும்கூட இருக்கிறது. அது கலாச்சாரத் தலைநகரமாகவும் அதேசமயம் அது சீர்குலைவுக்கான ஆற்றலாகவும்கூட இருக்கிறது. அது வாசிப்பைக் கோருவதும், அர்த்தம் தொடர்பான பிரச்சினைகளில் வாசகர்களை ஈடுபடுத்துவதுமான ஒரு எழுத்து முறையாகவே உள்ளது. - ஜானதன் கல்லர் அன்புள்ள சாம் நாதன், களவு காமம் காதல் குறுநாவல் (Novella) வாசித்தேன். தமிழில் சொல்லத் தயங்குகின்ற ஒரு களத்தை மையமாகக்கொண்டு, உரையாடலைக் கதையாடலாக மாற்றுகின்ற சொற்களால், நேர்த்தியான ஒரு நாவலைப் படைத்தமைக்குப் பாராட்டுக்கள். இலக்கியத் தரமான நாவல்கள் எனக் கருதப்படுபவற்றை மட்டுமே அதிகம் பிரசுரிக்கும் தமிழ்ச் சூழலில், ஒரு சமகாலப் பதிவு இவ்வளவு தைரியமாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களது இந்த நாவலைப் படித்து முடித்தபின்பு ஸேட்டின் நாவல்களை நினைத்துப் பார்ப்பது தவிர்க்கவியலாத ஒன்று. "கட்டுப்பாடற்ற வேட்கை எனக் கருதப்பட்ட ஒரு இயல்பைப் பின்பற்றிப் போகும் செயல் நிகழும் ஒரு உலகில் என்ன நடக்கலாம் என்பதற்கு மார்க்கீ த ஸேட்டின் (Marquis de Sade) நாவல்கள் விடைகாண முயன்றன" எனக் குறிப்பிடுகின்ற ஜானதன் கல்லர், "எந்த ஆசார மரபு, எந்த நம்பிக்கை, எந்த மதிப்பீடு, என எதுவாக இருந்தாலும் இலக்கியம் அதை நையாண்டி செய்யும், நையாண்டிப் போலி (Parody) செய்து ஏளனம் செய்யும்" (ஜானதன் கல்லர் - இலக்கியக் கோட்பாடு, 63) எனவும் சுட்டுகிறார். அவ்வகையில் உங்களின் இந்தக் குறுநாவல் (Novella) ஏற்கனவே பொதுப்புத்தியில் பால் வேட்கை சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றவற்றைக், (குறிப்பாகப், பெண்களது பாலியல் தேவை, விருப்பம், தெரிவு) தகர்க்கின்றது. மிக நுட்பமான இசைவோடும், சரியான புரிதலோடும் ஒரு ஆண், சக உயிரியான ஒரு பெண்ணின் உடலியற் கூறுகள், அவளது தேவைகளைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொண்டு, நிபந்தனைகளற்ற பயணம் ஒன்றை மேற்கொள்வது என்பது தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் புதிய களம். நீங்கள் உங்களது குறுநாவலில் அதனைச் சாதித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சாம் நாதன். "இலக்கியம் ஒரு முரண்பாடான நிறுவனம்" என்பதை அறிவோம். இலக்கியம் என்றால் இவைதான் என ஏற்கனவே இருக்கின்ற வரைமுறை, சூத்திரங்களை அடியொற்றிப், (அதாவது, நாவல், சிறுகதை, பெருங்கதையாடல் - போன்றவற்றை அவற்றிற்குரிய மரபுகளைப் பின்பற்றிப்) படைப்பது மட்டுமல்ல, அந்த மரபுகளைக் கொட்டிக் கவிழ்ப்பதும் இலக்கிய செல்பாடுதான். முழுக்க மரபு ¡£தியான, "தீரமிக்க வீரத்திருமகன்களையும்" "கற்புடை கன்னிப் பெண்களையும்" பற்றி மட்டுமே மையமாகக் கொண்டு நாவல்கள் இயங்க வேண்டியதில்லை. அது வாழ்வின் ஒரு அங்கமான எவ்வகை மாந்தர்களைப் பற்றியும் பொருட்படுத்திப் புனையப்படலாம் என்கிற தெளிவிற்கு வந்திருக்கின்ற இப் பின்நவீனத்துவக் கட்டத்தில், வாசகனது பங்கேற்பைப், புரிதலைக் கோருகின்ற இரத்தமும், சதையுமான சாதாரண இரு மனிதர்கள் குறித்து உங்கள் குறுநாவல் பேசுவது கவனிக்கப்பட வேண்டியது. "சிலகாலத்திற்குமுன், கடவுளைப் போலவே நாவல் வடிவம் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை", நினைவு கூறும் கூகி வா தியாங்கோ ஆப்பிரிக்க நாவல் குறித்துப் "பொருள் பொதிந்த விவாதத்திற்கு" வழி வகுத்தவர். ஐரோப்பிய நாவல் மரபுகளிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்ற ஆப்பிரிக்க நாவல் வடிவம் (உருவம், உள்ளடக்கம்) ஒன்றை அவர் முன்னிறுத்தியது என்போன்ற பின்காலனிய பிரஜைகளுக்கு, வாசகர்களுக்கு மிகப் பெரிய கதவொன்றைத் திறந்தது. ஒரு ஆங்கில இலக்கிய மாணவியாக பதினேழு வயது துவங்கி ஐரோப்பிய, ஆங்கிலேய புனைகதைகளின் பிடியில் மயங்கிக் கிடந்த எனக்கு, Banyan, James Joyce, Joseph Conrad, Joyce Carry, Allen Paten படைப்புகள் பரந்த புனைகதை உலகத்தைக் காட்டியது. Charles Dickens, Daniel Defoe, George, Eliot, D.H. Lawrence, Faulkner இவர்களுடன் Balzac, Emily Zola, Tolstoy, Dostoevsky ஆகியோர் ஆக்கிரமித்த எனது இருபதுகள் வரை, புனைகதை என்றாலே அவை (Classics) செவ்வியல் தன்மை கொண்ட, அதி அற்புதமான genre என்று மட்டுமே நினைத்திருந்தேன். The Empire Writes Back என்று காலனிய ஆதிக்கத்தை, அதன் Canon Literature இன் மையத்தைத் (ஆங்கில இலக்கியத்தை) தகர்க்கின்ற குரல்கள் பின்காலனிய இலக்கியமாக முகிழ்க்கத் தொடங்கியபோது, Common Wealth Literature என்றழைக்கப்பட்டது Post-Colonial Studies என உருமாற்றம் அடைந்தபோது, சினுவா அச்சிபி, வோலோ சோயிங்கா, கூகி வா தியாங்கோ முதலியோர் எனக்கு மிக நெருக்கமானார்கள். ஒரு மரபார்ந்த நாவல் வாசிப்பு மரபினைக் கொண்டிருந்த, நவீன ஐரோப்பிய மொழி நாவல் மரபுப் பரிச்சயத்தை மட்டுமே அறிந்திருந்த எனக்கு, கூகியின் "கிப்ளிங்கின் 'if' கவிதையில் வரும் கனவானுக்கு ஆப்பரிக்க உடை வழங்கப்பட்டது" எனும் வாசகம் நெத்தியடியாக அமைந்தது. "காலனியம் மிகச் சரியானது என நம்பும் கனவான்", காலனிய காலத்தில் உருவான பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு உதவுகின்ற மையவாத இலக்கியம், அதன் கல்வி அமைப்புக்கள் பற்றிய பிம்பங்கள் உடைந்தன. உலக இலக்கியத்தின் மதிப்பைப் புரிந்து கொள்கிற பக்குவத்தோடு, பிரிட்டிஷ் காலனிய குறுகிய மனநிலைக்கு மாற்றாக, ஆப்பரிக்கத் தேசீயத்தைக் குறுகிய நோக்கோடு முன்வைக்காத கூகி வா தியாங்கோவின் மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியம் - புனைகதை வாசிப்புகளில் குறிப்பாக புதினம் எனப்படுகின்ற நாவல் வடிவத்தில் எனக்குப் புதியதொரு தெளிவையும், கண்ணோட்டத்தையும் தந்தது. பின் நவீனத்துவத்தின் மீதான ஆர்வமும், ஈடுபாடும் மேலும் பல கட்டுடைத்தல்களையும் புகுத்த, இலக்கிய வகைமைகளில் பா£ட்ச்சார்த்த முயற்சிகளுக்கான தேவை, (குறிப்பாக புதினங்களில்) அவை, அவற்றளவில் எத்தனை கோணல்களுடன் இருந்தாலும், ஒரு புதிய முயற்சியாக வரவேற்கப்பட வேண்டுமென்கிற தெளிவு பிறந்தது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வடிவங்களிலிருந்தும், தளைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கின்ற புதிய புதின முயற்சிகளுக்கும், வெளிப்பாடுகளுக்கும் முன்முடிவுகளற்ற திறந்த வாசிப்பு மனதுடன் நான் காத்திருக்கத் துவங்கியதும் அப்போதிருந்துதான். அவ்வகையில் சமீபத்தில் என் கவனம் கோருகின்ற ஒரு குறுநாவலாக சாம் நாதனின் களவு காமம் காதல் வெளிவந்துள்ளது. இக்குறுநாவலில் ஆண் - பெண் உறவைச் சித்தரிக்கும் இடங்களிலெல்லாம் நுட்பமான, புரிதல், ஏற்றுக்கொள்ளுதல் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் இது முக்கியமாக பேசப்படவேண்டிய ஒன்று. இன்னும் கூடச் சொல்லவேண்டுமெனில், மேற்க்கத்தியக் கலாச்சாரத்தில் கூட புரிதல் அடிப்படையில் மட்டுமே ஆண் - பெண் உறவு இருக்குமா என்பது எனக்கு சந்தேகமே. ரகுவர்தன் - காயத்ரி ஒருவருக்கொருவர் புரிதல் அடிப்படையில் நேசம் பாராட்டுவதிலும், பகிர்ந்து கொள்தலிலும் உச்சத்தைத் தொடுகிறார்கள். நாவலின் மையம் இப்புரிதல் தானே தவிர அவர்கள் அதீத வேட்கையோடு பகிர்கின்ற காமம் அல்ல. நமது தமிழ்ச் சமூகத்தில் காதல் என்பதை உரத்துச் சொல்லி தன் இணையுடன் ஒரு பெண் சுகிப்பது என்பதைக் கலாச்சாரப் புனிதம் கெடுக்கும் செயல் எனவும், அது தகாதது எனவும், கற்பிதம் செய்யப்பட்டு வந்திருப்பதைத் தகர்க்கின்றது ரகுவர்த்தன், காயத்ரியின் உறவுப் பகிர்தலும், சுகித்தலும். "புத்தகங்களில் காதலைப் பற்றிப் படித்திராத யாரொருவரும் காதல் வயப்படுவதைப் பற்றி எப்போதும் யோசித்திருக்கமாட்டார்கள்" என்று லாரோச் புக்கோ (La Roche Foucauld) சொன்னதை நினைவூட்டிக் கொண்டால், களவு, காமம், காதல் எனத் தலைப்பில், சாம் நாதன், நீங்கள் உணர்வுகளை வரிசைப்படுத்தியிருப்பதன் தாத்பர்யம் புரியும். இக்குறுநாவலில் ஒரு கதை, கதை அல்லாத மாதிரியில் சொல்லப்பட்டிருக்கின்ற விதத்தை நான் மிக ரசித்தேன். கதைகள் அல்லாத கதைகளைச் சொல்லும் உத்தியைக் கைக்கொள்கிற உங்களின் உத்தி மூலம், இக்கதை என்ன செய்கிறது எனக்கேட்டால், வெகு சுலபமாக, இது இன்பம் அளிக்கின்றது (Pleasure of the text) எனச் சொல்லிவிடலாம். உறவு முறைகளற்ற ஒரு பிணைப்பைப், புரிதலுடலான காமத்தின் மூலம் துயக்கின்ற ஒரு வெளியை, இன்ப விளைவுடன் (desire), பரிச்சயமான சூழலுக்கு (familiar situation) ஒரு புதிய திருப்பத்தை (sudden decisions) தருகின்ற செயற்பாட்டை நீங்கள் முன்னிறுத்துவதன் மூலம் வாசகனை மிக நெருக்கமானவனாகத் தனக்குள் இழுக்கின்ற சாத்தியத்தை இக்குறுநாவல் கொண்டிருக்கிறது. மதிப்பீடுகள், முன் பதிவுகள் அற்று அணுகினால் அதனைத் துய்க்கலாம். அத்தியாயங்களின் ஆரம்பத்தில் வருகின்ற ரகுவர்தன் பற்றிய குறிப்புக்கள் நாவலுக்கான நல்ல படலமாகவும் (foil) நாவல் இலக்கியத்திற்கான ஆதாரத் தடமாகவும் இருக்கிறது. எனக்குப் பிடித்ததும் அந்தக் குறிப்புக்கள்தான். ரகுவர்தன் போன்ற பக்குவமுள்ள மனிதர்களால்தான் ஒரு பெண்ணிடம் இத்தனை உரிமைகளுடனும், புரிதல்களுடனும் பழகிக்கொண்டிருக்க முடியும். இந்த வெளியும், புரிதலும், மிகையற்று சொல்லப்பட்டிருப்பது புதிதானதொரு முயற்சி. காயத்ரியும் ஒரு வகை மாதிரிதான் - ஆனால் பேசப்பட வேண்டிய, புரிந்து கொள்ளப்பட வேண்டியவள் என்பதை ரகுவர்த்தனின் கண்கள் வழி நான் பார்க்கிறேன். தி.ஜானகிராமனின், மோகமுள், அமிர்தம், மரப்பசு, நளபாகம் - புனைகதைகளில் வரும் மாந்தர்கள், உரையாடல்கள், அவை வெளிவந்தபோது தமிழ் மரபு கண்டறியாதவையே. "இதற்குத்தானே பாலு ஆசைப்பட்டாய்" என்கிற மோகமுள் யமுனா, "அம்மா அப்பாவைக் கலியாணம் பன்னிண்டு என்ன சுகத்தக் கண்டா? இதுவரையில் கலியாணம் பண்ணின்டு தூணோடு திருடனைக் கட்டி வச்சாப்பல புருஷத் தூணோடு பொம்மானாட்டியும் பொம்மனாட்டித் துணோடு புருஷனும் கட்டிப் போட்டுண்டு என்னத்தக் கண்டு விட்டா?... எனக்குத் திருட இஷ்டமில்லை. நான் இஷ்டப்படி இருக்கப்போறேன்" என்ற மரப்பசுவில் அம்மணி - (புனைவுகளும் உண்மைகளும் - க.பஞ்சாங்கம், 229) இவர்களின் இன்னொரு பரிமாணம், பிறிதொரு விடுபட்ட புனைவுப் பாத்திரம் காயத்ரி. நாவலில் இழையோடும் Sexual texture கதைக்கு மிகப் பொருத்தமாகவும் நெருக்கமாகவும் இருக்கிறது. சிறிது பிசகியிருந்தாலும் விரசமாகப் போய்விட வாய்ப்பிருக்கிறது. இங்கு தற்கொலைகளைக் கொண்டாடுவோம் எனும் புத்தகத்தில் ராமானுஜம் பகிர்ந்து கொண்ட ஓஷிமா எனும் ஜப்பானிய இயக்குநரின் In the Real Senses எனும் திரைப்படம் குறித்த பதிவு நினைவிற்கு வருகிறது. ராமானுஜம் சொல்கிறார் : "இந்தப் படம் இதுவரை நாம் படித்த எந்தவொரு புத்தகத்திலும் பார்த்த திரைப்படத்திலும் பார்க்கக் கிடைக்காத, முழுமையாக அதிகாரத்தை உதாசீனப்படுத்தி இயற்கையோடு ஒட்டி நிற்கும் ஒரு பெண் உடலை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தன் ஆண் உடலை ஒரு பெண்ணுக்கு முழுமையாய்க் கொடுக்கத் துடிக்கும் ஒரு ஆண் உடலின் புன்னகையை அது அறிமுகப் படுத்துகிறது. நவீனத்துவத்திற்கு முந்திய ஜப்பானியச் சமூகத்தின் உடல் கொண்டாட்டத்தின் பிரதிநிதியான அவன் (திரைப்படத்தின் நாயகன்), ஒரு பெண் உடலை இந்நாள் வரை அபகரித்துக்கொண்டிருந்த அவன், ஒரு பெண் உடலுக்குத் தன்னை முழுமையாய்த் கொடுக்க முன்வருகிறான். ஒரு சின்ன இசைவற்ற புரிதல் கூடப் படத்தை மிகக் கீழ்த்தரமான படமாக மாற்றியிருக்கும் அபாயத்தைச் சுமந்துள்ளது". (தற்கொலைகளைக் கொண்டாடுவோம், 75,76 79) ரகுவர்த்தன், காயத்திரியின் உறவும் இந்த அபாயத்தைச் சுமந்திருந்தாலும், தமிழ் இலக்கியப் புனைவுப் பரப்பில் குற்ற உணர்வற்ற, உடல் பற்றிய அதீத பிரக்ஞை மட்டுமே வியாபித்திருக்கின்ற இரண்டு தடைகளையும் தாண்டி நேர்த்தியோடு பதிவாகி இருக்கிறது. பாராட்டுக்கள்! ஒரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட குறுநாவல் இது, என்பது ஒன்று தான் இதன் குறை. ஆனால் அதில் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு இல்லை. காயத்ரி, தன் பார்வையில் ரகுவர்தனைப் பற்றி பேசும், அல்லது நாவல் பயணிக்கும் கதைக் களத்தைப் பற்றிப் பேசும் சில அத்தியாயங்கள் இருந்திருந்தால் மேலும் நிறைவாக இருந்திருக்கும்.பொதுப்புத்தியுள்ளவர்களும், வாசிப்பு அறவே இல்லாதவர்களும் இந்தக் குறுநாவலைக் கடந்து செல்வது கடினம். மற்றபடி எல்லோராலும் எளிதாகப் புரிந்துகொண்டு சுயவிமர்சனம் செய்து கொள்ளக்கூடிய லாவகமான எழுத்து நடைதான். நாவலின் துவக்கம் அதிர்ச்சி தந்தாலும் சமகாலத்தில் நடக்காத ஒன்றை இந்த நாவல் போலியாக நிரூபிக்க முயலவில்லை என்பதால் அதனைக் கடந்து செல்ல முடிந்தது. ராமானுஜம் சுட்டுகின்ற திரைப்படத்தின் கதாநாயகி ஸதா ஒரு உண்மைக் கதாபாத்திரம். அவளது பார்வையில், கோணத்தில் ஓஷிமாவின் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது போலக் காயத்திரியின் கோணத்திலும் இவ்வுறவு, இக்கதை சொல்லப்பட்டிருந்தால் கூடுதல் அடர்த்தி கிட்டியிருக்கும். ஆனாலும் இந்த ரகுவர்த்தன் ஒரு பொதுப்புத்தி கட்டமைத்த ஆண் அல்ல என்பது ஆறுதல். ஓஷிமாவின் கதாநாயகி - முன்னாள் பாலியல் தொழிலாளியான ஸதாவை ஜப்பானிய சமுதாயம் எவ்வாறு ஏற்றுக் கொண்டது என்பதை ராமானுஜம் பின்வருமாறு விளக்கியிருப்பார்: "இந்த ஸதா பாத்திரம் ஜப்பானிய வீதிகளில் வெட்டியெடுத்த ஒரு ஆண்குறியோடு உண்மையில் நடமாடியவள்தான். போலீசாரால் கைது செய்யப்பட்டு குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டவள்தான். பாலியல் தொழிலாளியாக இருந்த அவள், எவ்விதத்திலும் பாலியல் தேவைகளில் திருப்தி அடையாத அவள், வழக்கில் அவளுடைய நிலையை எடுத்துரைத்தாள். அதிர்ச்சியில் உறைந்துபோன ஜப்பானிய பத்திரிகைகளும் நடுத்தர வர்க்கமும் அவள்மீது இரக்கம் காட்டத் தொடங்குகின்றன. பிறகு அவள் விடுதலை செய்யப்படுகிறாள். விடுதலையான அவள் தன் பெயரை மாற்றிக்கொண்டு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறாள். அந்தக் கணவனுக்கு இவள் உண்மையில் யார் என்று தெரியவந்தவுடன் விவாகரத்து செய்து விடுகிறான். இதனால் மீண்டும் பாலியல் தொழிலுக்குள் நுழைகிறாள். 70 வயதுவரை பாலியல் தொழிலில் ஈடுபட்டு மாண்டுபோன அவளுக்கு ஜப்பானிய சமூகப் மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்தது. அவள் மரணம் கொள்ளும் வரை ஒவ்வொரு இரவும் பாருக்குள் அவள் நுழையும் போது பாரில் உள்ள அத்தனை ஆண்களும் மரியாதையோடு எழுந்து நின்று இரண்டு கைகளாலும் அவரவர்களுடைய ஆண்குறியை மறைத்து நின்றார்கள். இந்த மரியாதை தினம் தினம் அவளுக்காகச் செய்யப்பட்டது". (தற்கொலைகளைக் கொண்டாடுவோம், 78, 79). இத்தகைய புரிதலுள்ள ஒரு ஆணாக ரகுவர்த்தன் வடிவவமைக்கப்பட்டிருப்பதே ஒரு வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நாவல்கள் குறித்து E.M. Forster, "நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் பார்வைக்குப் புலப்படும் அல்லது புலப்படக்கூடிய அந்தரங்க வாழ்க்கைகளை உடைய மக்களாக இருக்க, நாம் பார்வைக்குப் புலப்படாத அந்தரங்க வாழ்க்கைகளை உடைய மக்களாக இருக்கிறோம். அதனால்தான் நாவல்கள், அவை தீயவர்களைப் பற்றியவையாக இருந்தபோதிலும் கூட நம்மை ஆறுதல்படுத்த முடியும். மேலும் கூடுதலாகப் புரிந்துகொள்ளத்தக்கதான ஒரு மனித இனத்தை, அதனால் மேலும் கூடுதலாகக் கையாளத்தக்கதான ஒரு மனித இனத்தை நாவல்கள் நமக்கு வழங்குகின்றன" என்கிறார். ஆனால், சாம் நாதன் இப்படிப்பட்ட இலக்கு, அல்லது குறிக்கோள் எதனையும் வைத்துக் கொண்டு இதனை எழுதவில்லை. வாழ்க்கை முழுவதும் அவளுடைய பாலியல் உணர்வுகளுக்கு அடிமையாக இருந்த ஓஷிமாவின் ஸதாவை, (காயத்ரி வடிவில்) புரிந்துகொண்டு உடனிருக்கின்ற ஒரு ஆணை (ரகுவர்த்தனாக), அதன் உணர்வு வெளிப்பாடு, சிக்கல்கள், முறிவோடு நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அவ்வளவே! இது ஆண் - பெண் உறவு பற்றிய புரிதலற்ற, மரபு வழி ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு ஆபாசமாகக், கலாச்சாரக் கேடாகத் தோன்றலாம். துணிச்சலாக அதைத் தொட்டு, விவாதித்திருக்கிறார் சாம் நாதன். பாரட்டப்பட வேண்டிய முயற்சி. களவு காமம் காதல் மிகத் தைரியமாக, ஆரோக்கியமான புரிதல் உள்ள வளமான ஒரு சமூகத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது. இனி தொடர்சிகள் நிகழும் என்ற நம்புகின்றேன். தமிழப் புனைகதையில் கு.ப.ரா இதனைக் கலாபூர்வமாக் கையாண்டிருக்கிறார். புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற சாரு நிவேதிதா கூடத் தன் 'சாப்பாடு, குடி கொண்டாடு' கட்டுரையில் கு.ப.ராபற்றிய தி.ஜானகிராமனின் கருத்தைப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டிருக்கிறார் - "செக்ஸ் கதைகளை எழுதி அவர் தீட்டுப்பட்டு விட்டதுபோலவும், இலக்கிய நெறியிலிருந்து குப்புறச் சரிந்துவிட்டதாகவும் சிலர் விமர்சகர்கள் அந்தக் காலத்தில் எழுதிக்கொண்டிருந்தார்கள். கற்பிழந்து 'அந்தத்' தெருவுக்குக் குடிபோய்விட்ட பெண்பிள்ளையைப் பற்றிப் பேசுவது போல் அவரைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர் மறுப்போ, பதிலோ எழுதிய ஞாபகம் எங்களுக்கு இல்லை". (வரம்பு மீறிய பிரதிகள் - சாரு நிவேதிதா, 97) ஆகவே, எது குறித்தும் கவலையற்று வந்திருக்கின்ற களவு காமம் காதல் என்ற நல்ல முயற்சிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சாம் நாதன். திருநெல்வேலி மண் என் மனதிற்கு நெருக்கமான ஆதர்ச படைப்பாளிகள் பலரைத் தந்திருக்கின்றது. புதுமையும், மரபினை மீறுதலும், தொடுவான விளிம்பை விரித்தலும் அம் மண்ணின் கலை மாந்தர்களுக்குத் தாமிரபரணி தந்த வரம் என்றே நான் எப்போதும் வியப்பேன். புதிய வரவாக இதோ, நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள் சாம் நாதன். "இயற்கைக்கு எதிராகப் போராடுவதில் வீரம் ஏதும் இல்லை" என்ற மண்ட்டோவையும், "இயற்கையான உடலை மீட்டெடுப்பதில்தான் சுயமரியாதைக்கான சாத்தியங்கள் உள்ளன" என்ற ஓஷிமாவையும், என்னைப் போலவே நீங்களும் கூடுதலாக வாசிப்பீர்கள் தானே சாம் நாதன்? உங்கள் ரகுவர்த்தனிடத்தில் நேசம் எனும் சொல் பக்குவத்தின் கதகதப்பான புரிதலோடு பதப்படுத்தப்பட்டிருக்கின்றது. நாவலின் Protagonist ஆன அவன் இந்த நாவலில் சொல்லுகின்ற செய்தி இதுவாகத்தானிருக்கும்: "'நேயம்' அல்லது 'காதல்' என்ற ஒன்று இருக்கும் இடத்தில், பாலியல்சார் அதீதம் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. பாலியல் சார் வக்கிரம் என்று எதுவும் பகுக்கப்படாது. பாலியல் சார் வக்கிரங்களுக்கு இடமிருக்காது. ஏனெனில், நம்பிக்கை மற்றும் புணர்வுச்ச நிலைக்கு இட்டுச் செல்லும் எதுவும் வக்கிரமாக இருக்க வழியில்லை". (மனநோயின் மொழி - டேவிட் கூப்பர், 119) வாழ்த்துக்கள் - தொடர்ந்து பயணப்படுங்கள்! உதவிய நூல்கள்: 1) இலக்கியக் கோட்பாடு : மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜானதன் கல்லர், (தமிழில், ஆர்.சிவகுமார்) 2) மனநோயின் மொழி - டேவிட் கூப்பர் (தமிழில், லதா ராமகிருஷ்ணன்) 3) அடையாள மீட்பு : காலனிய ஓர்மை அகற்றல் - கூகி வா தியாங்கோ (தமிழில், அ.மங்கை) 4) வரம்பு மீறிய பிரதிகள் - சாரு நிவேதிதா

தொடர

அகம் புறம் மரம் - குகை மா. புகழேந்தி

“அவன் வனத்தில் நுழையும்போது சருகுகள் நொறுங்குவதில்லை” -ஒரு ஜென் கவிதை புகழ் என்று நான் அன்போடு கூப்பிடுகின்ற குகை மா.புகழேந்தியின் மரம் குறித்த கவிதைப் பகிர்வுகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளிவருவது, புதிதாக நடப்பட்ட ஒரு செடி கொஞ்சம் செழித்து, ஒரு பூ பூத்து நிற்பதைப் பார்ப்பது போலிருக்கிறது. சொற்கள், வார்த்தைகள், வாக்கியங்கள் எனும் ஸ்தூல வடிவம் மறைந்து அவரது ஆன்மா ஒரு தொல்மரமாக நம்மை ஆரத் தழுவுகிறது. ஒரு மரத்தைப் பற்றிக் கொள்வதற்காக ஒரு செடியாக, பறவையாக, மலராகக், கிளையாக, இன்னொரு மரமாக நீண்டபடியே இருக்கும் புகழின் கைநிழலில் கதகதப்பாகக் கண்மூடி, நான் மரத்தாலானவளானேன்! புகழின் மூன்று வரிக் கவிதைகளுக்கு நான் மிகத் தீவிரமான ரசிகை. அவரது கோணமும், வாழ்வை அன்பாலும், நம்பிக்கையாலும் கொண்டாடும் கவி மனதும் என்னை எப்போதும் ஈர்ப்பவை. “செடிகளை வளர்ப்பது சுலபம்தான்; ஆனால் - பூக்களைப் பத்திரப்படுத்துவதுதான் எப்படி என்று தெரியவில்லை” என்பார்கள். ஆனால் புகழ் பத்திரப்படுத்தியிருக்கிறார் அப்பூக்களை - இக் கவிதைகளாக. மரத்தை அணுஅணுவாகக் காதலித்து, நேசிப்பின் ஆரத் தழுவுதலில் உள்வாங்கி, செல்லம் கொஞ்சி, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, அதன் ஆன்மாவில் கலந்து, தன்னையும் அதற்கு உண்ணக் கொடுத்து, தனது உயிர்ப்பின் பூப்பாக உலகெங்கும் மரங்கள் பிறப்பதைக் கனவு காணும் ஒரு கவிஞனின் அகம் எவ்வளவு அழகு - எவ்வளவு அரிது - எவ்வளவு கனிவு! புகழின் அக் கவிமனம் எளிதில் யாருக்கும் கிட்டாத வரம். அதற்கு நான் பூரணமான விசிறி எனச் சொல்வதிலே எனக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி. மராமரம்.. மராமரம்… என்று மரத்தின் பெயரை ஓயாமல் மனதுக்குள் கூவி கூவி.. பின் அது ராம் ராம் என்ற மந்திரமாய் மாறி அதன் மூலம் பிறந்தது தான் ராமாயணம் என்பது ஒரு இதிகாச புனைவு. ஆக ஒரு மரம் தான் இதிகாசம் பிறக்க ஆதிகாரணம் என்றும் வாதிடலாம். இது புறநிலை என்றால் மரம் தான் திருடனை கவிஞனாக்கியது என்பதை அகநிலையாய்க் கொள்ளலாம். இங்கும் நவீன இலக்கியவெளியில் மரமே அகமாயும் புறமாயும் மாறி ஒரு கவிஞனுக்கு கவிதை நூல் வெளிவரக் காரணமாகியுள்ளது. அந்த கவிதை நூலின் பெயர் அகம் புறம் மரம். எழுதிய கவிஞன் - குகை மா.புகழேந்தி. இந்த தொகுப்பு மரம் குறித்தான பல்வேறு பார்வைகளை அவதானிப்புக்களை சமூக அக்கறைகளை ஒரு ஆய்வை போல் கவித்துவமாய் சொல்லி செல்கிறது. நமது திருவள்ளுவர், திருக்குறளில் இரு இடங்களில் பனை, மூங்கில் என்று மரத்தை குறிப்பிட்டு இருப்பார். புகழுக்கோ பக்கத்துக்கு பக்கம் மர சிந்தனை தான். அனைத்தும் அறச் சிந்தனைகளும், அன்புச் சிந்தனைகளும் தான். மரம் குறித்து இந்தக் கவிதை பிரதியில் எவற்றை எப்படியாகப் பதிவு செய்துள்ளார் என்று நீங்கள் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லிவிடமுடியும். ஆனால் கேட்பதற்கு உங்களிடம் கேள்விகள் பற்றாமலிருக்கும் என்பதால் உங்கள் சார்பாக நானே கேட்டு நானே பதிலளிக்கலாம் - இப்படியாக - மரத்திற்கு உதடு எது? இலைகள் தான். இலைகளின் ஒற்றுமையை எப்படி புரிந்துக்கொள்வது? நிழலாகத் தான். நிழலென ஒட்டியிருக்கும் இலைகளுக்குள் என்ன இருக்கிறது? அதற்குள் ஒரு பச்சை சாறு நிரம்பிய குளம் இருக்கிறது. குளம் வற்றிப்போனால் என்னவாகும்? சருகு என்ற புனைப்பெயரை சூட்டிக்கொள்ளும். சருகான இலையின் ஓசை எதைச் சொல்லுகிறது? வனத்துக்குள் புகுந்து மரங்களை வெட்டவந்த மனிதனைப் பற்றி சலசலத்து பேசுகிறது. மரத்தை வெட்டாமல் நானும் மரமாய் மாற என்ன தகுதி வேண்டும்? புல்லின் தைரியத்தை கைப்பற்றிக்கொள்ள வேண்டும். அப்படி மரமான பின் பழங்களை ஏன் பிரசவிக்க வேண்டும்? புறவைகள் கொத்தித் தின்னும் அழகை ரசிக்கத் தான். அழகான இலைக்கு ஏன் இலையுதிர்காலம் வருகிறது? அது பறவையின் பிரிவினைச் சொல்ல இறகுகளை இலையாக மாற்றி உதிர்க்கும் யுக்தி. மரத்திலிருந்து இலைகள் குதிப்பது போல் வேறு எதேனும் குதிக்குமோ? அட - கடவுளும் மரத்திலிருந்து குதித்தவர் தான்! என்றெல்லாம் இந்த தொகுப்பிலிருந்தே குவித்துக் கருத்துக்களை நான் பட்டியலிட முடியும். ஆனால் அவையெல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டும் அல்ல - கவிதைகள்! நாம் சாதாரணமாய் செய்யும் செயலையும் அசாதாரண புனைவுக்கு மாற்றிவிடும் சாதுர்யம் புகழிற்கு வாய்த்து விடுகிறது. “இடைவெளியோடு நாம் விதைகளை விதைத்தாலும் நெருக்கத்தின் பேரன்பை வளர்ந்துபின் காட்டிவிடுகிறது மரங்கள்” “கோணலாய் இருந்தாலும் மரங்களின் குணம் எப்போதும் நேரானது தான்” என்று விருட்சத்திற்காக தன் வாதத்தை வளமான வார்த்தைகளால் வசப்படுத்தி விடுகிறார். “பூமியின் பச்சையை அழிக்கும் ரப்பர் மனிதர்கள், ஐம்பூதங்களின் செல்லக்குழந்தையான மரங்கள், ஒவ்வொரு மரமும் ஒரு காடு” என்றெல்லாம் எழுதும் புகழை வாசிக்கையில், “நான் வாளொன்றையும் சுமந்து செல்லவில்லை சிரசொன்றயும் செதுக்கியதில்லை இதுவரை நான் செல்லும் போது புவியின் கதவை மூடிச்செல்கிறேன் எனக்குப் பின்னால்” என்று ஒரு மரம் என்ற தலைப்பில் ஸிரியக் கவிஞர் அடோனிஸ் எழுதிய கவிதை நினைவில் வந்து செல்கிறது “பூமியிலே, மண்ணின் ஆழத்திலே, வேர்கள் மரக்கிளைகள்: மேலே காற்றிலே, கிளைகளே வேர்கள்” என்றார் மகாகவி தாகூர். புகழிற்கோ மனிதர்கள், பறவைகள், கட்டடங்கள், மலை, கடல், நதி, பள்ளத்தாக்கு, வானம், மேகம் இப்படிப் பார்க்கும் அனைத்துமே மரத்தின் வடிவம்தான் - அதன் வண்ணம்தான். “மரமாட்டம் நிற்காதே” என்பது இனி இப்புவியில் வசைச் சொல் அல்ல புகழின் கவிதையால் - அது இசைச்சொல்! மரம் வீழ்த்துதல் என்ற தலைப்பில் போலந்து நாட்டு கவிஞன் ததயூஸ் ரோஸ்விட்ச்ட் எழுதுகையில் “வீழ்த்தப்படுவதற்காய் அழிவின் வெண்ணிறக் கோடுகளாய் குறியிடப்பட்டமரம் இன்னும் சுவாசித்தபடி இருந்தது அதன்கிளைகளும் குச்சிகளும் விரைந்து கடக்கும் மேகங்களைப் பிறாண்டிக்கொண்டு” என்று எழுதுவார். எங்கள் தமிழ்தேசக் கவிஞன் குகை மா.புகழேந்தியும் இவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவன் அல்ல. மரங்கள் பற்றிய கவிதைகளால் ஒரு அழகிய ஆவணத்தை தந்து, வனமாய் வியாபித்திருக்கின்ற புகழின் இத் தொகுப்பு பல்வேறு விதைகளை இப் பூவுலகிற்குக் கொடையளிக்கட்டும். நேசம் அதன் நிழலில் இளைப்பாறட்டும். * * * * *

தொடர

கோ. ஜீவானந்தராஜு எழுதிய குறளின் குரல் என்ற புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரை

ஒரு தமிழ் மனத்தின் ஏக்கக்குரல் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதிநூல்கள் தமிழ்ச்சமூகக் கட்டுமானத்தில் மிக முக்கிய வினையாற்றி இருப்பதாக நாம் அறிகிறோம். திணைசார்ந்த வாழ்க்கை முறையை கொஞ்சம் உருமாற்றி அறம் சார்ந்த வாழ்க்கை முறையை இலக்கியங்கள் பேச ஆரம்பித்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை பார்வையாளன் அல்லது வாசகன் முன் அக / புற அனுபவ பகிர்வாகவே கவிதை மொழியப்பட்டு இருந்தாலும் செவியறிவுரூஉ கணிசமான இடத்தை வகிக்கின்றது. அரசனுக்குகோ தலைவனுக்கோ தனிமனித / சமூக ஒழுக்கம் குறித்து மொழியப்பட்ட செவியறிவுரூஉ கவிதைகளை வேராகக் கொண்டு எழுந்தவையே அற இலக்கியங்கள். சங்க கால அதிகார மையங்கள் உடைந்தபோது தனிமனித ஒழுக்கங்களும் கேள்விக்குறியாகி இருக்கலாம். இதன் விளைவாகவே அற இலக்கியங்களின் தேவை எழுந்திருக்கக்கூடும். அகம் புறம் என கவிதைக் கோட்பாடு இரண்டாக இருந்த சங்ககால முடிவுக்குப்பிறகு அறம் பொருள் இன்பம் என மூன்றாக உருவெடுத்திருப்பதை நாம் உணர முடிகிறது. திருவள்ளுவர் இந்தப் புதிய முறைக்கு வித்திடுகிறார். காமத்துப்பால் அகத்திணை மரபுகளை உங்வாங்கியே படைத்திருந்தாலும் அறம் பொருள் என்று தனிமனித / சமூக ஒழுக்கங்கள் குறித்த தமது கறாரான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். வள்ளுவன் என்கிற மாபெரும் சக்தி சமூக மனவெழுச்சியின் விளைவாக நாம் கொள்ளலாம். சமகால பள்ளத்தாக்குகளை நிரப்பிய அந்த பேராறு மானுடம் உள்ள வரைக்குமான ஞானமாக உருத்திரண்டிருக்கிறது. தலைமுறை பல கடந்து ரத்தத்தின் வழியே தொடரும் ஒளியாக வள்ளுவர் மாற்றியிருக்கிறார். சமூக விழுமியங்களை பேசுகிற அற இலக்கியங்கள் காலம்தோறும் உருவாகிக்கொண்டே வந்திருக்கின்றன. பிற்கால ஔவையார் தொட்டு அதிவீரராம பாண்டியர் தொடர்ந்து பாரதி பாரதிதாசன் வரை நமக்கு அறஇலக்கியங்களின் சங்கிலித்தொடர் அறுபடாமல் தொடர்ந்தே வந்திருக்கின்றன. அற இலக்கியங்களின் முக்கிய பண்பாக இருப்பது எளிய முறையில் வெளிப்படையாக சுருக்கமாகச் சொல்லும் உத்திதான். வள்ளுவரே இதற்கும் வழிகாட்டியாக அமைந்திருக்கிறார். கோ. ஜீவானந்த ராஜூ அவர்கள் குறளின் குரல் என்கிற கட்டுரை நூலை நமக்குத் தந்திருக்கிறார். வாழ்வின் அடிப்படைப் பண்புகளும் தேவைகளும் கேள்விக்குறியாகி-யிருக்கும் இக்காலச் சூழலை மனதில் கொண்டு திருக்குறளின் வழியாக பதில் சொல்ல முனைந்திருக்கும் நூலே இது. மனைமாட்சி, புகழ், ஒழுக்கமுடைமை, பொறைபோற்றல், ஈகை, பண்புடைமை போன்ற விழுமியங்களை வள்ளுவரின் துணையோடு நாலடியார், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கலைஞரின் கவிதைகள் ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு தற்கால சூழலுக்கேற்றவாறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நாலடியார் மட்டுமன்றி பிற நீதி நூல்களும் ஆங்கங்கே எடுத்தாளப்படுகின்றன. இன்றைய மனித அவலங்களுக்கு எதிர்வினையாற்றுகிற தமிழ் மனத்தின் வெளிப்பாடுகளே இக்கட்டுரைகள். அளவுக்கு மீறிய நுகர்வு வெறி, அடிப்படை மனித மாண்புகளை மீறுதல், கட்டற்ற வாழ்க்கை முறை என இவர் காணும் சமூக ஒழுங்கீனங்களுக்கு தீர்வாக இக்கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். இந்நூலில் உள்ள அனைத்து கட்டுரைகளும் தனிமனித, சமூக அறத்தை வலியுறுத்த எண்ணி எழுதப்பட்டவையாகும். அறிவைத் தண்ணீரோடு ஒப்பிட்டுப் பேசும் வள்ளுவனின் குறள் நமக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது. மணல் நிலத்தில் தோண்டுகிற அளவிற்கு சுரக்கும் நீர் போன்று கற்கின்ற அளவிற்கு அறிவு பெருகும் என்பது எவ்வளவு தர்க்கரீதியான அனுபவமாக வெளிப்பட்டு இருக்கிறது! கல்வி ஒரு சிலருக்கே சொந்தம் என்கிற மோசடித்தனத்தின் எதிர்க்குரலாக ‘மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்து இலர் பாடு’ என்று வள்ளுவர் கொதித்திருக்கிறக்கிறார். கல்லாதவர் எவராயினும் அவர் முகத்தில் இருப்பவை புண்களே என்கிறார். திரியின் தீபம் கண்டால் வணங்குவர், தீப்பற்றி எரிந்தால் இகழ்வர் அதுபோல் ஒரு வீட்டில் மூத்தவன் கல்லாதவனாக இருந்து இளையவன் கற்றவனாக இருந்தால் இளையவனையே மதிப்பர் என்கிறது நான்மணிக்கடிகை. கல்லாதவனை பூதம் என்கிறது சிறுபஞ்சமூலம். எழுத்தின் வனப்பே வனப்பு என்கிறது ஏலாதி. ஓதுவது ஒழியேல் என்கிறாள் ஔவை. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்கிறது கொன்றை வேந்தன். கல்வியின் ஊங்கு இல்லை சிற்றுயிர்க்கு உற்றதுணை என்கிறது நீதிநெறி விளக்கம். பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிறது வெற்றி வேற்கை. உலகத்தில் கல்வி குறித்து இத்தனை மதிப்பளித்த சமூகம் வேறிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் கல்வி குறித்து மதிப்பு வைத்திருந்த சமூகம் படிக்காமல் கிடந்த வேதனையை என்னவென்பது? அல்லது படிக்கவிடாமல் செய்த கொடுமையை என்னவென்பது? இன்றைக்கு படித்தவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நடத்தை குறித்து அவர்களின் பண்புகுறித்து நூலாசிரியர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கல்வி எதற்காக பயன்பட்டிருக்கிறது என்கிற வினா நம்முன் நிற்கிறது. நிற்க அதற்குத் தக என்றானே வள்ளுவன் அது நிகழ்ந்திருக்கிறதா என உரையாடுகிறார் கல்வி எனும் கட்டுரையில். ஈதல் குறித்து வள்ளுவரின் ஏக்கம் பெரிது. சாவைத்தவிர துயரமானது வேறில்லை, ஆனால் கொடுக்காமல் வாழ்வதை விட சாவு இனிமையானது என்கிறார் வள்ளுவர். அதுகுறித்து நூலாசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஒரு கதையைக் கூறி பிறகு ஈதல் குணத்தின் பெருமையை விளக்குகிறது இக்கட்டுரை. உழவு குறித்து மிகவிரிவான கட்டுரை ஒன்று இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ‘உழவே தலை’ என்பது வள்ளுவம். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகக் கிடக்கிறது. உடலுக்கும் சமூகத்திற்கும் கேடுதரும் வேலைகளைச் செய்ய முன்வரும் சமூகத்தில் உழவு செய்ய யாரும் முன்வரவில்லை என்றெழுதுகிற நூலாசிரியர் அதற்கான தீர்வினையும் கூறுகிறார். உழவுத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்கினால் உழவு மேம்படும், வருங்கால சந்ததி வளமாய் வாழ்வர் என்கிறார். சீரைத்தேடின் ஏரைத்தேடு என்கிறது கொன்றைவேந்தன். இன்றைக்கு ஏரைத் தேடுபவர் எவருமில்லையே என்று நூலாசிரியர் கூறும் கூற்று நம்மை கலங்கவைக்கிறது. உழுவான் உலகுக்கு உயிர் என்று தமிழ்ச்சமூகம் உழவுக்கு மதிப்பளித்தது. அதனை நாம் மறந்தால் விளைவு என்னவாகும் என்பதனை கட்டுரையில் கோடிட்டுக்காட்டுகிறார். மருத்துவம் குறித்து ஒரு நல்ல கட்டுரை இடம் பெற்றுள்ளது. பழங்காலச் செய்யுள்கள் கூறும் மூலிககளின் மருத்துவக் குணத்தினை இக்கட்டுரையில் தொகுத்திருக்கிறார். குடும்ப உறவுகள் குறித்து இவரது ஆதங்கம் மூன்று கட்டுரைகளில் வெளிப்படுகிறது. அறநூல்கள் மற்றும் காப்பியங்கள் கூறிய குடும்ப உறவுகள் குறித்த கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் இவை. மாறுபட்ட கருத்துகள் இவற்றின் மீது நாம் கொண்டிருந்தாலும் இவரது அக்கறையை, அன்பைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. நிம்மதியற்ற குடும்பங்களை பார்த்து வேதனையோடு பேசும் ஒரு மூத்தவரின் குரலாக இக்கட்டுரையினை நாம் காணலாம். அறநூல்கள் பயின்று அதன்படி வாழத்துடிக்கிற, தம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் அதனை வலியுறுத்திகிற ஒரு தமிழ் மனத்தின் ஏக்கக் குரல்தான் இந்நூல். தலைவர் கலைஞர் மீது மிகுந்த பற்றும் மதிப்பும் வைத்து அவரின் எழுத்துக்களில் தோய்ந்து தேவையான இடங்களில் மேற்கோள் காட்டி கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆய்வுக் கட்டுரைகளாக இல்லாமல் ஒரு வாசக அனுபவமாக வாழ்விற்கு தேவையான அறிவுரைகளைக் கூறும் ஆசிரிய மனோபாவம் தொனிக்கிற கட்டுரைகள் இவை. திரு.வி.க., மு.வ. போன்றோர் நமக்கு இம்மாதிரியான கட்டுரைகளின் முன்னோடிகளாக இருக்கின்றனர். நூலாசிரியர் அந்த வழியைப் பின்பற்றி மேலும் மேலும் பல நல்ல நூல்களைத் தரவேண்டும். * * * * *

தொடர

மரணச் சித்திரங்கள் - ஜெயஸ்ரீயின் கதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்

"ஒரு சகமனிதனை அவன் பேசும் மொழி புரியவில்லை என்பதைக் காரணம் காட்டிப் புரிந்து கொள்ளாமல் போய்விடக்கூடாது என்கிற அக்கறையில் பிறக்கிற சமூகச் செயல்பாடுதான் மொழிபெயர்ப்பு" என்கிறார் கலை விமர்சகர் இந்திரன். மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியமான ஆளுமையான பால் சக்கரியாவின் சிறுகதைகளை அதன் சாரமும், ஆத்மாவும் குறையாமலும், சிதையாமலும் மொழிபெயர்த்திருக்கிறார் ஜெயஸ்ரீ. ‘வம்சி’ பதிப்பகத்தின் இவ்வெளியீடு ஒரு மொழிபெயர்ப்பின் மூலம், மிக முக்கியமானதொரு படைப்பாளியின் ஆக்கத்தினைத் தமிழில் ஆவணப்படுத்துவதோடு, "மொழிபெயர்ப்பும் மற்றுமொரு படைப்பே" Translation is transcreation என்கிற உணர்வினைத் தருகின்றது. மிக நேர்மையாக சக்கரியாவை அணுகிக், கடுமையாக உழைத்து, மிக எளிமையான நகாசுகளுடன் தமிழில் இதனை மொழிபெயர்த்திருக்கின்ற ஜெயஸ்ரீ தொடர்ந்து மொழிபெயர்ப்புத் துறையில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பினைச் செய்து வருபவர். ஆராவாரமற்ற அதிஅழகான அல்லிப் பூக்களைப் போல, படைப்புலகில் தனக்கென ஒரு இடத்தினைத் தக்க வைத்துக் கொண்டு இயங்கி வருபவர். "எளிமை, ஆற்றொழுக்கு நடை, தடைவிதிக்காத கம்பீரம், தெளிவான பெறுமொழி" முதலியவை ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளனின் மிக முக்கியமான தகுதிகள். அதோடு, ஜெயஸ்ரீ மொழிகளின் காதலியாகவே எனக்குப் படுகின்றார். மூலமொழியின் படைப்பைக் காதலுடன் அணுகிக், கவனமுடன் தழுவி, பிரசவ ஆயாசத்துடன் பெருமையுடன், படைத்திருக்கின்ற இக்கதைகள் மிக முக்கியமானவை. "அயல்மொழியிலிருக்கும் ஒரு நூலினைத் தனது நாட்டுப் பாரம்பர்யத்திற்கு ஒப்பப் பெயர்த்து எழுதுதலும் ஒரு படைப்புச் செயலே" எனும் வை.சச்சிதானந்தித்தின் கூற்றையும், "....கதைகளை மொழிபெயர்ப்பது என்றால், கூடியவரை, பாஷை வளைந்து கொடுக்கக் கூடியவரை, ஓர் குறிப்பிட்ட அன்னிய நாட்டுச் சரக்கை அதன் சாரம் கெடாமல் எடுத்துத் தருதல்"" எனும் புதுமைப்பித்தனது விளக்கத்தையும், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பார். நமக்கு மிக நெருக்கமான கேரளத்தின் அதிநுட்பமான படைப்பாளியை, மிக அணுக்கமாகத் தமிழில் கொணர்ந்த ஜெயஸ்ரீ நம் தமிழ் இலக்கிய உலகின் கவனத்திற்கும், ஒரு சாதாரண வாசகனின் முழுமன பாராட்டிற்கும் உரியவர். பால் சக்காரியாவின் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை வாசித்து முடித்ததும் மரணத்தின் வாசனை சூழ்ந்த ஒரு அறையில் தனித்து விடப்பட்ட மனநிலை என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. உற்றார் உறவினரின் மரணங்கள், நண்பர்கள், அறிந்தவர்களின் மரணங்கள் எப்போதாவது தனியாக இருக்கும் நேரங்களில் நினைவுகளை அலைக்கழிப்பதைப் போல இருக்கவில்லை அந்த அறையின் வாசனை. உருவமில்லாத மரணம் அருகில் வந்து கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த புத்தகத்தில் அமர்ந்து என்னோடு பேசிக் கொண்டிருந்தது போன்ற ஒரு உணர்வு. அந்த உணர்வை என்னுள் புகுத்தியதே மொழிபெயர்ப்பாளரின் முதல் வெற்றி. "Death is terrifying because it is so ordinary. It happens all the time" என்றார் Susan Cheever. மரணம் சாதாரண நிகழ்வாகிவிட்டிருப்பது இன்றைய நவீன வாழ்வில் ஒரு நிதர்சனம். வரும் போகும் வழிகளில் தினம் தினம் அகால மரணம் ஒன்றையாவது பார்க்கும்படியாகத் தான் இன்றைய வாழ்க்கை இருக்கிறது. செய்தித் தாள்களைப் புரட்டினால் பக்கத்திற்குப் பக்கம் மரணச் செய்தி ஒன்றையாவது பார்க்காமல் இருக்க முடிவதில்லை. மனதை தொடும் வலிமையை இழக்குமளவுக்கு மரணம் சாதாரணமாகிவிட்டது இன்றைய வாழ்க்கையில். சக்காரியாவின் கதைகளில் வரும் மரணங்களும் இன்றைய நவீன வாழ்வில் அன்றாடம் நடக்கும் சாதாரண மரணங்களைப் பற்றிய சித்திரங்களே. முதல் சிறுகதையில் தொடங்கி தொகுப்பின் இறுதியான கதைவரை மரணம் சூழ்ந்த வாழ்வுச் சித்திரங்கள். மரணத்தின் அர்த்தம் புரியாத குழந்தைகளின் உலகத்தைச் சித்தரிக்கும் "சந்தனுவின் பறவைகள்" நமக்குப் பரிச்சயமான குழந்தைகளின் சிறிய உலகம்தான். தன் தாயின் மரணத்தைப் புரிந்துகொள்ள முடியாத குழந்தை பிரவேசிக்கும் கற்பனை உலகைப் பற்றிய அழகான சித்தரிப்பு. சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் நுழையும் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் பார்வையில் அவர்களது உலகத்தைப் பற்றிய சித்தரிப்பு "செய்தித்தாள்". சமூகத்தின் மையத்தின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத அவர்களுக்கு, மையத்தின் மனிதர்களின் வாழ்வும் சாவும் ஒன்றுதான் - அன்றைய பசியைத் தணிப்பதற்கான ஒரு வாய்ப்பு. பக்கச் சார்பு இல்லாமல் மையம் - விளிம்பு இரண்டு உலகங்களையும் சில பக்கங்களில் விவரித்துச் செல்கிறார் சக்காரியா. இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் இது ஒன்று. "கடல்" "வலை"" "ஓரிடத்தில்" "பிரபஞ்சத்தின் சிதைவுகள்" "ஒரு குறுகலான இடம்" "அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்" என்று மற்ற சிறுகதைகளிலும் வேறு வேறு பாத்திரங்கள், சூழல்களின் பார்வைகளில் இருந்து தொகுப்பு முழுவதுமே மரணத்தின் சித்தரிப்புகள். இதில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை தொகுப்பின் இறுதிக் கதையாக வரும் "அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்". Leave her to heaven And to those thorns that in her bosom lodge, To prick and sting her Hamlet இல் வரும் Shakespeare இன் வரிகளை நினைவுபடுத்திய கதை. முப்பத்தாறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறக்கும் கன்னியாஸ்த்ரீயான அல்போன்சம்மா என்ற அன்னக்குட்டி தன் உடலுக்கு வெளியே வந்து தன் மரணத்தைப் பார்க்கும்போது அவளுக்கு ஏற்படும் உணர்ச்சிகளைப் பற்றிய சித்தரிப்பு அற்புதமான புதிய சிறுகதை உத்தி. அவள் உடலை அடக்கம் செய்யும் சக கன்னியாஸ்த்ரீகள், வரும் உறவினர்கள் அனைவரும் தனக்குச் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து வாழ்க்கைக்கு நன்றி சொல்லி காற்றோடு கறைந்துவிடுவகிறாள். மரணம் விடுதலையாகிறது. துயரமான வாழ்க்கையில் இருந்து விடுதலை என்ற பார்வையில் சக்காரியா இக்கதையைப் படைத்திருந்தால் மிகச் சாதாரணமான ஒரு கதையாக இருந்திருக்கும். ஆனால், வாழ்க்கையை ஒரு பேறாக, வாழ்ந்ததை மகிழ்ச்சியாக, தன்னோடு இருந்தவர்களுக்கும் உதவியவர்கள் மீதான நேசமாக, அனைவரிடமிருந்தும் நன்றியோடு விடைபெறுவதாக சிறுகதையை முடித்திருப்பதில் சக்காரியாவின் மரணம் பற்றிய பார்வையும் வாழ்க்கை பற்றிய பார்வையும் nut shellல் வெளிப்படுகிறது. Shakespeareஐப் போல அவளது ஆன்மாவை மனசாட்சியின் கூரிய முட்களால் கிழிக்கும் கொடுமையான இறுதிச் சோதனையாக மரணம் இங்கே சித்தரிக்கபடவில்லை. மரணம் அச்சப்படுவதற்கல்ல. துயரப்படுவதற்கும் அதில் ஒன்றும் இல்லை. அது மிகச் சாதாரணமானது. வாழ்க்கையைப் போலவே. இச்சிறுகதைகளின் நுணுக்கமான இயல்பான சித்தரிப்புகள் வழியாக, மரணத்தைப் பற்றி சக்காரியா உணர்த்தும் நிதர்சனமான வாழ்க்கை உண்மை இது. எந்த ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ஒரு themeற்குள் அடக்கிவிடமுடியாது. அப்படி ஒரு வாநஅந ற்குள் அடக்கி ஒரு தொகுப்பை வாசித்துவிடவும் கூடாது. என்றாலும், இத்தொகுப்பை வாசித்ததில் என் மனதைப் பாதித்த தீவிரமான உணர்ச்சிகளை மட்டுமே இங்கே வைத்திருக்கிறேன். அதன் முழு தீவிரத்தையும் அச்சில் பதியவைக்க முடியாது தானே? இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம், குழந்தைகளின் உலகைப் பற்றிய சக்காரியாவின் அழகான சித்தரிப்புகள். "சந்தனுவின் பறவைகள்", "குழந்தை உண்ணி", "ஒரு குறுகலான இடம்" இந்த மூன்று சிறுகதைகளிலும் வரும் குழந்தைக் கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டத்திலேயே நனவோடை உத்தியைப் பயன்படுத்தி கதையைச் சொல்லியிருப்பது நினைக்க நேரமில்லாத குழந்தைமை நினைவுகளுக்கு இட்டுச் சென்றது. அதே போல, "ஓரிடத்தில்" "பிரபஞ்சத்தின் சிதைவுகள்" இரு கதைகளும் குழந்தைகளுக்குச் சொல்லும் நீதிக் கதைகளை ஒத்த மாதிரியில் தீவிரமான வாழ்வியல் நெருக்கடிகளை கவித்துவமான மொழியில் சித்தரிப்பது தமிழ் இலக்கியத்தில் வழக்கில் இல்லாது போயிருக்கும் ஒரு கதை சொல்லல் மரபை நினைவூட்டுவதாக இருக்கிறது. "சலாம் அமெரிக்கா" "யாரோ வாசலில்" "கடல்" "கிரேன் ஷாட்" "நமக்கு வசிக்க முந்திரித்தோப்புகள்" ஆகிய சிறுகதைகள் கேரளச் சமூகத்தின் நடுத்தர, உயர் நடுத்தரப் பிரிவினரின் நெருக்கடிகளை ஒரு கோட்டுச் சித்திரமாக உருவகித்துக் காட்டும் கதைகள். சிறுகதை வடிவத்திற்கே உரிய, வாழ்க்கையின் ஒரு பக்கத்தை slice of life கணகச்சிதமாக உருவ நேர்த்தியோடு விவரித்துக் காட்டுபவை. "அலறும் எலும்புக்கூடு" ஒரு பரிசோதனை முயற்சிக் கதை. ஒரு பின்நவீனத்துவ பாணிக் கதை என்றும் சொல்லலாம். மர்மக் கதையா, துப்பறியும் கதையா, மாய மந்திரக் கதையா என்ற குழப்பத்துடனேயே வாசிப்பவரை இழுத்துச் சென்று சொல்லப்படுவது ஒரு கதைதான் என்பதை இறுதியில் சொல்லும் meta-fiction. இதே பாணி "வலை" கதையில் அதன் ஆரம்பத்திலேயே அந்தக் கதையை ஊர் பெயர் தெரியாத ஒரு நபரிடம் கேட்ட கதையாகக் கொண்டு போவதும் இப்போது பின்நவீனத்துவ கதை சொல்லல் முறையாக நன்றாக அறியப்பட்ட ஒன்று. இந்த கதை சொல்லல் முறைகளை எந்த நெருடலும் இல்லாமல் இலாவகமாக கையாண்டிக்கிறார் சக்காரியா. தமிழுக்கு பால் சக்காரியா புதியவர் இல்லை என்றாலும், இத்தொகுப்பு அவரது படைப்புலகத்தை மேலும் விசாலமாக அறிமுகப்படுத்தி வைப்பதாக இருக்கும். தமிழ் படைப்புலகத்தில் தற்சமயம் சிறுகதைகளில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தை உடைப்பதாக இருந்தால் இத்தொகுப்பு மேலும் சிறப்பு பெறும். ஜெயஸ்ரீயின் நெருடல் இல்லாத மொழியாக்கத்தில் சரளமாக வாசித்த இன்பம் சுகமானது. கேரள சமூகத்தின் நவீன வாழ்க்கை நெருக்கடிகளின் சில துளிகளை இச்சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் வாசகர்கள் அறியும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும். தமிழுக்கு மிக நெருக்கமான கொஞ்சு மலையாளத்தில் இருந்து அவர் மேலும் படைப்புகளைத் தமிழுலகுக்குத் தரவேண்டும். மெக்ஸிகோ நாட்டுக்கவிஞர் அக்டோவியா பயஸ் (Octovio Payaz) சொன்னார், "ஒவ்வொரு வாசகமும் தனித்துவமானது அதே நேரத்தில் அது வேறொரு வாசகத்தின் ஒரு மொழிபெயர்புமாகும். எந்த வாசகமும் முழுக்க முழுக்க அசலானதுமல்ல. ஏனெனில் மொழி என்பதே அடைப்படையில் ஒரு மொழிபெயர்ப்புதான்". வார்த்தைகளற்ற குறிகளையும், சைகைகளையும் மொழிபெயர்த்த அந்த முயற்சியில் உருவானதுதானே மொழி என்பதும்! மேலும் அவர் சொல்வது, "ஓரளவுக்கு ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஓர் அசலான கண்டுபிடிப்பு ஆகும்". அவ்வகையில் ஜெஸ்ரீயின் இந்த மொழிபெயர்ப்பும் ஒரு அசலான கண்டு பிடிப்பே! * * * * *

தொடர

முன்னகர்வின் மகிழ்ச்சி - மு.முருகேஷின் ‘ஹைக்கூ’ கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

தமிழ் ஹைக்கூ பரப்பில் தொடர்ந்து ஆர்வமுடன் இயங்கி வருகின்ற கவிஞர் முருகேஷ், இந்த நூலில், 2001-ம் ஆண்டு தொடங்கி, 2006-ம் ஆண்டு வரையிலான ஹைக்கூ நூல்கள் மற்றும் சில தரவுகளிலிருந்து பெண்ணியச் சிந்தனைகளை முன் வைக்கின்ற கவிதைகளைத் தேர்வு செய்து ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் புதிய போக்குகளை, விழிப்புணர்வினைக், குறிப்பாகப் பெண்களின் உணர்வுநிலை, வாழ்வுநிலைத் தளங்களில் ஏற்பட்ட மாற்றத்தை இக்கவிதைகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என விவாதிக்கின்ற முருகேஷை ஒரு கவிஞராக மட்டுமே அறிந்தவள் நான் - ஆய்வாளராக அறிய இது ஒரு சந்தர்ப்பம். வரலாற்றில் பெண்கள் பதியப் பட்டிருப்பதனை விட மறக்கப்பட்டதே அதிகம். "1620ல் வரலாற்றுப் புகழ்பெற்ற மேஃபிளவர் கப்பலில் பயணத்தை மேற்கொண்ட ஆரம்ப கர்த்தாக்களின் நினைவைப் போற்றுவதற்காகப் ஃப்ளைமவுத் கப்பல் துறையில் நினைவுக்கல் செதுக்கப்பட்டபோது, புது உலகை நிர்மாணிப்பதற்காக அவர்களுடன் அக்கப்பலில் பிரயாணம் செய்த பதிணேழு பெண்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பொதுவாக, ஒவ்வொரு சகாப்தத்தின் வரலாற்றாசிரியர்களும் பெண் இனத்தைப் பற்றி சிறிதும் அக்கறை காட்டவில்லை....... இருந்தபோதிலும் உலகின் மாதர்களுக்கு ஒரு வரலாறு இருந்து வந்துள்ளது" என்கிறார் ரோஸலிண்ட் மைல்ஸ் ‘உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூலில். மறக்கப்பட்ட பெண்ணின் வரலாறு புத்துருவாக்கம் செய்யபட்டது ‘பெண்ணியம்’ எனும் சிந்தனைப்போக்கு முகிழ்த்த காலகட்டத்தில் தான் என்றால், பெண்குரல் - தன் நிலை குறித்த தெளிவுடனும், திடமுடனும் புதியதொரு வீச்சினைத் தொட்டது கலை, இலக்கிய வெளிப்பாடுகளில். பெண், கல்வியறிவு, புலமை, அறிவுசார்ந்து இயங்குதல், மரபின் பொய் வேலி உடைத்தல் - இவற்றின் துணை கொண்டு தனக்கான மொழியை உருவாக்கியபோது படைப்பாற்றல் எனும் தளத்திலும் ‘பெண்ணியச் சிந்தனை‘ மிக முக்கியமான போக்கெனச் சூல் கொண்டது. பத்தொன்பதாவது நூற்றாண்டு தோற்றுவித்த இச்சிந்தனை தமிழ் ஹைக்கூ கவிதைகளில் எவ்வாறு வெளிப்படுகின்றது என்று சிலவற்றைத் தேர்ந்து, ஆராய்ந்திருக்கிறார் முருகேஷ். தமிழ் ஹைக்கூக் கவிதைகளில் நீண்ட காலமாக ஆற்றலுடன் எழுதிவருபவர் என்பதே முருகேஷின் தனிப்பெரும் அடையாளமாக இருப்பதை உணரமுடிகிறது. இதழ்கள் வாயிலாகவும் வெளிப்பாட்டு வடிவ முயற்சிகளிலும் தமிழ் ஹைக்கூவை வளர்த்தெடுப்பதில் அக்கறையுடன் திகழ்பவர். மலையாள மொழியில் இவரின் ஹைக்கூக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும் ஒரு எளிய நற்சான்று. நெகிழ்வு, காட்சிப்படிமம், வாழ்வு, அபூர்வக் கவனிப்பு, சமுதாயம், நுண்ணுணர்வு, அகம், நடப்பியல், அழகான பொய்கள், மறுவாசிப்பு, நகைச்சுவை, கருப்பொருள் பதிவு போன்ற கூறுகளை உள்ளடக்கிய தமிழ் ஹைக்கூக் கவிதைகளை படைத்தளித்திருக்கிறார். கல்யாண்ஜி அணிந்துரையொன்றில் சொல்வதைப் போல "ஏளைரயடகளுக்கும ஏளைiடிn என்று சொல்லப்படுகிற தரிசனத்திற்கும் ஆழ்ந்த அழகியல் தொடர்பிருக்கிறது". அதற்கான சாத்தியங்கள் தமிழ் ஹைக்கூக்களில் தென்படுமெனில் ஏற்படுகிற ஆனந்தத்தை ஒரு தேநீர் பருகிக் கொண்டாடலாம்தான். ஹைக்கூப் பரப்பில் இவரின் செயலூக்கம் உள்ளபடியே போற்றத்தக்கது. அன்பும் உரிமையும் கொண்ட இவரின் ஆளுமை ஹைக்கூ முயற்சிகளுக்கு மிகப் பொருத்தம். புதிதாக எழுத வருபவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர். முருகேஷின் சில ஹைக்கூக்களைப் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும். இரவில் தாமதமாய் வீடுவந்தேன் சலலத்தன தவளைகள். தவளை குதித்தது தாமரை இலையில் உருளும் நட்சத்திரம். ஹைக்கூவிற்கான மனோநிலை வெளிப்படுகின்ற கவிதைகள் இவை. குழந்தையற்ற தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது காற்றில். கறிக்கடை க்யூ எலும்புக்காக நாயருகே நான். கிழிசலைத் தைக்கும் தாய் விளையாட்டாய்க் கிழிக்கும் குழந்தை. ஒரே சமயத்தில் பங்குகொள்பவனாகவும், பார்வையாளனாகவும் கவிஞன் தென்படுகின்ற கவிதைகள் மேற்சொன்னவை. தூங்கும் அம்மா தாலாட்டும் சின்னக் கொலுசு. நடுநிசியில் விழித்தெழுந்து பார்த்தால் குழந்தைக்குப் பாலூட்டும் தாய். மிட்டாய் வண்டியின் மணியொசை வழித்தெழும் குழந்தை. குழந்தைமையைத் தொலைத்துவிடாத ஞானமும், கவனமும், ஹைக்கூவின் கூறுகளில் ஒன்றென்பதை உணர்ந்த கவிதைகள் இவை. பூட்டிய வீடு தனிமையில் பேசுமோ தொலைபேசி மணி. நண்பனின் மரணம் இடுகாட்டில் நுழைகையில் நெற்றியில் முதல் தூரல். அகவழிப் பயணத்தில், இயற்கையின் பருவங்களையும், அதன் வெளிப்பாடுகளையும் இணைத்துக் கொண்டு உரையாடுவது ஹைக்கூவின் மற்றொரு குணாம்சம். அந்தப் பாங்கினை வெளிக்கொள்கின்ற கவிதைகள் மேலே குறிப்பிட்டவை. அனுபவத்திலும் கோணங்களிலும் மனதில் தேங்குபவை. கல்யாணக் கூட்டம் முதிர்கன்னியின் தலையிலும் கொஞ்சம் அட்சதைகள் என்பதும் அவரின் பார்வையே. ஒரு ஆணின் பார்வையாக இக்கவிதை இருப்பதுடன் தற்போது தமிழ் ஹைக்கூவில் பெண்ணியம் என்ற தலைப்பில் இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு புத்தகமாவது நல்லூக்கம் அளிக்கிறது. ஹைக்கூ குறித்தும், தமிழ் ஹைக்கூ குறித்தும், பெண்ணியம் குறித்தும், தமிழ் ஹைக்கூவில் பெண்ணியம் குறித்தும் சமூக அரங்கில் ஒரு ஆக்கப்பூர்வத் தாக்குதலை விளைவிக்க இப்புத்தகத்தால் இயலுமெனில் முன்நகர்வின் மகிழ்ச்சியே. வளைக்குள் சிக்கியும் துடிக்காமல் உற்சாகமாய் மீன்கள் கோஷா விழிகள், என்னும் நிர்மலா சுரேஷின் கவிதை பர்தாவுக்குள் தம்மைப் பழக்கிக் கொண்டுவிட்ட பெண்களின் நிலையை முன் வைக்கிறது. காலம் காலமாய் அவ்விழிகள் தம்மியல்பை விடுத்து வேறு கரை ஒதுங்கிவிட்டன. உற்சாகத்தின் உண்மைப் பொருள் வலியெனக் கொள்ள கவிதையின் தேவை அவசியப்படுகிறது. துடிக்காமல் இருப்பதாகச் சொல்லித் துடிக்க வைப்பதும் அவ்விதமே. இலைகளற்ற மரத்தில் விண்மீன்கள் விரையும் நிலா. என்னும் கல்பனாவின் கவிதை ஜப்பானிய ஹைக்கூவிற்கு இணையானது. கோணம் மிக அற்புதமானது. பெண்ணியம் என்றில்லை வேறு எப்படிமத்திற்கும் பொருந்திப்போகும் படிமம். இதுவே ஹைக்கூவின் அலாதித்தன்மை. விரையும் நிலா என்கையில் மனதிற்குள் நிகழும் கோணத்தின் சாத்தியம் ஹைக்கூவின் ஆகச் சிறந்த கூறு. இலைகளற்ற மரம் நிச்சயமாய் பெண்ணியம் பேசுகிறதுதான். அதன் வலி அப்படிச் சொல்லிவிட வைக்கிறது. உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அழுவதற்கு. என்னும் மித்ராவின் கவிதை கேட்டவுடன் ததும்பும் பொருள் நிரம்பியது. உன்னால் முடிந்தது என்னாலும் முடியுமென எனக்குத் தெரியும்தான். ஆனாலும் அது இயலாத சூழலின் நிர்கதி என்னை இப்படியொரு கவிதை எழுத வைத்திருக்கிறது. ஒரு காடும் ஒரு குயிலும் ஒரு பெண்ணும் உரையாடிக்கொண்டிருக்கும் இக்காட்சிதான் எத்துனை ஆதங்கத்தினை வெளிக்கொணர்கிறது...? "நான் ஒரு பெண். என்னைப் போன்று ஏராளமானவர்கள் ஒன்று சேர்ந்து கர்ஜிப்பது உங்கள் காதுகளில் விழவில்லையா? இதை நீங்கள் உதாசீனம் செய்யமுடியாது. நான் ஒரு பெண். நான் வளர்வதைக் கூர்ந்து கவனியுங்கள். காலோடு கால் சேர்ந்து நிற்கும் என்னைப் பாருங்கள். நிலப்பரப்பை என் அன்புக்கரங்களால் அரவணைக்கிறேன். ஆயினும் இன்னும் நான் ஒரு கருவே. (சிறுமுளையே) என் சகோதரன் என்னைப் புரிந்து கொள்ளும் வரையில் - இன்னும் நெடுந்தூரம் கடந்து செல்ல வேண்டும் நான்... எனும் ஹெலன் ரெட்டியின் பாடலை இங்கு நினைவு கூறலாம். இவ்வாய்வில் குறிப்பிட்டவற்றைத்தவிர்த்து பெரும்பான்மையானவை பெண்ணியம் பற்றிய சுவடுகள் இல்லாதவையே. ஆயினும் எழுதப்பட்டிருக்கிற தமிழ் ஹைக்கூக் கவிதைகளிலிருந்து பெண்ணிய சிந்தனையை ஆய்ந்து அறிவது நல்நோக்கமே. குறிப்பிட்ட எந்த ஒரு சிந்தனை போக்கினையும் கண்டறிய ஹைக்கூவிற்குள் பயணிக்க முற்படுவது முரணான செயலாயினும் ஒரு கல்வி சார் செயல்பாடாக (யn யஉயனநஅiஉ சநளநயசஉh) வெளிப்படுகையில் அது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். முருகேஷின் நூலாக்க முயற்சிக்கு வாழ்த்துக்களும் ஆய்வுக்கு பாராட்டுதல்களும். * * * * *

தொடர

நிலா ரசிகன் கவிதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்

புனைவின் நிசியில் மிதக்குமொரு அறை "கவிஞன் ஒரு குட்டிக் கடவுள் அல்லர் - சாதாரண மக்களின் ஒரு பகுதியாகக் கவிஞன் இருப்பதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு சகாப்தத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த தன் மகோன்னத நிலையை மீண்டும் கவிதைக்குத் தர இயலும். சமகாலத்தில் தன்னுடன் வாழும் மக்களின் மிகவும் மறக்கப்பட்ட, மிகவும் சுரண்டப்பட்டவர்களுக்குத் தன்னைப் புரிய வைப்பதற்கு இயலவில்லை என்றால், அந்த இயலாமையே ஒரு கவிஞனின் எதிரி. இது எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்" - பாப்லோ நெரூடா. கருத்தாக்கங்களை முன்வைத்துக் கவிதைகளைப் படைக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையானது கருத்தாக்கங்களை முன்வைத்து ஒரு கவிதைப் பிரதியை அணுகக் கூடாது என்பதுவும். விருப்பு, வெறுப்பு, பாரபட்சமற்று ஒரு கவிதைப் பிரதியை அணுகுதல் பெருஞ் சுகம். தன் இருப்பை மொழிவழி உயிர்ப்பித்துக் கொள்ளும் ஒரு கவி மனதைக் கல்மிஷங்கள், முன்முடிவுகள், எடைக்கற்கள், தராசு முட்களற்று அணுகுதலே ஒரு கவிதைப் பிரதிக்கு அளிக்கப்படுகின்ற குறைந்தபட்ச நேர்மையான அரவணைப்பும், அதிகபட்ச மரியாதையும். அதன் பின் அவரவர் வானமும், உள்ளங்கையும், அவரவர்க்கு! "தப்பிப் பிழைத்திருப்பவனான நான்" எனும் கவிதையில் ப்ரக்ட், "எனக்குத் தெரியும் வாஸ்தவமாக : அது வெறும் அதிர்ஷ்டம் தான் அத்தனை நண்பர்களுக்குப் பிறகும் நான் தப்பிப் பிழைத்திருப்பது. ஆனால் நேற்றிரவு ஒரு கனவில் அந்த நண்பர்கள் என்னைப் பற்றி இப்படிக் கூறுதைக் கேட்டேன்: 'தகுதியானதே தப்பித்திருக்கிறது' மேலும் என்னையே வெறுத்தேன் நான்". வெறுக்கின்ற 'தகுதியிலிருந்து' தப்பித்து இருத்தலே ஒரு கவிதைத் தொகுப்பிற்கான சரியான தகுதியென நான் நம்புகிறேன். அவ்வகையில் நிலாரசிகனின், மீன்கள் துள்ளும் நிசி எனக்கு சமுத்திரத்தின் உப்பையும், ஈரத்தையும், வியப்பையும் காட்டிய மீன்; நிசப்தமும், காதலும், காமமும், துரோகமும், பசியும், கயமையும் கலந்த நிசியைக் காட்டிய நட்சத்திரம்; மெளனத்தின் நாவுகளையும், கொண்டாட்டத்தின் நடனத்தையும் உணர்த்திய உயிர் ததும்புமொரு இசைக்கருவி. சிறுமி, நாய்க்குட்டி, வண்ணத்துப் பூச்சி, மீன்கள், கடல், நதி, தவளை, காற்று, இறகு, பூனை, மான்குட்டி, சர்ப்பக்குட்டிகள், முத்தம், பொம்மை, தட்டான், பறவைக் கூட்டங்கள், அணில்குட்டி இவர்களோடு ஜூலியுமிருக்கின்ற நிலாரசிகனின் உலகத்திற்குள் நானும் பிரவேசிக்கின்றேன் - நகுலனின், "பூப்பிலிருந்து பென்ஸிலின் பிறந்தது பிரகிருதி வலை பின்னுகின்றது" எனும் வரிகள் பின் தொடர ! ஒரு கவிமனதைத் தொடர்கின்ற, உணர்கின்ற, உறைகின்ற, உயிர்க்கின்ற, பகிர்கின்ற கோழியிறகாய் மெல்லப் புரண்டு,இதில் சமயத்தில் களிக்கிறேன் - சமயங்களில் அழுகிறேன். உலகத்திற்கும் எனக்குமுள்ள தொடர்பின் ஒரு சிறு நாணைச் சுண்டுகிற ஒரு வரிபோதும் எனக்கு - மேதமை அவசியமில்லை. இருந்தாலும் புதுமைப்பித்தன், "கவிதையின் மேதமையை அறிய ஒரு வரி போதும். ஒழுக்கமோ, தர்மமோ அல்லது மோட்சமோ இவற்றிற்காக எழுதப்படும் கவிதை, கவிதையாகாது" என்பது போல, இத்தொகுப்பில் எனக்குப் பல தெறிப்புக்கள் - ஆன்மாவின் நாணைச் சுண்டியிழுத்தன. "ஒவ்வொரு சித்திரங்களின் வழியே தன் அழகின்மையைக் கடந்து செல்கிறாள்" (முகமற்றவனின் சித்திரம்) "சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது நாம் முத்தமாகியிருந்தோம்" (இசைதல்) "ஊமை படிகளின் முதுகில் மெல்ல இறங்குகிறது மழை" (மேனியிசை) "அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம் என்றது குடுவை மீன்" (மழைவழிப் பயணம்) "கவிதையின் ஒவ்வொரு சொல்லின் அடியிலும் மீன்கள் மறைந்திருந்தன ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்கும் இடையே கடல் அலையின்றிக் கிடந்தது" (மீன்கள் துள்ளும் நிசி) "முதுமைக்கும் பால்யத்திற்குமிடையே கதையாய் விரிந்திருக்கிறது இந்த இரவு" (கதை சொல்லி) "கடலுக்கு மரணிக்காத மீனொன்று காகமொன்றின் அலகில் துடிதுடித்தது" (முத்த வடிவினள்) "பொம்மையாதலின் வழிமுறைகள் அறியாமல் விழித்தபடி நின்றனர் கடவுள்கள்" (பொம்மையாதல்) .... அப்போது தான் கவனித்தேன் வெயிலின் பின்புறத்தை நிழலின் முன்புறத்திலிருந்து (வெயிலான்) மேற்சொன்னவை சில சோறு பதம். ஆயின், இவை மட்டுமே ஒரு அனுபவத்தின் கிளர்வை, பொதுத்துவமானதொரு உணர்வு கடத்தலை மொழியின் வழி நிகழ்த்திவிட முடியுமா? வெறும் தெறிப்புக்களின் பாய்மரத்தில் படகோட்டுபவன் கவிஞன் அல்லவே - அவன் ஆழ முக்குளிப்பவன் - தான் தேர்ந்தவற்றை வாசகனுக்கும், சக மனிதனுக்கும் கைநிறைய அள்ளித் தருவதில் வாழ்பவனும், மரணிப்பவனும் அல்லவா? மேலும், ஒரு கவிமனதின் வெளிப்பாடு என்பது - மொழியின் மூலம் - அதன் நேர்த்தியான அழகியல், நடை, உத்திகள் - இவற்றையெல்லாம் மீறி பிரச்சாரமின்றி வெளிப்படுத்துகின்ற அரசியல், சகமனிதனுக்கான குரல், சகபாலினத்தின் மீதான நேர்மையான பார்வை, கரிசனம், தன் வேரும், மண்ணும் உலகமயமாதல், வாழ்தலும் பிழைத்தலுமான இருமைகள், சுயமறிதல், ஒப்புக்கொடுத்தல், எனப் பல்வேறு அடுக்குகள் கொண்டதல்லவா? அவ்வகையில், "தமிழ்க் கவிதையென்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மத்தியதரவர்க்கப் புத்திஜீவிகளின் மெளன வாசிப்பிற்கான அநுபூதியாக மட்டுமே, சூக்குமத்தின் சூட்சுமமாக மட்டுமே சுருங்கிக் கிடப்பதில் எமக்குச் சம்மதமில்லை" எனும் வே.மு. பொதியவெற்பனின் குரல் எனக்கு மிக முக்கியமானது. அதனை அடியொற்றிப் பார்க்கையில், நிலாரசிகனின் கவி உலகும், அது முன்வைக்கின்ற அனுபவங்களும் மிக முக்கியமானவை, நேர்மையானவை. பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றதொரு பயணத்தைச் சென்ற நூற்றாண்டின் நிழற் பார்வையுடனும், இந்த நூற்றாண்டின் நம்பகமில்லாத்தன்மையுடனும் பார்த்துக் கொண்டே, அடுத்த நூற்றாண்டிற்குள் அவனது அனுமதியின்றி தள்ளப்படுகின்ற ஒரு எளிய மனிதனின் குரல் தான் இத் தொகுப்பின் தொனி. தன் புலன் உணர்வுகள் உணர்ந்தும், உய்த்தும், சேர்த்தவற்றை சொல்லும், அகம் அரற்றுமொரு கூர்மையான கேவலும், நடைமுறை நிசர்சனத்தை ஒரு சிறிய அவதானிப்புடன் கையறு நிலையில் கடந்து செல்லும் அவலமும் தான் இக்கவிதைகளின் அடையாளம். சக பாலினமான பெண்ணைக் காதலுடனும், புரிதலுடனும், காத்திருப்புடனும், பார்க்கின்ற பார்வையும், வனத்தை, பொம்மைகளை, கடவுள்களைத் தொலைத்த, பிளாஸ்டிக் பைகளில் கட்டி குப்பைகளில் அன்பைக் கொட்டும் நகரத்தைச் சுட்டும் வலியே இவற்றின் மெளனக் குறிப்புக்கள். நிலாரசிகனது மொழி, உரை நடைக்கும், வசனத்திற்குமான இடைப்பட்ட ஒன்று. கொஞ்சம் தட்டையானது தான் - ஆனால் இக்குறையைத் தட்டிச் சீர்படுத்தி விடுகின்ற ஒரு சித்திர விவரித்தலுக்குரியது அவரது லாவகம். கவிதைக்கு அழகியலை விட உயிர்த் தன்மையே முக்கியமென்கின்ற நவீன மனதின் கருதுகோளின் படி நிலாரசிகனது பல கவிதைகள் என்னை முற்றாகக் கவர்ந்தவை என்றாலும் கீழ்க் குறிப்பிட்ட 'முதல்துளி' எனக்குத் தந்த அனுபவம் ஒரு மிகச் சிறந்த தரிசனம் - a vision indeed. இதுவே நிலாரசிகனை இன்றைய நவீனக் கவிதைப் பரப்பில் மிக முக்கியமானதொரு ஆளுமையாக நிலை நிறுத்துகின்றது. முதல் துளி சைக்களின் முன் இருக்கையிலிருந்து கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி வருகிறாள் சிறுமி. மரங்களின் மொழியை அவளுடன் பயணிக்கும் தட்டான்களுக்குக் கற்றுத் தருகின்றாள். அவளிடம் கற்ற மொழியுடன் மரத்தின் இலையில் அமர்கின்ற தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து நகரும் வெயில் மரமொழியை கற்றுக் கொண்டு மறைந்து போகிறது. கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து முளைக்கும் மரக்கன்று சிறுமியின் மொழியில் தலையசைத்து தலையசைத்துப் பேசத் துவங்குகிறது பாலையின் முதல் துளியிடம். அற்புதமானதொரு அனுபவத்தையும் அதன் தொடர்பான விழிப்புணர்வு, மிகிழ்வு, நம்பிக்கை - முதலியவற்றையும் எனக்களித்த கவிதை இது. மனிதனுக்கும், இயற்கைக்கும் உள்ள உறவை, அதன் பிரபஞ்சப் பிணைப்பை, தன் நிலத்தில் காலூன்றி நின்று உலகம் முழுமைக்குமான உண்மை ஒன்றைக் கடத்தும் கண்ணியான கவிதையாய் மிகச் சிறந்த பதிவு இது! "கவிதையின் தன்மை என்ன என்பதையும், கவிதையின் செயற்பங்கு என்ன என்பதையும், பிரஸ்தாபிக்காமல், கவிதையின் அழகியல் குறித்த 'எந்த விவாதமும்' கடந்து செல்ல முடியாது" என்கின்ற பிரம்மராஜன், "கவிதை புரியப்படும் விதம், கவிதையின் மொழி, கவிதை வாசக மனதிற்குள் இயங்கும் விதம், அர்த்தச் சாத்யப்பாடுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டால்தான் அக்கருத்துத் தொகுதிகள் நவீன கவிதையின் அழகியலாக ஆகும் தகுதி வாய்ந்தவையாவது சாத்யம்" என்றும் சுட்டுகின்றார். மேற்சொன்ன நான்கு "touchstone method" (to borrow from T.S. Eliot) இன் படி, நிலாரசிகனின் கவிதைகளை வரையறுக்கையில், ஒரு வாசகனை அவரது தட்டையான வாக்கிய அமைப்புக்களின் முற்றுகள் அயர்ச்சியுறச் செய்தாலும், உதாரணம் : [இருக்கிறாள் / செல்கிறாள் / பார்க்கிறாள் நீந்துகிறோம் / கையசைக்கின்றன / செல்கிறார்கள் தொடர்கிறோம் / பார்க்கின்றன ஏற்படுத்தியிருந்தது / பொறிக்கப்பட்டிருந்தது தயார்படுத்துகிறேன் / ஓடுகிறேன்] அவன் அதனுள் நுழையத் தடையற்று அவனை ஈர்ப்பது கவிஞனின் “என்ன சகா!” எனும் சமநிலைப்படுத்துதலும், தோழமையும்தான். உள்ளூறப் பிணைக்கின்ற அனுபவமெனும் சூட்சுமத்தின் கயிற்றை இந்த கவிக்காரகன் சமத்காரமாக அறிந்திருக்கிறான். தானறியாததொரு கழைக் கூத்தாடியின் கலை நேர்த்தியோடு, மனச் சித்திரங்களாக அவை வரையப்படுவதே இவனது கவிதைகள் புரியப்படும் விதம். உருவகங்களும், குறிப்பான்களும், படிமங்களும் ஊடுபாவும் புனைவின் திரிசங்கு நிலமே இவனது மொழி. மெதுவாக அருகமர்ந்து தோள் தொடுகிறதே என்று திரும்பினால் திடீரென்று அந்தரத்திலும், குபீரென்று அடி ஆழத்திலும் தள்ளுகின்ற உணர்வு நிலையைக் கிளறுவதே இக்கவிதைகள் இயங்குகின்ற விதம். சிந்தனையும், உணர்வும் சரிசமமான நேர்த்தியுடன் புணர்கின்ற இவரது கவிதைகளின் அர்த்தச் சாத்தியப்பாடுகள் அவரவர் மனவெளி, புரிதல் பாற்பட்டது என்றாலும், எனக்கு இவை - தத்துவங்களின் அதிகாரமற்று, அடிப்படையானதொரு நேயத்தை, புகார்களற்று வாழ்தலுக்கான தேடலை, குறைந்தபட்ச இருத்தலுக்கானதொரு கைப்பிடிப்பைக் கோருகின்ற சாத்தியங்கள் உடையவை. ஆகவே வாசகனுக்கு மிக முக்கியமானவை - எனக்கு நெருக்கமானவை. "நெருடாவின் சமயமாகத் தெருக்களே திகழ்ந்ததென்று" அவர் குறித்த நினைவஞ்சலிக் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது. மக்களின் கவிஞனான நெரூடா, "புத்தகங்களுக்கு அந்தந்த சிந்தனைப் போக்குகள் என அடையாள முத்திரைகள் இடப்படுவதை நான் ரசிப்பதில்லை. எந்தச் சிந்தனைப் போக்குகளையும் வகைப்பாடுகளையும் சாராத புத்தகங்கள் வாழ்க்கையைப் போலவே எனக்கு வேண்டும்" என்பார். நிலாரசிகனது கவிதைகளும் எந்தவித அடையாள முத்திரைகளுககுள்ளும் சிக்காதவை. வாழ்க்கையைப் புனைவின் தூரிகை கொண்டு வரைந்தாலும், இரத்தத்தின் வண்ணமும், நிணத்தின் மணமும் கொண்டவை. கொஞ்சம் குறியீடுகள், உருவகங்களின் மேலேறும் 'பாண்டி விளையாட்டை' நாம் அறிந்து கொண்டோம் என்றால், அவற்றின் ஆகாய நீலமும், அடர் வனத்தின் பச்சயமும், பள்ளத்தாக்கின் மெளனமும், பெருங்கடலின் வசீகரமும் நமக்கு வசப்படலாம். கவிஞனது சமூகச் சுயமும், தன் சுயமும் இடைவெளியின்றி ஒன்றிப் போகின்ற கவி ஆளுமை சாத்தியப் படுமா என்கிற கேள்வி எப்போதும் என்னை ஈர்க்கின்றதொரு மாயக்கண்ணாடி. சமகாலத்தில் நவீனக் கலை பரப்பில் பயணிக்கின்ற பெரும்பான்மையினர் எத்தகைய நெருக்கடிக்கு ஆளாகின்றனர் என்பதனை 'கலை ஓர் அனுபவம்' என்ற நூலில் ஜான் டியூவி, "தொழில் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கலைஞன் இயந்திரத்தன்மையுடன் பெருவாரி உற்பத்தி செய்யும் வேலையைச் செய்ய முடியாது... தங்கள் படைப்பைத், தங்களைத் தனித்துவப்படுத்திக் காட்டும் 'சுய வெளிப்பாடாகக்' கையாளுவதைத் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடமையாகக் கலைஞர்கள் காண்கிறார்கள் / கொண்டுள்ளனர். பொருளாதாரச் சக்திகளின் போக்கிற்கேற்ப வளைந்து கொடுக்காமல் இருப்பதற்காகக் கோட்டித்தனம் செய்தாவது தங்கள் தனித்தன்மையை மிகைப்படுத்திக்காட்டும் எண்ணம் அவர்களுக்குக் கட்டாயமாக ஏற்படுகின்றது" என்கிறார். கவிதை வெளிக்கும் இது பொருந்தும் - தனித்தன்மையை நிரூபிக்கின்ற கோட்டித்தனம், அஷ்டாவாதானம், சிரசாசனம், கோட்பாடு, பிராணாயாமம் இவை எதுவுமின்றி இயல்பாகக் கால் நீட்டி, கொஞ்சம் வெள்ளந்தியான புனைவின் அணைப்பில் வாசகனோடு உறவு கொள்கின்றன நிலாரசிகனது கவிதைகள். தன்னைக் கொஞ்சம் பிட்டுக் கொடுத்துப், பகிர்ந்து கொண்டு, வாசகனிடமிருந்து பகிர்தலைத் தவிர வேறெதனையும் கோராத பொக்கை வாய்ச் சிரிப்புடன் நம்மை எதிர் கொள்கின்ற இந்த மீன்கள் துள்ளும் நிசி - தூண்டில்கள் வேண்டாததது! உள்ளங்கையளவு உப்பு நீர் கேட்கும் அதற்கு நம் ஒரு சொட்டுக் கண்ணீரோ அல்லது சிட்டிகை புன்னகையோ போதும்! "கவிதை என்பது வார்த்தைகளிலான அமைப்பா என்ன?" - "இல்லை" என்பதை எனக்கு மீண்டுமொரு முறை உணர்த்திய நிலாரசிகனது இந்தப் படைப்பு பகிரப் பட வேண்டியது - பேசப்படவேண்டியது! வாழ்தலின் வெளிப்பாடுகளான இவை சின்னஞ்சிறு அகல் போல் ஒளிர்பவை - தீப்பிழம்புகளிலிருந்து தனித்துத் தெரிபவை. ஆம் - "சாம்ராஜ்யங்களிலிருந்து வெகு தொலைவாய் எத்தனை ஸ்திரமாக நிற்கிறது அறை!” நிலாரசிகனது மீன்களுடனும், நமது கடலுடனும் புனைவின் நிசியில், எத்தனை ஸ்திரமாக நிற்கிறது இந்த அறை! * * * * *

தொடர

உலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்களின் இந்த ஒலிக்காத இளவேனில்

"கவிஞன் உணர்ச்சிகளின் நிபுணன், உணர்ச்சிகள் என அழைக்கப்படுபவற்றுக்கு குறைந்தபட்சம் இரு தளங்கள் உள்ளன. முதல் தளம் அறியப்பட்டதும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமானவற்றைத் தாங்கிச் செல்கிறது. இரண்டாவது தளம் பெயரிடப்படாத யாருக்கும் சொந்தமற்ற பிரதேசம். அளவில் அதிகரிக்கும் பெயரற்ற உணர்ச்சிகளின் தொகுதிகளுக்குக் கவிஞன் குடியுரிமை பெறும் கடமையிலிருக்கிறான். நமது வலிமிகுந்த இந்த சிக்கலுற்ற நூற்றாண்டு பிற விஷயங்கள் தவிர நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது மிகத் தலையாய விஷயங்கள் எல்லாம் நம் வாழ்வின் அறிவின் எல்லைக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் நடக்கின்றன என" - ஆக்நெஸ் நெமிஸ் நேகி (சமகால உலகக் கவிதை, தொகுப்பு - பிரம்மராஜன்). "இன்றைய நாளின் தன் வலியைப் பாடும் வெளித்தெரியாத குரல்களைத்" தேடிச் சென்று பதிவு செய்திருக்கின்ற தொகுப்பாக ஒலிக்காத இளவேனில் (18 பெண் கவிஞர்களின் கவிதை நூல்) வடலி வெளியீடாக வந்துள்ளது. டிசம்பர் - 2009 இல் பதிப்பித்த இக்கவிதைத் தொகுதியை கனடாவில் வாழும் தான்யாவும், பிரதீபா கனகா தில்லைநாதனும் தொகுத்துள்ளார்கள். ஜூன் 16-2012 இல் டொரொண்டோ நகரில் இக்கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், தோழர் சாந்தாராம் வாயிலாக இந்நூல் என் கைக்குக் கிட்டியது. "பெண்களின் மெளனம் யாரையையும் தொந்தரவு செய்ததில்லை - பெண்களையே கூட" எனும் ஆதங்கக் குரலுடன், அனைத்து வகையான வன்முறைகளுக்கும் ஒரே இலக்காகப் பெண்கள் இரையாகின்றபோதும், "தம் துயரை, எதிர்ப்பை, ஒரு அரசியலாய்க்" கொண்டு செல்ல வேண்டும் எனும் ஓர்மையுடன் தொகுப்பாளர்கள் இப் பணியை முன்னெடுத்திருக்கிறார்கள். இத் தொகுப்பின் மிக முக்கியமான கூறு என்னவென்றால் - "போராளிப் பெண் குரல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ, அதுபோலவே, எமது அரசியல் காட்சிகளின் மாற்றங்களுக்கமைய ஒரு கணத்தில் போராளிகளாய் அற்றுப்போகும் பெணகளின் குரலும் முக்கியமானதே" எனும் தொகுப்பாளர்களின் தெளிவும், தெரிவும். "மாபெரும் கவிதைகளை அவர்கள் எழுதவேண்டியதில்லை, 'ஈழப் பெண்குரல்' என அவை மிகை படுத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை, ஆயின், உலகின் வெவ்வேறு நகரங்களில் உள்ள, இலங்கைத் தமிழ்ப் பெண்கள், எத்தகைய, ஆண் அரசியல், குடும்பக் கடப்பாடுகள், கட்டுப்பாடுகளூடாகத் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் - அவற்றின் அரசியல் என்ன" என்பதனைப் பகிர்ந்து கொள்ளச் செய்திருக்கின்ற முயற்சியே இது என்கிறார்கள் தொகுப்பாளர்கள். இத் தொகுப்பு ஈழத்தை மட்டுமே மையப்படுத்தவில்லை. ஒரு அந்நிய தேசத்தில் வாழ நேர்கின்ற, சமகால வாழ்வின் சிக்கல்களைத் தனது தாய்நாட்டின் வரலாற்றுக் கண்ணியுடன் இணைக்கின்ற, அதில் இதுவரை கேட்டிராத பெண் குரலெனப் பதியப்பட்டவைகள் குறித்துக் கவனப்படுத்துதலும், பேசுதலுமே இதன் மையப்புள்ளி . ஒர் புலம் பெயர்ந்த சமூகத்தின் தனிமை, வன்முறை, பண்பாட்டுச் சிக்கல்கள், அடையாள மறுப்பு, சுயமிழத்தல் - இவற்றையெல்லாம் ஒரு பெண்ணாக எதிர்கொள்ள நேர்கையில், தனது வலியின், எழுச்சியின் வலிமையான குரலாக அவள் கவிதையைத் தேர்வு செய்திருப்பதனை, தேசம் : யுத்தநிறுத்தம், பெண் : வாழ்வியல், புலம்பெயர்வு : குடும்பம், புலம்பெயர்வு : மாணவம், தேசம் : யுத்தகாலம் எனும் பிரிவுகளில் தொகுத்தளித்துள்ளார்கள். மெளனமாக்கப்பட்டவர்களுக்கான வெளியெனவும், அவர்தம் குற்றஉணர்ச்சிகளினின்றும் விடைபெறுகின்ற சுமைதாங்கிக் கல்லெனவும் இத்தொகுப்பு இருப்பின் அதுவே போதுமானது எனும் தான்யா, பிரதீபா தில்லைநாதனின் பெருமுயற்சி கவனிக்கப்படவேண்டியது, பரவலாகப் பேசப்படவேண்டியது. பெண்களின் உலகம் ஒரு மூடிய உலகமாகவே இன்றுவரை இருக்கிறது. தொடர்ந்த கண்காணிப்பினாலும், தடைகளினாலும் அவளது ஒவ்வொரு அடியும் முறைப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான பெண்களின் உலகம் பதற்றம், மன உளைச்சல், பாதுகாப்பின்மை, பாலியல் அத்துமீறல், குடும்பச் சுமை, பொருளாதார நெருக்கடி இவற்றால் முழுதுமாய் மூச்சுத் திணறுகிறது எனில், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப் பெண்களின் உலகோ தமது புகலிடச் சூழல், ஈழத்து அரசியல், யுத்தத்தின் நிகழ் மற்றும் நிழல் உணர்வுகள், தனிமை, பகிர்தலற்ற வெறுமை - இவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்தம் சொல்ல இயலாக் கனவு, காதல், காமம், துரோகம், நம்பிக்கை, பயம் - இவற்றின் ஒட்டுமொத்தத் தனித்த குரலே இந்த ஒலிக்காத இளவேனில். இதில் ஒலித்திருக்கின்ற ஒவ்வொரு பெண் குரலும் தன்னளவில் தனித்துவம் வாய்ந்ததே. எனக்கு மிகவும் பிடித்த, நான் நேசிக்கின்ற அனாரின் "மலர்களின் பார்வைகள் அந்தியில் ஒடுங்கி விடுகின்றன. அவைகளின் கனவுகள் மாத்திரம் காற்றில் அலைகின்றன என் கவிதைகளைப் போல" எனும் காற்றில் அலையும் கனவுகள் பெரும்பாலும் வட அமெரிக்காவைக் களமாகக் கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ்ப் பெண்களின் எதிரொலியே. "குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அவை தமது நிமிடத்தினை வாழ்ந்து விடவே விரும்புகின்றன" எனும் நிவேதாவின் குரல், "இந்தக் கணத்தை ஐம்பது வருடங்களுக்கு முந்தையதிலிருந்து வேறுபடுத்தி அறியாத தளர் முதியோன் போல," எனும் ஹங்கேரியப் பெண் கவிஞர் ஆக்நெஸ் நெமிஸ் நேகியை நினைவு படுத்துகிறது. "ஆண்களால் வெல்லப்பட்ட உடம்பு பொய்களால் கொல்லப்பட்ட மனசு" எனும் வசந்தி, "எப்போதும் ஒரே வட்டத்துள் நிர்ப்பந்த வெப்புசாரம் மூச்சு முட்ட வைக்கும் ஆசுவாசப் படுத்தல்கள் அற்றதான தனிமை" யை வேண்டுகிறார். மிகச் சமீபத்திய செய்தியொன்றின் மூலமாக ஈழப் பேரின் இறுதிக்கட்டத்தினை ஐ.நா உறுப்பினர்கள் சரிவரக் கையாளவில்லை என அறிந்து கொண்ட அந்தக் காலைவேளையில், யசோதராவின் புதைக்குழி கவிதையை மீண்டும் வாசித்தேன். "யுத்தம் என்ன செய்தது யுத்தம் என்ன தந்தது "அந்த" இராணுவமென்னை வன்புணர்ந்தது எனது இராணுவம் உனது தகப்பனை கண்ணுக்கு முன்னால் கொன்றுபோட்டது. ....... அவள் / நான் தலையிலடித்தபடி அழுகிறேன் / அழுகிறாள் புதைகுழியை ஐ.நா. திறந்து திறந்து மூடுகிறது விஜி! ஐ.நா. என்ன செய்கிறது விஜி: திறந்து திறந்து மூடுகிறது!” சமகாலத்தின் மிகப்பெரிய துயரம் நம்பிக்கையற்றுப் போதல். அதன் தொடர்பான கையறு நிலையின் மன உளைச்சளைத்தான் தொகுப்பின் அநேகக் கவிதைகள் முன் வைக்கின்றன. என்றாலும், அவை வெறும் புலம்பல்கள் அல்ல. சமகால உலகில் பாசிசம் 'சாதாரண உடுப்பில்' தோன்ற முடிவது குறித்து உம்பர்தோ ஈக்கோ பின்வருமாறு குறிப்பிட்டார்: "உர் - பாசிசம் (நித்திய பாசிசம்) நம்மைச் சுற்றிலும் இன்றும் இருக்கிறது. சில நேரங்களில் சாதாரண உடைகளில். எவராவது 'ஆஷ்விட்ச்சை மீண்டும் திறக்க வேண்டும். இத்தாலிய சதுக்கங்களில் கருப்புச் சட்டைகளின் பேரணி நடத்த வேண்டும்' என்று சொன்னால், நமது சிக்கல் எளிதாகிவிடும். வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. உர் - பாசிசம் எந்த அப்பாவித்தனமான உருவிலும் மீண்டும் வரலாம். உலகின் எல்லா மூலைகளிலும் தினசரி அது எடுக்கும் புதுப்புது அவதாரங்களைச் சுட்டிக் காட்டுவது நம் கடமை" அது யுத்தமாகட்டும், இடப் பெயர்வாகட்டும், வன்முறைகளாகட்டும், ஊடகங்களாகட்டும், அன்றாட இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகட்டும் - பெண்னென்பவள் எதிர்கொள்வது இப் பாசிசத்தின் ஏதாவதொரு முகத்தைத்தான். சமூகம் கட்டமைத்துள்ள நிறுவனங்கள், ஆண், சக பெண்கள் - என அனைத்து வெளிகளிலும் பெண்ணானவள் ஒரு நுட்பமான பாசிச அரசியலைத் தான் ஒவ்வொரு கணமும் எதிர் கொள்கிறாள். "நகரம் இச்சையால் மூடியிருக்கிறது ஒவ்வொரு மூலையிலும் வல்லவர்கள் ஆளுவார்கள்" என Weapon of Mass Destruction இல் பாசிசத்தின் ஒரு முகத்தைச் சுட்டும் பிரதீபா, தனது ஆண் கவிதையில் தோலுரிப்பது அதன் மற்றொரு வடிவத்தையே. "வீதிகளில் தோழர்களுடன் செல்கையில் உன் இனத்தவன் ஒருவன் எங்களில் யாரேனும் ஒருத்தியை உன் இனத்து மொழியிலேயே வேசைகள் என்று எம் பால் உறுப்புக்கள் சொல்லிக் கத்துவான், அவர்களை எவ்வின அ¨டாளமுமின்றி ஆண்களை எனவே அழைத்துப் பழகினோம்". விவரிப்பவரே, விவரிப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்ற சர்ரியல் தன்மை கொண்ட பிரதீபாவின் "உனது இனம், அரசியல், ஆண், மொழி" தொகுப்பின் அதி முக்கியமான கவிதை. இன்றைய பெண்ணுக்கான தெளிவான அரசியலைப் பேசும் பின்வரும் இக்கவிதை - "நீ பொறாமையுறும் திடகாத்திரமான காப்பிலிகளுக்கோ ஆண்மையற்ற நோஞ்சான்களாய் இகழப்படும் சப்பட்டையருக்கோ தாயாகுவதில் எச்சொட்டு வருத்தமும் நான் கொள்வதில்லை. எண்ணி நாப்பது வருடங்களிலோ இன்றையோ அக்குழந்தைகள் தாய்மொழியை இழப்பதில் அப்படி ஒரு துக்கம் எழுவதாயில்லை. வஞ்சனையை, மனித விரோதத்தை, பகைமையை கொண்டு ஆடுகிற மொழி அழிந்தால் என்ன? நியாயமற்று வெறித்தனமாக ஒரு மரணத்தை நியாயப்படுத்தவோ மரணத்திற்கு பழகியோ போகாதவரை அவர்களுடைய எந்த மொழியும் எனது மொழியே. அது உன்னுடையதாய் அல்லாதது குறித்து என் கவலைகள் இல்லை" என்று வாழ்வின் மிக உன்னதமானவையென விதந்தோதப்படுகின்ற, இன, மொழிப்பற்றை விவாதத்திற்குள்ளாக்கி, முடிவில் மிகத் தெளிவானதொரு அரசியலைத் தீர்ககமானதொரு பெண் குரலில் முன் வைக்கிறது. இத்தொகுப்பின் மிகப்பெரிய பலம் - இக்கவிதைகள் எவையும் இரக்கத்தைக் கோராதவை என்பதுவே. இத்தாலியக் கலாச்சாரத்திற்குப் பெரும் சவாலாக விளங்கிய கவிஞர், நாவலாசிரியர், பன்முக ஆளுமை கொண்ட பியர் பாவ்லோ பாசோலினியின் பிரசித்தி பெற்ற வாக்கியம் - "எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்க¨யில்லை". அதனை அடியொற்றிப் பயணித்திருப்பவையே இந்தத் தொகுப்பின் கவிதைகள். தற்கொலை பற்றிய தான்யாவின் "அந்த இடம் - ஒரு நிமிடம் சாவதற்கான முனை மறு நிமிடம் இசைக்கான கருவி பிறிதொரு பொழுதில் வாழ்வதற்கான வெளி அத்துவான வெளியில் வாழ்க்கையின் நம்பிக்கையைத் தொலைப்பது இயலாமற் போகிறது ............ வாழ்க்கை அவளை வசீகரிக்கிறது" எனும் வரிகளும் " ஓர் முத்தத்தின் பேரியக்கத்தில் ஆயுதங்களின் விறைப்புக்களுக்கு அப்பாலாய் நானும் வாழ வேண்டும்" எனும் வேட்கையும், இரக்கம் கோராத, தன்னளவில் திமிறி நிற்கும் திடமான பெண் குரல். இந்த தெளிவிருக்கும் எம் பெண்களுக்கு, "புரிந்து கொள்ள வேண்டி நிற்கும் அவலமோ நேசத்தை உணராத வலியோ அற்ற அமைதி" வாய்க்கப் பெறும் ! பெறின் - அதுவே இத்தொகுப்பின் வெற்றியாகும்! தேசம் என்பதே ஒரு கற்பிக்கப்பட்ட உருவாக்கம் போன்ற கருத்தாக்கங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்ற இப் பின் நவீனத்துவக் கால கட்டத்தில், தன் தேசத்தின் மீட்சிக்காகப் பாடும் ஒரு பெண்ணின் தேசம் எது? புலம் பெயர்ந்து வாழும் பிறநாடு நமதாகுமா? கனடா போன்ற நாட்டில் பூர்வீகர்களுடைய வரலாறு மறைக்கப் படுக¨யில், அவர்களை ஒடுக்கியவரிடத்தில், 'எம்மை வாழவைத்த தேசம்' எனும் நன்றியுணர்வு சரியானதா? தேசம், தேசீயம் - இவை கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்க - ஆண் மனத்திற்கு முரணாகத்தானே, தமது பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களது மனநிலையும் இருக்க முடியும்? - போன்ற மிக முக்கியமான கேள்விகளைத் தொகுப்பாளர்கள் எழுப்பி இருக்கிறார்கள். உணர்வும், அறிவும் சரிசமமாக வெளிப்படும் கலவையான கவிதைகள் மூலமாகவும் அவர்கள் முன்வைப்பது இந்தக் கேள்விகளையே! தம் எல்லாவிதமான வேறுபாடுகளோடும், ஒவ்வொரு குரலும், தத்தமது அனுபவங்களின் நேர்மையுடனும், மொழியின் சத்தியத்துடனும் ஒலிக்கப்பட வேண்டும் - அவை கேட்கப்படவும் வேண்டுமென்கின்றன இப் பெண்களது கவிதைகள். அவை உலகின் அனைத்துப் பெண்களின் கவிதைகள்தாம்! தேடலுடன் உரத்து ஒலிக்கும் எக்குரலும் அங்கீகரிக்கப்பட்ட வேண்டியதே - குறிப்பாக அக்குரல் ஒரு பெண்ணினுடையதாய் இருக்கும் பட்சத்தில்! இந்திராவின் பின்வரும் இக்குரலே பெண்ணினத்தின் ஒருமித்த குரல் - "எனக்குள் ஒரு ஜிப்சி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறாள். அவள் - வரம்புகளை உடைத்தெறிந்து ஒரு புறாவைப் போலப் பறந்திட ஏங்கிக் கொண்டிருக்கிறாள்" மேலும், மேலும் மறைக்கப்பட்ட, அழுத்தப்பட்ட குரல்களைத் தேடிப் பயணியுங்கள் தோழிகளே! தான்யாவும், பிரதீபாவும் தொடங்கி வைத்த இப்பயணத்தில் ஒரு வாசகியாய்ப் பங்கு பெற்ற நான் இந்த தொகுப்பினை மூடி வைத்தவுடன், டெல் அவீவின் பெண் கவிஞர் தாஸ்லியா ராவிகோவிச்சின் வரிகளை நினைத்துக் கொண்டேன் - "அவர்கள் அனைவரும் சென்றபிறகு கவிதைகளுடன் நான் தனியே எஞ்சியிருக்கிறேன்" * * * * *

தொடர

பொழுதைப் பொன் செயும்' படைப்பாளி - பிரபஞ்சனின் படைப்புலகம் குறித்து ஒரு பகிரல்

பிரபஞ்சனை ஆங்கிலத்துறை - சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு மொழிபெயர்ப்பு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்தான் (2002) முதன் முதலாக நேரடியாகச் சந்தித்தேன். "உங்கள் கதைகளில் வருகின்ற பெண் கதாபாத்திரங்களுக்கெல்லாம் ஏன் 'சுமதி' என்றே பெயர் வைக்கிறீர்கள்" என்றேன். "'சுமதி' எனது ஸ்நேகிதியின் பெயர். ஆமாம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார். "என் பெயரும் சுமதி"தான் என்றவுடன், கண்கள் சுருங்கச் சிரித்தார். அந்த 'ஸ்நேகிதி' என்ற சொல் அத்தனை மிருதுவாக அதன் முழு அர்த்தமுடன் ஒளிர்வதாக அன்றெனக்குத் தோன்றியது. அவருடைய மரி என்னும் ஆட்டுக்குட்டி சிறுகதையை அக் கருத்தரங்கத்திற்காக நானும், மீனாஷி ஹரிஹரன் எனும் பேராசிரியையும் இணைந்து மொழிபெயர்த்துள்ளோம் என்றேன். 'அப்படியா' என்று அந்தக் கதைக்குள் அவரும் அற்புதமரி எனும் பதின்பருவ ஆட்டுக்குட்டியாய் நானும் பயணிக்கத் துவங்கினோம். அவரது படைப்புக்கள் மீதான எனது வியப்பும், லயிப்பும் அந்த நேரடிச் சந்திப்பிற்குப் பின்பு மேலும் கூடியது. அவரது கனவு மெய்ப்பட வேண்டும் புதினத்தின் கதாநாயகியின் பெயரும் சுமதிதான். கணேசன் எனும் கொடுமைக்கார, கணவனால் மணவாழ்க்கை கசந்த சுமதியிடம் தோழி கல்பனா "நீ ஏன் அவனை அவ்வளவு சுலபமாக உன்னிடம் அனுமதித்தாய்" என்பாள். சுமதி அதற்கு "சில பெண்கள் செய்வது போல், நான் அவரை ஏங்க வைக்கவில்லை, பிகு பண்ணிக் கொள்ளவில்லை. இழக்கக்கூடாததை நான் இழக்கிறேன் என்பது போலப் பாவனை பண்ணி அவரைக் குற்ற மனப்பான்மைக்கு ஆட்படுத்தவில்லை... நானும் அவரை விரும்புகிறபோது, நான் இந்தச் சங்கமத்தை எந்தக் காரணம் சொல்லி மறுப்பது? ஏன் மறுக்க வேண்டும்" எனச் சொல்கின்ற பதில் ஒட்டு மொத்த பெண்களுக்கான தெளிவான, தீர்க்கமான குரல். பெண்கள், அவர்களது தனிப்பட்ட உணர்வுகள், சமூகத்தில் மறுக்கப்பட்ட அவர்களது இடம், வெளி குறித்துப் பிரபஞ்சன் அளவிற்கு எழுதிய படைப்பாளிகள் வெகு சொற்பம். வாழ்வின் ஆதாரம் அன்பு என்பதில் தீராத பற்றுள்ள படைப்பாளி. இலக்கியம் வாழ்வின் மீதான காதலை உறுதிப்படுத்தி, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனும் தன் படைப்புகளின் வாயிலாக என்ன ஆகர்சித்தவர். சரி, தவறு எனும் தட்டையான மணற்பரப்பில் இல்லாமல், பலவீனங்களுடான சதுப்புநிலத்தில் வேர்கொள்பவை பிரபஞ்சனது படைப்புக்கள். தீர்ப்புக்கள் அற்ற, தவறும், உணர்தலும், அல்லது அதுவுமற்ற உரிமையான பாத்யதை மனிதர்களுக்கே என்பதால்தான் தனது கட்டுரைத் தொகுப்பிற்கே மனிதரை முன்னிறுத்தி மனிதர், தேவர், தரகர் எனத் தலைப்பிட்டுள்ளார். மனிதர்கள் தாம் அவரது கச்சாப்பொருள். "மனிதனுக்கு மட்டுமே உன்னதங்கள் சொந்தம். என் கதைகள் இந்த உன்னதங்களைச் சொல்வதற்காகவே பிறந்தவை" என்று 1986 இல் அன்னம் வெளியீடான பிரபஞ்சன் சிறுகதைகளின் முன்னுரையில் அவர் எழுதியதை வாசித்ததிலிருந்து பிரபஞ்சனை நான் மானசீகமாகப் பற்றிக் கொண்டேன். குடும்பத்தில் பெண்குழந்தை பிறக்காத, பெண்சாபமிருப்பதாக நம்புகின்ற ஒரு பெண்ணிற்கும் லஷ்மி எனும் மாட்டிற்குமான உறவைச் சொன்ன மனுஷி சிறுகதையின் வாயிலாகவே பிரபஞ்சனின் உலகத்திற்குள் நுழைந்தேன். அவரது யாரும் படிக்காத கடிதத்தில் "நீங்கள் மரம் என்றதும் அதை வெட்டி, அதனால் ஆகப்போகும் மேஜை, நாற்காலி, வீட்டுக்கு விறகு - என்று தொடர்ந்து செயல்பட்டீர்கள். நான் மரம் என்றதும் அதன் அழகு, குளுமை, பச்சை, உயிர் என்று யோசனையிலேயே நின்றுவிட்டேன்" எனும் வரிகளில் வருகின்ற அந்த 'நான்' தான் பிரபஞ்சன். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிருக்குமுள்ளிருக்கின்ற, அதன் ஆன்மாவின் வண்ணத்தை வனைந்தெடுக்க அவரது பேனாவால் முடியும். 'ஐம்புலன்களையும் கூர்மைப் படுத்துவதே இலக்கியத்தின் பணி' எனும் பிரபஞ்சனது அப்பாவின் வேஷ்டியின் பச்சைக் கற்பூர வாசனையும், பூவைப்போலவே நல்ல வாசமடிக்கின்ற கள்ளின் நெடியும், இதோ இதனை எழுதுகின்ற இந்தக் கணம் எனது நாசியிலும். மகாரசிகரான பிரபஞ்சன், ஐம்புலன்களாலும் வாழ்வின் சுக, துக்கத்தைத் துய்ப்பவர். அப்பாவின் சிவப்புப்பட்டு வேஷ்டியின் நேர்த்தியைப் பற்றி, "காவேரிக்கரையில், சோற்றுக்குப் பஞ்சம் இல்லாத, வெற்றிலை பாக்குப் போட்டுச் சிவந்த, உடம்பில் இளஞ்சூடு பரவிய திருப்தியில் ஒரு மனிதன் தன் மனைவியோடு சேர்ந்து நெய்த வேஷ்டியாக இது இருக்க வேண்டும்" என்பார். அதைப்போல வாழ்வை ருசித்தும், கொண்டாடியும், கேள்விகேட்டும், விலகி நின்றும் பயன் துய்ப்பவர் தான் பிரபஞ்சனும். அந்த வேஷ்டியை பல வருடங்கள் கழித்து ஆசைதீரத் தான் கட்டிக் கொண்டு பூஜையில் அமருகின்றான் மகன். முனகலோடு வேஷ்டி கிழிந்து விடுகிறது, எழுதுகிறார் பிரபஞ்சன், "இருட்டில் குழந்தையின் கையை மிதித்து விட்டாற் போலிருந்தது". என்னால் மறக்கமுடியாத உவமை அது. இத் தொகுப்பிற்குப் பின் இன்றைக்கு ஏறக்குறைய அவரது அத்தனை படைப்புக்களையும் படித்த பின்பாகவும், ஏன் அதனை என் மனதின் அடி ஆழத்தில் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்? திப்பிலியார் எனும் அவரது கதை மாந்தன் அதில், "தென்னங்கீற்றுக்குத் தண்ணி பாய்ச்சரது இளநீ குடிக்கவா? அப்படி நினைச்சுக்கிட்டுத் தண்ணி ஊத்தரதே தப்பு. குருத்த வாட விடக்கூடாது. "குருத்து வாடினா, வாடற இடத்துல மனுசங்க இல்லைன்னு அர்த்தம்" என்று சொன்ன அந்த சொற்களுக்காகத்தான். சமூகத்தைப் போஷிப்பதோ, திருத்துவதோ எழுத்தாளனின் கடமையில்லை. ஆனால் சக உயிரொன்று நலிகையில் மானுட அறமெனும் சிறு இறகால் அதை வருடி நம்மை உயிர்ப்பிப்பவனே படைப்பாளி. அவ்வித்தையை மனிதர்களைக் கற்பதன் மூலம் கைவரப்பெற்று, கதைகளின் மூலம் அதனைக் கடத்துகின்ற ரசவாதி அவர். கதைகளின் காதலனான அவர் அடிக்கடி சொல்கின்ற கதை இது: ஆன்டன் செகாவிடம் ஒருவர், 'எதுவும் கதை ஆகுமா?' என்று கேட்டாராம். சேகாவ் சொன்னார்: "இதோ என் மேசை மேல் இருக்கும் ஆஷ்டிரேயை வைத்து கூட என்னால் கதை எழுத முடியும்" என்றாராம். 'கதைக்கு அது போதுமா?' என்றதிற்கு, செகாவின் பதில் - 'மனிதர்கள் லட்சம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். பலகோடி கோடி மக்களின் வாழ்க்கை என்னை எழுது என்கிறது. ஆஷ்டிரேயை எழுதுவது, ஆஷ்டிரேயை எழுதுவது இல்லை. மாறாக மனித குலத்தை எழுதுவது...' அனுபவம், நேசம், மானுடத்தின் மீதான காதல், கனிந்த ஞானம் - இவற்றைப் பிசைந்து தகிக்குமொரு சிறு சுடரே பிரபஞ்சன். எழுதித் தீராத மனிதர்களின் பக்கங்களை அச் சுடரின் அருட்கசிவில் எட்டிப்பார்த்து மெய்மறக்குமொரு ரசிகை நான். அந்திமழையின் எழுத்தும் ஆளுமையும் சிறப்பிதழில் (ஜனவரி2017) வெளியான கட்டுரை

தொடர

ஒரு பிரபஞ்சக் காதலியின் கூழாங்கற்களும், வெயிற் பனியும்!

‘ஜி’ என நான் அன்பான உரிமையுடன் விளிக்கின்ற இராஜி பார்த்தசாரதியின் ‘மார்கழித் திங்கள்’ தொகுப்பை இன்னுமொரு மார்கழிப் பனி சூழ் அதிகாலையில் படிக்கையில், ஆழ் குளிரின் அண்மித்த தழுவலைப் போலவே பல கவிதைகள் இதமாக என்னருகில் ஒட்டிக் கொண்டன. ராஜி ஒரு நல்ல ரசிகை, சூழலியல் ஆர்வலர், சமூகப் பொறுப்புள்ள பேராசிரியை என்றெல்லாம் அறிந்த எனக்கு அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட என்றறிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. ராஜிக்கும் எனக்குமான நட்பு சோழன், பிசிராந்தையாரின் அபூர்வமான நட்பைப் போல ஆழங்கால்பட்டது. சம்பிரதாயமான சந்திப்புக்கள், உரையாடல்கள், பகிரல்கள் இவற்றைத் தாண்டியதொரு உறவுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டது. அடிக்கடி பேசிக் கொள்வதில்லை - தொடர்ந்து சந்திப்பதில்லை - ஆனாலும் எனது அனைத்து முன்னேற்றங்களையும் மகிழ்வோடு கவனித்தபடி உடனிருப்பார். என் படைப்புக்கள் எங்கு வெளிவந்தாலும் உடனுக்குடன் பகிர்ந்து என் மகிழ்வை இரட்டிப்பாக்குவார். அவரது ‘அம்மாச்சியின் வீட்டைப்’ போல எப்போதும் எனக்கான அன்பின் கதகதப்புடன் காத்திருப்பார். அவரது இந்தத் தொகுப்பு முழுவதும் பூக்களும், மரங்களும், பசுமையும், வண்ணங்களும் தான் - அவரது எண்ணங்களைப் போலவே. “சற்றே வெயில் சிந்தி / அணில்களின் விளையாட்டில் / அசையும் வேப்ப மர இலைகள்”, “மிளிரும் பூசணிப் பூக்கள்”, “தென்னை மரப் பூங்காற்று / மாடு நிறை தொழுவங்கள்”, “விளக்கேற்றும் மாடம்”, “நெருஞ்சிச் செடியின் மஞ்சள் மலர்”, “மஞ்சள் இயல்வாகை”, “பொன் சிதப்தம்”, “வெள்ளிப் பேச்சுக்கள்” - என மணக்க மணக்க வாழ்வை ரசித்து ருசிக்கும் தன் அகத்தை, புறம் குறித்துப் பெருங்கவலை கொண்டு ஆதங்கப்படுகின்ற அதன் வலியை - பாசாங்கற்ற இயல்பான உரைநடை மொழியில் பதிவு செய்திருக்கிறார். எனக்குப் பிடித்த சில கவிச் சிதறல்களும் உண்டு - ஒரு சோறு பதமெனக் கீழ் வருவது: “மழை பெய்வது கூட நல்லார் ஒருவருக்காய்தான். வெயிலோ வெள்ளந்தியானது” ............. “எங்கே யார் கதை சொல்லக் கேட்டாலும் காதில் ஒலிக்கும் அத்தையின் குரல்” ராஜிக்கு விவரணைகளோடு கூடிய ஒரு நடை வசப்பட்டிருக்கிறது - அதில் விட்டுச் சென்ற கூழாங்கற்களைத் தேடித் திரும்புகின்ற சிறுமியெனச் சிலக் கவித்துவக் கணங்களை மீட்டெடுக்கிறார். இந்த பிரபஞ்சக் காதலியின் மௌன மொழியில் நட்சத்திரங்கள் கண்ணடித்துக் கதை கேட்பதை அவரது சஹிருதையாகச் சற்றே அவர் தோள் சாய்ந்து ரசிக்கின்றேன் நான். ராஜி ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராக உருக்கொள்வதற்கான கட்டியங்களென மூன்று மொழியாக்கங்கள் முத்துக்களாக இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பாரசீகக் கவிஞர் கலீல் ஜிப்ரானின் கவிதைகளை மிக அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அக் கவிதைகளுக்கான அவரது பின்புலக் குறிப்புக்களைப் படிக்கையில் ஆல்ஃபிரட் டென்னிசனை, உபநிடதக் கோட்பாடுகளை, மணிவாசகரின் சிவபுராணத்தை அவர் ஆழக் கற்றிருக்கிறார் என அறிந்து வியந்து போனேன். கணினித் துறை சார்ந்த காரிகை மட்டுமல்ல இவர் - இலக்கியத் துறையிலும் விரைவில் விஞ்சக் கூடியவர் என்பதற்கான சான்றுகள் அவை. மென்மையும், கூர்ந்த விழிப்புணர்வும், தேர்ந்த ரசனையும், அறம் சார் வாழ்வும், சமூகம் சார் நேர்மையான பொறுப்புணர்வும் நிறைந்த இந்த பேராசிரியையின் சஹிருதையான தோழி நான் என்பதில் பெருமை எனக்கு! அவரது கவித்துவ மனதின் பகிரல்களான இத் தொகுப்பின் வரிகளூடாக அவர் விரல் பிடித்துச் செல்கையில் ‘சுமதி’ என விளித்து “நாட்களாகி விட்டனவே... விஷயமொன்றுமில்லை... உங்கள் குரல் கேட்க மட்டுமே அழைத்தேன்” எனத் தொலைபேசும் அந்தக் குரலை, அதன் தூய்மையான நட்பை, வாஞ்சையை உணர்ந்தபடி பயணித்தேன். வாழ்த்துகள் என் அன்பு ராஜி... வெயிற்சுவை போல நிலாச் சோறு போல மார்கழிப் பனி போல வேப்ப மரக் கிளிகள் போல நமக்குப் பிடித்த இயல் வாகையின் மஞ்சள் நிறப் பூக்களின் மணம் நுகர்ந்தபடி நாமிருவரும், இப் பிரபஞ்சத்தை ரசித்து, ருசித்தபடி கைகோர்த்துப் பயணிப்போம் - பகிர்தலின் சுகமோடு! * * * * *

தொடர

கண்விழிக்கக் காதலுற்றேன் இப் 'பூங்குவளைப் போதில்' - ராஜி பார்த்தசாரயின் நூலிற்கு எழுதிய முன்னுரை

'ராஜி' என நான் அன்போடு கூப்பிடும் ராஜி பார்த்தசாரதியின் புற உலகம் கணினிகளானது என்றாலும், அவரது அக உலகம் பாரிஜாதம், தொட்டாச்சிணுங்கி, செம்மயிற்கொன்றை எனும் பூக்களோடும், மரங்களோடும், தாவரங்களோடுமானது. கூடவே தோழமையுடனானதும். வாழ்நிலைகள் எதுவாயினும் ஒரு பூவை உற்று நோக்கி, மெய்மறந்து முகரும் அந்த ஒரு அற்புத நொடி நம்மில் எத்தனை பேருக்கு இந்த அவசர உலகில் கிட்டியுள்ளது? ராஜிக்கு அது வாய்த்திருக்கிறது. பால்யத்தின் வாசனை அவருக்கு மலர்களின் மணமாகவும், மரங்களின் தொடுதலாகவும், தாவரங்களின் பச்சயமாகவும் மட்டுமே பதிந்திருக்கிறது. அதனை ஒரு தரவுத் தளமாகப் பகிருகின்ற ஆய்வுப் பின்புலம் அவரது கல்விப் பணியின் 'நுண்மான் நுழை புலத்தால்' அவருக்கு ஏற்கனவே இருப்பது கூடுதல் சிறப்பு. நூலின் தனிச்சிறப்பு - பழந்தமிழரது செவ்விலக்கியப் பரப்பின் பல்வேறு மலர்களைக், குறிப்பாக ஐந்துவகைத் திணை நிலங்களை, மலர்களை, தித்திக்கும் அவற்றின் தமிழ்ப்பெயர்களை இளைய தலைமுறைக்கு, மிகவும் சுவைபட, அவற்றின் தாவரவியல் பெயர்களோடு அறிமுகப் படுத்தியிருப்பது. பெப்சியும், ஆர்கிட் மலர்களும், காகிதத்தில் ஜிகினா பதித்த பூக்களுமான இன்றைய இளைஞர்களின் தக்கை உலகத்தினை, இவரது 'உவப்பூட்டும் உழிஞைப்பூக்களும்', அதன் சங்க இலக்கியப் பெயரான 'பூளைப் பூக்களும்', காயலின் புன்னைப் பூக்களும், கபிலரது குறிஞ்சிப் பாட்டின் தும்பைப் பூக்களும், நிச்சயமாக உயிரூட்டி மலரச் செய்யும். இந்நூலிற்கான மூவரது ஆய்வும் என்னைப் பிரமிக்கச் செய்கிறது. குறிப்பாக, ஒரு தாவரம் அல்லது மலர் பற்றிய விவரிப்பில், அவற்றின் தற்போதைய நிலம் அல்லது ஊர், அவை தலவிருட்சங்களெனில், அந்தத் தலம் பற்றிய கூடுதல் செய்திகள் - இவற்றைத் திரட்டுவதற்கான உழைப்பு. திணைப்பூக்கள், காப்பியப் பூக்கள, இலக்கணப் பூக்கள், குறிஞ்சிப் பூக்கள் என விரியும் இப்புத்தகம் மூன்று பேராசிரியைகளின் இயற்கை ஈர்ப்பையும், தமிழ் ஆர்வத்தையும் புலப்படுத்துகிறது. சுவாரஸ்யமானதொரு நடையில், ஆங்காங்கே தாகூரின் "தனிமலர் முட்களின் பன்மைக்கு ஏக்கம் கொள்தல் என்ன தேவை?" எனவும், "..வசந்தத்தின் தென்றல் வந்தபின்னோ பல்நூறு பூக்கள் அதே மரத்தில்" எனும் ஜப்பானியக் கவிதையுடனும் நூலின் நோக்கத்தை நமக்கு அழகாக எடுத்துச் சொல்கிறது. அவ்வையின் "கண்டவை கையளவு மலர்கள் - இருப்பவையோ பெருங்கானகம் அளவு" எனும் கூற்று வாழ்க்கை பற்றியதுதான். வாழ்வின் தேடலுக்கான சிறு முயற்சியில் பூவின் காம்புகளைத் தட்டுத் தடுமாறிப் பற்றியேறுகின்ற எறும்புகள் தானே நாமெல்லோரும்? ப்ரிய ராஜி, திருமதி.நாகநந்தினி, திருமதி.த.ஹேமலதா ஆகிய மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - என்னை மீண்டும் காம்பு பற்றித் தட்டுத் தடுமாறி, கிறங்கி ஏறுகின்ற எறும்பாக்கியமைக்கு! ஒரு சொட்டுத் தேனை நான் சுவைக்க நேர்கையில் அதில் இந்த ஆறு கரங்களின் அபார உழைப்புத் தான் ருசிக்கின்றது. உலகெங்கிலும் உள்ள பூக்களைத் தேடித் தனது அடுத்த பயணத்தைத் தொடங்குவதாக ராஜி நிறைவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தத் தேடல் தான் அவரை இப்போதும் புன்சிரிப்புடன் வழிநடத்துகிறது. அந்தப் பயணத்திலும் அவருக்கு இனிதான தென்றலின் வெளியும், இன்னுமொரு மழைச்சாரலும், பிறிதொரு மரக்கிளை மழைநீரும், அள்ள அள்ளக் குறையாத ஆற்றுச் சுமையாய் வாய்க்கட்டும். உங்களது அடுத்த மாயப் பூங்காவிற்குள்ளும் என்னை அழைத்துச் செல்வீர்கள்தானே ராஜி? உங்களிடமிருந்து நான் பெற்ற பெரும் பொக்கிஷம் - அடுத்தமுறை எனது கிராமத்திற்குப் பயணிக்கையில், என் நிலத்தின் ஆதி மரங்களை, அவற்றின் நற்பூக்களை, என் மகளுக்குத் தொல் தமிழில் என்னால் சொல்ல முடியுமென்பதே. நன்றி ராஜி! இராஜி, உங்களுடன் மிக அரிதாக உரையாடினாலும், உள்ளூற ஒரு தோழமைச் சுடர் நம்மைக் கதகதப்பாக்குவதை நாமிருவருமே உணர்வோம். அத்தோழமையின் பரிபூரண நெகிழ்வுடன் உச்சி முகர்ந்து உங்களுக்கு என் அன்பு முத்தம் ஒன்றும், வாழ்த்துக்கள் பலவும்! மன்னிக்கவியலாத என் மெத்தனமான தாமதத்திற்கு ஒரு தும்பைப் பூ மன்னிப்பை உங்கள் பூ மனசு தருமென்கின்ற நம்பிக்கையோடு. * * * * *

தொடர

சத்யாவின் கவிதைகள் - பனிமூட்டம் கலைக்குமொரு ‘அக்கக்கூ’

சத்யா அசோகன் ‘கடம்பர வாழ்க்கை’ கிராமத்திலிருந்து தலைநகர் டில்லியில் குடியேறி இருபத்தி ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். கவிதைகளில் ஆர்வம் கொண்டவராகவும், புத்தக வாசிப்பில் ஆர்வமிக்கவராகவும் இருக்கின்ற இவருக்கு ஆங்கிலமொழிப் புலமையும் உண்டு. அவரது தெய்வங்கள் எனும் கவிதைத் தொகுப்பு - ‘தெய்வங்கள், பெண்ணியக் கவிதைகள், உறவுகள், நெடுங்கவிதைகள், குறுக்கவிதைகள் என வரையறுக்கப்பட்டு மொத்தம் 99 கவிதைகள் அடங்கியதாக வெளிவருகின்றது. தெய்வங்கள் எனும் தலைப்பிற்குள் வருகின்ற கவிதைகள் அனைத்துமே இதுகாறும் தெய்வங்கள் குறித்துக் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பங்களைக் கலைத்துப் போடுகின்றன. “‘தப்பாட்டம் ஆடியவன் நீ ஆட்டத்திலிருந்து அரங்கத்திலிருந்து உன்னையல்லவா விலக்கி இருக்க வேண்டும்” என நடராஜரைக் குற்றம் சுமத்துகிறது. “கண்ணனைக் கும்பிடாதே கள்வன் அவன் குளிக்கும் பெண்கள் துணியை ஒளித்து வைத்து மகிழ்ந்திடுவான்” என்கிறது. “தாரத்தை வதைத்திட்ட நாரணனைக் கும்பிடாதே” எனவும், “பெண் அருமை தெரியாத பேயன், பித்தன்” எனவும் சிவனைச் சாடுகிறது. ஆனால் முடிவாக, “விரித்த சடையும், வெண்ணீற்று வைரமும் மானும், மழுவும், மயக்கும் புன்னகையும் பஞ்சாட்ச்சர படியும், பசும்பொன் கூரையும் எதிரே நிற்கையில் உள்ளம் கொள்ளை போகுதே உன் கள்ளம் மறந்து போகுதே அம்பல வாணா! அருட்பிரகாசா! உன் திருவடி சரணம்! சரணம்!” எனச் சரணாகதித் தத்துவத்தில் நிலைக்கிறது. எனக்கு மேற்சுட்டிய கவிதைகளை விடச் சமகாலத்திய நிலையைக் கண்ணனைக் கொண்டு சொல்கின்ற, “புல்வெளிகளில் மேய்ந்த மாடுகள் காகிதங்களை உண்டு உயிர் வாழ்கின்றன வேணுகானமிசைத்த கண்ணன் ஆக்சிஜன் மாஸ்க்குடன் அலைகின்றான். கரையான்கள் அரித்துச் சாப்பிட்டு விட்டதால் சிதைந்து போனது ஊதப்படாத புல்லாங்குழல்” எனும் கவிதை தான் பிடிக்கின்றது. பெண்களது கனவுகள் தொலைந்து போன யதார்த்தம், அவர்தம் குடும்பம், சமூகச் சுமை இவை பற்றியும் பேசுகின்றன சில கவிதைகள். ‘உறவுகள்’ எனும் தலைப்பில் அம்மா, அப்பா பற்றிய கவிதைகளில் நான் மிக ரசித்தவை கீழ்ச்சுட்டியவை: “கைப்பிடித்து நீ சென்றால் கங்கையிலும் குதிக்கலாம் அருகிலே நீ இருந்தால் அனல் மேலும் நடக்கலாம் ... என் கடவுள் என் தந்தை உன் கடவுள் உன் தந்தை” டில்லியில் வாழ்ந்தாலும் தன் வேரான கிராமீய வாழ்வோடு சத்யா இன்னமும் பின்னிப் பிணைந்திருக்கிறார் என்பதற்குச் சான்றாக ஏராளமான கவிதைகள் இத் தொகுப்பில் உள்ளன. “தில்லி வானில் நட்சத்திரங்கள் பார்த்ததாக நினைவேயில்லை. யாரிவள் எனப் பார்க்கின்ற ஒற்றை கருப்பு நாய்க்குத் தெரியுமா - என் மூலாதாரம் இது தானென்று?” எனக் கேட்கின்ற சத்யாவை, அக்கா குருவியின் ‘அக்கோவ்’ கிறீச்சிடலில் தன் உடன்பிறப்பைத் தேடுகின்ற சத்யாவை, ‘சிலுக்கு சாடின் பாவாடை கட்டித் தீபாவளியைக் கொண்டாடிய’ நினைவைச் சுமந்து தில்லியில் ஏங்கும் சத்யாவை, எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. சுற்றுப்புறச் சூழல் குறித்துக் கவனம் கொள்கின்ற கவிதைகளில் என்னைக் கவர்ந்தது, “ரயில் தண்டவாளத்தில்... ஆழிப் பேருயிர் அதோ சிதறிக் கிடக்கிறது” எனும் கவிதையே. தனக்குள் தேக்கிய பகிரப்படாத சொற்களின் வலிமை குறித்துப் பல கவிதைகள் பேசுகின்றன. தனிமை, இரவு, மௌனம், மரணம், கடவுள், பயணங்கள், இயற்கை எனப் பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் சத்யா. ஞானக்கூத்தன், நா.முத்துக்குமாரை நினைவு கூர்கின்ற கவிதைகள் இவரது ரசிக மனதைப் புலப்படுத்துகின்றன. தில்லி வாழ்க்கை குறித்து, “அருகிருப்பவர் யார் எனத் தெரியாமல் அலைக்கழிக்கும் அதிகாலை பனிமூட்டம் அடுத்த வீட்டிலிருப்பவர் யார் எனத் தெரியாமல் நகரும் என் வாழ்க்கை ஓட(ட்ட)ம்” என்பது போன்ற ஏக்கக் குறுங்கவிதைகளும் உண்டு. கவிதை எழுதுவதற்குக் கிராமத்துக் காற்றைப் பிறப்பிலிருந்து சுவாசித்திருக்க வேண்டும் என்கிற சத்யாவின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. என்றாலும் ‘நகரத்துக் கவிஞர்கள் மன்னிக்க’ என்றெழுதிவிடுவதால் தன் மண் மீது கொண்ட தீரா நேசமெனவே அதனை நான் எடுத்துக் கொள்கிறேன். அவரது இந்த பிறந்த மண் பாசமும், நேசமும், தில்லித் தெருக்களிலே சுற்றும்போது கூடத் தன் தொட்டில் சீலையின் கதகதப்பைப் போத்திக் கொள்ளும் தொப்பூள்கொடி உறவும் கத்யாவை நான் நேசிக்கப் போதுமானவை. கவிதைகளின் உள்ளடக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கவிதைக்கான மொழியும் வசப்படுகின்ற தேடல் மனதும் சத்யாவிற்கு இருக்கின்றது. அவரது இம்முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து பயணப்படுங்கள் சத்யா! தில்லி இரவுகளின் கனாக்களில் உங்களுக்கு எப்போதும் ‘கடம்பர வாழ்க்கை’ தித்திக்கட்டும்... * * * * *

தொடர

அம்மாவின் கண்டாங்கிச் சேலையும், பூவரசமரக் குளிர்ச்சியும் - செல்வகுமாரன் கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

"கவிதை என்பது அறிதல், விமோசனம், சக்திநிலை, தன்னிலை மறுத்தல்விட்டு விடுதலையாகி நிற்பதற்கான ஒரு வழி" எனும் அக்டேவியா பயஸின் (Octavia Pias) வாசகத்தை நினைத்துக் கொண்டே முனைவர். செல்வகுமாரனின் கவிதைத் தொகுப்பிற்குள் நுழைந்தேன். எனது நேசத்திற்குரிய கல்யாண்ஜியின் "கவிதை-சாம்பல் பூத்த தணல் மீது தன் மூச்சை ஊதி நெருப்பை உயிர்ப்பிப்பது. கண்காணாத காட்டருவிச் சத்தங்களின் இழைகளைப் பற்றியபடி வனங்களில் தன் திசையை நிர்மாணிப்பது" எனும் வரிகளுடன் உள்ளே பயணித்தேன். விளக்கங்கள் எனும் கைப்பிடிக்குள் அடங்காத பேரலை கவிதை, கைநழுவும் குறுமணல் அந்தப்பிசாசு எனும் புரிதலோடு வெளியே வந்தேன். தொகுப்பிலிருந்து வந்தேனேயொழிய - கவிதைகளிலிருந்து மீளவில்லை. சிதம்பரத்தில் கிளை பரப்பி இருக்கின்ற செல்வகுமாரனது வேர் குமரி மாவட்டத்தில் என அவரது ஒவ்வொரு கவிதையும் தன் நாடித் துடிப்பால் சொல்கிறது. அந்த வழக்கு மொழியின் அழகும், வெள்ளந்தித்தனமும் மண்பானைத் தண்ணீரின் லோட்டா குளிர்ச்சியென என்னுள் பரவியது. உன்னை நல்லா சமிட்டியாச்சு என்று தனது நிழலில் துப்புகின்ற மகனை அப்பா உணருகின்ற கணத்தைப் பதிவு செய்கிறது ஒரு கவிதை. நகரத்தின் நான்காவது மாடி குடியிருப்பில் மீன் கறி தின்ற துர்நாற்றம் நீங்க, தெளிக்கப்பட்ட சந்தன sprayயின் செயற்கை மணம் பற்றி இன்னொன்று. ஒரு தீ விபத்திற்கு உடனடி நிவாரணமாய் திறந்தவெளித் தொட்டி நீர் ஊற்றவோ, வாளி மண் எடுத்து வீசவோ வாய்ப்பளிக்காத நகரம் கொடுங்காட்டின் இருளாகிறது இன்னொரு கவிதையில். மங்களா (ஹால்), விடிலி, தட்டு, பனங்கம்பு, கிராமச்சி வேர், வறுத்த புளியமுத்து, அம்மன்கொடை, உச்சக் கொடை, குச்சி சவுக்கு மிட்டாய், வரையாந்தை (வராண்டா), வெள்ளரிப் பிஞ்சு, நொண்டங்காய், சொக்காரன்மார்கள், அரங்கு வீடு, சாமியாடி, செண்டைமேளம் - எனக் கவிதைகளில் தன் மண்ணின், நிலத்தின், பேச்சையும், மூச்சையும் பதிவு செய்திருக்கின்ற கவிஞர், எனது தேசமாய் அறியப்பட்ட இன்னொரு நிலத்தில் நான். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்குள்ளும் பால்யம் முதலே கற்பிதம் செய்யப்பட்டிருந்தது. அந்த நிலம் எனக்குள் அந்நியப்பட்டே கிடக்கின்றது - கால்பதிக்க முடியாத பூச்சி முள்ளின் கூர்மையுடன் என்பது நியாயமான பரிதவிப்பு தானே. ஆஸ்திரேலியா ஆதிக்குடிப் பெண் லிஸ் மெக்நிவன் (Liz Mcniven) இனின் கிழ்க்கண்ட கவிதையொன்று, நினைவிற்கு வருகிறது. பல ஆண்டுகளாக நாம் பாடிக் கொண்டிருக்கும் பாட்டும் பழம் நினைவுகளும் கதவைத் தட்டுகின்றன. அந்தப்பாட்டு நம்மை செயல்படுத்துகிறது. அது நமக்கு வலிமையூட்டுகிறது. அது நமக்குரிய நிலத்தின் பண்பாட்டைப் புதுப்பிக்கிறது. எனும் அந்தக் குரல், அதன் துயரம், ஒரு அழுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் வரலாறு என்றாலும், தன் சிறு கிராமம்விட்டுப் பிழைத்தலுக்காகப் பெருநகரம் செல்கின்ற எவரும் உணர்ந்து, பொருந்தக் கூடிய தன்மை வாய்ந்தது. செல்வகுமாரனின் கவிதைக் குரலும் அது போன்றதே. அவரது பூவரசம் பூ எனும் கீழ்வரும் கவிதையே தொகுப்பின் அச்சும், கவிஞனின் ஆன்மாவும்; தோப்பங்காட்டு மணலில் வீடு கட்டிச் சோறு வாங்கி செம்மண்ணில் குழம்பு வைத்து கருப்பட்டி செய்து புட்டவித்து பூவரச இலையில் பரிமாறி தின்று தீர்த்த பொழுதுகள், குதும்பலில் தேர் செய்து இழுத்து பூவரச இலையில் ஊத்து ஊதி பனங்கூந்தலில் வண்டி செய்து தெருவெங்கும் சுற்றிய நாட்கள் - பூவரசம் பூவாய் மாறிப்போனது மஞ்சளில் இருந்து சிகப்பாக ‘மரணம் தன்னைத் தீர்க்க முடியாத ஒரு சிகரெட்டைப் புகைக்கிறது’ என்பார்கள். இத்தொகுப்பிலும் மரணம் ஒரு கருநிழலாய் நம்முடன் வருகிறது பல கவிதைகளில். ...... பாம்பாய் நெளிகிறது மேம்பாலம் நெடுகிலும் தூவப்பட்டுக் கிடக்கின்றன மலர்கள் தொற்றிக் கொண்டது மரணம் என்றும், அனந்தர சொக்காரன்மார்கள் அம்மா இறந்தபோது வந்திருந்தனர் மறுபடியும் வருவார்கள் அப்பா இறக்கும்போது நான் முன்பு இறந்துபோனாலும் வரலாம் என்றும், கொலையாளிகள் கொலைக் கருவிகள் கொலைக் கூடங்கள் துரத்திக் கொண்டே வருகின்றன கொலைக்கான காரணங்கள் ஏதுமின்றி எங்கும் உலராத ஈர இரத்தத்தின் நெடி என்றும் - மரணத்தின் அஞ்சலி உடை அணிந்த கறுப்பு நிறக் கவிதைகள் பல! இவரது நிலப்பரப்பின் கடலும், பனையும், தெழுவும், புன்னை மரக்கிளையும், கருப்பட்டி காப்பியும், புளிய மூட்டம்மன் கோவில் ரிக்காடுமாக - நம் கண்முன் வார்த்தைகளுக்குப் பதில் கவிதைகளில் காட்சிகளே (எளைரயடள) அதிகம். தனது தொலைந்து போன பால்யத்தை, இல்லாமல் போன பரணை, காணாமல்போன கதம்பலை, கடைராட்டில் கயிறு திரிக்கும் ஆசானை, புழக்கமற்றுப் போன, மசிய அரைக்கின்ற அம்மியைக், குழுவியை, இறந்துபோன தங்கம்மா கிழவியைத், தொடராத அம்மாவின் பண்டிகை நாட்களை - காட்சிப் படுத்தியிருக்கும் ஒவ்வொரு கவிதையும் ஒரு கண்புலக் காட்சிதான். கண் வழி உள் புகும் வலி மட்டுமே அவரது கவிதையின் அடிநாதமும், வெற்றியும்! கையில் முடைகின்ற பெட்டிகளில் இத்தனை வகையுண்டா என என்னை மலைக்க வைத்த கவிதை பெட்டி எனும் தலைப்புடையது. ‘கொட்டப்பெட்டி, நாருப்பெட்டி, பிளாப்பெட்டி, மடக்குப் பெட்டி...’ என குமரி மண்ணின் கைநேர்த்தியை, அன்றாட வாழ்வின் தேவைக்கேற்றவாறு விதவிதமாக முடையப்பட்ட பெட்டிகளை, அவற்றைக் காவுவாங்கிவிட்ட இந்த நாகரீகத்தின் அசுர வளர்ச்சியை, அந்தக் கவிதை (விவரணையின் தொனியிருந்தாலும்) மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. தெறிப்பாய்ப் பின்வரும் சில உவமைகளும் இவரின் கவித்திறனுக்குச் சாட்சியாக: நட்பு உயரமாய் வளரும் பொழுதே பகைமையும் படரத் துவங்குகின்றது ஊத்தைவாயின் துர்நாற்றமாய் நிறை மரக்காலில் மறுகை அள்ளிவைத்து நிலைநிறுத்தம் அப்பாவின் கைகளுக்குள் கட்டுப்படாது உருவிப் பாய்ந்திடும் நெல்மணியாய் வழிந்தோடியது நாட்கள் அடை மழை நாளின் புளியம்பழமாய் கரைந்து போகின்றேன் ஒரு நீண்ட படிமக் கவிதை சாத்தியம் தானா? என்று எஸ்ரா பவுண்ட் ஒருமுறை கேட்டாராம். கவிஞரது, மிகச் சிறியதான படிமக் கவிதை இது - இடதுகை பெருவிரலில் நகம் வெட்டிய போது எனக்குள்ளும் பிறையின் நினைவு. கவிதைகளை வாசித்து, உள்வாங்கிப், பயணப்படுகின்ற தன் அனுபவம் என்பதுவும், அந்த அகவய அனுபவத்தை முழுமைபெறாத வார்த்தைகளால் பகிர முற்படுவதும் வெவ்வேறான தளங்கள். அன்பு மிகுதியினால் வாழ்த்துரைகள் எழுதலாம். ஆனால் தகுதியும், கொஞ்சம் பாதிப்பும் இருந்தால் மட்டுமே பகிரல் சாத்தியம். செல்வகுமாரனது கவிதைகள் பலவற்றில் அவை இருக்கின்றன. குறிப்பாக, தனது நிலத்தின் ‘நெல்அவித்த மண்பானை’ மணமும், ‘காயப்போட்ட பெரிய ஓலைப்பாய்’ விரிவும் ஊடுபாவி இருக்கின்றன. * * * * *

தொடர

சக்திஜோதியின் கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

சொல் எனும் தானியம் : சமகாலமும், சங்கமும் சங்கமிக்கும் அன்பின் அனற்பனி "காலை வந்து கடிக்கும் கவிதை தூண்டில் முள்ளை ஏமாற்றும்" - இந்திரன் மொழியைக் கொண்டாடும் சமூகம் தமிழ்ச்சமூகம் - மொழியை நீர்த்துப் போகச் செய்வதில் முதலிடம் வகிப்பதும் அதுவே. 'புனிதம்' என்ற பெயரால் அதனைப் பொற்சிறையில் வைத்துப் போற்றுவதும் 'அற்பம்' என்கிற சகதியில் சக்கையென மொழியைச் 'சல்லிசான' பண்டமாக ஆக்குவதில் தேர்ச்சி பெற்ற சமூகமும் நமதே. இரண்டிற்கும் இடைப்பட்ட நிதானமான அணுகுமுறை - மொழியை வாழ்வாதாரமான ஒன்றாகவும், அதே சமயத்தில், புனிதம் பண்பாட்டுச் சுமை இவற்றின் பூச்சுக்களற்ற பேச்சு, எழுத்து கருவியாகவும் கையாள்கின்ற முதிர்ச்சி இன்னமும் சரிவரக் கூடிவரவில்லை நமக்கு. இந்நிலையில் மொழியைக் கச்சாப் பொருளாகக் கொண்டியங்கும் பெண் படைப்பாளி - குறிப்பாகக், கவிதைப் பரப்பிலே இயங்குகின்ற படைப்பாளியின் முன், 'கணந்தோறும் வியப்பாக' கணந்தோறும் பெரும் சவாலாகக் காட்சியளிப்பது அவளது மொழிதான். அவளது மொழியென்பது வெறும் பேச்சு, எழுத்து ஊடகமல்ல - அது அவளது நிலம், நிலைப்பாடு, சமூகம், பண்பாட்டுப் பின்புலம், மிக முக்கியமாக அவள்தம் வாழ்வனுபவங்களின் கூட்டுத் தொகை. "வார்த்தைகள் நமது எச்சிலில் விழுந்த உடனேயே முதல்தர பொய்யாக மாறி விடுகின்றன" என்பார் மலையாளக் கவி கடம்மணிட்ட ராமகிருஷ்ணன். ஆனால் எச்சில் பட்டும் மெய்யாக மிளிர்வது கவிதை மட்டுமே. பாடுபொருளைக் கவிஞன் தீர்மானிக்கலாம் - ஆனால் கவிஞனை மொழிதான் நிர்ணயிக்கின்றது. ஒவ்வொரு கவிஞனின் மொழியும் தனித்துவமுடையதாக இருப்பது இதனால்தான். தனது வேர், வளர் சூழல், தகவமைப்பு, நம்பிக்கை இவற்றின் மொத்த அனுபவ வார்ப்பான மொழியைக், கூடுதல் பொறுப்புடன் கையாளவேண்டிய தெளிவும், கடப்பாடும் ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டுமென நான் நம்புகின்றேன். அவள் ஒரு ரோஜாவைப் பாடவேண்டிய அவசியமில்லை - அவளது கவிதையில் ரோஜா மலர்ந்தால் போதும். இந்தப் புரிதலோடு எழுதுகின்ற, மிக முக்கியமான கவிஞர் சக்திஜோதி. 2000ற்குப் பின்பான தமிழ்க் கவிதைப் பரப்பில், சங்கக் கவிதைகளின் கைரேகைத் தடத்தோடு, தனக்கெனத் தனித்துவமான ஒரு மொழி வெளிப்பாட்டைக், கவிதைக்கான அழகியல் தொனியோடு வெளிக்கொணர்பவை சக்திஜோதியின் கவிதைகள். தனது நிலத்தின் வரைபடத்தைக் கவிதைக்கென்றிருக்கின்ற பூகோளத்தில் புகுத்தும் நுட்பமிக்கவர். அவரது கவிமொழி முழுக்க அத் தடயத்தின் பூக்களே - அதன் மணமோ சங்கமும், சமகால இருப்பும் பிசைந்தெடுத்த அனற்பனி நாற்றம். "காதல் ஒரு விழா நாட்குறிப்பு அல்ல" என்று ஹெலன் ஷெப்பீல்டு சொல்வார். சக்திஜோதிக்குக் கவிதை ஒரு விழா - நாட்குறிப்பு அல்ல. ஒரு மரத்தில் இலைகள் இயற்கையாக அரும்புவது போலக் கவிதை துளிர்க்க வேண்டும் என்றான் கீட்ஸ். சக்திஜோதிக்கும் அப்படித்தான் - ஒரு விதை, செடி, கவிமரமாகச் சட்டென்று கிளைத்துவிடுகின்ற அற்புதமான செழுமையும், ஈரமும், அன்பின் ஊற்றும் கொண்ட மண் மனம் சக்திஜோதியின் மனம். அந்த மனம் அவருக்குக் கவிதைக்கான ஆயிரமாயிரம் வாசல்களை அன்றாடம் திறந்துவிட்டபடியே இருக்கிறது. சூரியனின் கீழிருக்கின்ற அனைத்தையும் நேசிக்கின்ற, பாலூட்டி அணைக்கின்ற ஆதித் தாய் மனம் அது. அன்றியும், சூரியனைத் தாண்டியும் புது உலகங்களைத் தேடுகின்ற அம்மனதின் சொற்கள் தந்திருக்கின்ற விதை நெல்லே அவரது சொல் எனும் தானியம். இத்தொகுப்பு முழுவதையும் ஒரு கழுகுப் பார்வை பார்க்க முயற்சித்தால் - எதனொன்றின் பிரதியாகவும் இல்லாத புதியதொரு கவிமொழி (படிமம், குறியீடு, உருவகம்), மொழி துறுத்திக் கொண்டு கவித்துவத்தைப் பாதிக்காத எளிமை, கூறியது கூறலோ, விரித்தலோ அதிகமற்ற, அதேசமயம் பால் சுரக்கும் முலையெனக் கைவந்த ஒரு நெகிழ்ப் பிரவாகம் - இதுவே அவரது இலக்கணம் எனப் புலப்படுகிறது. சொல்லைத் தானியமாகப் பார்க்கின்ற இத் தலைப்பு, "சொல் பொருள் நிறைந்தது இது சூல் கொண்டு உயிர்களால் நிரம்பி இருக்கிறது" எனும் நெரூடாவை நினைவூட்டினாலும், சக்திஜோதியின் தானியத்திற்கான விதைநெல் தமிழ்ச் சிந்தனை தான். கலை விமர்சகர் இந்திரன் சொல்வது போல் "ஒரு தமிழ் Sensibility, ஒரு தமிழ் அழகியல், ஒரு தமிழ்த்தனம்" இவருடைய கவிதைகளின் உள் கட்டமைப்பை நிர்மாணிக்கின்றது. ஆனால் இதனை "வரலாற்றின் பழங்காலத்திற்குத் திரும்பிப் போதல்" என்கிற ஆபத்தான வாதத்தோடு ஒப்பு நோக்காமல், "தமிழ்ப் பண்பாடு என்பது தற்கால நிலைமைகளுக்கு ஏற்பத் தன்னை மறுபரீசீலனை செய்து கொண்டே போகிறது" என்கிற புரிதலோடு உள்வாங்குதல் வேண்டும். "எது ஒன்று அதனுடைய இயல்பில் இருக்கிறதோ அது அழகானது. நான் என் நிறத்தில் பூக்கிறேன். என் மணத்தில் பூக்கிறேன். எனது இயல்பில் எனது உணர்வில் இனி நான் அதிர்வேன்" எனும் இன்குலாபின் குரலை எதிரொலிப்பவை சக்திஜோதியின் கவிதைகள். அழகியல் என்பது இவரது உயரியல்போ என என்னை வியக்க வைத்த ஏராளமான கவிதைகள் இத்தொகுப்பில் என்னைக் கட்டிப்போட்டு, மயக்கத்தின் போகத்தில் ஆழ்த்துகின்றன. காதல், நதி, நிலம், மழை, பறவை, புலரி, கனவு, விதை, இசை, நிலா, சொற்கள், பருவங்கள், பெயர்கள், காற்று, வெளி, பயிர் - என விரியும் சக்திஜோதியின் உலகம் சொல்வது, பகிர்வது - கனிதலும், ஒப்புககொடுத்தலும், பூரணமாக்குதலுமான நேசத்தையும், அன்பையும் தான். இப்படி ஒரு கவி மனம் முழுவதும் அன்பால் பழுத்து இருக்க முடியுமா எனும் வியப்பு, "அடியாளம் வரையில் நிலையூன்றி நின்றிருக்கும் நேசத்தையே யாவருக்கும் பரிசளிக்க விரும்புகிறேன்" எனும் போது ஒரு துளி கண்ணீரால் முற்றடைகிறது. "கவிதை ஒன்றைச் சொல்லி இன்னொன்றைப் பெறவைப்பதற்கு யாவரும் ஒப்பக்கூடியதொரு வழியை அளிக்கிறது" என்ற ராபர்ட் ஃப்ராஸ்ட் ஒரு தீர்க்கதரிசி. "சங்கத்தின் அக இலக்கியத்தின் முக முக்கியமான கூறுகளான நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல், தெய்வம் பராவல், கனாக்கண்டு உரைத்தல், வியந்து கூறல்" ஆகிய அனைத்து வகையினையும் தனக்குள்ளே மீட்டெடுத்து ஒன்றைச் சொல்லி இன்னொன்றைத் தருகிறார் சக்திஜோதி. அவருடைய பெண், மண் அடையாளச் சின்னங்களையும் அற்புதமான வெளிப்பாடாகச் சுமந்திருக்கின்ற அம்மொழி சங்கத்தின் செல்லப் பிள்ளைதான். ஆனால் சங்கத்தை அச்சொட்டாக வடித்தெடுத்த பிரதிப் பிள்ளை அல்ல. "நீலக் கடலும் நீல வானமும் ஒன்றாகிப் போன கணத்தில் நீர் பிறந்த நிலத்தில் வெண்மையாக வெடித்திருக்கும் உப்புப் பாளத்தில் ஒளிர்கிறது அதன் நீர்மை" (நதி உறையும் நிலம்) என்று நீலக் கடல், நீர், நிலம், வெண்மை உப்பு எனும் சக்திஜோதியின் 'நீர்மை' எனும் ஆன்மா சுமந்த நிலப்பரப்பு, அகப்பாடலில் வருகின்ற, '.... எந்தையும் நீல் நிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்' உப்பை மாறி வெண்ணெல் தரீ இய உப்புவிளை கழனிச் சென்றனர் அதனால், பனி கரும் பரப்பின் சேர்ப்பதற்கு, 'இனிவரின் எளியன்' என்றும் தூதே (269) எனும் தலைமகள் சுட்டுகின்ற நிலம்தான். அத்தலைவியின் காதலே, சக்திஜோதியின் நீர்மையும். ஆனால் அது மட்டுமல்ல அவரது குரலும், தொனியும், செய்தியும். "மென்காற்று வீசுக¨யில் மதர்ந்தெழும் என் அழகில் மயங்கிக் கிடந்த நான் வானத்தையளக்கும் பறவையை முற்றுமறிந்த கணத்தில் பெண் என்பவள் கையகப்படுத்தப்படும் நிலம் அல்லவென உணர்ந்து நிமிர்ந்தேன்" (சூரியனை நேர்ந்து கொண்டிருப்பவள்) என்று அக்குரல் எழுகையில், இந்திரன் கூறிய, "தமிழ்ப் பண்பாடு என்பது பல்வேறு அடுக்குகள் கொண்டது" எனும் புரிதலுடனும், தற்கால நிலைமைகளுக்கு ஏற்பத் தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்ற தெளிவுடனும், முக்கியமாக, பழங்காலப் பெருமிதத்தில் மட்டுமே திளைக்காத, அடங்கிப்போகாத, வலுவுடன் நிற்கின்ற சமகாலத்திய பெண் குரல் அது என்பதுவும் துலங்குகின்றது. "நான் ஒரு கறுப்புப் பெண் சைப்ரஸ் மரத்தினைப் போல வலிமையானவள் என்னைப் பாருங்கள். இடம் காலம் சூழ்நிலை எல்லாம் வென்று அழியாதவளாய் நிதமும் வளர்கிறேன்" எனும் ஹார்லம் மறுமலர்ச்சியின் கருப்புக் கவிஞர் மேரி ஈவன்ஸின் ஆன்மாவே "ஒரு பெண் தன்னை முழுமைசெய்தல் எதுவெனில் தனக்கென இயங்குதலும் தான் மறந்து அசையாது நிலைப்பதுவும் உண்மையில் இயங்குதலின் உச்சம் நிலைத்திருத்தலே" (நிலைத்திருத்தல்) எனும் சக்திஜோதியின் உணர் நரம்பு ஓடும் உயிர்த்துடிப்பும்! சங்கப் பாடல்கள் அரசரை மட்டுமோ அல்லது மேட்டுக்குடியினரை விதந்து மட்டுமோ பாடப்பட்டவை அல்ல. அவை பாணன், விரலி, உழவர், உழத்தியர், பரத்தையைர் - முதலிய மக்களனைவரையும் உள்ளடக்கியவை. தனது 'பத்துப்பாட்டு எனும் பண்பாட்டு ஆவணம்' எனும் கட்டுரையில் பேரா. ப.மருதநாயகம்: "சங்க இலக்கியக் கவிதைகளின் தரம் பற்றிய மதிப்பீட்டில் வேறுபட்ட முடிவுகளுக்கு வழியில்லை. ஆனால் அவை காட்டும் பழந்தமிழ்ச் சமுதாயம் எத்தகையது என்பது பற்றி நம்மவர் சிலர் மேலை அணுகுமுறைகள் பற்றிய அரைகுறை அறிவுகாரணமாகவும், தமிழ் தவிர்த்த ஏனைய பழஞ்செல்விலக்கியங்கள், அவை காட்டும் சமுதாயங்கள் பற்றிய அறியாமை காரணமாகவும், புரட்சிக்கருத்துக்களைப் புதுமையாகச் சொல்ல வேண்டும் என்ற விழைவு காரணமாகவும் தவறான எண்ணங்களைப் பரப்பி வருகிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் முதலில் வடமொழிப் பேராசிரியராகவும் இப்பொழுது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் ஜார்ஜ் ஹார்ட் சங்க இலக்கியம் காட்டும் சமுதாயம் பற்றிப்பேச முழுத்தகுதி உடையவர். அவரது கருத்து பின்வருமாறு: சங்ககாலக் கவிஞர்கள் உயர்ந்தகுல மக்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் எழுதவில்லை. ஏனெனில் இப்பாடல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ளன. அவர்களது உலகம் பொதுமக்களின் உலகம்தான். அவர்கள் கூறும் பண்பாட்டில் பல குலங்களும், பலருக்கு உயர்ந்த பதவிகளும், பலருக்குத் தாழ்ந்த பதவிகளும், அவரவர்க்கு ஏற்ற தொழில்களும், மரபும் இருந்தன என்பதை இப்பாடல்களால் அறிகிறோம். சங்கப் பாடல்கள் ஒரு குலத்தின் வாழ்வைப் பற்றியோ அல்லது பண்பாட்டைப் பற்றியோ மட்டும் விளக்கவில்லை. இதுதான் சங்கத் தமிழ்ப்பாடல்களின் தனித்தன்மை. எல்லாக் குலங்களின் வாழ்வும் அவர்களது இலக்கியத்தில் முக்கியம் இடம் பெற்றுள்ளன" என்கிறார். சொல் எனும் தானியம் தொகுப்பு முழுக்க சாமான்ய மக்களின், குறிப்பாகச் சமகாலப் பெண் ஆளுமையின் இருப்பு, சமூகச் சிக்கல், உணர்வுகள், அறிவுநிலை, தேர்வுகள், அன்பின் முதிர் தானியமென அவள் சரணடையும் சொற்கள், இவற்றையே பேசுகின்றன. "என்னிலிருந்து என்னை விடுத்துக் கொள்கிறேன் யாவற்றையும் நேசிப்பதன் வழியாக" என்பது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் கணியனின் தொடர்ச்சிதானே. சக்திஜோதி முன்னிறுத்துகின்ற இப்பெண்ணின் இருப்பு மருதமும், பாலையும். வேம்பு, மருதா நதி நள்ளிரவு, கருமேகம், காற்றுக்காலம் வெயில், புங்கை - இவளது முதற்பொருள். சாம்பல் கோட்டை முனி, யட்சி, செவலை, பேய்ச்சி, மலைச்சி, பெரியநாச்சி, நாய், சாம்பல் நிறப் பூனை - இவளது கருப்பொருள். காதலும், காதலாய் இருத்தலும் உறங்க விருப்பமும், உறங்காதிருத்தலும் சொற்களும், சொற்களால் ஒளிர்தலும் - இவளது உரிப்பொருள். சங்க இலக்கியத்தின் மேற்சொன்ன அத்தனை செழுமையுடனும், உரத்துடனும் வெடிக்கின்ற சக்திஜோதியின் சொற்கள் கவிதைகளாக உருமாறுகின்ற கணங்கள் மிக அற்புதமானவை. அவ்வப்பொழுது நான் எனக்குள் எழுப்பிக்கொள்கின்ற, கவிதையில் பெண் மொழிப் புனைவு என்றால் என்ன - அது வெறும் ஆண்மையக் கருத்தாக்கங்களுக்கு எதிரான குரல்களை எழுப்புவது மட்டுமா? அல்லது தன்னுடைய உடலைக் கொண்டாடுவதும், பெண் பாலுணர்வினை தளையற்று முன்வைத்தலுமா? என்கிற கேள்விகளுக்கு "அவையும் தான், ஆனால் அவை மட்டுமே அல்ல இவை" எனும் பதிலைத் தருவதால் சக்திஜோதியின் கவிதைகளுடன் எனக்குக் கூடுதல் நெருக்கமும், இணக்கமும்! தனது நிலம், தன் வாழ்வனுபத்தின் செழுமை தந்த விதையில் கிளைக்கின்ற ஒரு அழகியல் மொழி, உரத்துக் கோஷமிடுகின்ற அறிவித்தல்களும், சவடால்களுமற்ற, ஆனால், தனது இருப்பைச், சுயத்தைத் திடமாகக், கண்ணோடு கண் நோக்கிச் சொல்கின்ற தெளிவும், தீர்க்கமுமான ஏறெடுத்தல் - இவையே இக்கவிதைகளின் பலம். இத்தன்மையே இவற்றின் கவித்துவம். பளபளக்கும் போர்வாளை விடுத்த, சுரீரெனச் சட்டென்று இறக்கும் சிறு கத்தி போன்ற சொல்லாடல் இவற்றின் உத்தி என்றாலும், 'அழகியல்' எனும் தேவதையின் பூரண அன்பைப் பெற்றவராகப் பிரவகிக்கிறார் சக்திஜோதி! அழகியல் ஓர் அறிமுகம் எனும் நூலில், "மன்பதை இறுத்தலின் பொதுவான ஒரு தனிப்பண்பை அழகியல் அனுபவம் வெளியிடுகிறது" எனும் கி.அ. சச்சிதானந்தம் அழகியல் அனுபவத்தின் பண்புக் கூறுகளாக, நுண்மையான உணர்வுக் கிளர்ச்சிகள், கூர்த்த முருகியல் மனோநிலை, உட்கிரகிக்கும் விழிப்பு மையம், வலுவூட்டப்பட்ட புலன் இயக்கம், மனோநிலை முதலியவற்றை முன்வைக்கிறார். இவை வாய்க்கப் பெற்ற ஒரு வாசகனுக்குச் சக்திஜோதியின் கவிதைகள் "உணர்வும் அறிவும் சேமிப்பும்" நிரம்பிய அழகியல் பெட்டகம். அழகியல் அனுபவத்தில் கண்களாலும், காதுகளாலும் மட்டுமே பார்ப்பதனாலும், கேட்பதாலும் உண்டாகும் மனப்பதிவுகளை நினைவில் அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள முடியும் எனவும் சொல்கின்ற சச்சிதானந்தத்தின் கூற்றை மெய்ப்பிப்பவை பின்வரும் சக்திஜோதியின் கவிதை வரிகள். "செவ்வரிசிப் பொறியென இளம் மஞ்சளில் செவ்வரியோடி புங்கை பூத்திருக்கும் கோடை .... உச்சிக்கிளை இலைகளுக்கிடையே தேன்ராட்டையில் அடர்ந்திருக்கும் பூஞ்சாறு வாசம் பரப்புகிறது ரீங்கரிக்கும் தேனிக்கள்" (பூவாசக் கோடைகாலம்) "வேம்பு இலையசையாது பூக்களை உதிர்த்தபடி உறங்கியது மரக்கிளையின் நடுவே கூட்டில் குஞ்சுகளோடு காகங்கள் துயின்றன. அரசமர இலை உரசலிடை அயர்ந்துறங்குகின்றன இரை தேடிக் களைத்த வேறு பறவைகள்" (மழை மறைவு நிலம்) "அடிவானத்திற்கு அப்பால் கசியும் அன்பில் பள்ளத்தாக்கில் பூக்கும் பூக்கள் தன் ஒளியை வாரியிறைக்கும்" (அடிவானத்தில் கசியும் அன்பு) "பகலெல்லாம் கசிந்து மீந்திருக்கும் பாலைச் சிசுவிற்கும் இரவைக் கணவனுக்குமாகக் காட்டி விளைநிலமாக்கிக் கொண்ட பெண்ணின் மார்பிலிருந்து காதல் பெருகி வடிந்து கொண்டிருக்கிறது நிலமெங்கும்" (முந்தானைச் சோளம்) "தேர்ந்த விரல்களின் கண்ணிவிடாது தொடுக்கும் பூக்களில் தப்பிவிடுகிற அரும்புகளைச் சேகரித்துப் புரண்டோடும் நதியில் மிதக்க விடுவோம்" (செறிந்த கணங்களில் திளைத்திருத்தல்) அற்புதமான அழகியல் அனுபவத்தைத் தருகின்ற மேற்சொன்ன கவிதைகளுக்கிடையே பளிச்சென்று பூத்திருக்கின்ற செவ்வந்திப் பூக்களின் ஒளிர்வுடன் தென்படுகின்ற உவமை நயங்களுமுண்டு. உதாரணத்திற்குப் பின்வருமொறு உவமை: "வெளிர் மேகம் நீல நிறம் வேண்டிச் சூழ்ந்திருக்க விடாப்பிடியாய் இறுகிக் கிடக்கும் பாறையைத் துளைத்து நீர் எடுத்து விடும் தேரை இவள் மனம் (என்னை வியக்கிறேன்) "புதுக்கவிதையில் மனிதப்படுத்தல் இல்லாத இடமில்லை. சாதாரணமான விஷயங்களும் மனிதப்படுதலினால் அழகாகின்றன. குளத்தின் சிற்றலையும் கரையோடிப் படியிடம் சிறுமூச்சு விட்டுச் செல்லும்" என்று நா.பிச்சமூர்த்தி எழுதும்போது, சிறுமூச்சு விட்டுச் செல்லும் என்ற சிறு வருணனை சிற்றலையை மனிதப் படுத்துகிறது. அதேபோல அதன் சிறுமூச்சைக் கேட்கும் கரையோரப் படியையும் மனிதப்படுத்துகிறது “என்பார் க. பூரணச்சந்திரன். சக்திஜோதியின் பின் வரும் கவிதைகளிலும் மிக நுட்பமாக இந்த மனிதப்படுத்துதல் கையாளப்பட்டிருக்கிறது. “வெயிலைக் குடித்து நகர்கிற நதியில் வெயிலை ஏந்தி விரிகிற நிலத்தில் பாம்பின் விஷம் போலக் காமம் தாங்கியே கோடையின் பூக்கள் மலர்கின்றன” என்று சக்திஜோதி எழுதுகையில் 'பாம்பின் விஷம் போலக் காமம் தாங்கும் பூக்கள்' இங்கு மனிதப்படுத்தப்படுகின்றன. போலவே, “எல்லா உயிர்களும் தன்னனவில் இன்புற்று இருக்க நினைப்பதே வாழ்வு எனச் சொல்லிவிடுகிறது நாவினால் தன்னை ஈரமாக்கிக் கொள்ளும் வெயிலில் உலர்ந்திருக்கும் பசு” எனும் கவிதையும், ஆறறிவற்ற பசு, தன்னிச்சையாக தன் நாவினை ஈரப்படுத்துதலை, மனிதப்படுத்துகிறது. சக்திஜோதியின கவிதைகளுடைய uniqueness அல்லது தனித்த வண்ணம் - அவற்றின் 'நாடோடித்தனமான அழகியல்'. இந்திரனின் சொற்றொடரான இந்த “Nomadic Aesthetics” ஐ முற்றிலும் உணரத் தருபவை இவரது இக்கவிதைகள். நிலமானவள், பெயர் அற்றுப் போனவள், காதலானவள், மருதாவானவள் என்றெல்லாம் பெண்ணைப் புனைந்து, படைக்கும் இவற்றின் வில் நாண் விரைப்பேற்றப்பட்டிருப்பது இந்த அழகியலால் தான். அப்பாக்கள் அறியாத புதிர் எனும் கவிதை மூன்று தலைமுறைகளைச் சார்ந்த அப்பா, அம்மா, மகள் - பற்றிப் புனையப்பட்ட, சமகாலத்தின் புரிதலோடு எழுதப்பட்ட, புகார்களற்ற கவிதை. புகார் சொல்லாத அதன் தொனியே அதன் வலியையும், புரிதலையும் கூர்மையாக்குகின்றது. என்னை உறக்கம் கலைத்து உலுக்கிய, ஒரு தொடர் தொந்திரவுக் கவிதை - யுகாந்திர உறக்கம். "எனக்கு முன்பாக உறங்காதிருந்த பெண்கள் பலரின் தசையிழைகளினாலும் நரம்புகளினாலும் என் உடல் கட்டப்பட்டுள்ளது" எனத் துவங்கி, "பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட தானியங்களையே நாம் உண்ணுகிறோம் பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட நூல் கொண்டே நாம் உடுத்துகிறோம். பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட மண் கொண்டே நாம் கட்டுகிறோம் கட்டப்பட்ட வீடு முழுக்க ஆணின் குறட்டை ஒலி நிறைந்திருக்கிறது" எனத் தொடர்ந்து.... "உண்மையில் நான் எனக்கென்று உறங்கவே விரும்புகிறேன் இத்தனை காலம் இத்தனை பெண்கள் உறங்காதிருந்த அத்தனை உறக்கமும் நான் உறங்கவே விரும்புகிறேன் சவம் போலொரு யுகாந்திர உறக்கம் என்னைத் தழுவட்டும்" என முடிகின்ற இந்தக்கவிதை தந்த உறக்கமற்ற இரவுகளில் வெடித்த கேவலையும், கண்ணீரின் ஈரவாசம் சுமந்த அழுத்தமான அன்பு முத்தமொன்றையும், நினைவுக் கிடங்கிலிருந்து உசுப்பி எடுத்து, இதோ, உங்களுக்கு இந்தக் கணம் மறுபடி தருகிறேன் - சக்திஜோதி. இந்த ஒரு கவிதைபோதும் எனக்கு. பெண் கவிஉலகில் இந்தக் கவிதை இந்த ஆண்டிற்கான சிறந்த, அற்புதமான படைப்பாக பதியப்பட வேண்டும். அதற்கான ஆழமான அத்தனை அடையாளமும் உள்ளது இக்கவிதையில். வலியும், மறக்கப்பட்ட வரலாற்றின் கசடும், விடுதலைக்கான வேட்கையும் நிரம்பிய தாபமும், ஆசையும், ஆயாசமும், நிராசையும், நெருப்பும் கொண்ட, ஒரு சமகாலப் பெண் இருப்பை, ரத்தமும் சதையுமாகச் சரிவிகித கவிதைச் செறிவு மொழியில் வெளிக்கொணர்ந்த இந்த ஒரு கவிதைக்கு முன் நான் விண்மீன்களை வியக்கின்ற சிறுமியாக மலைத்து நின்று கொண்டிருக்கிறேன். நீர்மை முத்தங்கள் அக்கவிதைக்காக உங்களுக்கு. சக்திஜோதி - உங்களுடைய உலகம் வீடு மட்டுமல்ல என்றாலும் அதுவும் தானென நானறிவேன். உங்கள் அன்பை திறப்புகளை அறிந்தவரே பருக முடியுமென்றாலும், "உன்னிடமிருந்து துவங்குகிற உன் காதல், பறவையைப் போல் திசையெங்கும் பறந்து அன்பின் முதிர் தானியத்தை" விதைத்தைபடியே தானிருக்கும். அதனைத்தான் பல்வேறு சொற்களில், சிற்சில உத்திகளில், நெகிழ்ந்தும், மலர்ந்தும், கனிந்தும், பகிர்ந்தும் இக்கவிதைகள் சொல்கின்றன. "அன்பைக் கொடுப்பதில், ஏற்பதில் மிச்சம் ஒன்றுமில்லாத" அற்புதமான மனோநிலையை இக்கவிதைகள் தன்னைத் தேடிவரும் ஒவ்வொரு வாசகனுக்கும் தரும் - கூடவே விதைநெல்லாய்ச் சேமித்து வைக்கக் கொஞ்சம் தானியங்களையும்! தொடர்ந்து பயணியுங்கள் சக்திஜோதி - காட்சிப் படுத்தாத ஆனால் கவனிக்கப்படுகின்ற இதே அழுத்தமான அழகுடன்! வசந்தம் எப்போதும் சொற்களென துணையிருக்கட்டும். மலைப்பூக்கள் அச்சொற்களுக்குத் தேன் தரட்டும். * * * * *

தொடர

சொல் ஒளிரும் பால்வீதி

"சப்தங்கள் அடங்கிய ஒரு காலை மீண்டும் மெல்லப் புலர்ந்தது" - பிறேமினி (-1993) எனும் இக்கவிதை வரிகள் பிறேமினி தவிர வேறு யாராலும் எழுதப்பட்டிருந்தால் அதில் பெரிய சிறப்பேதுமில்லை. தினமும் எழுதப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான கவிதை வரிகளில் இவையும் ஒன்றாயிருந்திருக்கலாம் - அவை ஒரு போராளிப் பெண் கவிஞரால் எழுதப்பட்டிருக்கவில்லை என்றால். "ஒரு நிழல் என் கவிதை மீது / விழும்போது / நான் அங்கே காண்கிறேன் / ஒரு மங்கலான பிடிவாதமான வெளிச்சம் / வாழ்வு" - எனும் போலந்துக் கவிஞர் ரோஸ்விட்சட் இன் கவிதையும், "கவிதையை சிருஷ்டித்த மனிதர்கள் இறந்துபோன பின் கவிதை இன்னும் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" (‘சமகால உலகக்கவிதை’ - பிரம்மராஜன்) எனும் அவரது வாக்கியமும் நினைவிற்கு வருகிறது - ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ தொகுப்பிற்குள் நுழைகையில். ஊடறு + விடியல் வெளியீடான ஈழப் பெண் போராளிகளின் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ தொகுப்பினைப் படிக்கையில் இன்னமும் இருக்கின்ற இவர்களின் கவிதை, இக்கவிதைகளை எழுதிய போராளிப் பெண்களின் வாழ்க்கை, ஸ்தூல வடிவமாக அப்பெண்கள் நம்மிடையே இல்லையெனும் உண்மை, களமாடித் தம்மைக் காவு தந்த அந்த அர்ப்பணிப்பு, அவர்தம் நம்பிக்கை, பெருமூச்சு, கானல், காதல், விசுவாசம், தோழமை, தியாகம் - அனைத்தும் பேரலைகளாய் நம்முன் எழுகின்றன. இவையனைத்தும் கவிதைகளாகப் பதியப்பட்ட இத்தொகுப்பினைப் பிற கவிதைத் தொகுதிகளைப் போல ‘என்ன இருக்கிறது’ என்பதற்காக வாசித்துவிட முடியாது. அழகியல், உத்திகள், அனுபவமும், அறிவும் பிணைந்த நுட்ப வெளிப்பாடு - இன்னபிற - கவிதையின் இலக்கணத்திற்கான அளவுகோலோடு இவற்றிற்குள் நுழையவோ, துய்க்கவோ, ஆராயவோ முடியாது. ஏனெனில் - அதன் ஒவ்வொரு எழுத்திலும் இரத்தமும், சதையுமான ஒரு போராட்டமும், ஒடுக்கப்பட்ட இனமும், குறிப்பாக இதுவரை அபூர்வமாகவே பெண் பயணித்திருந்த களங்களும், ஒரு கண்ணீர்த் துளியென உறைந்திருக்கிறது. போரைத் தாண்டியும், மரணம் கடந்தும், வாழ்வு குறித்த தாகமும், கண்முன்னே கடக்கின்ற கணம் குறித்த கண நேர மகிழ்வுமாய்ப் பல கவிதைகள் பேசுகின்றன. "ஆயினும் / ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில் / எனை மறக்கவும் / ஒரு குழந்தையை மென்மையாகத் தாலாட்டவும் / என்னால முடியும்... / எனது மரத்துப் போன கரங்களுள் / பாய்வது துடிப்புள்ள இரத்தம். / வெறும் / இடியும் முழக்கமுமல்ல நான். / நான் இன்னமும் மரணிக்கவில்லை / எப்பொழுதும்! /" எனும் அம்புலியின் (-2004) வார்த்தையில் வாழ்வின் மீதான நேசம் வழிகிறது. "எந்த மகனுக்காய் என் / கால்களை நகர்த்த? / நேற்று விதையுண்டு போன / மூத்தவனுக்கா? இல்லை / இப்போதுதான் விதைக்கப்பட்ட என் / இளைய குஞ்சுக்கா? /" எனக் கேட்கும் அ.காந்தாவின் (-2001) வார்த்தையில் வலியும், இயலாமையும் பிழிகின்றன. ஒரு பண்டிகையின் போது தன் கிராமம் ஷெல் வீச்சில் முற்றிலுமாய் இரையானதை, "இங்கேதான் இந்தியன் ஆமி குடியிருந்தது /கதிரை ,மேசை / கதவு, ஜன்னல் எல்லாம் உடைத்து / சப்பாத்தி சுட்டது"/ …… / இந்தியா என்கின்ற இமாலயம் / எங்கள் மனப்பரப்பில் இடிந்து / நொருங்குகின்றது /" எனும் ஆதிலட்சுமியின் (-1998) வரியில் தெறிக்கும் வரலாற்றுப் பெரும் பிழை நெஞ்சில் அறைகின்றது. ஆனையிறவுச் சமரில் குழு ஒன்றிற்குத் தலைமை தாங்கிச் சென்று, வீரமரணம் அடைந்த கப்டன் வானதியின் (-1999) இறுதிக்கவிதையான ‘எழுதாத கவிதை’ யினை, வெறும் கவிதையாக மட்டுமே உள்வாங்க முடியுமா என்ன? ஒரு உன்னத லட்சியத்திற்காக தியாகம் செய்த போராளியின், "மீட்கப்பட்ட எம் மண்ணில் / எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால் / அவை / உங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ / அன்றேல் மலர்வளைய மரியாதைக்காகவோ அல்ல. / எம் மண்ணில் மறுவாழ்வுக்கு / உங்கள் மனவுறுதி / மகுடம் சூட்ட வேண்டும் என்பதற்காகவே. / எனவே / எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் /" எனும் வரிகளை அவரற்ற இந்தக் கணத்தில் வாசிக்கையில் கவிதையின் உணர்தல் தளமே வேறாகி, இன்றும் அந்தக் கவிதை எழுதப்படவே இல்லையோ எனும் பெரும் துக்கம் நெஞ்சடைக்கிறது. புரட்சிகா (-2001), கஸ்தூரி (-1989), மலைமகள் (-2001), நாமகள் (-1995), பாரதி (-1993), சுதாமதி (-1998), தூயவள் (-1997) எனப் போராளிப் பெண்கள் பலரின் பெயர்களுக்குப் பின் இருக்கின்ற அடைப்புக் குறிகளில் இருக்கின்ற அவர் தம் இறந்த ஆண்டு குறித்த பதிவு தாண்டி அவர்களுடைய கவிதைகளுக்குள் பயணிப்பதே பெரும் பாடு. பிறந்த தேதி பற்றிய குறிப்பற்று மரணமடைந்த ஆண்டு மட்டுமே அறிந்து கொண்டு எம் தோழிகளை, சகோதரிகளை, சக தொப்பூள் கொடி மனுஷிகளை - அவர் தம் கவி வெளிப்பாட்டை, உணர்வதென்பது, ஒரு (தமிழ்ப்) பெண்ணாகப் பெரும் குற்ற உணர்வைக் கொடுக்கின்றது. பெயரிடாத நட்சத்திரங்களென இப்பால் வீதியெங்கும் வலம் வரும் அவற்றின் பிரகாசம், வாழ்வு மீதான அத்தனை காதலுடனும், மரணம் பற்றிய அச்சமற்றும் இத்தொகுப்பு முழுவதிலுமே ஒளிர்கின்றது. போரும், அதன் அவலமும் பற்றிய பதிவுமட்டுமல்ல இத்தொகுப்பு. போராளியாய்ச் சமர் கற்று, உடல் உறுதியாக்கி, ஆணின் சம பலம் பெற்று, அறிவுச் சுடருடன், ஒரு இலக்கு நிர்ணயித்து, இலட்சியத்திற்காகப் பயணித்த பெண்களின் காதலும், நட்பும், நேசமும், பூரிப்பும், எதிர்பார்ப்பும், போர்ச் சூழலிலும் சற்று ஆசுவாசிக்க முற்படும் இயல்பும், எல்லை காக்கும்போதும் வண்ணத்துப் பூச்சியொன்றினைக் கடைக்கண்ணால் ரசிக்கும் ரசனையும் ததும்பி வழியும் கவிதைகள் நிரம்பியது. "காதலின் புதிய பரிமாணம்" எனும் நாமகளின் பின்வரும் இக்கவிதை, "எப்போதாவது தெருவில் / அவசர இயக்கத்தில் / கண்டுவிட நேர்கையில் / சந்திப்பை வரவேற்பதாய் அவன் கண்கள் / ஒரு முறை விரியும், / மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும். / அவனுக்குத் தெரியும் / எனக்கு அது போதுமென்று /" கண்முன் நிறுத்தும் இரத்தமும், சதையுமான பெண் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவளின் சொல் சுமந்து திரியும் நான் இனி ஒரு காதலைச் சுகிக்கையிலும், நேசத்தைப் பகிர்கையிலும் அவளற்று அதிலே மூழ்கமுடியுமா? இக்கவிதைகளைப் படித்த பின்பும் நாம் கடைகளுக்குச் சென்று புதுத் துணிகள் வாங்கலாம்; வயிறு நிறைய விருந்துண்ணலாம்; அன்பானவர்களின் அணைப்பையும், அம்மாக்களின் தாலாட்டையும் அனுபவிக்கலாம்; இசையிலும், கேளிக்கையிலும், கலைகளிலும் மாய்ந்து மாய்ந்து கரைந்து போகலாம் - ஆயின், தொடரும் சுடு நிழலென நம் இனப் பெண்களின் பெருமூச்சும், ஆன்மாவின் தாகமும், நம்மைத் தொடர்ந்து வருவதை, அவற்றின் கேள்விகளைப் புறந்தள்ளி ஒரு போதும், ஒரு துர்க்கனவற்று நிம்மதியாக உறங்கி விட முடியாது. தனித்திருக்கும் இரவொன்றின் ஏதாவதொரு கணத்தில் பெரும் குற்றவுணர்வுடன் நம்மை அக்கனவு பலி கேட்கும். முழுமனதுடன் அதற்கு ஒப்புக் கொடுக்கும் வரை, அற்பசுகங்களில் திளைத்திருக்கின்ற அற்பமான பெண் நானும் தான்! அந்த அவமானமே இத்தொகுப்பு எனக்களித்த துர்க்கனவு. * * * * *

தொடர

சட்டைப் பைகளும், சலம்பும் வாசனைகளும் - சூரிய தாஸின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்

ஒவ்வொரு உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட மணம் / நாற்றம் உண்டு. அது உடைகளுக்குள்ளும் ஊடுறுவி, நமக்குப் பரிச்சயமானதொரு நினைவாக ஞாபக அடுக்குகளில் தேங்கிவிடுகின்றது. அப்பாவின் 'சார்லி சென்ட்' கைக்குட்டை, அம்மாவின் ரசம் மணக்கும் முந்தானை, குழந்தைகளின் முதல் பிறந்த நாள் கவுன் - இப்படியான என் அடுக்குகளில் தனிப்பட்ட வாசனையுடன் கூடவே இருப்பது அப்பாவின் கைமடித்த வெள்ளைச் சட்டை வாசம்தான். அவரது நினைவு எழும்புகையில், கண்மூடி, நாசியில் நிதானமாக நான் உள்ளிழுத்து மேற்கொணர்வது அந்தச் சட்டையின் வியர்வை வாசத்தைத்தான். இராஜபாளையம் மருத்துவமனையில் அவர் இறுதியாக அணிந்திருந்த அந்தச் சட்டையை வெகுகாலம் சலவைக்குப் போடவில்லை - அதன் மருத்துவமனை வாசனையே அப்பாவாய் சில காலம் எனக்குள்ளும் இருந்தது. இப்பொழுதும் அவரை அதிகமாகத் தேடுகின்ற துயரப்பொழுதுகளில் அச்சட்டை எனது தலையணையாகும் தான். அந்த வாசம் தான் அப்பா... அதுவே அவரது அண்மையை ஏதோ ஒரு ஸ்தூல வடிவில் எனக்குத்தருகிறது... இதனாலாயே எனக்குச் சூரியதாஸின் எனது சட்டைப்பையில் இன்னொருவர் வாசனை எனும் தொகுப்பின் பெயர் கூடுதலான ஈர்ப்பைத் தந்தது. பல்வேறு மனித மனங்களின் வாசத்தை நிரப்பியிருக்கின்ற அதனோடு உரையாடியதில் சில பகிர்வுகள்... உங்களோடு... 'ஒவ்வொரு ஆயிரம் மைல் பயணமும் ஓரடி வைப்பில்தான் தொடங்குகின்றது. ஓரடி வைப்புடன் தான் முற்றுப் பெறுகின்றது' என்பார்கள். ஒரு கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை அது அச்சிலே பதிக்கப்படுவதற்கு முன்பாகவே தொடங்கி, முடிவுறாமல் புத்தக அட்டைகளைத் தாண்டிப் பயணித்துச் செல்லும். முதல் கவிதையில் தொடங்காமல் நடுப்பகுதிக்குச் சென்றால் என்ன எனச் சூர்யதாஸின் கடவுள் வாழ்த்து கவிதையிலிருந்து துவங்குகிறேன். 'கடவுளிடம் உருக்கமாக வேண்டினேன் எங்களுக்கு ஒரு நல்ல கடவுள்வேண்டுமென்று' என முதல் வரியிலேயே முரண்பாட்டைச் செதுக்கி விட்டார் - இப்போது இருக்கும் கடவுள் நல்லவர் இல்லை என்ற தொனியில். அதற்கான காரணங்களைச் கூறிச் செல்லும் சூர்யதாஸ் நிறைவாக, 'கடவுள் இறந்து பலகாலமாகி விட்டது முதன் முதலாய் நடந்த மதக்கலவரத்தின் போதே அவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார்' என்று முடிக்கிறார். "பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன் மனிதன் என்பவன் இல்லை (மேன் டஸ் நாட் எக்சிஸ்ட்) என்று அறிவிக்கிறார் ஃபூக்கோ. அதற்கு முன்னால் மனிதன் என்னும் உயிரினம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அப்போது பிரபஞ்சத்துக்குக் கடவுள்தான் மையமாக இருந்தார். நீட்ஷே கடவுளின் மரணத்தை அறிவித்தபோது மனிதன் தனித்து விடப்பட்டான். கடவுள் இல்லாத உலகத்தில் தன்னைவழி நடத்திக் கொள்ளும் பொறுப்பு அவனிடமே விடப்பட்டது. அதன்பிறகுதான் மனிதனின் பிறப்பு நிகழ்கிறது" எனும் எம்.ஜி.சுரேஷின் கூற்றை நினைவுபடுத்திக் கொண்டேன். தனித்து விடப்பட்ட மனிதன் இன்னமும் கடவுளைத் தூக்கிக் கொண்டலைகிறான் - மறுப்பதற்காகவோ அல்லது குற்றம் சுமத்துவதற்காகவாவது. சூர்யதாஸின் மேற்சுட்டிய கவிதைக்கு இணையாக அடோனிஸ் என்ற அராபிய கவிஞரின் பின்வரும் கவிதை நினைவிலாடியது - 'தோற்றுவிக்க வேண்டும் கடவுளரை நாம் இல்லை என்றால் இறந்தொழிய வேண்டும் கொல்லவேண்டும்-கடவுளரை நாம். தொலைந்து போன கற்கள் கிசுகிசுக்கின்றன் தம் இழந்த ராஜ்ஜியத்தில்' அடோனிஸ் பாக்கியவான். கடவுளைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை அவனுக்கு இருந்தது. சூர்யதாஸ் பாவம்.. இவர் முடிவெடுக்கும் முன்பாகவே கடவுள் தற்கொலை செய்து கொள்கிறார்.அது சூர்யதாஸின் கடவுள் மட்டுமா என்ன? கடவுள் எதனால் தற்கொலை செய்துக்கொண்டார்? மதக்கலவரம் மட்டுமா காரணம் என்றால்... இல்லை என்பதற்குச் சான்றாகச், சாட்சியங்களாக ஆதாரங்களை அடுக்கிச் செல்கிறார். வாழ்வியல் சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசியல் முறைகேடு, இனப்பற்றின்மை, மானுடம் மதிப்பிழத்தல், பெண்நலன் அழிப்பு என எல்லாவற்றையும் பதிவு செய்கிறார். கவிதையில் இவற்றைப் பதிவு செய்யும் போது கலைத்துவத்தை இழந்து விடாமல் பிரச்சார நெடி இல்லாமல் சொல்வதால் தான் சூர்யதாஸை எனக்குப் பிடிக்கின்றது. 'ஒர் உத்தியைக் கற்றுக் கொள்வதால் நமக்கது ஒரு வேலையைப் பெற்றுத்தரக் கூடும். ஆனாலதுவே நம்மைப் படைப்புத்திறம் உடையோராக்கிவிடாது.' என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. வெறும் உத்திகளால் கவிதை எனும் புகைப் பிசாசைக் கட்டஇயலாதல்லவா - அதற்கு ஒரு சோறு பதமாக சூரியதாஸின் 'அணு உலை வயிற்றுப் போக்கால் பிரமாண்ட கழிப்பறையாகும் கடல்' எனும் வரிகள் - தமிழகத்தின் அணுஉலைக் கழிவெனும் நிகழ்கால பிரச்சினை, கடல் மாசு என்கிற எதிர்கால பிரச்சினை - இவ்விரண்டையும் ஒரு சேர சுட்டுகின்றன. இந்த வரிகளில் கொடி இல்லை. கோஷமில்லை, சங்கம் இல்லை, வெளிப்படையான அரசியல் சூளுரைப்பில்லை, பிரச்சாரமில்லை. ஆனால் இவையெல்லாமும் இருக்கிறது என்பதில்தான் அவரது கவித்திறனும் மிளிர்கிறது. 'உங்களின் படைப்பு வசந்தகாலப் பணிபோலச் சிறந்ததாக இருக்கலாம். உலகில் பயன்பாட்டிய முக்கியத்துவத்தைக் கடந்த இயல் (ISM) என எதுவுமில்லை. ஒரு பொருள் தனது உண்மையான பயனை மக்கள் திரளுக்கு வழங்கும் போது மட்டுமே அது சிறந்தது' என்பார் மாவோ. அரசியலையும், அதன் அதிகாரத்தையும் செப்பனிடும் பணியைக் கவிதையில் செய்கின்ற அய்யா கவிஞர் இன்குலாபின் சமூக அறச்சீற்றத்தைச் சூர்யதாஸிடம் பார்க்க முடிகின்றது. தற்போதைய நடைமுறையில் தகாத/நாகரீகமற்ற/ஆபாசமாகக் கருதும் மயிர் என்ற சொற் பிரயோகத்தை மகா அந்தஸ்து தந்து பட்டி தொட்டி எல்லாம் பரவச் செய்த தீப்பொறி இன்குலாபின் பின்வரும் பாடல் - 'எதைஎதையோ சலுகையுன்னு அறிவிக்கீறீங்க நாங்க எரியும் போது எவன் மயிரை புடுங்க போனீங்க' 'மனுசங்கடா' என்ற அந்தப் பாடலுக்குப் பின் இப்போது கவிஞர் சூர்யதாஸின் மூலம் அதே வீச்சுடன் இன்குலாபிடம் இருந்த அரசியல் சீற்றம் தனிமனித அக்கறையாக வெளிப்பட்டு இருக்கிறது. 'பிறரை உண்மையாய் நேசித்தவர் பலரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் எவனும் தற்கொலை செய்துகொண்டதாய் தகவலில்லை போடா / போடி போ நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம் முதலில் உன்னை நேசிக்க கற்றுக்கொள்ள்..' என்ற சூர்யதாஸின் கவிதை வரியில் இருக்கும் சமூக அறச்சீற்றம் உத்திகளுக்கெல்லாம் கவலைப்படாத ஒரு படைப்பு மனதின் வெளிப்பாடுதான். வாழ்வியல் சோகத்தை கவிதையில் காட்டும் சூர்யதாஸ் - 'இருபக்கமும் ராஜாக்கள்இருந்து ஆட்டத்தை தொடங்கினாலும் சிப்பாய்கள் நாம் தான் வெட்டுபட்டு சாகிறோம்' எனும் சதுரங்க ஆட்டத்தினூடே நிகழ்கால வாழ்வினை காட்டி செல்கிறார். 'நம் பல கவிதைகளில் வாழ்நிலம் பதிவாகாமல் தப்பித்து விடுவது எப்படியென விளங்கவில்லை. மீறி எழுதினாலும் அது அந்நிய வாழ்க்கையைத்தான் பிரதியெடுக்கின்றது. உணவில் இட்லி, தோசையெல்லாம் வராது. ரொட்டிதான் வரும். நம் மரபில் இல்லாத அந்நியச் சாத்தான் எங்கும் வலம் வருவார். மெடூஸா போன்ற கிரேக்க புராணத்துக் கதாபாத்திரங்கள் மொழி மாற்றுப் படங்களுக்கு வாயசைப்பது போல் காட்சிகள் இடம் பெறும் கவிதைகளும் இங்கு ஏராளம். ஆனால் வட்டார மொழி மட்டும் ச்சீய்...' எனும் நக்கீரனின் கணிப்புப் போல, இன்றைய இந்தச் சக்கைச் சூழலில் சூரியதாஸின் முனியும், பாலிடாலும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்கின்றன. பெண்ணின் உள்ளத்தை, அவளின் ஆழ் மன ஏக்கத்தை நயமாகப் பின்வருமாறு பதிகின்றார் சூர்யதாஸ் - 'ஒரு ரயில் பயணத்தில் மடியில் கிடத்தி கதை சொன்ன ஜாயக்கா அடிவயிற்று சூடு ஒரு பக்க காதோடும் கன்னக் கதுப்போடும் இன்னும் கதகதப்பாய் இருக்கிறது. வெடித்த பருத்திகாட்டில் முனியடித்து இறந்த முதிர்கன்னி அக்காவின் அருகில் பாலிடாயில் பாட்டில் கிடந்தது ஏனென்று இப்போது புரிகிறது.' வழுக்கி விழசெய்யும் விளக்கெண்ணை புன்னகை, வாழ்தலுக்கான எரிபொருள், முத்தங்களின் வாசனை, விழியற்ற அன்பு போன்ற கவிதைகளில் வரும் சொல்லாடல்கள் வாசிப்புக்கு உகந்தவை. சிறந்த உரையாடல்களை வாசக மனதில் நிகழ்த்துபவை. கரை ஒதுங்கிய வலம்புரி சங்கு - அகதிகள் ஈழம் பற்றி குறீயீட்டு மொழியில் பேசும் இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை. கலையென்பது சமயங்களில் நம்மிலிருந்து நாம் தப்பிக்க முயலும் ஒரு தற்காலிகப் புகலிடமாகத் தஞ்சமடையும் வடிகால் - அதனை நான் பலமுறை குற்றவுணர்வின் பாற் பயன்படுத்தி இருக்கின்றேன். மிகக் குறிப்பாக ஈழத்தின் இனப் படுகொலைகளுக்கு மெளன சாட்சியாக, நின்றிருந்த அவலப் பொழுதுகளில். ஆனால் சூர்யதாஸ் அவரது உணர்வை எதிர்கால நம்பிக்கையோடு முன்வைக்கிறார் பின்வரும் கவிதையில். நவீன கவிதைக்கான வரம்பு மீறாமல் பிரச்சார அரசியல் சாயம் பூசாமல் ஆனால் காத்திரத்துடன் கரை ஒதுங்கும் ஒரு சங்கு. அதில் தன் பெயர் எழுதுபவன், தன்னைக் காட்சி பொருளாக்குபவன் குறித்துப் பேசுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்று வாசிப்பவனுக்கு தெரியாமலா இருக்கும்.. ..அந்த சங்கை .. 'காதில் வைத்து கேட்டால் தெரியும் அது அகதி அல்ல எப்போதும் தன்தாய்நாட்டிலேயே வாழ்வதை சொல்லும் தன்னை கரை ஒதுக்கியவன் கதை முடியும் நாளில் ஊதும் அதன் ஓசை சங்கநாதம் என்றே அழைக்கப்படும்...' என்று முடிக்கும் போது சங்கு என்பது சங்கு அல்ல தமிழ் அகதி என்ற புரிதல் வலிக்கின்றது. நாளுக்கொன்றாகப் பல கவிதைத் தொகுப்புகள் வெளிவந்து பயமுறுத்துகின்ற சூழலில், சமகாலச் சமூகத்தினை நுட்பமாக அவதானித்துப் பதிவு செய்த, பிரச்சாரத் தொனி தவிர்த்த தொகுப்பு இது. வாசகன் சரளமாக உள்நுழையும் எளிமையுடன், மண்தரைக் கோலமுடன் வரவேற்கின்ற அணுக்கமும் கொண்டிருக்கின்ற இத் தொகுப்பு, தமிழ் 'சென்சிபிலிட்டி'க்கு நெருக்கத்தில் வருகின்ற நவீன கவிதைகளைக் கொண்டிருக்கிறது. 'ஒவ்வொரு முறை ஊர் திரும்பும் போதும் வெகு தொலைவு நகர்ந்திருக்கிறது எப்போதும் அங்கேயே இருக்கும் என் ஊர்' எனும் கார்த்திகாவின் கவிதையைப் போல, ஒவ்வொரு முறை போகும்போதும் சூர்யதாஸின் சட்டையில் இன்னொருவர் வாசனை தான்! அதுவே அதன் வசீகரமும், புதுக்கமும்! * * * * *

தொடர

ஒடுக்கப்பட்ட தேத்தின் ஒட்டுமொத்தக் குறள் - விழுங்கப்பட்ட விதைகள் - திருக்குமரன்

கவிதைக் குரல் இதயத்திலிருந்து எழ வேண்டுமே தவிர புத்தியிலிருந்தல்ல - வால்ட் விட்மன் ‘சாகாமல் இருப்பதற்காக’ மட்டுமே கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கின்ற திருக்குமரனின் விழுங்கப்பட்ட விதைகள் கவிதைத் தொகுப்பினைச் செத்துச் செத்துத்தான் படிக்க வேண்டியிருக்கிறது. ஈரக்குரலையைப் பிழிந்தெடுக்கின்ற குற்ற உணர்வின் கனம் தாங்காத சுட்டுவிரலால் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுகின்றேன். ‘கண்ணீரோடடேதான் விதைத்தோம் கம்பீரத்தோடேதான் அறுப்போம்!’ எனும் அவரது அந்த வரிகளின் மேல் விழுகின்ற என் சொட்டுக் கண்ணீரில் பிரதிபலிக்கின்றது எனது கையாலாகாத பேடித்தனம். வாழ்வதற்கான எல்லா உரிமைகளையும் உடைய எம் இனத்தின் ஒரு பகுதி அடியோடு கருவறுக்கப்பட்டதை நான் வேடிக்கை பார்த்த அவலத்தை, நாளாந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரு பசி ஏப்பத்தில் மறந்து போனதை, திருக்குமரனின் ஒவ்வொரு கவி வரியும், உந்திச் சுழியில் முள்ளாய்த் தைக்கிறது. ஐம்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் தீரமும், பெருந்தியாகங்களும் பயனற்றுப் போனமைக்கு நானும் ஒரு மௌனசாட்சி எனும் துரோகத்தின் கொடுங்கயிறு என்னை மூச்சிறுக்குகிறது. நேற்றிருந்தவர் இன்றில்லை எனும் பெருமையினை உண்மையிலேயே உடையதா இவ்உலகு எனும் கேள்வி உறுத்த, உறவுகளை விட்டு, உயிர் நசிந்து, உடல் நொந்து, அயல் தேசமொன்றில், ஆன்மாவின் சுயபலம் ஒன்றில் மட்டுமே தொங்கிக் கொண்டுத் தக்கை வாழ்வு வாழ்கின்ற அவரது கவிதைக்குள் பயணிக்கிறேன். "கண்டங்களும் கடல்களும் கடக்கக் கடக்கத்தான் / திரும்பித் செல்ல வேண்டும் என்ற எண்ணம் / எம்முள் தீவிரமாகிறது!" என்கிற திருக்குமரனின் குரல் தனிக்குரலல்ல. போரின் எச்சிலென நிர்க்கதியாய்ப் புலம்பெயர்ந்து, தலைமறைவு வாழ்வு வாழ நேர்ந்துகொண்டிருக்கும், அத்தனை பேரின் ஒற்றைக் குரலும். ஒடுக்கப்பட்ட தேசத்தின் ஓட்டுமொத்தக் குரல், ஓடிப்பறக்கிறது காலம் எனும் கவிதையொன்றில் தெரிக்கிறது. என்றேனும் ஊர் திரும்ப நேர்ந்தால், ஊரின் நிலை எவ்வாறிருக்குமெனச் சொல்கையில், "நண்பர்கள் பெரும்பாலும், திக்கொன்றும் திசைக்கொன்றும் / கண்பார்த்துப் பேசேலாக் காலத்தில் இருப்பார்கள் / நல்லூர் நம்முடைய செனற் இன்றி வெறித்திருக்கும் / எங்கேனும் கள நண்பர் வீடென்று கண்டுவிட்டால் / அங்கேயும் படமும் மாலையுந்தான் மீந்திருக்கும்" எனும் வரிகள் வாழ்வதற்கான எந்தவிதப் பிடிப்புமின்றிச் சருகாய் நகருகின்ற வலியினைச் சொல்கின்றன. தொகுப்பின் கவிதைகளில் மரபின் சந்தமும், கோர்வையும் உணர்ந்த பின்பே, அவை அகவற்பாக்களெனவும், அறுசீர்விருத்தத்தில் அமைந்தனவென்றும் அறிந்தேன். ரஷ்யக் கவிதை உலகின் மிக முக்கியமான கவிஞர் மரீனா ஸ்வெட்டயேவாவினைப் பற்றிப் பிரம்மராஜன், "அலெக்ஸாண்டர் ப்ளாக் பயங்கர வருடங்கள் என்று அழைத்த ரஷ்யாவின் வரலாற்றுக் கட்டத்தில் கவி - சாட்சிகளாகவும், தேசத்தின் குரல்களாகவும், அதன் மதிப்பீடுகளை நிலைப்படுத்து பவர்களாகவும் இருந்த சிறு குழுவில் தன் தளர்வுறாத நேர்மையையும், திறன்களையும் வெளிப்படுத்தினார் மரீனா" எனச் சொல்லிவிட்டு, "தனது நாற்பத்தெட்டாவது வயதில், மனிதனால் பொறுக்க முடிந்த அளவு வாழ்க்கையின் வெளி விளம்பில் அதுவரை வாழ்ந்த மரீனா, 31 ஆகஸ்ட் 1941ல் தற்கொலை செய்து கொண்டார்" எனக் குறிப்பிடுகிறார். மனிதனால் பொறுக்க முடியாத வன்கொடுமைகளை, மனிதஉரிமை மீறல்களை, இடப்பெயர்வை, மரணங்களை, நிலமற்றுப் போவதை, முடமாக்குதலை, மொத்தத்தில் சாம்பலான ஒரு நிலத்தின் குரலைக் கவிதைகளாக்கியிருக்கிறார் திருக்குமரன். இதில் கவிதை பற்றிய கோட்பாடுகளோ அல்லது இவை நவீனக் கவிதைகளா எனும் கேள்விகளோ அர்த்தமற்றவை. எமிலி டிக்கின்ஸன் ழபைபiளேடிn க்கு எழுதிய கடித வரிகளாகப் பிரம்மராஜன் பதிவு செய்திருப்பதை இங்கு நினைவு கூர்கிறேன் : “If I read a book and it makes my whole body so cold that I know no fire can ever warm me, I know that is poetry” திருக்குமரனின் மனைவி எழுதிய கடிதங்கள் கவிதையும், நானும் மகனும் கவிதையும் ஒருபோதும் கதகதப்பு ஊட்ட முடியாத சவத்தின் சித்தரிப்பை நமக்குத் தருகின்றன. கணவன் விட்டுச் சென்ற செருப்பு முதல் கவிதையில் ஒரு வலி மிகுந்த குறியீடாகின்றது. அந்தச் செருப்பு கணவனது இருப்பைச் சொல்கின்ற ஸ்தூலப் பொருள் என்பதையும் தாண்டிப் பிறிதொரு கனமான தளத்திற்கு வாசகனைக் கூட்டிப்போகின்றது. மனைவி எழுதுகிறாள் - "நீ நாளாந்தம் போட்டுத் திரிகிற செருப்பு / அப்படியே இன்னும் வாசலில் கிடந்தது / இப்போது உங்கள் மகன் அதைக் கொண்டோடித் திரிகிறான் / மேசையில் வைக்கிறான் / கட்டிலில் வைக்கிறான் / சாமித் தட்டில் கூட ஒரு நாள் வைத்திருந்தான் / செருப்பை ஏன் இங்கெல்லாம் வைக்கிறாய் / எனக் கையோங்கினால் அப்பா / எனக்காட்டி அழ வைத்து விடுகிறான்" கவிதைகளில் பெரும்பாலும் உரைநடை தூக்கலான வரிகள் தான் - ஆனால் அதன் பின்னிருக்கும் வலி சத்தியமானது. தொகுப்பின் மிக முக்கியமான கவிதையென நானும் மகனும் கவிதையைச் சொல்லலாம். நாளைய தலைமுறையின் இன்றைய கேள்விகளுக்கான விடை நேற்றைய நிகழ்வுகளில் இருக்கிறது என்பதை மிக அழகாகச் சொல்கிறது இக்கவிதை. "ஒவ்வொரு மகனும் உன் போலவே / ஆயிரமாயிரம் கேள்விகளுடன்" என்ற வரிகளுடன் கவிதை முடிந்துவிட்டது. அடுத்த வரிகளின் விவரிப்புக்கள் அனாவசியம். ‘நிச்சயமின்மை’ எனும் சொல்லே இன்றைக்கு ஒவ்வொரு ஈழத் தமிழரது தலைக்கு மேல் ‘Damocles Sword’ ஆகத் தொங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும், நடந்து முடிந்த தியாகங்களும், விடுதலைக்கான ஐம்பது வருடப் போராட்டங்களும், ‘வெறும் கனவாய்ப் பழங்கதையாய்ப்’ போயினவோ எனும் பெருந்துயரே புலம்பெயர்ந்து அலைகின்ற ஒவ்வொரு தமிழனின் துக்கம் என்பதனையும் திருக்குமரனின் அனைத்துக் கவிதைகளும் முகத்தில் அறைந்து சுட்டுகின்றன. வெறும் வலியை, வேதனையை, இருப்பின் கொடுமையினைப், பிரிவின் ஆற்றாமையை, வேர்களற்றுப் புலம்புதலைக் கவிதைக்குரிய ‘இலக்கணத்திற்குள்’ (அவை நவீனமோ, மரபோ), திருக்குமரனின் கவிதைகள் சொல்கின்றனவா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இவை அப்பட்டமான வலியைக், குமுறலை, துரோகமிழைத்த சக போராளியைக் கண்களைச் சந்தித்து, "மாற்றுக் கருத்தெண்டும் மயிரெண்டும் கதையளந்தே / காட்டிக் கொடுத் தழித்தோர் ஒரு பக்கம் / நீ வேறு / கூட்டிக் கொடுத்தெம்மைக் கொல்கிறாய் / வெடிபட்டு மண் வீழும் வீரம் உனக்கில்லை / அடிபட்டுச் சாகாதே" என்று நேர்மையாகச் சொல்கின்றன என்பதே எனக்கு முக்கியம். மனம் வெதும்பி, விரக்தியின் உச்சத்திலிருக்கின்ற ஒரு போராளியிடம் திருக்குமரனது இக்கவிதையொன்று ‘விடுதலைக்கான ராகமொன்றை’ மீண்டும் தயார் செய்யலாம்! நிசம் உணர்ந்தணிந்த நெருப்பாடை எனும் கவிதையில் திருக்குமரன் - "வெடித்த குண்டுகளின் / வீச்சில் சிதறிப்போய் / துடித்துக் கொண்டிருக்கும் துண்டுத் தசைகளிடை / சாதியினை மட்டும் சரியாகப் பிரித்தெடுத்து / நாலு சொல்லு பெண்ணியத்தை அதற்குள் / பிரட்டிக் குழைத்துவிட்டு / மாற்றுக் கருத்தாளன் / என்கின்ற மறைப்புக்குள் / மாற்றானின் திட்டத்தை மறைத்து மேட்டிமையில் / இது எங்கள் நாட்டுக்குரிய நல்ல கறி" எனத் தருவது சரியா? எனக் கேட்கின்ற இவரது கேள்வி மிக முக்கியமானது. இங்கு, இரத்தமும், சதையுமான ஒரு போராட்டத்தில் புத்தி ஜீவிகளின் பங்களிப்பை அல்லது அவர்களது நிலைப்பாட்டைத் தன் எளிமையான மொழியில், திடமாகக் கேள்விக்குள்ளாக்குகிறார். இப்படிப்பட்ட தொகுப்புகளுக்கு ‘வாழ்த்துரை’ அல்லது ‘விமர்சனம்’ என்கிற சொல்லே மிகப் பெரிய அபத்தம். ஒரு பகிர்தல் மட்டுமே சாத்தியம். கவிதைகள் கிளறிய எனது மனவோட்டத்தைக், குற்றவுணர்வின் மை கொண்டுக் கொட்டித் தீர்த்த சிறு பகிரல் மட்டுமே இது. தனது பிறப்பின் பேறாகத் தன் காலத்திற்குள் தன் தேசம் விடியலைச் சுவைப்பதைக் காணத் தவமிருக்கும் திருக்குமரனுக்கு, அவரது அந்தத் தளராத நம்பிக்கைக்குத், தோள் கொடுக்கும் ஒரு சகோதரி, சமயத்தில் அவரது ஒரு சொட்டு கண்ணீரைத் துடைக்கும் சுட்டுவிரல் - இவை மட்டுமே சாத்தியம் இப்போதைக்கு! செக்கஸ்லோவாகியாவின் நவீன கவிஞர்களின் ஒருவரான மிராஸ்லாவ் ஹோலூப்பின் ‘A History of Lesson’ என்ற கவிதையில் வருகின்ற ஒரு வரி உலகப் பிரசித்தம். அந்தக் கவிதையில் "ராஜ்ஜியங்களின் பெருமிதமான விவரணைகள், போர்கள், மரணதண்டனைகள் ஆகியவற்றின் விளக்கங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை கேட்கிறது" - அந்தக் காலத்திலும் கூட வலித்திருக்குமா? எல்லாக் காலங்களிலும் வலி இருப்பதுதான் - ஆனால் ஈழத் தமிழரின் வலி என்பது சாதாரணமானதல்ல; கவிதை அதன் ஒரு நக நுனியளவைச் சொல்ல முயல்கிற சிறு ஊடகம் மட்டுமே. படித்து முடித்தவுடன், மிக வலிக்கிறது திருக்குமரன். நெஞ்சு பொறுக்காத வலி... பகிர்ந்துகொள்கிறேன், குற்றவுணர்வின் முட்சிலுவையுடன்.... * * * * *

தொடர

முரசென ஒலிக்கும் பெண்குரல்: காதலும் தொலைதல் நிமித்தமும் - Zaraவின் கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

"பச்சை நிற முட்களை மறைக்கும் நினைவே இல்லாமல் - அடர்த்தியின்றிக் தனிர்த்திருக்கும் இலைகளின் உச்சியில் ஒரு ரோஜா - வெள்ளை ரோஜா. பார்க்கும் முன்பு செடியில் இருந்தது. பார்த்த போது கண்ணில் இருந்தது. இப்போது எனக்குள் இருக்கிறது" என்பது மாதிரி தான் ஒவ்வொரு கவிதையும். எழுதுகின்ற தருணத்தில் கவிஞனிடத்தில். வாசித்த பின்பு எனக்குள். அச்சில் ஏற்றியபின்பு உங்களிடத்தில் ஒட்டிக் கொள்ளும் தத்துப்பிள்ளை இந்தக் கவிதை ரோஜாக்கள். "என் கனவுகளைப் பேச நான் இன்னும் விழிக்கவில்லை" என்றொரு வரி உண்டு. இப்பொழுதுதான் விழித்து அவரது கனவுகளுடன் நம்மைக் கைகுலுக்க வந்திருக்கிறார் Zara. Zabi zabi என்ற Zara முகம் மறைத்து முகநூலில் கவிதைகள் எழுதிவந்தபோது என் நண்பன் அமிர்தம்சூர்யா மூலம் பலருக்கு அடையாளம் காட்டப்பட்டவர். அவ்வாறே எனக்கும் அறிமுகமானார். தற்போது தன் முகம் காட்டி, சமூக அச்சம், மனத்தடை நீங்கி தனது முதல் கவிதை தொகுப்பை வெளியிடும், இஸ்ஸாமிய சமூகத்தின் ஒரு புது சுதந்திர குரல் Zara வுடையது என்பதில் மிகை மகிழ்ச்சி. தமிழ்க்கவிதை வெளியில் ஆங்கிலத்தில் பெயர் பொறித்து வெளியிடுவது குறித்துப் புருவங்கள் உயரலாம். எனினும் அது அவரின் விருப்ப தேர்வு. Zaraவின் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் - திகட்டத் திகட்டக் கொஞ்சலோடு காதல் பேசும் பெண்குரல் தன் துக்கங்களைக் கதை வடிவிலான நீள் கவிதைகளில் குமுறும் குரல் தன் தொலைதலை அறிவிக்கும் கையறு நிலை குரல். Zaraவின் முதல் வகை கவிதைகளில் முத்தமிருகம், இரவல்வாழ்க்கை, உன்னை போல் அச்சில் வார்த்த வலி, வெட்க வேலி, மிருக சுகம் என்ற வார்த்தை சொக்கட்டான் ஆட்டத்தில் அசத்துகிறார். அதைப் படிக்கும்போது அமெரிக்கக் கவிஞன் அலென் கின்ஸ் பெர்க் எழுதுவானே. "காதல் ஒரு மழையைப் போல் என் மீது படிகையில் நான் ஏன் கவலைப்படவேண்டும் - அப்படி கவலைப் படாதவராகப் பர்தாவுக்குள் பெளர்ணமியாய் காதலில் பிரகாசிக்கிறார். பின் அவரே அக்காதலைச் சாடவும் செய்கிறார். அதற்கு ஒரு உதாரணம் பின் வருகின்ற நான் சிலாகித்த கவிதை இக்கவிதை - "பூனையைக் கொன்று விடு பயந்துபயந்து பூனைக்குட்டிப்போல் எனக்குள் நுழைகிறது. உன் ஞாபகங்களை முதலில் நக்கிப்பார்க்கும் மடியில் பதுங்கும் போகுமிடமெல்லாம் பின்னாடியே அலையும் பின்பு தான் கீறிப்பார்க்கும்" பூனையைக் கொன்றுவிடு எனும் சொற்றொடரில் சிலி நாட்டை சேர்ந்த நிக்கனார் பாராவின், "குழம்பி போகாதே ஒரே நேரத்தில் இரண்டு நகரங்களில் என்னைக் காண நேர்ந்தால் இரண்டு இடங்களிலும் நான் ஒரே மனிதன் தான்" என்ற வரிகள் நினைவிற்கு வர, இரண்டு மனநிலைகளைக் கவிதையில் காட்டும் Zara-வை உள்வாங்கிக் கொள்கிறேன். ரசிக்கிறேன் வியக்கிறேன். ஆம் என ஒப்புக்கொள்கிறேன். Zaraவின் இரண்டாம் வகை நீள் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதைக்கான கூறுகளைக் கொண்டுள்ளது. புனைவால் பின்னப்பட்ட கடவுளின் ஆட்டம் கவிதையும், ரத்தமும் சதையுமாய் சமூகத்தை எதிரொலிக்கும் நா ச்சாதி வெறி புடிச்சவள்ளே என்ற கவிதையும் மழையை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறுவிதமாய் எதிர்கொள்ளும் கிராமத்து மழை என்ற கவிதையும் நீ என்னிடத்தில் இல்லை லிஸ்ஸி என்ற ஒரு இளம்பெண்ணின் கருக்கலைப்பு காட்சிப்படல கவிதையும் மனபிறழ்வில் நான் என்ற கவிதையும் வாசிக்க ருசியானவை. அதிர்வில் அச்சப்படவைப்பவை. ஆனால் ஒரு வேகத்தடை கவிதைசாலையில் வந்து விடுகிறது. அதற்கு காரணம். அவற்றின் உரையாடல் மொழிதான். Zara வுக்கு எழுத்தைக் கைப்பற்றத் தெரிந்து இருக்கிறது.அதில் தனது மகிழ்வை துயரை ஏக்கத்தை பதிவு செய்யவும் தெரிந்து இருக்கிறது.அதற்கு மூல காரணமாய் காதலை முன்னிருத்துகிறார். பெண்களின் அக மற்றும் புற உலகின் எல்லா நெருக்கடிகளும் வலிகளையும் நுட்பமாக உணரும் Zara, காதல் கவிதை எழுதும் போது அட என வியக்க வைக்கும் Zara, வலிகளை எழுதும் போது மட்டும் நீள் கவிதையாக கதைசொல்லி போல் உரையாடலுக்குத் தாவி விடுகிறார். அங்கு கவித்துவம் குறைந்து கூக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. "கவிதையில் சொற்சுருக்கம், நுட்பம், அழகியல், தொலைவு, ஒருங்கிணைந்த பார்வை வேண்டும்" அல்லவா? சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மையை, மெளனங்களை பொத்திவைக்கும் யுக்தியை, பெரும் எரிமலையை வார்த்தைச் சிமிழுக்குள் அடைக்கும் தன்மையை காதல் கவிதையில் புனைந்தது போலவே இதிலும் அவர் மடைமாற்றவேண்டும். "குட்டி மூங்கில் செடி பேன் காற்றில் அசைகிறது அது ஒற்றையாய், துரதிருஷ்டத்தோடு போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நான் ஓரத்தில் நிற்கிறேன் அது, தோற்க நேரிடும் போது கூட நிற்பதற்கு" எனும் கவிதைப்போல எளிமையில் ஆழம் சேர்க்கின்ற நயம் கைகூடி வரவேண்டும். கூடிய விரைவில் வரும். இனி வரும் காலத்தில் காதல் கவிதைக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து Zara வின் எழுத்து பயணம் அடர்த்தியான, சமூகத்தில் அதிர்வு எழுப்பும் பெண்ணின் மனமறைவு வலிகளை காட்டும், தன் இனத்துக்கு புது பாய்ச்சல் எழுப்பும் சமூகமாற்றக் குரலாக கட்டமையவேண்டும். அது அவரால் முடியும். அதற்கான தகுதி அவருக்கு உண்டு. அதற்காக இப்போதே என் வாழ்த்துக்கள். மூன்றாம் வகை கவிதைகள்அளவில் நடுத்தரமானவை - கூடவே, அவை எடுத்துக்கொண்ட கருப்பொருள்களும் மிக வித்யாசமானவை. ஒட்டுமொத்த கவிதைகளில் நான் இந்த பிரதியில் உணர்ந்தது என்னவெனில் காதலும் காதலின் பொருட்டான தொலைதல் நிமித்தமும் தான். இதை எளிதாக வரையறுத்து விடலாம். "ஞாபகம் வருவதுண்டு எனக்கு, மணலில் படுத்தும் அமர்ந்தும் நாம் பங்கிட்ட அந்தரங்கமான அந்தமாலை நேரம், எப்படி வீசியெறிந்தாலும் சுழன்று திரும்பும் அந்த அந்தி!" என சொல்லும் ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதை போல, Zaraவின் கவிதைகளில் சுழன்று சுழன்று திரும்பும் அந்தி அத் தொலைதல் தான். ப்ளாட் எண் 67/4 என்ற கவிதையில், பரஸ்பர மானுட அக்கறையின் ஸ்பரிசம் தொலைந்து போனதைச் சொல்கிறார். ஒற்றைக்கொலுசு கவிதையில், "முழுதும் தொலைந்ததும் மொத்தம் தொலைத்ததும்" என்று எழுதிச்செல்கிறார். "தொலைந்தது, தொலைத்தது" என்பதில் நுட்பமான வித்யாசம் இருந்தாலும் இறுதி முடிவு என்னவோ இழப்பு தானே. "நிராகரிப்பின் வலியாய் கடற்கரையில் ஒருத்தி முணுமுணுத்தபடி சுற்றிக்கொண்டு இருந்தால் அவளது அம்முணகலைக் காது கொடுத்து கேள். தொலைச்சுட்டேன், தொலைச்சுட்டேன் என்றுஅவள் பிதற்றக்கூடும். அது என் பிரதியாக இருக்கக்கூடும். இல்லை அது நானாகவும் கூட இருக்கக் கூடும்" எனும் Zaraவின் குரல் தன்னிலையின் குரல் மட்டுமல்ல. நிராகரிப்பின் வலியில் துவளும் அனைவருக்குமானது. அதன் எதிரொலியைப் புரிந்து வாசித்து உள்வாங்குதலே உண்மையான பகிர்வனுபவம். அசல்முகம் தொலைப்பது என்பதைக் கடந்து முகமூடிகளும் கூடத் தொலைந்து போவதாக ஒரு கவிதை சொல்கிறது. இது அபாக்கியமா? பெண் வாழ்வின் அபத்தமா? என்ற கேள்வி எழும்புகிறது. "உன்னைத் தேடுதல் என்பது தொலைவதற்காகத் தான்" என்ற வரிகளை வாசிக்கையில், தேடுதல் என்பது தொலைவதற்காக இல்லாமல் கண்டடைவதற்கானதாக இருந்தால் அத் தொலைதலில் ஒரு நியாயப்பிரமாணம் இருக்குமே என்று சொல்லத்தோன்றுகிறது. இது இப்பிரதியின் படைப்பாளிக்கானது மட்டுமல்ல, பெண்கள் அனைவருக்குமானதே. "கையில் ஒரு விளக்கேந்தி என்னைச் சந்திக்க வரவில்லை யாரும். நானே எனக்கு வழிகாட்டிக் கொண்டு அந்த மங்கிய நிலவொளியில் படிகளில் எறிச் சென்றடைய வேண்டியிருந்தது" என்றதும் ஒரு பெண்குரலே. அது புலம்பலற்று, தனிமையின் உரமுடன் தனது தேடலைச் சென்றடைந்த பூர்த்தி எல்லாப் பெண்களுக்குமானதே!. மற்றொரு கவிதையில் "தொலைதல் உனக்குப் பிடிக்கிறது. கடைசியாய் தொலைந்தது கலவியின் போது தான்" என்கிறார் Zara. இந்த தொலைதலில் இரு தரப்பும் தொலைந்து ஒரு தரப்பை கண்டடைதல் எனில் தவறில்லை. ஆனால் தனதான இருப்பே தொலைவது இங்கு தான் எனில், கலவியும் அடக்குமுறையின் அரூபவடிவமாகப் புலப்படுமாயின் அந்த அடக்குமுறையும் கண்டனத்துக்குரியது தானே. தீராத ருசியே ஒரு தண்டனைதான் - கலவி அப்படிப்பட்டதொரு தண்டனையெனில், அதில் தொலைதல் சுகமாவது ஆண், பெண் இருவரும் சுயம் மறந்து, தொலைந்து, கலந்து துய்க்கும் போதுதானே? "நீ மறைத்த பலான புத்தகத்தை எடுத்து இரண்டாம் பக்கம் திருப்பும் போது எதிர்ப்பட்ட உன்னின்பார்வைகளை சந்திக்க முடியாமல் தொலைந்து மடிந்து போயின என் பால்யத்தின் பொழுதுகள்." என்றகவிதை வரிகளில் பால்யத்தை தொலைப்பதற்கும் ஒரு ஆண்மகனே காரணமாயிருக்கிறான். பல தொலைதலுக்கு அவனின் காதலே பிரதானாமாகிறது, ஆக, பிரதி முழுக்கத் தென்படும் எல்லாத் தொலைதல்களுக்கும் அடிப்படை காதலாகவே இருக்கிறது. இப்படியான அந்த காதலுக்குரியவனை Zara அவாச்சியமானவன் என்று அடையாளப்படுத்துகிறார். அச்சொல் எனக்கு புதிது. அவாச்சியமானவன் என்றால் குறிப்பிடத்தகாதவன் என்று பொருளாம். அவாச்சியமானவன் கொடுத்த மகிழ்ச்சியை கவிதையில் பட்டியல் இடும் படைப்பாளி அவன் கொடுத்த துயரங்களை வலிகளையும் மறக்காமல் எழுதி செல்கிறார். அந்த அவாச்சியமானவன் ஒற்றை நபர் அல்ல. அவன் எல்லா ஆண்களுக்குள்ளும் மறைந்து இருக்கும் வேறொரு நபர். அவன் மீதான கொண்டாட்டமும், அவன் மீதான குற்றப்பத்திரிக்கையும், அவன் மீதான வாழ்த்தும், அவன் மீதான சாபமும் தான், Zara என்ற இந்தப் பெண்குரலின் தொகுப்பு. இந்த குற்றச்சாட்டை நீக்கும் வழிமுறைகளைத் தேடி, இந்த சாபத்தை வரமாக மாற்றும் திட்பம் அல்லது சாபத்தை அறுத்தொழிக்கும் நுட்பத்தை இனி வரும் காலங்களில் Zara முன்னெடுக்கலாம். வாழ்வு அப்படித்தானே எல்லாம் கலந்ததொரு அபத்தம் - ஆனாலும் தீராத ருசி அதன் மீது தானே நமக்கு! பெஞ்சமின் பெரேயின் பின்வரும் கவிதையைப் பாருங்கள் - "இரவு முழுவதும் காதல் முடித்து எழுந்திருக்கும் ஒரு பெண்ணைப் போல காற்று எழுகிறது. தன் பைனாகுலர்களைச் சரி செய்து கொண்டு உலகைப் பார்க்கிறது, ஒரு குழந்தையின் கண்களுடன். எப்போதுமே பழுக்காத ஒரு பச்சை ஆப்பிளைப் போல இன்று காலை இருக்கிறது... கசப்பாக... மகிழ்ச்சியாக" எப்போதும் பழுக்காத அந்த பச்சை ஆப்பிளை ஏவாளைப் போல ஏந்துங்கள் Zara. பயணம் தொடரட்டும். * * * * *

தொடர

பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை முன்வைத்து ஒரு பகிரல்...

'சக்தி' என்பது வெறுஞ் சொல்லா என்ன? "திரெளபதியின் துகில் போல நீண்டு கிடக்கின்றது இந்தப் பாதை..." நிகழ்வு முடிந்தபின் அது நடந்த இரவும் கூட! "பாலுறவின் வேட்கையும், அது முடிந்தபின் மரணத்தின் பீதியுமே மனிதனை இயக்கும் மனவிசை" எனும் ஃபிராய்டின் கூற்றை முற்றும் நம்புபவளாகவே இருந்தேன் பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை மிகச் சமீபத்தில் அனுபவிக்கும் வரை. அந் நிகழ்வின் ஊடறுத்தலுக்குப் பின் கலையே மனிதனை இயக்கும் மனவிசை என உணர்ந்து உறுதியுடையவளாயிருக்கிறேன். எவ்வளவு இழந்தாலும் வாழ்வு முழுமை கொள்வது கலையில் தான் என்பதைத் தனது 'சக்திக் கூத்தினால்' எனக்குப் பொட்டில் அடித்தாற்போலும், முலைப் பாலமுதம் போலும் சொல்லியிருக்கிறார் பிரசன்னா ராமசாமி. கண்களும், காதுகளும் மட்டும் உள்வாங்குவதல்ல ஒரு அரங்க நிகழ்வென்பது - புலன்களின் வழி ஊடுறுவி அது ஆன்மாவைக் கத்தி முனையில் ருசிப்பது எனப் புரிய வைத்தார் பிரசன்னா அந்த 90 நிமிடங்களில். "கலை ஒரு உலக மொழி" என்பதை மெய்ப்பித்துக் கொண்டே இருந்தார்கள், இருந்தன - நடிகர்களும், உத்திகளும், ஒலி அமைப்பும், பறை இசையும். இந் நாடகம் பேசும் ஒரே மொழி - காலந்தோறும், திசைகள்தோறும், நிலமெங்கினும் பாதிக்கப்பட்ட, அழுத்தப்பட்ட, அடையாளமழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் மொழி. நிலத்தின் வலி - குறிப்பாக நமது ஈழத்தின் மறக்கமுடியா இன அழிப்பும், தொடர் வன்முறையும், புலம்பெயர் அலைந்துழல்வு அவலத்தின் துயர்மிகு வதைகளும் ஒலிக்கும் குரல்! பிரசன்னாவின் அரங்க நாடகங்கள் எப்பொழுதுமே பல்வேறு அடுக்குகள் கொண்டவை. நயமான பின்னல்களின் நகாசுகளில் செவ்விசை, கூத்து, நாட்டார் மரபுப் பாடல்கள், தொல்லிசை, நவீனக் கவிதைகள், சமகால உரையாடல்கள், மெளனங்கள் - அனைத்தையும் இழைத்து நெய்யப்படும் அற்புதமான மாயக்காரியின் சீலை முந்தானை அவை. ஒரு போதும் உரத்துக் கோஷமிடுபவை அல்ல. சொல்லப்போனால், வெறும் பிரகடனங்களில் அவை தம்மைக் கிஞ்சித்தும் விகாரமாக்கிக் கொள்வதில்லை. மெதுவாய் வெளிச்சமாகும் வரைப் பிறிபிறியாய் இருட்டை விளக்கும் உத்திகள் பிரசன்னாவினுடையவை. அரங்கத்தின் props ஆக வைக்கப்பட்டிருந்த Masks, திரெளபதியின் நீண்ட துகிலுக்கான தேடலில் கிடைத்த குருதி படிந்த பெண்களது ஆடைகள், அவள் அணிய விரும்பாத நீண்ட பொய்ச் சவுரி முடி, பாத்திரங்களின் மூன்றாவது கையாய்க், காலாய்ச் சுற்றிக் கொண்ட நீண்ட திரைச்சீல வடிவ துணிகள் - இவை அனைத்துமே சன்னஞ் சன்னமாய்க் கனம் கூட்டியவை. மெதுவாய்த் தெளியும் வரை அலை அலையாய்க் கலங்கலை வடிகட்டும் வசனங்கள், பாடல்கள், கவிதைகள் - பிரசன்னாவின் கூராயுதங்கள். அவை ஒருபோதும் பளபளப்பின் அறுவறுப்பைத் தராதவை - ஆனால் வலியின் உச்சத்தில் மரணத்தைச் சம்பவிக்கச் செய்யும் வலிமை வாய்ந்தவை. "யாராவது பேசினார்களா? ஒருவராவது ஒரு கேள்வி கேட்டார்களா?" எனப் பீமன் ஒருவனது துடிப்பில், திரெளபதிக்குப் பீஷ்மரது சாதுர்யமான பதிலுக்கான எள்ளலில், ரசாயனக் குண்டுகளால் எரியுண்டு மலடான ஈழ நிலத்தின் குரலாய், எளியவர்களின் மனசாட்சியைப் பிரசன்னா முன்வைக்கையில் கணமேனும் மரணிக்காதவர் யார்? மெதுவாய் அசையும் வரை பார்வையாளர்களின் மனத் தேக்கத்தை நொடி, நொடியாய் முடுக்கி விடுபவை பிரசன்னாவின் ஆக்கத்தில் சுழன்றாடும் பாத்திரங்களும், அவர்தம் உடல் மொழியும். 'சக்தி' என்பது வெறுஞ் சொல்லா என்ன? அது ஊழித் தாண்டவம் என்பதை இரண்டு பெண்ணுருக்களின் கட்டற்ற, ஆனால் வெகு நேர்த்தியான கலை வெளிப்பாட்டின் மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்துகின்றார். நிகழ்வின் ஒட்டு மொத்த த்வனி 'உக்கிரம்' தான். பாசுரம், கணியங் கூத்து, பறை இசை, பனுவல், கவிதை வரிகள், இடையிடை இயல்பான வசனங்கள் - அனைத்திலும் ஆர்ப்பரிப்பது 'உக்கிரமெனும்' பேருணர்வு தான். "வதை முகாம்களில் பாடல்களுக்கு இடமில்லை" எனும் துயர் மிகு நிலையில் "எனது கலைக்கப்பட்ட துகில் போல நீண்டு கிடக்கிறதந்தப் பாதை" எனும் கையறு நிலையில் "கேள்வி பலவுடையோர் கேடிலா நல்லிசையோர் கேள்வித் தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள்" கூடிய சபையில் "என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய் நின்னையெவரும் நிறுத்தடா என்பதிலர்" எனக் சினமுற்றுக் கொதிக்கையில்... எங்கும், எதிலும் 'உக்கிரம்' தான். இவ்வுக்கிரமே, ரோகிணியின் ஒவ்வொரு கண் இமைப்பிலும், உதட்டுச் சுழிப்பிலும், புஜங்களின் விரிப்பிலும், பாதங்களின் துடிப்பிலும் சுற்றிச் சுழன்றாடுகின்றது. திரேதாயுக, கலியுகப் பெண்ணாகச், சமகாலத்தில் யுத்தங்களிலும், வன்புணர்வுகளிலும், மேற்சாதி மேட்டிமை அடக்குமுறைகளிலும், கந்தல் துணியாக்கப்பட்ட பெண்ணின் நிலையைச் சுட்டுவதே இக் கூத்து என்றாலும், அது ஒரு போதும் கையறு நிலையில், இரக்கம் கோரும் உணர்வை முன்வைக்கவில்லை. காரணம், மேற்சொன்ன 'உக்கிரத்' த்வனிதான். அதற்கு மிகச் சரியான ஈடு நெல்லை மணிகண்டனின் பறை இசைப் படைப்பு. பிரசன்னா ஒருபோதும் காளியை அவளது சூலத்தினால் மட்டுமே அடையாளப் படுத்துவதில்லை. அவளது வெளித் தொங்கும் நாக்கு அவளை அதிபயங்கரியாக்கினாலும், 'அழகியல்' எனும் இரத்த பூசையை அவள் விரும்பிச் சுவைப்பவள் என்று நம்மை நம்ப வைப்பவர் பிரசன்னா. கலை ஒரு போதும் அழகியலை அதன் யதார்தத்திற்காக விட்டு விலக வேண்டியதில்லை - மாறாக உண்மையின் குரூரத்தைக் கூட ஒரு கர்நாடக ராகத்தின் நெகிழ் வடிவில், ஒரு இளகிய முகபாவனையின் கண்ணோர அசைவில், ஒரு பரத நாட்டிய முத்திரைக்கான உடல் மொழியில், மிக நேர்த்தியாக, அதே சமயத்தில் வலிமையாகச் சொல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு பிரசன்னாவின் இந்த "சக்திக் கூத்து". பிற நாடக நெறியாளர்களிடமிருந்து கம்பீரமாகவும், தனித்துவத்துத்துடனும், அவர் வேறுபடுவது கலையும், அழகியலும் வெறும் பிரச்சார நெடியின்றிச் சங்கமிக்கும் இந்த அர்த்தநரிப் புள்ளியில்தான். Art without aesthetics and truth is like copulating a corpse - and Prasanna's sucess as an artist is her undying faith in this magical combination of aesthetics & truth in Theatre without mere Vociforous Proclamations or Declarations. பிரசன்னாவின் இலக்கிய நுண்ணுணர்வு, தேர்ந்த ரசனை, கூர்த்த ருசி - இவையனைத்துமே அழகான ஊடுவாவுடன் வெளிப்படுகின்ற இந்த அரங்க நிகழ்விற்குச் செறிவு சேர்த்தவை ரோகிணியின் தன்னை முழுதுமாய் ஒப்புக்கொடுத்த நடிப்பும், ரேவதிகுமாரின் பாடல்களும், நடனமும், மணிகண்டனின் கைபற்றித் தொடரும் பறையிசையும். பாஞ்சாலியாய்ப் புரள்கின்ற ஆவேசம், சங்க மகளாய்க் காதலில் துவளும் நளினம், நவீனப் பெண்ணாய்க் கேள்விகளின் நிசர்சனத்தில் சமூகம் சாடும் திமிரல் - என ரோகிணி அனுபவித்து வாழ்ந்திருக்கிறாள். Jealousy is the word to appreciate her Histrionics. அரங்கத்தை முழுவதும் ஆக்கிரமித்து, ஆற்றல் மிக்கத் தீவிரமான தொடரியியக்கமாகப் பெண்ணை முன்னிறுத்தி ரோகிணி சுற்றிச் சுழன்றாடியும், விவாதித்தும், மெளனித்தும், உரையாடியும் 'சக்தியின்' மொத்த உருவாகத் திகழ்ந்தாள். "காற்றே ப்ராண ரசத்தைக் கொடு" என்றவள் ரேவதியின் கரம் பற்றி வான் நோக்கியபோது "ஒளியே என்னை ஆட்கொள்" என நான் கரைந்து போனேன். கட்டி முத்தங்கள் அவளுக்கு! எல்லா நாடகங்களும் ஒப்பனை, முகமூடி இவைகளின் மூலம் பூச்சற்ற, முகமூடிகள் கிழிந்த வாழ்க்கையைத்தான் பேசுகின்றன. ஆனால் அறத்தின் சிரசின் மேலமர்ந்து, அதிகாரம் எனும் நபும்சகனை சம்காரித்து, மனசாட்சியின் நாடி பிடித்து உலுக்குகின்ற காத்திரமான நிகழ்வினை, அழகியல் அற்புதத்தோடு புலன்களுக்குத் தருபவை வெகு சிலவே. பிரசன்னா ராமசாமியின் 'சக்திக் கூத்து' அப்படி ஒரு அபூர்வமான கலை அனுபவம். "கூட்டிலிருந்து விழித்தெழுந்து பயத்தோடு, பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவைக்காக குனிந்து கொடுக்கிறது வானம்" எனும் க.மோகனரங்கனின் எனக்குப் பிடித்த கவிதை வரிபோல, கலை எப்போதும் கருணையோடு எனக்காகக் குனிந்து எவ்வளவோ கொடுத்திருக்கிறது - இந்த முறை பிரசன்னாவின் "சக்திக் கூத்தின்" மூலம் - எத்தனை இழப்புக்கள் வந்தாலும் எழுந்து நிற்கவும், தட்டுத் தடுமாறி நடந்து செல்லவும் - எல்லாவற்றிற்கும் மேலாக, "நிறுத்தடா" என்று ஒரு பெண்ணாகத் திமிர்த்து, நிமிர்ந்து, வாழ்ந்து காட்டுவதற்கும்! * * * * *

தொடர

சித்ரகுப்தனைக் குழப்பும் சண்முகம் ஷான் - சண்முகம் ஷான் கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

"Phantom Lady நூலை எழுதிய வில்லியம் ஐரிஷ் இறந்தபோது துக்கம் அனுஷ்டித்தவர்கள் பங்கு மார்க்கெட் தரகர்கள் மட்டுமே மொஸார்ட்டின் மனைவி அவரது சவ ஊர்வலத்தில் இருக்கவில்லை" - ரியூச்சி தமுரா, தமிழில்: பிரம்மராஜன் கலையோ, இலக்கியமோ நிலைத்திருத்தலுக்கான யத்தனத்தில் நிலையாமையின் நித்தியத்தைப் பற்றியே சுழல்கின்றது. ஒரு ஓவியமோ, இசைக்கோர்வையோ, கவிதையோ தருகின்ற அகவெழுச்சியை அத்தனை நிச்சயமெனப் பற்றிக்கொள்கின்ற மனம், அதனை அற்பமெனக் கடந்து செல்கின்ற உலகில் தான் உய்ய வேண்டியிருக்கின்றது. சமீப காலங்களின் சமூக நிகழ் நடப்புக்களில் சோர்வுற்றுத் துக்கித்துக் கடக்கும் நாளொன்றை ஒரு கவிதையின் உணர்வெழுச்சியோ, இசையின் மாயக்கரமோ சற்றே ஆசுவாசப்படுத்தினாலும், முடிவில் இதன் பயனென்ன எனும் ஆயாசம் உச்சத்தில் இருந்த இரவொன்றில் ஷான் சண்முகத்தின் கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. சட்டென்று வந்து என்னில் ஒட்டிக்கொண்டது - "என்றாவது பசியடங்கும் பறக்கலாமென்று காத்திருக்கிறது இறகைத் தின்று வாழப் பழகிய பறவையொன்று" எனும் கவிதை நம்பிக்கையின் காத்திருத்தலோடு. செந்தில்குமார்களும், பறவைகளும், விமானப் பணிப்பெண்ணும், சிந்தாந்தத்தில் உந்தப்பட்டுக் குண்டு வைப்பவர்களும், ஊதா நிற மச்சமும், ஒற்றைக் கதவும், அம்முவும், பளவரப்பாசிக்காரனும், அவளும், அவனும், மலரும், மழையும், மரணமும், பிச்சையெடுத்தலும், சூரியனும், சாவு வீடும், மன்னிப்புக்களும், சந்திப்புகளும், பிரிதலும் பிடரியில் பூட்டிய குதிரை ஷானின் கவி உலகம். அசாரணமான கவித்துவம் கைவரவேண்டும் என்றெல்லாம் தவமேற்காத, தனதனுபவத்தை, யதார்த்தமாகவே முன்வைக்கின்ற நேரடிக் கவிதைகள் ஷானுடையவை. அவ்வப்பொழுது 'சொல்வனம்' பகுதியில் படித்தவுடன் சிலாகித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கின்ற ஷானின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வாசிக்கையில், அதுவரையில், ஒரு கீற்றாகச் சன்னல் வழி கண்ணுற்ற சிறுமியைத், திடீரெனப் பள்ளிச் சீருடையில் துலங்கும் ஒரு கச்சிதமுடனும், நேர்த்தியுடனும் விழிவிரியப் பார்க்கும் பரவசம் ஏற்படுகின்றது. நிகழ் கணங்களின் மகிழ்வில், குரூரத்தில், நிர்தாட்சண்யத்தில், கருணையில், மனித வாழ்வு இறகெனவும், நெகிழிப்பையெனவும், அலைக்கழிந்தாலும் ஒரு முல்லைக் கரமும், முற்றத்து ஊதாப்பூவும், வானம் வரை வளர்ந்த பூசணிக் கொடியும், உறக்கத்தை விட்டுச் செல்லும் ஊதா நிற மச்சமும் நிறைந்த ஷானின் கவி உலகம் எனக்கு மிக மிக நெருக்கமானது அவரது பின்வரும் "கால் உடைந்த மான்குட்டியைப் பஞ்சு போல் பொத்தி எடுத்து வேட்டையாடும் தெம்பழிந்த முதிய புலியின் வாயருகில் வலிக்காமல் இறக்குகிறேன் திரும்பி நடக்கும் வழியோரம் குழம்பி நிற்கிறான் சித்திரகுப்தன்" எனும் கவிதையால் தான். இந்த ஒரு கவிதை போதும் ஷான் - மனித வாழ்வின் முரண் அனைத்தையும் முறுக்கி இணைக்கின்ற கண்ணியைக் கவிதையின் மாயக்கரம் 'அவரவர் அறம்' எனும் சிற்றுளி கொண்டு கட்டவிழ்க்க! இந்த ஒரு கவிதை போதும் ஷான் - இனி இந்த வருடத்திற்கு இதற்கு மேல் எழுதாவிட்டாலும் - இதன் அடர்வும், செறிவும், தரிசனமும் போதும்! என் வாழ்வு நைந்து போய், நம்பிக்கை இற்று, புறச்சூழலின் நொய்மையில் கையறு நிலையில், காலொடிந்து கிடக்கையில், கருணைக் கொலையினைப் புரிந்து கொள்ளலின் தராசில் பரிந்துரைக்கும் அதேசமயம் உடல்தானமளிக்கின்ற இந்த அறம் சரியா, தவறாவெனச் சித்ரகுப்தன் குழம்புவான்தான் - சந்தேகமில்லை ஷான்! இந்தச் சரிக்கும், தவறுக்குமான ஊகலாட்டத்தில் தானே, கொலையும், கருணையும் சந்திக்கின்ற முரண் நகையில்தானே, ஒருவனுக்கு உணவு மற்றவனுக்கு மரணம் எனும் அசமனில் தானே, வாழ்வின் அச்சும், மரணத்தின் முற்றும், சுழன்று, நிலைபெறுகின்றது. ஒரு கவிஞனின் 'அறிதழல்' கனன்று எரிவதும் இந்தச் சுடரை உள்ளில் உணர்ந்து, வாசகனுக்கு அதனைக் கைமாற்றுவதில் அவன் கைதேர்வதும் இந்தக் கணத்தில்தான். ஆக, இந்த ஒரு கவிதை போதும் ஷான் எனக்கு - இந்த இரவைக் கடந்து செல்ல, உலகிற்கு நிரூபிக்க அவசியமில்லாத எளிய அறமொன்றைப் பற்றியபடி கதகதப்பாய் உறங்கிவிட! உங்களை விட நன்றாகக் கவிதை எழுதுபவன், உங்களது 'சொல்லுதல்' அடங்கியது உறுதியானபின் சொல்லத் துவங்குபவன், பத்து வரிகளில் ஒரு கவிதை தேவையெனில் உடன் எழுதுபவன், உங்களால் எழுதப்படாமல் தொலையப் போகும் மற்ற சில கவிதைகளை எழுதுபவன் - எல்லா 'அவன்களும்' நீங்கள் தானென்பதை, எல்லாச் செந்தில்குமார்களிலும், கார்த்திகேயன்களிலும், 'ஷான் என்று பெயர் சூட்டிக் கொண்ட' நீங்களுமிருப்பதை வாசகன் அறிவான். எல்லா விமானப் பணிப்பெண்களிலும், மாயக்காரிகளிலும், நிறம்மாறிகளிலும், பிறப்புறுப்புச் சிதைந்த பெண்களிலும், காதலிகளிலும், கண்ணாமூச்சிகளிலும், சாம்பல் துகள்களாக இறந்துகிடக்கும் பாட்டிகளிலும் - நானும் இருக்கிறேன் என்பதை வாசகன் உணர்வான். நகாசு வேலையில் கவனம் சிதறாமல், பட்டம் விடுகின்ற கவனக் குவித்தலில் கைதட்டல் பெற்றுவிடுகின்ற சிறுவனின் அசாத்தியமான நுண்ணுர்வின் கண்களோடும், அகக் கிளர்வுடனும் நம்மை நீங்கள் இக் கவிதைகளில் பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! கூடுதல் வாழ்த்துக்கள் - ஊதா நிற மச்சமுடைய திருடனாய்ச் சித்திரகுப்தனைக் குழம்பச் செய்வதற்கு - பாவ, புண்ணியக் கணக்குகளற்ற பேருலகமல்லவா கவி மனம்! நம்மைக் களைந்து தூக்கில் தொங்கும் புத்தாடையாய்க் கவிதை மென்மேலும் உங்களில் உயிர்க்கட்டும்! * * * * *

தொடர

சீனிவாசனது - ஓவியம் குறித்த புத்தகத்தை முன்வைத்து...

"என்னுடைய ஓவியத்தில் நான் வாழ்ந்தது போலவே, ஒரு பார்வையாளரும் வாழ வேண்டும் என்று எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்க முடியும்? ஒரு ஓவியம் கல்தொலைவுகள் அப்பாலிருந்து எனக்கு வருகிறது. எவ்வளவு தொலைவிலிருந்து நான் அதை உணர்ந்தேன், அதைப் பார்த்தேன், அதை வரைந்தேன் என்று யார் சொல்வது..." - பிக்காசோ ஓவிய நுண்ரசிப்பில் எனக்கு ஆழங்கால்படுதலோ, நுண்மாண் நுழைபுலமோ இல்லை. என்றாலும், கலை தரும் இன்பம், அதிர்வு, கிளர்ச்சி, சமன்குலைப்பு, - எனும் உணர்வின் பால் அவற்றோடு உறவு கொள்ளும் எளிய பயணம் எனக்கு வாய்த்திருக்கிறது இப்புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் வாயிலாக! ஒரு ஓவியத் தொகுப்பிலிருந்து சீக்கிரமாக வெளியேறி அச்சுப்பிரதிக் கட்டுரை எழுதுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. "தனிமையில் நீ முழுவதுமாக இருக்கிறாய், பிறருடன் இருக்கும்போது நீ பாதியாக இருக்கிறாய்" எனும் லியானர்டோவின் கூற்றுப்போல ஒரு ஓவியத்தில் விழிவழி நுழைந்து உணர்வில் ஒன்றுகையில் முழுவதுமாக இருக்கின்ற நான், அந்த அனுபவத்தைப் பற்றி எழுதுகையில் பாதியாகி விடுகிறேன். அப்பாதியில் மீதியை வார்த்தை வழி இங்கு பகிர்ந்துகொள்கிறேன். வண்ணம், கோடு, உருவம், வடிவம், ஓளி, வெளி-இவையெல்லாம் வெறும் சொற்கள் மட்டுமே என நான் எண்ணியிருந்தேன். ஒரு ஓவியத்தை நான் பருகும்வரை. ஆம் - ஒரு ஓவியத்தை நாம் பார்க்க முடியாது - பருகத்தான் வேண்டும். ஓவியம் ஒரு அசையாக் கலை என்றொரு பொதுப்புத்தியின் கட்டமைப்பைக் காலி செய்து விடுகின்றன சீனிவாசனின் ஓவியங்கள். படைப்பாக்கத்தின் பெருநீரூற்றும், கணினித் தொழில் நுட்பத் திறனின் பேரலையும் இணைந்து சங்கமிக்கின்ற அவரது ஓவியங்கள் சுட்டுகின்ற திசை - பெருங்கடலையும், அடிவானத்தையும் ஒருங்கிணைக்கின்ற தொடுவானம். நெருங்கிவிட்டோமெனும் நம்பிக்கையும், தொடவியலா மாயமும் நிறைந்த தொடுவானத்தின் ஈர்ப்பு விசையே இந்த ஓவியங்களின் மொழி. வாழ்க்கை, வண்ணம், விழுமியங்கள், வெளி, இழைகள் - இவற்றின் ஊடுபாவு பொதுவான ஒரு ஓவியத்தன்மை என்றாலும், இவரது ஓவியங்கள் வேர்கள், நினைவுகள், அடையாளங்கள் எனும் தனிக்கலவையோடு பயணிக்கின்றன. தனது இளம்பிராயத்தின் தஞ்சை மண் தனக்களித்த ஞாபகங்களின் கொடையோடும், சைவ சித்தாந்தத்தின் ஆன்மிகத் தெளிவோடும், (எடுத்துக்காட்டு - 'துவாரபாலிகை' ஓவியம் - துவாரபாலிகையை ஓவியக் கற்பனையில் முதலில் முன்னிறுத்தியது இந்தக் கலைஞர்தான்) சமகால வாழ்வின் சிடுக்குகளோடும், இவரது தூரிகை காட்டுகின்ற உலகு - பார்த்தல் அனுபவத்தை ஒரு பரசவசமாகவும், துயரமாகவும் ஓருசேர ஆக்குகின்றது. Festival Memory எனும் ஓவியம் பரவசத்தின் ஓளி உமிழ்கிறது என்றால், Trace of existence எனும் ஓவியம் தொலைந்துபோன ஒரு பொன்னுலகின் துயரம் நிரம்பி மெளனிக்கின்றது! இவ்வோவியிங்களின் இயக்கம் முழுவதிலும் ஒரு நாடகத்தன்மையை உணர்ந்தேன். அதனையே விமர்சகர் Ashrafi S. Bhagat, "The Versatile articulation of his drawings is narrative, descriptive, symbolic & metaphysical" என்று சுட்டுகிறார் எனக் கருதுகின்றேன். புகைப்படங்களோடு, ஓவியங்களை ஒருங்கிணைத்து வரைந்திருக்கின்ற பாங்கு தான் இந்த ஓவியங்களின் Tone. தொழில் நேர்த்தியோடு கூடிய கலையின் ஒரு கீற்றை - A slice of art foiled beautifully upon photographs - இந்த ஓவியங்கள் எனக்கு உணரத் தந்தன. சமகால வாழ்வின் அபத்தங்கள், நினைவுகளின் சேகரிப்பில் இழந்த சொர்க்கம் - இவற்றைச் சமூகக் கடப்பாடோடு (Social Sensibility) முன்வைக்கின்ற இந்த ஓவியங்களின் வழியே அற்புதமான இக்கலைஞனின் மனவெளிக்குள் நானும் சஞ்சரிக்கிறேன். வெளியேறுகையில் - என்னைத் திடுக்கிடச் செய்கிறது அதன் சில வண்ணங்கள், வழி நடத்துகின்றன வாஞ்சையோடு அதன் சில கோடுகள். ஒரு ஓவியம் ஒரு மனநிலையை உருவாக்கவும், சமன் குலைக்கவும் வல்லமை உடையது என்பதை இவரது Farmer Series ஒவியங்களும், Measurement of Indian Poverty Line எனும் ஓவியமும் எனக்கு உணர்த்தின. Farmer Series ஓவியத்தின் அடர் பச்சை, கருநீல வண்ணங்கள் என்னைச் சோளக்கொல்லைப் பொம்மையாய்ச் சமைத்தன என்றால், Measurement of Indian Poverty Line இல் வரும் கோடுகளும், குறுகிய இடுப்பின், ஒடுங்கிய கால்களின் அளவும் - அதன் கட்டமைப்புத் தளமும் எனது 'தப்பித்தல்' எனும் பொதுப்புத்தியைச் சமன்குலைத்தது. தனது மண்ணின், நிலத்தின் நினைவுகள், பண்டிகைகள், சடங்குகள், விழாக்கள், மகிழ்ச்சிகள், நடனங்கள் இவற்றின் பெரும்பரப்போடு இயங்குகின்ற இவரது ஓவியங்களில் என்னைக் கட்டிப் போட்டவை The Rajapart, Kallapart (Anti-Hero) எனும் இரு ஓவியங்கள். ஒரு அறிமுகமற்ற, அச்சுறுத்துகின்ற நவீன உலகத்தில் மேற்சொன்ன இந்த இரண்டு கலைஞர்களும் இப்போது எங்கே? அவர்தம் இடமெது, அவர்களது கலையின் கனவுகள் எங்கே - எனப் பலப்பல கேள்விகளோடு என்னை ஆகர்ஷித்துக் கொண்டவை அவ்விரண்டு ஓவியங்களும். ராஜபார்ட்டின் கம்பீரத்தை விட கள்ளபார்ட்டின் ஓயில் தான் என்னை மிக வசீகரித்தது. ஓவியர் பால் செசான் இந்த இரண்டு ஓவியங்களைப் பார்க்கையில் என் நினைவிற்கு வந்தார். அரவக்கோன் (அ.நாகராஜன்) தனது இருபதாம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள் எனும் புத்தகத்தில், "ஆப்பரிக்கப் பழங்குடியினரின் கலைப்படைப்பு உத்திதான் க்யூபிசம் பாணிக்கு வித்தாக அமைந்தது என்போர் ஒரு சாரார். இன்னொரு சாரார், ஓவியர் பால் செசான் படைத்த பிந்தைய ஓவியங்களில் இரண்டு கூறுகள் தான் க்யூபிசம் பாணிக்கு வித்தாக அமைந்தது என்று கூறுவார். அவை பால் செசான் தமது ஓவியங்களில் வண்ணப் பரப்பை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு அவற்றில் வண்ண பேதத்தால் புதிய கட்டமைப்பை தோற்றுவித்தது; மற்றது, அவற்றில் உருவங்களுக்கு உருளை, கோளம், கூம்பு போன்ற ஜியோமிதி வடிவங்களாக மாற்றுருவம் கொடுத்தது" எனக் குறிப்பிடுவார். செசானின் அந்த முதற்கூறு - கள்ளபார்ட் ஓவியத்தில் மிகப் பொருத்தமாக வெளிப்படுகிறது. வானம், சிறுமலை, அதனடிவாரம், வயற்பரப்பு, பூக்கள், விலங்குகள் - அனைத்தும் சிறுசிறு பகுதிகள் ஆனால் வண்ண வேறுபாட்டினால் வேறொரு புதிய கட்டமைப்பினைத் தோற்றுவிப்பவை. செசானினின் இரண்டாவது கூறான உருளை, கோளம், கூம்பு போன்றவற்றினை ராஜபார்ட் ஓவியத்தில் சீனிவாசன் பரீசிலித்திருப்பதனைக் காணலாம். இந்த ஓவியத்தின் தளப்பகுதியின் வண்ணகோர்வை - ஒரு மாயக் கம்பளமாய் என்னை விழுங்கியது. நெளிவும், இழையமைவும் (Texture), செதுக்கமும், வண்ணநேர்த்தியும் - காட்சி உணர்வின் முழு வலிமையையும் கொண்டதொரு கம்பளமது. பின்னணியில் ராஜபார்ட்டின் கலங்கிய நிழலுரு, சேரா நிறங்கள் (neutrals) எனப்படுகின்ற நிறக்கலவையில் (Hue) இருப்பது கூடுதல் அடர்த்தி! கவிதைக்கும் இசைக்கும் அதிபதியான Orpheus நாயகனை இவ்வோவியங்களின் வழி நான் தரிசித்தேன். வண்ணமும், ஒளியும் உணர்வின் இரு கண்களென்பதை உணர்த்துபவை இவரது Hero Series ஓவியங்கள். நகரம் சார் நிகழ்ச்சிகள், இந்துக் கடவுள்கள், ஆண், பெண் இணையர் என்று பல்வேறு தளங்களில் பயணிப்பவை இவை. ஒருவித அகக்கிளர்ச்சியையும், மன உந்துதலின் உச்சத்தையும் உருவாக்குகின்ற இவ்வோவியங்கள் இசைக்கும், ஓவியத்திற்குமுள்ள நெருக்கத்தினை எனக்குப் புலப்படுத்தின. ஜெர்மனியின் புகழ்பெற்ற ஓவியர் வாஸ்லி கண்டின்ஸ்கி (Wassily Kandinsky) "எப்படி ஒரு இசை வல்லுனர் தாளத்தையும் ஒலியையும் இணைத்து இசையை உண்டாக்குகிறாரோ, அதுபோலவே ஓவியர் தமது அனுபவங்களுக்கு உருகொடுத்து ஓவியங்களைப் படைக்கிறார்" என்று கூறியது உண்மைதான் போலும்! 'Fluids' என்கிற இவரது ஓவியங்கள் 'முரணழகு' எனும் தனித்தன்மை வாய்ந்தவை. இயந்திரங்களின் ஆதிக்கம் அதேசமயம் அவற்றின் அவசியம் இவற்றோடு விலங்குகளின் அதி உன்னத இயங்கு சக்தி இவற்றை Juxtpost ஆக முன்னிறுத்திய அவ்வோவியங்கள், கடின உழைப்பையும், தக்கன தப்பிப் பிழைத்தலையும், குறியீடுகளாகக் கொண்டவை. கலையில் பிரதேசத்தன்மை ஒரு முக்கியக் கூறு என்பதைத் 'தமிழ் அழகியல்' எனும் கருத்தாக்கம் வாயிலாக மிக அழகாக முன்மொழிந்திருப்பார் கலைவிமர்சகர் இந்திரன். இவரது 'Tracing the existence' 'Personal History' & 'Grandfathers album' எனும் ஓவியங்களில் தமிழ் வாழ்வியலின் பிரதேசத் தன்மை என்னை மிகக் கவர்ந்தது. மேலைநாட்டுப் போக்குகளின் பால் சார்பு கொள்ளாமல், 'தமிழ்ப் பிரதேசம் சார்ந்த வட்டாரத்தன்மை'யினை சர்வதேச அளவில் ஒரு பொதுத்தன்மையுடன் கடத்தி அனைவரின் உணர்களோடும் உறவாடுவது கலையினால் இயலும் என்பதை இவை உரத்துச் சொல்வதாகவே நான் உணர்கிறேன். ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒரு கதை உண்டு. எளிய மனித வாழ்வியலை பார்வைத் தளத்தில் துவங்கி அனுபவத் தளத்திற்கு எடுத்துச் சென்ற இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு ஒரு கதை கிடைத்தது. அவரவர் கைவிளக்கு கொண்டு பயணத்தைத் துவங்கினால் - அள்ளித் தரும் பெருவெளி அற்புதம் ஒரு ஓவியத்திற்கு உண்டு. அதனை என் சிற்றறிவு எட்டியவரை இவ்வோவியங்களில் தொட்டேன். ஆனால் - புலன்களனைத்தும் தோய இந்த ஓவியங்களைப் புத்தகத்தில் அல்ல - பெரும் பரப்பில் வைத்துப் பார்க்க வேண்டும். அதன் அனுபவ வீச்சே வேறல்லவா - அப்பொழுது மாயகோவ்ஸ்கி சொல்வது போல - "பெருமூச்சுகளில் வாழும் ஒரு மேகமாவேன்". * * * * *

தொடர

விநாயகமூர்த்தி புத்தக வெளியீட்டு விழா உரை

எந்தச் சிமிழுக்குள் அடங்கும் இந்தச் சுரைக்காயின் அந்தர ருசி? “இந்தக் குயில் ஒரு பூவாக இருக்குமாயின் அதிலிருந்து குரல் ஒன்று பறித்துக் கொள்வேன்.” - கொதோ மலையுச்சியிலிருந்து கவனமீர்த்தபடி முழங்கிக் கொட்டுகின்ற அருவியல்ல கவிதை. களைப்புற்றோ, களிப்புடனோ பயணிக்கின்ற வழிப்போக்கன் வலியின் அயர்வில், மகிழ்வின் துடிப்பில் பாதையோரம் அமர்ந்து தனக்குத்தானே பேசுவது போல் அனத்திக் கொள்வது. யாரும் கேட்க வேண்டும் என்கிற அவா அற்றது. தன் குரலைத் தானே கூடக் கேட்க விரும்பாதது. கவிஞனுக்குக் கொஞ்சம் அரற்றியாக வேண்டும். இப் பிரபஞ்சத்தின் துகளில் சிறு தூசாக அவனது மன அவசமோ, துள்ளலோ, வலியோ, கலந்து கிடந்தால் போதும். விநாயகமூர்த்தியின் கவிதைகள் அப்படித்தான். அவனுக்கு தான் எழுதுபவை ‘கவிதை’ தானா என்ற அக்கறையோ, கவலையோ, பிரக்ஞையோ கிடையாது. உணர்வின் எழுச்சியும், சிந்தனையின் தீர்க்கமும் இசைந்திருக்கிறதா எனும் ‘கோட்பாட்டுக்’ கவலையற்றிருப்பதாலாயே இவை கவிதைகள். அவனது கவிதைகள் எனக்கு நெருக்கமானது “இனக்குழு வாழ்முறை” என்ற புள்ளியில்தான். தனித்து இயங்கும், தனிமனித உணர்வுகளைத் தூக்கிப் பிடித்து நிறுத்துகின்ற நவீனத்துவத்திற்கு எதிரான கூட்டியக்க, மனிதர்களோடு சதா புழங்குகின்ற குழு வாழ்வின் சமூக மனம் எங்களுடையது. தன் மன உணர்வுகள், தனிமனித வெளிப்பாடுகள் என முற்றிலும் அக உலகில் பயணிக்கின்ற கவிதைகளே ‘மௌன வாசிப்பிற்குரிய’ சிறந்த கவிதைகள் எனக் கொண்டாடுப்படுகின்ற பொதுவான போக்கு தமிழ்க் கவிதை பரப்பிலே உண்டு. அதற்கு நேர் எதிர்த்திசையில், தான் வாழும் நிலப்பரப்பில், தன் அன்றாட வாழ்வில் எதிர்ப்படுகின்ற, சந்திக்கின்ற, (அதிகம் கவனிக்கப்படாத, இதுகாறும் பேசப்பட்டிராத) மனிதர்களைக், குறிப்பாக நிலத்திலும், உழைப்பிலும் காலூன்றி நிற்கும் பெண்களைப் பற்றிப் பேசுபவை விநாயகமூர்த்தியின் கவிதைகள். குறைந்தபட்சமாக ஒரு ஆட்டோவில் கூட்டிச் செல்வதையே தன் காதலனின் முதல் தகுதியாகப் பார்க்கின்ற பெண்கள், ‘கட்டணக் கழிவறை வாசலில் சுடிதாரில் திட்டுத் திட்டாய் ஈரம்படிய வெளியேறுகிற’ இளம்பெண்கள், எத்திய பல் மூட முயற்சிக்கிற கட்டச்சிகள் - இவர்களைப் பற்றிப் பேசுகிற கவிதைகள். எண்பது சதவீதம் படிப்பறிவற்ற மக்களின் முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் உலகம் இரு வகைமைப்பட்டது. ஒன்று - தனக்குக் கிடைத்த பொருளாதார சுதந்திரத்துடனான வேலையில் தாய்நாட்டிலோ, அயலகத்திலோ வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டு, எப்போதாவது பண்டிகை சுக, துக்கமென தன் ஊர், வேர் என எட்டிப் பார்த்து உருண்டோடும் வாழ்வு. மற்றொன்று - உணர்வாலும், புத்தியாலும் முழுமையாகத் தன் பூர்வீகத்துடன் உறவாடியபடியே, நவீன வாழ்வின் பிழைப்பு முகத்தோடு ஒன்ற முடியாமல் கையறு நிலையில் ‘வாழாவெட்டி’யாக இருப்பது. விநாயகமூர்த்தியின் கவிதைகள் இரண்டாம் வகையினரது வலியை - முதலாளித்துவ, நவீனத்துவ, ஒற்றைமயமான சமகால வாழ்விற்குத் தம்மை ஒப்புக்கொடுத்துத் திகைக்கும் அவர்தம் கையறு நிலையை, அபத்தத்தைப் பேசுபவை! அவை தெருப்புழுதி, இருண்ட பாலத்தடி, கவனிப்பாரற்ற ஒரு கண்ணீர்த்துளி இவற்றின் குவிமையம். தனிமையிலிருந்து சமூகத்துக்கு, உள் அறையிலிருந்து பொது வெளிக்குக் கவிதையை நகர்த்துகின்ற மிக முக்கியமான பணியை விநாயகமூர்த்தி செய்திருக்கிறான் என்றாலும், அதனை வலிந்ததொரு அடையாளமாக இல்லாமல், “என் போக்கு இது - அங்கீகாரத்திற்கென மெனக்கிடாத என் இயல்பு இது” என்றே பதியவைத்திருக்கிறான். ஜெயகாந்தனையும், அசோகமித்திரனையும் வேறுபடுத்திக் காட்டுகையில் சு.வேணுகோபால், “இவ்வளவு நுட்பமான தகவல்களை ஜெயகாந்தன் போன்ற நகர்சார் எழுத்தாளர்களிடம் காண முடியாது. அவர்களின் கதைகளின் பின்புலம் என்பது கோட்டுச்சித்திரங்கள் போன்றனதாம். அசோமித்திரனிடம் பின்புலம் நிஜத்தின் அசைவாக மாறுகிறது” என்று எழுதி இருப்பார். விநாயகமூர்த்தியின் எல்லாக் கவிதைகளிலும் பின்புலம் என்பது ‘நிஜத்தின் அசைவுகள்’ தான்! ஒவ்வொரு கவிதையும் அவனது வாழ்வின் பெருமூச்சை, ரணத்தை, ஆற்றாமையை, சுற்றியிருக்கும் உறவுகளின் இரத்தமும், சதையுமான உறவாடல்களை, யதார்த்த வாழ்வில் அவற்றைத் தொலைத்த உண்மையைச் சொல்கின்றது. அவனது ‘தமிழரசி அத்தாச்சி’ நான்தானென - என்னைப் போல் எங்களூர்க்காரிகள் எத்தனையோ பேர் ரகசியமாகத் தத்தம் முந்தானையில் கண்களைத் துடைத்தபடி அக் கவிதைகளைக் கடக்கிறார்கள். இயலாதவனாக, கையறு நிலையிலுள்ளவனாக, வெட்கமும், கூச்சமும், தயக்கமும் உள்ளவனாக, தலைகுனிந்தே சாலைகளைக் கடப்பவனாக இருக்கின்ற அவனை அள்ளி அணைக்காத அத்தாச்சிகளின் தாய்மடி இருக்கிறதா என்ன? உப்பரிந்து போன ஒரு ஜாக்கெட்டை, கசங்கிய சேலையை, எண்ணெய் வழியும் முகத்தை, இதற்கு முன்னர் கனவுக்கன்னியாக இருந்தவள், கலியாணம் கட்டியபின் திராபையாக எப்படி மாறிப் போனாள் என்பதைக் கணிக்கும் தாயுமான மனம் கொண்ட கொழுந்தன்மார்கள், சேக்காளிகள் ஒரு பீடி வலித்தபடி, கெட்ட வார்த்தையில் திட்டியபடி அக் கவிதைகளைக் கடக்க முடியாமல் தேம்புகிறார்கள். அவனது கவிதைகள் படம்பிடிக்கின்ற ஆண் உலகம் எனக்கு மிக அண்மித்து, அறிமுகமான உலகம். அதில் உறவாடும் அந்த ஆண்மகன் தன்னை ‘வாழாவெட்டி ஆண்மகன்’ என அழைத்துக் கொண்டாலும் ஆண்மை கொன்ற தாயுமானவன். அடைப்புக் குறியில் அடைபடா அன்பு செய்பவன்! ‘யாருமற்ற அய்யனாரோடு’ சுருட்டு வாங்கிப்போய் பேசுகிறவன். திருவிழாவில் வேடிக்கை மட்டுமே பார்க்க விதிக்கப்பட்டவன் தான் என அறிவித்துக் கொண்டாலும் சிறுமிகளுக்குப் பலூன்களையும், அய்யனாருக்குச் ‘சுருட்டைக் கொறை’ எனும் அறிவுரையையும் தருபவன். தாலி இல்லாத கழுத்துக்கும், கறுத்து அழுக்கடைந்த மஞ்சள் கயிறு தொங்குகிற கழுத்துக்குமான வேறுபாட்டை அறிந்தவன். Waxing செய்யாத கைகளின் பேரழகையும், கன்னத்து முடிவின் பூனைரோமங்களையும் ரசிப்பவன், பருவங்கள் மாறுகிறபோது வெட்கப்படுகின்ற பெண்களின் முகச் சுருக்கங்களை மழையில் உணர்பவன். ப்ரூ, சன்ரைஸை ‘மயிரு’ என்பவன், வீட்டுத் திண்ணையில் அழுக்குத் துணி கட்டிலில் கைவிடப்பட்ட பெருசுகளின் புகார்களை உட்கார்ந்து கேட்பவன், எசமானன் செத்தபின் அரற்றிக் கொண்டே கிடக்கும் கிழமாட்டை நேசிப்பவன், காதலியின் திருமணத்திற்குச் சென்றபின் நீண்ட தரிசுக்காட்டை ஒத்தையில் கடப்பவன், வேப்பெண்ணெய் மசுத்துல வீசுகின்ற மரிக்கொழுந்து வாடைக்குக் கிறங்குபவன்... விநாயகமூர்த்தியின் பின்புலமும், வாழ் நிலமும், எனதும் ஒன்றே. இன்னும் சொல்லப்போனால், மூன்றாம் உலகக் காலனியப் பிரஜைகளில், இன்னமும் இனக்குழு வாழ் முறையிலும், பூர்வீகக் குடியின் மொழி, பண்பாட்டுத் தகவிலும் நீடித்திருக்கின்ற குடிமக்களின் குரல் எம்முடையது. அவனது உலகமும், எனதும் சாரையும், நல்லதும் போல! அது வேப்பெண்ணெய் குடிக்கின்ற அப்பத்தாக்கள், குன்னி இடுப்பைப் பிடித்துக்கொண்டுப் பேரனுக்குக் கடுங்காப்பிப் போடும் அம்மாச்சிகள், பின்படிக்கட்டில் அமர்ந்து பேன் பார்க்கும், ஈர் உருவும் “என் மயன்” எனப் பெருமைப்படுகின்ற அம்மாக்கள், மாமன் மக்களிடம் கேலி பேசுகின்ற, உரிமையுள்ள, நெஞ்சுகொள்ளா, அன்புகொண்ட அத்தாச்சிகள், மாரைப் பார்க்கிற விடலைப் பையனைச் செல்லமாகக் கண்டித்தபடி தூக்கி வளத்த அக்காமார்கள், ‘மக கிட்ட வெளாட நாள் கெடக்கு’ என வம்பிழுக்கும் அத்தைமார்கள், கல்லாப்பெட்டி சிங்காரம் போலிருக்கிற மாமாக்கள், வாக்கப்பட்டு டவுனுக்குப் போனபின் வீட்டை அண்ணமார்களுக்கு வளர்த்த வேப்பமரமுடன் எழுதிக் கொடுக்கும் - பூக்கட்டுகிற தங்கச்சிகள், தாளிக்கிற கடுகு நம் முகத்தில் தெறிக்கிற கோபக்காரிகளான சோட்டுக்காரிகள், அச்சுமுறுக்கைப் போலக் கோலம் போடுகிற சித்தியின் மக்கமார்கள், கொழுந்தன்மார்களுக்கு எலும்புக்கறி அள்ளிப் போட்டுக், குமரிப் பெண் வைத்திருப்பவர்களுக்கு, அவனது அருமை பெருமைகளைச் சொல்லும் தமிழரசி அத்தாச்சிகள், இரயிலில் மட்டும் பழக்கமாகி உசிராக அன்பு வைக்கும் அம்பது வயசுக் கீரைக்காரிகள், கஞ்சிக்கு வழியில்லாத வீட்டில் பொறந்த கிறுக்கு முண்டைகள், ‘எங்க மாமா’ வென சினிமா பைத்தியமாயிருந்த அன்னமயில் அத்தைகள், தன் பெயரைத் தமிழில் கூப்பிட மாட்டார்களா என வடநாட்டு அடுக்ககம் ஒன்றில் ஏங்கும் தமிழ்க்குட்டிகள் - இவர்களால் நிரம்பியது. என் வாழ்வும் அவனைப்போல இப்பெண்களால் ஒளிர்வும், கருமையும் பெற்று மகிழ்வதும், வருந்துவதும்! நோபெல் பரிசு பெற்ற, 77 வயது ஐ.பி. சிங்கரிடம் "நீங்கள் ஏன் எப்போதும் உங்களது சின்னஞ்சிறு வட்டமான யூத மக்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: "உண்மையான கதாபாத்திரங்கள் உண்மையான மக்களிடமிருந்தே பிறக்கின்றன. உண்மையான மக்களுக்கு ஆழமான வேர் உண்டு. வெறுமனே ஒரு பொதுவான மனிதனைப் பற்றி ஒரு நாவல் எழுதிவிட முடியாது. அதற்காக தனக்கென ஒரு முகவரி உள்ள ஓர் ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் தான், உண்மையான எழுத்தாளர்கள் தங்களுக்குச் சொந்தமான சூழலிலேயே, தங்களுக்குச் சொந்தமான மூலையிலேயே தங்கிவிடுகிறார்கள்". விநாயகமூர்த்தியும் அப்படி தனக்கான ஒரு மூலையில் புகார்களின்றி வாழ்பவன்! தனக்கான உண்மையான மக்களைக் கண்டறிந்து கொண்டாடுபவன். கீழ்வரும் இந்தக் கவிதையைப் பாருங்கள்: ““எல்லாம் பாக்குறாங்க, இதுல கால்வைக்க இவ்வளவு நேரமா..?” என வணிக வளாகமொன்றின் நகரும் படிக்கட்டுகளில் கால் வைக்கத் தடுமாறும் அம்மாவிடம் சிடுசிடுக்கும் நகரத்து மகன்கள் ஆய் கழுவிப் பழக ஆறு வருடங்கள் கடக்க வேண்டியதிருந்தது.” சமூகத்தின் மேல்தட்டு வர்கத்தினர் அறிந்திராத, அவர்களுக்குப் புரிந்திராத வெளியும், உணர்வும் மேற்சொன்ன கவிதை சுட்டுவது. இது கவிதையே அல்லவென்று கூடச் சிலர் கடக்கலாம். ஆனால், அது சுட்டும் அனுபவத்தைக் கவனியுங்கள் - உள் வாங்க இயலுமெனில் இது கவிதை தான்! பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின், தமிழ்த்துறைப் பேராசிரியர் இரவிக்குமார் எப்போதுமே, “கவிதை, காலத்திற்குக் காலம் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. 'இதுதான் கவிதை' என்று பழக்கப்பட்ட வாசக மனம், கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. நவீன கவிதைகளையே படித்துப் படித்துப் பழக்கபட்டவனுக்குக் காளமேகப் புலவர் பிடிக்காமல் போகக்கூடும். டி.எஸ்.எலியட், கீட்ஸின் கவிதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. 'Keats is also a poet' என்கிற வாசகம் நினைவிற்கு வருகிறது. வால்ட் விட்மனின் கவிதைகளைத் தொடக்க காலத்தில் டால்ஸ்டாய் நிராகரித்ததையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, ஒரு கவிஞனின் அனைத்துப் படைப்புகளையும் திறனாய்வாளர்களும் வாசகர்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு காலத்தில் படைக்கப்பட்ட கவிதையை வாசிக்கின்ற வாசகர்களின் மனநிலை வேறொரு காலத்தில் மாறவும் கூடும். எனவேதான், ஒரு கவிதை எந்தப் பின்னணியில், எந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டது என்ற ஆய்வு முக்கியமானது.” என அடிக்கோடிட்டுச் சுட்டுவார். அந்தரத்தில் மிதக்காமல் நிலத்தில் காலூன்றி நிற்கும் வலுவான திணைப் பண்பாடு சார் இனக்குழு மக்களின் எச்சமான உறவுமுறை வாழ்க்கை, இன்றைய காலகட்டத்தில் நகரம்சார் அவர்தம் இடம்பெயர்வுச் சிக்கல்கள், விழுமியங்கள் அபத்தங்களானதொரு இயலாமை - இவற்றைப் பின்னணியாகக் கொண்டது விநாயகமூர்த்தியின் கவிதைப் பரப்பு. இந்தப் பின்புலத்திலேயே அவனது கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே நாட்டார் வழக்காற்றுக் கூற்றுகளை ஆவணப்படுத்தவோ, பிரதியெடுக்கவோ கவிதை எதற்கு? அதற்குள் ஒளிந்திருக்கின்ற மனித வாழ்வை, ஒளிர்ந்து மின்னி மறையும் அதன் புதிர்களை அவனுக்கானதொரு யதார்த்தமான மொழியில் வெளிப்படுத்துவதில் தானே அவன் படைப்பு கவிதையாகிறது. அதற்கு எத்தனையோ உதாரணக் கவிதைகளை இத் தொகுப்பிலிருந்து சுட்டலாம். ஒரு சோறு பதமாகத், தமிழரசி அத்தாச்சிக்கான பின்வரும் கவிதை: “கல்யாணப் பந்தியில் சாப்பாட்டுக்கு அமர்ந்திருந்தால் "கொழுந்தன் மாப்ளையாகப் போறவரு. எலும்புக்கறியா அள்ளிப் போடுங்க" என இடுப்பிலிருக்கிற குழந்தைக்கு சோறூட்டியபடியே பரிமாறுபவர்களை கூப்பிட்டு கூப்பிட்டு நான் சாப்பிட்டு முடிக்கும் வரை தமிழரசி அத்தாச்சி பக்கத்திலேயே நின்றுகொண்டிருப்பாள். கல்யாண வீட்டில் நிற்கிற வீட்டில் குமரிப்பெண் வைத்திருப்பவர்களிடம் என்னைக் காட்டி காட்டி எதையாவது சொல்லிக்கொண்டிருப்பாள். பேச்சில் ஒத்து வருபவர்களை நைஸாக அழைத்துக் கொண்டுவந்து என் பக்கத்தில் நின்றபடி வேறெதையோ கேட்பதுபோல என் அருமை,பெருமைகளை என் வாயாலேயே சொல்லவைப்பாள். எனக்கெதுவும் அறியாததுபோலவே நானும் சொல்வதுண்டு. அப்பா,அம்மாவை விட அத்தாச்சிகளுக்குதான் இப்படியொரு திறமை உண்டு. கல்யாண வீட்டில் அவசரமாக யாரும்,எதுவும் எடுத்துவரச் சொன்னால் சட்டென அவள் குழந்தையை என் மடியில் வைத்து "ஒங்க மகனைப் பாத்துக்குங்க கொழுந்தனாரே" என உரிமையாக என் குழந்தையாக்குவாள். "ங்கொண்ணன் காளைமாட்டை புடிக்கதான் லாயக்கு. கொழுந்தன் நீங்களாச்சும் பசுமாட்டை அடக்க கத்துக்குங்க.." என புருசனை ஏற,இறங்கப் பார்க்க நான் தலைகுனிந்து வெட்கப்பட "பாருங்க கொழுந்தன் வெக்கப்படுற அழகை.... இந்த மனுசன் வெக்கம் கிலோ என்ன வெலைன்னுக் கேப்பாரு " என அண்ணன் குமட்டில் குத்துவாள். ஸ்கூல் முடிஞ்சோன டவுசரை கழட்டி தூக்கிப்போட்டுட்டு சுத்துற என்னையக் கூப்புட்டு அவ அப்பாவுக்கு ஒரு சொக்கலால் பீடிக்கட்டு துவையலுக்கு ரெண்டு தேங்காச்சில்லு தலைக்கு கடல் ஷாம்பூ பாக்கெட்டு ஒண்ணு வாங்கிட்டு வரச் சொல்லி தமிழரசி அத்தாச்சி என் கைல காசு கொடுத்து முன்னாடி நடக்கவிட்டு "டேய்,மொட்டக்குண்டி நாயகம்"ன்னு கத்தி சிரிச்சப்பலாம் எனக்கு வெக்கம்னு ஒண்ணே இல்லை. இந்த மாதிரி கல்யாணம்,காட்சிலப் பாத்துக்கிட்டு "போய்ட்டு வர்றேன் அத்தாச்சி"ன்னு நான் சொல்லிட்டுக் கிளம்புறப்பதான் என்னைய முன்னாடி நடக்கவிட்டு அத்தனை பேர் முன்னாடி "டேய், மொட்டக்குண்டி நாயகம்"ன்னு அத்தாச்சி நைஸாக் கூப்பிடயில நான் லேசாத் திரும்பி வெக்கமாச் சிரிக்க அதுக்கு அத்தாச்சி காட்டுற முகபாவனைகள்ல சுண்டவச்ச கருவாட்டுக்குழம்புல ரெண்டுநாள் ஊறுன சுரைக்காயோட ருசி.” மேற்சொன்ன கவிதை எவ்வளவு நுட்பமாக உறவுமுறையினூடாக உரிமையோடு இழையோடும் அன்பைச் சொல்கிறது. இது காதலா, காமமா, இரத்த உறவு மட்டுமா - எந்தச் சிமிழுக்குள் அடங்கும் அந்தச் சுரைக்காயின் ருசி? "ஒரு கவிதையின் தேர்ந்த சொற்கள், படிமம், குறியீடு போன்ற உத்திகளை விளக்குவதில் எனக்குப் பயிற்சியில்லை. இந்தவித உத்திகளின் புரிதல்களுக்கு அப்பால் கவிதைகளை என்னால் அடையாளம் காண முடியும். அதில் மனிதம் இருப்பதொன்றே எனக்குப் போதுமானது. அந்நியமாகிப் போகும் வாழ்க்கையை எனக்கு நெருக்கத்தில் அது கொண்டு வந்து நிறுத்தினால் போதும்" - என்பார் இன்குலாப் அய்யா. கீழ்வரும் கவிதையில் படிமமோ, குறியீடோ, உவமையோ இல்லை. ஆனால் ‘துடி’யான மனுச வாழ்வொன்று உண்டு! “தொழுவத்தில் கூட்டி அள்ளி தலையில் சுமந்து சென்று வயலில் கொட்டியபின் அவள் தோள்பட்டையில் வடிந்து ஒட்டியிருக்கிற பசுமாட்டுச்சாணி,ஆட்டுப்புழுக்கை பச்சைக் கறை. அப்படியே அங்கேயே புல்லறுத்து சுமந்து வருகையில் அவள் நெற்றி வியர்வையில் ஒட்டியிருக்கிற பிய்ந்த நொச்சி இலை நசுங்கிய அருகம்புல். அத்தக்கூலிக்கு வேலிக்கருவை வெட்டப்போய் முதுகில் முள்கிழிசலுடன் ஒட்டிவந்த கருவேலக் கொழுந்து. வேலை முடிந்துத் திரும்புகையில் ஊருணியில் தலை முங்கி எழுந்து ஈரச் சேலை சுற்றி அவள் நீர்த்துளிகள் மண்ணில் விழ நடந்து வருகையில் அவள் கழுத்தில் ஒட்டிவந்த குளத்தின் இளம்பச்சை பாசி. துணி மாற்றியதும் சீவிச் சிங்காரித்து அவள் ஹேர்பின்னில் சொறுகிய பச்சை மரிக்கொழுந்து. அம்மை போட்டிருந்த என் பருக்கட்டிகளில் அவள் கையால் தடவிவிட்ட அரைத்த வேப்பங்குலை. அந்த இரவிலேயே சவமாகிப்போனவளின் கை பூனைமுடிகளில் ஒட்டி படர்ந்திருக்கிற நசுக்கிய பச்சை அரளிக்காய்த்துகள். இலை,தழை,காய்களுக்கென்றே ஒரு வாசனை இருக்கிறது. பச்சை நிறத்திற்கென்றே ஒரு வாசனை இருக்கிறது. தமிழரசி அத்தாச்சிக்கென்றே ஒரு வாசனை இருக்கிறது. எரிக்கும்போதும் ஊர்முழுக்க நெடிவீசிடும் பச்சை வாசனை." நான் எப்போதும் நினைவு கூர்கின்ற கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனது கூற்று: “இன்றைய மூன்றாம் உலக இலக்கியத்திற்கு முன்னால் ஒரு வரலாற்றுக் கடமை எழுந்து நிற்கிறது. வெளிநாட்டு ஆட்சியின் கீழ் நசுங்கி, தங்களது பண்பாட்டு முகம் சிதைக்கப்பட்டு, வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டு விட்ட இந்த நாடுகள், இன்று தங்கள் அடையாளம் என்ன என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றன. இத்தகைய நிலையில் இருக்கும் வளரும் நாடுகளின் இலக்கியத்தின் கடமை, இழந்த அடையாளங்களை மீட்டெடுப்பதும், தம்மைச் சுற்றி இருக்கும் இன்றைய வாழ்க்கைப் பற்றிய நேர்மையான புரிதலுடன் அதைப் படம் பிடிப்பதுமாகும்.” தம்பி விநாயகமூர்த்தியின் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. ஆனால் அதனைத் தன் கடமையெனப் பதாகை பிடித்தோ, முன்தீர்மானம் கொண்டோ இல்லாமல், போகிற போக்கில் - தன் இருத்தல் குறித்த புதிரான கேள்விகள், வியப்புகள், அபத்தங்கள் - இவற்றைச் சிரங்கு வந்தால் தானாகச் சொறிந்து கொள்வது அனிச்சையாக, வெகு இயல்பாகச் செய்கின்றன! பின்வரும் அவனது கவிதை எனக்கு வித்யாசங்கரின் ஒரு கவிதையை நினைவூட்டியது. “இதே சாயலில், எனக்கும் உங்களுக்கும் சிறிது இடைவெளி இருக்க வாய்ப்புண்டு. இளையராஜாவும் மணிரத்னமும் எனக்கு இளையராஜா,மணிரத்னம். உங்களுக்கு ராஜா சார்,மணி சார். பன்னாட்டு இலக்கியவாதிகளின் பெயர்களை வரிசைக்கிரமமாக சொல்லி முடித்து ”இவர்களில் யாரையேனும் வாசித்துள்ளீர்களா” என்கிறீர்கள். கி.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தனிடம் எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு. உலக சினிமாக்களை அலசியெடுத்துவிட்டு “கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?” என்கிறீர்கள் கிண்டலாக. வழக்கு எண் 18/9,ஆரண்யகாண்டத்தை கொண்டாடத் தெரிதல் எனக்கு போதுமானது." மறுபடியும் கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனுக்கே வருகின்றேன். வித்யாசங்கரது சந்நதம் தொகுப்பை முன்வைத்து, அவரது கவிதையின் போக்கு குறித்துப் பகிரும் போது, கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன், “கவிதையில் 'சர்வதேச பாணி' என்ற ஒன்று கிடையாது. கவிதையைப் படைக்கும் மூலப்பொருள் மொழியாக இருக்கும் வரையிலும், கலைகளிலேயே அதிகமாக பிரதேசத் தன்மை கொண்டது கவிதையாகத்தான் இருக்க முடியும். "மொழிபெயர்க்க இயலாதது எதுவோ அதுவே கவிதை" என்று வரையறை செய்யும் அளவுக்கு பிரதேசத் தன்மை கொண்டது கவிதை என்பதை நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார் வித்யாஷங்கர். இதனை இவரைப் போலவே பிற நவீனத் தமிழ்க்கவிஞர்களும் புரிந்து கொள்வார்களெனில் இன்றைய தமிழக்கவிதை உள்ளீடற்ற, போலியான, ஒரு கானல் மண்ணில் வேர்கொள்ள முயன்று, துவண்டு போகாமல் தப்பிக்க முடியும். நமக்குள்ளேயே தோண்டிச் சென்று நமக்குள் இருக்கும் சிறப்பான பண்புகளை, வெளிப்பாடுகளை சர்வதேச கவிதை உலகிற்கு தமிழின் பரிசாகக் கொடுக்க நம்மாலும் பெறமுடியும்” என்கிறார். அவ்வகையில், விநாயகமூர்த்தி கொடுத்திருக்கும் பரிசுகள் பல. “நெருஞ்சிக்காட்டில் செருப்பில்லாமல் நடப்பதுதான் தமிழரசி அத்தாச்சிக்குப் பிடிக்கும். கேட்டால் நெருஞ்சி முள் குத்துவது எங்கப்பன் கெட்டவார்த்தைல என்னைய வையிறது மாதிரி. வைஞ்சாலும் அது அப்பன் குரல்ல கேக்குறப்ப ஜாலியா இருக்கும்ல. நெஞ்சுல ஆழமா தைச்சுடாம மேலாப்புல வையிறாரு பாரு. கருவமுள்ளைப் போல் உள்ளிறங்காது அந்த நேர வலி கொடுக்கிற சுகம் என்பாள். முள் குத்த குத்த பாதத்தைத் தட்டிவிட்டு தட்டிவிட்டு நடப்பவள் நெருஞ்சிப்பூவொன்றை பிய்த்து காதில் ஒட்டிவைத்து 'தோடு நல்லாருக்கா'வெனச் சிரிப்பாள். என் அம்மா போட்டிருக்கிற தங்கத்தோடும் நெருஞ்சிப் பூ வடிவத்திலானதுதான். சமயங்களில் அந்தியில் சுப்பிக்கட்டுடன் வீடு திரும்புபவளின் தாவணியெல்லாம் நாயுருவி முள் ஒட்டியிருக்கும். அதில் ஒன்றை எடுத்து மூக்குத்தியென ஒட்டிக்கொள்வாள். அத்தை பல்லைக் கடித்து "கிறுக்கு முண்டையல பெத்துவச்சுருக்கேன்" என விரட்டி அடிப்பாள். "கஞ்சிக்கு வழியில்லாத வீட்டுல பொறந்தவளுக எல்லாருமே கிறுக்கு முண்டையதான்" என அதற்கும் சிரிப்பாள் அத்தாச்சி. சற்று மின்னிய நெருஞ்சிப்பூவைப் போலிருக்கும் ஒரு தங்கத் தோடு அத்தாச்சிக்கு வாங்கிக் கொடுத்து அந்த கிறுக்கு முண்டை முகத்தில் புன்னகை சிந்தவிடவேண்டும் என இப்போதெல்லாம் எப்போது நெருஞ்சிமுள் குத்தினாலும் நினைத்துக்கொள்கிறேன்.” எனும் தமிழரசி அத்தாச்சிக்கான கவிதையும், "காளைமாட்டுக் கிழவனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெயர்க்காரணம் கேட்காதீர்கள். என் பெரியப்பா. பெரியம்மா செத்து இரண்டுவருடங்களாகிறது. அவருக்கென ஒரு அழகிய சித்திரம் இருக்கிறது. அவர் குளிக்க எப்போது ஊருணிக்கு வந்தாலும் இரண்டு தோள்பட்டைகளிலும் இரண்டு பேரக்குழந்தைகள் இருப்பார்கள். கூட்டாம்புளியான் கடைக்கு மூக்குப்பொடி வாங்கப்போனால் அவரது வலதுகை சுண்டுவிரலை மூத்த மகனின் மகளும் இடதுகை சுண்டுவிரலை சின்ன மகனின் மகனும் பிடித்தபடி நடந்துவருவார்கள். கோயில் திண்ணையில் மாலையில் காற்றுவாங்க அமர்பவர் இரண்டு தொடைகளிலும் இருவரை வைத்துக்கொண்டு விளையாட்டு காண்பித்துக்கொண்டிருப்பார். இருவருக்குமே ஆப்பிள் பலூன்,கொக்கச்சு என ஒரே விஷயங்கள் பிடிக்க அவர்தான் காரணமென நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. தண்ணீர் பாய்ச்சுகிற பிரச்சினையில் அண்ணன்-தம்பி அடித்துக்கொண்டு தனித்தனி பிரிந்தபின் எந்த வேளை உணவு எந்த வீட்டில் சாப்பிடுவது? எந்த ராத்திரி எந்த வீட்டில் தூங்குவது? எந்த வாரம் எந்த மருமகளுடன் சந்தைக்குப் போவது? காபித்தண்ணி யார் வீட்டில்? சோப் வாங்கிக்கொடுப்பது யார்? என தலை பிய்க்கிற குழப்பங்களெல்லாம் அவருக்கு பெரிதாய்த் தெரியவில்லை. பேத்தி மாற்றி பேரன் மாற்றியென இனி ஒற்றைத் தோள்பட்டை ஒற்றை சுண்டுவிரல் ஒற்றைத் தொடை என மற்றொன்று காலியாகவே இருக்கப்போகிற வேதனையில்தான் உயிரை விட்டுவிடுவாரென நினைக்கிறேன்." அண்ணன் தம்பி சண்டையில் பேரன், பேத்திகளை இழந்துவிட்ட காளை மாட்டுக் கிழவனை முன்னிறுத்திய மேற்சொன்ன கவிதையும் ‘சர்வ தேச கவிதை உலகிற்கு’ குறிப்பிடத்தகுந்த ‘தமிழின் பரிசுகள்’ தாம்! தனக்கும், தன் மண்ணுக்கும், வாழ்முறைக்கும், உண்மையாக இருக்க முயன்று, அதன் வழியாகத் தான் சந்திக்கும் சமகாலச் சிக்கலையும், அபத்தங்களையும் பதிவு செய்கின்ற விநாயகமூர்த்தியின் கவிதை மொழி உப்புக்கண்டக் கவுச்சியும், மருக்கொழுந்து நாற்றமும், உழைத்து உப்புக் கரிக்கின்ற வியர்வையின் நெடியும் கலந்த இந்நிலத்தின் மொழி. அதன் கொடையைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்தாலொழிய அந்நியர் அறிய முடியாது. அது அவர் தம் பெரு இழப்பே! அந்நிலத்தை, அம்மொழியை நான் இரத்தமும், சதையுமாக, நிணமும், நாற்றமுமாக அறிந்தவள். அப் புழுதியில், சகதியில், வியர்வையில், கவுச்சையில் அமிழ்ந்து உணர்ந்தவள். ஆகையால் அவனது கவி உலகைக் கொண்டாடுபவள். அது என் வரமே! ஜப்பானியக் கவிஞரும் சிற்பியுமான டக்கமுரா கொட்டாரோ சொல்வார்: “என் கவிதை என் குடல்களிலிருந்து உருவாகிறது என் கவிதை நானன்றி வேறல்ல” என்று! விநாயகமூர்த்தியின் கவிதையும் அவ்வாறு உருவானதுதான். சில கவிதைகள் கதைப் பாடல்களைப் போல இருக்கலாம். சில உரைநடைக் கதைச் சித்திரங்களைப் போலிருக்கலாம். சில கவிதை எனும் சட்டகத்திற்குள்ளேயே வரவில்லை எனவும் சிலர் விமர்சிக்கலாம். ஆனால் அவை அனைத்தும் வாழ்க்கை! அதன் மூச்சுக்காற்றை, பசியை, இயல்பூக்கமான காமத்தை, அபத்தத்தை படைப்பின் வழி கடத்தும் அனுபவங்கள்! பிரமிள், “தங்கத்தை எடைபோட இரும்பு எடைக்கற்களைப் பயன்படுத்தும்போது தங்கம் இரும்பையும் எடைபோடுகிறது. அதுபோல... அவர் என்னை எடை போடுவதில்தான் அவரும் அளக்கப் படுகிறார்.” என்பார். விமர்சனங்களுக்கான பதில் அம்மட்டே! எங்களது வாழ்வை, எம் நிலத்தின் மொழியை, அதன் காத்திரமான பண்பாட்டுச் சித்திரங்களை, வேரூன்றியிருக்கின்ற மானுட விழுமியங்களை, எடை போட, அதனை நீங்கள் ஒரு கணமேனும் வாழ்ந்திருக்க வேண்டும்! இல்லையென்றால் அத்தாச்சிகளின், அக்காமார்களின், கொழுந்தன்மார்களின், அண்ணன்மார்களின், தமிழ்க்குட்டிகளின், அப்பத்தாக்களின், ஆச்சிமார்களின், ஆத்தாக்களின் சிரிப்பையும், கண்ணீரையும், கொடுவாயையும், வியர்வையையும், சிறுநீரையும் கவிதைகளாகப் பார்க்க முடியாது உங்களால்! பார்க்க முடியாவிட்டாலும் பாதகமில்லை! அய்யனாரின் சுருட்டைக், கருப்புவின் சாராயக் கொடையைக் கண்ட பூசாரிகள் ‘தரிசனத்’திற்கு மயங்குபவர்கள் அல்ல - அவர்கள் அருள் இறங்கும் ஆவேசத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்! கவிதை அவர்தம் சந்நதங்களுக்கான எளிய படையல் தான்! • • • • •

தொடர

விநாயமூர்த்தியின் கவிதை புத்தகத்தை முன்வைத்து ஒரு பகிரல்

எந்தச் சிமிழுக்குள் அடங்கும் இந்தச் சுரைக்காயின் அந்தர ருசி? “இந்தக் குயில் ஒரு பூவாக இருக்குமாயின் அதிலிருந்து குரல் ஒன்று பறித்துக் கொள்வேன்.” - கொதோ மலையுச்சியிலிருந்து கவனமீர்த்தபடி முழங்கிக் கொட்டுகின்ற அருவியல்ல கவிதை. களைப்புற்றோ, களிப்புடனோ பயணிக்கின்ற வழிப்போக்கன் வலியின் அயர்வில், மகிழ்வின் துடிப்பில் பாதையோரம் அமர்ந்து தனக்குத்தானே பேசுவது போல் அனத்திக் கொள்வது. யாரும் கேட்க வேண்டும் என்கிற அவா அற்றது. தன் குரலைத் தானே கூடக் கேட்க விரும்பாதது. கவிஞனுக்குக் கொஞ்சம் அரற்றியாக வேண்டும். இப் பிரபஞ்சத்தின் துகளில் சிறு தூசாக அவனது மன அவசமோ, துள்ளலோ, வலியோ, கலந்து கிடந்தால் போதும். விநாயகமூர்த்தியின் கவிதைகள் அப்படித்தான். அவனுக்கு தான் எழுதுபவை ‘கவிதை’ தானா என்ற அக்கறையோ, கவலையோ, பிரக்ஞையோ கிடையாது. உணர்வின் எழுச்சியும், சிந்தனையின் தீர்க்கமும் இசைந்திருக்கிறதா எனும் ‘கோட்பாட்டுக்’ கவலையற்றிருப்பதாலாயே இவை கவிதைகள். அவனது கவிதைகள் எனக்கு நெருக்கமானது “இனக்குழு வாழ்முறை” என்ற புள்ளியில்தான். தனித்து இயங்கும், தனிமனித உணர்வுகளைத் தூக்கிப் பிடித்து நிறுத்துகின்ற நவீனத்துவத்திற்கு எதிரான கூட்டியக்க, மனிதர்களோடு சதா புழங்குகின்ற குழு வாழ்வின் சமூக மனம் எங்களுடையது. தன் மன உணர்வுகள், தனிமனித வெளிப்பாடுகள் என முற்றிலும் அக உலகில் பயணிக்கின்ற கவிதைகளே ‘மௌன வாசிப்பிற்குரிய’ சிறந்த கவிதைகள் எனக் கொண்டாடுப்படுகின்ற பொதுவான போக்கு தமிழ்க் கவிதை பரப்பிலே உண்டு. அதற்கு நேர் எதிர்த்திசையில், தான் வாழும் நிலப்பரப்பில், தன் அன்றாட வாழ்வில் எதிர்ப்படுகின்ற, சந்திக்கின்ற, (அதிகம் கவனிக்கப்படாத, இதுகாறும் பேசப்பட்டிராத) மனிதர்களைக், குறிப்பாக நிலத்திலும், உழைப்பிலும் காலூன்றி நிற்கும் பெண்களைப் பற்றிப் பேசுபவை விநாயகமூர்த்தியின் கவிதைகள். குறைந்தபட்சமாக ஒரு ஆட்டோவில் கூட்டிச் செல்வதையே தன் காதலனின் முதல் தகுதியாகப் பார்க்கின்ற பெண்கள், ‘கட்டணக் கழிவறை வாசலில் சுடிதாரில் திட்டுத் திட்டாய் ஈரம்படிய வெளியேறுகிற’ இளம்பெண்கள், எத்திய பல் மூட முயற்சிக்கிற கட்டச்சிகள் - இவர்களைப் பற்றிப் பேசுகிற கவிதைகள். எண்பது சதவீதம் படிப்பறிவற்ற மக்களின் முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் உலகம் இரு வகைமைப்பட்டது. ஒன்று - தனக்குக் கிடைத்த பொருளாதார சுதந்திரத்துடனான வேலையில் தாய்நாட்டிலோ, அயலகத்திலோ வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டு, எப்போதாவது பண்டிகை சுக, துக்கமென தன் ஊர், வேர் என எட்டிப் பார்த்து உருண்டோடும் வாழ்வு. மற்றொன்று - உணர்வாலும், புத்தியாலும் முழுமையாகத் தன் பூர்வீகத்துடன் உறவாடியபடியே, நவீன வாழ்வின் பிழைப்பு முகத்தோடு ஒன்ற முடியாமல் கையறு நிலையில் ‘வாழாவெட்டி’யாக இருப்பது. விநாயகமூர்த்தியின் கவிதைகள் இரண்டாம் வகையினரது வலியை - முதலாளித்துவ, நவீனத்துவ, ஒற்றைமயமான சமகால வாழ்விற்குத் தம்மை ஒப்புக்கொடுத்துத் திகைக்கும் அவர்தம் கையறு நிலையை, அபத்தத்தைப் பேசுபவை! அவை தெருப்புழுதி, இருண்ட பாலத்தடி, கவனிப்பாரற்ற ஒரு கண்ணீர்த்துளி இவற்றின் குவிமையம். தனிமையிலிருந்து சமூகத்துக்கு, உள் அறையிலிருந்து பொது வெளிக்குக் கவிதையை நகர்த்துகின்ற மிக முக்கியமான பணியை விநாயகமூர்த்தி செய்திருக்கிறான் என்றாலும், அதனை வலிந்ததொரு அடையாளமாக இல்லாமல், “என் போக்கு இது - அங்கீகாரத்திற்கென மெனக்கிடாத என் இயல்பு இது” என்றே பதியவைத்திருக்கிறான். ஜெயகாந்தனையும், அசோகமித்திரனையும் வேறுபடுத்திக் காட்டுகையில் சு.வேணுகோபால், “இவ்வளவு நுட்பமான தகவல்களை ஜெயகாந்தன் போன்ற நகர்சார் எழுத்தாளர்களிடம் காண முடியாது. அவர்களின் கதைகளின் பின்புலம் என்பது கோட்டுச்சித்திரங்கள் போன்றனதாம். அசோமித்திரனிடம் பின்புலம் நிஜத்தின் அசைவாக மாறுகிறது” என்று எழுதி இருப்பார். விநாயகமூர்த்தியின் எல்லாக் கவிதைகளிலும் பின்புலம் என்பது ‘நிஜத்தின் அசைவுகள்’ தான்! ஒவ்வொரு கவிதையும் அவனது வாழ்வின் பெருமூச்சை, ரணத்தை, ஆற்றாமையை, சுற்றியிருக்கும் உறவுகளின் இரத்தமும், சதையுமான உறவாடல்களை, யதார்த்த வாழ்வில் அவற்றைத் தொலைத்த உண்மையைச் சொல்கின்றது. அவனது ‘தமிழரசி அத்தாச்சி’ நான்தானென - என்னைப் போல் எங்களூர்க்காரிகள் எத்தனையோ பேர் ரகசியமாகத் தத்தம் முந்தானையில் கண்களைத் துடைத்தபடி அக் கவிதைகளைக் கடக்கிறார்கள். இயலாதவனாக, கையறு நிலையிலுள்ளவனாக, வெட்கமும், கூச்சமும், தயக்கமும் உள்ளவனாக, தலைகுனிந்தே சாலைகளைக் கடப்பவனாக இருக்கின்ற அவனை அள்ளி அணைக்காத அத்தாச்சிகளின் தாய்மடி இருக்கிறதா என்ன? உப்பரிந்து போன ஒரு ஜாக்கெட்டை, கசங்கிய சேலையை, எண்ணெய் வழியும் முகத்தை, இதற்கு முன்னர் கனவுக்கன்னியாக இருந்தவள், கலியாணம் கட்டியபின் திராபையாக எப்படி மாறிப் போனாள் என்பதைக் கணிக்கும் தாயுமான மனம் கொண்ட கொழுந்தன்மார்கள், சேக்காளிகள் ஒரு பீடி வலித்தபடி, கெட்ட வார்த்தையில் திட்டியபடி அக் கவிதைகளைக் கடக்க முடியாமல் தேம்புகிறார்கள். அவனது கவிதைகள் படம்பிடிக்கின்ற ஆண் உலகம் எனக்கு மிக அண்மித்து, அறிமுகமான உலகம். அதில் உறவாடும் அந்த ஆண்மகன் தன்னை ‘வாழாவெட்டி ஆண்மகன்’ என அழைத்துக் கொண்டாலும் ஆண்மை கொன்ற தாயுமானவன். அடைப்புக் குறியில் அடைபடா அன்பு செய்பவன்! ‘யாருமற்ற அய்யனாரோடு’ சுருட்டு வாங்கிப்போய் பேசுகிறவன். திருவிழாவில் வேடிக்கை மட்டுமே பார்க்க விதிக்கப்பட்டவன் தான் என அறிவித்துக் கொண்டாலும் சிறுமிகளுக்குப் பலூன்களையும், அய்யனாருக்குச் ‘சுருட்டைக் கொறை’ எனும் அறிவுரையையும் தருபவன். தாலி இல்லாத கழுத்துக்கும், கறுத்து அழுக்கடைந்த மஞ்சள் கயிறு தொங்குகிற கழுத்துக்குமான வேறுபாட்டை அறிந்தவன். Waxing செய்யாத கைகளின் பேரழகையும், கன்னத்து முடிவின் பூனைரோமங்களையும் ரசிப்பவன், பருவங்கள் மாறுகிறபோது வெட்கப்படுகின்ற பெண்களின் முகச் சுருக்கங்களை மழையில் உணர்பவன். ப்ரூ, சன்ரைஸை ‘மயிரு’ என்பவன், வீட்டுத் திண்ணையில் அழுக்குத் துணி கட்டிலில் கைவிடப்பட்ட பெருசுகளின் புகார்களை உட்கார்ந்து கேட்பவன், எசமானன் செத்தபின் அரற்றிக் கொண்டே கிடக்கும் கிழமாட்டை நேசிப்பவன், காதலியின் திருமணத்திற்குச் சென்றபின் நீண்ட தரிசுக்காட்டை ஒத்தையில் கடப்பவன், வேப்பெண்ணெய் மசுத்துல வீசுகின்ற மரிக்கொழுந்து வாடைக்குக் கிறங்குபவன்... விநாயகமூர்த்தியின் பின்புலமும், வாழ் நிலமும், எனதும் ஒன்றே. இன்னும் சொல்லப்போனால், மூன்றாம் உலகக் காலனியப் பிரஜைகளில், இன்னமும் இனக்குழு வாழ் முறையிலும், பூர்வீகக் குடியின் மொழி, பண்பாட்டுத் தகவிலும் நீடித்திருக்கின்ற குடிமக்களின் குரல் எம்முடையது. அவனது உலகமும், எனதும் சாரையும், நல்லதும் போல! அது வேப்பெண்ணெய் குடிக்கின்ற அப்பத்தாக்கள், குன்னி இடுப்பைப் பிடித்துக்கொண்டுப் பேரனுக்குக் கடுங்காப்பிப் போடும் அம்மாச்சிகள், பின்படிக்கட்டில் அமர்ந்து பேன் பார்க்கும், ஈர் உருவும் “என் மயன்” எனப் பெருமைப்படுகின்ற அம்மாக்கள், மாமன் மக்களிடம் கேலி பேசுகின்ற, உரிமையுள்ள, நெஞ்சுகொள்ளா, அன்புகொண்ட அத்தாச்சிகள், மாரைப் பார்க்கிற விடலைப் பையனைச் செல்லமாகக் கண்டித்தபடி தூக்கி வளத்த அக்காமார்கள், ‘மக கிட்ட வெளாட நாள் கெடக்கு’ என வம்பிழுக்கும் அத்தைமார்கள், கல்லாப்பெட்டி சிங்காரம் போலிருக்கிற மாமாக்கள், வாக்கப்பட்டு டவுனுக்குப் போனபின் வீட்டை அண்ணமார்களுக்கு வளர்த்த வேப்பமரமுடன் எழுதிக் கொடுக்கும் - பூக்கட்டுகிற தங்கச்சிகள், தாளிக்கிற கடுகு நம் முகத்தில் தெறிக்கிற கோபக்காரிகளான சோட்டுக்காரிகள், அச்சுமுறுக்கைப் போலக் கோலம் போடுகிற சித்தியின் மக்கமார்கள், கொழுந்தன்மார்களுக்கு எலும்புக்கறி அள்ளிப் போட்டுக், குமரிப் பெண் வைத்திருப்பவர்களுக்கு, அவனது அருமை பெருமைகளைச் சொல்லும் தமிழரசி அத்தாச்சிகள், இரயிலில் மட்டும் பழக்கமாகி உசிராக அன்பு வைக்கும் அம்பது வயசுக் கீரைக்காரிகள், கஞ்சிக்கு வழியில்லாத வீட்டில் பொறந்த கிறுக்கு முண்டைகள், ‘எங்க மாமா’ வென சினிமா பைத்தியமாயிருந்த அன்னமயில் அத்தைகள், தன் பெயரைத் தமிழில் கூப்பிட மாட்டார்களா என வடநாட்டு அடுக்ககம் ஒன்றில் ஏங்கும் தமிழ்க்குட்டிகள் - இவர்களால் நிரம்பியது. என் வாழ்வும் அவனைப்போல இப்பெண்களால் ஒளிர்வும், கருமையும் பெற்று மகிழ்வதும், வருந்துவதும்! நோபெல் பரிசு பெற்ற, 77 வயது ஐ.பி. சிங்கரிடம் "நீங்கள் ஏன் எப்போதும் உங்களது சின்னஞ்சிறு வட்டமான யூத மக்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: "உண்மையான கதாபாத்திரங்கள் உண்மையான மக்களிடமிருந்தே பிறக்கின்றன. உண்மையான மக்களுக்கு ஆழமான வேர் உண்டு. வெறுமனே ஒரு பொதுவான மனிதனைப் பற்றி ஒரு நாவல் எழுதிவிட முடியாது. அதற்காக தனக்கென ஒரு முகவரி உள்ள ஓர் ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் தான், உண்மையான எழுத்தாளர்கள் தங்களுக்குச் சொந்தமான சூழலிலேயே, தங்களுக்குச் சொந்தமான மூலையிலேயே தங்கிவிடுகிறார்கள்". விநாயகமூர்த்தியும் அப்படி தனக்கான ஒரு மூலையில் புகார்களின்றி வாழ்பவன்! தனக்கான உண்மையான மக்களைக் கண்டறிந்து கொண்டாடுபவன். கீழ்வரும் இந்தக் கவிதையைப் பாருங்கள்: ““எல்லாம் பாக்குறாங்க, இதுல கால்வைக்க இவ்வளவு நேரமா..?” என வணிக வளாகமொன்றின் நகரும் படிக்கட்டுகளில் கால் வைக்கத் தடுமாறும் அம்மாவிடம் சிடுசிடுக்கும் நகரத்து மகன்கள் ஆய் கழுவிப் பழக ஆறு வருடங்கள் கடக்க வேண்டியதிருந்தது.” சமூகத்தின் மேல்தட்டு வர்கத்தினர் அறிந்திராத, அவர்களுக்குப் புரிந்திராத வெளியும், உணர்வும் மேற்சொன்ன கவிதை சுட்டுவது. இது கவிதையே அல்லவென்று கூடச் சிலர் கடக்கலாம். ஆனால், அது சுட்டும் அனுபவத்தைக் கவனியுங்கள் - உள் வாங்க இயலுமெனில் இது கவிதை தான்! பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின், தமிழ்த்துறைப் பேராசிரியர் இரவிக்குமார் எப்போதுமே, “கவிதை, காலத்திற்குக் காலம் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. 'இதுதான் கவிதை' என்று பழக்கப்பட்ட வாசக மனம், கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. நவீன கவிதைகளையே படித்துப் படித்துப் பழக்கபட்டவனுக்குக் காளமேகப் புலவர் பிடிக்காமல் போகக்கூடும். டி.எஸ்.எலியட், கீட்ஸின் கவிதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. 'Keats is also a poet' என்கிற வாசகம் நினைவிற்கு வருகிறது. வால்ட் விட்மனின் கவிதைகளைத் தொடக்க காலத்தில் டால்ஸ்டாய் நிராகரித்ததையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, ஒரு கவிஞனின் அனைத்துப் படைப்புகளையும் திறனாய்வாளர்களும் வாசகர்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு காலத்தில் படைக்கப்பட்ட கவிதையை வாசிக்கின்ற வாசகர்களின் மனநிலை வேறொரு காலத்தில் மாறவும் கூடும். எனவேதான், ஒரு கவிதை எந்தப் பின்னணியில், எந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டது என்ற ஆய்வு முக்கியமானது.” என அடிக்கோடிட்டுச் சுட்டுவார். அந்தரத்தில் மிதக்காமல் நிலத்தில் காலூன்றி நிற்கும் வலுவான திணைப் பண்பாடு சார் இனக்குழு மக்களின் எச்சமான உறவுமுறை வாழ்க்கை, இன்றைய காலகட்டத்தில் நகரம்சார் அவர்தம் இடம்பெயர்வுச் சிக்கல்கள், விழுமியங்கள் அபத்தங்களானதொரு இயலாமை - இவற்றைப் பின்னணியாகக் கொண்டது விநாயகமூர்த்தியின் கவிதைப் பரப்பு. இந்தப் பின்புலத்திலேயே அவனது கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே நாட்டார் வழக்காற்றுக் கூற்றுகளை ஆவணப்படுத்தவோ, பிரதியெடுக்கவோ கவிதை எதற்கு? அதற்குள் ஒளிந்திருக்கின்ற மனித வாழ்வை, ஒளிர்ந்து மின்னி மறையும் அதன் புதிர்களை அவனுக்கானதொரு யதார்த்தமான மொழியில் வெளிப்படுத்துவதில் தானே அவன் படைப்பு கவிதையாகிறது. அதற்கு எத்தனையோ உதாரணக் கவிதைகளை இத் தொகுப்பிலிருந்து சுட்டலாம். ஒரு சோறு பதமாகத், தமிழரசி அத்தாச்சிக்கான பின்வரும் கவிதை: “கல்யாணப் பந்தியில் சாப்பாட்டுக்கு அமர்ந்திருந்தால் "கொழுந்தன் மாப்ளையாகப் போறவரு. எலும்புக்கறியா அள்ளிப் போடுங்க" என இடுப்பிலிருக்கிற குழந்தைக்கு சோறூட்டியபடியே பரிமாறுபவர்களை கூப்பிட்டு கூப்பிட்டு நான் சாப்பிட்டு முடிக்கும் வரை தமிழரசி அத்தாச்சி பக்கத்திலேயே நின்றுகொண்டிருப்பாள். கல்யாண வீட்டில் நிற்கிற வீட்டில் குமரிப்பெண் வைத்திருப்பவர்களிடம் என்னைக் காட்டி காட்டி எதையாவது சொல்லிக்கொண்டிருப்பாள். பேச்சில் ஒத்து வருபவர்களை நைஸாக அழைத்துக் கொண்டுவந்து என் பக்கத்தில் நின்றபடி வேறெதையோ கேட்பதுபோல என் அருமை,பெருமைகளை என் வாயாலேயே சொல்லவைப்பாள். எனக்கெதுவும் அறியாததுபோலவே நானும் சொல்வதுண்டு. அப்பா,அம்மாவை விட அத்தாச்சிகளுக்குதான் இப்படியொரு திறமை உண்டு. கல்யாண வீட்டில் அவசரமாக யாரும்,எதுவும் எடுத்துவரச் சொன்னால் சட்டென அவள் குழந்தையை என் மடியில் வைத்து "ஒங்க மகனைப் பாத்துக்குங்க கொழுந்தனாரே" என உரிமையாக என் குழந்தையாக்குவாள். "ங்கொண்ணன் காளைமாட்டை புடிக்கதான் லாயக்கு. கொழுந்தன் நீங்களாச்சும் பசுமாட்டை அடக்க கத்துக்குங்க.." என புருசனை ஏற,இறங்கப் பார்க்க நான் தலைகுனிந்து வெட்கப்பட "பாருங்க கொழுந்தன் வெக்கப்படுற அழகை.... இந்த மனுசன் வெக்கம் கிலோ என்ன வெலைன்னுக் கேப்பாரு " என அண்ணன் குமட்டில் குத்துவாள். ஸ்கூல் முடிஞ்சோன டவுசரை கழட்டி தூக்கிப்போட்டுட்டு சுத்துற என்னையக் கூப்புட்டு அவ அப்பாவுக்கு ஒரு சொக்கலால் பீடிக்கட்டு துவையலுக்கு ரெண்டு தேங்காச்சில்லு தலைக்கு கடல் ஷாம்பூ பாக்கெட்டு ஒண்ணு வாங்கிட்டு வரச் சொல்லி தமிழரசி அத்தாச்சி என் கைல காசு கொடுத்து முன்னாடி நடக்கவிட்டு "டேய்,மொட்டக்குண்டி நாயகம்"ன்னு கத்தி சிரிச்சப்பலாம் எனக்கு வெக்கம்னு ஒண்ணே இல்லை. இந்த மாதிரி கல்யாணம்,காட்சிலப் பாத்துக்கிட்டு "போய்ட்டு வர்றேன் அத்தாச்சி"ன்னு நான் சொல்லிட்டுக் கிளம்புறப்பதான் என்னைய முன்னாடி நடக்கவிட்டு அத்தனை பேர் முன்னாடி "டேய், மொட்டக்குண்டி நாயகம்"ன்னு அத்தாச்சி நைஸாக் கூப்பிடயில நான் லேசாத் திரும்பி வெக்கமாச் சிரிக்க அதுக்கு அத்தாச்சி காட்டுற முகபாவனைகள்ல சுண்டவச்ச கருவாட்டுக்குழம்புல ரெண்டுநாள் ஊறுன சுரைக்காயோட ருசி.” மேற்சொன்ன கவிதை எவ்வளவு நுட்பமாக உறவுமுறையினூடாக உரிமையோடு இழையோடும் அன்பைச் சொல்கிறது. இது காதலா, காமமா, இரத்த உறவு மட்டுமா - எந்தச் சிமிழுக்குள் அடங்கும் அந்தச் சுரைக்காயின் ருசி? "ஒரு கவிதையின் தேர்ந்த சொற்கள், படிமம், குறியீடு போன்ற உத்திகளை விளக்குவதில் எனக்குப் பயிற்சியில்லை. இந்தவித உத்திகளின் புரிதல்களுக்கு அப்பால் கவிதைகளை என்னால் அடையாளம் காண முடியும். அதில் மனிதம் இருப்பதொன்றே எனக்குப் போதுமானது. அந்நியமாகிப் போகும் வாழ்க்கையை எனக்கு நெருக்கத்தில் அது கொண்டு வந்து நிறுத்தினால் போதும்" - என்பார் இன்குலாப் அய்யா. கீழ்வரும் கவிதையில் படிமமோ, குறியீடோ, உவமையோ இல்லை. ஆனால் ‘துடி’யான மனுச வாழ்வொன்று உண்டு! “தொழுவத்தில் கூட்டி அள்ளி தலையில் சுமந்து சென்று வயலில் கொட்டியபின் அவள் தோள்பட்டையில் வடிந்து ஒட்டியிருக்கிற பசுமாட்டுச்சாணி,ஆட்டுப்புழுக்கை பச்சைக் கறை. அப்படியே அங்கேயே புல்லறுத்து சுமந்து வருகையில் அவள் நெற்றி வியர்வையில் ஒட்டியிருக்கிற பிய்ந்த நொச்சி இலை நசுங்கிய அருகம்புல். அத்தக்கூலிக்கு வேலிக்கருவை வெட்டப்போய் முதுகில் முள்கிழிசலுடன் ஒட்டிவந்த கருவேலக் கொழுந்து. வேலை முடிந்துத் திரும்புகையில் ஊருணியில் தலை முங்கி எழுந்து ஈரச் சேலை சுற்றி அவள் நீர்த்துளிகள் மண்ணில் விழ நடந்து வருகையில் அவள் கழுத்தில் ஒட்டிவந்த குளத்தின் இளம்பச்சை பாசி. துணி மாற்றியதும் சீவிச் சிங்காரித்து அவள் ஹேர்பின்னில் சொறுகிய பச்சை மரிக்கொழுந்து. அம்மை போட்டிருந்த என் பருக்கட்டிகளில் அவள் கையால் தடவிவிட்ட அரைத்த வேப்பங்குலை. அந்த இரவிலேயே சவமாகிப்போனவளின் கை பூனைமுடிகளில் ஒட்டி படர்ந்திருக்கிற நசுக்கிய பச்சை அரளிக்காய்த்துகள். இலை,தழை,காய்களுக்கென்றே ஒரு வாசனை இருக்கிறது. பச்சை நிறத்திற்கென்றே ஒரு வாசனை இருக்கிறது. தமிழரசி அத்தாச்சிக்கென்றே ஒரு வாசனை இருக்கிறது. எரிக்கும்போதும் ஊர்முழுக்க நெடிவீசிடும் பச்சை வாசனை." நான் எப்போதும் நினைவு கூர்கின்ற கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனது கூற்று: “இன்றைய மூன்றாம் உலக இலக்கியத்திற்கு முன்னால் ஒரு வரலாற்றுக் கடமை எழுந்து நிற்கிறது. வெளிநாட்டு ஆட்சியின் கீழ் நசுங்கி, தங்களது பண்பாட்டு முகம் சிதைக்கப்பட்டு, வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டு விட்ட இந்த நாடுகள், இன்று தங்கள் அடையாளம் என்ன என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றன. இத்தகைய நிலையில் இருக்கும் வளரும் நாடுகளின் இலக்கியத்தின் கடமை, இழந்த அடையாளங்களை மீட்டெடுப்பதும், தம்மைச் சுற்றி இருக்கும் இன்றைய வாழ்க்கைப் பற்றிய நேர்மையான புரிதலுடன் அதைப் படம் பிடிப்பதுமாகும்.” தம்பி விநாயகமூர்த்தியின் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. ஆனால் அதனைத் தன் கடமையெனப் பதாகை பிடித்தோ, முன்தீர்மானம் கொண்டோ இல்லாமல், போகிற போக்கில் - தன் இருத்தல் குறித்த புதிரான கேள்விகள், வியப்புகள், அபத்தங்கள் - இவற்றைச் சிரங்கு வந்தால் தானாகச் சொறிந்து கொள்வது அனிச்சையாக, வெகு இயல்பாகச் செய்கின்றன! பின்வரும் அவனது கவிதை எனக்கு வித்யாசங்கரின் ஒரு கவிதையை நினைவூட்டியது. “இதே சாயலில், எனக்கும் உங்களுக்கும் சிறிது இடைவெளி இருக்க வாய்ப்புண்டு. இளையராஜாவும் மணிரத்னமும் எனக்கு இளையராஜா,மணிரத்னம். உங்களுக்கு ராஜா சார்,மணி சார். பன்னாட்டு இலக்கியவாதிகளின் பெயர்களை வரிசைக்கிரமமாக சொல்லி முடித்து ”இவர்களில் யாரையேனும் வாசித்துள்ளீர்களா” என்கிறீர்கள். கி.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தனிடம் எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு. உலக சினிமாக்களை அலசியெடுத்துவிட்டு “கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?” என்கிறீர்கள் கிண்டலாக. வழக்கு எண் 18/9,ஆரண்யகாண்டத்தை கொண்டாடத் தெரிதல் எனக்கு போதுமானது." மறுபடியும் கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனுக்கே வருகின்றேன். வித்யாசங்கரது சந்நதம் தொகுப்பை முன்வைத்து, அவரது கவிதையின் போக்கு குறித்துப் பகிரும் போது, கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன், “கவிதையில் 'சர்வதேச பாணி' என்ற ஒன்று கிடையாது. கவிதையைப் படைக்கும் மூலப்பொருள் மொழியாக இருக்கும் வரையிலும், கலைகளிலேயே அதிகமாக பிரதேசத் தன்மை கொண்டது கவிதையாகத்தான் இருக்க முடியும். "மொழிபெயர்க்க இயலாதது எதுவோ அதுவே கவிதை" என்று வரையறை செய்யும் அளவுக்கு பிரதேசத் தன்மை கொண்டது கவிதை என்பதை நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார் வித்யாஷங்கர். இதனை இவரைப் போலவே பிற நவீனத் தமிழ்க்கவிஞர்களும் புரிந்து கொள்வார்களெனில் இன்றைய தமிழக்கவிதை உள்ளீடற்ற, போலியான, ஒரு கானல் மண்ணில் வேர்கொள்ள முயன்று, துவண்டு போகாமல் தப்பிக்க முடியும். நமக்குள்ளேயே தோண்டிச் சென்று நமக்குள் இருக்கும் சிறப்பான பண்புகளை, வெளிப்பாடுகளை சர்வதேச கவிதை உலகிற்கு தமிழின் பரிசாகக் கொடுக்க நம்மாலும் பெறமுடியும்” என்கிறார். அவ்வகையில், விநாயகமூர்த்தி கொடுத்திருக்கும் பரிசுகள் பல. “நெருஞ்சிக்காட்டில் செருப்பில்லாமல் நடப்பதுதான் தமிழரசி அத்தாச்சிக்குப் பிடிக்கும். கேட்டால் நெருஞ்சி முள் குத்துவது எங்கப்பன் கெட்டவார்த்தைல என்னைய வையிறது மாதிரி. வைஞ்சாலும் அது அப்பன் குரல்ல கேக்குறப்ப ஜாலியா இருக்கும்ல. நெஞ்சுல ஆழமா தைச்சுடாம மேலாப்புல வையிறாரு பாரு. கருவமுள்ளைப் போல் உள்ளிறங்காது அந்த நேர வலி கொடுக்கிற சுகம் என்பாள். முள் குத்த குத்த பாதத்தைத் தட்டிவிட்டு தட்டிவிட்டு நடப்பவள் நெருஞ்சிப்பூவொன்றை பிய்த்து காதில் ஒட்டிவைத்து 'தோடு நல்லாருக்கா'வெனச் சிரிப்பாள். என் அம்மா போட்டிருக்கிற தங்கத்தோடும் நெருஞ்சிப் பூ வடிவத்திலானதுதான். சமயங்களில் அந்தியில் சுப்பிக்கட்டுடன் வீடு திரும்புபவளின் தாவணியெல்லாம் நாயுருவி முள் ஒட்டியிருக்கும். அதில் ஒன்றை எடுத்து மூக்குத்தியென ஒட்டிக்கொள்வாள். அத்தை பல்லைக் கடித்து "கிறுக்கு முண்டையல பெத்துவச்சுருக்கேன்" என விரட்டி அடிப்பாள். "கஞ்சிக்கு வழியில்லாத வீட்டுல பொறந்தவளுக எல்லாருமே கிறுக்கு முண்டையதான்" என அதற்கும் சிரிப்பாள் அத்தாச்சி. சற்று மின்னிய நெருஞ்சிப்பூவைப் போலிருக்கும் ஒரு தங்கத் தோடு அத்தாச்சிக்கு வாங்கிக் கொடுத்து அந்த கிறுக்கு முண்டை முகத்தில் புன்னகை சிந்தவிடவேண்டும் என இப்போதெல்லாம் எப்போது நெருஞ்சிமுள் குத்தினாலும் நினைத்துக்கொள்கிறேன்.” எனும் தமிழரசி அத்தாச்சிக்கான கவிதையும், "காளைமாட்டுக் கிழவனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெயர்க்காரணம் கேட்காதீர்கள். என் பெரியப்பா. பெரியம்மா செத்து இரண்டுவருடங்களாகிறது. அவருக்கென ஒரு அழகிய சித்திரம் இருக்கிறது. அவர் குளிக்க எப்போது ஊருணிக்கு வந்தாலும் இரண்டு தோள்பட்டைகளிலும் இரண்டு பேரக்குழந்தைகள் இருப்பார்கள். கூட்டாம்புளியான் கடைக்கு மூக்குப்பொடி வாங்கப்போனால் அவரது வலதுகை சுண்டுவிரலை மூத்த மகனின் மகளும் இடதுகை சுண்டுவிரலை சின்ன மகனின் மகனும் பிடித்தபடி நடந்துவருவார்கள். கோயில் திண்ணையில் மாலையில் காற்றுவாங்க அமர்பவர் இரண்டு தொடைகளிலும் இருவரை வைத்துக்கொண்டு விளையாட்டு காண்பித்துக்கொண்டிருப்பார். இருவருக்குமே ஆப்பிள் பலூன்,கொக்கச்சு என ஒரே விஷயங்கள் பிடிக்க அவர்தான் காரணமென நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. தண்ணீர் பாய்ச்சுகிற பிரச்சினையில் அண்ணன்-தம்பி அடித்துக்கொண்டு தனித்தனி பிரிந்தபின் எந்த வேளை உணவு எந்த வீட்டில் சாப்பிடுவது? எந்த ராத்திரி எந்த வீட்டில் தூங்குவது? எந்த வாரம் எந்த மருமகளுடன் சந்தைக்குப் போவது? காபித்தண்ணி யார் வீட்டில்? சோப் வாங்கிக்கொடுப்பது யார்? என தலை பிய்க்கிற குழப்பங்களெல்லாம் அவருக்கு பெரிதாய்த் தெரியவில்லை. பேத்தி மாற்றி பேரன் மாற்றியென இனி ஒற்றைத் தோள்பட்டை ஒற்றை சுண்டுவிரல் ஒற்றைத் தொடை என மற்றொன்று காலியாகவே இருக்கப்போகிற வேதனையில்தான் உயிரை விட்டுவிடுவாரென நினைக்கிறேன்." அண்ணன் தம்பி சண்டையில் பேரன், பேத்திகளை இழந்துவிட்ட காளை மாட்டுக் கிழவனை முன்னிறுத்திய மேற்சொன்ன கவிதையும் ‘சர்வ தேச கவிதை உலகிற்கு’ குறிப்பிடத்தகுந்த ‘தமிழின் பரிசுகள்’ தாம்! தனக்கும், தன் மண்ணுக்கும், வாழ்முறைக்கும், உண்மையாக இருக்க முயன்று, அதன் வழியாகத் தான் சந்திக்கும் சமகாலச் சிக்கலையும், அபத்தங்களையும் பதிவு செய்கின்ற விநாயகமூர்த்தியின் கவிதை மொழி உப்புக்கண்டக் கவுச்சியும், மருக்கொழுந்து நாற்றமும், உழைத்து உப்புக் கரிக்கின்ற வியர்வையின் நெடியும் கலந்த இந்நிலத்தின் மொழி. அதன் கொடையைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்தாலொழிய அந்நியர் அறிய முடியாது. அது அவர் தம் பெரு இழப்பே! அந்நிலத்தை, அம்மொழியை நான் இரத்தமும், சதையுமாக, நிணமும், நாற்றமுமாக அறிந்தவள். அப் புழுதியில், சகதியில், வியர்வையில், கவுச்சையில் அமிழ்ந்து உணர்ந்தவள். ஆகையால் அவனது கவி உலகைக் கொண்டாடுபவள். அது என் வரமே! ஜப்பானியக் கவிஞரும் சிற்பியுமான டக்கமுரா கொட்டாரோ சொல்வார்: “என் கவிதை என் குடல்களிலிருந்து உருவாகிறது என் கவிதை நானன்றி வேறல்ல” என்று! விநாயகமூர்த்தியின் கவிதையும் அவ்வாறு உருவானதுதான். சில கவிதைகள் கதைப் பாடல்களைப் போல இருக்கலாம். சில உரைநடைக் கதைச் சித்திரங்களைப் போலிருக்கலாம். சில கவிதை எனும் சட்டகத்திற்குள்ளேயே வரவில்லை எனவும் சிலர் விமர்சிக்கலாம். ஆனால் அவை அனைத்தும் வாழ்க்கை! அதன் மூச்சுக்காற்றை, பசியை, இயல்பூக்கமான காமத்தை, அபத்தத்தை படைப்பின் வழி கடத்தும் அனுபவங்கள்! பிரமிள், “தங்கத்தை எடைபோட இரும்பு எடைக்கற்களைப் பயன்படுத்தும்போது தங்கம் இரும்பையும் எடைபோடுகிறது. அதுபோல... அவர் என்னை எடை போடுவதில்தான் அவரும் அளக்கப் படுகிறார்.” என்பார். விமர்சனங்களுக்கான பதில் அம்மட்டே! எங்களது வாழ்வை, எம் நிலத்தின் மொழியை, அதன் காத்திரமான பண்பாட்டுச் சித்திரங்களை, வேரூன்றியிருக்கின்ற மானுட விழுமியங்களை, எடை போட, அதனை நீங்கள் ஒரு கணமேனும் வாழ்ந்திருக்க வேண்டும்! இல்லையென்றால் அத்தாச்சிகளின், அக்காமார்களின், கொழுந்தன்மார்களின், அண்ணன்மார்களின், தமிழ்க்குட்டிகளின், அப்பத்தாக்களின், ஆச்சிமார்களின், ஆத்தாக்களின் சிரிப்பையும், கண்ணீரையும், கொடுவாயையும், வியர்வையையும், சிறுநீரையும் கவிதைகளாகப் பார்க்க முடியாது உங்களால்! பார்க்க முடியாவிட்டாலும் பாதகமில்லை! அய்யனாரின் சுருட்டைக், கருப்புவின் சாராயக் கொடையைக் கண்ட பூசாரிகள் ‘தரிசனத்’திற்கு மயங்குபவர்கள் அல்ல - அவர்கள் அருள் இறங்கும் ஆவேசத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்! கவிதை அவர்தம் சந்நதங்களுக்கான எளிய படையல் தான்! • • • • •

தொடர

அண்மை

குறுஞ்செய்திகள்

தொடர்பு கொள்க

தென் சென்னை நாடாளுமன்ற
உறுப்பினர் அலுவலகம்

எண் 115, Dr முத்துலெட்சுமி சாலை,
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13,
அடையார், சென்னை - 600 020

புது தில்லி இல்லம்

சி-3, சிந்து அபார்ட்மெண்ட்,
எ பிளாக், எம் எஸ் பிளாட்ஸ், பி கே எஸ் மார்க்,
புது டெல்லி - 110 001

© 2022 தமிழச்சி தங்கபாண்டியன்.